Jump to content

தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலும் ரஜினிகாந்தின் முடிவும்

ச.திருமலைராஜன் 

சினிமா என்னும் மாய வலையில் பின்னப் பட்ட தமிழக அரசியல்

தமிழக அரசியல் பிற இந்திய மாநில அரசியல்களில் இருந்து வித்தியாசமானதும் வினோதமானதும் ஆகும். சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸுக்கு இருந்த இயல்பான வரவேற்பாலும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தக் கட்சி என்பதினாலும் 17 வருடங்கள் வரை காங்கிரஸ்ன் தாக்குப் பிடித்து விட்டது. அதன் பிறகு இன்று வரையிலும் இனி எதிர்காலத்திலும் கூட சினிமா இல்லாத தமிழக ஆட்சி என்பது கிடையாது என்பதே தமிழகத்தின் நிலை. காங்கிரஸ் ஆட்சியின் பொழுது தமிழகத்தை நன்கு அறிந்த தமிழகத்தின் பூகோளம், சமூக வரலாற்றுப் பிரச்சினைகள் அறிந்த அதன் உண்மையான தேவைகள் அறிந்த ராஜாஜி, காமராஜ் போன்றோர் முதலமைச்சர்களாக ஆட்சி செய்தார்கள். அவர்களுக்கு தமிழகத்தில் எந்த ஊர் எந்த இடத்தில் இருக்கிறது அங்கு என்ன நதி ஓடுகிறது என்ன விவசாயம் செய்கிறார்கள் அவர்களுக்கு வருமானத்துக்கு என்ன வழி என்பதையெல்லாம் நேரடியாக அறிந்தவர்கள் ஆட்சி செய்தார்கள்.

சினிமா, நாடகம், இசை போன்ற பொழுது போக்கு அம்சங்களின் தாக்கங்களை காங்கிரஸ் ஓரளவுக்கு அறிந்தேயிருந்தது. பல காங்கிரஸ்காரர்களும் அந்த வகை பொழுது போக்குகளை பிரசாரங்களுக்கும் பயன் படுத்தியே வந்தார்கள். ஆனால் இந்த பொழுது போக்கு அம்சங்களில் இருந்த கவர்ச்சியையும் அவை தரும் பிராபல்யத்தையும் அவை மூலமாக ஆட்சியை அடைய முடியும் என்ற தந்திரத்தையும் திராவிட இயக்கக் கட்சிக்காரர்களே முழுதாக புரிந்து வைத்திருந்தார்கள். அண்ணாத்துரை, கருணாநிதி, முரசொலிமாறன், எஸ் எஸ் ராஜேந்திரன், டி.ஆர்.ராமச்சந்திரன், எம்..ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் என்று எண்ணற்ற நடிகர்களையும் வசனகர்த்தாக்களையும் தீவீரமாக அரசியலுடன் சினிமாவிலும் பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்தார்கள் அதன் விளைவாக 1967ல் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. அண்ணாத்துரையின் வசீகரமான பேச்சை விட அவர்களுக்கு பெரும் அளவில் உதவி செய்தது எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நடிகனின் முகக் கவர்ச்சியே. அதனால் தான் அண்ணாத்துரை தம்பி “உன் முகத்தை மட்டும் காட்டு ஓட்டு விழும்” என்று நம்பிக்கையுடன் சொன்னார். மேலும் எம்.ஜி.ஆர் மீதான துப்பாக்கித் தாக்குதலை
ஃபோட்டோ போட்டு பிரசாரத்துக்குப் பயன் படுத்திக் கொண்டார்கள். விளைவு திமுகவின் அபரிதமான வெற்றி. அன்றைய வெற்றிக்குக் காரணமாக காங்கிரஸ்களின் முதலாளித்தனமான ஆட்சி, திராவிட இயக்கங்களின் தாக்கம், இந்திப் போராட்டம் என்று ஆயிரம் காரணங்கள் சொல்லப் பட்டாலும் அவை அனைத்தையும் மிஞ்சி திராவிட ஆட்சி தமிழகத்தில் தன் விஷ வேர்களைப் பரப்ப பெருந்துணையாக இருந்தது எம்.ஜி.ஆர் என்னும் ஒரு மாபெரும் சினிமா கவர்ச்சி மட்டுமே. எம் ஜி ஆர் இல்லாவிட்டால் அவர்களுக்கு அவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமாகியிருக்காது.

ஆட்சிக்கு வந்த பிறகு அண்ணாத்துரை உடல்நலம் இன்றி சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பிய பொழுது கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிக வெப்பம் உமிழும் விளக்குகள் மூலமாக அவர் படம் எடுக்கப் பட்டது அவரது உடல்நிலையை மேலும் மோசமாக்கி அவரது மறைவுக்கு இட்டுச் சென்றது என்பார் மறைந்த தியாகி நெல்லை ஜெபமணி. ஆக சினிமா என்பது அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஒரு கருவியாக மாறிப் போனது. தொடர்ந்து கருணாநிதிக்கும் எம் ஜி ஆருக்கும் பிளவு ஏற்படக் காரணங்களில் ஒன்றாக அமைந்ததும், அதே சினிமாதான். தன் மகன் மு.க.முத்துவை எம் ஜி ஆர் போலவே மேக்கப் முடியலங்காரம் நடிப்பு எல்லாம் செய்ய வைத்து ஒரு எம் ஜி ஆர் க்ளோன் போல உருவாக்கி கருணாநிதி முன்னிலைப் படுத்த முயன்றதும் ஒன்றாகும். பின்னர் அதுவே எம் ஜி ஆரின் வெளியேற்றத்துக்குக் காரணமாக அமைந்தது. எம் ஜி ஆர் விலகிய பின்னும் அவர் இருந்தவரையிலும் ஆட்சிக்கு வர முடியாத கருணாநிதி சினிமாவை மட்டும் என்றும் கை விடவே இல்லை. இன்று அவரது மூன்றாவது தலைமுறையினரும் அதே சினிமாவுக்குள் நடிக்கவும் தயாரிக்கவும் இறங்கும் காரணமும் அதுதான். கருணாநிதி குடும்பம் மட்டும் அல்ல சினிமாவுக்கு சம்பந்தமில்லாத சசிகலா குடும்பத்தினரும் அதன் காரணமாகவே சினிமா தயாரிப்புக்குள் இறங்கினர். ஆக இன்று மட்டும் அல்லாமல் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாகவே தமிழகத்தில் மக்களிடம் அறிமுகம் ஆக வேண்டும் என்றால் அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றால் சினிமாவில் இருப்பது என்பது முக்கியமான ஒரு அம்சமாகிறது.

தமிழகத்தில் பிற துறைகளில் மக்களுக்காக உழைத்த, வெற்றி பெற்ற சாதனையாளர்கள் ஏராளமாக உள்ளனர். அப்துல் கலாம், கேன்சர் மருத்துவர் டாக்டர் சாந்தா, ராக்கெட் சயிண்டிஸ்டுகள், பொறியாளர்கள், மக்களிடம் சிந்தனை மாற்றத்தை எற்படுத்த விரும்பிய எம்.எஸ்.உதயமூர்த்தி போன்ற சிந்தனையாளர்கள், நீர் ஆதாரத்தை இணைக்கத் திட்டமிடும் ஏ.சி.காமராஜ் போன்ற பொறியாளர்கள் இன்னும் பல நூறு திறமையான நிர்வாகிகள் சமூக சேவகர்கள் எவருமே மக்களிடம் ஓரளவுக்கு பிரபலமடைந்திருந்த போதிலும் தேர்தல் என்று வரும் பொழுது அவர்களை எந்நாளும் மதித்துத் தமிழர்கள் ஓட்டுப் போட்டதில்லை. எம்.எஸ்.உதயமூர்த்தி ஒரு சோதனை முயற்சியாக ஒரு பத்து தொகுதிகளில் நின்று பார்த்தார் அனைத்திலும் அவர் சில நூறு ஓட்டுக்களே பெற்று படு தோல்வி அடைந்து தன் முயற்சியைக் கை விட்டார். அரசியல்வாதிகளிலும் கூட தமிழகம் எங்கும் அலைந்து திரிந்து அதன் பூகோளத்தை நன்கு அறிந்து தமிழகத்துக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் பொன் ராதாகிருஷ்ணன் போன்ற தன்னலமற்ற தலைவர்கள் கூட தமிழர்களினால் அடையாளம் காணப் பட்டு மதிக்கப் பட்டதில்லை. எப்படியாவது தமிழர்களிடம் நேர்மையையும் ஊழலற்ற ஆட்சியின் அவசியத்தியத்தையும் கொண்டு சேர்த்து விடலாம் என்று அயராது பாடு பட்டு தமிழகம் முழுவதும் அலைந்து பிரசாரம் செய்த தியாகி நெல்லை ஜெபமணி, தமிழருவி மணியன் போன்றோர்களையும் தமிழர்கள் என்றுமே லட்சியம் செய்யவில்லை.

கொஞ்சவாவது கூட்டம் கூடி கேட்க வைப்பதற்குக் கூட ஒரு சினிமா பிராபல்யம் அவசியமானதாக இருந்தது. சோ அதை உணர்ந்தே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதன் மூலமாக மக்களிடம் பேச முடியும் என்பதை உணர்ந்தே சினிமாவில் தொடர்ந்தார். இப்படி சினிமா தொடர்பு இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய செயல் திட்டங்கள் உடைய நிர்வாகிகள் ஆக்கபூர்வமான செயல் திட்டம் உடையவர்களாக நேர்மையானவர்களாக இருந்த போதிலும் தமிழகம் அவர்களையெல்லாம் தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. அவர்களுக்கு தமிழக அரசியலில் என்றுமே இடம் அளிக்கப் பட்டது கிடையாது. அவர்கள் ஒதுக்கப் பட்டனர் புறம் தள்ளப் பட்டனர். கடவுளே ஆக இருந்தாலும் கூட அவர் சினிமாவின் மூலமாக மட்டுமே மக்களை சென்றடைய வேண்டும் என்பதே தமிழகத்தின் நிலை. அவர் நேரடியாகச் சென்றால் மதிப்பிருக்காது. மேலும் சினிமாக்காரர்களிடமும் கூட ஒரு எம் ஜி ஆருக்கும், ஒரு ஜெயலலிதாவுக்கும் ஒரு கருணாநிதியின் மயக்கு வார்த்தைகளுக்கும் இருந்த செல்வாக்கு பிற நடிகர்களுக்குக் கிட்டவில்லை. சிவாஜி கணேசன் ஆகப் பெரிய நடிகராக இருந்தும் கூட அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட அவரது கூட்டங்களுக்கு சில நூறு பேர்கள் கூட கூடி நான் கண்டதில்லை.

சினிமாக்காரர்களாகவும் இருந்து கவர்ச்சிகரமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகிறது தமிழகத்தில். தற்பொழுதைய சூழலில் எந்தவொரு அறிமுகமான பிரபலமான நடிகரினாலும் ஒரு 3% வரையிலான ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற சாத்தியம் நிலவுகிறது. விஜயகாந்த், விஜய், அஜித் போன்ற எந்தவொரு நடிகரும் எளிதாக 2% முதல் 3 % வரையிலான ஓட்டுக்களைப் பெற்று தங்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு கூட்டணி பேரம் செய்து விட முடிகிறது. சினிமாவிலும் இருந்தாலும் தமிழர்களுக்கு பிடித்த கவர்ச்சிகரமான நடிகர்களாகவும் இருந்தால் மட்டுமே பெரும் செல்வாக்கை அடைய முடிகிறது. மற்றபடி சமூக சேவை செய்தோ மக்களுக்காக உழைத்தோ நல்ல நிர்வாகியாக இருந்தோ பெரும் திட்டங்களைச் செயல் படுத்துபவராக இருந்தோ மக்களிடம் ஓட்டுக்களைப் பெற்று விட முடியாது. இந்தியாவின் பிற மாநிலங்களில் ஒரு கேஜ்ரிவாலோ ஒரு சர்பானந்த் சோனோவாலாலோ இயலும் தமிழகத்தில் இயலாது.

இப்படியான ஒரு விஷச் சூழலில் சிக்கியிருக்கும் தமிழகம் போன்றதே ஆந்திர மாநிலமும் கூட. இருந்தாலும் அங்கு ஆட்சிக்கு வரும் சினிமாக்காரர்கள் இந்திய தேசியத்தில் இருந்து விலகியவர்கள் அல்லர். அது ஒரு முக்கியமான வேறுபாடு. தமிழகத்தில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்திய தேசிய மையத்தில் இருந்து விலகிச் செல்லும் குரலே இந்த சினிமா வழி வந்த ஆட்சியாளர்களினால் வைக்கப் பட்டு வருகிறது. அதை மாற்றி இந்திய தேசியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு கட்சியே மாற்றமே தமிழகத்தின் முக்கியமான ஆட்சி மாற்றமாக இருக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் எந்தவொரு ஆட்சி மாற்றமும் உண்மையான மாற்றமாக இருக்காது ஒரு சினிமாக்காரரிடம் இருந்து இன்னொரு சினிமாக்காரரிடம் மாறிய தொடர்ச்சியாக மட்டுமே அது இருக்கும். இப்பொழுது இன்னும் ஒரு சினிமா நடிகர் மீண்டும் மக்களிடம் வந்து தான் நல்லதொரு ஆட்சியைத் தரப் போவதாக வந்துள்ளார். அது உண்மையான ஆட்சி மாற்றமாக இருக்குமா அல்லது சென்ற ஆட்சிகளின் தொடர்சியாக இருக்குமா என்பதை நாம் பார்க்கலாம்.

 

தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழலும் ரஜினிகாந்தின் வருகையும்

இப்பொழுது தமிழகத்தில் ஒரு அசாதாரமாண சூழல் நிலவுகிறது. இது வரை வெற்றிகரமாக செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டு ஆட்சி நடத்திய சினிமாக்காரர்களான ஜெயலலிதாவும், கருணாநிதியும் இன்று அரசியலில் இல்லை. அதிமுக இப்பொழுது ஒரு சந்தர்ப்பவாத கும்பல்களின் கைகளில் உள்ளது. அவர்களின் வசதிக்காக இரு பிரிவுகளாக பிரிந்து கட்சி நடத்துகிறார்களே அன்றி அவர்களுக்கு தனித்த செல்வாக்கோ அடுத்து ஆட்சிக்கு வரும் நோக்கமோ இருப்பதாகத் தெரியவில்லை. தினகரன், ஓபிஎஸ்., இபிஎஸ் அனைவருமே ஒரே கும்பல்தான். அடுத்த நான்கு வருடங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரே நோக்கத்தில் மட்டுமே எதிர் தரப்பினர் போல நாடகமாடுகிறார்கள். அடுத்த ஆண்டுகளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொள்ளையடிப்பது மட்டுமே ஒரே குறிக்கோளாக இப்பொழுது அவர்களுக்கு உள்ளது. அடுத்த தேர்தலிலும் முடிந்த வரையில் முதலீடு செய்து வெற்றி பெற்றால் லாபம் தோற்றாலும் இது வரை அடித்த கொள்ளை போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அவர்களிடம் உள்ள ரெட்டை இலைச் சின்னமும் இன்னமும் மக்களிடம் மீதமிருக்கும் எம் ஜி ஆர் ஜெயலலிதா மீதான அபிமானமும் திமுக எதிர்ப்பும் எவ்வளவு தூரம் இன்னும் மிச்சமிருக்கும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அடுத்து வரும் உள்ளாட்ச்சித் தேர்தல்களில் அவர்களுக்கு இன்னும் இருக்கும் வாக்கு வங்கியின் மிச்சம் குறித்து ஓரளவுக்குத் தெளிவு கிட்டும். அவர்களிடம் இருந்த 35% வாக்கு வங்கியில் இன்னும் எத்தனை சதவிகிதம் மிச்சம் இருக்கப் போகிறது என்பது இப்பொழுதைக்குத் தெளிவாக இல்லை.

திமுகவின் தலைவர் கருணாநிதி செயல் இழந்து விட்டாலும் கூட செயல் தலைவர் இன்னும் சுறுசுறுப்புடனேயே இருக்கிறார். அவரது பேச்சும் செயல்பாடுகளும் எந்த விதத்திலும் நம்பிக்கையளிக்கும் விதமாகவும் முந்தைய திமுக ஆட்சிகளில் இருந்தும் விலகியிருப்பதாகத் தெரியவில்லை. அதே ஊழல்கள் அதே ரவுடித்தனம் அதே கட்சிக்காரர்கள் அதே கட்சி தலைவர் மட்டும் வாரிசு தலைவர் என்ற நிலையில் உள்ள கட்சி திமுக. இருந்தாலும் அதிமுக போல தலமையில்லாத கட்சியாக அது இல்லை. இன்னும் அந்தக் கட்சிக்கே விசுவாசமாக வாக்களிக்கும் அதனால் பயனடையும் அதன் கொள்கைகள் உண்மை என்று நம்பும் ஒரு பெரும் மக்கள் தொகை அதன் பின்னால் இன்னும் தேயாமல் உள்ளது. அந்த வகையில் திமுகவுக்கு இன்றளவும் குறைந்த பட்சமாக ஒரு 25% சதவிகித வாக்கு வங்கி உறுதியாக உள்ளது. வேறு பெரிய எதிர்ப்புகள் இல்லாத நிலையில் மக்களுக்கு வேறு ஆப்ஷன்கள் இல்லாத நிலையில் எதிர் தரப்பிலான அதிமுக ஒரு உறுதியான தலமையில்லாமல் கிடைத்ததைச் சுருட்டுவோம் என்று இருக்கும் நிலையில் திமுக நடுநிலை வாக்காளர்களின் ஓட்டுக்களினால் அடுத்த தேர்தலில் வெற்றி அடைந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் இருந்தன.

இந்த அதிமுக, திமுகவின் விசுவாசமான வாக்காளர்களைத் தவிர்த்தும் பிற உதிரிக்கட்சிகளின் 2%,3% வாக்குகளின் கூட்டுத் தொகையைத் தவிர்த்தும் பார்த்தால் கிட்டத்தட்ட 30% சதவிகித மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் மாற்றி மாற்றி இந்த இரு கட்சிகளுக்கே வாக்களித்து வந்துள்ளனர். அவர்களுக்கு உறுதியான வலுவான வேறு மாற்றுக்கள் அளிக்கப் படவில்லை என்பதினால் அந்த சமயத்தில் வேறு வழியின்றி தங்களுக்குச் சரியென்று தோன்றும் கட்சிக்கே வாக்களித்து வந்துள்ளனர்.

இந்த இரு கட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் தமிழகத்தில் பா ஜ க என்பது என்றுமே ஒரு சவலைப் பிள்ளையாகவே அந்தக் கட்சியின் மத்திய மாநில தலைமைகளினால் நடத்தப் பட்டு வருகிறது. மத்திய தலைவர்களுக்குத் தமிழகம் ஒரு பொருட்டாகவோ அல்லது நேரம் செலவழித்து பணம் செலவழித்து வளர்க்கப் பட வேண்டிய ஒரு மாநிலமாகவோ கருதப் படவில்லை. அதைக் கடைசியாக கவனித்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்கள். அதற்கு ஒரு நல்ல முழு நேரத் தலைவரை நியமிக்கக் கூட அவர்கள் அக்கறை காட்டவில்லை. தமிழகத்தில் நேரம் செலவழிப்பது விரயம் அங்கு சினிமா மூலமாக அன்றி வேறு எந்த வகையிலும் மக்களை அணுக முடியாது என்ற விரக்தியான நிலையில் அந்த மாநிலத்தை கை விட்டு விட்டார்கள். விளைவு தமிழகத்தில் மிகப் பெரும் அளவில் பிரிவினைவாதப் போக்குகளும் இந்திய தேச விரோத சக்திகளும் பெரும் அளவில் வளர ஆரம்பித்தன. அதை எதிர் கொள்ளக் கூட மத்திய பிஜேபியானது ஒரு செயல் திட்டத்தை வகுக்கவில்லை. தங்கள் கட்சியின் மூலமாக மட்டும் தமிழகத்தின் 50 ஆண்டுகளுக்கும் மேலான மைய நீரோட்டத்தில் இருந்து விலகிய போக்கை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை பிஜேபிக்கு வரவில்லை. ஆகவே தமிழகத்தில் அவர்களது கட்சியை வளர்க்கும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர் அல்லது இப்பொழுது எல்லோரும் நம்புவது போல ரஜினிகாந்த் என்னும் பிரபலமான நடிகரிடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார்கள்.

இன்றைய தமிழகத்தின் சூழ்நிலையில் ஒரு பிரபலமான கவர்ச்சியான சினிமா நடிகரினால் மட்டுமே தமிழகத்தின் பெரும்பாலான மக்களை விரைவாகவும் எளிதாகவும் சென்றடைய முடியும் என்ற நிலையில் அந்த வாய்ப்பை ரஜினிகாந்த் தவற விட்டு விடாமல் கையில் எடுத்திருக்கிறார். இது ஒரு துணிவான ஒரு முடிவாகும். அவரிடம் இருக்கும் சொத்துக்களுக்கும் அவரது பிற மாநில அடையாளத்திற்கும் இது ஒரு கணக்கிடப் பட்ட ரிஸ்க் என்றே கருத வேண்டும். தமிழகத்தை இதுகாறும் மாறி மாறி ஆட்சி செய்தாலும் ஒரே விதமான ஆட்சியையே இது வரை அளித்து வந்த இரு கட்சிகளும் தொய்வடைந்த இந்த ஒரு சூழலே தான் அரசியலில் இறங்குவதற்கு சரியான ஒரு தருணம் என்று ரஜினிகாந்த் நினைத்திருக்கலாம். மேலும் அதற்கான தார்மீக ஆதரவை மத்தியில் ஆளும் பிஜேபி மறைமுகமாகவும் அளித்திருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இன்று தமிழக வாக்காளர்களின் முன்பாக மூன்றாவது தேர்வு ஒன்று வலுவாக முன் வைக்கப் பட்டுள்ளது. அதை ஓட்டுக்களாக மாற்றி வென்று ஆட்சியைப் பிடிப்பதற்கு ரஜினிகாந்துக்கு குறைந்த பட்சம் 25%க்கும் மேலான வாக்கு வங்கி தேவைப் படும். அதை அதிமுகவில் இருந்து பிரிந்து வரும் வாக்காளர்களும் நடுவாளர்களாக இருந்து வேறு வழியின்றி இரு கட்சிகளையும் ஆதரித்து வந்த நடுநிலை வாக்காளர்களிடம் இருந்தும் அவருக்கு இயல்பாக இருக்கும் ரசிகர்களின் ஆதரவில் இருந்தும், பிஜேபியின் அலட்சிய அணுகுமுறையினால் விரக்தி அடைந்துள்ள பிஜேபி ஆதரவாளர்களிடமிருந்தும் அவர் பெற வேண்டும். அது அனேகமாக சாத்தியமான ஒன்றே. அதை அடைவதற்கு அவர் சரியான வழிமுறைகளையும் செயல் திட்டங்களையும் கை கொள்ள வேண்டும். அவற்றையும் இங்கே பார்த்து விடலாம்.

 

ரஜினிகாந்துக்கு சார்பான சாதகமான வாய்ப்புகள்/பலன்கள்

1. அவர் தமிழகத்தின் ஆகச் சிறந்த பிரபலமான கவர்ச்சியான ஒரு நடிகர். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பப் படும் ஒரு நடிகர். தமிழக அரசியலில் வெற்றி பெற இது ஒரு முக்கியமான காரணி. எம் ஜி ஆரின் பெரும் வெற்றிக்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்தது.

2. அமைதியான தோற்றமும் முதிர்ச்சியான பேச்சும் கொண்டவர். இது தமிழர்களிடம் எடுபடும். ஜெயலலிதா ஆரம்ப காலங்களில் இதற்காகவே தமிழக வாக்காளர்களினால் பெரிது விரும்பப் பட்டார்.

3. தமிழகம் முழுவதும் பெரும் ரசிகர் மன்ற ஆதரவு கட்டுமானங்களைக் கொண்டவர். பிஜேபி போன்ற அகில இந்திய கட்சிக்குக்கு கூட இல்லாத கிராமப் புறம் வரை ஊடுருவிய ஆதரவாளர்களின் அமைப்பு. ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான பூத்துகளிலும் இந்த ரசிகர் மன்றத்தினரின் ரசிகர்களின் ஆதரவாளர்களின் இருப்பு முக்கியமானது. அந்த வகையில் அதிமுக, திமுக தவிர வேறு எந்தவொரு கட்சிக்கும் இல்லாத பலமான அமைப்பு ரீதியான கட்டுமானம் ஒன்றை ரஜினிகாந்தால் மிக எளிதாக உருவாக்கி விட முடியும் அதற்கான ஆதரவு பலம் அவரிடம் உள்ளது. இந்த அடிப்படை கட்டுமானம் உருவாகி விட்டால் மக்களிடம் சென்று பிரசாரம் செய்வது எளிதாகி விடும்.

4. ஊழல் குற்றசாட்டுக்கள், ஏமாற்று புகார்கள், ரவுடித்தனம், நிலம், அபகரிப்பு போன்ற ஸ்டாலின் போன்றோரிடம் உள்ள மக்கள் விரும்பாத தமிழக அரசியல்வாதிகளின் இயல்பான குணாதிசியங்கள் அற்றவர். இது அதிமுக, திமுக, பா ம க, விசிக கட்சியினரிடம் இல்லாத காணக் கிடைக்காத ஒரு பண்பாகும். இது வரை எந்தவொரு அதிகார மையத்திலும் அவர் இல்லாததும் அதன் மூலமாக ஏற்படும் கெட்ட பெயர்கள் இல்லாதது பெரும் பலமாகும்

5. சோவின் பெயரைக் குறிப்பிட்டதும் எதிர்மறை அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்ற உறுதியும் தமிழருவிமணியன் போன்ற நேர்மையான ஊழலற்ற ஆட்சியை விரும்பும் நல்ல பேச்சாளர்களின் துணையும் அவருக்கு நகர்ப்புறத்து படித்த வாக்காளர்களிடமும் ஆதரவை பெற்றுத் தரும்.

6. குறைவான அளவிலேயேயானாலும் கூட ஏற்கனவே தமிழகத்தில் பிஜேபிக்கு என்று இருக்கும் வாக்கு வங்கி அந்தக் கட்சி அங்கு பரவ எந்தவொரு முயற்சியும் எடுக்க விரும்பாக நிலையில் ரஜினிகாந்துக்கே செல்லும். ஏற்கனவே பிஜேபியின் ஆதரவு வாக்குகளில் கணிசமான வாக்குகள் என்றுமே திமுக வந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக ஜெயலலிதாவிடம் சென்று சேர்ந்தது. இன்று அதே வாக்குகள் ரஜினிகாந்திடம் மடை மாற்றம் செய்யப் படும். இந்த வாக்கு வங்கியானது குறைந்தது ஒரு 6% வரை இருக்கக் கூடும். இதுவும் அவருக்கு முக்கியமான ஒரு பலமே. தமிழகத்தில் பிஜேபியின் வாக்கு வங்கி பிஜேபியைத் தவிர பிற கட்சிகளிடமே என்றும் சென்று சேர்கின்றன.

7. தமிழகத்தில் இன்று அவர் மீது கடுமையாகச் செய்யப் பட்டு வரும் எதிர் மறை பிரசாரமான அவர் ஒரு கன்னடர், மராத்தியர் ஆகவே அவர் முதல்வராக வரக் கூடாது. ஒரு சினிமாக்காரர், படிக்காதவர், திறமையற்றவர் என்ற அனைத்து விதமான எதிர்மறை பிரசாரங்களும் பூமராங் ஆகி அவருக்கு பெரும் ஆதரவு அலையை உருவாக்கி விட்டு விடும். இதுவும் அவருக்கு ஒரு பலமே

 

ரஜினிகாந்துக்கு எதிரான பாதக அம்சங்கள்

1. இன்னும் உறுதி செய்யப் படாத ஆதரவு. 1996ல் ஏற்கனவே அதிமுக மீது கடுமையான எதிர்ப்பு நிலவிய சூழலில் திமுகவுக்கு ஆதரவாக அவர் விடுத்த கோரிக்கை ஏற்கப் பட்டது. ஆனால் அதன் பிறகு அவரது விருப்பங்கள் எவையும் தேர்தல்களில் அனேகமாக பிரதிபலிக்கவில்லை. சென்ற 2014 தேர்தலில் அவர் அனேகமாக பிஜேபிக்கு ஆதரவாக மறைமுகமாக தெரிவித்த ஆதரவும் கூட பெருத்த மாற்றம் எதையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் இப்பொழுது நேரிடையாக அவர் இறங்கியுள்ளதால் இந்த நிலை மாறக் கூடும்

2. எம் ஜி ஆர் அவர் நடிப்பின் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் கட்சி ஆரம்பித்தார். அந்த சினிமா கவர்ச்சி மங்காத நிலையிலேயே சூட்டோடு சூடாக அதை அறுவடை செய்தார். ஆனால் ரஜினிகாந்துக்கு இப்பொழுது 80களில் 90களில் இருந்த சினிமா கவர்ச்சி அப்படியே மீதமிருக்கிறது என்று சொல்லி விட முடியாது. அவரது தற்பொழுதைய படங்களும் வெற்றி பெற்றாலும் கூட அவருக்காக இருந்த பெரும் ரசிகர் கூட்டம் இன்று சற்றே வயதாகியுள்ளது. இன்று அவரது ரசிகர்களில் பெரும்பலானோர் 40 வயதுக்கும் மேற்பட்டவர்களே. 20 முதல் 40 வயதான வாக்காளர்களை அவர் கவர அவர் சினிமா கவர்ச்சியையும் தாண்டி வேறு வகைகளில் முயல வேண்டும். அது சாத்தியமான ஒன்றே

ரஜினிகாந்தின் வயது அவருக்கு இன்னும் ஒரு பாதகமான அம்சமே. மோடியும் ஜெயலலிதாவும் ஓரளவுக்கு இளமையிலேயே ஆட்சிக்கு வந்து விட்டார்கள். எம் ஜி ஆரும் கூட அவரது 40களிலேயே அரசியலுக்கு வந்து 60ல் ஆட்சியைப் பிடித்தும் விட்டார். ஆனால் ரஜினிகாந்துக்கு இப்பொழுது 67 அவர் இன்னும் நான்கு வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வரும் சமயம் 71 ஆகி விடும். நல்ல ஆரோக்கியமும் மனப் பயிற்சியும் இருந்தால் 71 பெரிய வயது கிடையாது. இருந்தாலும் கூட அதன் பிறகு அவருக்கு கிடைக்கும் கால அவகாசம் மிகக் குறைவானதாகவே இருக்கும். ஆகவே அவருக்கு வயது ஒரு தடையாக இல்லாமல் போனாலும் கூட அவரது செயலூக்கமுள்ள வயதிற்குள் மாற்றங்களைச் செய்ய வேண்டிய அழுத்தங்கள் இருக்கும். அதற்குத் தேவையான கால அவகாசம் அதிகம் இருக்காது.

இருந்தாலும் தமிழகத்தில் ஒரு உண்மையான மாற்றம் அவர் மூலம் துவக்கப் பட்டால் கூட அது ஒரு நல்ல அறிகுறியே,

அவருக்கு அரசியலிலும், நிர்வாகத்திலும் போதுமான பயிற்சிகள் கிடையாது. அப்படிப் பார்த்தால் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அது இருக்காது. அதற்கான தக்க வழிகாட்டிகளை அவர் அடையாளம் கண்டு அவர்களின் உதவியுடன் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டிய அவசரத்திலும் அவர் இருக்கிறார்.

வருங்காலங்களில் அவரது குடும்ப உறுப்பினர்களின் அத்தனை செயல்களும் மிக உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அவை மிகைப் படுத்தப் பட்டு பெரும் பிரச்சினைகளாக ஆக்கப் படும். ஆகவே அவர் தனது குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் கண்காணித்து கட்டுப் படுத்த வேண்டியும் வரலாம். அவர்களது ஏதாவது சிறிய தவறுகள் கூட மிகைப் படுத்தப் பட்டு அவருக்கு எதிராக திருப்பப் படலாம். மீடியாக்களிடமும் அரசியல்வாதிகளிடமும் அவர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல் பட வேண்டியது அவசியமாக்கப் படும்.

3. தற்பொழுது தமிழகத்தில் பருவ மழைகள் அனேகமாக பொய்த்தே போய் விட்டன. அவை பத்து வருடங்களுக்கு ஒரு முறையே பெய்கின்றன. எப்பொழுதுமே நிரந்தர வறட்சியில் தமிழகம் சிக்கியுள்ளது. இந்த சூழலில் அவரை சிக்கலில் மாட்டுவதற்காகவென்றே அவருக்கு பிரச்சினை ஏற்படுத்தவும் அவர் தமிழர் அல்லர் கன்னடர் என்பதை நிறுவுவதற்காகவும் பிஜேபி தவிர்த்து தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி காவேரி பிரச்சினையை பூதாகரமானதொரு பிரச்சினையாக ஏற்படுத்தலாம். ஏற்கனவே இப்பொழுது குஜராத்திலும், மஹராஷ்ட்ராவிலும் காங்கிரஸ் ஜாதிவாரி பிரச்சினையை எழுப்பி பிஜேபியின் ஓட்டு வங்கிகளை சிதற அடிப்பது போலவே ரஜினிகாந்தின் ஆதரவினை குறைப்பதற்காக காவேரி பிரச்சினை ஊதிப் பெரிதாக்கப் படும். இதே ஆட்களே கன்னடத்தில் சில தமிழர்களைக் கொன்று விட்டு இரண்டு மாநிலங்களுக்கும் இடையே பெரும் போரினை உருவாக்குவார்கள். ஓட்டுக்காக எந்தவொரு எல்லைக்கும் போகத் தயங்காதவர்கள் தமிழக அரசியல்வாதிகள். அனேகமாக ரஜினிகாந்த் எதிர் கொள்ளவிருக்கும் மிகப் பெரும் சோதனையாக இது இருக்கும். ஆனால் அதைத் தீர்க்கவும் புத்திசாலித்தனமாகக் கையாளவும் சில ஸ்ட்ராடஜிகள் உள்ளன அவற்றை அடுத்து வரும் பட்டியலில் காணலாம்,.

4. தமிழகத்தில் ஏற்கனவே இந்திய தேசியத்துக்கு எதிராக செய்யப் பட்டு வரும் பிரசாரங்களான மீத்தேன் எடுப்பு எதிர்ப்பு, நியூட்ரினோ திட்ட எதிர்ப்பு, நீட் தேர்வு எதிர்ப்பு, மத்திய பள்ளிகளுக்கான எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, மீனவர் போராட்டம், செம்மரம் கைது எதிர்ப்பு, நதி நீர் இணைப்பு திட்ட எதிர்ப்பு, துறைமுகம் கட்ட எதிர்ப்பு, சாலைகள் போட எதிர்ப்பு, போன்றவை பெரும் அளவில் இனிமேல் தூண்டி விடப் படும். அவற்றில் ரஜினிகாந்த் தனது கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் சொல்ல வைக்கப் படுவார் அது அவரது ஆசான் சோவின் கொள்கைகளுக்கு முரணாதாக அமையக் கூடும். இவை போன்ற விஷயங்களை அவர் எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பொருத்து அவரது ஆதரவு வாக்கு வங்கியில் சில விலகல்களும் ஏற்படலாம். இதை அவர் கையாள வேண்டிய விதத்தையும் தான் அடுத்து வரும் செய்ய வேண்டியவைகளில் பட்டியலிட்டுள்ளேன்

5. எப்பொழுதுமே எம் ஜி ஆருக்கு ஜெயலலிதாவுக்கும் எதிராக கருணாநிதி கையாண்ட ஒரு நரித்தனமானதொரு தந்திரம் தென் மாவட்டங்களில் ஜாதிக் கலவரங்களைத் தூண்டுதல். தமிழகத்தின் ஜாதி அரசியல் குறித்த அதிக புரிதல்கள் இல்லாத ரஜினிகாந்துக்கு இது ஒரு சவாலாக இருக்கும். வட மாவட்டங்களிலும் அவை பெரும் அளவில் தூண்டப் பட்டு அவற்றில் அவர் எடுக்கவிருக்கும் நிலைப்பாடுகளைக் கொண்டு ஒரு ஜாதியினரை அவருக்கு எதிராக திருப்ப முயல்வார்கள். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் சில ஜாதிப் பிரச்சினைகள் அவருக்கு எதிராகத் திருப்பப் பட வாய்ப்புகள் உள்ளன. இதையும் அவர் சாதுர்யமாக கையாள வேண்டி வரும்

6. மத்தியில் ஆளும் பா ஜ கவின் மறைமுக ஆசி ரஜினிகாந்துக்கு இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனாலும் எந்தவொரு பிரச்சினையிலும் மக்களிடம் பிஜேபிக்கு எதிராக ஒரு பெரும் எதிர்ப்பும் வெறுப்பும் தூண்டி விடப் பட்டு அந்தக் கட்சியின் நண்பர் இவர் என்று கைகாட்டி விடப் பட்டு அந்த எதிர்ப்பும் வெறுப்பும் ராஜினிகாந்த் மீது சேருவது போல மடை மாற்றி விடுவார்கள். ஆகவே ஆன்மீக அரசியல் என்று சொன்னதும் சோவின் பெயரைக் குறிப்பிட்டதும் ஏற்கனவே மோடியின் சந்திப்பும் இவருக்கு எதிராக திசை திருப்பப் பட வாய்ப்புகள் உள்ளன

6. இப்பொழுதைக்கு ரஜினிகாந்த்தின் அணி என்ன என்பது எவருக்கும் தெரியாது. அவரிடமே அப்படி ஒரு குழு இருக்க வாய்ப்பு இல்லை. தமிழகத்தைப் பற்றிய அதன் சமூக, பொருளாதார, தொழில், விவசாய, சூழலிய போன்ற துறைகளில் அவருக்கு போதுமான அனுபவம் இருக்கவும் வாய்ப்பில்லை. இதை வளர்த்துக் கொள்வதும் அதற்கான உரிய ஆலோசனைக் குழுக்களை உருவாக்குவதும் அதில் ஊழல் நாட்டமுடைய ஆதாயம் தேடும் ஆட்கள் நுழைந்து விடாமல் தடுப்பதும் அவருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

 

ரஜினிகாந்த்தின் வருகையினால் தமிழக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றங்கள்

ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு கட்சி துவக்கி தேர்தலில் ஈடுபடப் போகும் முடிவினால் தமிழகத்தில் ஏற்கனவே ஊடுருவியிருக்கும் பல்வேறு வாக்கு வங்கி உள்ள இல்லாத கட்சிகள் பாதிப்படையப் போவது நிச்சயம்

1. தமிழகத்தில் பா ஜ க வுக்கு ஒரு மறைமுகமான ஆதரவு அலை உண்டு. ஆனால் தேர்தல் என்று வரும் பொழுது திமுக ஜெயித்து விடக் கூடாது என்ற ஒரே நோக்கத்திற்காக இவ்வளவு வருடங்களும் அந்த ஆதரவு வாக்கு வங்கி எப்பொழுதுமே அதிமுகவின் பக்கமே சென்று விடுவது உண்டு. அவை போக தீவீரமான பாஜக கட்சியினர் மட்டுமே தேர்தல்களின் பொழுது பா ஜ கவை ஆதரித்து வந்தனர். இப்பொழுது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் நிர்மலா சீத்தாராமன் போன்ற ஒரு நல்ல திறமையான முதல்வர் வேட்பாளரை பிஜேபி முன்னிறுத்தும் அதன் மூலமாக தமிழ் நாட்டில் மூன்றாவது தேர்வுக்கான வாய்ப்பு அமையும் என்று பல பா ஜ க ஆதரவாளர்களும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

ரஜினிகாந்தின் வரவினாலும் பாஜக வின் மத்திய தலைவர்களின் தொடர்ந்த அலட்சியத்தினாலும் இப்பொழுது பா ஜ க வின் ஒட்டு மொத்த வாக்கு வங்கியுமே இப்பொழுது ரஜினிகாந்த் பக்கமாகத் திரும்பியுள்ளது. வரவிருக்கும் 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா ஜ கவின் ஓட்டு வங்கி மோடிக்காக பாஜவுக்கு விழுந்தாலும் கூட மாநிலத் தேர்தல்களில் முழுக்க முழுக்க அவை ரஜினிகாந்துக்கு ஆதரவாகவே திரும்பும். இன்று தமிழகத்தில் பாஜக நுழைய விரும்பாத நிலையில் ரஜினிகாந்தையே பாஜகவின் தீவீர ஆதரவாளர்களும் கூட தமிழகத்தின் பிரிவினைவாத சக்திகளையும் திமுக போன்ற ஊழல் சக்திகளையும் எதிர்க்கும் ஓரளவுக்காவது இந்து ஆதரவு நிலைப்பாடு எடுக்கும் சக்தியாக ரஜினிகாந்த்தை அடையாளம் காண்கிறார்கள். ஆக இன்னும் முறையான கட்சியை துவக்கும் முன்பாகவே ரஜினிகாந்த் ஒட்டு மொத்தமாக தமிழக பிஜேபியின் வாக்கு வங்கியை தன் பக்கம் இழுத்து விட்டார். இனிமேல் தமிழகத்தில் பிஜேபி நுழைய வேண்டும் என்றால் அது ரஜினிகாந்த் காலத்துக்கு பின்னாலேயே முடியும். அதையே அதன் தலைவர்களும் விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். வேண்டும் என்றே ஜெயலலிதாவிடம் அடகு வைத்திருந்த தன் வாக்குகளை இப்பொழுது மீட்டு ரஜினிகாந்திடம் அடகு வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் தீவீரமான மோடி எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுக்காத வரையிலும் இந்த ஆதரவு வங்கி அப்படியே தொடரவே வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவரது வரவினால் ஒட்டு மொத்தமாக தனது கூடாரத்தையே இழந்து விட்டிருக்கும் முதல் கட்சி தமிழக பா ஜ க வே.

2. தேர்தல் வரும் சமயத்தில் சசிகலா கும்பலும் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகளும் சேர்ந்து விடவே அதிகம் வாய்ப்புள்ளன. அதன் பிறகு அவர்களிடம் உள்ள அபரிதமான பணபலத்தினாலும் தொண்டர்கள் பலத்தினாலும் அடிமட்ட அளவில் இருக்கும் கட்சி அமைப்புகளினாலும் ஓரளவுக்கு தங்களது பாரம்பரிய ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்வார்கள்.வழக்கமாக ஜெயலிதாவுக்காக ஓட்டுப் போடும் பிராமணர்களும் திமுக வந்து விடக் கூடாதே என்ற பதட்டத்தில் வாக்களிக்கும் பாஜக ஆதரவாளர்களும் தாங்கள் வழக்கமாக ஓட்டுப் போடும் அதிமுகவுக்கு இந்த முறை வாக்களிக்கப் போவதில்லை. மேலும் ரஜினிகாந்த்தின் சினிமா வசீகரத்தினாலும் அவரது அமைதியான அணுகுமுறையினாலும் அதிமுக வாக்கு வங்கியின் கணிசமான பங்கினை அவர் பெற்று விடக் கூடும். இதனால் ஏற்படும் பாதிப்பு அதிமுகவுக்கு அதிகமாகவே இருக்கும். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் ரஜினிகாந்தின் கட்சி இல்லாத நிலையில் அவர்கள் கணிசமான வெற்றிகளைப் பெற்றாலும் கூட சட்டமன்றத் தேர்தலில் அவற்றின் பாதியை அவரிடம் அவர்கள் இழக்கக் கூடும். எப்படியும் அவர்களுக்குள் சண்டை போடுவதாக நடித்தாலும் கூட இடைத் தேர்தல் நடுப்பதை அவர்கள் தவிர்கவே விரும்புவார்கள் அதற்கான கப்பத்தினை அவர்கள் சசிகலா தினகரன் கும்பல்களுக்கு கட்டி விடுவதன் மூலமாகவும் பரஸ்பர ஒப்பந்தங்கள் மூலமாகவும் அவர்கள் எதிர் கொள்ளவிருக்கும் தோல்வியினை அவர்கள் தள்ளிப் போடவே முயல்வார்கள்

3. திமுகவின் வாக்கு வங்கி ரஜினியின் வரவால் பாதிக்கப் படாது. அது அப்படியே நிலையாக இருக்கவே வாய்ப்புள்ளது. ஒரு வேளை அழகிரி தனியாகப் பிரிந்தாலும் கூட அதனால் பெரிய பாதிப்பை அவர்கள் எதிர் கொள்ளப் போவதில்லை. ரஜினிகாந்த் வந்திருக்காவிட்டால் பணபலத்தினாலும் ஊழல்களினாலும் கெட்ட பெயர் சம்பாதித்து விட்ட அதிமுக அரசை எதிர்க்கும் விதமாக பெரும்பாலான நடுநிலை வாக்காளர்கள் திமுக பக்கம் ஓட்டுப் போட்டிருந்திருக்கக் கூடும் ஆனால் ரஜினியின் வரவால் திமுகவின் பாரம்பரியமான வாக்குகளுக்கு மேல் அவர்களால் அதிகம் எதிர்பார்க்க இயலாது என்பதினால் அவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் கட்டுப் படுத்தப் படும். இதைத் தவிர்க்கவும் ரஜினிகாந்த் மீது வெறுப்பு ஏற்படுத்தவும் திமுக சகலவிதமான முயற்சிகளையும் கையில் எடுக்கும் என்பது உறுதி. அவர்கள் எந்த அளவுக்கு எம் ஜி ஆரை மலையாளி என்றும் ஜெயலலிதாவை பிராமணர் என்று வசை பாடினார்களோ அதை விட பல மடங்கு எதிர்ப்பை ரஜினி மீது காட்டுவார்கள். ரஜினிகாந்தின் முக்கியமான எதிரியாக திமுகவே களம் இறங்கும்

4. ரஜினியின் வரவால் தமிழகத்தின் பிற உதிரிக் கட்சிகளான விஜயகாந்தின் கட்சி, பாமக, விசிக போன்ற அனைத்து கட்சிகளும் தங்கள் வாக்கு வங்கியில் கணிசமான அளவை ரஜினிகாந்திடம் இழப்பார்கள். இந்தக் கட்சிகள் பெரும்பாலும் சினிமா ரசிகர்களான விடலைகளினால் உருவானவை. அவை வெற்றி பெற வாய்ப்புள்ள இன்னுமொரு சினிமா நடிகரை நோக்கி நகரும். விஜயகாந்த் ஒரு வேளை இதை யோசித்து தன் கட்சியைக் கூட ரஜினிகாந்துக்கு ஆதரவாகத் திருப்பி விட்டு விடக் கூடும் ஆனால் ராம்தாஸ் ரஜினிகாந்தை எதிர்ப்பதற்காக திமுகவுடன் கூட்டணி அமைத்து பலமாக எதிர்க்க முயல்வார். ரஜினி ஆதரவாளர்கள் பெரும் அளவு வன்முறைத் தாக்குதல்களை இந்தக் கூட்டணிகளிடம் இருந்து எதிர் கொள்ள வேண்டி வரும். இவற்றில் திருமாவளவன், கம்னியுஸ்டு.கோபாலசாமி ஆகியோர் கூடுமானவரை ரஜினிகாந்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு சில சீட்டுக்களை பெற்று விடலாமா என்று நினைப்பார்கள் அதற்கு வழியில்லாவிட்டால் அவர்கள் எதிர்ப்பு கடுமையானதாக இருக்கும்

5. கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களின் ஓட்டுக்கள் பாஜகவுக்கு எதிரான திசையிலேயே இருக்கும் ரஜினிகாந்த் அதன் காரணமாகவே பாஜகவுடன் எந்தவொரு கூட்டணியையும் தவிர்க்க முயன்றாலும் கூட அவர் மீதான சந்தேகங்கள் உருவாக்கப் பட்டு அந்த வாக்குகள் திமுக காங்கிரஸ் பக்கமாக திசை மாறிச் செல்லும். ரஜினியின் வசீகரம் ஓரளவுக்கு அவர்களை ஈர்த்தாலும் கூட மதக் கட்டுப்பாட்டு உத்தரவுகளை மீறி அவர்கள் ஓட்டுப் போட மாட்டார்கள். அந்த வகையில் சர்ச்சுகள் சில நிபந்தனைகளை ரஜினியிடம் விதிக்கும் அவற்றை அவர் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே செலக்டிவாக ஆதரவு அளிக்கப் படலாம். இந்த இழப்பினை பெரும் அளவிலான பாஜக் ஆதரவு இந்து ஓட்டு வங்கி ஈடு செய்யும்.

6. அந்நிய சக்திகளினாலும் மிஷநரிகளினாலும் தூண்டி விடப் பட்டு தமிழகத்தில் பிரிவினைவாதத்தினை பெரும் அளவில் வளர்த்து வரும் சீமான் செபாஸ்ட்டியான், டேனியல் திருமுருகன், உதயகுமார் போன்ற சகலவிதமான இந்திய விரோத பிரிவினைவாத அமைப்புகளும் ரஜினிகாந்த்தை கடுமையாக எதிர் கொள்வார்கள். திமுக மற்றும் காங்கிரஸின் துணையுடன் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களையும் கலவரங்களையும் தூண்டி விட்டு அதன் மூலமாக ரஜினிகாந்த் மீது கடும் வெறுப்பைத் தூண்டி விடுவார்கள். இவர்களை எதிர் கொள்வது ரஜினிகாந்துக்கு பெரும் சவாலாக இருக்கும். அவர் துவக்கத்திலேயே இது தேசீயத்திலும் ஆன்மீகத்திலும் நம்பிக்கை வைக்கும் கட்சியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லியிருந்திருக்க வேண்டும். தமிழகத்தில் எப்பொழுதுமே பெரும்பான்மையான மக்கள் பிரிவினைவாதத்திற்கும் தனித் தமிழ் நாட்டிற்கும் ஆதரவு தெரிவித்ததில்லை. அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லி தான் இந்திய தேசியத்தின் மீது உறுதியான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் அவர் பிரசாரம் செய்வதின் மூலமாக மட்டுமே இந்த பிரிவினைவாத சக்திகளை எதிர் கொள்ள முடியும். தேசியத்தை விரும்பும் மக்கள் அவர் பின் ஒன்றிணைவார்கள். அவர்களின் விஷப் பிரசாரங்களுக்கு அவர் பணிந்து விடும் பட்சத்தில் அவர் மீதான நம்பிக்கையை நடுநிலை வாக்காளர்கள் இழந்து விடுவார்கள். சோவின் பெயரைச் சொல்லி கட்சி ஆரம்பித்தவருக்கு இது நன்றாகவே புரிந்திருக்கும்

ஒட்டு மொத்தமாக மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களும், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் அதிமுகவிடம் விரக்தி அடைந்திருக்கும் அதிமுக வாக்காளர்களும் பாஜவுக்காகக் காத்திருந்து ஏமாற்றமடைந்த பாஜக வாக்காளர்களும் திமுக எந்த நிலையிலும் வந்து விடக் கூடாது என்று நினைக்கும் திமுக எதிர்ப்பு வாக்காளர்களும் தமிழகம் பிரிவினைவாதிகளின் கைகளில் சிக்கி சின்னாபின்னமாகி விடக் கூடாது என்ற அச்சத்தில் வாழும் தேசியத்தை ஆதரிக்கும் வாக்களர்களும் கூடவே ரஜினிகாந்துக்காக மட்டுமே அவரை ஆதரிக்கும் ரசிகர்களின் மக்களின் ஆதரவு சேர்ந்து அவரை வெற்றி அடையச் செய்து விடும் என்றே நினைக்கிறேன். ஆனால் தமிழகத்தின் உண்மையான மாற்றம் என்பது வெறுமே ஆட்சி மாற்றம் மட்டுமே அல்ல. அது அதையும் தாண்டியதாக இருக்க வேண்டும். வளர்ச்சியை விரும்பும் இந்திய தேசீய ஒருமைப்பாட்டை வளர்க்கும் ஊழல் இல்லாத மாநில சுயநல நோக்கங்கள் இல்லாத பரந்த விரிந்து பட்ட ஒரு மாற்றமாக அது அமைய வேண்டும் அதற்காக ரஜினிகாந்து முன்னெட்டுத்துச் செல்ல வேண்டிய பணிகள் பல உள்ளன.

 

உண்மையான மாற்றத்தைக் கொணரத் தேவையான செயல் திட்டங்கள்

ரஜினிகாந்த்தாக இருந்தாலும் சரி பிஜேபியின் நிர்மலா சீத்தாராமனாக இருந்தாலும் சரி தமிழகத்தின் வழக்கமான அரசியல்களில் இருந்து முற்றிலுமாக விலகி மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு செயல் திட்டம் இல்லாமல் அவர்களினால் முழு வெற்றியை அடைந்து விட முடியாது. காமராஜருக்குப் பிறகு தமிழகத்தை முற்றிலுமாக அறிந்த ஒரு முதல்வர் தமிழகத்திற்கு வாய்க்கவில்லை. எம் ஜி ஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்கள் தமிழகத்தை மேம்போக்காகவே தங்கள் தேர்தல் பிரசாரங்களின் பொழுது மட்டுமே பயணித்து அறிந்திருப்பார்கள். அவர்களில் எவருக்கும் தமிழகத்தின் மாவட்ட அளவிலான தாலுகா அளவிலான கிராமம் அளவிலான எந்தவொரு பிரச்சினை பற்றியும் முழுமையான அறிவு கிடையாது. ஒரு ஊரின் பெயரைச் சொன்னால் தமிழகத்தின் வரை படத்தில் அவர்களினால் சரியாக பொருத்திப் பார்க்கக் கூடத் தெரியாது. அந்தந்த பிரதேசங்களின் உண்மையான தேவைகள் பிரச்சினைகள் தெரியாது. இலவசங்கள் மூலமாகவும் கவர்ச்சித் திட்டங்கள் மூலமாகவும் தங்களது கவர்ச்சிகளின் மூலமாக மட்டுமே அவர்கள் ஜெயித்து வந்தார்களே ஒழிய உண்மையான தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மூலை முடுக்குகளின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமாக அவர்கள் வெற்றி பெறவில்லை. அவற்றிற்கான நீண்டகால திட்டங்கள் தீர்வுகள் எவற்றையுமே அவர்கள் செயல் படுத்தியதில்லை. அவை பற்றிய அறிவோ தொலைநோக்கு பார்வைகளோ இல்லாத கட்சிக்காரர்கள் அவர்கள். அவர்கள் தலைவர்கள் கிடையாது. தேர்தலில் ஏமாற்றி ஜெயிக்கத் தெரிந்த ஒரு அரசியல்வாதிகளாக மட்டுமே இருந்தார்கள். தமிழகத்தில் உண்மையான மாற்று அரசாங்கம் வர வேண்டும் என்றால் ஆளப் போபவருக்கு அந்தத் தொலை நோக்கு பார்வை வர வேண்டும் அப்படி இல்லாமல் போனால் ரஜினிகாந்த் ஏற்கனவே இருந்த ஆட்சிகளின் ஒரு நீட்சியாகவே அமைந்து விடும். அப்படி நிஜமான மாற்றம் தேவையென்றால் அவை அவசியம் செய்ய வேண்டிய சில மாற்று ஏற்பாடுகள் உள்ளன அவையாவன:

அவர் 2021 தேர்தலில்தான் தன் கட்சி போட்டியிடப் போவதாகச் சொல்லியுள்ளார். அது ஓரளவுக்குப் போதுமான கால அவகாசம் இருக்கிறது. அந்தக் கால அவகாசத்தில் அவர் கீழ்க்கண்டவற்றை செயல் படுத்தலாம். அது அவர் மீது மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் ஆதரவையும் ஏற்படுத்தும்.

1. மாவட்டவாரியாக, தாலுகா வாரியாக, பஞ்சாயத்து வாரியாக ஒவ்வொரு தொகுதியின் வார்டுகள் பூத்துகள் வாரியாக அவரது ரசிகர் மன்றங்களைச் சார்ந்தவர்களில் இருந்தும் புதிதாக அவர் மீது நம்பிக்கை வைத்து அவர் கட்சியில் சேர விரும்பியுள்ள மக்களிடம் இருந்தும் நன்று சிந்திக்கக் கூடிய செயலாற்றக் கூடிய இளைஞர்கள் மற்றும் அனுபவம் உள்ள முதியவர்களின் குழுவினை அமைக்க வேண்டும். கூடுமானவரை அவர்கள் பதவி மோகம் இல்லாத உண்மையான சமூக அக்கறை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அந்தக் குழுவானது தங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார, கல்வி, விவசாய, தொழில் சார்ந்த தகவல்களை முழுமையாகத் திரட்ட வேண்டும். அவர்கள் மூலமாக அந்தப் பகுதிகளின் பிரச்சினைகள் அனைத்தும் சேகரிக்கப் பட வேண்டும். அவை மென்பொருட்கள் மூலமாக சேகரிக்கப் பட்டு சேமிக்கப் பட்டு பிரிக்கப் பட்டு ஆராயப் பட வேண்டும்

2. அப்படி சேகரிக்கப் பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான அவசர தேவைகள், குறைந்த காலம் எடுக்கும் தேவைகள் நீண்டகால நிரந்தரத் தேவைகள் என்று பிரிக்கப் பட வேண்டும். அவை சாதாரண சாலை வசதிகளில் இருந்து, குப்பை அகற்றும் தேவைகளில் இருந்து குடிநீர் தேவைகளில் இருந்து பெரிய திட்டங்களான ரயில் தேவைகள் பால வசதிகள், வேலை வாய்ப்பை உருவாக்கும் வசதிகள் போன்றவைகளாக இருக்கலாம். அவற்றையெல்லாம் பகுதிவாரியாக மாவட்ட வாரியாகத் தொகுத்து அவற்றின் செலவுக்கான நிதி, கால அவகாசத்தைப் பொருத்து அவரை சிறிய, நடுத்தர, நீண்டகால பெரிய திட்டங்களாக பகுப்பு செய்யப் பட வேண்டும்

3. அதன் பிறகு ரஜினிகாந்த் தன்னுடன் தமிழருவிமணியன் போன்ற நல்ல பேச்சாளர்களையும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் நன்கு அறிந்த ஊழல் கறை படியாத தலைவர்களுடனும் ஒவ்வொரு மாவட்டமாக செல்ல வேண்டும். அங்குள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று வாரம் ஒரு மாவட்டத்தில் முழுமையாக அங்கு ஒரு ஆதரவாளர் வீட்டில் தங்கி அந்தப் பகுதியினரின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து ஏற்கனவே தரம் பிரிக்கப் பட்டுள்ள தீர்வுகளை அவர்களிடம் எடுத்துச் சொல்லி அவை எப்பொழுது தீர்க்கப் படும் என்ற கால அட்டவணையும் அவர்களிடம் அளிக்க வேண்டும். தான் ஆட்சிக்கு வந்தால் அந்தத் தேவைகளுக்கான தீர்வுகள் எப்பொழுது முடியும் என்பதற்கான உறுதியை அளிக்க வேண்டும். அவற்றை தங்களது வெப்சைட்டில் வெளியிட்டு பொது மக்களின் பார்வைக்கும் தொடர் கண்காணிபுக்கும் உட்படுத்த வேண்டும். இப்படி வாரம் ஒரு தாலுகாவில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழக வேண்டும். அங்குள்ள கோவில்களுக்குச் செல்தல் வேண்டும். அப்பகுதி மக்களின் உணவுகள் தேவைகளை அறிய வேண்டும். அங்குள்ள முக்கியமான சுற்றுலா இடங்களுக்குச் செல்தல் வேண்டும். அனைத்து பகுதி மக்களுடனும் சென்று பேச வேண்டும். தமிழகத்தை உணர்வு பூர்வமாகவும் பூகோள ரீதியாகவும் அனுபவித்து உணர வேண்டும். செல்லும் அனைத்து ஊர்களிலும் அந்த ஊர்களுக்கான தேவைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் ஒட்டு மொத்தமான தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சி குறித்தும் அவர்களிடம் பேச வேண்டும். அவர்கள் சொல்லாமலேயே அவர்களுக்கு முன்பாகவே அவர்களின் தேவைகள் பற்றி பேச வேண்டும். அப்பகுதிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட தங்கள் பிரதிநிதிகள் வேட்பாளர்களை அறிமுகப் படுத்தி அவர்கள் மூலமாக் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்பதைச் சொல்ல வேண்டும்

4. ஒவ்வொரு தொகுதிக்குமான செயல் ஊக்கமும் ஆர்வமும் சமூக சேவைக்கான அர்ப்பணிப்பும் ஆதாயம் நோக்காத பண்பும் உடைய நல்ல வேட்ப்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கான பயிற்சிகளை முறையான பயிற்சியாளர்கள் மூலமாக அளிக்க வேண்டும். அவை பேசுப் பயிற்சி, உடல் மொழி, கண்ணியம், மக்கள் தொடர்பு, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், கம்ப்யூட்டர் அறிவு ஆகியவற்றை அவர்களுக்கு அளிக்க வேண்டும். அவர்கள் மக்களிடம் தொடர்பில் இருக்கப் பழக்க வேண்டும். அதாவது தேர்தல் வருவதற்கு முன்பு வெகு காலத்துக்கு முன்பாகவே அந்த வேட்ப்பாளர்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்க வேண்டும். அப்படி அவர்களில் சிலர் தவறும் பட்சத்தில் அவர்களுக்கான மாற்று வேட்ப்பாளர்களும் அடையாளம் காணப் பட வேண்டும். இவர்கள் ரசிகர் மன்றங்களில் இருந்து மட்டும் வர வேண்டியதில்லை. ஆர்வமும் தன்னலமும் இல்லாத பல தரப்பட்ட இளைஞர்களையும் இதில் சேர்க்கப் பட வேண்டும்

5. இவை தவிர்த்து தமிழகத்தின் ஒட்டு மொத்த மாநிலத் தேவைகள் குறித்த முழு அறிவும் பெறப் பட வேண்டும். நீராதாரம், விவசாயம், மின்சாரம், தொழில், கல்வி சட்டம் சமூகப் பிரச்சினைகள் போன்ற அனைத்துத் துறைகளின் தேவைகளையும் அவற்றிற்கான அடிப்படை அறிவுகளையும் அத்துறை சார்ந்த பல்வேறு தரப்பட்ட நிபுணர்களிடம் இருந்து முழுமையாக பெறப் பட வேண்டும். இதை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வேட்ப்பளருக்கும் அளிக்க வேண்டும்.

6. இனிமேல் பருவமழையை தமிழகம் எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பயனில்லை என்பதை உணர வேண்டும். கர்நாடகா மீது பழி போட்டு பிராந்திய வெறுப்பு அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை. முக்கியமாக ரஜினிகாந்த்தை ஒரு கன்னடர் என்று அடையாளம் காட்டி அவரை மக்களிடம் இருந்து அந்நியப் படுத்த காவேரி பிரச்சினையை பயன் படுத்துவார்கள். அதை எதிர் கொள்ள திட்டங்களை முன் கூட்டியே வகுக்க வேண்டும். தமிழகத்தின் நீர் தேவைகளை காவேரியில் இருந்தும் முல்லைப் பெரியாற்றில் இருந்தும் மட்டுமே எதிர் பார்க்காமல் உள் மாநிலத்தில் நீர் ஆதாரத்தினை வளர்க்கும் விதங்கள் அவற்றை செயல் படுத்த வேண்டிய செயல் திட்டங்கள் அவற்றிற்கான பட்ஜெட்டுகள் ஆகியவற்றை பற்றி ரஜினிகாந்த் எடுத்துச் சொல்லி அதன் மூலமாக எதிர் காலத்தில் தமிழகத்தின் நீர் தேவைகள் பூர்த்தி செய்யப் படும் என்பதை விளக்கி காவேரி பிரச்சினை ஏற்படுத்தும் வெறுப்பினை அவர் எதிர் கொள்ள வேண்டும்

7. தமிழகத்தின் கல்வி குறிப்பாக அடிப்படைக் கல்வியும் மேல் நிலைக் கல்வியும் பெரும் அளவுக்கு மோசமாக உள்ளது. அவற்றை சீர்திருத்த மத்திய அரசின் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அவர் அனுமதிக்க வேண்டும் அதற்கான காரணங்களை விளக்கி அதில் உறுதியாக இருக்க வேண்டும். பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளை முழுமையாக சீர்திருத்த வேண்டிய செயல் திட்டங்களை அறிவிக்க வேண்டும்

8. தமிழகத்தின் நீர் தேவைகளுக்கான மூலாதாரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. அவற்றிற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்த செயல் திட்டங்களை மிக விரிவாக அறிந்து கொள்வதுடன் அவற்றை எப்படி எப்பொழுது செயல் படுத்தப் போகிறோம் என்பதை விளக்க வேண்டும். அனைத்து திட்டங்களுக்கும் கறாரான கால வரையரையை வகுத்து அதன் படி குறித்த காலத்தில் முடிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ள கோதாவரி ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து நீர் எடுத்து தமிழகத்தில் கொண்டு வரும் திட்டம் தவிர கிழக்கு கடற்கரை முழுக்க கடல் நீரை மாற்றி குடிநீருக்கும் விவசாயத்துக்கும் அவற்றை உள் பகுதிகளுக்குக் கொண்டு வருவதற்கான திட்டங்களை அறிவித்து அவற்றிற்கான பட்ஜெட் மற்றும் கால எல்லைகளை அறிவிக்க வேண்டும். இந்த ஆண்டுக்குள் தமிழகத்தின் அனைத்து நீர் தேவைகளும் எப்படி பூர்த்தி செய்யப் போகிறோம் எப்பொழுது பூர்த்தி செய்யப் போகிறோம் என்பதற்கான அனைத்து திட்டங்களையும் முன் கூட்டியே தீர்மானித்து அவற்றை பொது இடங்களில் மக்களின் கண்காணிப்புக்கு வைத்தல் வேண்டும்

9. தங்கள் கட்சிக்கான நிதியை எப்படி எங்கிருந்து கொணரப் போகிறார்கள அதன் வெளிப்படைத் தன்மை போன்றவற்றை உறுதிப் படுத்த வேண்டும். கூடுமானவரை மக்களிடம் இருந்து நிதி பெற்று நடத்தப் பட வேண்டும்.ஒபாமா போன்றவர்கள் பயன் படுத்திய க்ரவுட் ஃபண்டிங் முறைகளை பரிசீலிக்க வேண்டும்

10. தமிழகத்தின் அனைத்து சுற்றுலா இடங்களையும் தூய்மைப் படுத்தி அவற்றை உலகத் தரமான சுற்றுலா தலங்களாக மாற்றி அதன்மூலமான வருவாய்களை பெருக்க வேண்டும்

11. பருவ மழைக் குறைவின் காரணம் காடுகள் அழிப்பு என்றால் அதை அதிகரிக்கும் முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் செயல் படுத்துவதற்கான செயல் திட்டங்களை அறிவிக்க வேண்டும்

12. அனைத்து நதிகளையும் களைகள், அசுத்தங்கள் ஆகியவற்றை நீக்கி படித்துறைகள் கட்டி அனைத்து நதிகளையும் அவற்றின் மேனைக்குக் கொணரும் திட்டங்களை சபர்மதி ஆற்றைப் போல காசியின் கங்கைக் கரையைப் போல மேம்படுத்த வேண்டும்

13. குப்பை அகற்றுதல் குப்பைகளை அழித்தல் மறு சுழற்சி செய்தல் ஆகியவற்றுக்கான நவீன முழுமையான செயல் திட்டங்களை அறிவித்து தமிழகத்தை குப்பை அசுத்தம் இல்லாத மாநிலமாக மாற்றும் செயல் திட்டங்களையும் காலத்தையும் அறிவிக்க வேண்டும்

14. இந்திய தேசியத்துடன் இணையாத தமிழகம் என்பது கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும். தேசியத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி அவற்றின் மூலமாக அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் நேராது என்பதை உறுதி செய்து அவற்றை செயல் படுத்த வேண்டும்

15. ஆன்மீக அரசு என்று சொன்ன பிறகு தமிழகத்தின் கோவில்களை அரசின் பிடியில் இருந்து விலக்கி அவற்றின் பாரம்பரியப் பெருமைகளை மீட்க்க வேண்டும். பாழடைந்த கோவில்கள் அனைத்தையும் மீட்டெடுக்க திட்டங்களை அறிவிக்க வேண்டும். பள்ளிப் பாடங்களில் தமிழின் பக்தி இலக்கியங்களை மீண்டும் கொண்டு வருதல் வேண்டும் அவை இல்லாமல் தமிழ் இல்லை என்பதை உணர்த்த வேண்டும்

16. தமிழகத்தின் தென் பகுதிகளில் எந்தத் தொழிற்சாலைகளும் வேலை வாய்ப்புகளும் இல்லை. வருங்காலங்களில் அவற்றுகான ஏற்பாடுகளை செய்தல் வேண்டும். கிழக்குக் கடற்கரைச் சாலையை மேம்படுத்தி அதன் வழியில் பதப்படுத்தப் பட்ட பெரும் விவசாய பொருள் சேமிப்பு நிலையங்களையும் தொழில் வளாகங்களையும் ஏற்படுத்த வேண்டும்.

17. தமிழகத்தின் கனிம வளங்களும், மண் வளங்களும், வன வளங்களும், பாரம்பரிய சின்னங்களான கோவில்களின் வளங்களும் இனிமேல் ஒரு குன்றி மணி அளவு கூட சேதாரம் அடையாது கொள்ளையடிக்கப் படாது என்ற உத்திரவாதத்தையும் ஆற்று மணல் தேவைக்கான மாற்று வழிகளையும் தெளிவாக அறிவித்தல் வேண்டும். இந்த உறுதிமொழி அவருக்கான ஆதரவை பெரும் அளவில் அதிகரிக்கச் செய்யும்

18. தமிழகம் இன்று பெரும் அளவில் டாஸ்மாக் வருமானத்தை நம்பியுள்ளது. மக்களின் குடிப் பழக்கத்தை வரைமுறைப் படுத்தும் ஒரு தெளிவான செயல் திட்டம் அறிவித்து சாராய விற்பனையைச் சார்ந்துள்ள அரசாங்க நிதி நிலையை குறைத்தல் வேண்டும். இதுவும் ஒரு பெரும் அளவு ஆதரவினை பெற்றுத் தரும் திட்டமாக இருக்கும்

19. மத்திய அரசு பெரும் அளவில் நிதிகளை அளித்து ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்களுக்கு உதவ முன் வந்துள்ளது. ஆனால் தமிழக அரசின் திறமையின்மையினாலும் அலட்சியத்தினாலும் அந்த நிதி பயன் படுத்தப் படாமல் வீணாகின்றன. மேலும் தமிழக அரசின் பாதி முதலீடு இருக்கும் பட்சத்தில் பல ரெயில்வே திட்டங்களை கொணர முடியும். இவை இரண்டிலும் அக்கறை செலுத்தி ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குள் இவை தொடர்பான அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றும் உறுதி மொழி அளிக்கப் பட வேண்டும்

20. மரபுசாரா எரிசக்தி பயன்பாட்டை அதிகரித்தல் குறித்தும் மாசு ஏற்படுத்தாத போக்கு வரத்து வாகனங்கள் குறித்தும் கால எல்லையும் திட்டமும் அறிவிக்கப் பட வேண்டியது அவசியம். தமிழகம் பெரும் சுற்றுலா வளம் உள்ள ஒரு மாநிலம். அவற்றை உலக அளவில் கொண்டு செல்வதற்கான திட்டமும் அதன் மூலமாக கணிசமான வருமானம் ஈட்டும் திட்டங்களும் தொல்பொருள் துறையை மேம்படுத்தும் திட்டமும் அறிவிக்கப் படுதல் அவசியம். தொழில்நுட்பம் மூலமாக அரசாங்க ஏலங்களில் வெளிப்படைத்தன்மையையும் அரசாங்க சேவைகளில் ஆன்லைன் சேவைகளையும் பயன் படுத்தி ஊழலை அறவே ஒழிப்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப் படுதல் வேண்டும்

இவை அனைத்தையும் செயல் படுத்த அடுத்த 4 ஆண்டுகளின் ஒவ்வொரு நொடியும் தேவைப் படும் மோடி போன்ற எல்லையற்ற ஆற்றல் இல்லாமல் போனாலும் கூட நேர விரயமின்றி இவை அனைத்தையும் திட்டமிட்டு செயல் படுத்த ஒரு ஸ்ட்ராடஜியை உருவாக்க வேண்டும். இவற்றிற்குத் தேவையான அறிஞர்களின் குழுவை ஏற்படுத்துதல் வேண்டும். நேர மேலாண்மை வேண்டும். ஒரு நொடியும் வீணாகமல் செயல் பட்டால் மேற்கூறிய அத்தனை செயல் திட்டங்களும் சாத்தியமானவையே. அதற்கான அர்ப்பணிப்பும் ஆற்றலும் தேவை. இவற்றை ரஜினிகாந்த் என்று அல்ல பாஜவே தமிழகத்தில் உருப்படியாக வளர வேண்டுமானால் அவற்றை செய்தே ஆக வேண்டும். இவை இல்லாத குறுக்கு வழிகளிலும் வெறும் மேடைப் பேச்சுக்களின் மூலமாக மட்டுமே மக்களைச் சென்றடைய முயன்றால் அவற்றில் வெற்றி பெறலாம் ஆனால் அது உண்மையான ஆட்சி மாற்றமாக அமையாது பழைய ஆட்சிகளின் தொடர்சியாகவே அமையும். மேலே குறிப்பிடப் பட்ட அத்தனை சீர்திருத்தங்களையும் செயல் படுத்த அவர் என்னவிதமான திட்டங்களை அறிவிக்கிறார் அவற்றையெல்லாம் எவ்வளவு வருடங்களுக்குள் செய்து முடிக்க உறுதி அளிக்கிறார் அதற்காக அவர் மேற்கொள்ளப் போகும் முயற்சிகள் யாவை அதற்கான குழுவினர் எவர் என்பவை போன்ற பல்வேறு அம்சங்களை வைத்து மட்டுமே அவரது வரவை வரவேற்க முடியும்.

இப்பொழுதைக்கு இந்திய தேசீயம் என்னும் மையத்தில் இருந்து தமிழகம் வேகமாக நழுவிக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஊழல்வாதிகளின் பிடியிலும் மணல் கொள்ளை மற்றும் கனிம கொள்ளையர்களின் பிடிகளிலும் சாராயத்தின் பிடியிலும் சிக்கியுள்ளது. இவற்றில் இருந்து தமிழகத்தை ஓரளவுக்காவது திருப்ப தமிழர்கள் தேர்ந்தெடுக்கும் விரும்பும் சினிமாத் துறையில் இருந்து ஒருவரை பயன் படுத்த முடியும் என்றால் அந்த யதார்த்தின் காரணமாகவும் வேறு தலமையை பாஜக போன்ற கட்சிகள் பிடிவாதமாக அளிக்க மறுப்பதன் காரணமாகவும் ரஜினிகாந்தின் வருகை பெரும் அளவு நடுநிலையாளர்களினாலும் தேசியத்தையும் தெய்வீகத்தையும் மதிக்கும் மக்களினாலும் இருக்கும் ஒரே வழி என்ற அளவில் வரவேற்கப் படவே செய்யும். அந்த வரவேற்பை தக்க வைத்துக் கொள்வது அவரது செயல்பாடுகளிலும் முயற்சிகளிலுமேயே உள்ளது.

வளர்ச்சியையும் இந்திய தேசீய ஒற்றுமையையும் வளர்க்கும் ஒரு மாற்று அரசியலை முன் வைப்பார் என்ற செய்தியை அவர் சோவின் பெயரை அவரது வழிகாட்டியாக குறிப்பிட்டதன் மூலமாக அறிவித்துள்ளார். அந்த வழியில் சென்றால் தமிழகம் உண்மையான ஒரு ஆட்சி மாற்றத்தை நல்ல எதிர்காலத்தை நோக்கி நகரும். அதற்கான வழிகளில் செல்ல அவருக்கு ராகவேந்திரர் ஆசி புரியட்டும், சோவின் ஆன்மா வழிகாட்டட்டும்.

https://solvanam.com/?p=51299

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீளமான கட்டுரை.... வாசிக்கவே போரடிக்கிறது.

முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி கேர்ணல் ஹரிகரன் அருமையாக ஆய்வு செய்து எழுதுகிறார்.

சௌந்தரராஜன், எஸ் பி பாலசுப்ரமணியம் போல குறிப்பிடத்தக்க, நீண்ட காலமாக இசை உலகில் கோலோச்சிய நிலைமை இப்போது வரும் பாடகர்களுக்கு இல்லை, ஒன்று, இரண்டுடன்  காணாமல் போகிறார்கள்.

அதேபோலவே இன்றைய சினிமா உலகம் எம் ஜி ஆர், சிவாஜி, ஏன் ரஜனி, கமல், போல மிக நீண்ட காலம் ஆளுமை செய்யக் கூடியதாக இல்லை. 

பணம் உள்ள யாருமே ஹீரோ ஆக கூடிய வாய்ப்பு சகலருக்கும் உண்டு.

ரஜனி பழைய புகழை வைத்து படத்தினையே ஓட வைக்க முடியாது என, லிங்கா, குசேலன், பாபா போன்ற படங்கள் மூலம் கண்டு கொண்டார்.

சொந்த காசு போட்டு அரசியலுக்கு வர விரும்பாததாலேயே அவர் இதுவரை வரவில்லை.

இப்போது காசு போடும் முதலாளி பிஜேபி. ஆகவே இறங்கிப் பார்க்க விரும்புகிறார்.

ஆனால் அவருக்கு அரசியல் சூதுவாது தெரியவில்லை. காரணம் அனுபவம் இல்லை.

கொள்கை கேடடார்கள்... ஒரு நிமிஷம் தலை சுத்திரிச்சு... நான் இன்னும் ஒரு குழந்தை  போன்ற சொல்லாடல்கள் இதனையே உணர்த்துகின்றன.

இவர் இன்னும் தீர்க்கமாக முடிவு செய்யவில்லை என்பது, 2021 சட்டசபைத் தேர்தல் தான் குறி என்று போரை தனது 71 வயது வரை தள்ளிப் போடுவதில் இருந்தே இவரது தயக்கம் புரிகிறது.

இவரது ரசிகர்கள்....அதாவது ரசிகர் மன்றங்களை வைத்து நடத்தும், மக்களால் ரசிக்கப் படுபவர்கள் அல்ல..... வேலை வெட்டி இல்லாத... தமது குடும்பங்களை கவனிக்காத.... உதவாக்கரை மனிதர்கள் என்றே பலர் நினைக்கிறார்கள். அவர்கள் நாளை தேர்தல்களில் நிற்கும் போது... அவர்களது குடும்பங்களே வாக்களிக்குமா என்பதே கேள்விக்குறி. 

கட் அவுட்டுக்கு  பால் ஊத்துவதையும், ரஜனி பைத்தியமாக திரிபவர்களையும், சீரியஸ் அரசியல் வாதிகளாக மக்கள் பார்ப்பார்கள் என சொல்ல முடியாது.

எம் ஜி ஆர் திமுகவை விட்டு கிளம்பும் போதே, பழுத்த அனுபவம் மிக்க தலைவர்கள் அவர் பின்னால் வந்தார்கள். அவர்கள் தான் அரசியல் செய்தார்கள்... அவரது ரசிகர்கள் வாக்குகள் தான்  போடடார்கள்.

அனைத்துக்கும் மேலாக, தாமதமாக, ஆனால் அதி தீவிரமாக வளர்ந்து வரவும் தமிழ் தேசியவாதம் ரஜனிக்கு மிகவும் அனுகூலமில்லாதது.

முக்கியமாக ரஜனியின், தண்ணி தரமறுக்கும் கன்னட பின்புலம் மிகவும் பிரச்சனைக்கு உரியது. இதனை தமிழ் தேசியவாதிகள் மட்டுமல்ல, திராவிடர் கட்சிகளே பயன் படுத்தி எதிர்க்கப் போகிறனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுடன் கை குலுக்கி கொள்ளவே ஒன்றுக்கு இரு தடவை யோசித்து விலகி நிற்பவர்

இத்தனையையும் செய்ய எத்தனை பேருடன் கை குலுக்கி வீடு வாசல் குடும்பங்களை விட்டு நாடு முழுவதும் அலைய வேண்டி வரும்.

ஐயா தாங்குவாரா?

Link to comment
Share on other sites

யாரும் விஜய் சேதுபதியின் காணொளி பார்த்தீர்களோ தெரியவில்லை. தமிழ் நாட்டு இளையோரை அப்படி தத்ரூபமாக சொல்லி உள்ளார். பல இளைஞர்கள் அரசியல் ரீதியாக தம்மை பிணைத்துள்ளார்கள். (பணத்துடன் தினகரனை இணைப்பது பயங்கரமானது என்றாலும்). எனவே ஆடல் அழகி, சுப்பர் ஸ்ரார், புரட்சி தலைவர் என்ற போக்கு விரைவில் மாறி விடும்.
இந்தியாவை மாற்ற கடவுளால் தான்முடியும் என்ற புதுமொழியுடன் முடிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

மிக நீளமான கட்டுரை.... வாசிக்கவே போரடிக்கிறது.

உண்மைதான். ஆனால் விரிவான பார்வையுடன் பல தகவல்கள் உள்ளன. 

ரஜினி ரசிகர்களில் அதிகமானோர் நாற்பதைத் தாண்டிவிட்டதால் விடலைகள் என்று மக்கள் ஒதுக்கமாட்டார்கள். அத்தோடு ரசிகர் மன்றங்கள் சிற்றூர்களிலும் இருப்பதால் அடிமட்டத்தில் தொடர்புகொள்ள உதவும். ஆனால் வீதியில் இறங்கி வேலை செய்யாத ரஜினியால் ஆதரவை திரட்டுவது இலகுவல்ல. மற்றும்படி கேர்ணல் ஹரிகரன் குறிப்பிட்ட எல்லா விடயங்களும் இந்த நீண்ட கட்டுரையில் உள்ளது.

கட்டுரையாளர் திராவிடக் கட்சிகளை விரும்பாத இந்தியத் தேசியத்தை நிலைநிறுத்த விரும்பும் ஒருவர். பிரிவினை, தமிழ்த் தேசியம் என்று முழங்குபவர்களை பின்தள்ளி, இந்திய தேசியத்தை ரஜினி வலியுறுத்தவேண்டும் என்று சொல்கின்றார். ஆனால் இது தமிழ்நாட்டில் விலைபோகாது என்பது காங்கிரஸ், பிஜேபி கட்சிகளின் செல்வாக்கைப் பார்த்தால் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ரஜினி ரசிகர்களில் அதிகமானோர் நாற்பதைத் தாண்டிவிட்டதால் விடலைகள் என்று மக்கள் ஒதுக்கமாட்டார்கள்.

விடலைகள் வேறு.... பைத்தியங்கள் வேறு....

இவர்கள் ரசிகர்மன்றங்கள் ஆரம்பிப்பதே என்றாவது அந்த நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்தால், அரசியல் வாதி ஆகமுடியும் என்று.

அதுதான் தலைவரே சொல்லிட்டாரே.... பணம் சம்பாதிக்க வராதீங்க. ஒரு கோடி செலவழிக்க முடியும்ன்னா வாங்க... சீட் தாரேன்...

யாரு வருவாங்க?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசியத்தை முன்னிருத்தும் வகையில் எப்பாடுபட்டாவது ரஜனி வரனும் என விரும்பும் ஒருவரால் வரையபட்ட கட்டுரை சொறிலங்கா முஸ்லீம் முதலில் தான் முஸ்லீம் இரண்டாவது இலங்கை மூன்றாவது தமிழ் கதைப்பவர் இப்படி தாய் தமிழை மூன்றாவது இடத்தில் கொண்டாடும் கூட்டம் போல் இந்தியாவில் இந்தியன் இரண்டாவது சாதி மூன்றாவது தமிழ் என்று கொண்டாடுபவர்களால் எப்போதும் இந்தியாவுக்கும் ,தமிழுக்கும் பிரச்சனை கட்டுரையாளரும் அதே வகைதான் பிரச்சனை இப்படியானவர்களினால் தான் ஆரம்பிக்குது இப்படி ரஜனி எனும் விம்பத்தை ஊதி பெருப்பிச்சு ஒழுங்கான கட்சிக்கு ஓட்டு விழாமல் ஓட்டுக்களை சிதைப்பதால் கண்ட கருமாந்திரங்களும் கூட்டு ஆட்சியில் மேடையேறி கொள்ளை அடிக்கின்றன சோ எல்லாம் இதே வகை கூட்டம் தான் .

ஆனாலும் காலம் சடுதியாக மாறிக்கொண்டு இருக்கின்றது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.