Jump to content

எழுத்தாளர் ஞாநி, சென்னையில் காலமானார்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Writer Gnani passes away

எழுத்தாளர் ஞாநி, உடல்நலக் குறைவால்... சென்னையில் காலமானார்.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

ஆங்கில பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஞாநி சங்கரன். 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர் ஞாநி.

தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர் ஞாநி, 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி.

பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார்.

2014-ம் ஆண்டு ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு ஞாநி தோல்வி அடைந்தார். அதன் பின்னர் தீவிர அரசியலை கைவிட்டார்.

சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்த கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் ஞாநி. சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஞாநி காலமானார்.

அவருக்கு பத்மா என்ற மனைவியும் மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர். மனுஷ் நந்தன், திரைத்துறையில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

மறைந்த ஞாநியின் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது. ஞாநியின் உடலுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தற்ஸ்  தமிழ்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஓ பக்கங்களின் மூலம் தான் இவர் அறிமுகம் , ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் ,நேற்று இரவு 8-27 ற்கு முகநூலில் பதிவிட்டிருக்கிறார் அதிகாலையில் மரணம்,

இவரின் இந்த தொலைக்காட்சி விவாதம் சிறந்த்து என்பேன் 

 

ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறப்பால்...பிராமணராகப் பிறந்தும்....அக்கிரகாரத்துக்குள் மட்டும்  ஒடுங்கி விடாது வெளியேயும் எட்டிப் பார்த்தவர், ஞாநி!

எவ்வளவு அழுத்தங்கள் அவர் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் பிரயோகிக்கப் பட்ட போதும், தனது சுயத்தை ஒரு போதும் இழக்காமல் வாழ்ந்தவர்!

தனது வித்துடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானம் செய்ததன் மூலம்...எனது மதிப்பில்...அதியுயரத்துக்கு உயர்ந்தவர்!

ஆழ்ந்த அஞ்சலிகள்!

21 minutes ago, அபராஜிதன் said:

ஓ பக்கங்களின் மூலம் தான் இவர் அறிமுகம் , ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் ,நேற்று இரவு 8-27 ற்கு முகநூலில் பதிவிட்டிருக்கிறார் அதிகாலையில் மரணம்,

இவரின் இந்த தொலைக்காட்சி விவாதம் சிறந்த்து என்பேன் 

 

ஆழ்ந்த இரங்கல்கள் 

ஒரு தேவாங்கு...இந்தி மட்டும் தான் பேசுவேன் என்று அடம் பிடிக்கும் போது.....மொழி வெறி...என்றால் என்பதை நேரடியாகப் பார்க்க முடிந்தது!

அதனை ஞாநி அவர்கள்...கையாண்ட விதம் மிகவும் அருமை!

Link to comment
Share on other sites

சென்று வாருங்கள் ஞாநி.

BY SAVUKKU · JANUARY 15, 2018

 

26904549_1982253958453184_11094346908511

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால்தான் ஞாநி எனக்கு அறிமுகமாகினார்.   ஜானகி மகளிர் கல்லூரியில் அவர் அரங்கேற்றிய பலூன் நாடகத்தை காண்கையில்தான் ஞாநியின் அறிமுகம் கிடைத்தது. நான் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், ஆனந்த விகடன் இதழில், நக்சல் அமைப்பு குறித்து, ஞாநி எழுதிய தவிப்பு என்ற புதினம் தொடராக வந்தது.   அந்த தொடர் என்னை வசீகரித்தது.   அது முதல், ஞாநியின் எழுத்துக்களை தேடித் தேடி படித்தேன்.

மிகுந்த சிரமத்திற்கிடையே அவர் நடத்திய தீம்தரிகிட இதழை தவறாமல் படித்து வந்தேன்.   பந்நாட்டு வணிக நிறுவனங்களிடம் விளம்பரம் பெற மாட்டேன் என்று பிடிவாதமாக அந்த பத்திரிக்கையை வெறும் சந்தாவை மட்டுமே நம்பி நடத்தினார். விற்பனையாளர்கள் ஒருவரும் சொல்லியபடி பணத்தை தராததால், மிகுந்த மன வருத்தத்தோடு தீம்தரிகிட இதழை நிறுத்தினார் ஞாநி.  உலகமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கலை கடுமையாக எதிர்க்கும் சிபிஎம் கட்சி நடத்தும் செம்மலர் இதழில் கூட பெப்சி விளம்பரங்கள் வந்ததுண்டு.   அச்சில் ஒரு பத்திரிக்கையை நடத்துவதன் சிரமம் அறிந்தவர்கள், இந்த சமரசத்தை புரிந்து கொள்ள முடியும்.  ஆனால், தீம்தரிகிட இதழே நின்று போனாலும் கூட, சமரசம் செய்ய மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார் ஞாநி.

திரைத்துறை, நாடகத் துறை, இதழியல், இலக்கியம், கவிதை என்று ஞாநி தடம் பதிக்காத துறைகளே இல்லை எனலாம்.   ஒவ்வொரு துறையிலும், மக்கள் மற்றும் மக்கள் நலனை மட்டுமே ஞாநி முன்நிறுத்துவார்.  தன் வாழ்நாளின் இறுதிக் கட்டம் வரையில், எவ்வித சமரசங்களுக்கும் ஆட்படாதவர்.

பாலியல் கல்வி, கல்வி சீர்திருத்தம், குழந்தைகள் இலக்கியம் என்று அடுத்த தலைமுறை குறித்து மிகுந்த கவலையோடு சிந்தித்தவர். நம் வாழ்வின் ஒவ்வொரு அணுவிலும் அரசியல் உள்ளது. அரசியல் இல்லாத இடமே இல்லை என்று உறுதியாக நம்பியவர் ஞாநி.   அந்த நம்பிக்கையோடே, தனது அத்தனை படைப்புகளிலும் அரசியல் மற்றும் அது குறித்த தரவுகள் இருப்பதை உறுதி செய்தார்.

இளைய சமுதாயத்தின் மீது தீராத நம்பிக்கையும் பற்றும் வைத்திருந்தார் ஞாநி.  அவர்களை சரியாக தயார்ப்படுத்தினால், தமிழகத்தின் அரசியல் போக்கையே மாற்றக் கூடிய வலிமை படைத்தவர்கள் என்பதை உறுதியான நம்பினார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து மிக மிக விரிவாக எழுதியுள்ளார் ஞாநி.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அரசே நிதியளிப்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார் ஞாநி.

இன்று ஆர்கே நகரில் பிஜேபி என்ற தேசிய கட்சி, நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்று, அவமானப்படுவதற்கு, ஞாநி அவர்கள் நோட்டா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது ஒரு வலுவான காரணமாக இருக்கக் கூடும்.   உச்சநீதிமன்றம், நோட்டா பட்டனை வாக்கு இயந்திரத்தில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு முன்னால், நோட்டாவுக்கு வாக்குச் சீட்டில் சின்னமோ, தனியாக பட்டனோ கிடையாது.  யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று நினைக்கும் ஒரு வாக்காளர், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அதற்கென்று விண்ணப்பம் அளித்து, தனியாக படிவம் பெற்று யாருக்கும் வாக்களிக்கவில்லை என்று அந்த படிவத்தை நிரப்ப வேண்டும்.   வன்முறை சூழ்ந்த தேர்தல் அரங்கில், அப்படி தனியாக சென்று படிவத்தை பெற்று பயன்படுத்த, பெரும்பாலான வாக்காளர்கள் தயங்கினார்கள்.

நோட்டா என்பது வலுவான ஆயுதம்.  அந்த நோட்டாவின் பயன்பாடு அதிகரித்தால், அரசியல்வாதிகள் அச்சம் கொண்டு, நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் வகையில் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்பதை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார் ஞாநி.  உச்சநீதிமன்றம், நோட்டா பட்டனை வாக்கு இயந்திரத்தில் சேர்த்து, அதன் ரகசியத் தன்மையை உறுதிப்படுத்திய பிறகு, இந்தியா முழுக்க நடந்த தேர்தல்களிலும், தமிழகத்தில் நடந்த தேர்தல்களிலும், நோட்டா பெற்ற வாக்குகள், அரசியல்வாதிகளை கலக்கம் கொள்ளச் செய்தன என்பது அப்பட்டமான உண்மை.   பல அரசியல்வாதிகள் வெளிப்படையாகவே நோட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பத் தொடங்கியுள்ளது நோட்டாவின் வீச்சுக்கு சான்று.

ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியின் ஓ பக்கங்கள் தொடர், வாரந்தோறும் அப்போதைய அரசியல் நிகழ்வுகளை கடுமையாக விமர்சித்தது.   அந்த தொடருக்கு தீவிர ரசிகர்களாகி, அதற்காகவே ஆனந்த விகடன் இதழை படிக்கத் தொடங்கியவர்களில் நானும் ஒருவன்.  எந்த முக்கியமான நிகழ்வாக இருந்தாலும், அது குறித்த தனது பார்வைகளை சமரசமில்லாமல் சொல்பவர் ஞாநி.

நான் உட்பட பல எழுத்தாளர்களுக்கு ஆதர்சமாக, உற்சாகமும் ஊக்கம் அளித்தவர் ஞாநி.   அவரின் எழுத்துக்களின் தாக்கம் என் மீது படிந்ததும், நமது கருத்துக்களை தெளிவாக, சமரசம் இல்லாமல் பளிச்சென்று சொல்ல வேண்டியதன் அவசியத்தை நான் ஞாநியிடம்தான் கற்றுக் கொண்டேன்.   பூசி மெழுகி, சிலரை சமாதானம் செய்ய வேண்டுமே, சிலரின் மனது நோகக் கூடாதே என்று மழுப்பலான கட்டுரைகளை  எழுதுபவர்களிடையே ஞாநி ஒரு மாற்றுச் சிந்தனையாளன்.  அவர் எழுத்துக்களில், க்ரே ஏரியா என்பதே கிடையாது.  ப்ளாக் அன்ட் வெயிட்தான்.  தெளிவான தீர்க்கமான பார்வையைக் கொண்டவர்.

ஆனந்த விகடனில், ஓ பக்கங்கள் தொடரில், நிர்வாகத்தோடு ஞாநிக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டது.  கட்டுரையை மாற்றச் சொன்னது விகடன் நிர்வாகம்.  உறுதியாக மறுத்தார் ஞாநி.  ஓ பக்கங்கள் தொடர் நின்றது.

ஞாநியின் எழுத்துக்களுக்கு இருக்கும் வரவேற்பை நன்கு அறிந்த குமுதம் நிறுவனம் உடனடியாக அவரை சுவீகரித்தது.   ஓ பக்கங்கள் குமுதத்தில் தொடர்ந்தது.  2010ம் ஆண்டு உளவுத்துறையின் தலைவராக இருந்த ஜாபர் சேட்டுக்கு, அவர் மகள் பெயரிலும், பின்னர் மனைவி பெயரிலும், தமிழக அரசால், சமூக சேவகர் என்ற ஒதுக்கீட்டு முறையின் கீழ், திருவான்மியூரில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது தொடர்பான அரசாணைகள், ஆவணங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சென்னையில் உள்ள முக்கிய தமிழ் ஆங்கிலப் பத்திரிக்கைகள் அனைத்தையும் அணுகினேன்.  ஜாபர் சேட்டின் மீது இருந்த அச்சத்தின் காரணமாக, ஒரு பத்திரிக்கையும் அந்த செய்தியை வெளியிட தயாராக இல்லை.  வேறு வழியே இல்லாமல், சவுக்கு தளத்திலேயே அந்த ஆவணங்களை வெளியிட்டு கட்டுரை எழுதினேன்.

மறு நாள் காலையிலேயே, சாலையில் சென்ற ஒருவரோடு சண்டையிட்டு அவரை அடித்ததாக காவல்துறையால் கைது செய்யப்பட்டேன்.   அந்த சம்பவத்தை குறிப்பிட்டு, அதை கடுமையாக கண்டித்து ஓ பக்கங்களில், குமுதத்தில் கட்டுரை எழுதினார் ஞாநி.  ஆனால் குமுதம் நிர்வாகம் ஜாபர் சேட்டுக்கு பயந்து அதை வெளியிட மறுத்தது.   குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதுவதை உடனடியாக நிறுத்தினார் ஞாநி.   நான் மிக மிக சாதாரணமாக இணையத்தில் எழுதும் ஒரு ப்ளாக் எழுத்தாளன்.  எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் A NOBODY. ஆனால், ஞாநி, எனது கைது அதிகார துஷ்பிரயோகம், கருத்துச் சுதந்திரத்துக்கான ஆபத்து என்றே பார்த்தார்.   இந்த ஒரே காரணத்துக்காக அந்த கட்டுரைத் தொடர் நின்று போனது குறித்து ஞாநி எந்தக் கவலையும் படவில்லை.

ஆனந்த விகடனில் ஓ பக்கங்கள் தொடர் வந்து கொண்டிருந்தபோது, அதில், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி ஓய்வு பெற வேண்டும், பொறுப்பு ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு கட்டுரை எழுதினார்.  ஸ்டாலினுக்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட வேண்டும் என்று ஞாநி உறுதியாக நம்பினார்.

கட்டுரையை படித்த கருணாநிதி உடனடியாக கழகத்தினரை அழைத்து ஞாநிக்கு எதிராக கண்டனக் கூட்டம் போட உத்தரவிட்டார். 20 ஆகஸ்ட் 2007 அன்று, சென்னை வாணி மகாலில் அந்த கண்டனக் கூட்டம் நடைபெற்றது. அ.மார்க்ஸ், அரசு, பிரபஞ்சன், சி.மகேந்திரன், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், இமையம், தமிழச்சி, சல்மா, ரவிக்குமார், டி.எஸ்.எஸ்.மணி, கரிகாலன் மற்றும் பத்திரிக்கையாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  ஞாநியை பார்ப்பான் என்று எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்டினார்கள்.  மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள 80 வயது பெரியவரை, உடல் நலிவுற்றவரை நீ வேலைக்கு போய் சம்பாதித்து வந்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது கொடுமை இல்லையா.  உடல் நலன் பாதிக்கப்பட்டு உள்ள கருணாநிதி ஓய்வெடுத்துக் கொண்டு, இலக்கியப் பணி ஆற்ற வேண்டும்.  தலைமைப் பதவிக்கு எல்லா வகையிலும் தகுதியுள்ள ஸ்டாலின் பொறுப்புக்கு வர  வேண்டும் என்று எழுதினார்.

அதற்குத்தான் அத்தனை வசவுகளும்.  அவரின் கேள்வியில் இருந்த நியாயத்தை ஒருவருமே பேசவில்லை.  மாறாக, நான்கு மணி நேரம் ஞாநியை திட்டினர்.   அந்த கூட்டத்தில் ஞாநி குறித்து இறையன்பன் குத்தூஸ் என்பவர் ஒரு கவிதை படித்தார்.

வடக்கே ஒரு பார்ப்பன வேதாந்தி கலைஞரின் தலை கேட்கிறான்
இங்கே ஒரு பார்ப்பன அஞ்ஞாநி நஞ்சைக் கக்குகிறான்
பார்ப்பானையும் பாம்பையும் கண்டால்
முதலில் பார்ப்பானை அடி என்றார் தந்தை பெரியார்
நம் சிந்தையெல்லாம் நிறைந்த தந்தை பெரியார்

தொண்டால் பொழுதளக்கும் தலைவரை
இங்கு கொச்சைப்படுத்துகிறான் ஒரு தறுதலை
பொறுமை கலைஞரின் பெருந்தன்மை
இது புரிந்திடுமா அஞ்ஞாநிக்குப் பேருண்மை

யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்? இங்கே
யாரை சந்தோஷப்படுத்த இவன் எழுதுகிறான்?

பார்ப்பன அரசியலைப் புரிந்துகொள்ளடா
பார்ப்பன பத்திரிகை அரசியலைப் புரிந்துகொள்ளடா

இந்த நிகழ்வு முழுவதையும், கருணாநிதி வீடியோவில் பார்த்து அகமகிழ்ந்தார்.   அந்த கூட்டத்தில் மிக வலுவாக ஞாநியை வறுத்தெடுத் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு, அடுத்து நடந்த திமுக மகளிர் மாநாட்டில் கொடியேற்றும் பொறுப்பை கொடுத்து கவுரவித்தார் கருணாநிதி.

ஆனால் இது போன்ற வசவுகளைக் கண்டு அஞ்சி தனது கருத்துக்களை மாற்றிக் கொள்பவரல்ல ஞாநி.   திமுகவின் எதிர்ப்பை பார்த்து, வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கவேயில்லை ஞாநி.   இதுதான் ஞாநி.   ஞாநி ஒரு சுயமரியாதையுள்ள ஒரு அறிவுச் சுடர்.  பரிசில் பாடி பிழைக்கும் அரசவைக் கவிஞர் அல்ல.

ஞாநியை வெகு எளிதாக பார்ப்பான் என்று விமர்சித்தவர்கள், ஜெயேந்திரர் கைதானபோது, அதை வரவேற்று விரிவாக எழுதியவர் ஞாநி என்பதை வசதியாக மறந்து விட்டார்கள்.   ஜெயேந்திரரின்  வழக்கு விசாரணை, இந்தியாவில் எந்த நீதிமன்றத்தில் நடந்தாலும், ஜெயேந்திரர் விடுதலையாகி விடுவார்.  சர்வதேச நீதிமன்றத்தில் அவ்வழக்கை நடத்தினால் மட்டுமே நியாயம் கிடைக்கும் என்று அப்போதே எழுதினார் ஞாநி.   அவர் சொன்னதே இறுதியில் நடந்தது.    ஜெயேந்திரர் மீதான வழக்கில் முழுமையான ஆதாரங்கள் சிக்கியிருந்தாலும், கருணாநிதி அவரை ஒரு நாளும் கைது செய்திருக்க மாட்டார் என்பதையும் ஞாநிக்கு எதிராக அறச்சீற்றம் காட்டியவர்கள் உணர்ந்ததில்லை.

கணினியையும், சமூக வலைத்தளங்களையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை நன்கு அறிந்து, அதை முழுமையாக கற்றுக் கொண்டு, சமூக வலைத்தளங்களில் தன் அரசியல் விமர்சனங்களை வைத்து, அதிலும் தீவிரமான விவாதங்களில் ஈடுபட்டவர் ஞாநி.   அவரின் தெளிவான பார்வையும் தீர்க்கமான சிந்தனையும், தொடர்ந்து அவரை கவனிக்க வைத்தது.

சமூகத்தை ஆழ்ந்து நேசிக்கும் ஒரு மனிதன் எப்படி வாழ்வான் என்பதற்கு சிறந்த உதாரணமாக வாழ்ந்து மறைந்துள்ளார் ஞாநி.   ஒவ்வொரு மூச்சிலும், ஒவ்வொரு சிந்தனையிலும், மக்களை தீவிரமாக நேசித்தவர் ஞாநி.

1982323_10201913568546353_147031496_n.jpடைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் ஷபீர் அகமது, ஞாநி குறித்து “ நான் பத்திரிக்கை உலகில் காலடி எடுத்து வைக்கையில் ஞாநி பத்திரிக்கை உலகில் மிகப் பெரும் ஆளுமை. துளியும் சமரசம் செய்து கொள்ளாத துணிச்சலான பத்திரிக்கையாளர் என்று ஞாநி குறித்த பல கதைகளை கேள்விப் பட்டிருக்கிறேன்.   அவரோடு பழகுகையில் அந்தக் கதைகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்ல என்பதை உணர்ந்தேன்.

ஞாநியின் புத்தகங்களோ, நாடகங்களோ, ஓ பக்கங்கள் தொடரோ, ஒன்று விடாமல் வாசிக்கத் தொடங்கினேன்.   என்டிடிவி இந்து தொலைக்காட்சி சேனலில் 2008ம் ஆண்டு நான் பணிக்கு சேர்ந்தபோது, அது ஒரு சாதாரண, சிறிய சேனலாக இருந்தது.   பலர் பேட்டியளிப்பதை தவிர்ப்பார்கள்.  ஆனால், எங்களை ஊக்கப்படுத்தி எப்போது கேட்டாலும் முகம் சுளிக்காமல் பேட்டியளிப்பார் ஞானி.   எந்த விவகாரமாக இருந்தாலும் தயங்காமல் பேட்டியளித்து, எங்கள் செய்தியை முழுமையடையச் செய்வார் ஞாநி.    வாரத்தில் நான்கு நாட்கள், ஞாநியின் கேகே நகர் வீட்டில் கேமராவோடு நிற்பேன்.

ஞாநியின் கேகே நகர் வீட்டை ஒரு அறிவுக் கூடம் என்றே சொல்லலாம். எப்போதும் அவரைச் சுற்றி ஐந்தாறு பேர் இருப்பார்கள்.  அரசியல் விவாதம், இலக்கிய விவாதம், திரைப்பட கதை விவாதம் என்று வீடு பரபரப்பாக இருக்கும்.    இப்படி அத்தனை விஷயங்களையும் விவாதித்து, அத்தனை பேரோடும் செலவு செய்ய இவருக்கு நேரம் எங்கே இருக்கிறது, இதற்கான சக்தி இவருக்கு எப்படி வருகிறது என்று பல முறை நினைத்து வியந்திருக்கிறேன். அவரின் திறனும் வீச்சும், ஒப்பிட முடியாதது.

எல்லா வகையான விவாதங்களுக்கும் எப்போதும் தயாராக இருப்பவர் ஞாநி.  அவரின் கருத்துக்களை அவரது முகத்துக்கு நேராக மறுக்கும் உரிமையை அனைவருக்கும் அளித்தவர் ஞாநி.   வயது, பாலினம் என்று எந்த மாறுபாடும் பார்க்காமல் அனைவரோடும் எளிமையாக விவாதிப்பவர் ஞாநி.

விகடனில் வெளியான ஞாநியின் கருணாநிதி குறித்த கட்டுரை பெரும் அரசியல் புயலை  கிளப்பியது.   கருணாநிதி உடல்நிலை காரணமாக ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியது அக்கட்டுரை.   ஞாநியை கண்டிக்க ஒரு கூட்டத்தை திமுக ஏற்பாடு செய்திருந்தது.  திமுக பேச்சாளர்களும், திமுக ஆதரவு பத்திரிக்கையாளர்களும், ஞாநி மீது விஷத்தை கக்கினர்.    அவரின் நேர்மை, சாதி, நம்பிக்கைகள், நம்பகத்தன்மை என்று அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டன.  அந்த கூட்டத்தில் ஞாநி மீது வீசப்பட்ட விஷச் சொற்கள் இன்னும் நினைவில் உள்ளது.   ஆனால், ஞாநி ஒரு நாளும் அதற்காக வருந்தவோ, மன்னிப்பு கேட்கவோ மறுத்து விட்டார்.   தான் எழுதியது சரியே என்று இறுதி வரை உறுதியாக இருந்தார்.     அதுதான் மற்றவர்களிடமிருந்து ஞாநியை வேறுபடுத்துகிறது.

ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் வரும் சமயத்திலெல்லாம், போராட்டக் களத்தில் முன்னணியில் நிற்பார் ஞாநி.   கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் அதை எதிர்க்கும் முதல் குரல் ஞாநியினுடையதாக இருக்கும்.

ஞாநியின் மரணம், பத்திரிக்கை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு.   உள்ளதை உள்ளபடி உரைக்க வேண்டும் என்பதை உலகுக்கே உணர்த்தி என்னைப் போன்ற பல பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு உதாரணமாக திகழ்ந்தார் ஞானி.” என்றார் டைம்ஸ் நவ் உதவி ஆசிரியர் ஷபீர் அகமது.

நாட்டில் மதவாதம் தன் ஆக்டோபஸ் கரங்களை பரப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஞாநியைப் போன்ற தீர்க்கமான பார்வையுடனும், தெளிவான சிந்தனை மற்றும் துணிச்சலுடனும் எழுத வேண்டிய எழுத்தாளர்களின் தேவை மிக அதிகமாக இருக்கிறது.   இப்படிப்பட்ட நேரத்தில், ஞாநி மறைந்தது, தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரும் இழப்பு.  ஞாநி மறைந்தது வருத்தமாக இருந்தாலும், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகளோடு அவர் அனுபவித்த அவஸ்தைகளை கேட்க அவ்வளவு வேதனையாக இருந்தது.

ஞாநி எப்படிப்பட்ட மனிதராக இருந்தார் என்பதற்கு ஒரு தீவிர இந்துத்துவா மற்றும் மோடி ஆதரவாளர் ஒருவர் கூறும் கருத்தே சான்று.  ராஜமாணிக்கம் என்ற அந்த மோடி ஆதரவாளர், ஞாநி குறித்து, “மாற்று கருத்துக்களை அனுமதிப்பவர். இன்றைய கால கட்டத்தில் மாற்றுதரப்பை காது கொடுத்து கேட்கும் நபர்களே குறைவு தான். நான் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். என்னுடன் நில் அல்லது என் எதிரிடையாக நில் எனும் தரப்பு தான் ஓங்கி வருகிறது. ஞாநி நிச்சயம் அப்படி அல்ல. அவர் வீட்டில் இருந்திருக்கிறேன்.சாப்பிட்டு இருக்கிறேன். அவருடன் களத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் நேர்மையின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.”  ஒரு தீவிர மோடி ஆதரவாளரின் இந்த கருத்தே ஞாநிக்கு கிடைக்கும் ஆகச் சிறந்த பெருமை.

சென்று வாருங்கள் ஞாநி.  உங்களின் பணியை தொடர்ந்து செய்ய இளைய தலைமுறை காத்திருக்கிறது.     அவர்கள் உங்களை கைவிட்டு விட மாட்டார்கள்.

 

 

Savukku online.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாநியின் மறைவு: வீரியமும் நெகிழ்வின்மையும்

ஆர். அபிலாஷ்

 

 gnanijpg

நமது தோள் பற்றி நின்று அனைத்தைப் பற்றியும் அக்கறையுடனும் நம்பிக்கையுடனும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். அவர் நம் தோளை அணைக்கையில் அவருக்குப் பின் இன்னும் ஆயிரம் கைகள் இதே போல் அரவணைத்து நிற்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. சட்டென அந்நண்பரின் கை விலகும் போது நாம் எடையற்று, இலக்கற்று, இடமற்று போய் விட்ட அச்சமும் பதற்றமும் ஏற்படுகிறது. ஞாநியின் இழப்பு அப்படியான ஒன்று.

ஞாநியுடன் உடனடியாய் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றும் மற்றொரு ஆளுமை சுந்தர ராமசாமி. இருவரின் நுண்ணுணர்வு, நம்பிக்கைகள், செயல்பாட்டுப் புலம் ஆகியவை மாறுபட்டவை. ஆனால் லட்சியவாதம், ஓயாத செயல்பாடு, இளைஞர்களிடம் பழங்கும் பாங்கு, தன்னை ஒரு போக்கின் மையமாக உருவாக்கிக் கொள்ளும் சக்தி இருவருக்கும் பொதுவானவை.

 இன்னொரு வித்தியாசம் இருவருக்கும் உண்டு. நீங்கள் சு.ராவிடம் மாறுபட்டுப் பேசினால் அவர் மௌனமாகி விடுவார். அல்லது வெகு நுணுக்கமாய் தன் எதிர்தரப்பை உணர்த்துவார். ஆனால் அத்தருணங்களில் ஞாநியின் பதில்களோ தெரியாமல் பச்சமிளகாயை கடித்து விட்டாற் போல் உணர வைக்கும். அதனாலே அவரது வாசகர்கள், நண்பர்கள் பலர் அவருடன் ஏதோ ஒரு கட்டத்தில் முரண்பட்டவர்களாக இருப்பர். ஆனால் முரண்பாட்டை லகுவாய் எடுத்துக் கொண்டு அன்பாய் தொடர்ந்து பழகும் கனிவு ஞாநிக்கும் சு.ராவுக்கும் பொதுவானது. 

ஒரு ஆளுமையாக ஞாநியின் இன்னொரு சிறப்பு எப்போதும் தேங்கி விடாமல் இருந்தது. சமகாலத்தில் தொடர்ந்து இருந்தது. மிக சமீபமாய் அவர் வெளியிட்ட யுடியூப் காணொளியை காணும் போது இன்றைய அரசியல் நடப்புகள் குறித்து எப்படி எந்த மயக்கமும் அற்று தெளிவான பார்வை கொண்டிருக்கிறார் என வியப்பு ஏற்படுகிறது. நான் ஒரு அனுபவஸ்தன், நான் சொல்வதைக் கேள் எனும் பெரியமனிதத் தனம் ஒன்றுமில்லை. சகஜமாய் திண்ணையில் இருந்து அரட்டை அடிக்கும் சற்றே புத்திசாலித்தனமான எளிய ஆளின் அணுகுமுறை அவருடையது. அதனாலே மரணத்துக்கு சற்று முன்னும் இளைஞர்கள் அவரை நோக்கிக் கவரப்பட்டார்கள். அவரது கேணி கூட்டத்துக்கு இரு முறை சென்றிருக்கிறேன். அங்கு 50% மேல் 18-20 வயது பையன்கள் அதிகம் வருவார்கள். புதியவர்களை தொடர்ந்து வாசித்து ஊக்குவிக்கும் அக்கறையும் அவருக்கு அதிகம்.

எழுத்துலகில் ஞாநியின் இடம் ஒரு பத்தியாளராக வெகு சிறப்பானது. நான் அவரது பத்திகள் பலவற்றை மீளமீள வாசித்து வியந்திருக்கிறேன். சிக்கலான ஆச்சரியமூட்டும் விவாதங்களோ பார்வையோ அவரிடம் இராது. ஆனால் தனக்கேயான ஒரு புது கோணத்தை நிச்சயம் கொண்டிருப்பார். ஒரு பத்தியை பொட்டில் அடித்தற் போல் ஆரம்பித்து சுருக்கமாய் தெளிவாய், கொஞ்சம் காரமாய், பகடியாய் அவர எடுத்துச் சென்று முடிக்கும் பாங்கு அற்புதமானது. எந்த இளம் பத்தியாளனும் ஞாநியை நிச்சயம் படிக்க வேண்டும். 

ஞாநியிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான அம்சம் இது – எதையும் சொல்வது முக்கியமல்ல, தட்டுத்தடுமாறி தயங்கி கூறாமல் பளாரென கன்னத்தில் அறைவது போல் சொல்ல வேண்டும். இது வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. தொனி மிக மிக முக்கியம். நீங்கள் சொல்வதை நீங்களே தன்னம்பிக்கையுடன் வேகத்துடன் கோபத்துடன் சொல்லாவிடில் வாசகன் அதை சாலையில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை போல் எம்பித் தாண்டி போய் விடுவான். சாக்கடை உடைந்து சாலையை மறித்து அவனை ஒரு நொடி பதறி தயங்கி “என்னடா இது?” என யோசிக்க வைக்க வேண்டும். அதுவே சிறந்த எழுத்தின் தன்மை. இதை நமக்கு ஞாநி கற்றுத் தந்தார்.

எதையும் “ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்…” என சாட்டையாய் விளாசி சொல்பவர்களுக்கு தமிழர் மனதில் என்றும் தனி இடம் உண்டு. தமக்கு ஒவ்வாத கருத்தைக் கொண்டு அஞ்சாமல் நாணயமாய் சொல்பவனை நம் வாசகன் பெரிதும் ரசிப்பான். ஞாநிக்கு ஏற்பட்ட பெரிய வாசகப் பரப்பின் ஒரு ரகசியம் இது.

இனி ஞாநியின் ஒரே பலவீனத்துக்கு வருகிறேன்: அவரது நெகிழ்வின்மை.

 என்னை ஒருமுறை கேணி கூட்டத்தில் பேச அழைத்தார். என்னிடம் தனக்கு அணுக்கமான விசயங்களையும் உடன்பாடில்லாத அம்சங்களையும் குறிப்பிட்டு அறிமுகப்படுத்தினார். அன்று நான் ஞாநியிடம் உள்ள ஒரு முக்கியமான குறையை கவனித்தேன். இன்று நாம் அவரிடம் ஒரு சிறப்பாக காணும் போராட்ட குணம், அச்சமற்ற கருத்தாடல்கள், துணிச்சலான சமூக செயல்பாடு ஆகியவை அவரது முரட்டு சுபாவத்தில் இருந்து வருகின்றன. இந்த முரட்டு சுபாவம் அவரது நெகிழ்ச்சியின்மையில் இருந்து, உண்மை முன் தன்னை நிர்வாணமாய் முன்வைக்கும் துணிச்சலின்மையில் இருந்து வருகிறது. அதாவது அறிவுத் தேடலைப் பொறுத்தமட்டில் ஞாநியின் துணிச்சல் துணிச்சலின்மையில் இருந்து வருகிறது.

சமூக அரசியல் மதிப்பீடுகளில் ஒருவர் நெகிழ்வற்று இருப்பது சிறப்பு என நம்பப்படுகிறது. அதாவது கொள்கையில் உறுதியாக இருப்பது. ஆனால் கொள்கையில் உருக்கு போல் உறுதியாக இருப்பது காந்தாரி கண்ணைக் கட்டிக் கொண்டு கணவனைப் பழிவாங்கியது போலத் தான். அதில் இறுதியில் யாருக்கும் பலன் இல்லை. எல்லாருடைய நம்பிக்கைகளும் எப்போது வேண்டுமெனிலும் தகர்ந்து நொறுங்கும் அளவு பலவீனமானவையே. வாழ்க்கை அப்படித் தான் தொடர்ந்து நம்முடன் கண்ணாமூச்சி ஆடுகிறது. நமது நம்பிக்கைகளை, உறுதியான நிலைப்பாடுகளின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கிறது. துணிச்சல் மிக்கவர்கள் இதை எதிர்கொண்டு கொள்கைகளை மறுபரீசீலனை பண்ண தயாராக இருப்பார்கள். அதற்கு அடிப்படைத் தேவை எதையும் தேவையற்ற உறுதியுடன் பற்றிக் கொள்ளாமல் இருப்பது. தம் அறிவின் புரிதலின் போதாமையை தொடர்ந்து ஏற்றுக் கொண்டு முன்னேறுவது.

 காந்தி இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் தொடர்ந்து தான் கண்டடைந்த உண்மைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த அளவுக்கு அவநம்பிக்கையும் கொண்டிருந்தார். தன்னையும் தன் கொள்கைகளையும் பரிசோதித்துக் கொண்டே இருந்தார். அதனாலே அவர் லகுவானவராய் மிக நெகிழ்வானவராய் இருந்தார். காந்தியுடன் நீங்கள் ஒரு விசயம் பற்றி கடுமையாய் வாதம் புரியலாம். அவரும் உறுதியாய் தன் கருத்துக்களைக் கூறி பிடிவாதமாய் தெரிவார். ஆனால் அடுத்த வருடமே அவர் உங்கள் நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்து விடுவார். இது பலவீனம் அல்ல. வாழ்க்கையை, உண்மையை மிக நெருக்கமாய் கண்டறியக் கூடியவர்கள் தமது நம்பிக்கைகளை விடுத்து மேலும் சிறப்பான நம்பிக்கைகளை அடைய என்றும் தயாராக இருப்பார்கள். ஞாநியும் உங்களுடன் மாற்றுக்கருத்துக்களை விவாதிக்கும் போது உங்கள் தரப்பை அனுமதிக்கும் அளவுக்கு தாராள மனத்துடன் இருப்பார். ஆனால் அவருக்கும் காந்திக்குமான வித்தியாசம் ஞாநி துளி கூட என்றும் மாற மாட்டார் என்பது.

 இந்த உலகில் மாறாத எதுவுமே செயற்கையானது. உண்மைக்கு விரோதமானது. இதை ஞாநி உணர்ந்து கொண்டார். ஆனால் ஏற்றுக் கொள்ள தயாராகவில்லை. ஆகையால் தன் நம்பிக்கைகளை இன்னும் ஆவேசமாய் அணைத்துக் கொண்டார்.

ஒரு விவாதத்தை ஞாநி கருத்துப் பகிர்தல் எனக் கூறுவார். இரு முரண்பட்ட கருத்துக்கள் மோதி புதுக் கருத்து உருவாவதே சரியான விவாதம் என அவர் ஏற்க மாட்டார். உன்னுடன் நான் பேசி உன் கருத்தை மற்றி அமைப்பதே விவாதம் என்றார் அவர். அது விவாதம் அல்ல பிரச்சாரம். விவாதம் என்பது உன்னுடன் நான் பேசி, அதன் விளைவாய் நாம் இருவரும் நம் குறைகளை அறிந்து ஒரு புது உண்மை நிலையை போய் அடைவது. ஞாநி இதை ஏற்கவில்லை. விளைவாய் தனியாக நின்று கத்தி சுற்றிக் கொண்டே இருந்தார்.

 ஞாநில் தனது நம்பிக்கையை தனது விவாதம் துவங்கும் முன்பே உருவாக்கி இருப்பார். விவாதத்தின் போது அதை மிக வலுவாக வைப்பார். எதிர்தரப்பின் வாதத்தில் நியாயம் இருப்பதாய் தோன்றினால் உடனே தன் காது கண்களை மூடிக் கொள்வார். தான் மாறி விடக் கூடாதே எனும் அச்சம் அவருக்குள் வெகுவாக இருந்ததாய் கணிக்கிறேன்.

ஞாநி நம்முடன் நிறைய பேச ஆசைப்பட்டார். நம்மையும் பேச விட்டார். ஆனால் நாம் பேசுவது தன் மனதுக்குள் சென்று தாக்கம் செலுத்தக் கூடாதே என மிகவும் பிரயத்தனப்பட்டார். “ஐயோ என் நம்பிக்கைகள் தளர்ந்து விடக் கூடாதே” என பிரார்த்தித்தார். அவரது பார்வை சிலநேரம் மேம்போக்காய் தட்டையாய் தெரிவது அவரது நுண்ணுணர்வு இன்மையாலோ அறிவுக்குறைபாட்டாலோ அல்ல. தன் மனம் அதன் போக்குக்கு தழைத்து வளர அவர் அனுமதிக்காததனால் தான். தன் மனத்தை தான் ஏற்கனவே முடிவு செய்த கருத்தியலுக்குத் தோதாய் அவர் ஒரு பொன்சாய் மரம் போல் மாற்றிக் கொண்டததனால் தான்.

கேணி கூட்டத்தில் நான் பேசும் போது “தன்னை ஒருவன் எழுத்தாளனாய் கருதுவது ஒரு கற்பிதம் மட்டுமே. நாம் எதேச்சையாய் எழுத்தாளனாய் இருக்கத் தலைப்படுகிறோம். அதற்கு கிடைக்கும் பெயரோ பழியோ நமக்கானது அல்ல. நாம் உண்மையில் இதற்கு வெளியில் இருக்கிறோம்” என்றேன். ஞாநி அடுத்து இதற்கு எதிர்வினையாற்றினார். அபிலாஷ் வேதாந்தம் பேசுகிறார் என கடுமையாய் கோபித்தார். எனக்கு அவரது எதிர்வினையில் எந்த பிரச்சனையும் இல்லை. நான் வேதாந்தியும் அல்ல. ஆனால் வேதாந்தத்தை ஏன் ஒருவர் மட்டமான விசயமாய் பார்க்க வேண்டும்? ஞாநியின் முற்போக்குவாதம் தனக்கு எதிரான அனைத்தையும் மறுக்கக் கூடியது. அப்படி மறுப்பது அறிவுக்கும் பண்பாட்டுக்கும் எதிரானது. நான் தனிப்பட்ட முறையில் நான் நம்பாத ஏற்காத விசயங்களைக் கூட அறியவும் அவற்றுடன் உரையாடி என்னை விரிவுபடுத்தவும் விரும்புவேன். ஒரு அறிவுஜீவி, எழுத்தாளன் விட்டு விடுதலையாகி இருக்க வேண்டும். அவனுக்கு கருத்துக்களில் பிடிப்பு இருக்கலாம். ஆனால் கருத்துக்களால் அவன் தன்னை பிணைத்துக் கொள்ளக் கூடாது. ஞாநிக்கு ஒரு பலவீனம் இருந்ததென்றால் அது இது மட்டுமே! 

அவர் ஒரு கனத்த சங்கிலியால் தன் கை கால்களை பிணைத்துக் கொண்ட பின்னரே நடைபழகுவார். இதனால் அவரால் வெகுதூரம் போக முடியவில்லை. 

போய் வாருங்கள் ஞாநி. உங்களால் கூடுதல் ஒளி பெற்ற ஒரு மனத்தின் அன்பும் பிரார்த்தனையும். அடுத்தமுறை விட்டுவிடுதலையான ஒரு பட்சியாக எங்களிடம் வாருங்கள்!

 

http://thiruttusavi.blogspot.co.uk/2018/01/blog-post_15.html?m=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: 2 Personen, Meme, Brille und Text

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.