Jump to content

பனி நிலா


Recommended Posts

பனி நிலா - சிறுகதை

 

சிறுகதை: அராத்து, ஓவியங்கள்: செந்தில்

 

கார் டயர் டொம்ம்ம்  என்று வெடித்து வண்டி 130 டிகிரி திரும்பித் தேய்த்துக்கொண்டு போனது. மதிய நேரமே இரவுபோலக் காட்சியளித்தது. கடும் மழையால் இப்படி இரவு போல இருந்தாலும், இப்போது மழை பெய்யவில்லை. இந்தக் குளிரிலும் இரண்டு குளிர்ந்த  பியர் அடித்துவிட்டு தன் உயர்ரக ஏசிக்காரை புகையிட்டு நாறடித்துக்கொண்டு வந்த தரண், முன்னால் சென்ற காரின் டயர் வெடித்ததைப் பார்த்ததும், பதமாக பிரேக் அடித்தான்.

p44a_1517902040.jpg

டயர் வெடித்த காரிலிருந்து பதற்றமேயில்லாமல் ஒருத்தி இறங்கினாள். பார்ப்பவர்க்கு ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருப்பதுபோலத் தோன்றினாலும், அது  ஒரே கவுன். உடலுடன் ஒட்டியில்லாமல் படர்ந்து இருந்தது. தரண் அவளைக் கண்டு, ஒருகணம் உருக்குலைந்து உடைந்துபோனான்.

தூறல் இப்போது ஆரம்பித்தது. டாக்ஸி டிரைவரும் அவளும் ஏதோ பேசிக்கொண்டார்கள். லக்கேஜை இறக்கினார்கள்.

அந்தச் சாலை சென்னையின் சாலை போலவே இல்லை. புயல் அறிவிப்பினால், நடமாட்டமில்லாமல் இருந்தது. புயல் அடிக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் மரங்கள் கல்லுளிமங்கன்போல அமைதியாகக் காத்திருந்தன.

தரண் பைனாகுலரை வைத்துப் பார்த்தால் அவளின் முதுகில் இருக்கும் மெல்லிய மயிர்க்கால்களில் ஒரு துளி மழைநீர் நடனமாடிக்கொண்டிருப்பது தெரியும்.

தரணுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. மூளையில் ஏதோ உருகி, மீண்டும் உறைவது போல இருந்தது. இவள் எனக்கானவள் என்று அவனை மீறி முணுமுணுத்தான். இந்த உலகில் இருக்கும் அனைவருக்குமான காதல் உணர்வைத் தரண் மட்டுமே அப்போது அனுபவித்தான்.

ஒரு மாய உலகத்தில் நுழைந்த அனுபவத்தில் மிதந்தான். மரங்கள் லேசாக அசைந்தாட ஆரம்பித்தன. மரங்களிலிருந்து லேசான கோரைப்பற்கள் எட்டிப்பார்த்தன. புயலின் போது என்ன செய்வோம் என்று அவை முன்னறிவிப்பதுபோல இருந்தன.

இது என்ன அனுபவம்? பியர் அடித்ததாலா என்று மனதிற்குள் பேசாமல் வெளிப்படையாக முணுமுணுத்துக்கொண்டான். உடலெங்கும் சிலிர்த்து ரத்த ஓட்டம் அதிகரித்துக் காதல் உணர்வை முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில் மெல்லிய பயத்தில் சிறுநீர் முட்டியது.

இன்னொரு கால் டாக்ஸி அவளின் அருகில் வந்து நின்றது. அவள் அதில் ஏறி, பயணத்தைத் தொடர்ந்ததும், தலையை உலுக்கிக்கொண்டு பின்தொடர்ந்தான்.

மரங்கள் மீண்டும்  அபாயமான அமைதியில் ஆழ , இரண்டு கார்கள் மட்டும் அந்தச் சாலையில் ஊர்ந்துகொண்டிருந்தன.

அவளுடைய டாக்ஸி செல்லும் வழியை வைத்து விமான நிலையத்திற்குத்தான் செல்வதாக யூகித்த தரண், நண்பனுக்கு கால் செய்தபடியே ஓட்டினான். புளூ டூத்தில் போன் கனெக்ட் ஆகவில்லை. அவளுடைய கார் விமான நிலையத்தில், உள்நாட்டு முனையப் புறப்பாட்டில் நின்றது.

காரை அவளுடைய டாக்ஸிக்குப் பின்னே நிறுத்திவிட்டு, பாம்பு மகுடியானதுபோல அவளைத் தொடர்ந்தான்.

விமான நிலையம் சோகமாக இருந்தது. ஒரு விமானம் கடனே என்று வந்து இறங்கி அலுத்துக்கொண்டு, முனகியபடிக்கு நொண்டியடித்துக்கொண்டே போய் ஓரமாக நின்று முகத்தைத் திருப்பிக்கொண்டது.

அவள் தன்னுடைய பயணக் காகிதங்களையும், அடையாள அட்டையையும் எடுப்பதைப் பார்த்தான். அவற்றைச் சரிபார்க்கும் சிஐஎஸ்எஃப் பணியாளரின் பின்னால் கொஞ்ச தூரத்தில் நின்றுகொண்டான். தன் மொபைலை எடுத்து அங்கே குறி பார்த்து, ஜூம் செய்து வைத்துக்கொண்டான்.

p44b_1517902109.jpg

அவள் பயணக் காகிதங்களைக் கொடுத்ததும், அலுவலர் தூக்கிப் பிடித்துப் பார்க்கும்போது கஷக் கஷக் கஷக் என அந்தக் காகிதங்களின் நிழலுருவைக் கைப்பேசியில் உள்ளிழுத்துக் கொண்டான்.
‘ஜீரோ ஒன் ஜீரோ ஒன் யார் வண்டி இது? சீக்கிரம் எடுங்க, ஜாம் ஆவும் பாரு’ என்று கட்டைக்குரல் மைக்கில் ஒலிக்க, தலையையும் கையையும் போக்குவரத்துக் காவல் வண்டியை நோக்கி ஆட்டிக்கொண்டே, கைப்பேசியில் அந்தப் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்துக் கொண்டே காரை நோக்கி ஓடினான்.

டெல்லி செல்கிறாள். விமானம் புறப்பட இன்னும் ரெண்டு மணி நேரத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. வெப் செக்கின் செய்திருப்பதால் உட்காரும் இடத்தின் நம்பரும் தெரிந்தது. 7 ஏ. ஒருகணத்தில் காதலாகி, பித்துப்பிடிக்க வைத்தவளின் பெயர் ‘பனி நிலா’  எனக் காணப்பட்டது.

பரபரவென செயலியைக் கைப்பேசியில் இயக்கி அதே விமானத்தில் 7 பி என்ற இருக்கையை முன்பதிவு செய்து வெப் செக்கின் செய்தான்.

நண்பன் வந்து என்ன என்ன என நடுவில் சுரண்டிக்கொண்டிருந்தான். கார் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டு, ‘`போன்ல பேசறேன்’’ என்று சொல்லியவாறு விமான நிலையத்திற்குள் நுழைந்தான்.

விமான நிலைய ஓடுதளத்தைத் தாண்டி நீண்ட தூரத்தில் இருந்த மரங்கள் செடிகள்போலச் சின்னதாகக் காட்சியளித்தன. புயலை வரவேற்பதைப்போல மெல்லிய நடனத்தில் ஈடுபட்டிருந்தன அந்தச் செடி மரங்கள்.

அவளிடமிருந்து ஓர் இருக்கை தள்ளி அமர்ந்தான். சத்தம் வராமல் கனைத்துக்கொண்டான். கால் மேல் கால் போட்டுக்கொண்டு மொத்த விமான நிலையத்தையும் அளப்பதைப்போலப் பார்வையைச் சுழற்றி அவள் அவனின் பார்வைக்குள்  வந்ததும் சுழற்சியின் வேகத்தைக் குறைத்தான்.

அவள் ஓடுதளத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கால் மேல் கால் போட்டிருக்கவில்லை. செருப்பைக் கழற்றி வைத்திருந்தாள். தனியாக ஜோடியாக முப்பது டிகிரி கோணத்தில் இவனைப் பார்த்துக் கொண்டிருந்த செருப்புகளே இவனுக்குக் காதலுணர்வைக் கூட்டின. அவளின் பாதங்களைப் பார்த்தபடியே இருந்தான். அவள் தன்னுடைய பார்க்கும் திசையைத் திருப்பியதும் அவளின் பக்கவாட்டு முகம் இவனுக்குத் தெரிந்தது. அந்த தரிசனமே இவனுக்கு மூச்சு முட்டியது. மூச்சுத்திணறி இறப்பவன்போல தலையை உலுக்கிக்கொண்டான். விமானத்தில் அவளின் பக்கத்தில் அமரப்போவதை நினைத்து ரத்த அழுத்தம் எகிறியது. ரத்தத்துளிகள் மூளையில் பன்னீர் தெளிப்பதைப்போல மீண்டும் தலையை உலுக்கிக்கொண்டான்.

விமானத்திற்கு அழைப்பு வந்தது. அவள் எழுந்து நேராக நின்றாள். அந்த நிற்றலில் ஒரு கம்பீரம் தெரிந்தது. அசட்டு அழகு. அங்கு நின்றது, வரிசையில் நின்றது, வரிசையில் நகர்ந்தது என எங்குமே அவள் ஒன்றரைக் காலிலோ, ஒண்ணே முக்கால் காலிலோ நிற்கவில்லை. மிக நாகரிகமாக, அளவெடுத்ததுபோல நடந்தாள், நின்றாள்.  அவள் அப்படி நடந்துகொண்டதுகூட ஆச்சர்யமில்லை. ஆனால், அவளின் அவயவங்கள்கூட அளவாக, நாகரிகமாக அசைந்தன. அவள் பழக்கி வைத்திருக்கிறாளா, தானாகப் பழகிக்கொண்டனவா என்பது புதிர்தான்.

விமானத்தினுள் கடைசி ஆளாக நுழைந்தான். ஏழாம் வரிசையில் அமர்ந்திருந்தாள். மட்டமான புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவள் பக்கத்தில் அமர்ந்தான். அவள் ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அவளின் வாசனைத் திரவியம் இவன்மீது படர்ந்து தாக்கியது. புயலுக்கு பயந்து அடித்துப்பிடித்து அவசரமாக விமானம் விண்ணில் பாய்ந்ததுபோல இருந்தது.

செயின்ட் தாமஸ் மலையை அரைவட்ட வலத்தால் கடந்து சென்னை வெளிவட்டச் சாலைகளைக் குறுக்காகக் கடந்து ரொய்ங்க் என்று சத்தமிட்டபடியே நிலைபெற்றது.

விமானத்தினுள் விளக்கு எரிந்தது. என்னென்னமோ டிஜிட்டல் சத்தங்கள்.விமானத்தினுள் பெரிதாகக் கூட்டமில்லை.

“ஹாய் பனிநிலா!” - சடுதியில் முடிவெடுத்து அழைத்துவிட்டான்.

அவள் சாதாரணமாகத் திரும்பினாள். அந்த முகத்தை வெளியில் விலகி ஓடிக்கொண்டிருந்த மேகங்கள் ஒருகணம் படமாக வரைந்து கலைந்திருக்கலாம். அந்த முகத்தில் ஆச்சர்யம், அதிசயம், புன்னகை, கோபம், அதிர்ச்சி ஏதும் இல்லை. நிர்மலமாகவும் இல்லை. இந்தக் கணத்தில் இவனைப் பார்க்க வேண்டும் என்று முன்கூட்டித் திட்டமிட்ட ஒன்றைச் செய்வது போல இருந்தது. திரும்பிய நான்கு நொடிகள் கழித்து ஒட்டிக்கொண்டு இருந்த உதடுகள் நடுவில் மட்டும் பிரிந்தன.

“யெஸ்” என்றாள். இன்னும் கொஞ்சம் உதடுகள் பிரிந்தன. மீண்டும் உதடுகள் ஒட்டிக்கொண்டன.இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில் , கீழுதடு மேலுதட்டை நாடிச்சென்று ஒட்டிக்கொண்டது. மேலுதடு கீழுதட்டைவிடத் திமிராக இருப்பதாகப் பட்டது. சடுதியில் சிரித்துக்கொண்டான்.

மீண்டும் ``யெஸ்’’ என்றாள். “ஏன் சிரிக்கிறீர்கள்?”

``இல்லை, கீழுதட்டையும் சேர்த்து அல்லவா நான் காதலிக்க வேண்டும்?’’ என்றான்.

``வாட்?’’

“ஸாரி ஸாரி, உளறிட்டேன். உங்களை, உங்க கார் டயர் வெடித்ததிலிருந்து தொடர்ந்து வந்திட்டிருக்கேன். ரொம்பப் படபடப்பா இருக்கு, ஒரே மூச்சில எல்லாத்தையும் சொல்லிடறேன். உங்களை முதல் முறை பார்த்த உடனே என்னவோ ஆயிடிச்சி. என் வாழ்க்கை, என் மனசு, என்னோட இயல்பு எல்லாமே மாறிட்ட மாதிரி ஒரு உணர்வு… ம்ம்..ம்ம்… நான், எனக்கு... எனக்கு... என்னவோ ஆயிடிச்சி. சோல் மேட்டுன்னு சொல்வாங்களே… ஸாரி க்ளிஷேவா இருக்கு… அதையும் தாண்டி… பல ஜென்ம பந்தம்… இதுவும் க்ளிஷேதான்… ஸாரி, அவ்ளோ காதல், என் தெய்வம் மாதிரி, என் அம்மா மாதிரி, என் குழந்தை மாதிரி, எனக்கு எல்லாமே நீதான்னு, ஸாரி, நீங்கதான்னு சட்டுன்னு தோணிடிச்சி. தேவதைன்னு சொல்லலை, ஆனா, தேவதையைவிட மேல, பிரியமான தேவதை, என்ன சொல்றதுன்னே தெரியலை, உங்க கால் சுண்டு விரல் கூட இப்ப என் மனசுல, இல்ல நியூரான்ல எங்கோ பத்திரமா இருக்கு. உன் முகம்… அதை இன்னும் என்னால முழுக்க உள்வாங்கவே முடியலை. உன் முகத்தோட மொத்த அழகையும் உள்வாங்க மூளை தடுமாறுது, திணறுது, இவ்ளோ அழகை உள்வாங்கிப் பழக்கப்படலை இதுவரைக்கும். நான் சரியா சொல்றனான்னு தெரியலை… ஸாரி, அதனால உன்னைத் தொடர்ந்து வந்தேன். எப்படியோ இப்ப உன் பக்கத்துல உக்காந்துட்டிருக்கேன்.”

p44c_1517902129.jpg

“வாவ்… ஒரு பழைய  சினிமா ரொமான்ட்டிக் சீன்போல இருக்கு. சினிமாலதான் இப்படி நடக்கும்னு நினைச்சிட்டிருந்தேன்.”

“ரியல் லைஃப் சினிமாவைவிட சுவாரஸ்யங்கள் நிறைந்தது.”

“ம்ம்... ஆமாம்… நான் இன்னொரு சுவாரஸ்யமான ட்விஸ்ட் கொடுக்கவா?”

“என்னது’’

“நீ என்னைத் தொடர்ந்து வந்து இந்த ஃபிளைட்ல ஏறி என் பக்கத்து சீட்ல உக்காருவன்னு எனக்குத் தெரியும்.”

“வாட்?’’

“ரெண்டு வைப்பர் ஓவர் ஸ்பீட்ல ஆட ஆட, அதுக்கு நடுவுல உன் முகத்தைப் பார்த்தேன்.”

“ஓ காட்.”

“இவன் என் ஆளு, என்னைத் துரத்தி வருவான்னு தெரிஞ்சிது’’

“மை காட், எப்படி?”

“ஏன்னா நான் ஒரு சூன்யக்காரி’’

சீட்டை சாய்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டே அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியே விட்டபடி இருந்தான் தரண்.

திரும்ப பனிநிலாவைப் பார்த்து, “எனக்கு எல்லாமே கனவுபோல இருக்கு பனி.”

“சரி கனவுன்னே வெச்சிப்போம். இந்தக் கனவிலிருந்து முழிக்கணும்னு இருக்கா  இப்ப?”

“இல்லை.”

“சரி, இதைக் கனவுன்னே வெச்சிப்போம். போற வரைக்கும் போகட்டும், இப்ப கொஞ்ச நேரம் தூங்குவோமா?”

“நீ தூங்கு, நான் கனவை கன்ட்டினியு பண்ணிக்கிட்டே, நீ தூங்கறதைப் பாத்துக்கிட்டே இருக்கேன்.’’p44d_1517902139.jpg

பனி தூங்க ஆரம்பித்தாள். பனியின் சீட் பெல்ட்டை விடுவித்து விட்டான் தரண். அவள் கண்ணை மூடி சற்று நேரம் கழித்து தனது இருக்கையின் சாய்வுப்பகுதியில் தவழ்ந்த அவளின் முடிக்கற்றையில் முத்தமிட்டான். காதலில் முடிக்கற்றைகளுக்கும் உணர்விருக்கும். முடிக்கற்றைகள் அந்த முத்தத்தை உள்வாங்கின. எதிர்ப்பக்கத்தில் இருந்த முடிக்கற்றைகள் லேசாக ஆடி ஆர்ப்பரித்தன.

வானிலை சரியில்லாததால் வார்ப்பட்டையைப் போடவேண்டி அறிவிப்பு வந்ததும், பனிநிலா எழுந்தாள்.

விமானம் தரை இறங்குவதற்கு முன்னதாக அவள், ஹிமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்தவள் என்றும், அப்பா ஹிமாச்சல், அம்மா தமிழ்நாடு என்ற ஒரு சுருக்கமான காதல் கதையையும் சொன்னாள். அப்பா அரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்.

விமானம் இறங்கியவுடனேயே ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் அவளுடைய ஊருக்கு காரில் செல்வதாகக் கூறினாள்.

“வாவ்” என்றான். விமானம் டெல்லியில் தரை தட்டியது. சென்னையில் புயல் ஆரம்பித்தது.

கார் சண்டிகர் பாதையில்  பயணிக்க ஆரம்பித்தது. சண்டிகர் தாண்டி பெரிய ஏசி தாபாவில் நின்றது. முதலில் தான் உடை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றாள். அவள் வரும் வரையில் அவளுடைய கைக்குட்டையை எடுத்து நீண்ட முத்தமிட்டான். முத்தமிடுகையில் மூக்குக்கும் வேலை கொடுத்தான். முன்பைவிட அதிக ஒளியுடன் திரும்பி வந்தாள். அளவாக உணவருந்திய பின், மீண்டும் வண்டி கிளம்பியது.

மலையேற ஆரம்பித்ததும், நான் உறங்கவா என்றாள்.

நான் இன்னும் கனவிலேயே இருக்கிறேன் என்றான்.

நீண்ட நேர ஓட்டுதலுக்குப்பிறகு, வாழைப்பழங்கள் சுருங்கித் தொங்கிக்கொண்டிருந்த ஒரு சிறு கடையில் வண்டியை நிறுத்தினான். கடையில் தூங்கிக் கொண்டிருந்தவனை எழுப்பாமல், தானே ஒரு தேநீர் போட்டான். சத்தம் கேட்டு அசைந்தவனை ஆசுவாசப்படுத்தி விட்டு 500 ரூபாயை அவன் தலைமாட்டில் வைத்துவிட்டு, ஒரு சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டான்.

அவள் காரில் தூங்கிக்கொண்டிருந்தாள்.

சிகரெட் அடித்து முடித்துவிட்டு, காரில் ஏறினான். அவள் செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு காலைத்தூக்கித் தன் இருக்கையில் வைத்துக்கொண்டு, ஒருக்களித்து ஒரு சின்னஞ்சிறு குழந்தைபோலத் தூங்கிக்கொண்டிருந்தாள். அவளின் செருப்பை எடுத்துப்பார்த்து முகர்ந்தான். அதை ஒரு முத்தமிட்டான்.  மீண்டும் கீழே இறங்கி அவளுக்கான ஒரு தேநீரைப் போட்டு அவனே குடித்தான். அப்போது காரின் கண்ணாடி வழியே அவளின் தொண்டைக்குழியைப் பார்த்தான்.

மீண்டும் ஓட்டம். ஒரு நதியைப் பாலத்தின் மூலம் கடந்ததும் அது பக்கவாட்டில் தொடர்ந்து ஓடி வர ஆரம்பித்தது. குளிர் ஏற ஆரம்பித்ததும் காரில் வெப்பத்தைக் கூட்டினான். நிற்காமல் வளைந்து நெளிந்து ஓட்டியபடியே உயர ஆரம்பித்தான். முரட்டு ஓட்டம் இல்லாமல் வாழ்விலேயே இப்போதுதான் ஒரு பரதநாட்டிய நங்கையின் லாகவத்தோடு ஓட்டிக் கொண்டிருந்தான். அதிகாலை நான்கு மணி ஆகியும் கண் செருகவேயில்லை. பனிநிலா எழுந்துகொண்டாள். சற்று நேரம் அரைத்தூக்கத்தில் இருந்தாள். சில மணித்துளிகள் கழித்து ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தினார்கள். தேநீர் முடிந்ததும் சற்று நேரம் பனி ஓட்டுவதாகச் சொல்லி ஓட்ட ஆரம்பித்தாள்.

அதிகாலைக் காற்றைச் சுவைக்க ஆர்வம்தான். ஆனால், கண்ணாடியைத் திறந்தால் உறைந்து விடுவோம் என்றாள்.

“நான் உறைந்து எவ்வளவோ நேரம் ஆகி விட்டது” என்றான் தரண்.

கன்னங்களால் சிரித்த பனிநிலா , “நீ என்னை எவ்ளோ லவ் பண்ற தரண்?” என்றாள்.

“சொல்லவே தெரியலை பனி, எனக்கு இந்த உலகமே வேணாம்னு இருக்கு. யாரும் வேணாம். எதுவும் வேணாம். நீ நீ மட்டும் போதும். தனியான ஒரு கிரகம், இல்ல, தனியான ஒரு காடு. எந்தத் தொந்தரவும் இல்லாம உன்னை லவ் மட்டும் பண்ணிட்டிருந்தா போதும்” என்றான்.

“யூ ஆர் லக்கி தரண். நீ கேட்டதை எல்லாம் நான் உனக்குத் தரேன்.’’

“நிஜமாவா ராணிக்குட்டி.”

“ஆமாண்டா ராஜாக்குட்டி. நாம இப்ப போறதே யாருமில்லாத மலைமேல, தனியா இருக்கும் காட்டுக்கு நடுவுல, யாரும் இல்லாத பங்களாவுக்குத்தான். அங்க போனா வெளில வரவே எட்டு மாசம் ஆகும். யாரும் வர மாட்டாங்க. நாம ரெண்டு பேரு மட்டும்தான். இன்னொண்ணு தெரியுமா? இந்தக் குருவி, காக்காகூட வராது. நதியோட சலசலப்புகூடத் துணைக்கு இருக்காது. ஏன்னா நதியே உறைஞ்சு போய்க் கிடக்கும். நேரமும் உறைஞ்ச மாதிரிதான் இருக்கும். அந்த உறைந்த உலகத்துல நம்ம காதல் மட்டும் உயிர்ப்போட இருக்கும். அங்க இறந்த காலம் , எதிர்காலம் ஏதும் கிடையாது. எல்லாமே நிகழ்காலம்தான். லவ்வுக்கு பாஸ்ட், ஃப்யூச்சர் ஏதும் வேணாம். அதை நிகழ்காலத்துல உறைய வச்சி வாழ்வோம். என்னா?”

“என் பனிக்குட்டி, எல்லாமே நான் மனசுல நினைச்ச மாதிரியே நீ பேசற . அந்த இடம் எங்க இருக்கு ?”

p44e_1517902152.jpg“மணாலி தாண்டி, ரோத்தாங் பாஸ் போயி, கேலாங் தாண்டிப் போனா ஜிஸ்பான்னு ஒரு சின்ன கிராமம் வரும். அந்தக் கிராமத்துல 30 வீடுகள்தான் இருக்கும். ஒவ்வொரு வீட்லயும் ஒருத்தவங்கதான் இருப்பாங்க. அங்க போறதுக்கான பாதை இன்னும் 10 நாளில் அடைச்சுடுவாங்க. அதுக்கு அப்புறம் ரோட்டை முழுக்கப் பனி பொழிஞ்சி மூடிடும். அதுக்கு அப்புறம் ஆறு மாசமோ எட்டு மாசமோ கழிச்சிதான் பனியைச் செதுக்கிட்டு ரோட்டைத் திறப்பாங்க. நடுவுல ஏதாச்சும் எமர்ஜென்சின்னா ஹெலிகாப்டர்தான். கடை, கிடை ஏதும் கிடையாது. அந்த கிராமத்தைத் தாண்டி மேல ஏறினா பல ஏக்கர்ல எனக்கு ஒரு பண்ணை இருக்கு. அதுக்குள்ள ஒரு மர பங்களா இருக்கு. அங்க யாரும் இல்லை. நாம மட்டும்தான் தங்கப் போறோம். நம்ம மர வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு ஆறு ஓடுது.’’

“ வாவ் , சான்ஸே இல்ல பனி , பனிக்கு நடுவில் பனிநிலாவோட இருக்கப்போறேன்.’’

பேசிக்கொண்டே வண்டி வேகமெடுத்து, மணாலியை வந்தடைந்தபோது விடிந்திருந்தது. ஓர் அறையெடுத்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, உடை மாற்றிக்கொண்டாள். ஹிமாச்சலபிரதேசத்தை லேசாகப் பிரதிபலிக்கும் படியான உடையணிந்து கொண்டாள்.

இந்த நாட்டின் இளவரசியே என்று கூறி அவளின் இடது கைச் சுண்டு விரலைப் பிடித்தான். அவளுடைய ரத்தம் இவனுடம்பில் பாய்வது போல ஒரு மோனமான சிரிப்பை உதிர்த்தாள். ஆலு பரோட்டா சாப்பிட்டுவிட்டு மீண்டும் கிளம்பினார்கள்.

டீசல் முழுக்க நிரப்பிக்கொண்டாள். இரண்டு பெரிய கேன்கள் வாங்கி, அதிலும் டீசல் நிரப்பிக்கொண்டனர்.
 
ஆல் வீல் டிரைவ் மோடுக்கு மாற்றி ஓட்ட ஆரம்பித்தாள். சாலையே இல்லாமல் பாறையாக, சேறாகக் கிடந்த இடங்களையெல்லாம் அநாயாசமாகக் கடந்தாள். ரோதாங்க் பாஸ் தாண்டி,  கேலாங்குக்குச் சற்று முன்பாக ஒரு குடில் இருந்தது. மதியம் ஆகிவிட்டபடியால் அங்கே ஆட்டுக்கறி உணவு உண்டார்கள். இன்றோடு அந்தக் கடையை அடைக்கப் போவதாகக் கூறினார்கள். அநேகமாக நாளையே சாலையை அடைத்துவிடுவார்கள். பனிப்பொழிவு அதிகமாகிவிட்டது. ஆட்கள் போக்குவரத்தும் குறைந்துவிட்டது என்றார்கள்.

மீண்டும் ஆரம்பித்த பயணத்தில் சாலையை உடைத்துக்கொண்டு, நீர் மரண வேகத்தில் கிழித்துக்கொண்டு சென்றது. அதையெல்லாம் ஓவியம் வரையும் நிதானத்தோடு ஸ்டியரிங்கைப் பயன்படுத்திக் கடந்தாள். இப்போது பனிக்கட்டிகள் தட்டுப்பட ஆரம்பித்தன. சாலையின் இரு பக்கத்திலும் பனிக்கட்டிகள். தூரத்து மலைகளின் மீது பனிக்கட்டி உறைந்து கிடந்தது. பக்கத்தில் இருக்கும் ஆழமான பள்ளத்தாக்கையும், தொலைவில் இருக்கும் பனி உறைந்த மலைகளையும் ஒருங்கே பார்க்கும்போது, இரண்டையும் விழுங்கியதுபோல அடிவயிறு கலங்கியது.

கார் ஜிஸ்பாவினுள் நுழைந்தது. ஜிஸ்பா,  அநியாய போதையில் சாத்தான் வரைந்த ஓவியம் போல அவ்வளவு அழகாகவும், புதிராகவும் இருந்தது.

பனி சொன்னது போல 30 வீடுகள்கூட தேறுமா என்பது சந்தேகம். ஊரே உறைந்து கிடக்க, ஆட்கள் நடமாட்டம் ஏதுமில்லை. ஜிஸ்பாவைத் தாண்டிக் கொஞ்ச தூரம் சென்று, இடதுபுறம் பிரியும் ஒரு மோசமான தனியார் சாலையில் கார் திரும்பி  தத்தித் தத்திச் சென்றது. கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர்களைக் கடக்க ஒரு மணி நேரம் ஆனது.

ஒரு மணி நேரத்திற்குப்பிறகு, ஆறு தென்பட்டது. பக்கத்தில் ஒரு மர வீடு. பனி மர வீடு என்று சொன்னாளே ஒழிய, அது வீடு அல்ல, மர பங்களா. தரைத்தளம் மற்றும் முதல் தளம் என பிரமாண்டமாக இருந்தது.
“இங்கேதான் காதல் வளர்க்கப்போகிறோம்” என்று கூறி, துள்ளி இறங்கினாள்.

நதி ஓடிக்கொண்டிருந்தது. நீர் பாறையைப் பழித்தபடியும், பாறை நீரைப் பழித்தபடியும் ஏதோ கலவையான சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தது நதி.

“ஆறு ஓடுறதைப் பாத்துக்கோ, இன்னும் கொஞ்ச நாளில் உறைஞ்சிடும்” என்றாள்.

 வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

“தூங்கறியா?” என்றாள்.

“இல்ல, இப்பவே ஈவ்னிங் ஆயிடிச்சி , ஏதாவது டிரிங்க் இருந்தா கொஞ்ச நேரம் குடிச்சிட்டு, சீக்கிரம் தூங்கிடலாம்” என்றான்.

“இந்த ஊர்லயே தயாரிச்ச வைன் இருக்கு” என்றவள், உள்ளே சென்று பெரிய மண் குடுவையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

அதை வாங்கிக்கொண்டவன், இந்தத் தருணத்திற்காகக் காத்திருந்தவன்போல, அவளின் இடையில் கைகொடுத்துத் தன்னருகே இழுத்து அணைத்துக்கொள்ள முயன்றான்.

அவன் நெற்றியில் பாக்ஸர்போலக் குத்திவிட்டு, சிரித்தாள். விலகினாள். ``குடிச்சிட்டிரு வந்துடறேன்’’ என்றவள், பங்களாவுக்குள் ஓவியம் கலங்குவதைப் போல நடந்து சென்று மறைந்தாள்.

வீட்டை விட்டு வெளியே வந்து நதிக்கரைக்குச் சென்றான் கையில் வீட்டில் தயாரித்த வைனுடன். நதியின் பக்கத்தில் ஒரு பாறை மீதமர்ந்தான். வைனை ருசிக்க ஆரம்பித்தான்.

பதநீரில் கசப்பும் கொஞ்சம் தணலும் சேர்த்தது போல இருந்தது.

இன்னும் இரவாகவில்லை.

இந்த இமாலயக் குளிர் நரம்பினூடாகப் பாய்ந்து மூளையில் தேள் கொடுக்கால் கொத்துகிறது. பெரிய உடல் நடுக்கம் இல்லை, ஆனால் மன நடுக்கம் உண்டாக்குகிறது. நுரையீரலில் சுடச்சுட பனி சென்று அமர்ந்து கொண்டது போல இருந்தது. மூச்சுக்காற்று குளிர்ச்சூடாக வெளியேறியது. தக்காளியைப் பிதுக்கி மூக்கில் தேய்த்துக்கொள்ளலாம்போல இருந்தது. பிராண வாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டதை இப்போதுதான் உணர்ந்தான். மணாலியில் பனி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கும்போது கண்டுகொள்ளவில்லை. பிராண வாயுத் தட்டுப்பாட்டை உடலின் பாகங்கள் முதன்முறையாக உணர்ந்ததால், அபயக்குரல் எழுப்பி ஆர்ப்பரித்தன. உடலுக்குள்ளே ஒரு ஆம்ப்ளிஃபையரை வைத்தால் நூறு ஆம்புலன்ஸ் சைரன்களின் ஒலி கேட்கும்.

அந்தக் குளிரிலும் ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டு, ஒரு முக்கால் கால்சராய் போட்டுக்கொண்டு தரணை நோக்கி வந்தாள் பனிநிலா.

அந்த உடையில் அவளைப் புதிதாய்ப் பார்த்தான். காதல் நட்சத்திரங்கள் கூட்டமாய் பின் மண்டையில் தாக்குவதுபோல உலுக்கிக் குலுக்கி எழுந்தான்.

p44f_1517902175.jpg

சூரியன் மங்கிக்கொண்டிருந்தது. அவளின் பின்னணியில் பனிமலை தூரத்தில் தெரிந்தது. பனி என்றால் வெள்ளை என்றுதான் இதுவரை தரண் நினைத்திருந்தான். இப்போதுதான் கரும்பனியும் உண்டென்று கண்டுகொண்டான். கரும்பனி மற்றும் வெண்பனிப் பின்னணியில் வண்ணமயமாகப் பனிநிலா மிதந்து வருவதைக்கண்டு, அவளை நோக்கிச் சென்றான்.

``இந்த நிமிடத்திலிருந்து, இப்போதுதான் உன்னைப் பார்த்ததுபோலப் புதிதாகக் காதலிக்கிறேன்’’ என்றான்.

“நான் சொல்ல வருவதை எல்லாம் நீ சொல்கிறாய்” என்றாள். ஆனால் “ஒரே ஒரு ஏமாற்றம்தான் என்றாள்.’’

“என்ன ?”

“என்னைத் தேடி நீ இங்கு வருவாய் எனச் சில வருடங்கள் இங்கே காத்திருந்தேன். நீ வந்திருக்க வேண்டும், அதுதான் இன்னும் உண்மையான காதல். ஆனால் நீ என்னை சென்னையில் பார்த்துதான் தொடர்ந்து வந்தாய்.”

“மன்னித்துவிடு. என் தவறுதான். நான்தான் வந்திருக்க வேண்டும்’’  என்று கூறிய தரண் பனியை மெல்ல இழுத்து நெற்றியில் முத்தமிட்டான். விடுவித்துக்கொண்டு, அவள் திரும்பியதும் பின்னங்கழுத்தில் முத்தமிட்டு முகம் புதைத்தான்.

“தரண், அங்கே தணல் போட்டிருக்கிறேன். அதனருகே அமர்ந்து பேசலாம் வா.”

தரணை முதன்முறையாகக் கையைத் தொட்டு, பிடித்து  அழைத்துச் சென்றாள். தரணுக்கு அவளாகவே தந்த ஸ்பரிஸம் தாங்க முடியவில்லை. மின்மினிப்பூச்சிகள் வைரஸ்களாக மாறி ரத்தத்தில் ஓடுவதைப்போல வித்தியாசமாக நடந்தான்.

“என்னோட ரெண்டு கண்ணையும் பிடுங்கி உன்கிட்ட கொடுத்துடணும்போல இருக்கு’’ என்றான்.

பனிநிலா தரணை அழைத்துச்சென்று தணலின் அருகே போட்டிருந்த மரக்கட்டையில் அமர வைத்தாள்.

அவளும் ஒரு வைன் கோப்பையை எடுத்துக்கொண்டாள்.

“தரண் உன்கூட கொஞ்சம் பேசணும். நீ தெளிவா புரிஞ்சிப்ப. நானே சொல்லட்டுமா, இல்ல நீ சொல்றியா?”

“லவ் யூ சோ மச் பனி.”

“அதேதான். ஆனா விரிவா சொல்றேன். நம்ம காதல் செத்துடக்கூடாது. வளரணும்.”

“நிச்சயமா பனி.”

“காதலுக்கு முக்கியமான  எதிரிகள் பல பேர் இருக்காங்க. எல்லோரையும் ஒதுக்கணும்.”

“நம்ம காதல் வளரணும்னா, நான் சாகணும்னாகூட சாகத் தயாரா இருக்கேன் பனி.”

“சரி… நமக்குள்ள செக்ஸ் வேண்டாம். செக்ஸ் முடிஞ்ச அடுத்த செகண்ட் காதல் குறைய ஆரம்பிக்கும். செக்ஸ் வளர்ந்துகிட்டே போகும். நாம தப்பா, அதைக் காதல்னு நினைச்சிப்போம்.”

“ஓக்கே செக்ஸே வேண்டாம்.’’

“ஒண்ணு சொல்லட்டுமா? குழந்தைகூட காதலுக்கு எதிரிதான்.”

“ஆமாம், ஆமாம்.’’

“நமக்கு செக்ஸும் வேண்டாம், இந்தக் காதலைக் கொல்லும்  குழந்தையும் வேண்டாம்டா.’’

‘`ஓக்கே’’

“அப்புறம், நாள் கூடக் கூடவும் காதல் குறைஞ்சி, ஒரு அலுப்பு வரும். அதனால…”

“அதனால...’’

“நாம தினமும் அன்னிக்கிதான் முதன்முதலா பார்த்த மாதிரி, லவ்வை ப்ரப்போஸ் பண்ணி லவ் பண்ணலாம். ஏன்னா, முதன்முதலா காதலைச் சொல்லிக் காதலிக்க ஆரம்பிச்ச அந்த நாளோட அடர்த்தி  அடுத்தடுத்த நாளில் இருக்கறது இல்லை.’’

“சரி , பனி… நான் உன்னை தினமும் அதே தீவிரத்தோட, புதுசா காதலிக்கிறேன். காதலை எப்பவும் புத்தம் புதுசா ஃப்ரெஷ்ஷா வச்சிப்போம்.”

“அம்மா, அப்பா, வேலை, நண்பர்கள், பொழுது போக்கு, செக்ஸ் எல்லாமே காதலுக்கு எதிரிகள்தான்.’’

“ஆமாம் பனி, நமக்கு நம்ம காதல் மட்டும் போதும்.”

“இன்னும் எட்டு மாசம் வெளி உலகைப் பார்க்க முடியாதுடா. நீ, நான், இந்த வீடு, உறைந்த இந்த நதி, அப்புறம் நம்ம காதல் மட்டும்தான்.’’

“எனக்குக் காதல் மட்டும் போதும் பனி, வேறெதுவும் தேவையுமில்லை பனி.’’

“அப்புறம், செக்ஸ் வச்சிக்கிட்டா குழந்தை பிறக்குது இல்லடா?”

“ஆமாம்.’’

“அதேபோல உண்மையா, தீவிரமா காதலிச்சா ஏன் எதுவும் புதுசா உருவாகிறது இல்ல?”

“தெரியலையே!”

“ஏன்னா யாரும் இதுவரைக்கும் உண்மையா, தீவிரமா காதலை வளர்க்கறதே இல்லை. காதல் உருவான அன்னிக்கே அது மெதுவா  கொல்லப்பட ஆரம்பிச்சிடுது.”

“ம்ம்”

“காதல் பாவம், அதுக்கு வளர்ச்சியே இல்லை. உருவான நாளில் இருந்தே அது அழிய ஆரம்பிக்குது. அழிக்க ஆரம்பிச்சிடறாங்க.’’

“ஆமாம் பனி , நீ சொல்றது சரிதான்.”

“ஆனா நாம ஒழுங்கா காதலை மட்டும் வளர்த்து ,  காதலால் உருவாகும் ஒண்ணுக்கு உயிர் கொடுப்போமா?”

“எப்படி பனி?’’

“அர்ப்பணிப்போட காதலிச்சா, காதல் உருவாகி வளரும். அது ஒரு உணர்வு.  உருவமில்லாம காற்றில் கலந்திருக்கும். அந்த உணர்வை நாம உணரலாம். அது நம்மளைச் சுத்திதான் இருக்கும். நம்மகிட்ட மட்டும் பேசும்.இப்போதைக்கு அரூபமா நினைச்சிப்போம். அதுக்கு ஒரு பேர் வைப்போம்.”

“என்ன பேர் வைக்கலாம்?”

“ம்… சிமிழ்… ஓக்கே வா?’’

“ம்ம் ஓக்கே… சிமிழ், சூப்பர்’’ என்றான் தரண்.

“ஹாய் சிமிழ்” என்றாள் பனி.

இப்போ வரைக்கும் நான் நல்லா இருக்கேன். இப்பவே கிஸ் வரைக்கும் வந்துட்டீங்க. இனிமேலும் இப்படியே போச்சின்னா… செக்ஸ் வரைக்கும் போயிடும். நான் செத்துடுவேன், போய்த் தூங்குங்க என்றது சிமிழ்.
“சிமிழ் சொன்னது கேட்டுச்சா’’ என்றாள் பனி.

“கேட்டிச்சி’’ என்றான் தரண். சிரித்தான். பனியை மென்மையாக முத்தமிட்டான். “என் முத்தத்தில் காமமே இல்லை, காதல் மட்டும் தான். என் முத்தத்தால் நீ அழியமாட்டாய் சிமிழ்,  வளர்ந்துகிட்டுதான் போவ’’ என்ற தரண், “சிமிழுக்குக் கேட்டுச்சான்னு கேளு பனி” என்றான்.

“இப்போதைக்கு நம்பறேன்’’ என்ற சிமிழ், தரண் முத்தமிட்ட பனியின் கன்னத்தை வருடிச் சென்றது.

இருவரும் எழுந்து கைகோத்தபடிக்கு நடந்து உள்ளே சென்றனர். பனி, தரணின் தோளில் சாய்ந்துகொண்டு நடந்தாள்.

பின்னாலேயே வந்த சிமிழ், “பிரிஞ்சி நடந்து போங்க” என்றது.

தரணை இன்னும் இறுக்கிக்கொண்டாள்  பனி. “காதல் உணர்வால் கட்டிப்பிடிக்கிறீங்க, ஓக்கே! நானும் வளர்கிறேன். அது எப்போ எல்லையைத்தாண்டிக் காம உணர்வுக்குள்ள போகுதோ, பிரிய முடியுதா உங்களால?” என்று சிமிழ் கேட்டது.

“நிச்சயமா விலகிடுவோம்’’ என்றாள் பனி.

சிமிழ் அழ ஆரம்பித்தது. ``எனக்கு இப்பவே கழுத்தை நெரிக்கிற மாதிரி இருக்கு” என்றது சிமிழ்.

“ஸாரி சிமிழ், எனக்குக் காமம் ஏதுமில்லை.இந்த தடியனுக்குத்தான் போல இருக்கு’’ என்ற பனி, செல்லமாக அவனது தலையில் தட்டி தரணைப் பிரிந்தாள்.

இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.

உன் பெட் ரூமைக் காட்டறேன் என்றவள், முன்னால் நடந்தாள், தரண் பின்தொடர்ந்தான்.

அவனது படுக்கையறையைக் காட்டி, அவனை உள்ளே தள்ளினாள் பனி. அறையினுள் ஹீட்டர் ஓடிக்கொண்டிருந்தது. கதகதப்பாக இருந்தது.

அவளையும் உள்ளே இழுத்தான் தரணி.

இழுத்ததும் அவனுடன் வந்து ஒட்டிக்கொண்டாள் பனி.

கட்டிப்பிடித்தல் என்றால், மார்பும், மார்பகங்களும் எந்தத் தடையும் இல்லாமல் முதலில் சேர வேண்டும். மார்பகங்கள்,  வயிற்றையும் வயிற்றையும் சேர விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தரணின் மார்பில் புதைந்த பனியின் மார்பகங்கள் அவனது இதயத்தோடு பேசின.

“எனக்கு மட்டும் இழுக்கும் சக்தி இருந்தா,  உங்களைப் பிரிச்சி தனித்தனியாக் கட்டி வெச்சிடுவேன்” என்றபடியே சிமிழ் நுழைந்தது.

தரணை விலக்கிய பனி, “சிமிழ் வருத்தப்படுதுடா, தெரியலையா?’’ என்றாள்.

“இதுக்கெல்லாம் வருத்தப்படுவியா சிமிழ்? நான் உன்னை நல்லா போஷாக்கா வளர்த்துட்டுதான் இருக்கேன்” என்றான் தரண்.

சிமிழ் இருவர் தலையிலும் குதித்து ஆடியது.

“தரண், நம் காதலுக்கு எதிராக யார் இருந்தாலும் கொல்ல வேண்டும். உனக்குத் தெரியுமா? காதல் ஆதி உணர்ச்சி” என்றாள் பனி.

“ஆம் ஆம்’’ தரணுக்கு மூச்சு இரைத்தது.

“கொல்லுதலும் ஆதி உணர்ச்சி. இந்த நாகரிகம், பெருந்தன்மை, அன்பு, பாசம் எல்லாம் நடுவில் வந்தவை.’’

“ஆமாம்’’ என்றான் தரண்.

“நம் காதலுக்குத் தடையாக இருந்தால் நான் உன்னையும் கொல்லுவேன். என்னையும் கொல்லுவேன்’’ என்றாள்.

“அதுதான் சரி’’ என்றது சிமிழ்.

“கனவு போல இருக்கிறது கண்ணே’’ என்றான் . ‘`கண்ணே” என்பதை சொல்லவில்லை, முணுமுணுத்தான்.

“இது கனவு என்றால், இதிலிருந்து, நீ எழ விரும்புகிறாயா’’ என்றாள்.

“எழுந்தாலும், எழ விரும்பவில்லை என்று சொல்லத்தான் விரும்புவேன் உன்னிடம், அப்போதும் நீ இருக்க வேண்டும்’’ என்றான்.

“சரி போய் தூங்கு, காலையில், புதிதாக சந்திக்கலாம். புதிதாக காதலிக்கலாம். காதலை உறைய வைக்கலாம். காலத்தை, வாழ்வை உறைய வைத்து காதல் காதல் காதல் என வெறும் காதலோடு காதலாக வாழலாம் தரண்’’ என்று சொல்லியபடி பின்னகர்ந்தாள். தரண் அவள் கைகளைப் பற்றிக்கொண்டான். கைகளை விடுவித்துக்கொண்டே நகர்ந்தாள் பனி.

“லவ் யூ பனி’’ என்று கத்தியபடியே, படுக்கையில் வந்து விழுந்தான் தரண். நீண்ட நாள்களுக்குப்பின் படுக்கையில் விழுவது போல இருந்தது. தூக்கம் சொக்கியது.  தூங்கப்போவதற்கு முன்பு, அறையை நோட்டமிட்டான். நல்ல பெரிய அறை. மூலையில் சலனம் தெரிந்தது. மூலையை நோக்கினான் தரண்.

மூலையில், நூற்றாண்டுத் தாடியுடன், தரண்.   கண்களில் காதல் ஒளிர அமர்ந்திருந்தான். அவன் கைகளில் சிகரெட் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பக்கத்தில் அசாத்திய பேரமைதியோடு சிமிழ் அமர்ந்து இருந்தது தெரிந்தது.

குட்டிச் சிமிழ், குதித்துக்கொண்டே எங்கோ ஓடியது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.