Jump to content

ராதா பாட்டியும் ஐஸ்வர்யாவும்


Recommended Posts

ஒவ்வொரு பண்டிகை நாளின் முன்னிரவிலும் ராதா பாட்டியும்.. ஐஸ்வர்யாவும் தவறாமல் நினைவுக்கு வருகிறார்கள்.

ராதா பாட்டியை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியென்ன சிறப்பு அவருக்கு..

அதற்குப்பின் ஒரு கதை இருக்கிறது.

அது ஒரு பண்டிகை நாளின் முன்னிரவுப்பொழுது. குழந்தைகளுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்பதால் குடும்பத்துடன் துணி கடைக்கு சென்று கொண்டிருந்தேன். அது நாங்கள் தற்போது புதிதாக குடியேறிய பகுதி.

வழியில் ஒரு ஏடிஎம்-ல் டெபிட் கார்டில் ஏதாவது மிச்சம் கிச்சம் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக வண்டியை நிறுத்தினேன். ஏடிஎம் கதவை திறந்து நுழைவதற்கு முன்தான் அவர்களை பார்த்தேன். ஒரு பாட்டியும் பேத்தியும்.. பக்கத்தில் இருந்த நடைப்பாதை திண்டில் அமர்ந்திருந்தார்கள். பாட்டிக்கு 70 வயதும் சிறுமிக்கு 7 வயதும் இருக்கும்.

கடும் குளீர் நிறைந்த பனிகாலம் அது. ஆனால் அந்த சிறுமி வெறும் ஜட்டி மட்டும் அணிந்து பாட்டியின் மடியில் அமர்ந்திருந்தார். லட்சணமாக இருந்தாள் பாப்பா. அந்த கடும் குளீரில் குழந்தை ஆடை எதுவும் இல்லாமல் அந்த சிறுமி இருப்பதை பார்த்த நொடி மனதை என்னவோ செய்தது. பாட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரிடம் கையை நீட்டினார்.. அவர் ஏதோ சில்லறையை போட்டுவிட்டு நடந்தார்.

அந்த காட்சியை பார்த்தபடியே வண்டியை கிளப்பினேன். துணிக்கடைக்குள் நுழைந்து இளமாறனுக்கும் இளஞ்செழியனுக்கும் துணி எடுத்த என் மனைவி, அடுத்ததாக சிறுமிகளின் ஆடை பிரிவுக்குள் நுழைந்தார்.

எங்களுக்கு இரண்டு மகன்கள்.. இவர் எதற்கு பெண் பிள்ளைகளின் ஆடை பிரிவுக்கு போகிறார் என்று நானும் கேட்கவில்லை.. அவரும் சொல்லவில்லை. கிரெடிட் கார்டின் துணையுடன் தான் மாதத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன் என்பது என் மனைவிக்கும் தெரியும். இரண்டு ஜோடி சிறுமிகளுக்கான உடையை எடுத்து முடித்தார்.

பில்லிங்க் கவுண்டரில் கார்டை தேய்த்துவிட்டு வெளியே வந்தால் மணி பதினொன்றரை ஆகிவிட்டிருந்தது.

நேராக வண்டியை அந்த ஏடிஎம்க்கு விட்டேன். அங்கு நாங்கள் எதிர்பார்த்த பாட்டியும் பேத்தியும் இல்லை. என்னடா இது.. இந்த நேரத்தில் அவர்களை எங்குப்போய் தேடுவது.. என்று ஒரு கணம் குழப்பம். எதுக்கும் ஏடிஎம் காவலாளி தாத்தாவிடம் கேட்டுப்பார்ப்போம் என்று விசாரித்தேன்.

“அவங்களா.. இங்கதான் ரோட்டோரத்தில் படுத்துருப்பாங்க..” என்று கை காட்டினார். “கொஞ்சம் சிரமம் பார்க்காமல் வந்து காட்டமுடியுமா..” என்று கேட்டேன்.

“என்னாத்துக்கு அவங்கள தேடுறீங்க..” என்றார். “அந்த பாப்பாவுக்கு புது துணி எடுத்தோம். அத குடுக்கணும்..” என்றதும், “சரி வாங்க..” என்று எங்களுக்கு முன் நடந்தார். வழக்கமாக அவர்கள் படுக்கும் இடத்திற்கு கூட்டிச்சென்று பார்த்தார்.. அங்கு அவர்கள் இல்லை. பக்கத்து சந்துல இருப்பாங்க.. வாங்க அங்க போவோம் என்று வேறொரு இடத்திற்கு அழைத்து சென்றார்.

அது ஒரு முட்டுச்சந்து.. அதன் ஓரத்தில் அந்த பாட்டியை கட்டிப்பிடித்தபடி அந்த சிறுமி படுத்திருந்தார். இருவருக்கும் கீழே சாக்கு விரிக்கப்பட்டிருந்து.

காவலாளி தாத்தா சத்தம் கொடுத்ததும் பாட்டி எழுந்தார். “அந்த புள்ளைக்கு துணி எட்டாந்துருக்காங்களாம்.. எழுப்பு..” என்றார். எழுப்ப வேண்டாம் என்று சொல்லியும் பாட்டி.. “ஐஸு.. ஏ.. ஐசுவர்யா.. உனக்கு புது துணி கொண்டாந்துருக்காங்க பாரு.. எந்திரி” என்று பேத்தியை எழுப்பினார்.

என் மனைவி அந்த சிறுமியிடம் புதுத்துணி இருந்த பையை கொடுத்ததும்.. அந்த குழந்தையின் முகத்தில் தெரிந்த சந்தோசம் இந்த பதிவை எழுதும் இந்த நொடி கூட எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

அவர்களிடமிருந்து விடைப்பெற்று காவலாளி தாத்தாவுடன் வண்டியை நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நடந்து வரும்போதுதான், பாட்டி பேத்தி பற்றி விசாரித்தேன்.

“அந்தம்மா இங்க ரோட்ல உக்கார்ந்து பிச்சையெடுக்கும்.. அந்த புள்ள அது பேத்தி இல்ல.. ஆத்தாளும் அப்பனும் வுட்னு ஓடி போய்ட்டாங்க.. இந்தம்மா எடுத்து வளர்க்குது.. ரோட்டோரத்தில்தான் படுத்துப்பாங்க..” என்றார் தாத்தா. அதை கேட்ட நொடி பண்டிகை கொண்டாட்டத்திற்கான மனநிலை மாறிப்போனது.

வெடி சத்தம் காதுகளை பிளக்க ஆரம்பித்திருந்தது.. வான வேடிக்கைகள் பிரகாசமாக ஒளிரூட்டிக் கொண்டிருந்தன. பிச்சை எடுத்தாலும் பாட்டி மனதில் வானுயர நின்றார். அந்த குழந்தைக்கு ஒரு நல்ல வழியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் மனதை ஆக்கிரமித்திருந்தது.

அதன்பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை ஐஸ்வர்யாவை பார்க்க சென்றேன். நாங்கள் வாங்கி கொடுத்த துணியைதான் அப்போதும் அணிந்திருந்தாள் குழந்தை. “கழட்டவே மாட்டேங்குதுப்பா..” என்று சிரித்தார் பாட்டி. பாட்டியும் கிழிந்த சேலைதான் அணிந்திருந்தார்.

“சரி.. வாங்க பக்கத்துல போவோம்..” என்று அவர்களை அழைத்துக்கொண்டு பக்கத்து தெருவில் இருந்த துணிக்கடைக்கு சென்றேன். ஐஸ்வர்யா பயங்கர குஷியுடன் ஓடி வந்தாள். பாட்டியிடம் அவருக்கு சேலையை தேர்வு செய்ய சொன்னேன். “வாயல் சேல.. நீயே பார்த்து எதுனா வாங்கி கொடுப்பா..” என்றார் கூச்சமாக.

“இல்ல.. நீங்களே உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க.. என்று சொல்ல.. “நீல வானம் கலரில் காட்டுங்க..” என்று சொல்லி அவருக்கு பிடித்த சேலையை எடுத்துக்கொண்டார். அதன்பிறகு குழந்தைகள் பிரிவுக்குப்போய் ஐஸ்வர்யாவுக்கு துணி எடுத்துவிட்டு மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டுவந்து விட்டேன்.

அப்போதுதான் பாட்டி அருகே அமர்ந்து ஐஸ்வர்யாவின் கதையை கேட்டேன். ராதா பாட்டி அமிஞ்சிக்கரையில் ஒரு குடிசைப்பகுதியில் இருந்தபோது பக்கத்துவிட்டில் இருந்தவர் ஐஸ்வர்யாவின் அம்மாவின் அம்மா. அதாவது ஐஸ்வர்யாவின் ஒரிஜினல் பாட்டி.

அவர் ஒருநாள் திடிரென இறந்துப்போகிறார். அப்போது ஐஸ்வர்யாவின் அம்மாவுக்கு 8 வயது. அவரை அநாதையாக விடக்கூடாது என்பதற்காக ராதாம்மா தன் பிள்ளைகளோடு அந்த பிள்ளையையும் அரவணைத்து வளர்க்கிறார்.

வாலிப வயது நெருங்கியதும் அந்த பெண்ணுக்கு ஒரு மதுரைக்காரனுடன் காதல் வருகிறது. அவன் தப்பானவன் என்று பாட்டி எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் அவனுடன் வாழ்க்கை நடத்துகிறார். அந்த குடும்ப வாழ்க்கைக்கு சாட்சியாக பிறந்த குழந்தைதான் இந்த ஐஸ்வர்யா.

அதன்பிறகுதான் தெரிகிறது.. மதுரைக்காரன் ஏற்கனவே திருமணமானவன் என்பது. ஒருநாள் அவன் அப்படியே அம்போவென விட்டுவிட்டு ஓடிவிடுகிறான். அதன் பிறகு இந்த சிறுமியின் அம்மாவுக்கும் புதிதாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட குழந்தையை விட்டுவிட்டு போய்விடுகிறார்.

ஆதரவற்று நின்ற குழந்தை ஐஸ்வர்யாவை.. அவரின் அம்மாவை அரவணைத்த அதே ராதாம்மா ஓடி வந்து அணைத்துக்கொள்கிறார்.

இரண்டு வயது குழந்தையாக விட்டுச்சென்ற அம்மா பின்னெப்போதும் வந்து பார்க்கவில்லை. ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது ஐஸ்வர்யாவுக்கு எல்லாமே ராதா பாட்டிதான். ராதா பாட்டிக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள்.. அவர்கள் குடிசை வீடுகளில் வாடகைக்கு இருக்கிறார்கள்.

இடப்பற்றாக்குறை என்பதால் அங்குபோகாமல் பாட்டியும் பேத்தியும் ரோட்டோரத்தில் தான் படுத்துக்கொள்கிறார்கள். காலையில் குளிக்க வைத்து அருகே இருக்கும் மாநகராட்சி பள்ளிக்கு ஐஸ்வர்யாவை அனுப்புகிறார் பாட்டி. பின்னர் சாலையோரத்தில் பாட்டி கையை நீட்டுவார். அந்த பணத்தில் ஐஸ்வர்யாவை கவனித்துக்கொள்கிறார்.

ஆக முன்பு அம்மாவை வளர்த்து ஆளாக்கியவர் இப்போது மகளையும் வளர்த்துக்கொண்டிருக்கிறார். இவ்வளவிற்கும் அவர்கள் அவரின் ரத்த உறவுகள் அல்ல.

ராதா பாட்டி, ஐஸ்வர்யா தனக்கு பேத்தியான இந்த வரலாறை சொல்லி முடித்தபோது பக்கத்தில் ஏதுமறியாமல் விளையாடிக்கொண்டிருந்தது அந்த குழந்தை. மனதை என்னவோ செய்தது.. அருகே அழைத்து தலையை தடவிக்கொடுத்தேன்.

பாட்டியிடம், ஐஸ்வர்யாவை நல்ல விடுதியுடன் இருக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறேன்.. இங்கு இருந்தால் அவளின் அம்மாவின் வாழ்க்கை வீணானதுபோல் ஆகக்கூடும் என்று விளக்கினேன். யோசனைக்குப்பின் “சரிப்பா.. இந்த வருசம் முடியட்டும்..” என்று சம்மதித்திருக்கிறார்.

2 வயசில் இருந்து ஆதரவற்று நின்ற ஒரு குழந்தையை தன் பிள்ளையாக வளர்ப்பவரிடமிருந்து திடீரென பிரித்து விடுதியில் சேர்ப்பது என்பது இருவருக்கும் கஷ்டமானதுதான். ஆனால் அம்மாவைப்போலில்லாமல் அந்த குழந்தையின் வாழ்வு வசப்பட வேண்டுமானால் பிரிவுகள் அவசியம்.. மாதத்திற்கு ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று பாட்டிக்கு நம்பிக்கை அளித்திருக்கிறேன்.

“உன்ன நல்ல ஸ்கூல்ல சேர்க்கிறேன்.. படிக்கிறீயா..” என்று கேட்டேன். சந்தோசமாக தலையை ஆட்டினாள்..
தலையை தடவிக்கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.

வரும் கல்வி ஆண்டில் அந்த குழந்தைக்கு நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். நண்பர்கள் துணை நிற்பார்கள்..

ராதா பாட்டி போன்ற எளிய மனிதர்கள் தான் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கிறார்கள்.

அரசியல்வாதிகளுடன் கோடுகளால் மல்லுக்கட்டுவது மட்டுமல்லாது ராதா பாட்டி போன்ற அன்பான மனிதர்களை அடையாளம் காட்டும் பணியை www.linesmedia.in தொடர்ந்து செய்யும்..!

பல்லாயிரம் கோடிகள் குவித்து மாஃபியா கும்பலுக்கு நடுவில் வாழ்ந்து நொடியில் ஒண்ணுமில்லாமல் மண்ணோடு மண்ணாக மரணித்துப்போகும் மனிதர்களுக்கு நடுவில் ராதா பாட்டி போன்றவர்கள்

வாழ்தலின் அர்த்தத்தை மேலும் அழகாக்கிறார்கள்.. ?

-கார்ட்டூனிஸ்ட் பாலா
லைன்ஸ் மீடியா

( கடந்த ஆண்டு எழுதிய இந்த பதிவை படித்துவிட்டு தம்பி Shahul M Kasim அடம்பிடித்து ராதா பாட்டிக்கு கொடுக்கச்சொல்லி கொஞ்சம் பணம் அனுப்பினான்.

அந்த பணத்தில் பாட்டிக்கும் பேத்திக்கும் தீபாவளிக்கும் பொங்கலுக்கும் புத்தாடையும்.. கொஞ்சம் பணமும் அவன் பெயரை சொல்லி கொடுத்திருக்கிறேன்..

அதை வாங்கிய கணம் அவர்கள் முகத்தில் ஒளிர்ந்த ஒளியை எந்த இறைவனிடமும் நம்மால் காண முடியாது.. நன்றி தம்பி.)

 

 

www.linesmedia.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் போன்ற நல்இதயம் கொண்டவர்களினால்தான் உலகம் அழகாக இயங்கிக் கொண்டிருக்கின்றது....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.