Sign in to follow this  
நவீனன்

கலக்கப்போவது யாரு

Recommended Posts

கலக்கப்போவது யாரு

1t4qwx.jpg

கலக்கப்போவது யாரு
 
கலக்கப்போவது யாரு
 

குட்டித் தேர்தலுக்கான அரசியல் சூழலோடு புதிய வருடத்தை வரவேற்கத் தயாராகிவிட்டனர் இலங்கை மக்கள். 2018ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் களத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், அதன் பின்னர் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், அதன் பின்னர் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் புதிய அரசியல் அமைப்பு என வருடம் முழுவதும் இலங்கையின் அரசியல் நிலைவரங்கள் வழமையைவிட சற்று பரபரப்பாகவே காணப்படப்போகின்றன, என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகளுக்கு (கூட்டணிகளுக்கு) கிடைக்கும் மக்கள் ஆதரவு, அதன் பின்னரான தேர்தல்கள் மற்றும் புதிய அரசியல் உருவாக்கப்பணிகளில் தாக்கம் செலுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து நோக்குகையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு (கூட்டணிக்கு) மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பதை கணிப்பது அவ்வளவு சுலபமல்ல.

காரணம், இலங்கையின் இரண்டு பிரதான கட்சிகள் (ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி) மீதும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான பொதுஜன பெரமுனவிற்கு கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க மக்கள் ஆதரவு, சிறிய கட்சிகளான (கூட்டணிகள்) மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பன தொடர்பிலான மக்களின் எதிர்ப்பார்ப்பு என பல கோணங்களில் இது தொடர்பில் ஆராய வேண்டியிருக்கின்றது.

இந்த சூழலில் வடமாகாணத்தின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களத்திலும் பரபரப்பிற்கும், குழப்பங்கள், பிரச்சினைகளுக்கும் பஞ்சமில்லை. வட மாகாண தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில், புதிதாக உருவாகியிருக்கும் கூட்டணிகள், புதுப்பிக்கப்பட்டிருக்கும் கூட்டணிகள் சவாலாகவே அமையப்போகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் நிரந்தரத் தீர்வொன்றினை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே இருப்பததாக நம்பப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவில் அவர்களின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட கூட்டணி என்ற வகையிலும், வடக்கு, கிழக்கில் மக்கள் செல்வாக்கைப் பெற்ற கட்சிகள் அதில் அங்கம் வகிப்பதுமே இதற்குக் காரணம். எனினும், தமிழ்க் கூட்டமைப்பின் அண்மைக்கால போக்குகள், கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை சற்று குறைவடையச் செய்துள்ளதோடு, அது முரண்பாடுகள், புதிய அரசியல் கூட்டணிகளை வடக்கில் உருவாக்கவும் வழி வகுத்துள்ளது.

தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமையை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான தேசிய அரசுடன் முன்னெடுத்துச் செல்லும் இணக்க அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பிற்கு மிகப் பெரிய பின்னடைவை தந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.

அதற்குக் காரணமில்லாமிலில்லை. வழமையாகவே வடக்கு அரசியல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரிய போட்டி ஒன்றும் நிலவியதில்லை, தீவகப் பகுதியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஓளரவு வாக்குகளை பெற்றுக்கொள்ளுமே தவிர, கூட்டமைப்பிற்கு பெரிய பாதிப்புகள் எதுவும் இருந்ததில்லை.

இம்முறை அப்படியல்ல. பல அமைப்புகள், கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிகள், தேசிய அரசியலை முன்னெடுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளின் அரசியல் காய்நகர்த்தல்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சற்று கலக்கமடையச் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

களத்தில் யார்?

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்று வதற்காக, 10 அரசியல் கட்சிகளும் 7 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன. முல்லைத்தீவில் உள்ள 11 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றுவதற்காக, 11 அரசியல் கட்சிகளும், 3 சுயேச்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றும் நோக்கில் 12 அரசியல் கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியில் குதித்துள்ளன. மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேச்சைக் குழுவும் போட்டியிடுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களில் 09 அரசியல் கட்சிகளும், 3 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

புதிய கூட்டணி

தமிழரசுக் கட்சி மக்களின் ஆணையிலிருந்து விலகி தன்னிச்சையாக செயற்படுவதாகவும், தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடாமல், பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் பிரதான பங்கு வகித்து பின்னர் கருத்து முரண்பாட்டால் பிரிந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும் இணைந்து மாற்றுத் தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்குகின்றன. இந்தக் கூட்டணிக்கு ரெலோ கட்சியைச் சேர்ந்த சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பல மூத்த அரசியல்வாதிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழரின் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழினத் தலைவர் தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியாலும் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸாலும் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னமான "உதயசூரியன்' சின்னத்தையே இப்புதிய கூட்டணி தேர்தல் சின்னமாக ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது உதயசூரியன் சின்னமே கூட்டமைப்பின் சின்னமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக இடைப்பட்ட காலத்தில் அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாக இருந்தது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் நம்பிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையிலும், கூட்டமைப்பில் அங்கம் வகித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் விலகிச்சென்று இந்த கூட்டணியுடன் கைகோர்த்துள்ளமையாலும் கணிசமான மக்கள் ஆதரவு இந்த புதிய கூட்டணிக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.

ஏனைய சக்திகள்

அதேவேளை, தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்து வரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீதான மக்களின் அதிருப்தியை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வாக்கு வேட்டையில் ஈடுபடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மேலும் வழøமாகவே எந்தத் தேர்தலிலும் ஓரளவு கணிசமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவும் இந்தத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு சவாலாகவே இருக்கப்போகின்றன. மேலும், சுயேச்சையாக பலர் இந்த தேர்தலில் வடக்கில் களமிறங்கியுள்ளனர். அவர்கள் அனைவருமே அந்தந்த பிரதேசங்களில் மக்களுக்கு நன்கு பரீச்சயமுள்ளவர்களாக இருக்கின்ற நிலையில் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகமாகவே தந்திருக்கின்றன.

கூட்டமைப்பின் பின்னடைவு

கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் பேராதரவினை வழங்கியமைக்கு மூன்று காரணங்களே காணப்படுகின்றன. ஒன்று புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டணி, இரண்டாவது மக்கள் ஆதரவு பெற்ற அமைப்புகளின் (கட்சிகள்) ஒன்றிணைவு.

மூன்றாவது அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிங்கள அரசுகளுடன் பேசி ஒரு தீர்வினை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை. எனினும், தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கை இழந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

காரணம், தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் யுத்தக் குற்றவிசாரரணை, காணி விடுவிப்பு, அரசியல் தீர்வு, காணாமற்போனோர் விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் கூட்டமைப்பின் செயற்பாடுகள் அவ்வளவு திருப்தியாக இல்லையென்பதில் மாற்றுக்கருத்தில்லை. தேசிய அரசுடன் தமிழ்க் கூட்டமைப்பின் விட்டுக்கொடுப்புடனான அரசியல் செயற்பாடுகள், கூட்டமைப்பின் தலைமை தன்னிச்சையாகவோ அல்லது தமிழரசுக் கட்சியின் கருத்துகளுக்கு ஏற்ப தீர்மானம் எடுக்கும் செயற்பாடுகள் என பல விடயங்களில் தமிழ்க்கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் கூட்மைப்பு மீதான மக்களின் ஆதரவு குறைவைடைவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின.

மேலும், தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மக்கள சார் செயற்பாடுகள், குறிப்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானங்கள், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது எழுச்சி பேரணி என்பவற்றுக்கு எதிரான தமிழ்க் கூட்டமைப்பு தலைமையின் கருத்துக்கள் மக்களுக்கு கூட்டமைப்பு மீதான வெறுப்பினை அதிகரிக்கச் செய்தது. மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஆசனப்பங்கீட்டு விடயத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், உட்கட்சி மோதல்கள் என பல வழிகளிலும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு பாரிய பின்னடைவுகளையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்றால் அது மிகையல்ல.

மக்கள் ஆதரவு யாருக்கு?

வடக்கிலும் உருவாகியிருக்கும் புதிய கூட்டணி, சரிந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் இந்தத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பிற்கு ஓரளவு பின்னடைவு ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்றாலும், புதிய கூட்டணியின் பிரசாரங்கள், அவர்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கையே அவர்களது வெற்றியை உறுதி செய்யும். மாறாக, கூட்டமைப்பு மீதான வெறுப்பு மாத்திரம் அவர்களுக்கு வெற்றியை தேடித்தந்துவிடாது.

ஏனைய பிரதேச மக்களைவிட, வடபகுதி தமிழ் மக்கள் தேசிய மற்றும் பூகோள அரசியல் தொடர்பில் கூடுதலான அறிவினை பெற்ற மக்களாக காணப்படுகின்றனர். கடந்த காலப் பிரச்சினைகள் அம்மக்களுக்கு அந்த அரசியல் அறிவினை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் அம்மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றி வாக்கு வங்கிகளை நிரப்பிவிட முடியாது. மாறாக, வட மாகாண தமிழ் மக்கள் எவ்வளவு நாட்களுக்கு கூட்டமைப்பின் பேச்சுக்கு அடிபணிந்து செல்வார்கள் என்ற கேள்வியும் எழாமலில்லை.

இவ்வாறான ஒரு இக்கட்டான, குழப்பகரமான சூழலில் வெற்றி யாருக்கு என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.

https://www.sudaroli.com

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this