Jump to content

Recommended Posts

கடன் - தமிழ்நதி

ஓவியங்கள் : ரமணன்

 

சுவரில் கல்லோடுகள் பதிக்கப்பட்ட ‘பேப்’ புகையிரத நிலையத்தை சத்தியன் ஏற்கெனவே தெரிவுசெய்துவிட்டான். அதுதான் இருப்பவற்றுள் அழகியது. அங்கு இறங்கி நின்று, அடுத்து வரும் இரும்பு வேதாளத்தின் முன்னால் பாய்ந்து சிதறத் திட்டமிட்டிருந்தான்.

விரைந்தோடி வரும் ரயிலின் முன் உடலை வீசியெறியும்போது எப்படி இருக்கும்? ஒருகணம் கூசி சிலிர்த்தன மயிர்க்கால்கள். இரத்தக்கூழாக அவன் தன்னைக் கண்டான். கூட்டம் கூடுகிறது; பிறகு கலைகிறது. ஆகக்கூடி ஒரு மணித்தியாலத்தில் மீண்டும் புகையிரதம் ஓடும். மனிதர்கள் அதனைப் பிடிக்க ஓடுவார்கள்.

குளியலறைக் கண்ணாடியில் தெரிந்த விழிகள், பித்தின் சாயல்கொண்டு மினுங்கின. ஒடுங்கிய கன்னங்களை மறைத்து வளர்ந்திருந்தது மயிர்க்காடு. கடைசியாகச் சவரம் செய்த நாளை நினைவில் கொணர முயன்று தோற்றான்.

50p2.jpg

அலமாரியுள் குவிந்துகிடந்த ஆடைகளுள் நாள்பட்ட வாடை வீசியது. தாறுமாறாகக் கலைந்திருந்தவற்றை மேலும் கலைத்து இரண்டு சேர்ட்களைத் தேர்ந்தெடுத்து மணந்து பார்த்தான். இரண்டினுள்ளும் சகித்துக்கொள்ளக்கூடியதாகத் தோன்றியதை அணிந்துகொண்டான்.

இப்போதெல்லாம் அவன் ஆடைகளைத் துவைப்பதில்லை. வெளியில் சென்று திரும்பியதும் ஆடைகளைக் கழற்றி சோபாக்கள் மீது விசிறி எறிந்துவிடுகிறான். வீட்டில் அணிந்துகொள்ளும் பைஜாமாக்கள் இரண்டும் நெடுநாட்களாக சவர்க்காரத் தூள், தண்ணீர் கண்டறியாதவை. சாப்பாட்டு மேசையைச் சுற்றிலும் பழுதுபட்ட உணவின் நாற்றம் வீசுகிறது. குசினியிலுள்ள குப்பைக் கூடையைவிட்டுப் புழுக்கள் வெளியேறி ஊறத் தொடங்கிய பிறகே குப்பையைக் கட்டிக்கொண்டுபோய், அதற்கென உள்ள இடத்தில் தள்ளிவிட்டு வருகிறான். இப்போது, பகலிலும் பூச்சிகள் துணிச்சலாக உலவித் திரியத் தொடங்கிவிட்டன. அவை தாங்கள் பார்க்கப்படுவதை உணருந்திறனுடையவைபோல. பார்வை விழுந்தவுடன் சுவரையொட்டிய இடுக்குகளுள் விரைந்தோடி மறைந்துவிடுகின்றன.

யாழினி ஒரு சுத்தப்பூனை. அவள் இருந்தபோது இந்த வீட்டுக்கு வேறு முகம். அவள் கோபித்துக்கொண்டு தனியே சென்று மூன்று மாதங்களாகிவிட்டன. இவன் இருப்பது போன்ற, விளக்குகளை அணைத்ததும் பூச்சிகளின் சாம்ராஜ்ஜியம் தொடங்குகிற பழைய தொடர்மாடிக் குடியிருப்புகளில் ஒன்றுதான் அதுவும். ‘ப்பா… ப்பா’ வென்றழைத்து வாழ்வில் ஒட்டுதலை உருவாக்கிய குழந்தையின் இளங்குரலையுங் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்.

கலங்கிய விழிகளை உள்ளங்கையால் அழுத்தித் தேய்த்தான்.

கடனட்டைக் கடிதமொன்றுடன் அவர்களுக்கிடையிலான உரசல் ஆரம்பித்தது.

“இதில போன மாசம் ரெண்டாயிரம் டொலர் எடுத்திருக்கு?”

தொலைக்காட்சியிலிருந்து விழிகளைப் பெயர்த்து கடிதத்தைப் பார்த்தான் சத்தியன். பிறகு, தொலைக்காட்சியைப் பார்ப்பதாகப் பாவனை செய்யத் தொடங்கினான். வழக்கத்தில் அலட்சியமாக நடந்துகொள்கிற ஆளில்லை. பொய் சொல்வதா உண்மையைச் சொல்வதா என்று யோசித்து முடிவெடுப்பதற்கிடையில், அவள் கடிதத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு பல்கனிக்குப் போய்விட்டாள்.

பச்சையும் கபில நிறமுமாய் செழித்துச் சடைத்த மேப்பிள் மரம் தன் கிளைகளால் பல்கனியைத் தழுவிக்கொண்டு நிற்கிறது. தஞ்சம் புகுந்த நாட்டின் தாய்மரம்; அவளுக்கும் தாய்! யாழினியின் துக்கமும் கோபமும் அதைப் பார்த்துக்கொண்டிருந்தால், தன்பாட்டில் இறங்கிவிடும். அன்றைக்கு வெகுநேரமாகியும் அவள் பல்கனியை விட்டு வரவில்லை. அவளுக்குள் சந்தேகப் பேய் புகுந்துவிட்டதை அவன் உணர்ந்தான். பேயை வளரவிட்டால் பூதமாகும் என்பதால், உண்மையைச் சொல்லத் துணிந்தான்.

“என்ரை சிநேகிதப் பொடியன் ஒருத்தனுக்குக் குடுத்தனான். ஊரிலை இருக்கிற அவன்ரை அப்பாவுக்குச் சுகமில்லை. ஆஸ்பத்திரியிலை வைச்சிருக்காம்.”

அவள் திரும்பிப் பார்த்தாள். இரக்கத்தில் கனிந்த முகம் அரையிருளில் மேலும் அழகு கொண்டு ஒளிர்ந்தது.

அவனுடைய தோளில் சாய்ந்தபடி உள்ளே வந்தாள். இலேசாக மேடிட்டிருந்த அவளுடைய வயிற்றைத் தடவும் சாக்கில் மார்பைத் தொட்டான். அவள் சிரித்தபடி கையைத் தட்டிவிட்டாள்.

பிறகொருநாள் கைத்தொலைபேசியின் வழி மீண்டும் வீட்டினுள் நுழைந்தது வில்லங்கம். அப்போது சத்தியன் குளியலறையில் இருந்தான்.

“காசு வாங்கேக்குள்ள இருக்கிற சந்தோசம் வட்டி கட்டேக்குள்ள இல்லைபோல” - யாழினியின் ‘ஹலோ’வைப் பொருட்படுத்தாமல் மறுமுனையில் ஒலித்தது பெண் குரலொன்று.

“வட்டியா? என்ன கதைக்கிறீங்கள்?”50p1.jpg

“இது சத்தியன்ரை போன்தானே?” - சூடு தணிந்த குரல் வினவியது.

“ஓம். அவர் குளிக்கிறார். நான் அவற்றை மனுசிதான். ஏதாவது சொல்லோணுமோ?”

“வட்டிக்காசை நேரகாலத்துக்குப் போட்டுவிடச் சொல்லுங்கோ” - அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

“ஆருக்கு வாங்கிக் குடுத்தனீங்கள்?” - யாழினி அமைதியாகத்தான் ஆரம்பித்தாள். ஆனாலும் மூச்சிரைத்தது. குழந்தை வயிற்றினுள் உதைத்தது.

அப்போது தொலைக்காட்சி அணைக்கப்பட்டிருந்தது. அதனால், அவன் முகட்டைப் பார்த்தான்.

“எங்கடை ஊர்க்காரர் ஒருத்தர்… வீடு வாங்க… முதல் குறையுதெண்டு… கனக்க இல்லை. அஞ்சாயிரம் டொலர்தான்.”

“உதவி செய்யத்தான் வேணும். அதுக்காக இப்பிடியா? உங்களுக்கெண்டொரு குடும்பம் இருக்கு. ஞாபகமிருக்கட்டும்” - இதைச் சொன்னபோது யாழினியின் கன்னங்களில் கண்ணீர் சிதறியது. அவன் பதறிப்போனான்.

‘‘இனி இப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்” - அவளை அணைத்தபடி கூறிய வார்த்தைகளை அவனே நம்பவில்லை.

குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு எல்லாமே நல்லபடியாய்த்தானிருந்தது. அதன் சிரிப்பு… ‘ஐயோ! சொர்க்கமடா வாழ்க்கை’ எனக் கிறங்கிக்கிடந்தான் சத்தியன். யாழினியும் அவளுடைய இயல்பான தண்மைக்கு மீண்டுவிட்டாள். அஞ்சல்களை அவனே எடுத்து வந்ததும், தொலைபேசி அழைப்புகளுக்கு அவனே பதிலளித்ததும் அந்த ‘அமைதி’ நீடிக்கக் காரணமாயிற்று.

எப்போதும் கவனமாயிருப்பது எப்படி என்பது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

குழந்தையை அமர்த்தி சாப்பாடு தீத்துவதற்கான கதிரையை வாங்கப்போன இடத்தில், சத்தியனுடைய கடனில் ஐந்தாயிரம் டொலர்களை ஏற்றியவரை அவர்கள் சந்தித்தார்கள். ஐம்பது வயதிருக்கும். சாயம் பூசப்பட்ட மீசை, முகத்தோடு ஒட்டாமல் தனித்துத் தெரிந்தது. சத்தியனை பலவழிகளிலும் தவிர்த்துவந்த அவர், ஒரு மாதிரியாக முழித்துக்கொண்டு நின்றார்.

“புது வீட்டுக்கு சோபா பாக்க வந்தனான்”என்றார். அவர் அமர்ந்து பரிசீலித்துக்கொண்டிருந்த சோபாவின் விலை மூவாயிரத்துக்குக் குறையாது.

“ஆனா இப்ப வாங்கேல்லை… விலை கூடவாக் கிடக்கு” - அவர் அவசரமாகச் சொன்னார்.

‘இவரோ அவர்?’ - யாழினி விழிகளால் வினவினாள்.

“மாதாமாதம் வட்டியைக் கட்டிவிடுங்கோண்ணை. அந்த மனுசி போன் அடிச்சுக் கத்துது” என்றான் சத்தியன். யாழினியை அருகில் வைத்துக்கொண்டு அவரிடம் காட்ட முடிந்த கோபம் அவ்வளவுதான். அதன்பிறகு, பார்த்த எந்தப் பொருளும் யாழினிக்குப் பிடிக்கவில்லை. அன்று அவர்கள் வாங்கப்போன கதிரையை வாங்காமலே வீடு திரும்பினார்கள்.

குழந்தை வளர வளர கசப்பும் வளர்ந்தது.

“பாம்பர்ஸ் முடிஞ்சு போச்சு.”

“எத்தினை தரந்தான் மூத்திரம் போவாள்” - சலித்துக்கொள்வான்.

“பழஞ்சீலைத் துணியைக் கட்டிவிடவா?” - சினந்தெறிவாள் அவள்.

‘ஊரவனுக்கெல்லாம் காசு வாங்கிக் குடுக்கத் தெரியுது. பெத்த பிள்ளைக்கு பாம்பர்ஸ் வாங்கக் கணக்குப் பாக்கிறார்’- முணுமுணுப்பு அவனது செவிகளை எட்டாமலில்லை.

நாளடைவில் அவளுடைய மன்னிப்பின் கையிருப்பு தீர்ந்தது. அடிக்கடி குழந்தையைத் தூக்கிக்கொண்டு பல்கனியில் போய் இருக்கத் தொடங்கினாள். இருப்பதோ ஆறாவது மாடி. உள்ளே வரச்சொல்லிக் கூப்பிட்டால், பக்கத்து வீடுகளுக்குக் கேட்குமளவிற்கு உரத்த குரலெடுத்துக் கத்தினாள். விளாம்பழம் உடைப்பதுபோல, சாப்பாட்டுக் கோப்பையைத் தரையில்  எறிந்து உடைத்தாள். ஒருநாள், சத்தியன் வேலை முடிந்து திரும்பி வந்தபோது, யாழினிக்குப் பதிலாக ஒரு துண்டுக் காகிதம் மேசையில் கிடந்தது.

‘நீங்கள் திருந்தப் போவதில்லை. நான் போகிறேன்’

யாழினியின் தோழி மூலமாக அவளைக் குறித்த செய்திகளை அவன் அறிந்துகொண்டுதானிருந்தான். அவளோடுதான் யாழினி தங்கியிருந்தாள். ‘திரும்பி வா’ வென்றழைக்கலாந்தான். ஆனால், அதற்கு அவனுக்குத் தைரியமில்லை.

வெறுமை குடிகொண்டுவிட்ட வீட்டுக்குத் திரும்பி வரவேண்டியிருந்த மாலைப் பொழுதுகளை அவன் சபித்தான். காலோயும்வரை வீதிகளில் சுற்றித் திரிவான். பூங்காக்களின் மர இருக்கைகளில் இருட்டும்வரை படுத்துக்கிடப்பான். ஒருதடவை ஒரு முழுப்போத்தலைக் குடித்துவிட்டு நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான். அந்தப் பாதையில் நூற்றுக்கணக்கான பாதங்கள் விரைந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவனையொட்டி சீறிப் பறந்தன. வீதியில் வீழ்ந்துகிடந்தவனைக் குனிந்து பார்க்க அன்று அந்த மாநகரில் ஒருவருக்கும் நேரம் இருக்கவில்லை. தானாகவே எழுந்தான். தன்னை நொந்தபடி நடந்தான்.

இந்தத் தொடர்மாடிக் குடியிருப்பு இரண்டு சந்திகளையொட்டி அமைந்திருக்கிறது. வீட்டினுள்ளோ பூச்சி காகிதத்தில் ஊர்ந்தாலும் கேட்குமளவு மயான அமைதி! இல்லை! ஊரிலென்றால் மயானத்தில் தீயெழுந்து மிளாறி எரிகிற ஓசையேனும் கேட்கும். இங்கு அதுவுமில்லை. மின் தகனக் கூடத்திலுள்ளது போலோர் அமைதி.

மனிதர்கள் எல்லோரும் கதைப்பதை நிறுத்திக்கொண்டுவிட்டார்களா? சத்தத்தைக் கேட்க விரும்பி மூச்சுத்திணற வீதிக்கு ஓடுவான். மோல்களுக்குள் சுற்றுவான்.

இனி அதற்கெல்லாம் அவசியமில்லை! தொலைபேசியை வெறுப்போடு நோக்கினான். ஆட்களற்ற வீட்டில் எடுப்பாரற்று இனி ஒலித்துக்கொண்டேயிருக்கட்டும். மின்னுகிற இலக்கங்களை, செய்வதறியாமல் வெறித்தபடி இருப்பது கொடுமையானது.

இவனுக்குக் கடன்கொடுத்த எல்லோருள்ளும் தனபாலனுக்குத்தான் பெரிய ஏமாற்றமாகிவிடும். அவன் மாதக்கடைசியிலேயே கூப்பிடத் தொடங்கிவிடுவான். முதலில் கைத்தொலைபேசிக்கு எடுத்து, பதிலில்லை என்று கண்டதும், இரவு பத்து மணிக்குப் பிறகு வீட்டுத் தொலைபேசிக்கு அழைப்பான். பறவைக் கூட்டினுள் முட்டைகளைத் தேடி தலையை நீட்டுகிற பாம்பெனத் தனபாலனின் குரல் உள்வரும். பொதுவாக, காலநிலையைக் குறித்து சலிப்போடு கதைக்கத் தொடங்குவான். அவனுக்கு மழையும் பிடிக்காது; “சனி மழை. நசநசவெண்டு” வெயிலும் சகிக்காது; “ஊரிலை எறிக்கிற வெயில் இப்பிடித் தோலை எரிக்கிறேல்லை’’ பனியையும் வசைபாடுவான்; “மனுசனாகப்பட்டவன் இந்த நாட்டிலை இருப்பானா? எப்ப அடிபடுமோ எண்டு பயந்து பயந்து வாகனம் ஓட்டவேண்டிக் கிடக்கு” ஈற்றில், அவனது உரையாடல் ஓரிடத்தில் வந்து இடறுப்பட்டாற்போல நிற்கும். அதற்கிடையில் இவன் பதிலைத் தயார்செய்து வைத்திருப்பான்.

“நாளைக்கு முதலாந் திகதி… என்ன மாரி?” ‘மாதிரி’ என்பதை ‘மாரி’ என உச்சரிப்பது அவனது வழக்கம்.

“ஓம்... நாளையிண்டைக்கு ரெண்டாந் திகதி”அசடு வழியும் தனது முகத்தின் பரிதாபத்தைக் கண்ணாடியின்றியே சத்தியன் காண்பான். தானே தன்னைச் சகியாக் கணமது.

“வட்டிக் காசைப் போட்டுவிடு மச்சான். பிந்தினா தெரியுந்தானே சிறியன்ரை குணம்.”

‘சிறியன்’ என்பதொரு கற்பனைப் பாத்திரம் என்பது சத்தியனுக்குத் தெரியும். இல்லாத ஒருவனின் குணத்தை அறிவதெப்படி? ஆனாலும், தொடர்ந்து அந்தப் பெயரைச் சொல்வதன் மூலம் அதற்கொரு முகத்தை தனபாலன் உருவாக்கி வைத்திருந்தான். மிகவும் கறாரான தோரணைகொண்ட, கண் இரப்பைகள் வீங்கித் தொங்குகிற உப்பலான மஞ்சள் முகம். அந்தச் சிறியன் வெயில் காலத்திலும் குளிர்கோட்டு அணிந்திருப்பான். வட்டிக்காசு வங்கிக் கணக்கில் விழத் தாமதமாகிற மாதங்களில், சீறிவரும் காரில் வந்திறங்குவான். அதன் கதவைக் காலால் அடித்துச் சாத்துவான். பிறகு, தலைகுனிந்தபடி நிற்கிற தனபாலனை நாய்க்கிழி பேய்க்கிழி கிழிப்பான்.

50p3.jpg

ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளாக இந்தக் கதை நடக்கிறது.

தனபாலனிடம் வாங்கியது இருபத்தி எட்டாயிரம் டொலர்கள்தான். கட்டிய வட்டியோ இருபதாயிரம் டொலர்களைத் தாண்டியிருக்கும். அதைக் குறித்த குற்றஉணர்வின் மெல்லிய சாயலைத் தானும் சத்தியன் தனபாலனின் கண்களில் கண்டதில்லை. அவனுக்கு அது தொழில்! ஆனால், சிறிதும் கூச்சமின்றி இவனை நண்பனென்று சொல்லிக்கொள்வான்.

“ஒரு சிநேகிதன் அந்தர ஆபத்தெண்டு கேக்கேக்குள்ள எப்பிடி இல்லையெண்டு சொல்லுறது. அதுதான் வாங்கித் தந்தனான். இப்பிடி வட்டி கட்டப் பிந்தினா என்ன செய்யிறது?” பொய்யில் அசையும் உதடுகள் மீது சப்பென்று அறைந்தாலென்ன என்று சத்தியனுக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால், அடிக்குப் பயந்து வட்டி வருவாயை விட்டுக்கொடுக்கும் ஆளாக தனபாலன் தோன்றவில்லை. பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் வழியில்லை.

“நீயொரு ஷைலாக்” - இவன் சிரித்தபடி சொல்லியுமிருக்கிறான். தனபாலனுக்கு சேக்ஸ்பியரையோ அவருடைய ஷைலாக்கையோ தெரியாது. தெரிந்தாலும் அலட்டிக்கொள்ளமாட்டான். காசு, வட்டி, வட்டிக்கு வட்டி இவை மட்டுமே அவனறிந்தவை.

கதவைப் பூட்டியபின், குமிழியைத் திருகிப் பார்த்தான் சத்தியன். இன்றோ நாளையோ இந்தக் கதவு பொலிஸாரால் உடைபடத்தான் போகிறது. என்றாலும், வாழ்ந்த வீட்டைத் திறந்து வைத்துவிட்டுப் போக மனம் வரவில்லை. தன்னை அடையாளங் காண உதவும் பிளாஸ்டிக் அட்டைகள் நிறைந்த பேர்ஸ் பையினுள் இருக்கிறதா என மேலுமொரு தடவை உறுதிப்படுத்திக்கொண்டான். துயரமும் தனிமையும் வசிக்கும் அந்த வீட்டுக் கதவின் முன் ஒரு கணம் தயங்கி நின்றான். பிறகு பேருந்து தரிப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

வோர்டன் புகையிரத நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அறுபத்தெட்டாம் இலக்கப் பேருந்தினுள் அவன் இருந்தான். இருபுறமும் சம உயரத்தில் மரங்கள் நிரை நிரையாக நிற்கும் அழகான சாலை வோர்டன். அங்கு வாடகைக்கு வீடெடுத்து வருவதற்கு அந்தச் சாலைமீதான விருப்பமும் காரணம். மேப்பிள் மர இலைகளில் வெயில் இழைந்துகொண்டிருக்கும் இளவேனிற்காலத்தின் மாலைப்பொழுதுகளில், யாழினியோடு அவன் நடக்கப் போவதுண்டு. ‘இனியொருபோதும் இந்த மரங்களைக் காணமாட்டேன்’ நினைத்தான். ‘செத்த பின் சென்று சேர்கிற இடத்தில் மரங்கள் இருக்குமா?’ ஏங்கினான். ‘இதென்ன பைத்தியக்காரத்தனம்! வேண்டாமென்று தப்பியோடுகிற வாழ்வினை வேறோரிடத்தில் தொடர எண்ணுகிற அழுங்குக் குணம்.’

அவனுக்கு நேரெதிரே இருந்த பக்கவாட்டான இருக்கையில் இளங்குடும்பமொன்று அமர்ந்திருந்தது. தாயின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு இரண்டு வயதிருக்கலாம். தந்தை, திடமான உடலும் செழிப்பான கன்னங்களும் அடர்ந்த புருவங்களுங் கொண்டவன். சத்தியன் தனது வறண்டு போன கைகளையும் கால்களையும் இரகசியமாகப் பார்த்துக்கொண்டான். கறுப்பு நிற ஆடை விளிம்பினடியில் மேலும் அழகு கூடித் தெரிந்த அந்தப் பெண்ணின் வெண்ணிறப் பாதங்களில் சத்தியனின் கண்கள் தன்னிச்சையாக ஊர்ந்தன. பிறகு, தனது செயலால் வெட்கமடைந்தவனாகப் பார்வையைத் தனது உள்ளங்கைக்கு மாற்றிக்கொண்டான். அந்தப் பெண்ணின் கால்களைத் தவிர்க்க பேருந்தின் மேற்புறத்தை நோட்டமிட்டான்.

“மன அழுத்தமா? தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? உங்களுக்கு எங்களால் உதவ முடியும்” என்றெழுதப்பட்ட வாசகங்களில் அவனது விழிகள் பதிந்தன. அதன் கீழ் தொடர்பு எண். ‘இந்தக் கடனிலிருந்து என்னை மீட்டெடுங்கள்’ என்று மன்றாடலாம். நாள்கணக்கில் வகுப்பெடுத்து தற்கொலையே மேலென்று எண்ணவைத்துவிடுவார்கள் அல்லது வங்கியைக் கைகாட்டுவார்கள். வங்கிகளில் பெறக்கூடிய கடனட்டைகளையும் தனிப்பட்ட கடன்களையும் பெற்றாயிற்று. அவற்றை மீளப்பெற சகல உத்திகளையும் பயன்படுத்தித் தோற்ற வங்கிகள், அவனை ‘கலெக்சன் ஏஜன்சி’களிடம் கையளித்துவிட்டன. ஏதேதோ எண்களிலிருந்தெல்லாம் தொலைபேசி அழைப்பு வரும். ‘அடுத்து நீதிமன்றத்தில் சந்திக்கலாம்’ என்றெல்லாம் மிரட்டுவார்கள். அஞ்சல் பெட்டியைத் திறக்கவே பயமாக இருக்கும்.

யாழினி வேலைக்குப் போகிறாளாம். இந்தக் கடன்சுமை தன்மீதும் பொறிந்துவிடக்கூடாதென்று எண்ணி விலகிப் போன அவள் சுயநலவாதி என்று, மனம் இற்றுச் சாய்ந்த பொழுதுகளில் எண்ணியிருக்கிறான். இல்லை… அவள் அப்படியானவளில்லை. சம்பளம் கைக்கு வந்த மறுநாளே குழந்தையின் உணவுக்குத் திண்டாடும் நிலைமையை ஒரு தாயாக அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

முன்னிருக்கைக் குழந்தை விழித்துக் கொண்டு தகப்பனிடம் செல்லங்கொட்டிக்கொண்டிருந்தது. இந்த அதிகாலையில் எங்கே செல்கிறார்கள்? அந்தத் தகப்பனின் முகந்தான் எத்தனை தெளிச்சையோடிருக்கிறது. எவ்வளவு நம்பிக்கையைத் தரும் வாழ்வு அவர்களுக்கு அமைந்துவிட்டிருக்
கிறது. அந்த இளைஞனின் சட்டைப் பையில் ஒரு பேனா இருந்தது.

‘இதைக் கொண்டு எந்தக் கடன் பத்திரத்திலும் கையெழுத்திட்டுவிடாதே நண்பனே. கடனட்டைகளில்கூட. உழைப்பவனின் குருதியை ருசித்து ரசித்து உறிஞ்சும் பிளாஸ்டிக் அட்டைகள் அவை.’

அந்த மனிதன் தனது மனைவிமீது அன்புகொண்டவனாயிருக்க வேண்டும் அல்லது இந்த அதிகாலையின் குளிர்ச்சியில் அங்ஙனம் தோன்றுகிறான். குனிந்து அவளது செவிகளில் மெதுவாகப் பேசினான். முக்காடு விலகி கருகரு கூந்தல் தெரிய அவள் சிரித்தாள். தெத்துப்பல். ஆரோக்கியத்தின் அழகு நிறைந்த பெண். அவர்கள் அடுத்த ஆண்டு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடும். அதன்பிறகு, பேருந்துப் பயணம் சிரமமானதாகிவிடும். அந்த மனிதன் உழைப்பாளியாகத் தோற்றமளிக்கிறான். நிச்சயமாக ஒரு கார் வாங்குவான். தன்னைப்போலக் கடனாளியாக இருக்கமாட்டான்.

‘நானொரு முட்டாள்’ பார்வையை வீதிக்குத் திருப்பிக்கொண்டு தன்னை நொந்தான். சத்தியனுக்கு ஒரேயொரு தங்கச்சி. பெயர் வித்யா. நல்ல குண்டு; நல்ல அழகு. கொழும்பில் காப்புறுதி முகவராக வேலை செய்த வரோதயனை அவளுக்கு மாப்பிள்ளையாக்கினார்கள். தடபுடலாகக் கலியாணம். ஐந்து நட்சத்திர விடுதியில் வரவேற்பு. எட்டு மாதங்களிலேயே வரோதயனுக்கு கனடா விசா கிடைத்துவிட்டது.

அப்போதுதான் குளித்துவிட்டு வந்தாற் போன்றதொரு முகமும், முதுகுப் புறத்தில்கூட சிறு கசங்கலும் காணக் கிடைக்காத ஆடைகளுமாக, டவுன்ரவுன் தெருக்களில் அவசரமாக வேலைக்குப் போகிற மேலதிகாரிகளின் தோற்றத்தைக் கொண்டவன் அவன்.

“ஒருத்தனுக்குக் கீழை கூழைக்கும்பிடு போட்டு வேலை செய்யிறதெல்லாம் எனக்குச் சரிவராது” வந்த வரத்திலேயே அறிவித்துவிட்டான்.

றியல் எஸ்டேட் ஏஜன்ட் ஆவதற்கான பயிற்சி வகுப்புகளில் ஓராண்டைக் கழித்தான். அதனையடுத்து வந்த ஒன்றரை ஆண்டுகளில் அவனால் ஒரு வீட்டைத்தானும் விற்க முடியவில்லை. வீட்டைக் காட்டவேண்டிய வரோதயன் ‘உடுத்துப் படுத்து’ப் போவதற்கிடையில், வீட்டைப் பார்க்க வருபவர் காத்திருந்து களைத்துப்போய், தன்னுடைய வீட்டைச் சென்றடைந்திருப்பார். வரோதயன் ‘பிராண்ட் நேம்’ஆடைகளையும் சப்பாத்துக்களையும் மட்டுமே அணிந்தான். வீட்டிலிருந்து தெருவுக்கு அவன் செல்வதற்குள்ளாகவே அவன் தெளித்திருந்த வாசனைத் திரவியம் தெருவைச் சென்று சேர்ந்துவிடும்.

வித்யா வேலைக்குப் போனாள்தான். ஆனாலும், இது கொஞ்சம் ஓவர்! சத்தியன் தங்கச்சியைக் கூப்பிட்டு விசாரித்தான்.

“அறம்புறமா காசு புழங்குது. எங்காலை?”

“கடன் வாங்கிறாரெண்டு நினைக்கிறன்” - தமையனைப் பார்க்காமல் எங்கோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.

சத்தியன், வரோதயனைக் கூப்பிட்டு ஒருநாள் வகுப்பெடுத்தான். கடனில் வீழ்ந்த தன்னை உதாரணமாகக் காட்டினான்.

“கொண்ணர் முட்டாள்த்தனமா கடன் வாங்கினாரெண்டால் நானும் அப்பிடியே…’’ - வித்யாவோடு சண்டை பிடித்தான் வரோதயன்.

அவன் காட்டிய ‘படம்’ அதிக நாள் ஓடவில்லை.தொழில் தொடங்கப் போவதாகச் சொல்லி, வாங்க முடிந்த இடங்களிலெல்லாம் கடன் வாங்கி, வாங்கமுடியாமற் போன கட்டத்தில், பத்து வீத வட்டிக்குக் கடன் வாங்கினான் வரோதயன். ஆயிரம் டொலருக்கு நூறு டொலர் மாத வட்டி! வட்டிக்கு மேல் வட்டி ஏறி கடன் அவர்களது தலையில் வாமன அவதாரம் போல கால்வைத்துக்கொண்டு நின்றபோது, வித்யா கணவனோடு கோபித்துக்கொண்டு அண்ணன் வீட்டுக்கு வந்துவிட்டாள். அதன்பிறகு, சத்தியன் வரவேற்பறைக்குள் உறங்கத் தொடங்கினான். வித்யாவின் மூக்குறிஞ்சலும் கேவலும் வரவேற்பறை வரை கேட்கும். கூடவே அவளை சமாதானப்படுத்துகிற யாழினியின் குரலும்.  வித்யாவோ ஒரே தங்கை. இவனோ இப்போதும் ‘பாசமலர்’ படம் பார்த்து குளியலறைக்குள் போய் விம்மி விம்மி அழுகிறவன். வேறு வழியில்லாமற் போக, தனபாலனிடம் வட்டிக்கு வாங்கி தங்கை கணவனின் கடனை அடைத்தான் சத்தியன். அதற்காகவே காத்திருந்தவன் போல, வரோதயன் கனடாவை விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் யாழ்ப்பாணத்துக்கு ஓடிப்போய்விட்டான். அதன்பிறகும், அவனைத் தேடி கடன்காரர்கள் வீட்டுக்கு வந்தார்கள். வித்யா வெளிக்கு குற்றஉணர்வோடும், உள்ளுக்குள் நிம்மதியோடும் வன்கூவருக்குக் குடிபெயர்ந்தாள்.

கடன் என்ற சொல் சத்தியனுடைய இரத்தத்தில் நீந்தித் திரியவாரம்பித்தது அதன் பிறகுதான். திமிங்கிலம் வாலால் சுழற்றியடிப்பதுபோல அந்த நினைவு அவனை இரவுகளில் சுழற்றியடித்தது. மதுப்பழக்கம் மிகுதியானது. குடி என்பது தற்காலிக மயக்கந்தான். நள்ளிரவிலேயே விழிப்பு வந்துவிடுகிறது. தூக்க மாத்திரைகளும் நாளடைவில் அவனைக் கைவிட்டன. கடனைக் கொடுத்து முடிக்கும் நாளைக் கனவுகாண ஆரம்பித்தான். விழிப்புநிலையில் ஏற்படும் கனவுதானது. உடல் தளர்ந்து சில்லுவண்டியைத் தள்ளிக்கொண்டு நடந்துசெல்லும் வயோதிகத்தில்கூட, தான் வட்டிகட்டிக் கொண்டிருக்க வேண்டியேற்பட்டுவிடுமோ என்று அஞ்சினான். தன்னுடைய ஓய்வூதியப் பணத்தின் ஒரு பகுதி வட்டியாகவே போய்விடுமெனவும் எண்ணிக் கலங்கினான். எட்டு மணி நேரம் நின்றபடியே தோல்பட்டியை விரட்டி விரட்டிப் பார்க்கிற வேலையின் ஊதியத்தில் பாதி வட்டிக்கே போய்விடுகிறது. சம்பளத்தை வங்கிக் கணக்கில் பார்க்கிறபோதெல்லாம் அது தன்னுடைய தில்லையே என்ற துக்கம் மேலிடும்.

வட்டியில்லாமல் யாரிடமாவது கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு, சிறுகச் சிறுக அடைத்துவிடலாமென்று பல தடவை முயன்றான். ஏமாற்றமே எஞ்சியது. சத்தியன் கடன் கேட்டுக் கையேந்தியவர்களில் ஒருவன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வேலை செய்தவன். தனது பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, வந்த விருந்தினர்களில் ஒவ்வொருவருக்கும் இருநூறு டொலர்கள் செலவழிக்குமளவிற்கு நல்ல வசதிக்காரன். அவன் சத்தியனிடம் தனது பஞ்சப்பாட்டை உரக்கவே பாடிக் காட்டினான். ஏன் கேட்டோமென்றாகிவிட்டது. அவமானத்தில் துவண்டுபோனான் சத்தியன். அன்று முழுவதும் ‘ஐயோ… ஏன் கேட்டேன்… ஏன் கேட்டேன்’ என அரற்றித் திரிந்தான்.

50p4.jpg

மற்றவர், உறவுக்காரப் பெண்மணி. அவரிடம் கேட்பதற்கு முன், நாடகம்போல எத்தனை தடவைகள் ஒத்திகை பார்த்தான்! ஏழெட்டு நாட்களாக அவனுடைய தலைக்குள் அந்த வாசகங்கள் சுழன்று கொண்டிருந்தன. ‘கொஞ்சம் கொஞ்சமாத் திருப்பித் தந்திடுவன்’ என்ற கடைசி வாசகத்தை விதவிதமாகச் சொல்லிப் பார்த்தான். ஒத்திகைகளை, ‘இல்லை’ என்ற ஒற்றைச்சொல்லால் ஒரே நொடியில் காலிசெய்தார் அவர். அவரிடம் மில்லியன் கணக்கில் பணமிருந்தது. அது அவரையறிந்த எல்லோருக்கும் தெரியும். 

 ‘எனக்கு யாருமில்லை’ அவன் தன்னிரக்கத்தை மறைக்க வெளியே பார்த்தான்.

எல்ஸ்மெயார் நிறுத்தத்தில் ஒரு பெண் பேருந்தினுள் ஏறினாள். குள்ளமாயிருந்தாள். மங்கோலிய முகம். தொடைப்பகுதியில் கிழித்துவிடப்பட்ட நீலநிற ஜீன்ஸ். கையில் வைத்திருந்த கனத்த புத்தகத்தினுள் ஆழ்ந்துபோனாள். பெரும்பாலும் அது பாடப்புத்தகமாகத்
தானிருக்கும். எப்பாடுபட்டேனும் நல்லவேலையில் அமர்ந்துவிடுவாள். கடன் வாங்கவேண்டிய தேவை அவளுக்கு இராது. 

பேருந்து புகையிரத நிலையத்துள் நுழைந்தது. படிகளில் இறங்கிச் சென்று, புகைவண்டியில் ஏறிக்கொண்டான் சத்தியன். மேற்கு நோக்கிச் செல்லும் அதன் முகப்பில் ‘கிப்ளிங்’என்று எழுதப்பட்டிருந்தது. அதுதான் கடைசியாகச் சென்று தரிக்குமிடம்.

அவனது கண்களுக்கு வெள்ளைக்காரர்களாகத் தோற்றமளிப்பவர்கள் பெரும்பாலும் புத்தகத்தைப் பிரித்துக்கொண்டே அமர்கிறார்கள். வாசிக்கிறார்களோ இல்லையோ, இறங்கும்வரை அதை மூடுவதில்லை.

சத்தியனுக்கு முன்னால் அமர்ந்திருந்தவன் தோளிலிருந்து கால் வரை நீண்ட ஒரே ஆடையை அணிந்திருந்தான். வீதிகளைச் செப்பனிடும் தொழிலாளர்கள் அணியும் கனத்த சப்பாத்துக்கள் மாட்டியிருந்தான். வாயை நீள்வட்ட ‘ஓ’வாகத் திறந்துகொண்டு உறங்குகிறான். மடியில் கிடந்த பையினுள் மதிய உணவு இருக்கலாம். மற்றொருவன் மஞ்சள் நிறத்தவன். நின்றபடி தூங்கிவழிகிறான். பார்த்துக்கொண்டிருக்கையிலேயே, விடுதிகளில் நடனமாடும் பெண்களைப் போல, புகையிரதத்தினுள்ளிருந்த அலுமினியக் கம்பத்தை ஒரு சுற்று சுற்றி வந்துவிட்டான். தனபாலனின் கண்களும் எப்போதும் தூக்கக் கலக்கத்தோடே இருக்கும். அவன் ‘ட்றக்’ ஓட்டுகிறான். அமெரிக்காவின் மாநிலங்களெல்லாம் அவனுக்கு அத்துப்படி. நாற்பத்தெட்டு அடி நீளமான அவனுடைய கனரக வாகனம் அமெரிக்காவுக்கும் கனடாவுக்குமிடையில் பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதுமாக ஓடித்திரிகிறது.

சில நாட்களில் சத்தியன் வெளியில் சென்றுவிட்டுத் திரும்பிவரும் வரை தொடர்மாடிக் குடியிருப்பின் கார் தரிப்பிடத்தில் தனபாலன் வட்டிக்காசுக்காகக் காத்துக் கிடப்பதுண்டு. கிடைத்த நேரத்தை வீணாக்க விரும்பாது காரினுள் உறங்கிக்கிடப்பான். கனவிலும் வாகனம் ஓட்டுவது போன்று கைகள் ஸ்டீயறிங்கில் பதிந்திருக்கும்.

“நேற்றுதான் ஒஹாயோவில இருந்து வந்தனான்” என்பான் எழும்பி. தனபாலன் தன் வாழ்வில் விடுமுறையின் இன்பத்தை அனுபவித்ததேயில்லை. அவனைப் பொறுத்தளவில் எவ்வளவுக்கு வங்கிக் கணக்கில் பணம் ஏறுகிறதோ அவ்வளவுக்கு சந்தோசமும் ஏறும். அவனுடைய மனைவியும் ஒப்பனைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் வேலை செய்கிறாள். அவளது முகம் எப்போதும் பளிச்சென்றிருப்பதற்கும் அந்த வேலைக்கும் நிச்சயமாகத் தொடர்பு இருக்கவேண்டும். ரொறன்ரோவில் தனபாலனுக்குச் சொந்தமாக நான்கு வீடுகள் இருப்பதாக நண்பர்கள் சத்தியனிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ட்றக்கில் உறங்குவதற்கெனப் பயன்படுத்தப்படும் மறைப்புடன் கூடிய குறுகலான படுக்கையில், பாலியல் தொழிலாளியொருத்தியைக் கூடியதாக ஒருமுறை சத்தியனிடம் கூறினான். இவன் முகத்தை ஒரு மாதிரியாகக் கோணிக்கொண்டு ‘ஏனப்படி?’ என்றான். “உண்மையைச் சொன்னால், எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. நான் வீட்டிலை தங்கிற நாளுகளிலை மனுசி வேலைக்குப் போயிருக்கும்” என்றான் தனபாலன் அசிரத்தையாக. ஒரு கோடைக்காலத்தின் விடுமுறை நாளொன்றில், தனது குழந்தைகள் இளைஞர்களாக வளர்ந்திருப்பதைக் கண்டு தனபாலன் திகைத்துப்போகக்கூடும்.

என்னதானிருந்தபோதிலும் கதை சொல்வதில் மட்டும் தனபாலன் கஞ்சத்தனம் காட்டுவதில்லை. எப்போதாவது நண்பர்களோடு உணவகத்திற்குச் செல்லும்போது, பில்லை யாராவதொருவர் பக்கம் தள்ளிவிட்டுவிட்டு பராக்குப் பார்ப்பதாக அவன் பாவனை செய்வதைச் சகித்துக்கொள்வது அதன் பொருட்டே.

“கலிபோர்னியாவுக்குப் போற ஹைவேல ஒருநாள் வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கிறன். பெருங்காடு. திடீரெண்டு, வெள்ளைச் சீலை கட்டின ஒரு வெள்ளைக்காரி ஒருத்தி ட்றக்கை நிப்பாட்டச் சொல்லி கைகாட்டுறாள். எனக்கு நல்லாத் தெரியுது அது பேயெண்டு. அவளைத் தாண்டிப் போறன். ஐம்பது ஐம்பத்தைஞ்சு கிலோ மீற்றர் கழிச்சு அதே வெள்ளைக்காரி திரும்பவும் கையைக் காட்டுறாள்.”50p1.jpg

“ச்சா! அருமையான சான்ஸ். நிப்பாட்டியிருக்கலாம்” - கிருபா சொன்னான். தனபாலனின் கண்களிலும் நப்பாசை பளிச்சிட்ட மாதிரித்தானிருந்தது. “எங்கடை கண்ணிலை தட்டுப்படுற வெள்ளைக்காறப் பேய்கூடச் சீலைதான் கட்டியிருக்கும்” - சத்தியன் சிரித்தான்.

“அதொரு தோற்ற மயக்கம். நிப்பாட்டாமல் கன நேரமாய் வாகனம் ஓடிக்கொண்டிருந்திருப்பாய்” - நிர்மலன் கையில் நண்டுக் காலோடு பேய்க்கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான். தனபாலன் எவருக்கும் பதிலளிக்காது கனகாரியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஒருநாளாவது இப்படி பேருந்துனுள்ளிருப்பவர்களையும் புகையிரதத்தினுள்ளிருப்பவர்களையும் சாலையையும் பராக்குப் பார்த்துக்கொண்டு பயணம் செய்ய தனபாலனால் முடிந்திருக்குமா?

இவனுடைய சாவுச்செய்தி தனபாலனை ஒரு பீரங்கிபோலத் தாக்கக்கூடும் அல்லது புகையிரதம்போல. சிலசமயம் இவனுடைய மனைவி யாழினியைக் காட்டிலும் அந்தச் செய்தி அவனுக்குத் துக்கந்தருவதா யிருக்கலாம். உள்ளொடுங்கிய ஜீவனற்ற அந்தக் கண்களில் கண்ணீர் வழிந்தோடுவதைச் சத்தியன் கண்டான். “என்ரை காசு… என்ரை காசு” ட்றக் ஓட்டிகள் பயன்படுத்தும் கழிப்பறையினுள் அமர்ந்து முதுகு குலுங்க தனபாலன் அழுகிறான்.

சத்தியன் பேப் இரயில் நிலையத்தில் இறங்கினான். எவ்வளவு அழகான புகையிரத நிலையம்! சாவதற்குச் சரியான இடம்!

விலத்திக்கொண்டு விரைகிற மனிதர்கள். எல்லோரும் வாழ்வினைத் தேடியே ஓடுகிறார்கள். நான் மட்டும்… இமைத்து நிறுத்தப் பார்த்த எத்தனத்தையும் மீறி கண்ணர் வழிந்துவிட்டது. “என்ரை காசு… என்ரை காசு” -  தனபாலன் வழிமறித்து விம்முகிறான். நாளில் பெரும் பகுதியை வாகனத்திலேயே கழிப்பதால், பெருத்து விட்ட வயிற்றில் கண்ணீர் சிந்துகிறது. அவனது வாகனம் மழையையும் பனியையும் ஊடறுத்துக்கொண்டு கனத்த பாம்பென ஊர்கிறது.

சத்தியன் சுவரையொட்டிப் போடப்பட்டிருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்தான். ரயில்கள் கூவிக்கொண்டோடி வருகின்றன.  “பாயடா… பாய்” மரணம் அந்த ‘வெள்ளைக்காரப் பேய்’ போலக் கையசைத்துக் கூப்பிடுகிறது. கைவிரல்களைப் பார்த்தான். அவை நடுங்கிக்கொண்டிருந்தன. கால்களுந்தான். கைகளால் கால்களை அழுத்தினான். எனினும், நடுக்கம் நிற்கவில்லை.

கறுப்பினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இவனைத் திரும்பிப் பார்த்தான். இவன் அவனுடைய கண்களைத் தவிர்த்து தண்டவாளத்தைப் பார்த்தான். தற்கொலை யின் சாயல் தன்மீது படிந்துவிட்டதோவென ஐயுற்றான். முகத்தை அழுத்தித் துடைத்தான்.

“பாயடா! பாய்!” தன் முதுகைத் தானே தள்ளினான்.

தொலைவில் ரயிலின் கூவல் கேட்கிறது. சில நொடிகளில் வந்துவிடும். எழுந்தான். நடந்தான். ஒரு சில அடிகள் தூரத்தில் மரணம்!

“வா நாயே வா! கடன்கார நாயே!” ரயில் கூப்பிடுகிறது.

விழுந்துபோனான்.

கண்களை விழித்துப் பார்த்தபோது, அந்தக் கறுப்பின இளைஞன் தன்னைத் தாங்கிப் பிடித்திருப்பதை உணர்ந்தான். தண்டவாளத்தில் விழுவதற்குள் ரயில் முகப்பு அவனைக் கடந்துபோயிருந்தது. ஆனால், பயத்தில் மயங்கிவிட்டான். யாரோ ஆம்புலன்ஸை அழைக்கிறார்கள். இனி பொலிஸ் வரும். தற்கொலை முயற்சி எனக் குற்றஞ்சாட்டி வழக்கு பதிவார்கள். பசிமயக்கமென்று சமாளித்துவிடுவான். ஆனால், நண்பர்களிடத்தில் செய்தி பரவிவிட்டது. தனபாலன் பதறிப்போய் ஓடிவந்தான்.

“இப்பிடியா செய்வாய்?”

வீடு திரும்பியிருந்த யாழினி தனபாலனின் முகத்தை வெறுப்போடு நோக்கினாள்.

“ரெண்டொரு கிழமை கழிச்சு வட்டிக்காசைத் தாறனெண்டு சொல்லியிருந்தா, நான் சிறியனை ஒரு மாரிச் சமாளிச்சிருப்பன். ஒரு சிநேகிதனுக்காக இதைக்கூடச் செய்யமாட்டனா?”

தனபாலனுடைய காதைப் பொத்தி ஓங்கி ஓர் அறை விட்டான் சத்தியன். அந்த வீட்டை விட்டு வெளியேறி வெகுநேரத்திற்குப் பிறகும் தனபாலனின் செவிகளில் புகையிரதத்தின் கூவல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வாங்கி கடன் கொடுப்பது, மரம் ஏறி கை விட்டது போல என்று சும்மாவா சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.