Sign in to follow this  
நவீனன்

நட்சத்திரங்களை ருசிப்பவர்கள்

Recommended Posts

நட்சத்திரங்களை ருசிப்பவர்கள் - பா.திருச்செந்தாழை

 

விநோதங்களின் முதல் விதியின்படி, நீங்கள் வாசித்துக் கடந்த செய்தித்தாளின் கீழ் விளிம்பில், அந்தச் சிறு சதுரத்தில் நோயுற்ற காகம் போல மௌனத்திலிருந்த எழுத்துகள், என்னை மட்டுமே தெரிவு செய்தன. ‘பறக்கும் கம்பளத்தில் வாழ விருப்பமா?’ அதனருகே பச்சை மாமிசத்தின் உறைசிவப்பிலிருக்கும் மேப்பிள் இலையும், அதன் நடுவே ஆழ்துயிலிலிருக்கும் ஒரு வெண்கம்பளிப்பூச்சியின் படமும் இலச்சினைப் போல மிளிர்ந்தன.

42p1.jpg

விநோதங்களின் இரண்டாவது விதியின்படி, அந்த வீட்டை வடிவமைத்தவர் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இருந்தும் இல்லாததாய் கவனப்பிசகில் பதுங்குகின்ற சில இடங்களைப்போல, தனித்துவிட்ட அந்த மிக உயரக் கட்டடத்தின் மொட்டைமாடியின் நடுவே, ஒரு சிறிய மரப்பெட்டகம் போல அந்த வீடு முகங்கொண்டிருந்தது. நான்கு திசைகளிலும் கதவுகள்கொண்ட வீட்டின் நான்கு பால்கனிகளிலும் கைப்பிடிச் சுவர் இல்லை. ஒரு நாவலை மெய்மறந்து வாசித்தபடி நீங்கள் வீட்டிற்குள்ளிருந்து நடந்தால், அந்த நேரம் கதவு திறந்திருந்தால்... சிறிது நேரங்கழித்து ஒரு சிறிய பறவையும், மத்திம உடல் விலங்கும் அந்தரத்தில் பதறியபடி விழுந்துகொண்டிருப்பதை ரகசிய கேமராக்கள் சலனமற்றுப் பதிவுசெய்யும்.42p3.jpg

விநோதங்களின் மூன்றாம் விதியானது, மிகுந்த அச்சம் தரக்கூடியவை மேல் இயல்பாகவே அதீதக் காமம் மலர்கிறது. நாங்கள் அவ்வீட்டில் வசிக்கத் துவங்கினோம்.

இடவலக் குழப்பங்கள் இந்தத் துவக்க தினங்கள்: மேகங்கள் தவழ்ந்து செல்லும் சமையலறைகொண்ட வீட்டில் என் மனைவியின் அச்சம் இன்னும் நீங்கவில்லை. சுற்றுப்புறவாசிகளாக சில மேகரூபங்கள் மற்றும் பெயரற்ற பறவைகள் மிதக்கும் வெளியில், எங்கள் சிறு வீடு கப்பலைப்போல நகர்ந்துகொண்டிருக்க... சலனிக்கவோ, ஆறுதலளிக்கவோ முகாந்திரமற்று நாங்கள் தியானநிலையிலேயே இயங்கினோம். எல்லா தினங்களின் காலையிலும் அழுகி வெடித்துவிட்ட வனவிலங்கின் உடலைப்போல ஒரு நகரம் நொதிக்கத் தொடங்குவதை, நுண்புழுக்களைப்போல ஆவேசமாகத் தவழும் மனிதர்களை, ஆறுதலான சொல்லைப்போல சாலையோர மரங்களை இவையாவற்றையும் உயிருள்ள செய்தித்தாளாய் வாசித்தோம்.

கைப்பிடியற்ற வீட்டில் எங்கள் முதுகுத் தண்டின் கண்கள் சதா விழிப்பிலேயே இருந்தன. எங்களை மறந்து ஏதாவதொரு வேலையில் மூழ்கியிருக்கும்போது, திறந்துகிடந்த கதவுகளை நோக்கி (அப்போது அவை இனிக்கின்ற வாயைப் போலிருந்தன) எங்களின் சிசு, இயந்திர பொம்மையைப்போல தவழ்ந்துகொண்டிருந்தது. விளிம்பிற்கும் குழந்தைக்கும் இடையேயான அதிர்ச்சி சூழ் காலம் அல்லது தூரத்தின் மேல் நீள கூர்வாய் நாரைகள் அலகு தீட்டியபடி கண் சிமிட்டின.

42p2.jpg

இயல்பில் நாங்கள் மென்மையானவர்கள். எங்களது கைத் தவறி விழும், உருளும் உடல்கொண்ட பொருள்கள் தங்களது பயணத்தை விளிம்பு நோக்கித் துவக்கும்போது, பதற்றத்துடன் அதன் கால்களைக் காணுகிறோம். மிக மிகக் கீழே சாலையில் மிகுந்த நிதானத்துடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன் நடந்து செல்லும் சிறுமி அல்லது வயோதிகன் அல்லது அரைக் கிறக்க இமைகளுடன் சாலையோரமாக உறங்கும் ஒரு செல்லப்பிராணியை எங்கள் கண்கள் உணர்கின்றன. அவர்களின் அடுத்த கணமானது ஓர் அருவியைப்போல எங்களுடைய கைகளில் தொடங்கி மிக ஆவேசமாக அவர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆரம்பகாலங்களில் முன்னெச்சரிக்கையாக நாங்கள் கூச்சலிட்டு அவர்களைப் பதறி விலகச் செய்தோம். ஒரு நன்றியைத் தவிர, வேறு சுவாரஸ்யமே இல்லாத வெறுமை கணங்கள் பிறகு இம்சித்தன. சமீபமாக நாங்கள் அந்த நீர்வீழ்ச்சியை மௌனமாகக் காணுகிறோம். அழுக்குக் கண்ணாடியெனக் கீழே விரிந்திருக்கும் சோம்பல் யதார்த்தத்தை உடைக்கின்ற அந்த நீர்வீழ்ச்சி, பிறகு அங்கு கலைடாஸ்கோப்பின் விநோத சேர்க்கைகளைப்போல சூழலின் அசமந்தத்தை உடைத்துப் பரபரப்பாக்கும்... எல்லோர் கண்களும் உயருகையில் நாங்கள் தியானப் புன்னகையுடன் பின்னகர்ந்து மறைந்துகொள்வோம்.  அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டின் மெலிந்த கூரைகள் காற்றில் நடுங்கின. இரக்கமற்ற பகலோ, ஒரு காகிதத்தின் நுனியென வீட்டின் விளிம்புகளை எரித்தபடி உள் நுழைந்து அச்சுறுத்தியது.42p3.jpg

நாங்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவு விசுவாசிகளில்லை. ஊடகங்களால் பெருக்கப்பட்ட காமம் ஏறிய உடல்கள் சிறிய இலச்சினைகளை, வார்த்தைகளைப் புறக்கணித்தன. நிலவு மெழுகும் இரவுகளில் காதலர்களைப்போல அபத்தமாய் நடித்தோம். எங்களின் சிசுவை தூயகாதலின் குறியீடெனக் கூறிப் புளகாங்கிதம் அடைந்தோம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டின் மெலிந்த கூரைகள் காற்றில் நடுங்கின. இரக்கமற்ற பகலோ, ஒரு காகிதத்தின் நுனியென வீட்டின் விளிம்புகளை எரித்தபடி உள்நுழைந்து அச்சுறுத்தியது.  

பரிசுத்தம் என்பது அழுக்கின் சவலைப்பிள்ளை எனத் தெரியவந்த நாள்களில் தூரத்து மதக் கோபுரங்கள் கார்ட்டூனாகிவிட்டிருந்தன. எங்களில் ஒருவரது நடத்தையின் மீதான சந்தேகம் இன்று ஊர்ஜிதமானது. ஒரு பிடிபட்ட குற்றவாளியை, பிடிபடாத குற்றவாளி மன்னிக்க இயலாது என்கிற எளிய புரிதலுக்குப் பின், வீடெங்கும் அமைதி பரவியது. கைப்பிடியற்ற பதற்ற விளிம்புகளும் மென்மையுற்றன. தொட்டித் தாவரங்களிலிருந்து குளிர்மை கசியத் தொடங்கியது. மென்னுடல் பறவைகள் சில சாப்பாட்டு மேஜைமீது தத்தி அமர்ந்தன. ஒரு மேகப்பொதி தன்னுடலைத் தளர்த்தி எங்களை நிரப்புகையில், வீட்டின் இரு திசை ஜன்னல் வழியாக ஒரு அஸ்தமனச் சிவப்பும், குளிர்ந்த நிலவும் மேலெழுந்துகொண்டிருந்தன. வீட்டு வாசலிலேயே மரணப்பொறி வைத்திருப்பதால், நாங்கள் பொய் பேசுவதில்லை. விளிம்புகளற்ற பால்கனியில் நின்றபடி நாங்கள் முத்தமிட்டுக் கொண்டோம். மரணத்திற்கு வெகு சமீபமான முத்தம். அந்த முன்மாலை வேளையில் கனியத் தொடங்கிய நட்சத்திரமொன்றை திராட்சைப் பழத்தைப்போல உதிர்த்துத் தின்கையில், எங்கள் உடல்கள் சுமை நீங்கி லேசாகின. சப்பணமிட்டு விரல் சூப்பிய விதம் எங்களைப் பார்த்த சிசுவை, பிரபஞ்சத்தின் ஓர் உயிரினம் என்பதற்கு மேலாக நாங்கள் புனிதப்படுத்திக்கொள்ளாத தருணத்தில் எங்களது வீடு, பறக்கும் கம்பளமாக மிதக்கத் தொடங்கியிருந்தது.

https://www.vikatan.com

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this