Jump to content

தமிழ் நாஸி பேக்கரி - மதிப்பீடு - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாஸி பேக்கரி

February 2nd, 2018 | : |

வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு  எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி எரிகிறது.

இந்தப் புத்தகத்திற்கு ஆர். எஸ். எஸ். அல்லது சிவசேனா போன்ற காவி அமைப்புகள்தான் விருதை வழங்கியிருக்கவேண்டும். இலங்கை இ்ஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வாரி இறைத்து,  இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பை அநியாயத்திற்கு நியாயப்படுத்தும் ஒரு பிரதிக்கு ஓர் இசுலாமிய அமைப்பே விருது வழங்கிக் கொண்டாடுவதை என்னவென்பது.

அதேபோல, அப்பட்டமான தமிழ் நாஸிக் குரலை ஒலிக்கும் இந்த நூலை வெளியிட்ட அரங்குகளில் பேசிய முற்போக்குக் கனவான்கள் மென்று முழுங்கியவாறு, இந்தக் குரலிற்கும் வரலாற்றிலும் இலக்கியத்திலும் ஓர் இடமிருக்கத்தான் செய்கிறது என்ற பாவனையில் பேசியபோது, அவர்களது நடுநிலையின் பின்னே மறைந்திருந்தது தமிழ் குறுந்தேசியவெறி அல்லது அப்பட்டமான அறியாமை என்பதையும் சொல்லிவிடுவதில் எனக்குத் தயக்கம் ஏதும் கிடையாது. அது ஏன் என்பதைக் கீழே விளக்கிவிடுகிறேன்.

ஜெப்னா பேக்கரியை மதிப்பீடு செய்யப் புகும்போது அதை ஒரு நாவல் இலக்கியமாகக் கொள்வதற்கு எந்தத் தடயங்களும் பிரதியிற் கிடையாது. தெளிவற்ற வாக்கிய அமைப்புகள், ஒரு பாத்திரத்தைக் கூட அரைகுறைப் பரிமாணமாகத் தன்னும் படைத்துவிட முடியாத இலக்கிய வறுமை, தமிழ் – இஸ்லாம் பாத்திரங்களின் உரையாடல்களில் கூட மொழி வழக்கு, பண்பாட்டு வேறுபாடுகளைத் துளியேனும் கொண்டிராத சவ எழுத்து, போதாததற்குப் பக்கத்திற்குப் பக்கம் எழுத்துப்பிழைகளும் நிறைத்து; வாசு முருகவேல் தனது தமிழ் நாஸி பேக்கரியில் சுட்ட அரைகுறைப் பாண் தான் இந்தப் புத்தகம்.

இந்தப் புத்தகம் ஓர் ‘இலக்கியப் புனைவுப் பிரதி’ என்று வாசு முருகவேல் ஒருவேளை சொல்லியிருந்தால் நாம் இந்த ஆபாசத்தைக் கண்டுகொள்ளாமல் கடந்திருக்கலாம். என்னமோவொரு சாத்தியத்தை என்னமோவொரு கற்பனையில் அவர் உருவாக்கியிருக்கிறார் என நமக்கு நாமே ஒரு பின்நவீனத்துவச் சமாதானத்தைக் கற்பித்துக்கொண்டு அடங்கியிருந்திருக்கலாம்.

ஆனால் இந்தப் புத்தகத்தைத் தான் எழுதியதற்கு ஒரு பெரிய வரலாற்றுக் காரணம் இருப்பதாக வாசு நூலின் முன்னுரையில் சொல்லிக்கொள்கிறார். தமிழைப் பேசக்கூடிய முஸ்லீம்கள் தமிழர்களே அல்லாமல் அவர்கள் முஸ்லீம்கள் என்ற தனி இனமாக இருக்கவே முடியாது என்கிறார் வாசு. அவரது இந்த நாஸிக் கருத்தை இலங்கையில் இருக்கும் ஒரேயொரு முஸ்லீம் கூட ஏற்றுக்கொள்ளமாட்டார். இலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சட்டரீதியாகவே முஸ்லீம்கள் தனித் தேசிய இனம்தான். எண்பதுகளிற்குப் பிறகு அவர்கள் அரசியல்ரீதியாகவும் வலுவான தனித் தேசிய இனமாக மாறியிருக்கிறார்கள். அவரவர் தாம்  விரும்பிய அடையாளங்களை ஏற்கவும் துறக்கவும் முழுமையான  உரித்துடையவர்கள். அவர்களிடம் போய் ‘நீ தமிழ் தேசிய இனம் தான்’ என்று  அவர்கள் விரும்பாத அடையாளத்தை வலுகட்டாயமாகத் திணித்து  மல்லுக்கு நிற்பது நாஸித்தனம். இது தலித்துகளையும் பழங்குடிகளையும் மற்றும் மூதாதை வழிபாட்டு மரபுள்ளவர்களையும் ஹிந்து என்ற பேரடையாளத்திற்குள் சங்கிகள் வலுகட்டாயமாக அடைக்க முற்படுவதைப் போன்றது. அல்லது மகிந்த சிந்தனை, அனைத்துச் சிறுபான்மை இனங்களையும் இலங்கையர் என்ற அடையாளத்திற்குள் திணித்து இனங்களின் தனித்துவங்களைக் காலி செய்வதைப் போன்றது.

இலங்கையின் வட பகுதியிலிருந்து முஸ்லீம்களைப் புலிகள் வெளியேற்றியது குறித்த உண்மைகளை உள்ளபடியே சித்திரிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம் என வாசு முன்னுரையிலேயே வீறாகப் பிரகடனப்படுத்திவிடுகிறார். ஆக அவரது சித்தம் இந்தப் புத்தகத்தின் மூலம் வரலாற்றுப் பொய்களை உடைத்துச் சுக்குநுாறாக்கி, இதுவரை பிரபாகரனோ, தமிழ்ச்செல்வனோ, ஆயிரம் பக்கங்கள் எழுதிக் குவித்த அன்ரன் பாலசிங்கமோ, அடேல் பாலசிங்கமோ முஸ்லீம்கள் வெளியேற்றம் தொடர்பாக வெளியிட்டிராத  ஓர் உண்மையை நிறுவிக்காட்டுவதாக இருக்கிறது.

நான் மேலே குறிப்பிட்ட பெருந்தலைகளோ அல்லது புலிகளின் எந்தவொரு ஆவணமோ அறிக்கையோ இதுநாள்வரை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்களை விரட்டியதற்கு அவர்களிடையே 100 பேர்கள் இலங்கை அரசோடு கூட்டுச்சேர்ந்து ஆயுதங்களைப் பதுக்கிவைத்ததுதுான் காரணம் எனச் சொல்லியதில்லை. தமிழ்த் தேசியப் பார்வையைக்கொண்ட சேரன், நிலாந்தன், சயந்தன், குணா கவியழகன் போன்ற எழுத்தாளர்கள் கூட  இந்தப் பழியை முஸ்லீம்கள்மீது சுமத்தியது இல்லை.

வடக்கிலிருந்து இஸ்லாமியர்களைப் புலிகள் விரட்டியது இன்றுவரை புலிகள் மீது அழிக்கமுடியாத இனச்சுத்திகரிப்புக் குற்றமாகவே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் இரா. சம்மந்தன், சுமந்திரன் கூட அண்மையில், புலிகளை இந்தச் செயலிற்காகக் கடுமையாகக் கண்டித்து தமிழர்களின் சார்பில் முஸ்லீம்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்கள்.

முஸ்லீம்களது வெளியேற்றத்தைக் கண்டித்து எழுதிய ஈழத் தமிழ் எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அது நூறு பேருக்காவது குறையாமலிருக்கும். இந்த வெளியேற்றத்தைக் கண்டித்து “அழியட்டும் இந்நாடு/ அழியட்டும் எனது இனம்/ அழியட்டும் என் கவிதை/ அழியட்டும் எனது தமிழ்” என முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட ஐந்தாவது வருட நினைவு நிகழ்வில் வ.ஐ.ச. ஜெயபாலன் அறம் பாடியதை  நாம் மறந்துவிட முடியயுமா என்ன!

புலிகள் கூட ஒப்புக்கு ஒரு மன்னிப்பைக் கோரியிருந்தனர். அண்மையில் ஒரு முஸ்லீம் தலைவர்  “மறந்துவிடுகிறோம் ஆனால் மன்னிக்கமாட்டோம்” என மனம் நொந்து கூறியிருந்தார். ஹிட்லருக்கு மன்னிப்பு உண்டென்றால், சியோனிஸத்திற்கு மன்னிப்பு உண்டென்றால், குஜராத் படுகொலைகளிற்காக மோடிக்கு மன்னிப்பு உண்டென்றால், முள்ளிவாய்க்காலிற்காக ராஜபக்ஷவிற்கு மன்னிப்பு உண்டென்றால், புலிகளிற்கும் மன்னிப்பு உண்டு.

ஆக, மன்னிப்பே இல்லாத இந்தக் கொடுங் குற்றத்தை, இந்த வரலாற்றுத் தவறைத் தனது புத்தகத்தின் மூலம் நேர் செய்யவும் நியாயப்படுத்தவும் வாசு முருகவேல் மெனக்கெட்டிருக்கிறார். சூழவர கொஞ்சமேனும் அறமற்ற தகிடுதத்த எழுத்தாளர்களின் ஆதரவு முனகல்கள் வேறு. நாம் வாழுங்காலத்தில் நம் கண்முன்னே நிகழ்ந்த ஓர் இனச் சுத்திகரிப்புக் குற்றத்தை 28 வருடங்களிற்குள்ளாகவே,  அற்ப பொய்களின் துணையுடனும் அறமற்ற மனிதர்களின் உசுப்பேற்றலுடனும் உடைக்கப் பார்த்திருக்கிறார் வாசு முருகவேல்.

நாவல் நிகழும் களம் யாழ்ப்பாணம். குறிப்பாக ஒஸ்மேனியாக் கல்லுாரியைச் சூழவரவுள்ள இஸ்லாமியர்கள் செறிந்தும் தமிழர்களோடு கலந்தும் வாழ்ந்த நிலப்பரப்பு. 1981 குடிசனக் கணக்குப்படி யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம்கள் 14 ஆயிரத்துச் சொச்சம். புலிகளால் விரட்டப்பட்டபோது யாழ்ப்பாணத்தோடு சேர்த்து ஒட்டுமொத்த வடமாகாணத்திலிருந்தும் விரட்டப்பட் முஸ்லீம்கள் தொகை 78 ஆயிரம்.

1990 ஒக்டோபர் இறுதியில் வெளியேற, வெறும் சில மணிநேரங்கள் அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டு, அனைத்து அசையும் அசையாச் சொத்துகளையும் கொள்ளையிட்டு, ஆளுக்கு வெறும் 500 ரூபாயை மட்டும் எடுத்துச் செல்லப் புலிகள் அனுமதித்து அந்தச் இனச்சுத்திகரிப்பை நிகழ்த்திய பின்பு ஒருபோதும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓர் இஸ்லாமியர் கூட வாழ அனுமதிக்கப்படவில்லை. அந்த மக்கள் இழந்த சொத்துகள் இழந்தவைதாம். அந்த மக்கள் புத்தளம் அகதிமுகாம்களில் பிச்சை நிவாரணத்தில் வாழ விதிக்கப்பட்டார்கள்.

ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த நாள் முதல் அரச கைக்கூலிகள் – காட்டிக்கொடுப்பாளர்கள் – துரோகிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் இயக்கங்களால் கொல்லப்பட்டார்கள். அப்படி ஒரு யாழ்ப்பாண முஸ்லீமை எந்த இயக்கமாவது கைதுசெய்த வரலாறோ கொலை செய்த வரலாறோ கிடையவே கிடையாது. மாறாக ஆயுதம்தாங்கிய ஈழவிடுதலைப் போராட்டத்தில் கணிசமான யாழ்ப்பாண முஸ்லீம் இளைஞர்களும் இணைந்திருந்தார்கள் என்பதே வரலாறு.

யாழ்ப்பாணத்து முஸ்லீம்கள் தங்களை எப்போதாவது தமிழர்களது விரோதிகளாகவோ எதிரிகளாகவே சொன்னதுண்டா! செயலாற்றியதுண்டா!! 1956-ல் கொழும்பில் வாழ்ந்த மேட்டுக்குடி முஸ்லீம் தலைவர்கள் சிலர் ‘முஸ்லீம்கள் இனி தமது மொழியாகச் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் கைக்கொள்ள வேண்டும்’ எனச் சொன்னபோது அப்போது செனட் சபை உறுப்பினராகயிருந்த யாழ்ப்பாணத்து அறிஞர் ஏ. எம்.ஏ. அஸீஸ் ‘முஸ்லீம்களின் தாய்மொழி தமிழ்மொழி மட்டுமே’ என முழங்கியதை அவ்வளவு சீக்கிரமாகவா மறந்துபோவோம்!

ஈழப் போராட்ட வரலாறில், யாழ்ப்பாணத்து முஸ்லீம்களால் எந்தவொரு தமிழ்மகனும் இம்சிக்கப்பட்டதாகவோ காட்டிக்கொடுப்பட்டதாகவோ கொல்லப்பட்டதாகவோ வரலாறே கிடையாது. புலிகள் கூட முஸ்லீம்களை வெளியேற்றியபோது ‘அவர்கள் இலங்கை அரசோடு சேர்ந்து இயங்கினார்கள், ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்தார்கள்’ எனக் கூறியது கிடையாது. அப்படி எந்தச் சாட்சியங்களோ அறிக்கையோ ஆவணமோ கிடையாது என்பதை நான் முன்னமே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இந்தக் குறையை நேர்செய்ய வாசு முருகவேல் போதிய பொய்ச் சாட்சியங்களோடு ஜெப்னா பேக்கரியில் களம் இறங்கியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தோடு சேர்ந்து முஸ்லீம் இளைஞர்கள் செயற்பட்டார்களாம் (பக்கம் 31). அவர்கள் கத்தியால் அன்றாடம் தமிழர் வீட்டுக் கதவுகளைக் கொத்தத் தமிழர்கள் கத்தினார்களாம். ஏ யாழ்ப்பாணவாசிகளே! இப்படியொரு சம்பவத்தை எங்காவது நீங்கள் கேட்டதுண்டா? எங்காவது இது குறித்தொரு பதிவை நீங்கள் படித்ததுண்டா? அதுவும் இந்தப் புத்தகத்தில் யாழில் தமிழ் X முஸ்லீம் முரண் ‘கட்டமைக்கப்பட்டு’ இயங்கும் காலப்பகுதியில் (இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதிலிருந்து முஸ்லீம்கள் விரட்டப்பட்டவது வரையான நான்கு மாத காலப்பகுதியில்) இப்படி ஏதாவது நடக்க வாய்ப்பிருந்ததா? அப்போது யாழ்ப்பாண நகரத்தை பொறுத்தவரை முற்றுமுழுவதாக இலங்கை இராணுவம் முகாம்களிற்குள் முடக்கப்பட்டிருந்தது. இலங்கையின் வடக்குப் பகுதியில் முஸ்லீம் ஊர்காவல் படை, பாசறையென்றெல்லாம் ஏதும் இருந்ததில்லையே.

ஒஸ்மேனியா கல்லுாரியில் (வாசு உஷ்மேனியா என எழுதுகிறார்) படித்த முஸ்லீம் மாணவர்கள் இலங்கை அரசு கொடுத்த ஆயுதங்களைப் பதுக்கிவைத்துப் புலிகள் மீது பாய வளம் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது நாவலின் அடுத்த சத்திய வார்த்தை. ஒஸ்மேனியா கல்லுாரியில் 12ம் வகுப்புவரைதான் இருந்தது. அங்கே மாணவர்களின் அதிகபட்ச வயது 18 -19 தான் இருக்கும். இவர்களா ஆயுதங்களைப் பதுக்கிவைத்தார்கள்?

இந்தச் சந்தேகம் வரக்கூடாது என்றுதான் நாவலில் ஒஸ்மேனியா கல்லுாரியை ‘உஷ்மேனியா பல்கலைக்கழகம்’ ஆக்கிவிட்டார் வாசு (பக்கம் 52). பல்கலைகழக மாணவர்களென்றால் ஆயுதத்தைப் பதுக்கிவைப்பதை நம்பக் கூடியதாக இருக்கும். என்னவொரு கற்பனைத் திறன்! இலங்கையில் முஸ்லீம்களிற்கு முதற் பல்கலைக்கழகத்தை வாசு அமைத்துக்கொடுத்திருக்கிறார்.

அதிகம் வளவளக்காமல் நேரடியாகவே புத்தகத்தின் Climax-க்கு வந்துவிடுகிறேன். ஒருநாள் திடீரெனப் புலிகள் யாழ்ப்பாணத்தில் 85 முஸ்லீம் இளைஞர்களையும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்திருந்த ஒரு தமிழரையும் கைது செய்கிறார்கள். இவர்களால் யாழ்ப்பாணத்து வீடொன்றில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுதங்களையும் இவர்களிற்கும் இலங்கை இராணுவத்திற்குமான தொடர்பையும் புலிகள் கண்டுபிடிக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அனைத்து யாழ்ப்பாண முஸ்லீம்களையும் ஒஸ்மேனியா கல்லுாரிக்கு அழைத்த புலிகள்; குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லீம்களையும் 2 மணிநேர அவகாசத்துள் யாழ்ப்பாணத்திலிருந்து அனைத்து உடமைகளையும் கைவிட்டு வெளியேறுமாறு துப்பாக்கி முனையில் ஆணையிட்டு வெளியேற்றுகிறார்கள்.

இந்த வெளியேற்றத்தை நம் காலத்தின் மாபெரும் கலைஞன் பிரசன்ன விதானகே தனது ‘August Sun’ திரைப்படத்தில் உள்ளது உள்ளபடி மாபெரும் துயரமாகச் சித்திரித்திருப்பார். சிங்களத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அந்தக் கலைஞன் சித்திரித்த அதே சம்பவம், முஸ்லீம்களின் அதே தாய்மொழியைத் தனது தாய்மொழியாகவும்  கொண்ட தமிழன் வாசு முருகவேலிடம் வரும்போது பொய்யும் வஞ்சகமும் நிறைந்து கோயபல்சுத்தனமான தமிழ் நாஸிச் சித்தரிப்பாக மாறிவிடுகிறது. முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு முஸ்லீம்களையே காரணமாக்கி அவர்கள்மீது காட்டிக்கொடுப்பாளர்கள் என்ற சுமையையும் ஏற்றிவைக்கிறார் வாசு.

வடக்கிலிருந்து கொள்ளையிட்டு அனைத்து முஸ்லீம்களையும் அகதிகளாக விரட்டி இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாக முடித்தபின்பு மக்களை முகம்கொடுத்த புலிகளது உறுப்பினர்களிடமிருந்தும் புலிச் சேவகம் செய்த சில எழுத்தாளர்களிடமிருந்தும் அவ்வப்போது சில வதந்திகள் கசியவிடப்பட்டன. இது புகழ்பெற்ற புலிகளின் பாணிதான் என்பதை எளிய அறிவுள்ளோர் கூட அறிவர். அனுராதபுரப் படுகொலை,  அமிர்தலிங்கம் கொலை,  ராஜினி திரணகம கொலை, செல்வி கொலை, சபாலிங்கம் கொலை, காத்தான்குடி பள்ளவாசல் படுகொலை, பொது இடங்களில் குண்டுவெடிப்புகள் போன்ற எல்லாவற்றிற்குப் பின்பும் புலிகள் வாய்மொழியாகக் காரண வதந்திகளைக் கசியவிட்டார்கள். ஆனால் இவை எதற்கும் சான்றுகளோ ஆதாரங்களோ இருக்காது.

ஆனானப்பட்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியே ஒருமுறை ‘ புலிகள் முஸ்லீம்களை வெளியேற்றியதற்கு இனச்சுத்திகரிப்பின்றி  வேறு காரணங்களுமிருக்கலாம்’ என்றொரு ஊகச் சமாளிப்பை வெளியிட்டார். ‘உங்கள் ஊகத்தின் மூலமெது? சான்றெது?’ என நாங்கள் அப்போதே பலமாகக் கேள்வி கேட்டோம். எனது ‘கொரில்லா’ நாவலிலும் இதைக் குறிப்பிட்டு பேராசிரியரைக் காய்ந்திருந்தேன். ஆயிரமாண்டுகால வரலாற்றுத் தொல் சான்றுகளைகளையெல்லாம் விரல் நுனியில் வைத்திருந்த பேராசிரியரிற்கு எங்கள் கேள்விக்குக் கடைசிவரை பதிலளிக்க முடியவில்லை.

சரி முஸ்லீம்கள் வெளியேற்றம் என்ற விசயத்தில் புலிகள் சொன்னது வதந்தியல்லாமல் சத்தியவார்த்தைகளே; அதைவாங்கியே வாசு முருகவேல் தன் பேக்கரியில் போண்டா சுட்டார் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும், 85  முஸ்லீம் இளைஞர்கள்  இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தார்கள் என்பதால் பாரம்பரியமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஓர் இனத்தையே கொள்ளையிட்டுக் கட்டிய துணியோடு புலிகள் விரட்டியது நியாயமா? ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் இலங்கை அரசின் துணைப்படைகளாகவே யுத்தகளத்தில் நின்றபோது புலிகள் ஒட்டுமொத்தத் தமிழனத்தையுமா துரத்திவிட்டார்கள்?  தமிழருக்கு ஒரு நியாயம் முஸ்லிம்களிற்கு மறு நியாயமா?

யாழ்ப்பாணம் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த அடுத்த 5 வருடங்கள்வரை ஏன் மீளவும் குடியேறுமாறு துரத்தப்படவர்களைப் புலிகள் அழைக்கவில்லை? புலிகள் பின்பொருநாள் யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றத்திற்கு கோரிய மன்னிப்பு இலங்கை அரசுடனான சமரசப் பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லீம்களது பிரதிநிதிகளும் தாங்களே, வடக்கு – கிழக்கு மக்களின் ஏக பிரதிநிதிகள் தாங்களே என உரிமைகோருவதற்கானவொரு தற்காலிகத் தந்திர மன்னிப்பு இல்லையா? இல்லையெனில் மன்னிப்புக் கேட்ட பின்பும் இரண்டாயிரத்தின் நடுப்பகுதிகளில் மூதுாரிலிருந்து புலிகள் முஸ்லீம்களைத் துரத்தியடித்தார்களே, அந்த நடவடிக்கைகளில் முஸ்லீம்களைக் கொன்று போட்டோர்களே!

இவையெல்லாம் நடந்தது இனச்சுத்திகரிப்பு என நிறுவுகின்றனவா இல்லையா என இந்தப் புத்தகத்திற்கு நெருப்பு விருது வழங்கும் ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின்’ அருமைத் தோழர்கள் கேள்விகளை எழுப்பமாட்டீர்களா? புலிகளால் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் மீதான இன அழிப்பில் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் தொகை ஏழாயிரம் எனச் சொல்கிறது 2016-08-03 தேதியிட்ட இலங்கை இஸ்லாமிய இதழான விடிவெள்ளி. இந்த இன அழிப்புகளிற்கும் மோடியின் முதல்வர் ஆட்சியில் குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட முஸ்லீம்கள் மீதான இன அழிப்புக்கும் என்ன வித்தியாசம் எனச் சிந்திக்கமாட்டீர்களா? உங்களது முதல் நெருப்பு விருது வாசு முருகவேலுக்கு என்றால் அடுத்த நெருப்பு விருது யாருக்கு? மோடிக்கா? ஹெச். ராஜாவிற்கா? அரவிந்தன் நீலகண்டனுக்கா?

II

முஸ்லீம்கள் மீதான தமிழ் இயக்கங்களின் -குறிப்பாகப் புலிகளின்- படுகொலைகளையும் தாக்குதல்களையும் பற்றிப் பேசும்போதெல்லாம் இந்தப் படுகொலைகளிற்கு நியாயம் தெண்ட அல்லது சமாளிக்க அல்லது தங்களது தமிழ் நாஸிக் குரலை நயம் குரலாக ஒலிக்க, கிழக்கில் தமிழர்கள் மீது ஊர்காவல் படைகளில் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞர்கள் நிகழ்த்திய படுகொலைகளையும் தாக்குதல்களையும் குறித்துச் சிலர் பேசுவதுண்டு. முதலில் ஒன்றை இவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஊர்காவல் படைகளிலிருந்த இஸ்லாமிய இளைஞர்களின் அட்டூழியங்களை முன்வைத்து நீங்கள் ஒருபோதும் புலிகளின் இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்திவிட முடியாது, நேர் செய்ய முடியாது.

புலிகள் முஸ்லீம்கள் மீது இழைத்த கொடுமைகளிற்காக தமிழ் சனநாயகச் சக்திகள் குரல் கொடுத்ததுபோல ஏன் தமிழர்கள் மீது ஊர்காவல்படை முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடுமைகளிற்கு எதிராக அதிகமான முஸ்லீம் முற்போக்காளர்கள் குரல்கொடுப்பதில்லை? என்பதும் அடிக்கடி கேட்கப்படும் இன்னொரு கேள்வி.

இதே கேள்வியை சில வருடங்களிற்கு முன்பு ஸர்மிளா ஸெய்யித்துடனான நேர்காணலில் நான் கேட்டேன். ஸர்மிளா இவ்வாறு பதிலுரைத்தார்:

“தமிழர்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தியது அரச படைகளுடன் சேர்ந்திருந்த சில முஸ்லிம் நபர்களே! பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவைப் பெற்றிருந்த புலிகளைப் போன்று பெரும்பான்மை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இஸ்லாமிய அமைப்பெதுவும் தமிழர்களின் மீதான தாக்குதல்களுக்குக் காரணமாக இருக்கவில்லை. அரச படைகளுடன் சேர்ந்து இயங்கிய முஸ்லிம் நபர்களின் தாக்குதல் அரசின் தாக்குதலே என்ற புரிதலே இஸ்லாமிய முற்போக்காளர்களிடமிருந்து வலுவான கண்டனக் குரல்கள் எழாததற்கான காரணம் என்று நினைக்கிறேன்.”

அதுதான் தோழர்களே! ஊர்காவல் படையென்பது இலங்கை அரசால் உருவாக்கப்பட்டது. இலங்கை அரசின் வழிகாட்டலில் இயங்கிய படையது. இலங்கை அரசின் துணைப்படைக் குழுக்களாக எத்தனையோ தமிழர்கள் இயங்கவில்லையா? இந்திய அமைதிப் படையின் துணைப் படைகளாக தமிழ் இளைஞர்கள் இயங்கவில்லையா? அதறகான பழியை ஒட்டமொத்தத் தமிழினமுமா சுமக்க முடியும்! அதேபோல ஊர்காவல் படையில் இணைந்திருந்த முஸ்லீம் இளைஞர்கள் ஏற்படுத்திய இரத்தப் பழியை நாம் ஒட்டுமொத்த முஸ்லீம் இனத்தின் மீதும் சுமத்திவிட முடியாது.

அதேவேளையில் முஸ்லீம் சிந்தனையாளர்களோ எழுத்தாளர்களோ ஊர்காவற்படையிலிருந்த இஸ்லாமியர்களின் செயலை நியாயப்படுத்தி எழுதியாக ஒரேயொரு சொல்லை, பிரதியை உங்களால் காட்ட முடியுமா? மாறாகக் கண்டித்துப் பிரதிகள் உருவாக்கப்பட்டன. என். ஆத்மாவின் ‘உயிர் பிய்யுமோர் பாடல்’ கவிதையை நாம் மறந்துவிட முடியுமா! ஆத்மா நேற்று இப்படி எழுதியிருந்தார்:

“ஊர்காவல் படை என்பது அரச பாதுகாப்புப் பிரிவினால் உருவாக்கப்படும் தற்காலிக துணைப்படை. Shot gun வகைத் துப்பாக்கிகளும் அவற்றுக்கான சிறு எண்ணிக்கையான ரவைகளுமே இவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆயுதக் குழுக்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் ஊர்களிலும் எல்லைச் சிங்கள ஊர்களிலும் மக்கள் வேண்டிய பாதுகாப்பை வழங்க போதிய ராணுவம் இல்லாத நிலையில் குறித்த ஊர் பிரஜைகளைக் கொண்டு இவை உருவாக்கப்பட்டன. தாக்கப்படும் ஊரைக் காக்க ராணுவம் வந்து சேரும் வரையான தற்காப்பே ஊர்காவல் படையின் பொறுப்பு. பெரும்பாலும் இப்படைகளில் உள்ளூர் சண்டியர்களின் மேலாதிக்கம் இருந்தது, அரச படைகளுக்கேயுரிய மனோபாவங்களுமிருந்தன. முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சுறுத்தும் ‘மூன்றாம் படை’ யாக அவர்கள் தேறினர். அரச படையுடன் பொருதிய பலமிக்க ஆயுதக் குழுக்கள் இவர்களை மிக எளிதாக ஊர் ஊராக இரவிரவாக வேட்டையாடின. பதிலுக்கு அப்பாவித் தமிழ் மக்களை ஊர்காவல் படையினர் அவ்வப்போது பழி தீர்த்தனர். இதன் மூலம் முஸ்லிம் – தமிழ் பிளவு மறு பரிணாமமுற்றது. யுத்த பிரபுக்களின் இலட்சியங்களில் இதுவுமொன்று. கடைசியில் ஊர்காவல் படைகள் கலைக்கப்பட்ட போது எஞ்சியவர்கள் அரச இராணுவத்தில் உள்ளீர்க்கப்பட்டார்கள். இவர்களது அராஜகங்கள் தொடர்பாக வருத்தம் கோரும் தார்மீக் கடமை முஸ்லிம்களுக்கு அல்லது சிங்கள மக்களுக்கு உள்ளதா என்பது புரியவில்லை. அனைத்து பயங்கரவாத செயற்பாடுகளும் சமமான ஒருமித்த கண்டனத்திற்குரியவையே.”

அரசின் துணைப்படையாக இருந்த முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களிற்குப் பதில், அப்பாவி முஸ்லீம்களையும் குழந்தைகளையும் பெண்களையும் புலிகள் கொல்வதா? சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான பதில் செந்தமிழன் சீமான் சொல்வதுபோல சிங்களச்சிகளின் மார்புகளை அறுப்பதும் கொல்வதுமா? புலிகள் இதைச் செய்தார்களா இல்லையா! எத்தனையெத்தனைச் சிங்கள எல்லைப்புறக் கிராமங்களில் புலிகள் இத்தகைய வெறியாட்டங்களை நடத்தினார்கள். தோழர் சி. புஸ்பராஜாவின் ‘ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ நூலைத் தயவு செய்து படித்துப்பாருங்கள். தமிழர்கள் மீது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளை மட்டுமல்லாமல் புலிகளாலும் பிற தமிழ் இயக்கங்களாலும் அப்பாவிச் சிங்கள விவாசாயிகள் மீதும் முஸ்லீம்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் விரிவாகத் தொகுத்துச் சான்றுகளோடு ஆவணமாக அந்த நூலை அவர் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்.

யாழிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியதற்கு கற்பனையான ஒரு நியாயத்தைக் கண்டுபிடிக்கும் வாசு முருகவேல், கிழக்கில் புலிகளால் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப்படுகொலைகளிற்கு என்ன நியாயம் சொல்லிப் புலிகளைக் களங்கமற்றவர்களாகக் காப்பாற்றுவார்? யாழில் முஸ்லீம்கள் துரத்தப்பட்டடதை மென்று முழுங்கி ஏற்று ஏப்பம்விடும் அறிவார்ந்த கூட்டம் கிழக்குக் கொலைகளிற்கு என்ன நியாயம் கற்பித்துப் புலிகளைக் காப்பற்றுவார்கள்?  ‘பட்டிகொலோ கூல்பார்’ என இன்னொரு புத்தகம் வருமோ என்னவோ!

1990-ம் வருடம் மட்டும் புலிகள் முஸ்லீம்கள் மீது நிகழ்த்திய படுகொலைகள் குறித்து எஸ்.எம்.எம்.பஷீர் தொகுத்த ஒரு சுருக்கப் பட்டியல் இது (http://srilankamuslims.lk) :

· 2 ஜூலை 1990ல் 14 முஸ்லிம் விவசாயிகள் அக்கரைப்பற்றில் சுட்டுக்கொலை.
· 3 ஜூலை 1990ல் ஹஜ் பண்டிகைக்கு முந்திய மாலையில் சிவில் சமூகப் பிரமுகர்கள் தாவூத் அதிபர், அலி முஹம்மது ஹாஜியார், சமாதான நீதவான் கபூர் ஹாஜியார் ஆகியோர் விசாரணைக்கெனப் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலை.
· 7 ஜூலை 1990 புதூரில் 17 முஸ்லிம்கள் கொலை.
· 15 ஜூலை 1990ல் 19 பஸ் பிரயாணிகள் கிரான்குளத்தில் இறக்கிக் கொலை.
· 19 ஜூலை 1990ல் 69 ஹஜ் யாத்திரிகர்கள் அவர்கள் வீடு திரும்பும் வழியில் ஒந்தாச்சிமடத்தில் சுட்டுக்கொலை.
· 21 ஜூலை 1990ல் 7 முஸ்லிம் இரயில் பிரயாணிகள் மட்டக்களப்பில் தனியாகப் பிரித்தெடுத்துக் கொலை.
· 23 ஜூலை 1990ல் சம்மாந்துறை ஜாரியா பள்ளியில் தங்கியிருந்த 5 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
· 3 ஆகஸ்து 1990ல் காத்தான்குடி மீரானியா, ஹுச்சைனியா பள்ளிவாசலில்களில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் 140 பேர் கொலை.
· 11 ஆகஸ்து 1990ல் ஏறாவூரில் 127 முஸ்லிம்கள் கொலை.
· 12 ஆகஸ்து 1990ல் சம்மாந்துறையில் வயல் வேலை செய்த 4 முஸ்லிம்கள் கொலை.
· ஆகஸ்து 1990ல் அக்கரைப்பற்றில் 8 முஸ்லிம்கள் கொலை.

இப்படியா ஒரு விடுதலை இயக்கம் வரிசையாகச் செய்திருக்கும்? என நீங்கள் சற்றேனும் சந்தேகமுற்றால் இந்தக் கொலைப் பட்டியலை நீங்கள் அய். நாவின் இலங்கை குறித்த அறிக்கையுடனோ வேறெந்த சர்வதேச மனிதவுரிமைகள் ஆணையத்தின் ஆவணக் காப்பகங்களிலோ இணையத்தளங்களிலோ சரி பார்த்துக்கொள்ளலாம்.

ஆக, நடந்தது ஒரு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு. கிழக்கு மாகாண முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்து முஸ்லீம்களைப் போல பலவீனமான சமூகமில்லை. யாழ் முஸ்லீம்கள் வறியவர்கள். அவர்களிடையே அய்ந்தாறு சிறு முதலாளிகள் மட்டுமே இருந்தார்கள். மற்றவர்களெல்லாம் தையல் வேலை, சாய்ப்புக்கடைகளில் அணிமணி விற்பது, நடைபாதையில் பொருட்கள் விற்பது, கரையோர மீன்பிடிப்பு, கூலிவேலை போன்ற தொழில்களே செய்துவந்தார்கள். அவர்களிடம் அவர்கள் குடியிருந்த துண்டு நிலங்கள் மட்டுமேயிருந்தன. விவசாய நிலங்கள் இருக்கவில்லை. எவ்வித அரசியல் அதிகாரமும் அற்றவர்கள். அவர்களிற்கென்று ஓர் வலுவான அரசியல் பிரதிநிதித்துவம் அப்போது கிடையாது.

ஆனால் கிழக்கு வாழ் முஸ்லீம்கள் குடிசன எண்ணிக்கையிலும் சரி, நிலபுல உடமைகளிலும் சரி, பொருளியலிலும் சரி கிட்டத்தட்ட கிழக்கு வாழ் தமிழர்களிற்குச் சமமானவர்கள். இவர்களிடம் தங்களிற்கான தனித்துவ அரசியல் தலைமையும் ஓரளவு அரசியல் அதிகாரமுமிருந்தன. இவை இல்லாமல் இவர்களும் யாழ் முஸ்லீம்களைப் போன்று பலவீனமாக இருந்திருந்தால் கிழக்கிலிருந்தும் முஸ்லீம்கள் புலிகளால் விரட்டப்பட்டிருக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் இருந்தனவா இல்லையா!

கிழக்கில் முஸ்லீம்கள் மீது நிகழ்த்திய கொலைகளிற்கான முழுப் பொறுப்பையும் கருணா மீது சுமத்திவிட்டுப் புலிகளின் தலைமையை இந்த வரலாற்றுப் பழியிலிருந்து விடுவிக்கவும் ஓர் எத்தனத்தைச் சிலர் செய்வதுண்டு. இந்தக் கொலைகளில் புலிகளின் கிழக்குத் தளபதி கருணாவிற்கு நிச்சயமாகவே முதன்மைப் பொறுப்புண்டு. அதில் சந்தேகமில்லை. ஆனால் இதை நிகழ்த்திய பின்பும் 14 வருடங்கள் கருணா புலிகள் இயக்கத்தில் மிகப் பெரும் பொறுப்பில் இருந்திருக்கிறார். ஆகக் குறைந்தது இந்தச் செயலிற்காக கருணா பதவி இறக்கமாவது செய்யப்பட்டாரா? மாறாக இதற்குப் பின்பு கருணாவின் அதிகாரம் இயக்கத்திற்குள் மேலும் மேலும் வளர்ந்தது. இந்தக் கொலைகள் நிகழ்ந்து பத்தாண்டுகளிற்குப் பின்பு கிளிநொச்சி சர்வதேசப் பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனுக்கு வலப்புறம் அமர்ந்திருக்கும் பாக்கியத்தையல்லவா கருணா பெற்றிருந்தார். இந்தப் படுகொலைகளிற்கும் புலித் தலைமைக்கும் சம்மந்தமில்லை என்பதெல்லாம் புலிகள் இயக்க உட்கட்டமைப்பை அறியாதோர் கூற்று.  இத்தனை கொலைகளையும் தடுத்த நிறுத்த வக்கற்றிருந்த தலைமையா பிரபாகரன்!

முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்கும் கூட்டுப்படுகொலைகளிற்குமான காரணத்தை வாசு முருகவேலின் வதந்திகளில் இருந்தல்லாமல், விடுதலைப் புலிகளது இறுக்கமான – சுத்தமான தமிழ்த் தேசிய இனவாதத்திற்குள்தான் நாம் கண்டடைய முடியும். மற்றமை எதையும் அங்கீகரிக்க மறுப்பது அவர்களது அரசியலின் அடிப்படை. பாஸிசத்தின் குணக்கூறு. புலிகள் முன்னெடுத்த தமிழ்த் தேசியத்திற்கு தொடக்க காலங்களில் ஒரு பகுதி முஸ்லீம்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும் காலப் போக்கில் -குறிப்பாக அவர்கள் பெரியளவில் வாழ்ந்த கிழக்கில்- தமக்கான தனித்துவ அரசியல் அடையாளத்தை முன்னெடுத்ததாலும் இலங்கையில் இனங்களிற்கு இடையேயான அதிகாரப் பகிர்வில் தமக்கான பங்கை அவாவி நின்றதாலும் வடக்கு – கிழக்கு மக்களிற்கு தாங்களே ஏகபிரதிநிதிகள் என்ற புலிகளது பிடிவாதத்தை முஸ்லீம் தலைமைகள் நிர்தாட்சண்யமாக நிராகரித்ததுமே முஸ்லீம்கள் மீதான புலிகளது  காழ்ப்பிற்கும் பகைமைக்கும் காரணங்கள். அவர்களது அழிவு வரை இது தொடர்ந்தது. வடக்குக் கிழக்கில் புலிகளைத் தவிர வேறெந்த அரசியற் தலைமையையும் புலிகள் ஏற்றுக்கொள்ளாதவர்களாகவே இருந்தார்கள். ஏக பிரதிநிதித்துவ முழக்கத்தை பிரபாகரன் இறுதிவரை கைவிட்டாரில்லை.

ஜெப்னா பேக்கரியின் முன்னுரையில் ‘பொய்களை உடைத்து உண்மைகளை அறிவிக்கிறேன்’ என அறைகூவிய வாசு முருகவேல், புதிதாக எந்த உண்மைகளையும் நிரூபணம் செய்தாரில்லை. காலம்காலமாக நாங்கள் கூறிவரும் சாட்சியமான யாழிலிருந்து இஸ்லாமியர்கள் துரத்தப்பட்டதை அவர் மறுக்கவில்லை. புள்ள குட்டிகளுடனும் கட்டிய துணியுடனும் விரட்டப்பட்டதை அவர் மறுக்கவில்லை. அன்று புலிகளால் முஸ்லீம்கள் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு 500 ரூபாவை மட்டும் தம்மோடு எடுத்துச் செல்ல அனுமதிக்ப்பட்டு 2 மணிநேரத்திற்குள் வெளியேற்றப்பட்டதையும் அவர் மறுக்கவில்லை.

அவர் செய்ய முயன்றதெல்லாம் ஒரு ஆதாரமற்ற வதந்தியை முன்வைத்து இந்தக் கொடுமையான இனச் சுத்திகரிப்பை நியாயப்படுத்த முயன்றதுதான். அவரது கதாபாத்திரமான ஹமீது, இந்த வெளியேற்றத்திற்குக் காரணமான புலிகள் மீதுதான் நியாயமாகக் கோபப்பட வேண்டும். அல்லது புலிகளின் இந்த இனச்சுத்திகரிப்பை மவுனமாக ஏற்றுக்கொண்டவர்களை அல்லது அதை நியாயப்படுத்தி எழுதிய வாசு முருகவேலைப் பார்த்துக் கொதிக்க வேண்டும். ஒரு நாஸி நாவலை எந்தப் பொறுப்புமில்லாமல் வெளியிட்ட ‘யாவரும்’ பதிப்பகத்தைக் கூட ஹமீது கோபிக்க நியாயமிருக்கிறது. இந்த நாஸிப் பிரதிக்கு விருது வழங்கும் அமைப்பைப் பார்த்து உரிமையுடன் கோபித்துக் கேள்வி கேட்கக்கூட ஹமீதிற்கு உரிமையிருக்கிறது. ஆனால் வாசு முருகவேலோ ஹமீதுவை ஒன்றுமறியா இஸ்லாமிய இளைஞர்கள் மீது ஏவிவிடுகிறார். யாழிலிருந்து வீடு வாசலைவிட்டு வெளியேறிக் கண்ணீருடன் போகும்போது ஹமீது, ஓர் இஸ்லாமிய இளைஞனின் வீட்டைப் பார்த்துத் திட்டுகிறார் ‘எல்லாம் இந்த வேச படையளால வந்தது’. இதுதான் இந்த நாஸி  நாவலின் பொயின்ட், மையம், போக்குவரத்து எல்லாமே. புலிகளின் முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பிற்கும் படுகொலைக்கும் காரணம் புலிகளல்ல. அதற்கான காரணம் இஸ்லாமியர்களே.

கோத்ரா ரயில் எரிப்பை முன்வைத்து குஜராத் படுகொலைகளை நியாயப்படுத்தி நாவல் எழுதலாம். தின்னவேலியில் வெடித்த கண்ணிவெடியே 1983 ஜூலைப் படுகொலைகளிற்கு காரணமென அரசை நியாயப்படுத்தி எழுதலாம். கொழும்பில் தமிழர்கள் குண்டு வைத்ததாலேயே கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த ஒட்டுமொத்தத் தமிழர்களையும் இரவோடு இரவாக இலங்கை அரசு வெளியேற்றியது என நியாயப்படுத்தி நாவல் எழுதலாம்.  சமூகக் கேடுகளான இந்த நாஸிப் பிரதிகளை எதிர்த்து நிராகரித்து அம்பலப்படுத்தாமல், எல்லாத் தரப்புடனும்  உரையாடுவோம் எனச் சூடு சுரணைகெட்டு இந்த நாவல்களையும் கொண்டுதிரிந்து பேசுவதும் இந்த நாஸிப் பிரதிகள் மீது இலக்கியப் பாரத்தை ஏற்றுவதும் இந்த நஞ்செழுத்துக்கெல்லாம்  நீட்டிமுழக்கி நயம்பயமாக விமர்சன உரை நிகழ்த்துவதும்  வீழ்ச்சி! ஒவ்வொரு ஈழத் தமினிற்குள்ளும் ஒரு இனவாதி இருக்கிறான் என மறுபடியும் முஸ்லீம்களை அஞ்ச வைக்காதீர்கள்.

வாசு முருகவேலின் நாஸிப் பிரதியில் சொல்லப்பட்ட பொய்களை மேலே சான்றுகளுடன் உங்களிற்குக் குறித்துக் காட்டினேன். தம்பி வாசுவிற்குச் சொல்ல ஒன்றிருக்கிறது:

நீங்கள் உங்கள் பொய்களை ஆயுதங்களாக முன்னிறுத்தியிருப்பது, ஓர் அதிகார அமைப்புக்கு எதிராகவோ ஓர் ஆயுதப் படைக்கு எதிராகவோ அல்ல. எந்த வலிமையுமற்ற, சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டு இன்றுவரை அகதிகளாக அலைந்துகொண்டிருக்கும் இஸ்லாமியர்களிற்கு எதிராக உங்கள் பொய்களை வரிசையான படைக்கலன்களாக நிறுத்தியுள்ளீர்கள். ஆனால் உங்களது படைக்கலன்களிற்கு எதிராக அந்த வஞ்சிக்கப்பட்ட ஏழை மக்கள் ஏந்தியிருக்கும் ஆயுதம் கூரிய வாளை ஒக்கும். சொந்த நிலத்திலிருந்து பெயர்த்துத் துரத்தப்பட்ட ஆயிரம் ஆயிரம் இஸ்லாமிய மக்கள் வடித்த கண்ணீரில் ஒருதுளி போதும் உங்கள் நாஸி அரசியலையும் உங்கள் நாசகார எழுத்தையும் தோற்கடிக்க!

 

http://www.shobasakthi.com/shobasakthi/?p=1458

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியமும் அரசியலும்

 

 

muslims-in-jaffna.jpg

 

 

இலக்கியத்தில் நேரடி அரசியல் நிகழ்வுகளை கையாளுதல் 

 

உலகம் முழுவதும் ஏராளமான கலைவடிவங்கள் போர் மற்றும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி எழுந்துள்ளன. குறித்த அரசியல் நிகழ்வுக்கான விவாதங்களை நிகழ்த்துதல், அல்லது சாட்சியமளித்தல் என்ற இரண்டும் தான் அதன் பிரதான இயங்குதிசைகள். இரண்டு வேறு வேறு நாவல்களையும் எழுத்தாளர்களையும் அரசியல் நிகழ்வுகளையும் கொண்டு இதன் தன்மைகளை உரையாடலாம்.

 

ஒன்று, வாசு முருகவேல் எழுதியுள்ள ஜெப்னா பேக்கரி. 'முஸ்லிம்கள் வெளியேற்றம்' என்ற அரசியல் நிகழ்வை மையப்படுத்திய பிரதி. மற்றையது காப்பிரியல் கார்சியா மார்குவேஸ் எழுதிய                     

 "Living to tell tale ". "Banana massacre " என்ற தொழிலாளர்கள் படுகொலையை மையப்படுத்திய பிரதி. இரண்டு வேறுபட்ட அரசியல் நிகழ்வுகள் என்றாலும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எவ்வாறு இலக்கியத்தில் கையாள முடியும். அது எவ்வளவு தூரத்திற்கு கலையாக ஆகிறது என்பது பற்றிய எனது சில கருத்துக்களை முன்வைக்க இவற்றைப் பயன்படுத்துகிறேன்.

 

மார்க்குவேசின் பிரதியில் வரும் ஒரு வாக்கியத்தை இங்கு சொல்வது பொருத்தமென்று நினைக்கிறேன். "வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்ததல்ல. ஒருவர் எதை நினைவு கூர்கிறார். எந்த ஒழுங்கில் என்பது தான்". இந்த வாக்கியத்தை ஜெப்னா பேக்கரியுடனும் நாம் இணைத்து  வாசிக்கலாம். ஒருவர் ஒரு காலகட்டத்தில் எதற்காக நேரடி அரசியலைப் பேசும் பிரதியை முன் வைக்கிறார்? குறித்த சம்பவத்தை எதற்காக நினைவு கூர்ந்து எழுதுகிறார்? என்ன ஒழுங்கில் எழுதுகிறார்? 

 

ஜெப்னா பேக்கரியை சாட்சிய வகை நோக்குக் கொண்ட பிரதியாகவே நான் புரிந்து கொள்கிறேன். முஸ்லிம்கள் வெளியேற்றமும் அதனையொட்டி எழுந்த கடுமையான விமர்சனங்களும் தொடர்ச்சியாக பொதுவெளியில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. அதற்கான நேரடி சாட்சி அனுபவங்களும் கதைகளும் ஏராளமாக எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அதன் காரணங்களை நோக்கி விவாதத்தை திருப்பாத ஒரு போக்கே பெரும்பாலான கதைகளில் இருந்து வந்திருக்கிறது. இந்த இடத்தில்  வெளியேற்றம் தொடர்பில் அதிகபட்சம் நாற்பது கதைகளளவில் தான் வாசித்திருக்கிறேன். அதற்கு வெளியே எங்கேயேனும் வேறு பதிவுகள் செய்யப்பட்டிருந்தால் அத்தனையும் இணைத்தே சூழலை விளங்கிக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.  பொதுவாக வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற துயர நிகழ்வுகள் அல்லது தமிழ் - முஸ்லீம் உறவு நிலை பற்றிய சித்தரிப்புக்களடங்கியவை தான் முழுவதும். இதற்கு சற்று அப்பால் நின்று "முஸ்லீம் ஊர்காவல் படை" அதன் தோற்றம், அதன் இயங்குமுறை, அதற்கும் வெளியேற்றத்திற்குமிருக்கிற  தொடர்பு பற்றி பெரும்பாலான பிரதிகள்  அணுகவேயில்லை என்பதை நாம் அவதானிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே ஒரு அரசியல் பிரதி என்ற அடிப்படையில் ஜெப்னா பேக்கரி பேச முனைந்த பார்வைக்கோணம் சார்ந்து அதற்கொரு முக்கிய பங்கிருக்கிறது. 

 

ஊர்காவல் படை நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை தொகுத்தலோ / அதன் தரப்பில் ஊர்காவல் படை எழுந்து வந்த பின்னணியை விரிவாக ஆராயவோ வேண்டும். இந்தப் பின்னணியில் ஜப்னா பேக்கரியில், உள்ள மொழி சார்ந்த மற்றும் விபரிப்பு முறை சார்ந்த குறைபாடுகளினால்,  அடிப்படையில் தேவையான நுட்பமான அவதானங்களும், தரவுகளும் பிரதியில் உருவாகி வரவில்லை. பொத்தம் பொதுவான அறிவில் கிடைக்கக் கூடிய தரவுகளை அடிப்படையாகக் கொண்டே ஊர்காவல் படை பற்றிய சித்தரிப்புக்கள் வருகின்றன. அதுவும் மூட்டமான நிலையில் கலங்கலாக.

 

27540587_1735329249864727_1589969147388902381_n.jpg

 

 

அத்தோடு ஜெப்னா பேக்கரியை ஒரு மையப் படிமமாகக்  கொண்டாலும், ஜெப்னா பேக்கரி ஒரு வலுவான படிமமாக கதைச் சூழலில் உருப்பெறவில்லை. பேக்கரியெனும் இடத்தை சித்தரிப்பதென்பது எத்தகையதொரு அனுபவம். பேக்கரியென்பது நினைவில் வாசனை. வாசனைகளுக்கு நினைவுகளைக் கிளர்த்தும் தன்மையுண்டு. அதே நேரம் வாசகரை  தன்னுடைய சொந்த அனுபவத்துடன் இணைத்து தனக்கு நெருக்கமானதொரு இடமாக அதை மாற்றியிருக்கவும் சாத்தியங்களிருக்கின்றன. ஆனால் கதையில் வரும் உதிரியான சித்தரிப்புகள், அதைச் சாத்தியமாக்கவில்லை. இதே போலவே, பிரதியின் பல கதாபாத்திரங்கள் நினைவில்த் தங்காது வெளியேறிவிடுகின்றனர். விரிவான அக உலகத்தை உருவாக்கியிருந்தால், பிரதியின் தன்மை மாறுபட்டிருக்கும். "கொசுணாமணியர்" என்ற பாத்திரம் வருகின்ற பகுதி மிக நேர்த்தியான விவரணைகளூடாக மனதில் நிலைக்கிறது. அதே போல் முஸ்லிம்கள் வெளியேறும் பகுதியிலும் சித்தரிப்பு நேர்த்தியிருக்கிறது. இவை தவிர பிரதியெங்கும் விக்கி விக்கி அல்லது விழுங்கி விழுங்கிக் கதை சொல்லும் போக்கே அவதானிக்க முடிகிறது. கலை, நுண்ணுணர்வை அதிகம் கோரும் நிகழ்தல். அதில் வாசு முருகவேல் கவனம் செலுத்த வேண்டும்.          

 

மேலும், வெறுப்பை விதைத்தலென்பது எல்லா தனிக்குழுக்களுள்ள  / பல்கலாசார சூழலில் உருவாகக் கூடிய நிலைமை தான். கலாசார வேற்றுமைகள் / மத ரீதியிலானதும் சமூகக் கட்டமைப்புச் சார்ந்தும் உருவாகக் கூடிய அந்நியத்தனமைகள் என்பன இணைந்து உருவாக்கக் கூடிய புற நிலைமை தான் தமிழ் - முஸ்லீம் உறவுச் சிக்கல். அதனை இலக்கியப் பிரதிகள் முன்வைக்கும் பார்வைக்கோணமென்பது பெரும்பாலும் எழுதுபவர்  தீர்மானிப்பது தான்.  

 

இன்று (யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்) முஸ்லிம்கள் தங்களுடைய வெளியேற்றம் தொடர்பான நினைவு கூரல்களை யாழ்ப்பாணத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் வெளியேற்றம் தொடர்பான ஒருவகைப்பட்ட ஞாபகங்களை மட்டுமே உருவாக்கும் போக்கு வலிமையாகும் வேளையில், ஈழத் தமிழ் அறிவுச் சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றம் தொடர்பில் மிகக் கடுமையான எதிர்வினையை விடுதலைப்புலிகளுக்கு ஆற்றியிருந்த போதிலும், இதுவரைக்கும் எந்தவொரு முஸ்லீம் எழுத்தாளரும் தங்களுடைய கதைகளிலும் பொது அரங்குகளிலும் "முஸ்லீம் ஊர்காவல் படை" நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்போ அல்லது கண்டனமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத வேளையில், விவாதங்களை தமது தரப்பிலிருந்து முன்னெடுக்காத வேளையில் இந்தப் புத்தகத்தின் வருகை ஞாபகத்தினை விவாதத்திற்குள்ளாக்கும் வேலையைச் செய்ய முடியும்.

 

முஸ்லீம் எழுத்தாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் சமூகத் தலைமைகளுக்கும் எவ்வளவுக்கெவ்வளவு தமக்கிழைக்கப்பட்ட அநீதிகளுக்கெதிராகப் பேச வேண்டிய பொறுப்பு உள்ளதோ. அவ்வளவுக்கவ்வளவு  சம பொறுப்பு தமது சமூகத்தினரால் பிற சமூகத்தினருக்கு  நிகழ்த்தப்பட்டிருக்கும் வன்முறைக்கெதிராக தமது சமூகத்திடம் விமர்சனத்தை முன்வைப்பதும், விவாதிப்பதும், அதற்கான பொறுப்பைக் கூட்டாக ஏற்கும் பொறுப்பும் உள்ளது. பிறர் செய்யும் தவறுக்கு நாம் எப்படி பொறுப்பேற்பது என்று தட்டிக்கழிக்கத் தேவையில்லை. எதிர்கால நோக்கில் சமூகங்கள் ஆரோக்கியமான அக ஜனநாயகத்தையும் புற ஜனநாயகத்தையும் உருவாக்குவதில் இந்த விவாதங்களிற்கு முக்கிய பங்குண்டு. அதுவே நீண்ட கால நோக்கில் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலை பற்றிய உரையாடலை திறந்த மனத்துடன் உருவாக்கும்.

 

இந்த விளக்கத்தின் பின்னணியில் ஜெப்னா பேக்கரியில் நேரடி அரசியல் நிகழ்வுகளை பிரதிக்குள் சித்தரிப்பதை விளங்கி கொள்கிறேன். ஆனால் சாட்சியம் இலக்கியத்தின் ஒரு வகை மட்டும் தான். அது வரலாற்றினதும் ஒரு பகுதி. ஆனால் கலையென்பது இரண்டையும் கடந்தது. அதுவொரு சாட்சியமோ வரலாறோ மட்டுமல்ல.

 

இலக்கியத்துள் அரசியல்  

 

முதலில் குறிப்பிட்ட மார்க்குவேசின் பிரதியை எடுத்துக்கொண்டால், ஒருவர் தன்னுடைய அம்மாவின் வீட்டினை விற்பதற்காக அம்மாவுடன் தான் வளர்ந்த வீட்டிற்குச் செல்கிறார். அங்குள்ள பால்ய நினைவுகளை நினைவு கூருவதன் வழி கொலம்பிய வாழ்வின் கலாசார, வாழ்வியல் மற்றும் அரசியல் நிலவரங்களை ஒன்றுடன் ஒன்று தழுவியும் பின்னியும் விரிந்தும் செல்லும் கதைகளின் தொகுப்பாக மாற்றுகிறார். ஆனால் அதுவொரு " Raw Material " . ஒரு மூலத் தரவு. 

 

61O-ltKJb9L._SX330_BO1%252C204%252C203%252C200_.jpg

 

 

மார்குவேஸைப் பொறுத்த மட்டில், அவர் தன் வாழ் நாள் முழுவதும் எழுதியெழுதி வந்தது பெரும்பாலும் ஒரே ஒரு கதையைத் தான். அது அவருடைய சொந்தக் கதை. அதில் அவரொரு கொலம்பியாவின் சாட்சி. அங்கு நிகழ்ந்த எல்லாவற்றுக்குமான ஒரு சாட்சி. படுகொலை - கம்யூனிசம் - காதல்  - பாலியல் என்று வாழ்வின் அனைத்துப் பக்கங்களையும் இணைத்துப் புரிந்து கொள்ள இடைவிடாமல் எழுதிக்கொண்டிருந்தார். 

 

அந்தப் பயணம் "தனிமையின் நூறு ஆண்டுகள்" என்ற மகத்தான நாவலுடன் உச்சமடைந்து. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு தங்கத்தை மண்ணிலிருத்தெடுத்து அதைக் கழுவிக் கழுவி ஒளியேற்றி அபூர்வமான ஒரு ஞாபகமாக மானுட நினைவில் மாற்றிவிட்டார்.  நூற்றாண்டுகளின் தனிமையில் நேரடி சாட்சியங்கள் மறைபொருளாயின. நேரடி அரசியல் அதன் உடலாகவிருக்கவில்லை. அதன் ஆன்மாவாகமாறிவிட்டது. அது உலகத்தின் காதுகளில் ஒலிக்கும் கொலம்பியாவின் படுகொலைகளையும் அதன் மனிதர்களையும் கொண்டு வந்து நிறுத்தும் கலையின் குரலாகியது. கலைக்கு மட்டும் தான் மானுடம் தழுவிய ஒரே குரலிருக்க முடியும். அது அரசியல் நிகழ்வுகளை புறமொதுக்குவதில்லை. தனது அரசியலை அது உலகத்தின் சகல ஒடுக்குமுறையிலுமிருக்கும் மக்களுக்கும் ஏதோவொரு அளவில் கொண்டு சேர்க்கும்.

 

csm_garcia_marquez__gabriel_f26894719d.jpg

 

 

"கதை சொல்வதற்காக வாழ்தல்" என்ற நேரடி சாட்சியின் குரலுக்கும் "தனிமையின் நூறு ஆண்டுகள்" என்ற கனிந்து முதிர்ந்த குரலுக்குமிடையிலான மாற்றம் தான் கலை. ஜெப்னா பேக்கரி, வாசு முருகவேலின் முதற் பிரதி. இதனை நேரடி சாட்சியின் குரலாகவே என்னால் மதிப்பிட முடியும். அதற்குமேல் அதுவொரு நாவலென்றோ குறு நாவலென்றோ என்னால் சொல்ல முடியாது.          

 

உலகம் முழுவதிலும் இடம்பெற்ற  புரட்சிகளினதும் யுத்தங்களினதும் பின்னர், உடனடியாக நிகழக்கூடிய நிலவரம், சாட்சியங்களை முன்வைப்பது தான். எல்லோருக்கும் சொல்வதற்கு ஏராளம் கதைகளிருந்தன. அவற்றை உடனடியாகப் பதிவு செய்ய நினைத்தார்கள். பெருமளவில் எழுதப்பட்டன. பின்னர் வரலாற்றின் குரல்களாயின. அவை பிறகுருவான கலைஞர்களின் மூலத் தரவுகளாயின.

 

இதனடிப்படையில், ஈழத்தமிழ் இலக்கியச் சூழலைப் பொறுத்த வரையில் மூலத் தரவுகளைக் கொண்ட பிரதிகளின் காலமாகவே  இந்தக் கால கட்டத்தைப் பார்க்கிறேன். இரண்டாயிரத்து ஒன்பதுக்குப் பின் எழுதப்பட்ட போருக்குப் பின்னரான இலக்கியத்தின் மையமான போக்குகளில் ஒன்றான, யுத்த கால ஞாபகங்களைத் தொகுக்கும் குணா கவியழகன் முதல் தமிழ்க்கவி வரையானவர்களை  மூலத்தரவுகளைப் பகிர்பவர்களாகவே பார்க்கிறேன். சயந்தன், ஷோபா சக்தி போன்ற இறுதி யுத்தத்தின் நேரடி சாட்சியங்களாக அல்லாதவர்களின் பிரதிகளில் தொழில்நுட்பமும் கதைகளின் தொகுப்புகளும் உள்ள அளவுக்கு அவை கலையாக மாறவில்லை. ஆனால் அவற்றிலும் இந்த Raw Material தன்மை உண்டு. 

 

ஆக கதைகளை சொல்வது தான் இப்பொழுதுள்ள மிக முக்கியமான வேலை. அது வரலாற்றில் நம் சந்ததிகளுக்கு நாம் விட்டுச் செல்லும் மானுடப் பேரனுபவங்களின் தொகுப்பு. ஈழத்தமிழர்கள், கடந்த முப்பது வருடத்திற்கும் மேற்பட்ட  தமது வாழ்வில் அனுபவித்தவை ஏராளம். அதுவொரு அரிதான வரலாற்றுக்கு காலம். அதனை எழுத்துக்களிலும் பிற கலைவடிவங்களிலும் நாம் வெளிப்படுத்த வேண்டுமென்பதில் எனக்கு மாற்றுக கருத்துக்களில்லை. ஆனால் அதற்காக இலக்கியத்திற்கான மதிப்பீடுகளை குறைத்துக்கொள்ள முடியாது. ஒன்று கலையில்லை என்றால் அதனை எவ்வளவு நம்ப வைக்க முயன்றாலும் அது முடியாது. 

 

 

 

 

 

இலக்கிய அரசியல் 

 

இந்தப் பிரதிக்கான முன்னுரைகளில் தொடங்குவது சரியென்று நினைக்கிறேன். ஒன்று லட்சுமி சரவணகுமார் எழுதியிருப்பது. மற்றையது வாசு முருகவேலின் குறிப்பு. 

 

லட்சுமி சரவணகுமாரும் வாசுவும் முன்னுரையில் சொல்லும் விடயங்களை இவ்வாறு புரிந்து கொள்கிறேன். 

 

* "இந்தியர்களுக்கு இலங்கைப் போரின் வரலாறு குறித்து என்ன தெரியும். ஏன் அவர்களுக்கு அதை எழுத இத்தனை அக்கறை? நாங்கள் அம்மண்ணில் வாழ்ந்தவர்கள். புலிகள் எமக்கு செய்த துரோகங்களை நாம் மட்டுமே அறிவோம். என ஈழப்போராட்டம் குறித்த உரையாடல்களின் உரையாடல்களின் போதெல்லாம் கேட்க முடிகிறது"

 

" உனக்கென்ன தெரியும் என எம்மை நோக்கி நீங்கள் விரல் எழுப்பும் முன் நீங்கள் எந்த அறத்தின் பக்கமாய் நிற்கிறீர்கள் என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்" 

 

லட்சுமிக்கு இந்த இடத்தில் ஒரு பதிலும் ஒரு கேள்வியும் உண்டு.

 

யாரும் தமக்குத் தான் எல்லாம் தெரியுமென்றோ. நீங்கள் எழுதவே கூடாதென்று சொல்லவோ முடியாது. ஆனால் நாசூக்காக, அப்படி இந்த விவாதங்களை செய்பவர்கள் விடுதலைப்புலிகளை நிராகரிப்பவர்களாகவும் அவர்களை துரோகிகள் என்றும் சொல்பவர்களாகவும் மாற்றி விடுகிறீர்கள். அதற்கு அடுத்த சில வரிகளிலேயே, நீங்கள் இப்படி சொல்வதற்கு காரணம் நீங்கள் நிற்கும் அறத்தின் பக்கம் தான் என்று நீங்கள் தியாகியாகிவிடுகிறீர்கள். இந்த தர்க்கத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? 

 

சின்னதொரு கேள்வியையும்  கேட்கலாம். முதலில், ஈழத்தமிழர்கள் தமிழக பதிப்பகச் சூழலில் நல்ல மூலதனம். அவர்கள் எழுதியது விற்குதோ இல்லையோ  அவர்களை நன்றாய் விற்க முடியும். ஏற்கனவே உலோகம் என்ற பெயரில் ஜெயமோகன் எழுதிய காவியத்தைப் படித்து நொந்து போயிருக்கிறோம். அரசியல் மேடைகளில் நல்ல பேச்சுத் தலைப்பாய் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கின்ற ஈழத்தமிழர்களில் ஒருவராய் எங்களை நீங்கள் விற்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்பது தான் கேள்வி. நீங்கள் குறிப்பிடுவது போல இந்தியா ஒரு சந்தை தான். நாங்களும் அதில் விற்பனைப் பொருட்கள் என்றால் வரக்கூடிய சாமானிய கோபம் தான் எங்களது. "திலீபன்" என்ற பெயரில் நீங்கள் நாவல் எழுதலாம். யாரும் தடுக்கப்போவதில்லை. ஆனால் திலீபனின் பெயரில் நாவல் வந்தால் அவரை ஒரு சந்தைப்பொருளாக மாற்றுவதையிட்டு நாம் கேள்வி கேட்கக் கூடாதா? அப்படிக் கேட்டால் நானொரு துரோகியென்றால். நல்லது இருக்கட்டும்.  

 

இந்த இடத்தில் வாசுவின் முன்னுரையில் உள்ள ஒரு பகுதியை மேலுள்ள தரவுகளுடன் இணைத்து வாசிக்கக் கோருகிறேன்.

 

"தற்காப்பு தாக்குதலும் ஆக்கிரமிக்கும் தாக்குதலும் ஒன்றல்ல. தற்காத்துக் கொண்டு போராடுவதன் தன்மை வேறுபட்டது. இது போலவே உள்ளிருந்து பார்ப்போரும் வெளியில் இருந்து வேடிக்கையாக பார்ப்போரும் ஒன்றல்ல. நான் உள்ளிருந்து எழுதினேன். வெளியே இருந்து நிறையவே எழுதப்பட்டுவிட்டது. அது எப்போதும் உண்மைக்கு வெளியேதான் இருக்கிறது."  

 

* அடுத்தது தனது குறிப்பில் ஒடுக்கப்படும் எழுத்தாளர்கள் என்ற அளவில் ஒரு பட்டியலை முன் வைத்திருக்கிறார்.

 

தீபச்செல்வனும், குணா கவியழகனும், தமிழ் நதியும், அகர முதல்வனும், வாசு முருகவேலும்... என்ற பட்டியலை முன்வைக்கின்றார். அவர்களுடைய குரல்களை  எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று சொல்லுமவர் இவர்கள் இலக்கிய மதிப்பீட்டில் அழகியல் தரம் சார்ந்து கடுமையாக விமர்சிக்கப்படக் காரணம் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாக "தமிழ்த்தேசியம்" இருப்பது தான் என்று நிறுவப்பார்க்கிறார். 

 

மேலே உள்ள இரண்டு பிரிவுகளான, இலக்கியம் நேரடி அரசியலை பேசுதல் என்பதையும் இலக்கியத்துள் அரசியல் எப்படி இருக்கும் என்பது பற்றியதான எனது மதிப்பீட்டை இரண்டு பிரதிகளினூடாக ஒப்பிட்டிருந்தேன். அதற்கு காரணம், ஒரு பிரதி தான் கொண்டிருக்கின்ற அரசியல் சார்பு நிலையினால் மட்டுமே கலையாக ஆக முடியாது. இந்தப் பட்டியலிலிருக்கும் நண்பர்கள் விமர்சிக்கப்பட்டார்களே தவிர நிராகரிக்கப்படவில்லை என்பதை ஈழத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருப்பவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்.  

 

நாம் மதிப்பீடுகளற்ற சமூகமாக இருக்க முடியாது. அரசியலொரு அளவு கோல் அதனால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் என்று தவறாகச் சொல்வதன் மூலம் அவர்களைத் தவிர சூழலில் இயங்கும் மற்றையவர்கள் "தமிழ்த்தேசியத்திற்கு எதிரானவர்கள்" என்ற தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. தமிழ்த்தேசியம் என்றால் மே பத்தொன்பதில் முகநூலில் "விளக்குப் படம்" போடுவது என்ற அளவில் உள்ள புரிதலொன்றும் தமிழ்ச் சூழலுக்குப் புதிதல்ல. ஏனென்றல் ஒரு உரையாடலில் நண்பரொருவர் குறிப்பிட்டது போல " தேசியம் என்றால் ஆமியைச் சுடுறது" என்ற புரிதலுடன் தான் பலரும் இன்றிருக்கின்றனர். 

 

தமிழ்த்தேசியம் தன் விரிந்த அர்த்தத்தில் அனைத்து உரையாடல்களுக்குமான, குறிப்பாக தமிழ்த்தேசியத்திற்குள் உள்ள சிறுபான்மைக் கருத்தியல்களுக்கும் முரண்பட்ட உரையாடல்களுக்குமான அக வெளியையும், பேரினவாத ஒடுக்குதல் நிகழும் போது ஒரே தளத்தில் நின்று தன் எதிர்ப்பையும் வெளிப்படுத்தும் புற அமைப்பையும் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ்த்தேசியத்தை அறிவார்ந்த தளத்தில் நின்று முன்னெடுக்க முடியும். தனக்குள் உள்ள பிற கருத்தியல்களை நிராகரிக்கும் அல்லது அழிக்க நினைக்கும் போக்கென்பது நபர்களை அழித்தாலோ நிராகரித்தாலோ முடியக்கூடியதொன்றல்ல.

 

இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும், யார் தமிழ்த்தேசியத்தை குத்தகைக்கு வைத்திருப்பதென்ற அடிபிடிகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரப்போவதில்லை. நாம் சிந்திக்க வேண்டியதும் உரையாட வேண்டியதும் எப்படி எந்தத்தளத்தில் சேர்ந்தியங்குவதென்றும், நாம் தொடர்ந்து உரிமை கோரும் தமிழ்த்தேசியமென்பது என்ன. அது வெறும் ஆமியைச் சுடுவதில்லையென்றும். அது ஒரு பேரினவாத அரசுக்கெதிரான சிறுபான்மையொன்றின் விடுதலைக்கருத்தியால் என்றும் தான்.       

 

இந்தப் பின்னணியில், இவர்கள் ஈழத்தமிழ்ச் சூழலில் புறக்கணிக்கப்படவில்லையென்பதற்கு நானுமொரு சாட்சியென்பதால் இதை பதிவு செய்கிறேன். குணா கவியழகனின் முதலாவது பிரதியான "நஞ்சுண்டகாடு" வெளிவந்த போது அதற்கு முதலாவது கூட்டம், யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. நான் அதில் பேசியிருந்தேன். பின்னர் அந்த உரை கட்டுரையாக தினக்குரலில் வெளிவந்தது. இரண்டாவது புத்தகத்திற்கும் யாழ்ப்பாணம் வாசகர் வட்டத்தின் சார்பில் அப்பொழுதைய அங்கத்தவர்களாக இருந்த நானும் எனது நண்பர்களும் கூட்டம் ஒழுங்குபடுத்தியிருந்தோம். அதிலும் நான் பேசியிருந்தேன். இன்னும் அடுக்கிக்கொண்டே போகாமல், தமிழ்நதியின் பார்த்தீனியம் தொடர்பிலும் ஏனைய கதைகள் தொடர்பிலும் கட்டுரைகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு சூழலில் விவாதிக்கப்பட்டது. தீபச்செல்வன் தொடர்பில் நீண்டகாலமாகவே சிற்றிதழ்களில் கட்டுரைகளில் அவரது பெயர் தவிர்க்கப்பட்டிருக்கவில்லை. அகரமுதல்வன் எழுத ஆரம்பித்தது அவர் மோசமாக நடந்து கொண்ட போது மிகக் கடுமையாக எதிர்வினையாற்றிருக்கிறோம். இதனை லட்சுமி செய்தாரா என்று தெரியாது. செயல் தான் முக்கியமானதென்று நினைக்கிறேன்.   

 

நிற்க.

 

இந்தப் பட்டியலில் உள்ள நண்பர்கள் மட்டுமல்லாமல் கீழே உள்ள பண்புகள் பொருந்திப் போகும் எல்லா ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கும் சில விஷயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   

 

தொடர்ச்சியாகப்  பலரதும் எழுத்துக்கள் தமிழ்நாட்டுச் சிற்றிதழ்கள், பேரிதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இலங்கையிலிருந்து வரும் இதழ்களில் இவர்களது எழுத்தாக்களைக் காண்பது அரிது. பதிப்பகங்களும் அப்படித் தான். இவர்களுடைய முதன்மையான வாசகர்கள் தமிழ் நாட்டு மக்கள் தான். ஆக, இவர்கள் யாருக்கு எழுதுகிறார்கள் - எங்கு எழுதுகிறார்கள் - தங்களுடைய மக்களுக்கு அதைக் கொண்டு வந்து சேர்க்க அவர்கள் செய்வது என்ன? வெறும் நாற்பது ஐம்பதோ புத்தகங்களை கொடுப்பது மட்டும் தான் செய்யக்கூடியதா? அதையும் இங்கு காவிக் காவி  விற்கும் இலக்கிய   நண்பர்களினால் மட்டுமே மக்களிடம் சேர்ப்பிக்க முடியும்.

 

நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை முதலில் தெளிவு படுத்துங்கள். அது தான் எங்கு எழுத வேண்டுமென்பதை தீர்மானிக்கும். இங்கும் சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏன் உங்களுடைய முதன்மையான தெரிவாக ஈழத்திலிருந்தோ - புலம்பெயர்ந்தோ வரும் ஈழத்தமிழர்களுடைய சிற்றிதழ்கள் இருக்கக் கூடாது. இவர்கள் தானே உங்கள் மக்கள் இவர்களுக்காகத் தானே நீங்கள் எழுதுகிறீர்கள். 

 

ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்று  சொல்லிக் கொள்ளும் எங்களிடம் சுயாதீனமாக இயங்கக் கூடிய வெகு சில பதிப்பகங்களே உண்டு. அவற்றில் பெரும்பாலானவை இன்று  சேடமிழுத்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை உயிர்ப்பித்து உங்களுடைய புத்தகங்களை பதிப்பிக்கும் முதன்மையான இடமாக ஈழம் ஏன் இருக்கக் கூடாது?  

 

தமிழ் நாட்டு மக்களையோ அல்லது அதன் இலக்கியத்துறையிலுள்ளவர்களையோ தவறானவர்கள் என்றோ மோசமானவர்கள் என்றோ சித்தரிக்கவில்லை. அவர்கள் ஒரு மைய நீரோட்டம் என்ற தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எந்த ஒரு தமிழ் நாட்டு எழுத்தாளரும் தானே முன்வந்து ஈழத்தில் வருகின்ற ஒரு சிற்றிதழில் எழுதியது நான் அறியாதது. அது  போன்றில்லாமல், சம மரியாதையுடன் நடந்து கொள்ளும் எழுத்தாளர்களும் சில பதிப்பக உரிமையாளர்களும் இல்லாமலில்லை.  ஆனால் பெரும்பாலான இதழ்கள் வழங்கும் வெளியென்பது, கோட்டா முறையில் வழங்கும் சலுகைச் சீட்டுகள் போல, ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்துக்கு வழங்கப்படும் இடம். நமக்குத் தேவை சுயமரியாதையுள்ள அங்கீகாரமே தவிர அனுதாப அங்கீகாரமல்ல.

 

நீங்கள் தீர்மானிக்க வேண்டியது, யாருக்குக் கதை சொல்ல வேண்டுமோ அவர்களுக்குச் சொல்லுவது. முதலில் அதை அவர்களுக்குக்  கிடைக்கச் செய்யுங்கள்.தமிழ் நாட்டு வாசகர்கள் எங்களுடைய கதையைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் எங்கள் புத்தகங்களை எங்கள் பதிப்புகளை எங்கள் சிற்றிதழ்களை வாங்கிப் படிக்கட்டும். எங்கள் கதையை நாங்கள் படிப்பதற்கு தமிழ் நாட்டிலிருந்தொரு பதிப்புத் தேவையில்லை. நாம் சுயாதீனமாக இயங்கும் தனித்த அடையாளமுள்ள மக்கள்.

 

கிரிஷாந்

 

(28 . 01 . 2018 இல் 'ஊறுகாய்' அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஜெப்னா பேக்கரி அறிமுக நிகழ்வில் வாசித்த உரை)

 

http://kirisanthworks.blogspot.co.uk/2018/02/blog-post.html?m=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.