Jump to content

புதியதோர் உலகம் செய்வோம்


Recommended Posts

புதியதோர் உலகம் செய்வோம் - சிறுகதை

விஜி, ஓவியங்கள்: ஷ்யாம்

 

06-11-2028

அனைவரின் உதடுகளும் `நிவேதா’ என்று ஏன் முணுமுணுக்க வேண்டும்? எல்லாத் தொலைத்தொடர்புச் சாதனங்களிலும் ஒரே நிகழ்ச்சி. உலக மக்கள் அனைவரது கவனமும் ஒன்றின் மீதே இருந்தது. கைப்பேசி, கணினி, தொலைக்காட்சி அனைத்தும் ஒரே நிகழ்ச்சியைப் பற்றியே கூறின. அனைவரின் சிந்தனைகளும் நிவேதாவைப் பற்றியதாகவே இருந்தன.

ஒட்டுமொத்த உலகமும் சாதி மத இன பேதமின்றி நிவேதாவின் பெயரை உச்சரித்துக்கொண்டிருந்தது. மனிதகுலம் முழுவதற்கும் இது ஒரு முக்கியமான சவாலாக இருக்கும்போது ஒன்றுகூடியிருப்பதில் வியப்பு ஏதுமில்லை. கடந்த மூன்று மாதங்களில் கூகுள் தேடலில் முதல் இடத்தைப் பிடித்தது நிவேதாவின் பெயரே!

புலனம், முகநூல், முத்திரட்சி மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பங்களையும் தாண்டி ஏன் இந்த நிகழ்வுக்கு இத்தனை முக்கியத்துவம் என அறிய, கூகுள் தேடலில் சிக்கியது.

கூகுளில் (2015-2028)

p86f_1516190404.jpg

05-03-2015

நிவேதாவின் உலகமும் மற்ற தொடக்கப் பள்ளியினரைப்போல் பெரிய கவராயம் கொண்டு வரையும் வட்டம் அளவே இருந்தது. அம்மா ரம்யா, இயற்பியல் ஆசிரியர். அப்பா அரவிந்த், விமான ஓட்டுநர். நிவேதா,  உயர்நிலை 2 படித்துக்கொண்டிருந்தபோது அப்பா ஓட்டிச் சென்ற விமானம், அமெரிக்கா செல்லும் வழியில் மாயமாகிவிட்டது. அரவிந்தின் இழப்பு, ரம்யாவுக்கும் நிவேதாவுக்கும் பேரிடியாக இருந்தது. இழப்பிலும் ரம்யா சோர்ந்துவிடாமல் நிவேதாவுக்குத் தமிழ்மொழியையும் பண்பாட்டையும் இயற்பியலோடு  ஊட்டி  வளர்த்தார்.

இரண்டு பேருந்து நிறுத்தங்கள் அளவு இடைவெளிக்குள் பயணித்தால், நிவேதாவின்  கல்வி உலகத்தைப் பார்த்துவிடலாம். க்ளமெண்டி ரயில் நிலையம் அருகில் உள்ள வீடமைப்புப் பேட்டையில் பத்தாவது தளத்தில் வீடு. க்ளமெண்டி தொடக்கப் பள்ளி, நூல் நிலையம், விளையாட்டு மையம் எல்லாமே மிக அருகிலேயே அமைந்திருந்தன. தேசியப் பல்கலைக்கழகப் பள்ளி்யில் உயர்நிலைப் படிப்பு. பிறகு தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பு. சமூக அக்கறையும் சாதிக்க நினைத்த சிந்தனையும் அவளை அந்தப் படிப்பைப் படிக்கத் தூண்டின. மிக அருகிலேயே எல்லாம் அமைந்தது என்றாலும், படித்த இடங்கள் தரத்தில் முதன்மையானவை.

மிகவும் பிடித்த பொழுதுபோக்குத் தளம், அருகில் உள்ள மேற்குக் கடற்கரைதான். இரவில் நட்சத்திரங்களைப் பார்க்கும்போது தன்னையே மறந்துவிடுவாள் நிவேதா.

``என்ன நிவேதா, வானத்தையே பார்த்துக்கிட்டு இருக்க?”

``இந்த நட்சத்திரங்கள் இருக்கிற இடத்துக்குப் போகணும். இன்னிக்கு செய்தியில் மார்ஸ் பற்றிச் சொன்னாங்களே, அதை நினைச்சிட்டிருந்தேன்.”

``ஆமாம் நிவேதா... அதெப்படி இந்த உலகத்தை விட்டு வேறொரு கிரகத்துக்குப் போக முடியும்?’’

``ஆராய்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணிக் கிறதுல தப்பில்லையே! அம்மா, நானும் அந்த ஆராய்ச்சியில் பங்கெடுக்க நீங்க அனுமதிக்கணும்.”

முடிப்பதற்குள் அம்மா ``ஒரே பொண்ணை... எப்படிம்மா?”

``தயவுசெஞ்சு அம்மா, நான் நிறைய திட்டங்கள் வெச்சிருக்கேன்.”

தான் பிறந்த இனத்துக்கும் மொழிக்கும் உலக அரங்கில் பெருமை சேர்த்திட வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட நிவேதா, வேடிக்கை மனிதர்போல சின்னஞ்சிறு கதைகள் பேசி வீழ்ந்திடத் தயாராக இல்லை. கடுமையான போராட்டம் இன்றியே, தன்னைப் புரிந்துகொண்ட அம்மாவின் சம்மதத்தைப் பெற முடிந்தது.

p86e_1516190422.jpg

12-10-2016

இளவயது விண்ணப்பதா ரராக நுழைந்தபோது நிவேதாவுக்கு 19 வயது. முதல் சுற்றில் 65,000 பேர் போட்டி யிட்டனர். கணினி வழி நேர்முகத்தேர்வில் 700 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வுபெற்றனர். அதில் நிவேதாவும் ஒருவள். நிவேதாவால் மருத்துவப் படிப்பை இரண்டு ஆண்டுகளே தொடர முடிந்தது. கடுமையான குழு சோதனை, மருத்துவச் சோதனைகளுக்குப் பிறகே 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிலிருந்து வாக்களிப்பில் 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் நான்கு நான்கு பேர்களாக ஆறு குழுக்கள் பிரிக்கப்பட்டன. பயிற்சியில் ஒருமித்த கருத்துடையவர், உடல்வலிமை, தனித்திறன், உடல் வேதியியல் மற்றும் இன்னும் சில தகுதிகளின் அடிப்படையில் குழுக்கள் பிரிக்கப்பட்டன .

சிங்கப்பூரைச் சேர்ந்த நிவேதா, கனடாவைச் சேர்ந்த கபிலன், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன், பிரான்ஸைச் சேர்ந்த லிசா. கபிலன் மண்ணியலிலும், ஸ்டீபன் பொறியியலிலும்,  லிசா உயிரியலிலும் தேர்ச்சிபெற்றவர்கள். தனி அறையில் இருத்தல், இருட்டில் தனியாக இருத்தல், பசி, பட்டினியைப் பொறுத்துக்கொள்ளுதல், உடலுக்கும் மனதுக்கும் வலிமை சேர்க்கும் பயிற்சிகள், சூறாவளிக் காற்றை எதிர்கொள்ளல் எனப் பல பயிற்சிகள். செவ்வாயில் அடிக்கடி மணல் சூறாவளி வீசும். அதன் காலநிலையை ஏற்று வாழ்வதற்கான பயிற்சிகள் இருந்தால்தான் அங்கே வாழ முடியும்.

நால்வருக்குமே அடிப்படைத் தொழில்நுட்பப் பயிற்சி, அடிப்படை மருத்துவப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. கபிலன் மற்றும் ஸ்டீபனுக்கு தொழில்நுட்ப நிபுணத்துவமும், நிவேதா மற்றும் லிசாவுக்கு மருத்துவ நிபுணத்துவமும் வழங்கப்பட்டன. ஸ்டீபனும் லிசாவும் நாற்பது வயது நிரம்பியவர்கள். எந்தக் குழுவுக்கு உலகளாவிய அளவில் முதல் இடத்தில் வாக்குகள் கிடைக்கின்றனவோ அவர்கள் ஒன்பது ஆண்டுகள் கழித்து 2026-ம் ஆண்டில் முதலில் செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பப்படுவர்.

02-01-2018

முதல் நாள் பயிற்சியின்போதுதான், நிவேதா முதன்முதலில் கபிலனைப் பார்த்தாள். தூக்கலான சிவப்பு நிறம், பார்வையில் தீர்க்கம், ஆறடி உயரம், தெளிவான கம்பீரமான முகம் விவேகானந்தரை நினைவுபடுத்தியது. பயிற்சி நாள்களில் பேசுவதற்கு நேரம் கிடைக்காது. பயிற்சிகள் மிகக் கடுமையாக இருந்தன. கபிலன் அப்பா, கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழர். அனைவரும் பங்குபெற்ற விழா நிகழ்ச்சியில் தத்தமது நாட்டைப் பற்றியும் மொழியைப் பற்றியும் பேசும்போது கபிலன் பேசியது இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது. `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என கணியன் பூங்குன்றனார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் கூறியதையும், தொன்மையான மொழிகளின் ஆய்வு பற்றிப் பேசியதும் அனைவரும் ஒட்டுமொத்தமாகக் கரவொலி எழுப்பினர். அதுவே கபிலனுடன் நிவேதாவை நெருக்கமாக்கியது. கபிலனும்  ஒருமித்த கருத்துடைய நிவேதாவுடன் பிரபஞ்சத்தை ரசிக்கத் தயாரானான்.

p86c_1516190442.jpg

23-09-2018

நிவேதா, மார்ஸ் ஒன்று அமைப்பின் தலைமை நிர்வாகி மார்க்கிடம் மனித ஆய்வாகத் தன்னையே உட்படுத்த அனுமதி கேட்டாள்.

``ஆய்வு வெற்றி பெற்றால், மனிதவளம் பல முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம்” நிவேதா.

அதற்கு மார்க் ``இதற்கு 15 அமைப்புகளின் அனுமதி தேவை. இதற்கான ஆய்வுகளையும் பயிற்சியின்போதே செய்ய, கடுமையாக உழைக்க வேண்டும்.”

``அனுமதிக்காகத்தான் காத்திருக்கிறேன்…” நிவேதா.

``உங்களுக்காக முயல்கிறேன்” மார்க்.

``இதன் முடிவுக்கு நான் பொறுப்பேற்கிறேன்” நிவேதா.

அதனால் நிவேதாவும் லிசாவும் பயிற்சியின்போதே அதே சூழ்நிலை யின் மாதிரியில் எலிகளிடம் ஆய்வுசெய்து வெற்றிபெற்றனர்.

மூன்று ஆண்டுக்காலம் பல அமைப்புகளுடன் ஆலோசித்த பிறகு, மார்க் அனுமதி வழங்கினார்.

24-04-2026

செவ்வாய்க்கு அனுப்பும் முதல் குழுவுக்காக உலக அளவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் குழுவாகத் தேர்வுபெற்றபோது விண்ணுக்கே எகிறிக் குதித்தாள் நிவேதா. அதை அம்மா ரம்யாவிடம் கூறினாள். மனித இனம் செவ்வாயில் குடியேறுவதற்கு,  தன் மகள் உலக வரலாற்றில் முதன்முறையாகப் பயணமான போது வார்த்தையால் கூற முடியாத பேரனுபவமாக உணர்ந்தாள் ரம்யா.

செவ்வாயில் முன்னரே தயார்செய்யப்பட்ட வீட்டில் நால்வரும் குடிபுகுந்தார்கள். உலகத்தை விட்டு வந்தாலும் நமக்குப் பிடித்தவருடன் எங்கு இருந்தாலும் அந்த இடம்  பிடித்துவிடுகிறது. சிறிய ஓய்வுக்குப் பிறகு செய்யவேண்டிய வேலையை நால்வரும் திட்டமிட்டுப் பங்கிட்டுச் செய்தனர்.

ஏற்கெனவே தண்ணீரும் உணவும் கொண்டுவரப்பட்டிருந்தன. அது தீருவதற்குள், பாறைக்கு அடியில் உறைநிலையில் உள்ள நீரை எடுப்பதற்குத் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும். விண்கற்கள் பல விழுந்துகொண்டே இருப்பதால், அதிலிருந்து இரும்பு மற்றும் பிற தாதுப்பொருள்களைப் பிரித்தாக வேண்டும். அதற்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள், உடற்கவசங்கள், ஆக்ஸிஜன் உருளைகள் மற்றும் பல கருவிகள் ஏற்கெனவே வரவழைக்கப் பட்டிருந்தன.

ஆக்ஸிஜனுக்காகவும் உணவுக்காகவும் நீரில் வளரும் தாவரங்களை வளரச் செய்ய வேண்டும். ஏனெனில், செவ்வாயின் மணலில் கடினத் தாதுக்கள் காய் மற்றும் கனிகளில் உட்புகுவதால் உண்பதற்கு ஏற்றதாக இல்லை. அதைப் பிரித்து கதிரியக்கத்திலிருந்து பாதுகாக்க தாவரங்களை கிரீன் ஹவுஸ் முறையில் வளர்க்க வேண்டும். அதற்காகவே மகரந்தச்சேர்க்கைக்குப் பயன்படும் வண்டுகளையும் கொண்டுவந்திருந் தார்கள். இத்தனை வேலைகளுக்கிடையிலும் தன்னுடைய ஆய்வில் உறுதியாக இருந்தாள் நிவேதா.

உலகத்தோடு தகவல் தொடர்பும் செய்யப்பட்டிருந்ததால் அம்மாவுடன் பேச முடிந்தது. அம்மா திறன்பேசியில் (smart phone) ஆசி வழங்க, திட்டமிட்டபடி செவ்வாயின் இரண்டு நிலாக்களின் சாட்சியாக நிவேதாவும் கபிலனும் மணம் முடித்துக் கொண்டனர்.

p86d_1516190467.jpg

23-09-2027

அன்றைய வேலை பற்றி நால்வரும் விவாதித்து முடித்த நிலையில் எல்லாத் தொழில்நுட்பக் கருவிகளிலிருந்தும் விநோதமான சமிக்ஞைகள் வந்தன. சமிக்ஞைகள் ஒரு வருடமாகவே உணரப்பட்டாலும், இப்போது மிக அதிக அளவில் இருந்தன.

லிசா, சமிக்ஞைகள் ரேடாரில் அந்தக் கிரகத்திலிருந்தே வருவதைக் கண்டறிந்தாள். நால்வரும் ரேடார் பாதையைத் தொடர்புகொள்ளப் பல முறை முயன்றனர். வேற்றுக் கிரகவாசிகளாக இருந்தால், எப்படிக் கையாள்வது என விவாதம் நடத்தப்பட்டது.

ஸ்டீபனுக்குத் தொடர்பு கிடைக்க ``நீங்கள் யார், செவ்வாயின் இந்தப் பகுதிக்கு எப்படி வந்தீர்கள்?”

அந்த முனையில் ``நாங்கள் 130 பேர் விமானத்தில் பயணித்தோம். இங்கே உள்ள குகையில் சில காலங்களாக இருந்துவருகிறோம். எங்களில் சிலர், இப்போது உயிருடன் இல்லை. எத்தனை வருடங்கள் எனத் தெரியவில்லை. 2011-ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு அருகில் பர்முடா முக்கோணத்தில் விமானத்தில் வந்தபோது தடைசெய்யப்பட்ட பகுதியில் நுழைந்தது. அங்கு இருந்த மிதவெப்பத் துளை வழியாக மூன்று மணி நேரம் பயணித்து இந்தக் குகையை அடைந்தோம். இங்கே வந்ததும் சமிக்ஞை இல்லாமல் போய்விட்டது. பலமுறை நானும் என்னுடன் இருக்கும் சில ஆய்வாளர்களும் செய்த முயற்சியால் உங்களைத் தொடர்புகொள்ள முடிந்தது.”

``இத்தனை வருடங்களாக எப்படி? உணவுக்கு என்ன செய்கிறீர்கள்?” - நிவேதா.

``இந்தக் குகையில் உள்ள குளமும் அதில் உள்ள நீர்வாழ் உயிரினங்களும்தான் நாங்கள் உயிர் வாழக் காரணம்.  என் பெயர் அரவிந்த். விமானத்தை நான்தான் ஓட்டி வந்தேன்.”

நிவேதாவால் பேச முடியவில்லை. சில நிமிடம் மௌனித்து… ``அ..ப்..பா! நான் நி..வேதா. உ..ங்கள் மகள்.”

``நி..வே...தா... நீ எப்படி இங்கே வந்தாய்?” அரவிந்த்.

p86b_1516190519.jpg

``பூமியிலிருந்து நாங்கள் நால்வரும் ஆராய்ச்சிக்காக இங்கு வந்துள்ளோம். நிறுவனத்திடம் பேசிவிட்டு உங்களுக்குத் தேவையானவற்றை வேறொருவரிடம் கொடுத்தனுப்புகிறோம்.”

“அந்தக் குகையை ஏன் விண் ஓடத்தால் பதிவாக்க இயலவில்லை?” ஆச்சர்யத்தில் கபிலன்.

நாசா மற்றும் பிற அமைப்புகளுடன் பின்னர் நடந்த ஆய்வின் முடிவில், அந்தக் குகையின் பாறையில் உள்ள தாதுப்பொருள்கள் விண் ஓடத்தின் ஒளிக்கதிர்களைத் தடுப்பது தெளிவானது. மேலும், குகையிலிருந்து வெளியே வந்து ரேடாரில் தொடர்புகொண்டாலும் பழைய தொழில்நுட்பம் என்பதால், செவ்வாய்க்கிரகத்துக்குள் மட்டுமே வேலைசெய்தது. எது எப்படியோ, ரோவர் கொண்டு சென்று கொடுத்த மெய்நிகர் தொழில்நுட்பத்தின் உதவியால் அரவிந்தைக் காண முடிந்தது.
நிவேதா, அப்பாவை அருகே முத்திரட்சியில் பார்த்தபோது பிரபஞ்சமே தன் உள்ளங்கையில் இருப்பதுபோல் உணர்ந்தாள். பூமியின் ஒட்டுமொத்த இன்பத்தையும் ஒரு நொடியில் அனுபவித்த உணர்வு. செவ்வாயை விரைந்து அடைய, `மிதவெப்பத் துளை’ எளிய வழியாக இருந்தது. ஆனாலும் குகையிலிருந்து வெளியில் வாழ, பயிற்சியளிக்கப்பட வேண்டும்.

p86a_1516190541.jpg

02-02-2028

மார்க்கிடம் உறுதியளித்தபடி நிவேதா தன்னையே ஆய்வுக்குள்ளாக்கி வெற்றி பெற்றாள். செவ்வாயின் ஈர்ப்புவிசை பூமியிலிருந்து வேறுபட்டது. அதாவது, பூமியில் 100 கிலோ இருந்தால் செவ்வாயில் 38 கிலோதான் இருக்கும். அதனால் குழந்தை பெற முடியாது எனக் கூறியிருந்தனர். செவ்வாய்க்கிரகம் சூரியனை முழுவதும் சுற்ற, இன்னும் 200 நாள்கள் இருந்தன. நிவேதா தனக்குள் `ஓர் உயிரை’ இல்லை ஒரு `புதிய உலகத்தை’ உணர்ந்தாள். பிறக்கும் குழந்தைக்கு `தமிழ்’ என்று பெயர் சூட்ட முடிவுசெய்தனர். ஆனால், அதில் வெற்றிபெற இன்னும் நிறைய சோதனைகளைக் கடந்தாக வேண்டும்.

06-11-2028

கபிலனையும் நிவேதாவையும் `செவ்வாய்க்கிரகத்தின் ஆதாம், ஏவாள்’ என உலகச் சரித்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஒன்பது மாதங்கள் ஓடியதே தெரியவில்லை. செவ்வாயில் `தமிழை’ப் பிறக்கவைக்க சோதனைகளைச் சாதனைகளாக்க முயன்றாள். மனிதகுலத்தின் மைல்கல்லான இந்த நிகழ்வுக்குத்தான் அனைவரின் எதிர்பார்ப்புகளும் பரபரப்பின் உச்சத்தில் இருந்தன. செவ்வாய், தன்னுடைய சுற்றுவட்டப் பாதையில் பூமியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள இடைவெளி குறைந்துகொண்டே வந்தது. அனைவரின் உதடுகளும் `நிவேதா’ என்று முணுமுணுத்தது.

p86_1516190498.jpg

22-12-2011

கூகுளில் இல்லாத செய்தி. ஏன்... நிவேதாவுக்கும் தெரியாத செய்தி!

அரவிந்த் விண்வெளி ஆராய்ச்சியில் மிகவும் ஈடுபாடு உடையவர். அதனாலேயே இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற ரம்யாவைத் திருமணம் செய்தார். மிதவெப்பத் துளை பற்றிய ஆராய்ச்சியைச்  செய்துவந்தார். அதற்கான தொழில்நுட்பத்தை ரேடாரில் தெரியும்படி வீட்டிலேயே ஆய்வுக்கூடத்தை அமைத்திருந்தார்.

பர்முடா முக்கோணத்தின் வான்வழிப் பாதையில் விமானங்கள் பறந்தால் மாயமாகிவிடுகின்றன. அதனால் அந்தப் பகுதி தடைசெய்யப்பட்டிருந்தது. மின்காந்த அலைகள் செல்ல முடியாததால்,  அதைப் பற்றிய ஆராய்ச்சிக்கும் தடைசெய்யப்பட்டிருந்தது. அவை மிதவெப்பத் துளையாக இருக்கலாம் என, அரவிந்த் தன்னுடைய வானியல் ஆராய்ச்சியில் கண்டறிந்தார். முக்கோணவியலின்(Trigonometry)படி அந்த மிதவெப்பத் துளை செவ்வாய்க்கிரகம் வரை நீண்டிருப்பதை ரம்யாவிடம் விளக்கினார். அது செவ்வாயை அடைய எளிய வழி என்பதை உணர்ந்தார். பர்முடா முக்கோணம் ஆராய்ச்சிக்குத் தடைசெய்யப்பட்டிருந்ததால், அரவிந்தால் நிரூபிக்க முடியவில்லை.

விமானம் மாயமாவதற்கு முதல் நாள் ஆராய்ச்சியை நிரூபிக்கப்போவதாக அரவிந்த், ரம்யாவிடம் கூறினார். செவ்வாயில் எந்தச் சிக்கலும் இல்லையென்றால், உடனே திரும்பிவிடுவதாக வாக்குறுதி கொடுத்தார். ரம்யா அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

வெற்றியுடன் சென்றுவருவதாக ரம்யாவின் சம்மதம் இல்லாமலேயே அரவிந்த் கிளம்பினார். ஆனால், விமானம் மாயமான செய்தி வந்தது. சில வருடங்களாகியும் விமானம் திரும்பி வரவேயில்லை. அரவிந்த், செவ்வாயில் உயிருடன் இருப்பதாகவே ரம்யா நம்பினாள்.

அப்போதுதான் மார்ஸ் ஒன்று பற்றிய செய்திகள் வந்தன. எப்படியும் ஒருநாள் அரவிந்தை பூமிக்கு அனுப்ப முடியும் என நிவேதாவை செவ்வாய்க்கு அனுப்பினாள்  இருவழிப் பயணத்தின் ரகசியம் அறிந்த ரம்யா!

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.