Jump to content

உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும்


Recommended Posts

உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும்

 

 
 

உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்களின் நிலையும்

ருத்திரன்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளினால் ஜனநாயக அரசியலை கொண்டு நகர்த்துவதற்கான மக்கள் பிரதிநிதிகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு ஆகும். இந்தக் கூட்டமைப்பில் மிதவாத கட்சியும், ஆயுதப்போராட்டத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு திரும்பிய அமைப்புக்களும் அங்கத்துவம் வகிக்கின்றன. இவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள் போன்று தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து போராடியவர்கள். 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்கால் பேரழிவுடன் விடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசிய அரசியலை முன்னகர்த்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் தானாகவே விழுந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பாக தேர்தல்களில் போட்டியிட்ட போது இணைந்த வடக்கு- கிழக்கில் ஒரு சமஸ்டி அரசியலமைப்பு முறையை உருவாக்கி அதன் மூலம் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியை மேற்கொண்டிருந்தனர். இதனையே அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிப்படுத்துகின்றன. இதற்கே தமிழ் மக்களின் ஆணையும் கிடைத்திருந்தது.

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முனைப்படைந்த காலத்தில் அத்தகையதொரு சமஸ்டி அலகை வழங்குவதற்கு இணங்கியிருந்த அரசாங்கம், அது மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் எத்தகைய தீர்வுத் திட்டத்தையும் முழு மனதுடன் முன்வைப்பதற்கு விருப்பமின்றியே இருந்து வருகின்றது. சர்வதேச சமூகம் தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும், இலங்கையில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கும் ஒரு யுக்தியாக தமிழர் பிரச்சனையை கையில் எடுத்திருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்துடன் இணங்கிச் செயற்பட்டு, ஒரு தீர்வை நோக்கி நகருமாறு வலியுறுத்தியது. இதற்கு அமைவாகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் முழு பாராளுமன்றமும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றம் பெற்று அதனை வழி நடத்துவதற்காக வழிநடத்தல் குழுவும், அதற்கு துணை புரிவதற்காக ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டு, புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு வழிநடத்தல் குழு தன்னுடைய இடைக்கால அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் தேசிய இனத்தின் இனப்பிரச்சனைக்கு தீர்வை கண்டறியும் முகமாகவே, இந்த வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றிருந்தது. ஆனால், தனது மக்களின் அபிலாசைகளான சமஸ்டி அடிப்படையிலான தீர்வு, வடக்கு – கிழக்கு இணைப்பு என்பன நிராகரிக்கப்பட்டு, பௌத்ததிற்கு முதலிடம், ஒற்றையாட்சியின் கீழ் தீர்வு என கூறப்பட்டுள்ள நிலையில் வசனங்களை பார்க்காது அதன் உள்ளடக்கம் தான் முக்கியம் எனக் கூறி இதற்கு தமிழ் மக்கள் ஆணையை கோருகிறது. யாழ் தேவி ரயிலில் கொழும்பு – யாழ்ப்பாணம் தான் செல்ல முடியும். மட்டக்களப்புக்கு செல்ல முடியாது. சட்டரீதியான சிக்கல்கள் தோன்றும் போது அதன் சொற் பிரயோகங்களே கவனத்தில் கொள்ளப்படும். இது கூட்டமைப்பில் உள்ள சட்ட மேதைகளுக்கு புரியாதது அல்ல.

இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒற்றையாட்சி முறை, பௌத்தத்திற்கு முன்னுரிமை, சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை போன்ற விடயங்களில் தமிழ் தரப்பும் இணங்கியிருப்பதாக பகிரங்கமாகவே அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தென்னிலங்கையை திருப்திப்படுத்தும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்து இருக்கின்றது. 1920 ஆம் ஆண்டு பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மனிங் அரசியலமைப்பில் பிரதிநிதித்துவ ரீதியாக ஏற்பட்ட பாதிப்பே நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரே வர்க்கத்தைச் சார்ந்த மேட்டுக்குடி தலைவர்கள் தமது இனம் சார்ந்து தனித்தனியாக பிரிந்து நிற்க வழிவகுந்தது. அந்த நிலை படிப்படியாக தீவிரம் பெற்று இந்த நாடு ஒரு பௌத்த நாடு என்றும், சிங்களவர்களின் தாயகம் என்றும் கருதும் அளவுக்கு அரசியலமைப்புக்கள் கொண்டுவரப்பட்டன. தமிழ் தேசிய இனம் அடக்கப்படுவதற்கும், ஆயுதப் போராட்டம் ஏற்படுவதற்கும் காலத்திற்கு காலம் வந்த அரசியலமைப்புக்களே காரணம். இந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரவேண்டிய புதிய அரசியலமைப்பு தமிழ் தேசிய இனத்தின் இறைமையை அங்கீரித்து அவர்களது ஆட்புல, நிலபுல அடையாளங்களை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும். அதற்கு சமஸ்டியே பொருத்தமானதாக இருக்கும். ஆனால் அதனை விடுத்து ஏக்கிய ராஜ்ஜிய என்கின்ற சொற்பதத்துடன் உள்ள இடைக்கால அறிக்கை ஒற்றையாட்சி முறையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. இதனை தென்னிலங்கை தலைவர்களின் கருத்துக்கள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு தேர்தல்களின் போதும் தமிழ் மக்களது அன்றாட பிரச்சனைகள் தொடக்கம் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு வரையிலான பல விடயங்களை வெளிப்படுத்தியே மக்களிடம் ஆணையைப் பெற்றது. ஆனால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களது எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவகையில் அத்தகைய ஒரு இடைக்கால அறிக்கையை ஆதரிக்கின்றது என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. கூட்டமைப்பு தலைவரின் செயற்பாடுகள் தம்மால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்திருக்கின்றதா என்ற பலத்த சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. வடமாகாண முதலமைச்சர் அவர்களும் இதனை பகிரங்கமாகவே அண்மையில் வெளிப்படுத்தியும் இருக்கின்றார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், படைத்தரப்பினராலும் ஏனையவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிப்பு, பௌத்தர்கள் இல்லாத இடங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர்சிலைகளை அகற்றுதல் போன்ற அன்றாட பிரச்சனைகளில் கூட அரசாங்கத்துடனான தமது நல்லுறவைப் பயன்படுத்தியும், மக்கள் தமக்கு வழங்கியிருக்க கூடிய ஆணையையும் பயன்படுத்தியும், கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் இணக்க அரசியலைப் பயன்படுத்தியும், எதிர்கட்சித் தலைமைப் பதவியைப் பயன்படுத்தியும் சாதகாமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இருந்து கூட்டமைப்பின் தலைவர் தவறியுள்ளார். அங்கத்துவ கட்சிகளும் இந்த விடயத்தில் தலைவருக்கும், அரசிற்கும் உரிய அழுத்தத்தை கொடுத்தாக தெரியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் தங்கள் மீதுள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்க கோரியும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை விதிக்கும் படியும், இல்லையேல் விடுதலை செய்யும் படியும், புனர்வாழ்வு வழங்குபடி கோரியும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு மாதத்திற்குள் உரிய தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி அளித்த உத்தரவாதத்துடன் எதிர்கட்சித் தலைவர் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதத்தை முடித்து வைத்திருந்தார். மாதங்கள் பல கடந்தும், அவர்கள் அதன் பின்னர் பல போராட்டங்களை நடத்தியும் அவர்களது கோரிக்கை 2 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை நிறைவேற்றப்படாது உள்ளது. இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் எவரும் வினைத்திறன் மிக்க வகையில் செயற்பட்டதாக தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும் தாமாகவே வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் இன்று ஒரு வருடத்தை எட்டியுள்ள நிலையில் அது குறித்து காத்திரமான வகையில் கூட்டமைப்பு தலைமை செயற்படவில்லை. அந்த மக்களை கூட சந்திக்கவில்லை. ஆனால் உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவித்தவுடன் மக்கள் மத்தியில் தேசியம் பேசி புதிய அரசியலமைப்புக்கான ஆணையைக் கோர முயல்கிறது.

இடைக்கால அறிக்கை வெளிவந்த பின்னர் பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் ஒரு அங்கமாகவுள்ள வடமாகாண சபையின் முதலமைச்சரும், இடைக்கால அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டு இருந்தார். இந்த இடைக்கால அறிக்கையில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய எந்தவொரு அம்சமும் இல்லை என்ற அடிப்படையில் முன்னாள் நீதியரசராகிய அவரது கருத்து அமைந்திருக்கிறது. அவரை இணைத்தலைவராக கொண்டு செயற்படுகின்ற தமிழ் மக்கள் பேரவை இந்த இடைக்கால அறிக்கையை முற்று முழுதாக நிராகரித்துள்ளது. இதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னனி, ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகளும் இந்த இடைக்கால அறிக்கையை நிராகரித்துள்ளன. தமிழ் சட்டத்தரணிகள் சங்கமும் இந்த இடைக்கசால அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளதுடன் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக தமிழரசுக் கட்சி எதனடிப்படையில் இதற்கு ஆதரவு வழங்குகிறது என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவே எதிர்கட்சித் தலைவர் பதவியையும், வழிநடத்தல் குழுவின் அங்கத்துவத்தையும் ஏற்றுக் கொண்டதாக கூறும் கூட்டமைப்பின் தலைவர் பெரும்பான்மை இனத்தவர்களின் மனநிலையை மாற்றக் கூடிய விதத்தில் காத்திரமாக செயற்படவில்லை. இதன்காரணமாக கூட்டமைபின் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டு அதின் தலைமைக்கு எதிராகவும் மக்கள் அணிதிரண்டு இருப்பதை காண முடிகிறது. மக்கள் பழகிய சின்னத்திற்காகவும் அதன் தாங்கி நிற்கும் கட்சிக்காக மட்டும் வாக்களிப்பார்கள் என்ற குருட்டு நம்பிக்கை இனிமேலும் எடுபடாது. கொள்கையின் அடிப்படையிலான ஐக்கியத்தையே மக்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றாத வெற்றுக் கூட்டமைப்பை அவர்கள் ஒரு போதும் அங்கீகரிக்கமாட்டார்கள். இதனையே அவ்வப்போது நடந்து வரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. மக்கள் அரசியல் ரீதியாக விழிப்படைந்து விட்டார்கள். அவர்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை தலைவர்கள் உணரவேண்டும. மக்களது அபிலாசைகளை முன்னகர்த்தக் கூடிய உண்மையான, மக்கள் மேல் பற்றுக் கொண்ட தலைமைகளை மக்களும் உருவாக்க முன்வர வேண்டும். மக்களுக்காக தலைவர்களே தவிர, தலைவர்களுக்காக மக்கள் அல்ல. இதனை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் போடும் ஒவ்வொரு புள்ளடியும் தீர்மானிப்பதாக அமையவேண்டும். அதுவே மக்களுக்கான நாளைய தலைவர்களை உருவாக்கும்.

http://www.samakalam.com/செய்திகள்/உள்ளூராட்சித்-தேர்தலும்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.