Jump to content

பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன்! - சசி குடும்ப சொத்து வில்லங்கம்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: பொல்லாத புதைகுழியில் பூங்குன்றன்! - சசி குடும்ப சொத்து வில்லங்கம்

 
 

 

p42_1516712184.jpgழுகார் உள்ளே வரும்போதே சிந்தனைவயப்பட்டவராக இருந்தார். கண்களை மூடியபடி, ‘‘பெரிய இடத்து மனிதர்களிடம் நெருங்கவும்கூடாது; விலகவும்கூடாது. ‘தாமரை இலை தண்ணீர் மாதிரி பட்டும் படாமல் இருக்க வேண்டும்’ என்பார்கள். பேச்சுக்கு வேண்டுமானால் இதைச் சொல்லலாம். அது, நிஜத்தில் அத்தனை சாத்தியமில்லை. ஒரு கட்டத்தில் நெருங்கியே ஆகவேண்டிய கட்டாயம் வரும். அதனால் கிடைக்கும் லாபங்கள் அதிகம். ஆனால், இப்படி நெருங்கிச் சென்றதன் காரணமாக பிரச்னைகளுக்கு ஆளாகி, பதுங்கிப் பதுங்கி வாழ்கிற வாழ்க்கை இருக்கிறதே... அப்பப்பா!’’ என்றார்.

‘‘என்ன கழுகாரே, பீடிகை ரொம்ப நீள்கிறது?’’ என்றோம்.

‘‘வேறொன்றும் இல்லை. கடந்த காலத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்தவர்களில் சசிகலா குடும்பத்தைச் சாராதவர்கள் வெகு சிலரே! அவர்களில் முதலிடம் பூங்குன்றனுக்கு உண்டு. ஜெயலலிதாவின் ஆட்சி மற்றும் கட்சி அலுவல் சார்ந்த பல பணிகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருந்தவர் இந்த பூங்குன்றன். தலைமைச் செயலாளர் முதற்கொண்டு அதிகாரிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் எனப் பலருமே... பூங்குன்றன் மூலமாகத்தான் ஜெயலலிதாவுக்குத் தகவல்களைச் சேர்க்க முடியும். சசிகலா குடும்பத்தையும் மீறி, பூங்குன்றனிடம் நேரடியாகவே பேசுவார் ஜெயலலிதா. அவர் மூலமாகவே பல காரியங்களையும் செய்வார் ஜெயலலிதா. இதனால், சசிகலா குடும்பத்தினருக்கு பூங்குன்றன்மீது எரிச்சல் உண்டு. அவரை ஒழித்துக்கட்டவும் அந்தக் குடும்பத்தில் பலர் நேரம் பார்த்துக் காத்திருந்தனர். ஒரு கட்டத்தில், ஜெயலலிதாவிடம் இல்லாததும் பொல்லாததுமாகச் சொல்லி, பூங்குன்றனை ஒதுக்கியும் வைத்தது உண்டு. ஆனால், ஜெயலலிதாவிடம் தன்னை அறிமுகப் படுத்தியவர்கள் என்கிற மரியாதையைச் சற்றும் குறைத்துக் கொள்ளாமல், சசிகலா தரப்பினரிடமும் எப்போதும்போலத் தான் பழகிவந்தார் பூங்குன்றன். பிறகு, ஜெயலலிதாவே மீண்டும் பூங்குன்றனை தனக்கு உதவியாகச் சேர்த்துக் கொண்டார்.’’

p42a_1516712216.jpg

‘‘இந்தப் பழைய கதை இப்போது எதற்கு?’’

‘‘காரணம் இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து அரங்கேறிய பல்வேறு அதிரடிகளில் சிக்கி, இன்றுவரை தவித்துக்கொண்டே இருக்கிறாராம் பூங்குன்றன். அதிகார மையத்துக்கு மிக நெருக்கமாக இருந்தபோதும், பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லையாம் பூங்குன்றன். ஆனால், இன்று சசிகலா குடும்பத்தினருடன் சேர்த்து அவரையும் படாதபாடு படுத்துகிறார்கள். ஒரு பக்கம் தற்போதைய தமிழக ஆட்சியாளர்களின் நெருக்கடி, இன்னொரு பக்கம் வருமானவரித் துறை போடும் கிடுக்கிப்பிடி என இரண்டையும் தாங்க முடியாமல் தவிக்கிறாராம் பூங்குன்றன்.’’

‘‘எதற்காக அவரை நெருக்குகிறார்கள்?’’

‘‘சசிகலா குடும்பத் தரப்புகளிடம் கிட்டத்தட்ட நான்காயிரம் கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதற்கான உறுதியான தகவல்கள் ரெய்டு மூலமாகக் கிடைத்திருக்கிறதாம். ஆனால், அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் தவிக்கிறார்கள் அதிகாரிகள். யார் யார் பெயர்களிலோ இருக்கும் அந்த ஆவணங்கள் எங்கே இருக்கின்றன என்பது தொடர்பாகவும் லிங்க் கிடைக்காமல் வருமானவரித் துறை அதிகாரிகள் திணறுகிறார்கள். இவை சிக்கினால், அந்தக் குடும்பத்தில் பலரை வழக்குகளில் வளைக்க முடியும் என்பது அவர்களின் கணக்கு. இதற்கு ஒத்தாசை செய்து, சசிகலா குடும்பத்தை முடக்கிவைக்க நினைக்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். அவர்களின் ஐடியாபடி, பூங்குன்றனை மடக்கும் வேலைகள் இப்போது தீவிரமாகியுள்ளன. அவரை வைத்தே அந்தச் சொத்துகளின் அத்தனை விவரங்களையும் கறப்பதுதான் திட்டமாம்.’’

‘‘அவரை மடக்குவதற்காக நடத்தப்படும் முயற்சிகள் இருக்கட்டும். பூங்குன்றன் பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லை என்று ஏதோ சொன்னீர்களே... அது நிஜமா? ஏகப்பட்ட வீடுகள், நிலபுலன்கள் எல்லாம் பூங்குன்றனுக்கு உண்டு என்று பேச்சு இருக்கிறதே?’’

‘‘நானும் அதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரணை நடத்துகிறதே... அங்கு பலரும் விதவிதமான கார்களில் வந்து இறங்குகிறார்கள். பூங்குன்றன் ஒரு நண்பருடன் பைக்கில் வந்து இறங்கியதைப் பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரின் பல இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டபோது, பூங்குன்றன் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அவருடைய வீட்டில் கணக்கில் காட்டப்படாதது என்று கைப்பற்றப்பட்டது 150 பவுன் நகைகள் மட்டும்தானாம். இதுகூட, அவர் மனைவியின் குடும்பத்திலிருந்து போடப்பட்ட நகைகளாம். கல்யாணம், காதுகுத்து என்று அவ்வப்போது போடப்பட்ட இந்த நகைகளுக்கு எந்தவித ரசீதும் இல்லை. இப்படித்தான் பலரும் வீடுகளில் நகைகளை வைத்திருப்பார்கள். ரெய்டு நடத்தும்போது, அதிகாரிகளாகப் பார்த்து இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விடுவது உண்டு. பெரிதாக எதுவும் சிக்கவில்லை என்றால், இதுபோன்ற நகைகளைக் கண்டுகொள்ள மாட்டார்களாம். ஆனால், இதை வைத்திருப்பது பூங்குன்றனாயிற்றே... அதனால் அள்ளிக்கொண்டு போய்விட்டார்களாம். ‘இதையெல்லாம் கூட கணக்கில் சேர்த்தால் எப்படி?’ என்று மன்றாடிப் பார்த்தாராம் அவர். ஆனால், உரிய கணக்கைக் காட்டி விட்டு நகைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கறாராகச் சொல்லிவிட்டார்களாம் அதிகாரிகள். இந்த நகைகளின் மொத்த மதிப்பு, இன்றைய தேதிக்கு சுமார் 35 லட்ச ரூபாய் வருகிறது. இதற்கு 14 லட்ச ரூபாயை அபராதமாகக் கட்டச் சொல்கிறார்களாம். ‘இருக்கும் வீடு தவிர என்னிடம் எதுவுமில்லை. இந்த லட்சணத்தில் இதற்கெல்லாம் எங்கே போவது?’ என்று புலம்பிய பூங்குன்றனை விநோதமாகப் பார்த்திருக்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள்.’’

‘‘பூங்குன்றனை மடக்குவதன் மூலமாக எதைச் சாதிக்க நினைக்கிறார்கள்?’’

‘‘பூங்குன்றன் வேண்டுமானால் இப்போது சாதாரண ஆளாக இருக்கலாம். ஆனால், இருந்த இடம் பெரிய இடமாயிற்றே. ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு சார்ந்த ஏகப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர், அவர்களால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளைகளின் முக்கியமான டிரஸ்டி என்று நிறைய பொறுப்புகள் அவரிடம் இருக்கின்றன. அவரிடம் கறந்தால் நிறையவே கிடைக்கக்கூடும். அதை வைத்தே, சசிகலா குடும்பத்தை மொத்தமாக காலிசெய்துவிடலாம் என்பதுதான் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் கணிப்பு. ஆனால், ‘நீட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்துப்போட்டதைத் தவிரப் பெரிதாக எனக்கு ஒன்றும்தெரியாது. சசிகலா குடும்பத்தினர் என்னை எதிலுமே சேர்த்துக்கொண்ட தில்லை. அதனால், அவர்களைப் பற்றிய ரகசியங்கள் எதுவுமே எனக்குத் தெரியாது’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் பூங்குன்றன். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு போயஸ் கார்டன் உள்பட எங்குமே பூங்குன்றனின் தலை தென்பட்டதில்லை. சசிகலா பரோலில் வந்து இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியபோது, அங்கு வந்தார் பூங்குன்றன். ‘இத்தனை நாளாய் எங்கிருந்தார்’ என மீடியாக்களே அவரைப் பார்த்து ஆச்சர்யப் பட்டன.’’

p42e_1516712164.jpg

‘‘அந்த நேரத்தில் அவரிடம் நிறைய கையெழுத்துகள் வாங்கப்பட்டதாகக்கூட செய்தி கசிந்ததே?’’

‘‘ஆமாம். அப்போது நிறைய பரிமாற்றங்கள் நிகழ்ந்ததாகச் சொன்னார்கள். அதைத் தாண்டியும் இன்னும் ‘மாறாத’ விஷயங்கள் உண்டாம். ‘அவை என்னென்ன என்று எனக்கே தெரியாது. ஆனால், இதை வைத்து மேலும் மேலும் நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருப்பதைத்தான் தாங்கமுடியவில்லை’ என்று பூங்குன்றன் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் புலம்பினாராம்.’’  
 
‘‘அதென்ன நெருக்கடிகளோ?’’

‘‘சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்த பூங்குன்றனிடம், அங்கு வந்த மேற்கு மண்டல அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். ‘தம்பி, அங்கே இருந்து என்ன சுகத்தைக் கண்டீங்க? பேசாம நம்ம பக்கம் வந்துடுங்க. உங்கள கண்ணும் கருத்துமா பாத்துக்க வேண்டியது இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் பொறுப்பு. அங்கேயே இருந்தா கஷ்டம் தொடரும்’ என்று மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார். அதற்கு பூங்குன்றன் பதில் ஏதும் பேசவில்லையாம்.’’

‘‘நிறைய பேர் இப்போது ஆட்சியாளர்கள் பக்கம் தாவியிருக்கி றார்களே... இவரும் போக வேண்டியதுதானே! அதிலென்ன சிக்கல்?’’

‘‘இதை செய்துவிடத்தான் அவரும் தீர்மானித்திருந்தாராம். ‘மடியில் கனமில்லை... வழியில் பயமில்லை என்கிற ரீதியில் பயணிக்க வேண்டியதுதான்’ என்று நினைத்தாராம். ஆனால், ‘நீ சசிகலா பக்கமோ, அல்லது ஆட்சியாளர்கள் பக்கமோ சாய்ந்துவிடாதே. எந்தப் பக்கம் சாய்ந்தாலும், கடைசியில் ஆபத்து உனக்குத்தான். பயன்படுத்தும் வரை பயன்படுத்திவிட்டுக் கடைசியில் அம்போ என்று கைவிட்டுவிடுவார்கள். இப்படி மேலிடங்களுக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால், கடைசி நேரத்தில் சிக்கலை அனுபவித்து வாழ்க்கையையே தொலைத்த பலபேரின் கதை தெரிந்ததுதானே’ என்று அவருக்கு வேண்டிய சிலர் சொல்லி, அதற்குத் தடைபோடுகிறார்களாம்.’’

‘‘உண்மைதானே... நாம் கேள்விப்படாத சங்கதிகளா?’’

‘‘ஏற்கெனவே ஜெயலலிதாவுடன் நேரடியாகப் பேசி, அதனால் சசிகலா குடும்பத்தில் பலரின் விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டவர் அவர். சசிகலா சிறையில் இருக்கும் இப்போதைய சூழலில், அவரை இந்தச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்குத் துளிகூட அந்தத் தரப்பு முன்வரவில்லை. ஆட்சியாளர்களிடம் சேர்ந்துவிடலாம் என்றால், ‘அது ஆபத்தான பாதை’ என்று நண்பர்கள் பயமுறுத்து கிறார்கள். ‘பொல்லாத புதைகுழியில் சிக்கிக்கொண்டோமோ’ எனக் குழம்பிக் கிடக்கிறாராம் பூங்குன்றன். அவருடைய குடும்பத்தினரும் பயத்தில் இருக்கிறார்களாம். ‘எத்தனை எத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், வக்கீல்கள், ஆடிட்டர்கள் என்று உங்ககிட்ட வந்து பம்மிக்கிட்டு கிடந்தாங்க. இப்ப, கல்யாண சீதனமா வந்த நகைகளைக்கூட மீட்கமுடியாத நிலையில கிடக்கறீங்களே’ என்று வருத்தம் பொங்கப் பேசுகிறார்களாம். ஏற்கெனவே நெருக்கமாக இருந்த ஆடிட்டர்கள், வழக்கறிஞர் கள்கூட உதவிக்கு வரத் தயங்குகிறார்களாம். ஆட்சியாளர்களிடம் எதற்காக பொல்லாப்பைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும் என்பது தான் காரணமாம்.’’

‘‘பரிதாபம்தான்!’’

‘‘ஜெயலலிதா மருத்துவ மனையில் இருந்த நேரத்தில் நிகழ்ந்த ஒரு விஷயம் பற்றி இப்போது ஒரு தகவல் கிடைத்தது. சொல்லவா?’’

‘‘சொல்லும்!’’

‘‘ஜெயலலிதா இனி தேறி வரமாட்டார் என்று உடன் இருந்தவர்களுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்ட நாள் அது! நள்ளிரவு நேரத்தில், சென்னை மாநகர ரோந்துப் பணி மேற்பார்வையில் இருந்த ஓர் அதிகாரி, டாக்டர் ராதாகிருஷ்ணன் ரோடு, பீச் ரோடு, ராயபுரம், காசிமேடு, எண்ணூர் ரூட்களில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளை மைக்கில் அழைத்து, ‘நான் சொல்லும் இடத்துக்கு உடனே வாருங்கள். இங்கே ஒரு பெரிய பிரச்னை’ என்று சொல்கிறார். அவர்கள் அனைவரும் பதற்றத்துடன் விரைகின்றனர். ஆக, போலீஸ் கண்காணிப்பு இல்லாமல் அந்த ரூட் கிளியர். அதே நேரத்தில் போயஸ் கார்டன் ஏரியாவிலிருந்து நம்பர் பிளேட் இல்லாத ஒரு கன்டெய்னர் லாரி சீறிப்பாய்ந்து வெளியேறுகிறது. ‘அதில் என்ன இருந்திருக்கும்’ என்பதை உமது யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதையெல்லாம் கீழ்மட்ட போலீஸார் கவனித்துக்கொண்டே இருந்தனர். அவர்களை ஆச்சர்யப்படுத்திய ஒரு விஷயம்... அந்த லாரிக்கு முன்னால் பைலட் ஆக காரில் சென்றவர் ஜெயமான ஓர் அதிகாரி. பொதுவாகவே, எண்ணூர் ஏரியாவில் சரக்கு ஏற்றிக்கொண்டு போகும் கன்டெய்னர்கள் ஏராளமாக இருக்கும். அந்தக் கும்பலில் இதுவும் கலந்துவிட்டது. ‘குட்கா விவகாரத்தில் தப்பிக்க வைக்கிறோம்’ என்கிற உத்தரவாதத்தின் பேரில்தான், அவர் பைலட் ஆக மாறி கன்டெய்னரை வழி நடத்தினாராம்.’’

‘‘சென்னை மாநகர போலீஸ் வட்டாரத்தை குட்கா விவகாரம் உலுக்கிக்கொண்டிருக்கிறது. கன்டெய்னர் கதையைச் சொல்லிவிட்டீர்கள். எதில் போய் முடியும் என்று புரியவில்லையே?’’

‘‘கொஞ்ச காலம் அமுங்கிக்கிடந்த போலீஸ் உயர் அதிகாரிகள் கோஷ்டியினர் இப்போது வரிந்துகட்டிக்கொண்டு ஆக்‌ஷனில் இறங்கி விட்டனர். இணை கமிஷனர்கள் மூன்று பேர், ஒரு டெபுடி கமிஷனர்ஆகியோர் குட்கா விவகாரத்தின் புதிய கதாபாத்திரங்கள். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், ‘என்னைப்பற்றி இன்னார் அவதூறு பரப்புகிறார்’ என்கிற ரீதியில் மாறி மாறிப் புகார்களைச் சொல்லி வருகிறார்களாம். ‘இது என்ன ஸ்கூல் பசங்க சண்டை மாதிரி ஆகிவருகிறதே?’ என்று குழம்பிப்போயிருக்கிறாராம் கமிஷனர்.’’

‘‘குட்கா விவகாரம் அம்பலத்துக்கு வர யார் சூத்திரதாரி?’’

‘‘சி.பி.ஐ-யில் பல வருடங்கள் இருந்த அனுபவசாலியான அசோக்குமார், தமிழக டி.ஜி.பி-யாக இருந்தார். பதவி நீடிப்பில் இருந்த அவர்தான், குட்கா விவகாரத்தில் கிடைத்த தகவல்களை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு அனுப்பினார். இந்த குட்கா கோஷ்டியினர் போயஸ் கார்டனில் கோலோச்சிய பவர்ஃபுல் ஆட்களைப் பிடித்து, அவரை ராஜினாமா செய்ய வைத்தார்கள். அந்தக் கோபம் அவருக்கு. ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்குக் கொண்டு செல்லவேண்டும்’ என்று அசோக்குமார் தரப்பினர் அதிகம் விரும்புகிறார்கள். இதில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தவிர, வணிகவரித் துறை அமைச்சர் வீரமணி தரப்பினருக்கு இருக்கும் தொடர்பு, குடோன்கள் கண்காணிப்பில் கோட்டை விட்டது பற்றியும் மத்திய உளவுத் துறையினர் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்.’’

p42d_1516712260.jpg

‘‘கமல், ரஜினி... இந்த வரிசையில் ‘நானும் அரசியலுக்கு வரப்போகிறேன்’ என்று விஷால் அறிவித்தார். லேட்டஸ்ட்டாக, மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதியும் சொல்லியிருக்கிறாரே?’’

‘‘நானும் கவனித்தேன். ‘சினிமாவுக்கு வருவதற்கு முன்பு, அப்பாவுக்காக ஆயிரம் விளக்குத் தொகுதி, தாத்தாவுக்காக துறைமுகம் தொகுதி, முரசொலி மாறனுக்காக மத்திய சென்னை தொகுதியில் ஓட்டுக் கேட்டிருக்கிறேன். நிறைய டூர் போயிருக்கிறேன். எல்லா நடிகர்களும் அரசியலுக்கு வந்துட்டாங்க. எனக்கும் டயம் வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்’ என்று மீடியாக்களிடம் முதல்முறையாக அறிவித்துள்ளார் உதயநிதி. ‘அவரின் அம்மா துர்க்கா ஸ்டாலின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு போட்டுக்கொடுத்த ஸ்கெட்ச்சில் பயணிக்கிறார் உதயநிதி’ என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.’’

‘‘திடீரென கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுகவனத்தைப் பதவியிலிருந்து எடுத்து விட்டார்களே?’’

‘‘நீர் ‘முரசொலி’ பார்த்தீரா? அதில், ‘சுகவனம் தன்னை விடுவித்துக்கொண்டதாக’ போட்டிருக்கிறார்கள். அதுதான் நிஜமும்கூட. உடல்நலத்தைக் காரணம் காட்டி இந்த முடிவை சுகவனம் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. புதிதாக மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் செங்குட்டுவன். இப்போதைய கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ. ரொம்ப விவரமானவராம். எடப்பாடியின் குட்புக்கில் இருப்பவர். அந்த வகையில், செங்குட்டுவன் அவரது தொகுதிக்கு மூன்று பெரிய பாலங்களைக் கொண்டுவந்துவிட்டார். தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் செங்குட்டுவனுக்கு வேண்டப்பட்டவர்தான். கிருஷ்ணகிரியில் நடந்துவந்த திரைமறைவு பாலிடிக்ஸை கவனித்த தி.மு.க மேலிடம், திடீரென அவரை அழைத்து மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்துவிட்டது.’’

‘‘துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கும் தமிழக உயர் அதிகாரிகளுக்கும் ஏதோ உரசலாமே?’’

‘‘துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அடிக்கடி சென்னைக்கு விசிட் அடிப்பது போலீஸாருக்குத் தர்மசங்கடத்தைத் தருகிறது. பொங்கல் சமயத்தில் அவருக்குப் பாதுகாப்பு கொடுக்க போலீஸார் ரொம்ப சிரமப்பட்டனர். திடீரென ஒரு நாள் மதியம், அடையாரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போகவேண்டும் என்று சொன்னாராம். துணை ஜனாதிபதி என்பதால், அவர் செல்லும் ரோட்டில் ‘ஜீரோ டிராஃபிக்’ முறையை போலீஸார் கடைப்பிடிக்கவேண்டும். அதை எப்படிச் செய்வது என்று திணறிப்போய்விட்டார்களாம். காணும் பொங்கல் தினத்தில் கடற்கரைச் சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதும். அந்தச் சமயத்தில் ஏதோ விழாவுக்கு அந்த ரூட்டில் போக விரும்பினாராம். ‘அதெல்லாம் முடியாது’ என்று சென்னை போலீஸார் வேறு ரூட்டில் துணை ஜனாதிபதியைத் திசை மாற்றி விட்டார்களாம். ‘ப்ளூ புக்’ என்கிற அந்தஸ்தில் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி ஆகிய மூவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் அடிக்கடி சென்னைக்கு விசிட் வந்தார் வெங்கையா நாயுடு. ஒவ்வொரு நாளும் பல விழாக்களில் பங்கேற்க நேரம் கொடுக்கிறாராம். குறிப்பாக, ஆந்திராக்காரர்கள் கூப்பிடும் எந்த விழாவுக்கும் போய்விடுகிறாராம். தமிழக அரசின் தலைமைச் செயலாளரில் ஆரம்பித்து போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அனைவரும் துணை ஜனாதிபதிக்கு உரிய மரியாதை செய்யவேண்டியிருக் கிறதாம். இந்தத் தகவல், வாய்மொழி புகாராக ஜனாதிபதிக்கும் போயிருக்கிறது’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை மற்றும் படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு


p42b_1516712100.jpg

நெருங்கும் அதிகாரிகள் டீம்!

ஜினி படு ஸ்பீடாக செயல்படுகிறார். ரஜினி மக்கள் மன்ற வேலூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான பெயர்களைத் திடீரென அறிவித்துவிட்டார். ‘காலா’ பட டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்துகொண்டே, கட்சி விவகாரங்களையும் கவனிக்கிறார். கடந்த வாரத்தில் ஒரு நாள்... ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிர்வாகி சுதாகர், டெக்னிக்கல் டீம் சார்பாக ராஜு மகாலிங்கம் என்று எட்டு பேர் வேலூருக்கு விசிட் போய் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்கள். மறுநாளே வேலூர் மாவட்டத்தில் புது நியமனங்களுக்கான அறிவிப்பு வெளியானது. ‘ஆன்மிக அரசியல்’ என்கிற முத்திரை தன்மீது விழுந்துவிடக்கூடாது என்பதற்காக, பலருக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்திருக்கிறார் ரஜினி. அடுத்தகட்டமாக, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரஜினியின் டீம் செல்கிறதாம். பிப்ரவரி மாதத்துக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை அறிவிக்கப்போகிறார் ரஜினி.

தற்போதுள்ள சிஸ்டத்தை மாற்றியமைக்க நிறைய ஐடியாக்களை எதிர்பார்க்கிறார் ரஜினி. மத்திய அரசுப்பணியில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்ளிட்ட மூன்று பேர், இளம் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலர் சென்னையில் முக்கிய ஹோட்டல் ஒன்றில் இதுபற்றி ஆலோசனை நடத்தினார்களாம். இவர்களுடன் ரஜினி மன்ற முக்கியப் பிரமுகர் ஒருவர் தொடர்பில் இருக்கிறார்.


p42c_1516712126.jpg

‘‘ஒரு கோடி மக்களைச் சந்திப்பேன்!’’

ன் நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் பரபரப்பான ஆலோசனையில் இருக்கிறார் கமல்ஹாசன். அவரது சுற்றுப்பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டங்கள் நடக்கப் போகின்றன. ஆனால், அரங்கக்கூட்டங்களாகவே அவை நடைபெறுமாம்; பொதுக்கூட்டங்கள் கிடையாதாம். அதனால்தான், ‘மதுரையில் பொதுக்கூட்டம்’ எனத் தகவல் வெளியானதும் பதற்றமாகி மறுத்தார் கமல். கமலுக்கு நெருக்கமானவர்கள், ‘ரஜினி தன் மன்றத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கப் போகிறார்’ என்று சொன்னபோது, ‘‘சரி, நான் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி மக்களை நேரில் சந்தித்துப் பேசிடறேன்’’ என்று சொல்லிச் சிரித்தாராம் கமல். 


p42f_1516712047.jpg

சசிகலா தொடர்புடைய மிடாஸ் மதுபான ஆலை, கடந்த இரண்டரை மாதங்களாக சரக்கு உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்ததாம். காரணம்... வருமானவரித் துறை ரெய்டு. பொங்கலுக்குப் பிறகு, மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்துவிட்டதாம். ரெய்டுக்கு முன்பு, மாதம் ஆறு லட்சம் பெட்டிகளை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்தார்களாம். இப்போது அதை இரண்டரை லட்சமாகக் குறைத்துவிட்டதாம் எடப்பாடி அரசு. ‘டாஸ்மாக் சப்ளையில் யாருக்கு எவ்வளவு ஆர்டர் கொடுக்கவேண்டும்’ என்பதை முதல்வரே நேரடியாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறாராம். 

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில், டெல்டா ஏரியாவைச் சேர்ந்த பவர் ஏஜென்ட்கள் சிலர் தலைமைச் செயலகத்தை வலம் வந்தார்கள். இடையில் கொஞ்ச காலம் அவர்களைக் காணவில்லை. கடந்த ஓரிரு மாதங்களாக, மீண்டும் அவர்களின் நடமாட்டம் தெரிகிறது. ‘ஆற்று மணல் கான்ட்ராக்ட் பெற்றுத்தருகிறோம்’ என்று பேரம் பேசி வருகிறார்கள்.

தினகரன் பக்கம் வந்ததால் பதவியை இழந்த 18 எம்.எல்.ஏ-க்கள் ‘‘தனிக்கட்சி ஆரம்பித்தால் தினகரனுடன் போகமாட்டோம்’’ என்று சொல்லிவருவதைக் கவலையுடன் கவனிக்கிறார் எடப்பாடி. ‘‘ஆர்.கே. நகர் அதிரடிபோல தினகரன் ஏதோ திட்டம் தீட்டிவிட்டார். அது என்ன என்றுதான் புரியவில்லை. உளவுத்துறை என்னதான் செய்கிறது?’’ என்று புலம்பிவருகிறாராம் எடப்பாடி.

தினகரனை மட்டும் தனிமைப்படுத்திவிட்டு, சசிகலா மற்றும் நடராசன் குடும்பத்து சேனல்கள் அனைத்தையும் மீண்டும் ஒருங்கிணைத்துத் தங்கள் பக்கம் கொண்டுவர ஸ்பெஷல் பிளான் ஒன்றை எடப்பாடியிடம் போட்டுக்கொடுத்திருக்கிறாராம் உணவுத் துறை அமைச்சர் காமராஜ். மன்னார்குடிக்காரரான இவரின் பேச்சை இந்த சீஸனில் தட்டாமல் கேட்கிறாராம் எடப்பாடி.

திவாகரன் மகன் ஜெயானந்த் அரசியல் ஆசையில் தவிக்கிறார். ‘இவருக்கு இளைஞரணி பதவியை வாங்கித்தரவேண்டும்’ என்று திவாகரன் ஆசைப்பட... தினகரன் தயங்குகிறார். ஜெயானந்த் சமீபத்தில், ‘சுபாஷ் சந்திரபோஸ் மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். நிர்வாகிகளை நியமித்து, தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செல்லவும் ரெடியாகிவிட்டார்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.