Sign in to follow this  
நவீனன்

ஜன்னல் திட்டில் சில காக்கைகள்

Recommended Posts

ஜன்னல் திட்டில் சில காக்கைகள்

 

 
k12

சமையலறையில் அம்மா யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள். காலை நேரத்தில் யார் வந்திருப்பார்கள்? அனு யோசித்தாள்.
 அவள் கணவன் அரவிந்த் வேலை விஷயமாக தில்லி போயிருந்தான்.
 அஞ்சு, ஆதித்யா இருவரையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி அனுப்பிவிட்டு, தெருக்கோடியிலிருந்த தன் சிநேகிதி சுபஸ்ஸ்ரீயின் வீட்டில் நடந்த யோகா வகுப்புக்குப் போய்விட்டுத் திரும்பிய அனு, தன் தாயைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் உடன் கொண்டு வந்திருந்த வீட்டுச்சாவியால் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததும் தான் அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்டது.
 அனு சப்தம் செய்யாமல் எட்டிப் பார்த்தாள். அம்மாவின் கையில் கரண்டிதான் இருந்தது. அலைபேசி இல்லை. சற்று தூரத்தில் இடதுபுறமாக இருந்த ஜன்னல் திட்டின்மீது காக்கை ஒன்று உட்கார்ந்து கழுத்தை நாசூக்காக ஜன்னல் கம்பிக்குள் நுழைந்து அம்மாவையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தது.
 ""நேத்து ஏன் வரல்லே?'' அம்மா கேட்டுக் கொண்டிருந்தாள்.
 "ஓ... அம்மா காக்கையுடனா பேசுகிறாள்? தான் இத்தனை நாள் கவனித்ததே இல்லையே' அனு நினைத்தவாறு தொடர்ந்து அங்கு நின்று பார்த்தாள்.
 ""கேக்குறேனில்ல... எத்தனை தடவை கேட்கணும்?'' இது அம்மா.
 ""காகா'' என்றது அது.
 "என்ன சொல்றே? ஊர் சுத்தப் போயிட்டியா? இன்னிக்குதான் இந்த மகேஸ்வரியின் சாப்பாடு நினைவுக்கு வந்ததா?''
 அதற்கும் அதன் பதில் ""காகா'' தான்.
 "சரி வெயிட் பண்ணு. குக்கர் இப்பதான் இறக்கினேன். சாதம் ரொம்பச் சுடும். ஆற வெச்சுப் போடறேன்.''
 "கா... கா...'' அது சரி என்றதோ?
 அம்மா சொன்னது. புரிந்த மாதிரி ஜன்னல் திட்டில் ஒதுங்கி நின்று மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தது.
 அம்மா குக்கரைத் திறந்து ஒரு கரண்டி அன்னத்தை எடுத்து தட்டில் போட்டு ஆறவைத்து கொஞ்சம் பருப்பு, நெய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து சின்ன உருண்டையாக்கி கனுப்பிடி வைப்பதுபோல் ஜன்னல் திட்டில் வைக்கப் போனபோது காக்கை ஒதுங்கி நின்றது.
 அவள் திரும்பி வந்து வாஷிங்பேசின் குழாயில் கையைக் கழுவிக்கொண்டு அலமாரியிலிருந்த துவாலையை எடுத்துத் துடைத்துக் கொள்ளும்போதுதான் அனுவைப் பார்த்தாள்.
 ஜன்னல் திட்டில் அம்மா வைத்திருந்த சோற்றுருண்டையைக் கொத்திவிட்டு அது திரும்பி ""காகா'' என்றது.
 அம்மாவுக்கு நன்றி சொல்லுகிறதோ?
 "அம்மா உன் விருந்தாளி என்ன சொல்றார்?'' அனு குறும்பாகக் கேட்டாள்.
 "உஷ்... சத்தமாய் பேசாதே. காக்கா பயந்துண்டு முழுக்க சாப்பிடாமல் பறந்து போயிடும்''. அவள் சொன்னதற்கு மாறாக, இன்னொரு காக்கா வந்து உட்கார்ந்து சோற்றைப் பகிர்ந்துண்டது.
 ""காக்காய்க்கு அன்னமிடுகிறதன் தாத்பர்யம் என்ன? நம் முன்னோர்கள் அதாவது பித்ருக்கள் காக்கா ரூபத்தில் வந்து உன் படையலை ஏத்துக்கறதா ஐதீகமா?''
 "அப்படியும் சொல்லலாம். உன்னை மாதிரி சிறிசுகள் ஏற்றுக் கொள்ளுகிற மாதிரி விளக்கமும் என்னால் கொடுக்க முடியும். இயற்கையை மனுஷன் ஏகத்துக்கு ஆக்கிரமிச்சுட்டான். பறவை இனங்கள் வாழுகிற மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிட்டு நெடுஞ்சாலையும் நாலுவழிப்பாதையும் போடறான். குடியிருப்புகளை அடுத்தடுத்து கட்டி உலகத்தையே சிமெண்ட் காடுகளாக்கிக்கிட்டிருக்கான். நெல், கோதுமை, பருப்பு வகை எல்லாமே மனுஷனுடைய பசியை ஆற்றத்தான் உபயோகப்படுது. காய்கறி வகைகள், பழங்கள் எல்லாமே மனுஷன் சாப்பிட்டு மிஞ்சினால்தான் மத்த ஜீவன்களுக்குக் கிடைக்கும். இயற்கையால் நமக்கு கிடைக்கிற அனுகூலங்களை நாம் மட்டும் அனுபவிச்சா போதுமா? பறவைகளோடும், பிற உயிரினங்களோடும் அதைப் பகிர்ந்து கொள்வது அவசியம்னு நினைக்க வேண்டாமா? அஞ்சுவித யக்ஞங்களில் இதை பூத யக்ஞம்னு சொல்லுவாங்க. ஏதாவது ஒரு திருநாளின் பெயரைச்சொல்லி பறவைகளுக்கும், பசுமாடு மற்றும் கால்நடைகளுக்கும், பாம்புக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பதை ஒரு கடமையாக நடைமுறையில் வந்துவிட்ட பழக்கம் நினைக்க வைக்கிறது''.
 நாள் முழுவதும் சமையலறையில் உழன்று கொண்டிருந்தாலும் அம்மா எவ்வளவு அறிவு
 பூர்வமாக விஷயங்களைப் பற்றி யோசிக்கிறாள் என்பதை அனு நினைத்தபோது அனுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 அம்மாவுக்கு பதினோரு வயதில் திருமணமாகிவிட்டதாம். பிறகு புகுந்த வீட்டில் நுழைந்து நாத்தனார், மைத்துனன் என்று அனுசரித்து வாழ்ந்து மாமியார் இல்லாததால் அவளது கடமைகளைச் சுமந்து நிறைவேற்றி, அனு பிறந்ததும் நல்ல முறையில் அவளை வளர்த்து படிக்க வைத்து, அரவிந்துக்கு மணமுடித்து வைத்து பேரன் பேத்திகளைப் பார்த்த திருப்தியில் அப்பா உடனே போய்ச் சேர்ந்துவிட அம்மாவைப் பார்த்துக் கொள்ளுகிற பொறுப்பை அனு ஏற்றுக்கொண்டாள். அவள் சமூகவியலில் எம்.ஏ. படித்திருந்தாலும் அலுவலகம், வீடு என்கிற ஒரே விதமான வாழ்க்கையின் சுழற்சியில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் யோகா, மெல்லிசை, ஓவியம் என்று தனக்கு ஈடுபாடு இருந்த விஷயங்களுக்காக நேரத்தைச் செலவிட அம்மா உடன் இருந்தது பெரும் உதவியாக இருந்தது.
 அம்மா மகேஸ்வரிக்கும் மகள் குடும்பத்துடன் இருந்தது பேராதரவாக இருந்தது.
 அனு ஜன்னல் திட்டை நிமிர்ந்து பார்த்தபோது இன்னும் இரண்டு காக்கைகள் வந்து உட்கார்ந்திருந்தன.
 அம்மா வைத்திருந்த அன்ன உருண்டையை காலி செய்துவிட்டு ""காகா'' என்றன.
 அம்மா ""தேங்க்ஸ்'' என்றாள்.
 "எதுக்கு தேங்க்ஸ் சொல்றே?''
 "உனக்கு ஒண்ணு தெரியுமா அனு? காக்கா தானே வந்து சாப்பிடாது. சாப்பாட்டை வைத்துவிட்டு "காகா' என்று சத்தமாக கூப்பிட்டு, தாம்பாளத்தையோ, தட்டின்மீதோ தட்டி ஒலியெழுப்பி அழைத்தால்தான் வரும். நம்ம வீட்டிலே காக்கா வந்து ஜன்னல் திட்டில் உட்கார்ந்து சாப்பாட்டைக் கேட்டு வாங்கி சாப்பிடறது பாரு. அதுக்கு நாம் ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்''.
 முதலில் வந்த காக்கை மீண்டும் "காகா' என்று கரைந்தது.
 "சரி போயிட்டு வா''
 "என்னம்மா நீ... மனுஷாகிட்ட பேசற மாதிரி காக்காவிடம் பேசறே?''
 ""நான் பேசினால் அதுக்குப் புரியுது. உனக்கென்ன ப்ராப்ளம்?'' அம்மா சிரித்துக்கொண்டே கேட்டாள்.
 அதன் பிறகுதான் தினமும் நேரம் தவறாமல் காக்கை காலை பதினோரு மணிக்கு அம்மா வைக்கிற அன்னத்தை உண்பதற்காக ஜன்னல் திட்டுக்கு வருவதை அனு கவனித்தாள்.
 
 விடுமுறை நாட்களில் அஞ்சுவுக்கும், ஆதித்யாவுக்கும் அதைப் பார்ப்பது பொழுகுபோக்காகிவிட்டது. சில நேரங்களில் இரண்டு மூன்று காக்கைகளும் ஒரே நேரத்தில் வந்துவிடும். சில நாட்களில் ஜன்னல் திட்டில் காக்காவின் உணவைப் பகிர்ந்து கொள்ள புறா, மைனா, அணில் என்று எல்லாமே வந்துவிடும். அப்போது காக்கை பறந்து சென்று மரத்தின்மீது அமர்ந்துவிடும். நடுவில் குறுக்கிட்டுக் குழப்பத்தை விளைவிக்காது.
 ஒதுங்கிப்போய் அதன் விட்டுக் கொடுக்கிற தன்மை அனுவை ஆச்சரியப்பட வைத்தது.
 ""காக்கை கரைந்துண்ணும்'' என்பதை அவள் அறிவாள். கரைதலும் பகிர்தலும் அதன் இயல்பான பண்போ?
 சில தினங்களில் குறிப்பிட்ட நேரத்தில் காக்கை வராவிட்டால் அவள் தாய் மகேஸ்வரி தவிப்பாள்.
 ""காக்கா இன்னும் வரக் காணோமே?'' என்று அவள் அலப்பல் தொடரும்.
 "எதுக்கு நீ இப்படி அலட்டிக்கிறே? அதுக்குக் கலியாண மண்டபத்திலோ, அஞ்சு நட்சத்திர ஹோட்டலிலோ சாப்பாடு கிடைச்சிருக்கும்.அதுதான் வரல்லே. இதுக்கெல்லாம் கவலைப்படுவியா?'' அனு வேடிக்கையாகக் கேட்பாள்.
 "இது கவலை இல்லே அனு. நான் வைக்கிற சாதத்தை காக்கா வந்து உடனே சாப்பிட்டால் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு. அவ்வளவுதான்''என்பாள் அவள் தாய்.
 மனித உறவுகளிலேயே வலிமையும் நெருக்கமும் குறைந்து வரும் இந்த யுகத்தில், ஜன்னல் திட்டில் வந்து உட்காரும் காக்கையிடம் அம்மா காட்டிய அன்பும் பரிவும் அவளுக்கு வியப்பூட்டுவதாக இருந்தது.
 
 நன்றாகப் போய்கொண்டிருந்த வாழ்க்கை, அனுவின் அம்மா குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, தடம் புரண்ட மாதிரியாயிற்று.
 அறுவை சிகிச்சை ஃபிஸியோதெரப்பி என்று அவளது மருத்துவமனை வாசம் தொடர வேண்டி வந்தபோது காக்கைக்கு அன்னமிடும் பழக்கம் நின்று போயிற்று.
 இரவு நேரங்களில் தன் தாயைப் பார்த்துக்கொள்ள நர்ûஸ ஏற்பாடு செய்துவிட்டு அனு அதிகாலையில் எழுந்து சமையல், டிபன் எல்லாவற்றையும் முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிய பின்தான் மருத்துவமனைக்குப் போக முடிந்தது. அரவிந்த் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாலும் தடுமாற்றமும் திண்டாட்டமும் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.
 ""பாவம். என்னால் உங்களுக்கெல்லாம் தொந்தரவு, அலைச்சல். இப்படி தொல்லை கொடுக்கிறேனே... ஸôரி அரவிந்த்''
 "அப்படி சொல்லாதீங்க ஆன்ட்டி. இந்தப்
 பிரச்னை அனுவுக்கே ஏற்பட்டிருந்தால் நீங்க சும்மா விட்டுடுவீங்களா?'' என்றான் அவன்.
 "அச்சச்சோ... இதுமாதிரி யாருக்கும் நடக்க வேண்டாம். நீங்க ரெண்டு பேரும் குழந்தைகளும் ஆரோக்யமா இருக்கணும்'' என்ற மகேஸ்வரி கண்களில் பனித்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
 இரண்டு வாரங்கள் போன வேகம் தெரியவில்லை.
 ஒருநாள் அவளைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த வேலைக்காரி வள்ளி, "அம்மா! ஜன்னல் திட்டில் காக்காய்கள் வந்து உட்கார்ந்து தினமும் உன்னைத் தேடிட்டுப் போகுது'' என்றாள்.
 உடனே அம்மாவின் கண்களில் நீர்ப்பிரவாகம்.
 "அனு! எனக்கு ஏதாவது ஆயிடுத்துன்னாலும் காக்காவுக்கு சாதம் போடுகிற வழக்கத்தை நீ தொடரணும்''
 "கண்டிப்பாகச் செய்வேன். ஆனால் அதற்கு அவசியம் வராது. நீ சரியாகி வீட்டுக்கு வந்து உன் கையாலேயே காக்காவுக்கு சாதம் வைக்கப்போறே. நீ வேணும்னா பாரு'' என்று அனு உறுதியாகச் சொன்னாள்.
 அவள் நம்பிக்கை வீண் போகவில்லை.
 மருத்துவமனையிலிருந்து அனுவின் அம்மா மகேஸ்வரி வீடு திரும்பிய அன்று பிற்பகலில், ஜன்னல் திட்டில் "காகா' என்ற சப்தம்.
 அனு சமையலறையை எட்டிப் பார்த்தாள்.
 இரண்டு மூன்று காக்கைகள் பறந்து பறந்து "காகா' என்று கத்திவிட்டு மீண்டும் ஜன்னல் திட்டில் வந்து உட்கார்ந்து உள்ளே பார்த்தன.
 "அம்மா வந்துட்டா என்கிற சந்தோஷத்தை கொண்டாடறீங்களா?''
 அனு தன் அம்மாவைப் போலவே அவற்றிடம் கேள்வியை எழுப்பிவிட்டு பார்த்தாள்.
 "கா கா!''
 அவை ஆமாம் என்கிறதோ? தானும் தன் தாயைப் போலவே காக்கையுடன் பேசத் துவங்கிவிட்டது அவளுக்குச் சிரிப்பை வரவைத்தது.
 அன்பையும் ஆனந்தத்தையும் வெளிப்படுத்த மொழி அவசியமே இல்லை. ஆர்வத்துடன் எழுப்பப்படும் சப்தங்களே போதுமோ?
 தன்னையும் அறியாமல் ஏற்பட்டுவிட்ட அந்தப் பிணைப்பு திருப்தியை அளிக்கும் என்று அனு நினைத்துக் கொண்டாள்.

http://www.dinamani.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this