Sign in to follow this  
கிருபன்

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா?

Recommended Posts

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? பகுதி 1

T3 Lifeஜனவரி 18, 2018

ப. ஜெயசீலன் 

“ஓடுகின்ற காளையின்மேல்
லாவகமாய்
தாவுகின்ற வித்தையை
வீரமென்று பிதற்றுகின்ற மூடரே
காளையின் கூர்கொம்பு
குதத்தை கிழிக்க தேடுகையில்
புழுதியில் புரள்வது எதனாலோ ?”

மெரினாவில் நிகழ்ந்த தமிழக மக்களின் கும்பமேளா போன்ற ஒன்று கூடல் தீவிரமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. மக்களின் உணர்வுகளை எவ்வளவு எளிதாக ஊடகங்களால் தூண்டிவிடமுடியும் என்பதற்கும், மக்களின் தர்க்கமில்லாத அரசியல்மயப்படுத்தப்படாத  உணர்ச்சிவேகத்தை சில தற்குறிகள் சில்லறைகள் எவ்வளவு எளிதாக பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதற்கும்(திருமுருகன் காந்தி போன்ற மக்கள்  போராளிகளை சொல்லவில்லை), மக்களின் உணர்ச்சிவேகத்தை ஆட்சி அதிகார மையம் எப்படி ஒரு குரங்கை போல ஆட்டுவித்து கடைசியில் வேலை முடிந்ததும் கூட்டத்தை கலைத்து விடும் என்பதற்கும், ஆதிக்கசாதிகளின் அரிப்புக்கு எப்படி அப்பாவி தலித்துகள் சொரிந்து விட தமிழ் தேசிய போர்வையில் நிர்பந்திக்கப்பட்டார்கள் என்றும், மறுத்தவர்கள் எப்படி தலித் சாதி வெறியர்களாவும்!!!!!!, தமிழ் தேசிய விரோதிகளாவும் கட்டமைக்கப்பட்டார்கள் என்றும், எப்படி வெகு சிலரின் பில்டர் காபியும்,கர்நாடக இசையும் தமிழக அடையாளம் என்று நம்பப்படுகிறோதோ, அதே போலவே சில ஊர்களில் சில சாதிகளின் நவீனமடையாதா சல்லிக்கட்டு alias ஏறு தழுவுதல்(தக்காளி ஏறுக்கு தமிழ் புரிஞ்சா மேல ஏறி ஜம்ப் பண்றத தழுவுதல் அப்படினு சொல்றதுக்கே குதத்தில் குத்தி கிழிக்கும்) தமிழரின் கலாச்சாரமாக!!!!!! நிறுவப்பட்டதும் என ஜல்லிக்கட்டு போராட்டத்தை சுற்றிலும் நடந்த கோமாளித்தனங்களை, பொறுமையாக அசைபோட்டல் அயற்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.

மெரினா கேம்ப்பிங்கில் கலந்து கொண்டவர்களின் வாதம் பொதுவில் “தமிழரின் வீர விளையாட்டு” “தமிழரின் கலாச்சாரம்” “தமிழக விவசாயத்தை/கால்நடைகளை அழிக்க துடிக்கும் மேற்கத்திய சதி” என்பதை சுற்றியிருந்தது. மூன்று வாதங்களிலும்  பொதுவாகயிருக்கும் “தமிழர்/தமிழக” என்ற சொல்லாடல் கவனத்துக்குக்குரியது. ஒரே வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு,மிளகாய்,கொத்தமல்லி தூள்,உப்பு வைத்து சமைக்கபடும் பதார்த்தங்கள் கொங்கு நாட்டு சமையல் என்றும், செட்டிநாடு சமையல் என்றும், நாடார் சமையல் என்றும் வெவ்வேறு பெயர்களில் அழைப்பதை நாம் அறிவோம்.  நமது தாய்  செய்யும் ரசமே இன்று ஒரு மாதிரியும் நாளை ஒருமாதிரியும் இருக்கிறது. இப்படி இருக்க எதோ ஒரு பிராந்தியத்தில் ஒரு சாதியினர் சமைக்கும் பதார்த்தம் எல்லா வீடுகளிலும் ஒரே சுவையோடு standard operating procedure கொண்டு இருப்பதைபோன்றும், என்னவோ red wine, asparagus, thyme,rosemary போன்ற வித்தியாசமான ingredients பயன்படுத்தி தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு சாதியும் சமைப்பதைபோன்றும் திங்கும் சோற்றுக்கே வட்டார/சாதிய லேபிளோடு உலாவ விட கூடிய “தமிழர்”, ஏன் சல்லிக்கட்டு போராட்டத்தில் டக்கென்று சீமானை போல “நாம் தமிழர்” என்று எல்லோரும் ஒன்றாக கைகள் உயர்த்தினார்கள்? பின்னால் இதைப்பற்றி பேசுவோம்.

அதற்கு முன்பு வீரம்(valour) என்றால் என்ன ? ஆங்கில டிக்ஸ்னரி தரும் விளக்கம் “ஆபத்தான நேரத்தில்/இடத்தில வெளிப்படும் தைரியம்”. நூற்றுக்கணக்கான பேர் கரோ  முரோ என்று கத்தி கொண்டு கூடி நிற்க, ஒற்றையாளாக அந்த ஆபத்தை சந்திக்க வெளிப்படும் காளையினுடையது வீரமா அல்லது மிரண்டு ஓடும் அந்த காளையின் பக்கவாட்டில் வம்படியாக எகிறி குரங்கு சேஷ்டை செய்து சில நொடிகள் தொங்கிவிட்டு விடுவதோ,இதற்கிடையில் கொம்பில் குத்துவாங்குவதும், குத்துவாங்குவதை தவிர்க்க தரையில் விழுந்து புரள்வதும் வீரமா? தமிழருக்கு “வீரத்தின்” மீது அப்படி என்ன ஒரு பிடிப்பு பற்று சிலிர்ப்பு? இந்த சிலிர்ப்பு ஏன் அறிவின் மீதோ நீதியின் மீதோ, சமத்துவத்தின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ ஏற்படுவதில்லை? எந்த பெயர்/வினை  சொல்லாகயிருந்தாலும் முன்னாடி வீரத்தை சேர்த்து கொள்வது என்ன மாதிரியான மன நோய் ? வீர வன்னியர், வீர மறவர், வீர கவுண்டர் என்று விளிப்பதிற்கு பதில்  ஏன் அறிவு வன்னியர் என்றோ,  நீதி தேவர் என்றோ, சமத்துவ கவுண்டர் என்றோ அடைமொழி இட்டுக்கொள்வது அவர்களுக்கு ஒரு கிளுகிளுப்பாக இல்லை? anyway இட்லியில் பொடி தொட்டு சாப்பிடுவர்கள் கூட வீர இட்லி பொடி சாப்பிடுவோர் சாதி என்று பிதற்றும் நம் ஊரில் குரங்கு வித்தை வீர விளையாட்டு என்று நம்பப்படுவதில் ஆச்சரியம் இல்லை.

உண்மையில் சல்லிக்கட்டு விளையாட்டு ஒரு பொழுதுபோக்கு சார்ந்த சாகச விளையாட்டு. சல்லிக்கட்டு போலவே ஸ்பெயினிலும், மெக்ஸிக்கோவிலும், போர்ச்சுகல் போன்ற நாடுகளிலும் நடக்கும் bull fight அப்படித்தான் அந்த நாடுகளில் பார்க்கப்படுகிறது/அணுகப்படுகிறது/முன்னிறுத்தப்படுகிறது. பஸ்சில் ஓடிவந்து ஏறுவதும், கிட்னி guard போடாமல் தெருவோர கிரிக்கெட்டில் ஸ்வீப் ஷாட் முயற்சிப்பதும், எக்ஸாமில் பிட் அடிப்பதும் என்று சின்ன சின்ன சாகசங்களும் , ஸ்கை டைவிங், பங்கி ஜம்ப் போன்றான கொஞ்சம் பெரிய சாகசங்களையும் போல bull  fight என்பது ஒரு நிகழ்த்து சாகச கலை.எப்படி பஸ்சில் ஓடி வந்து ஏறும் சாகசம் ஒரு போதும் வீரம் என்ற வகைமைக்குள் வராதோ அதே போல காளை மாட்டின் மீது ஜம்பிங் செய்வதும் வீரம் என்ற வகைமைக்குள் வராது. ஆனால் காட்டுமிராண்டி கூட்டம் கூடி நின்று திகுலூட்டிய பின்னாலும் தைரியமாக ஒற்றையாளாக களமாடும் காளையின் வீரம் போற்றுதலுக்குக்குரியது.

Global Association of International Sports Federations அளித்திருக்கும் விளக்கத்தின்படி/வரையரையின்படி ஒரு விளையாட்டு என்பது மனித உடல் வலிமை சார்ந்தோ/மூளை சார்ந்தோ/வாகனங்கள் சார்ந்தோ/விலங்குகள் சார்ந்தோ
1) போட்டியிடுதலுக்கான/போட்டிக்கான வாய்ப்பிருக்கவேண்டும்
2) உயிருள்ளவை எதற்கும் தீங்கிழைக்கா தன்மை கொண்டிருக்க வேண்டும்
3) ஒரே ஒரு குறிப்பிட்ட நபரோ/நிறுவனமோ அளிக்கும் உபகரணங்களை சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும்
4) “அதிர்ஷ்டம்” சார்ந்த எந்த காரணிகளும் அந்த விளையாட்டின் ஒரு பகுதியாக இருக்க கூடாது. மேல் சொன்ன வரையரையின்படி சல்லிக்கட்டில் இரண்டு இளைஞர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றால் அவர்களுக்கிடையில் போட்டியிடுதலுக்கான வாய்ப்பு என்ன? ஒரு இளைஞன் 90 கிலோவும் 6.5 அடி உயரமும் இருக்கிறார் என்றால் இன்னொருவர் 100 கிலோ 5 அடி உயரமும் இருக்கிறார். ஒரு காளை வெளிவந்தவுடன் நான்கைந்து பேர் அந்த 100 கிலோ இளைஞர் முதற்கொண்டு அதன் மீது தாவ வழுக்கி ஓடும் காளையின் மேல் நல்ல வசதியாக கிடைத்த ஒரு வாய்ப்பை பயன்படுத்தி 6.5 அடி இளைஞர் நான்கைந்து வினாடி தொங்கிவிட்டால் அவர் வெற்றிபெற்றவர் என முடிவு செய்யும் ஒரு விளையாட்டு கோமாளிகளின் விளையாட்டா இல்லையா? பாக்ஸிங் போல உயரம் எடை எல்லாம் பார்த்தா வீரர்கள் களமிறக்க படுகிறார்கள்? ஒட்டப்பந்தயத்தை போல குலுக்கல் முறையில யார் எங்கு நிற்பது என்று முடிவெடுத்தா வாடிவாசலில் ஆட்கள் நிறுத்த படுகிறார்கள்?

சரி இரண்டாவது விதியான “உயிருள்ளவை எதற்கும் தீங்கிழைக்கா தன்மை கொண்டிருக்க வேண்டும்” என்ற விதியையாவது சல்லிக்கட்டு மீட் செய்கிறதா என்றால் அதுவும் இல்லை. 155 கிராம் எடையுள்ள பந்து அடித்துவிடக்கூடாது என்று உடல் முழுவதும் கவசங்கள் அணிந்து விளையாடும் கிரிக்கெட் விளையாட்டா அல்லது மிரண்டு ஓடும் காளை மாட்டை சீண்டி குடல் கிழிந்து 20 வயது இளைஞர்கள் செத்து போகிறார்களே அது விளையாட்டா? 2 ஆயிர வருடத்திற்கு  மேலான பழக்கம் என்று பெருமை படும் சான்றோர் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகியும் ஒரு அடிப்படை பாதுகாப்பான மௌத் கார்ட், கிட்னி  கார்ட், தலைக்கவசம் குறைந்தபட்சம் ஜட்டிக்குள் வைக்கப்போரை சொருகி செல்ல கூட தோன்றாமல் பதின்வயதின் தின்னத்திலும், போலி கற்பிதங்களை நம்பியும் மாட்டிடம் இளைஞர்கள் குத்துவாங்கும், இது ஒரு விளையாட்டா? பாக்ஸிங் போன்ற,f 1 போன்ற விளையாட்டில் ஈடுபடுபவர்கள் அதற்கென கடுமையான பயிற்சி எடுத்து, தங்களது திறனை நிருபித்து, அதெற்கென உள்ள அமைப்புகளிடம் லைசென்ஸ் வாங்கி பின்புதான் போட்டிகளில் தகுந்த பாதுகாப்பு கவசங்களோடு, கடுமையான விதிகளுக்கு உட்பட்ட போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இதுபோன்ற எதாவது ஒரு விஷயம் “வீர விளையாட்டு” சல்லிக்கட்டில் காணக்கிடைக்கிறதா? சல்லிக்கட்டு விளையாட்டு என்று வாதிட்டால் நரபலி கொடுப்பதும் கூட ஒரு விளையாட்டு தான்.

திடிரென்று வீர விளையாட்டு சல்லிக்கட்டின் மேல் பற்று ஏற்பட்டு பொங்கிய தமிழ் பியர்களை கேட்கிறேன். உங்களுக்கு பிடித்த சல்லிக்கட்டு வீரர்கள் ஒரு 5 பேர் பேரை சொல்லுங்கள். அவர்கள் எத்தனை வருடமாக காளை பிடிக்கிறார்? எத்தனை காளை பிடித்திருக்கிறார்கள் ? அவர்களுடைய game technique என்ன? சல்லிக்கட்டு வீரர்கள் குறித்தான எதாவது ranking method அல்லது statistics எங்காவது கிடைக்குமா? தமிழகத்தின் சிறந்த சல்லிக்கட்டு வீரர் என்று கடந்த 2 ஆயிரம் வருடத்தில் அறியப்படுபவர் யார்? அவருடைய பிள்ளைகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடமளிக்க வேண்டும் என்று ஏன் யாரும் இன்றுவரை கோரிக்கை வைக்கவில்லை/போராடவில்லை? jallikattu federation of tamilandu 2 ஆயிரம் ஆண்டுகளில் ஏன் உருவாகாமல் போனது? தமிழர்கள் அனைவரும் தக்காளி எங்க வீர விளையாட்டு பார்த்துக்கோ என்று பொங்கும் போது ஏன் ஒரு 5 சல்லிக்கட்டு வீரர்களின் பெயர்கள் கூட 90 சதவீதமானவர்களுக்கு தெரியவில்லை? 5 விளையாட்டு வீரர் பெயர் கூட தெரியாத விளையாட்டின் மேல் ஏன் இந்த முரட்டுத்தனமான பற்று? ஏன் எல்லா அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளிலும் பெண்களின் பங்கேற்பு இருக்கும் போது சல்லிக்கட்டில் பெண்கள் பங்கேற்பு இல்லை? மெக்ஸிகோவிலும் ஸ்பெயினிலும் பெண்கள் காளைகளை அடக்கும்பொழுது ஏன் ஏறுகளை தமிழ் பெண்கள் குறைந்தபட்சம் தழுவக்கூடாதா? சல்லிக்கட்டு விளையாட்டை ஏன் ஒரு விளையாட்டு அங்கீகாரத்திற்கு நம்மால் நகர்த்த முடியவில்லை? குறைந்தப்பட்சம் ஆசிய விளையாட்டிலாவது சேர்க்க முடியுமா? சல்லிக்கட்டு பயிற்சி மையங்கள் அமைத்தால் கராத்தே கிளாஸ் அனுப்புவது போல கிரிக்கெட் பயிற்சி அனுப்புவது போல உங்களுடைய பிள்ளைகளை அனுப்புவீர்களா? மேலிருக்கும் கேள்விகளில் ஒன்றிரண்டு கேள்விகளாவது உங்களுக்கு நியாமான கேள்விகள் என்று தோன்றினால் அவற்றிற்கான விடை உங்களுக்கு தெரியுமா என்று யோசியுங்கள். உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் நீங்கள் எதன் அடிப்படையில் சல்லிக்கட்டு தமிழர் “விளையாட்டு” என்று உரிமை கோறுகிறீர்கள்.

ஸ்டாலின் பாணியில் சொன்னால் “ஆக சல்லிக்கட்டில் வீரமும் இல்லை விளையாட்டும் இல்லை”.

ப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.

 

https://thetimestamil.com/2018/01/18/சல்லிக்கட்டு-போராட்டம்/

Share this post


Link to post
Share on other sites

சில சாதிகளின் கேளிக்கை விளையாட்டு தமிழர் கலாச்சாரம் ஆகுமா?

T3 Lifeஜனவரி 23, 2018

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்ப்பிங்கா? 

பகுதி- 2

ப. ஜெயசீலன்

கலாச்சாரம் என்றால் என்ன? by definition ஒரு மக்கள் திரளின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில், முயற்சியில் உருவாக்கப்பட்ட/ செழுமையாக்கப்பட்ட கலை மற்றும் இன்ன பிற வாழ்வியல் விழுமியங்களையும் நடைமுறைகளையும் கலாச்சாரம்/ பண்பாடு என கொள்ளலாம். ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு கடத்தப்படும் நம்பிக்கை சார்ந்த அடையாளங்களை/சடங்குகளை/பழக்கவழக்கங்களை சம்பிரதாயம்/ மரபு(tradition) என்று கொள்ளலாம். சம்பிரதாயம்/மரபென்பது நம்மை கடந்த காலத்தோடு தொடர்ப்பு கொள்ள செய்கிறது. கலாச்சாரம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில வாழும் சமூகத்தின் ரசனையை, தேர்வுகளை ,நடைமுறைகளை, அரசியலை குறிப்பது. இதில் கவனிக்க வேண்டியது கலாச்சாரம் என்பது காலத்திற்கு காலம் மாற கூடியது. பண்படுதலே பண்பாடு என்பது போல சமூகம் பண்பட பண்பட பண்பாடு மாறிக்கொண்டே வருகிறது. அந்த பண்படுதலை நிகழ்த்தும் காரணியாகத்தான் நவீனம்(modernity) மற்றும் அறிவியல் விளங்குகிறது. பொதுவில் கலாச்சாரம் என்பது நவீனத்திற்கு முரணானது/எதிரானது. ஏனென்றால் modernity என்பது நிகழும்,நிகழ்ந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்திடம் மாற்றத்தை, நவீனத்தை கோறுவது. கடைசியாக மதம் சார்ந்த எதுவும் மரபு என்னும் வகைமைக்குள்ளோ கலாச்சாரம் என்னும் வகைமைக்குள்ளோ வராது. ஏனென்றால் மதம் என்பது முழுவதும் மதம் சார்ந்த நம்பிக்கையின் அடிப்படையில் கேள்விகளுக்கு, தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டு இயங்க கூடியது. சிக்கலான இந்த வித்தியாசங்களை எனக்கு புரிந்த வரையில் சொல்லியுள்ளேன். மேலும் விவரங்களுக்கு கூகுளை அணுகுகங்கள்.

இப்பொழுது நாம் சல்லிக்கட்டு என்பது மரபா அல்லது கலாச்சாரமா என்ற கேள்வியை முன் வைக்க வேண்டும். இரண்டில் எதுவாக இருந்தாலும் நவீனத்திற்கு குறுக்கால் நிற்பதுதான். என்றாலும், அது யாருடைய மரபு அல்லது கலாச்சாரம்? தமிழர் மரபென்றல் தமிழரின் முன்னோர் காளையை அடக்குபவருக்கு தனது பெண்ணை பரிசுக்கோப்பையாய் தந்த மரபு ஏன் வழக்கொழிந்தது? தமிழரின் மரபென்றால் மாடு பிடிப்பதை ஒரு அளவீடாக கொண்டு பெண்ணை அவனுக்கு மணமுடித்து கொடுத்த முட்டாள்தனமான பொறுக்கித்தனமான மரபுதான் நம்முடையதா? உடனே ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்” என்று மூச்சை பிடித்து கொண்டு சொல்லி புறநானூரிலேயே சல்லிக்கட்டு பெருமை பாட பட்டுள்ளது என்பார்கள். ஆடுமாடுகளை மேய்த்து பிழைக்கும் ஆயர் குல பெண் மாட்டின் கொம்பை பார்த்து ஜெர்க்காகும் ஒருவனை definite ஆக கட்டிக்கொள்ள மாட்டாள் என்று practicality பற்றி பாடும் அந்த பாடலில் சல்லிக்கட்டு பெருமை எங்குவந்தது? நாம் அந்த பாடலில் கவனிக்க வேண்டியது ஆடுமாடு மேய்ப்பவள் நன்றாக மாடு மேய்ப்பவன் மேல்தான் மையல் கொள்வாள் என்று ஏன் எழுதினார்கள்? ஏன் அவள் மீனவ குலத்தை சார்ந்த ஒருவனையே பனையேறும் ஒருவனையே ஏன் விரும்பமாட்டாள் என்று அந்த பாடலை எழுதியவர் நாடக காதல்களுக்கு எதிராக யோசித்ததின் பின்னணி என்ன என்று ஏன் ஆராயக்கூடாது?

மாட்டை பிடிக்கையில் குத்தப்பட்டு சாகிறார்கள் என்று தெரிந்தும் ஒரு கவசம் அணிவிக்க கூட தோன்றாதா காட்டுமிராண்டித்தனம்தான் நமது மரபின் தன்மையா? சரி அது கலாச்சாரம் என்று கொண்டால் அந்த கலாச்சார கேளிக்கை விழா/ கொண்டாட்டம் தமிழர் அனைவரும் உள்ளடக்கிய எந்த பிராந்தியத்தின் எந்த கால மக்களின் அறிவார்ந்த கூட்டு பங்களிப்பில் செழுமையாக்கப்பட்டது? ஒரு காலத்தின் ஒரு பிராந்தியத்தின் ஒரு சமூகத்தின் கூட்டு பங்களிப்பில்/ பங்கேற்ப்பில் செழுமையாக்கப்பட்டவைகளே கலாச்சாரம் என்னும் வைகைமைக்குள் வரும் என்னும் பொழுது சில குறிப்பிட்ட சாதிகளின் மரபான கேளிக்கை விழா/விளையாட்டு எப்படி தமிழர் எல்லோருக்குமான கலாச்சாரமாக மாறும்? பறை என்னும் ஒரு இசைக்கருவி தமிழரின் இசை கலாச்சாரமாகாமல் பறையர் அடிக்கும் மேளமாக ஆகும் போது சில குறிப்பிட்ட ஆதிக்கசாதிகளின் மரபான கேளிக்கை என்ன தைரியத்தில் தமிழரின் கலாச்சாரமாக முன்னிறுத்தப்பட்டது? இந்த சாதிக்கார மாட்டை இந்த சாதிக்காரர் தான் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு நேரம் மாடு பிடிக்க. இது போன்ற அயோக்கியத்தனமான விதிகள் மீற பட்டால் வெட்டுக்குத்து கொலை….இது எல்லாம் என்ன மாதிரியான கலாச்சாரம் மரபு?

நவீனத்தின் எந்த கூறுகளையும் உள்வாங்காமல் நவீனத்தை,நாகரீகத்தை நோக்கி எந்த நகர்வையும் செய்யாமல் தமிழரின் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் என்று பிதற்றும் மடையர்களை என்ன செய்வது? உண்மையில் கலாச்சாரம் என்பதின் அளவீடு ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் வாழும் சமூகத்தின் ஜனநாயக பன்பையும், ஜனநாயகத்தன்மையையும், கலா ரசனையையும், அறிவியல் தேடலையும் சார்ந்தது ஆகும். பாஸ் இத நாங்க ரொம்ப நாளா பண்ணிக்கிட்டு இருக்கிறோம்..நல்லா போயிட்டு இருக்கு..இனிமேலும் இப்படித்தான் இருப்போம்…இதுல மாத்தறதுக்கு எதுவுமே இல்ல..எல்லாம் perfect என்று வாதிடுவது கலாச்சாரம் இல்லை. மடத்தனம். உண்மையில் தமிழர் கலாச்சாரம் என்பதின் அடிப்படை “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதின் அடிப்படையிலும்,”பெரியோரை வியத்தலும் இலமே,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே” என்பதின் அடிப்படையிலும்,”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட விழுமியங்களை சார்ந்து இருக்க வேண்டுமே தவிர மாடு பிடிப்பதை கட்டிக்காப்பதை சார்ந்து இருக்கக்கூடாது.

இது எங்கள் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் கலாச்சாரம். எதாவது குற்றம் குறையிருந்தால் சுட்டிக்காட்டுங்கள் திருத்தி கொள்கிறோம். ஆனால் நிரந்தரமாக தடை செய்து விடாதீர்கள் என்று இவர்கள் நீதிமன்றத்தில் தலையை சொரிந்து கொண்டு நின்றது கேவலமாக பரிதாபமாக இருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளாய் இவர்கள் கவனம் முழுவதும் ஏரை தழுவுவதிலேயே இருந்ததால் இவர்களால் சல்லிக்கட்டில் இருக்கும் குற்றம் குறைகள் என்னவென்று இவர்களாகவே கண்டுபிடிக்க தெரியவில்லை. அதனால்தான் நீதிமன்றத்திடம் போய் ஜி சொல்லுங்க ஜி..பார்த்து பண்ணிரலாம் ஜி என்று நின்றார்கள் நம் மானத்தை வாங்கிக்கொண்டு.சல்லிக்கட்டை தமிழர் பாரம்பரியம் என்று சொன்னால் நவீனத்தின் கூறுகளை உள்வாங்காத உள்வாங்கமுடியாத உள்வாங்கவிரும்பாதா உயிர்பலி கோரும் இந்த கருமம் பிடித்த பாரம்பரியம் போய் தொலைய வேண்டும். அது கலாச்சாரம் என்றால் ஜனநாயக்கத்தன்மை அற்ற, மாந்தநேய சமத்துவ விழுமியங்களை உள்வாங்கி கட்டமைக்காத தமிழர் கலாச்சாரம் மாடுபிடித்து எதையும் கழட்டி மாட்ட போவதில்லை. சக மனிதனை, விரும்பிய பெண்ணை மணந்தான் என்று வெட்டிக்கொள்ளும் மூளையற்ற காட்டுமிராண்டிகளுக்கு மாடுபிடி விளையாட்டு/கொண்டாட்ட கலாச்சாரம் ஒரு கேடா?

புரட்சியாளர் மாவோ சீனாவில் கலாச்சார புரட்சியை அறிவித்து,முன்னெடுத்த போது அவர் அதற்க்கு சொன்ன காரணம் சீனர்களின் கலாச்சாரத்துடன் முதலாளிதுத்வத்தின் பண்புகளும்,கூறுகளும் நீக்கமற கலந்து,பின்னி பிணைந்துள்ளன. தான் அமைக்க விரும்பும் புதிய சீன மக்கள் குடியரசை நிறுவ சீனத்தின் கலாச்சாரம் முற்றுமுழுதாய் மாற்றியமைக்க வேண்டும் என்று நம்பினார். அவருடைய முயற்சி நல்லவை,கேட்டவை இரண்டையும் நிகழ்த்தியது என்றாலும் மாவோவின் நோக்கம் பரிசுத்தமானது. அதை போலவே ஹிந்துத்வ இந்திய, தமிழக சமூகத்தின் பாரம்பரிய,கலாச்சார கூறுகளில் சாதி என்பது நீக்கமற நிறைந்துள்ளது. சாதியின் கூறுகளை நீக்கிவிட்டால் ஹிந்துத்வ சமூகத்தில் கலாச்சாரம்,மரபு என்று ஒன்றுமே மிஞ்சாது. நாம் உண்மையில் சாதியற்ற ஒரு சமூகத்தை கட்டமைக்கவேண்டும் என்று விரும்பினால் நாம் புத்தம் புதிதாக ஒரு கலாச்சாரத்தை வடிவமைக்கவும், நமது corrupted மரபுகளை சமரசமற்று தூக்கி எறியவும் தயாராக வேண்டும். அதன் மூலம் நாம் அடையும் இழப்புகளை விட பலன்களே மிக அதிகமாகயிருக்கும் என்பது என்னுடைய எண்ணம்.

உலகம் முழுவதும் தற்பொழுது பன்முக கலாச்சாரம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரத்தின் நோக்கம் ஒன்று கலப்பது. அதாவது ஒரு சீனர் நமது வீட்டிற்கு வந்தால் நமது கலாச்சார உணவான மாட்டிறைச்சி பிரியாணியை காரம் குறைத்து பரிமாறவேண்டும். நாம் சீனத்தில் அவர் வீட்டுக்கு சென்றால் காரம் அதிகம் சேர்த்த dimsim செய்து பரிமாறுவர். நாம் அடுத்தமுறை இட்லி செய்யும்போது அவர் dimsimஸோடு குடுத்த சாஸை முயற்சித்து பார்ப்போம். அவர் dimsim ஸோடு தயிர் பச்சிடி தொட்டு சாப்பிட்டு பார்ப்பார். ஒரு புதிய நவீன உணவு கலாச்சாரம் பிறக்கும்.கலாச்சாரத்தின் நோக்கம் இதுதான். நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருந்தால்தான் இன்னொரு கலாச்சாரத்துடன் உறவாட முடியும். அதற்க்காகத்தான் கலாச்சாரம். அதாவது ஒன்று கலக்க, ஒன்றிணைய, தனித்து நிற்க, பிரித்து வைக்க இல்லை. ஆனால் நம்மூரில் என்ன நடக்கிறது? புதிய மனிதர்களை பார்த்தால் பீதி அடைந்து வில்லை கொண்டு தாக்கும் அமேசான் காடுகளில் வாழும் பழங்குடியினரை போல இது எங்க கலாச்சாரம் இது கூட யாரையும் கலக்க விடமாட்டோம் நாங்களும் யார்கூடயும் கலக்க மாட்டோம். அவரவர் அவரவர் கலாச்சாரத்தை வைத்து அவங்கவங்க அவங்கவங்க சாதியில் பெண்கட்டி அப்படியே ஜாலியாயிருப்போம் என்று சொல்லும் மடையர்கள் நிறைந்ததுதானே நாம் வாழும் சமூகம்? இந்த மடையர்களுக்கு கலாச்சாரம் என்ற சொல்லை பயன்படுத்த நா கூசவில்லையா?? இப்படி கலாச்சாரத்தின் அடிப்படையே புரியாத பாரம்பரியத்திற்கும், கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாத, சில சாதிகளின் மரபான கேளிக்கை விளையாட்டை தமிழர் கலாச்சாரம் என்று அடித்து விடுவது எவ்வளவு பெரிய சில்லறைத்தனம், போக்கிரித்தனம் ??

ப. ஜெயசீலன், சமூக -அரசியல் விமர்சகர்.

 

https://thetimestamil.com/2018/01/23/சில-சாதிகளின்-கேளிக்கை-வ/

Share this post


Link to post
Share on other sites

மனுஷன் பீட்டாவிடம் காசு வேண்டிக்கொண்டு எழுதுனதை போல் இருக்கு சுத்தி சுத்தி காட்டு மிராண்டி கூட்டம் என்று நிறுவ முட்பட்டு தோத்து போகும் சமயங்களில் தேவையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறார்  அத்துடன் சாதியை சொல்லி குழப்பம் விளைவிப்பம் எனும் நோக்கம் கண்கூடு.

இப்படி கர்நாடவிலோ இல்லை வேறு மாநிலங்களில் எழுதி இருந்தால் தன் மொழி இன ஆட்க்களை கூனி குறுக வைத்தால் அன்றிரவே அந்த எழுத்தளாரின் வீடு நெருப்பு பிடித்து விடும் இது தமிழ் நாடாச்சே ...........................

Share this post


Link to post
Share on other sites

மாடுகள் வருத்தப்படுவதாகக் கவலைப்படும் ஜெயசீலன்....இந்தியாவில் உள்ள மனிதர்களுக்காகக் கவலைப்படுவது போலத் தெரிவதில்லை!

ஸ்பெயின் போன்ற நாடுகளில் காளைகள் துன்பப் படுத்தப் படும்போது....ஜெயசீலன் போன்றவர்கள்...எதற்காக அவற்றைப்பற்றி எழுதுவதில்லையோ தெரியாது!

இந்தியர்களின் கலியாண வீட்டுச் சடங்குகள்...எங்களுக்கு ஒரு சேர்க்கஸ் போலத் தான் தெரிகின்றது!

அதற்காக நாம் அதை விமரிசிக்கிறோமா என்ன?

மாடுகளை வணங்குவதாகக் கூறி ...தமிழர்களுக்குப் பாடமெடுக்கும் இவர்களைப்போன்றவர்கள்...மாடுகள் கடுதாசியையும், சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களையும் , பொலிதீன் பைகளையும் சாப்பிடுவதைப் பற்றிக் கவலைப் படுவதாகத் தெரியவில்லை!

உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில்....இந்தியா முன்னிலையில் இருப்பதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை!

ஆகத் தமிழன் ஏதாவது செய்தால் மட்டும்  தடியைத் தூக்கிக் கொண்டு வருவார்கள்!

Edited by புங்கையூரன்
  • Like 2

Share this post


Link to post
Share on other sites

சல்லிக்கட்டு இல்லையென்றால் காளை இனம் அழிந்துவிடுமா?

T3 Lifeஜனவரி 23, 2018

சல்லிக்கட்டு போராட்டம்: மெரினாவில் நடந்தது புரட்சியா அல்லது கேம்பிங்கா? பகுதி – 3
 
ப. ஜெயசீலன்

நவீன பழமைவாதிகள்/அடிப்படைவாதிகள்/சாதி வெறியர்கள் மிகவும் மேம்படுத்தப்பட்ட முகமூடிகளுடன் உலவுகிறார்கள். அதில் ஒரு தரமான முகமூடிதான் தமிழரின் வேளாண் பெருமை பேசுவதும் அதை மீட்டெடுக்க வேண்டும் என்று ஏங்குவதும். உண்மையில் இவர்கள் தமிழரின் பாரம்பரிய வேளாண்முறைகள் என்று சொல்வதும், தமிழரின் இயற்கை விவசாயம் என்று சொல்வதும் அவர்களுக்கு இருக்கும் சுற்றுசூழல் சார்ந்த இயற்கையின் மேல் அவர்கள் கொண்டிருக்கும் அளவற்ற பற்றின் காரணமாகவா அல்லது தாங்கள் இழந்து விட்ட, இழந்து கொண்டிருக்கும் சாதிய ஆதிக்கத்தை மீட்டெடுக்கவா? தமிழரின் இயற்க்கை வேளாண்மை அவ்வளவு பரிசுத்தமான ஒரு அமைப்பா? பண்ணை அடிமை முறையை பயின்றது யார்? உழைப்பு சுரண்டலில் கொழுத்த அமைப்பு எது? பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பில் தின்று கொளுத்தது எந்த/யார் அமைப்பு? கீழ்வெண்மணி சம்பவம் தமிழர் பாரம்பரிய விவசாயத்தின் இருண்ட பக்கங்களில் ஒன்றா இல்லையா? இப்படி பொறுக்கித்தனமான சில்லறைத்தனமான அமைப்பு அழிவது சமூகத்திற்கு நல்லதுதானே?

ஓ சோற்றிற்கு என்ன செய்வது? தலித்துகளுக்கு பிரச்சனை இல்லை. உப்புக்கண்டம் தின்றாவது பிழைத்து கொள்வார்கள். சுத்தமான எருமை மாட்டு பாலை குடித்து பழகிவிட்டேன்..தோட்டத்திலேயே விளையும் ஆர்கானிக் கத்திரிக்காய்தான் பிடிக்கும் என்றால் அவனவன் எருமை மேய்த்து தயிர் செய்து குடித்து கொள்ள வேண்டியதுதான். தலித்துகள் படித்து விட்டார்கள். நகரத்திற்கு சென்று விட்டார்கள். இனிமேல் மல்லாந்து படுத்து விட்டதை பார்த்து ‘அந்த காலத்துல எங்கள பார்த்தா துண்ட எடுத்து இடுப்புல கட்டுவானுங்க. இப்போ ஒரு நாளைக்கு 300 கொடுத்தாலும் வேலைக்கு வர மாட்டேங்கறாங்க’ என்று புலம்பி சாக வேண்டியதுதான்.

இவர்களின் வாதம் என்ன? PETA அப்படியே தமிழகத்தை குறுகுறுவென்று பார்த்து ரைட்டு இவனுங்க விவசாயத்தை அழிக்கனும்னா தக்காளி இவனுங்க காளையை தூக்கணும்..அதுக்கு சல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும்..அப்பதான் இவனுங்க “தற்சார்பு” பொருளாதாரத்தை அழிக்க முடியும் என்று எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்று சொன்ன வடிவேலுவின் பொன்மொழியின் படி செயல்பட்டதாகவும், எப்பொழுதும் அலெர்ட்டாக இருக்கும் தமிழ் தேசியர்கள் PETA வை சட்டையை பிடித்து நிறுத்தியதை போலவும் ஒரு தோற்றத்தை கட்டமைத்தார்கள். சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் காளையினமே அழிந்து விடும் என்று அடித்துவிட்டார்கள். a2 பால் ak 47 பால் என்று என்னென்னமோ சொன்னார்கள். அவர்கள் வாதத்தில் எல்லாமே அபத்தமான காமெடிகள் என்ற போதிலும் சல்லிக்கட்டு தடை செய்யப்பட்டால் காளை இனமே அழிந்து விடும் என்ற வாதத்தை அணுகுவோம்.

genetic அறிவியல் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. உதாரணத்திற்கு ஆஸ்திரேலியாவில்  tasmanian tiger என்ற ஒரு வரிப்புலி போன்ற விலங்கு 1936ல் முற்றாக அழிந்துவிட்டது. தற்பொழுது ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் பாதுகாத்து வைக்கப்பட்ட tasmanian tigerயின் dna கொண்டு அதை தேவைப்பட்டால் மீண்டும் clone செய்து உருகாக்கிவிடலாம் என்று உறுதியாக சொல்கிறார்கள். அதாவது சிங்கார வேலனில் ஒரு விஞ்ஞானி “ஒரு மயிர குடு” அத வச்சே அந்த ஆள படமா வரைகிறேன் என்று சொல்லுவார். இன்றைக்கு விஞ்ஞானம் “ஒரு மயிர குடு..ஆளையே செஞ்சு தரேன்” என்கின்ற அளவுக்கு வளர்ந்துவிட்டது. இந்த காலத்தில் ரத்தமும் சதையுமாக நம் முன்னால் புல் மேய்ந்து கொண்டிருக்கும் காளைகளை காட்டி சொல்கிறார்கள் காளையினமே அழிந்து விடும் என்று. ஒரு சொட்டு விந்துவில் எத்தனை கோடி விந்தணுக்கள் உள்ளன என்று இவர்களுக்கு தெரியுமா? ஒரே ஒரு காங்கேயம் காளையின் ஒரே ஒரு சொட்டு விந்தணு இருந்தால் கூட அந்த இனத்தை நம்மால் இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு காப்பாற்ற முடியும் என்பதே அறிவியல்.

ஒரு விலங்கினத்தை அழிவிலிருந்து காப்பற்ற கையாள படும் பல்வேறு முறைகளில் ஒன்று அந்த விலங்கினம் சார்ந்த சந்தை மதிப்பையும், அந்த விலங்கினத்தின் உற்பத்தியையும் ஊக்கப்படுத்துவது. அப்படியென்றால் எப்படி வெள்ளாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் அதிகமாக அதிகமாக வெள்ளாட்டின் விலையும் உற்பத்தியும் தொடர்ந்து அதிகரிக்கிறதோ அதே போல நாட்டு காளைகளின் பயன்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் இறைச்சியை சந்தை படுத்த வேண்டும். உலகம் முழுவதும் cage free மற்றும் free range கால்நடைகளின் இறைச்சிக்கு ஒரு பெரிய சந்தை உள்ளது. அதை பயன்படுத்தி இந்திய நாட்டுமாடுகளின் இறைச்சியை சீன போன்ற நாடுகளுக்கு சந்தைப்படுத்தினால் அரசாங்கம் மிகுந்த லாபம் ஈட்டலாம். இதன் விளைவாக நாட்டு மாடு பண்ணைகள் பெருகும். அண்ணன் சீமான் கனவு காணும் பொறியியல் படித்த தம்பிகளும் மாட்டு பண்ணை வைக்க, மேய்க்க வருவார்கள். நாட்டுமாடு எண்ணிக்கை கிடு கிடு என்று வளரும். அதைவிட்டு விட்டு பொருளாதார ரீதியாக பெரிதாக பங்களிப்பு செய்யாத ஒரு கால்நடையை சல்லிக்கட்டுக்காக வளர்க்கிறோம் என்பது சிறுபிள்ளைத்தனம் என்றால் சல்லிக்கட்டு இல்லையென்றால் காளையினம் அழிந்துவிடும் என்பது அதைவிட பெரிய சிறுபிள்ளைத்தனம்.

சரி. சல்லிக்கட்டு இல்லையென்றால் காளையை வளர்ப்பவர்களுக்கு ஒரு reward system இருக்காது என்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் நடக்கும் வருடாந்திர விவசாயிகளின் சந்தை பிரபலமானவை. அங்கு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கூட்டி வருவார்கள். அந்த கால்நடைகளுக்கு போட்டி நடக்கும். மிக நன்றாக பராமரிக்கப்பட்டுள்ள, நல்ல உடல் வனப்பு கொண்ட, வளர்பவரின் கட்டளைக்கு கீழ்ப்படிகின்ற விலங்குகளுக்கு பரிசளிக்கப்படும். விவசாயியும் ஹாப்பி. விலங்கும் ஹாப்பி. ஏன் இது போன்ற reward system ஏன் நாம் முயற்சிக்கவில்லை?. காளையை தழுவியே தீருவேன் என்று அடம்பிடிப்பது ஏன்?

நீர் மேலாண்மை என்று மாநிலத்திற்கு ஒரு கொள்கையே இல்லாத சமூகம், சாய கழிவுகளை கொண்டு தன் சாதிக்காரன் ஒரு ஆற்றையே சாய சாக்கடையாக்கியதை வேடிக்கை பார்க்கும் சாதியினர் கொண்ட சமூகம், இயற்கை வளங்களான ஆற்று மணலையும், மலைகளையும், காடுகளையும் பாழடிக்கும், exploit செய்யும் தன் சாதிக்காரனிடம் பல்லிளித்து கொண்டு நிற்கும் சாதியினர் கொண்ட சமூகம், தனது காட்டில் ரத்தத்தை வியர்வையாய் சிந்தி உழைத்த பாட்டாளிகளை உழைப்பு சுரண்டல் செய்தும், சாதியின் பெயரால் வன்கொடுமைக்கும் ஆளாக்கிய வேளாண் சாதிகள் நிறைந்த இந்த சமூகத்திற்கு என்ன பெரிய இயற்கை வேளாண்மை? என்னவோ பண்ணி தொலையட்டும். ஆனால் பாரம்பரிய விவசாயம், இயற்கை விவசாயம் என்ற போர்வையில் பண்ணை அடிமைமுறையையும், உழைப்பு சுரண்டலையும் பூஜிக்கிற, மீண்டும் கட்டமைக்க துடிக்கும் சாதி ஹிந்துக்களிடம் பாட்டாளி வர்க்கமும், தலித்துகளும் கவனமாய் இருக்க வேண்டும்.

கடந்த 11 வருடங்களாக ஒரு மேற்கத்திய நாட்டில் வசிக்கும் முறையில் சொல்கிறேன். இங்கிருக்கும் 95 சதவிகித மக்கள் சாதாரண பாலைத்தான் குடிக்கிறார்கள். ஆரோக்யமாகத்தான் இருக்கிறார்கள். இங்கு a2 என்பது விலை அதிகமான,ஒரு சிலர் மட்டுமே வாங்கும் பொருளாகத்தான் இருக்கிறது. என்னமோ நமது ஊரில் தலைமுறை தலைமுறையாக a 2 குடித்து sewag,dhoni போன்று இருந்ததை போலவும் அதை பார்த்து PETA பொறாமை பட்டு அதில் a 1 கலக்கப்பார்த்ததை போன்றும் அடித்துவிட்டார்கள். இப்பொழுது கிளிக்கு ரெக்கை முளைத்துவிட்டாலும் சல்லிக்கட்டு போராட்ட சமயத்தில் டாக்டர் கிருஸ்ணசாமி பேசிய பேச்சு முக்கியமானது. a2 பாலை மாஸ் production செய்வதில் உள்ள இயலாமை, காளையின் வளர்ப்பு செலவு,காளையை பராமரிக்க தேவைப்படும் மனித ஆற்றல், காளையின் அடையாள அரசியல் பின்புலம் என்று விளக்கி இருந்தார். அவர் சொன்னதில் பெரும்பாலானவை சத்தியம்.

so தமிழ் குஞ்சுகள் பாரம்பரியம், இயற்கை வேளாண்மை என்று இயம்பியது நம்பகத்தன்மையற்றது, சந்தேகத்துக்குரியது. சல்லிக்கட்டு தடையால் காளைகள் அழியும் என்றதும் நகைப்புக்குரியது, பொருளாதார விஞ்ஞான பார்வைக்கு எதிரானது.

ஆக சல்லிக்கட்டு தடைக்கும் இவர்கள் சொன்ன இயற்கை விவசாயத்தின் மீதான தாக்குதல் என்பதற்கும் எந்த தொடர்பும்/உண்மையும் இல்லை.

வீர விளையாட்டும் இல்லை, தமிழர் மரபு/கலாச்சாரம் என்பதையும் ஏற்கமுடியாது, சல்லிக்கட்டு தடையால் காளையினம் அழியும் என்பதிலும் உண்மையில்லை என்னும் போது மெரினா கேம்பிங் நிகழ்ந்தது எப்படி?

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.

 

https://thetimestamil.com/2018/01/23/சல்லிக்கட்டு-இல்லையென்ற/

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this