Sign in to follow this  

Recommended Posts

 

உயிர்ப்பு

 
 

கட்டிலின் விளிம்பிலிருந்து தொங்கிய விரிப்பை இழுத்து உள்ளே செருகினான். அந்தச் சிறிய அசைவில் கண் விழித்த அம்மா, மெல்ல தனது சுருண்ட உடலை நகர்த்தி அவனது சீர் செய்யும் நடவடிக்கைக்கு இடம் கொடுத்தாள். அவளைப் பொறுத்தவரையில் நோயில் படுத்ததிலிருந்து தன் மகன் மாதவனுக்கு, தான் ஒரு பாரமாக ஆகிவிட்டோம் என்ற எண்ணம் விழுந்து விட்டது.
7.jpg
ஆனால், இது குறித்த கவலை எதுவுமில்லாமல் மாதவன் பேச்சில் கிண்டலும் உற்சாகமும் குறையாமல் வளைய வந்து கொண்டிருக்கிறான். இது அவனுடைய இயல்பு. இந்த உற்சாகமும் அடுத்த பொழுதைப் பற்றிய கவலையின்மையும்தான் அவனை மட்டுமல்ல, அவன் தாயாரையும், மற்றும் இரண்டு உடன் பிறப்புகளையும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அவளுக்கு அவன் அடிக்கடி கூறும் சார்லி சாப்ளினின் கதை நினைவிற்கு வந்தது.

“பாத்ரூம் போகணுமா?” கேட்டான் மாதவன். அவனுக்கு இந்த சித்திரை வந்தால் நாற்பது வயது முடிகிறது. அவரவர் வாழ்க்கை அவரவர்களுக்கு என்றாலும் படிக்க வேண்டிய பருவத்தில் மற்ற இரண்டு சகோதரர்களையும் போலில்லாமல் இவன் கதை, நாடகம் என்று சுற்றித் திரிந்தவன். தனக்கென்று குடும்பம் மனைவி என்றில்லாமல் நிலையான வாழ்க்கை எதுவுமில்லாமல் அல்லாடுகிறான்.

பெரிய பெரிய எழுத்தாளர்களுக்கு நகல் எடுத்துக் கொடுப்பது, கணினியில் எழுத்துருவாக்கம் செய்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுச் சொற்ப வருமானத்தைக் கொண்டு ஜீவிதம் செய்து வருகிறான். அதுவும் மற்ற இரண்டு சகோதரர்கள் மாதம் பிறந்தால் கொண்டு வரும் முள்ளங்கி பத்தை போன்ற வருமானம் இல்லை. பேரு மட்டும் பெத்தபேரு, உதவி வசனகர்த்தா.

அம்மா ஆமென்று தலையாட்டினாள். மாதவன் அம்மாவின் கட்டிலின் அருகில் குனிந்து பஞ்சை விட மெலிந்து போன தாயின் தேகத்தை அவள் தலைக்கு அடியில் கைகளைக் கொடுத்து பூப்போல மெல்ல தூக்கிவிட்டான். அவளது கவனம் முழுவதும் தனது முழு அங்கியின் மீதுதான் இருந்தது. கைகளால் மெதுவாக தொடைக்கு அடியிலிருந்து தொடங்கி சற்று மேலே தூக்கி நின்ற ஆடையைக் கணுக்கால்களை மறைக்கும் வண்ணம் இழுத்து விட்டாள். மெல்லிய குருத்து போன்ற எலும்புகளும், பச்சை ரத்தம் ஓடும் நாளங்களும்... அவளது பாதங்கள் இரண்டும் வாடிய தாழை மடல்களைப் போலிருந்தன.

நார்க்கட்டிலின் இருப்புச் சட்டங்களை பலமாகப் பற்றியபடி தனது ஆற்றலை எல்லாம் ஒன்று திரட்டி பிரயாசையுடன் எழுந்து நின்றாள். அந்தச் சிறிய முயற்சிக்கே அவளுக்கு மூச்சு வாங்கியது. கன்னங்களில், கழுத்தில், வயிற்றுப் பகுதியில் நீர் சேர்ந்து சற்று வீங்கிய தோற்றத்துடன் காணப்பட்டாள். சுருட்டி மடக்கினால் ஒரு பெரிய கித்தான் பையில் எடுத்துக் கொண்டு போகும்படியான உருவம்தான். ஆனால், அதற்குள் தன்னால் அடுத்தவர்களுக்குச் சிரமம் எதுவும் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் அதிக கவனம் இருந்தது.

கையைப் பிடித்துக் கொள்ளவில்லை என்றாலும் கழிப்பறை வரையில் உடன் சென்று வெளியில் நின்று கொண்டான். இப்பொழுதெல்லாம் அவளைத் தனியே எங்கும் அனுப்பாமல் தனது கண்பார்வையில் வைத்து கவனித்துக் கொள்கிறான். மீண்டும் அம்மாவைக் கழிப்பறையிலிருந்து அழைத்து வந்து நார்க் கட்டிலின் விரிப்பை உதறி சரி செய்து வேறு விரிப்பு மாற்றித் தலையணை தட்டிப் போட்டுப் படுக்க வைத்தான்.

அம்மா படுக்க விரும்பாமல் சற்று தள்ளாடியபடி தன்னை விழுந்துவிடாமல் சுதாரித்துக் கொண்டு முதுகைக் கூன் போட்டபடி அமர்ந்தாள். “ஏதாவது சாப்பிடறியா?’’ “என்ன இருக்கு?’’ “உனக்கு ஓட்ஸ் கஞ்சி பண்ணியிருக்கேன். இன்னிக்கு சாலிகிராமத்தில் என்  கதையை டிஸ்கஸ் பண்றாம்மா. நேத்திக்கே சில்வர் ஷங்கர் தயாரிப்பாளர்கிட்டே கதையைச் சொல்லிட்டாராம். ஃபைனலைஸ் ஆயிடும்னுதான் சில்வர் ஷங்கர் உறுதியா சொல்றார். இந்தத் தயாரிப்பாளர் கதை எழுதறவங்களை ரொம்பவே தலையில் வச்சு தாங்குவாராம்.

குறைந்தது ஒரு இலட்சம் கிடைக்கும்னு சொல்றாங்க. பேனரும் பெரிய பேனர். உறுதியாச்சுன்னா காசுக்குக் காசு, பேருக்குப் பேரு...” “உட்கார்ந்துண்டுதான் காலை நீட்டணும். நின்னுண்டு நீட்டக் கூடாது...” என்றாள் அம்மா நூறாவது முறையாக. “ஓட்ஸ் எடுத்து வைக்கட்டுமா?’’  “தெனம் ஓட்ஸ் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு மரத்துப் போச்சுடா...” “பூரி மசால் பண்ணித் தரட்டுமா?” அவன் கிண்டலை ரசிக்கும் அளவிற்குக் கூட அவளிடம் தெம்பு இல்லை.

அவளது ஆகாரம் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. நீர், சர்க்கரை, உப்பு எல்லாமே மருத்துவர் கூறும் அளவுகளில்தான் கொடுக்க வேண்டும். மீறும் ஒவ்வொரு அளவிற்கும் ஏற்படும் உடற் கோளாறுக்கு அவர்கள் மருத்துவமனைக்குக் கொடுக்க வேண்டிய தொகையை நினைத்தால் தூக்கம் நின்றுபோய்விடும். இதுவரையில் அண்ணன்மார்கள் இருவரின் வாசல் கதவைத் தட்டும் துர்பாக்கியத்தை ஆண்டவன் அளிக்கவில்லை. இனிமேலும் அளிக்கக் கூடாது என்பதுதான் இருவரது விருப்பமும்.

“சீக்கிரம் வந்துடு...” “என் ஒருத்தன் கையில் இருந்தால் நீ சொல்றபடி வரலாம். நான், ஹீரோ, சில்வர் ஷங்கர், இயக்குனர், தயாரிப்பாளர், அவனுடைய இரண்டாவது சம்சாரம் இத்தனை பேர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். மத்யானம் போஜனம் கிடைக்கறதான்னு பார்ப்போம். வழக்கம் போல உனக்கு டயபர் கட்டிட்டுப் போறேன். வாக்கரைப் பக்கத்தில் வச்சுட்டு போறேன். வாக்கர் இருக்கு என்பதற்கு அடிக்கடி நடக்க வேண்டும் என்பதில்லை. ஒரு சாவியைப் பக்கத்துப் போர்ஷன் காமாக்ஷி கிட்ட கொடுத்துட்டுப் போறேன்.

ரெண்டு மூணு தபா வந்து பார்த்துக்கறேன்னு சொல்லியிருக்கா. கூடிய மட்டும் சுருக்க வந்துடறேன்...” மாதவன் கிளம்பினான். வேகு வேகு என்று ஓடினால்தான் பத்து மணிக்குள் பேருந்தைப் பிடித்துக் கோடம்பாக்கம் போக முடியும். மற்றவர்கள் காத்திருக்க இவன் செல்வதற்கும், இவன் காத்திருந்து மற்றவர்கள் வருவதற்கும் பெரிய அளவில் பேதம் உள்ளது.

சில்வர் ஷங்கர் அவனைப் பொறுத்தவரையில் நண்பன், மேதை, வழிகாட்டி எல்லாம். அவன் முகம் சற்று மாறி, ‘‘என்ன மாதவன் வழித்தடம் அறிந்து கொஞ்சம் முன்னால் வந்திருக்கக் கூடாதா?’’ என்ற கேள்வியை மற்றவர் முன்னால் கேட்டு விடக் கூடாது. அந்தத் துறையைப் பொறுத்தவரையில் நேரம் தவறாமை என்பது அவனைப் போன்ற முதல் படியில் இருப்பவர்களுக்கு மட்டும்தான். உச்சிப்படியில் இருக்கும் சில்வர் ஷங்கர் போன்றவர்களுக்கு அல்ல.

போன பத்து நாட்களாக அம்மாவிடம் அதிகப்படியான முன்னேற்றமும் இல்லை. அதிகப்படியான சீரழிவும் இல்லை. அருகில் இருந்த எழுபது வயதான எம்.பி.பி.எஸ்., மருத்துவரிடம்தான் அம்மாவைக் கொண்டு போய்க் காட்டுவான். தீராத ரத்த அழுத்தம், தலை சுற்றல் உள்ளன. அவர் கொடுக்கும் மாத்திரையில் அடங்கிக் கிடந்தது ஒருநாள் எல்லை மீறி அம்மாவை அவரது கிளினிக்கில் இரண்டு நாட்கள் அனுமதிக்கும்படியானது. அந்த நேரம்தான் அவனுக்குக் கிடைத்த அபரிமிதமான ஓய்வில் ஒரு முழு படத்திற்கான அவுட் லைனைக் காட்சி வாரியாகப் பிரித்து நடு நடுவில் வாய்விட்டுச் சிரிக்கக் கூடிய வசனங்களைக் கோர்த்து ஒரு நல்ல திரை வடிவத்தை எழுதி முடித்தான்.

சில்வர் ஷங்கர் அதை முழுவதும் வாசித்துவிட்டு தலையில் வைத்துக் கொண்டாடினான். பூவோடு சேர்ந்த நார் என்ற பட்டம் மட்டும் மாதவனுக்கு ரசிக்கவில்லை. இதுபோன்ற நுட்பமான அவமானங்களை உள்வாங்கி மரத்துப்போன மனது அதனை முகத்தில் காட்டாமல் இருக்கப் பழகிக் கொண்டு விட்டது. அடுத்த முறை அம்மாவிற்கு மேலும் இப்படி ஒரு சீரழிவு ஏற்பட்டால் நோய் வேறு பரிமாணம் அடையும் என்று மருத்துவர் எச்சரித்து விட்டார். அவனைக் கூடை கூடையாகப் பணம் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தார்.

முதலில் கூடைக்கே அலையணும். அப்புறம்தானே அதில் இட்டு நிரப்ப பணம்? பேருந்தில் ஏறியதும் நடத்துனரிடம் மாத பாசைக் காட்டிவிட்டு கூட்டத்தில் ஒருவனோடு ஒருவனாகத் தன்னை மறைத்துக் கொண்டான். சென்னையின் வசதி இந்தக் கூட்டம்தான். சட்டென்று காணாமல் போய்விடலாம். யாரும் தேட மாட்டார்கள். வீட்டில் இருக்கும் அவனையும் அம்மாவையும் தேடுவதற்கே ஆளைக் காணவில்லை. இத்தனைக்கும் அம்மா, தான் சமையல் வேலை பார்த்து வந்த இல்லத்தின் உடைமையாளரிடம் சொல்லி மூத்தவன் கணேசனுக்கு கனரக போக்குவரத்து வண்டிகள் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் நல்ல பதவியில் வேலை வாங்கிக் கொடுத்தாள்.

கணேசனுக்குத் தன் பொறியியல் படிப்பின் மீது தீராத நம்பிக்கை உண்டு. சட்டென்று பிடித்துக் கொண்டு உயரத்திற்குப் போய்விட்டான். வேளச்சேரியில் நூறடி சாலையில் மிக உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பனிரெண்டாவது தளத்தில் சொந்த வீடு, காதல் திருமணம், இரண்டு குழந்தைகள். லிப்ட் இருந்தாலும் அவனும் அவன் தாயாரும் மேலே ஏறுவதற்குச் சிரமப்பட்டனர். 

மாதவன் தனது நிறுத்தம் வந்ததும் கீழே இறங்கினான். வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இல்லாததால் பேருந்து அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் கொண்டு வந்து விட்டது. பத்து நிமிடம் முன்னால் கொண்டு விட்டதால் அனைத்து சென்னைவாசிகளுக்கும் இருக்கும் அந்தப் பரபரப்பு இன்றி அவன் சற்றுக் காலாற நடந்தான்.

ஷோபா கல்யாண மணடபத்தின் அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு கோல்ட் ஃபில்ட்டர் வாங்கி ஆழமாகப் புகையை உறிஞ்சினான். எல்லா திரையரங்குகளிலும் காட்டப்படும் புகைப் பழக்கம் உடல் உயிரைக் குறிக்கும் என்ற வாசகம் மனத்திரையில் கருப்பு வெளுப்பாக ஓடியது. கணேசனுக்கு அடுத்தவன் நாராயணன். அவன் அண்ணனைப் போல அதி புத்திசாலி இல்லை என்றாலும் மாதவன் அளவிற்கு ஊர் சுற்றியும் இல்லை.

ஊரில் இருக்கும் எல்லா தகுதித் தேர்விற்கும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டு ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் உதவியாளர் பணியில் அமர்ந்து துறைத் தேர்வுகளில் படித்து பதவி உயர்வு பெற்று கொஞ்ச காலம் வேலூருக்கு மாற்றலாகி, மீண்டும் சென்னைக்கு மாற்றலில் வரும்போது உடன் வேலை பார்த்த பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தான்.

அம்மாவிற்கு அட்சதை போடும் வாய்ப்பைக் கூட அவன் வழங்கவில்லை. மூத்தவர் இருவருக்கும் ஆயிரம் காரணங்களுடன் தனித் தனி குடித்தனம். மாதா மாதம் இருவரும் தலைக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் மாதவன் வங்கிக் கணக்கில் பணம் போட்டு விடுவார்கள். பணம் வரவு வைக்கப்பட்டதற்கான குறுந்தகவல் ஒவ்வொரு முறை கைப்பேசியில் வரும்போதும் அவன் கூனிக் குறுகுவான்.

சிகரெட்டை அணைத்துவிட்டு  மின்ட் மிட்டாய் ஒன்றை வாயில் அதக்கிக் கொண்டு மாதவன் எல்.வி.பிரசாத் சாலையில் நுழைந்தான். அந்தச் சாலையில் ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் சில்வர் ஷங்கர் தனியாக அலுவலகம் போட்டு வைத்திருந்தான். பல வருடங்களாகத் திரைத் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவன். அவனுடைய சிற்றப்பன்கள் இரண்டு பேர் வெவ்வேறு துறைகளில் திரைப்படத்தை நம்பி வாழ்க்கையை ஓட்டுபவர்கள். அவர்களது பெரிய தாத்தா ஒருவர் நாற்பது ஐம்பதுகளில் குணச்சித்திர வேடங்களில் பிரபலமாக விளங்கியவர். சில்வர் ஷங்கரும் தடாலென்று திரைத் துறைக்குள் நுழையவில்லை. இரண்டு மூன்று பத்திரிகை அலுவலகம், அமெச்சூர் நாடகங்கள், நான்கைந்து காப்பி ரைட்டர்.

அப்போதுதான் மாதவன் ஷங்கரிடம் அறிமுகமானான். ஒரு சினிமா, இரண்டு டெலிவிஷன் சீரியல் என்று பன்முகம் காட்டியபின்னரே கதை வசனகர்த்தா என்ற ஒளிவட்டம் பின்னால் சுழலத் தொடங்கியது. அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்தபோது சீனு விளக்குமாற்றால் தரையைக் கூட்டிக் கொண்டிருந்தான். மாதவன் சிஸ்டத்தை ஆன் செய்து விட்டுக் காத்திருந்தான். சீனுவைத் தவிர வேறு யாருமில்லை. இது எப்போதும் நடக்கும் கூத்து என்றாலும் இதனை மீறவோ அல்லது எடுத்துச் சொல்லவோ தனக்கு அதிகாரம் இல்லை என்பதை உணர்ந்த மாதவன் தனது சட்டைப் பையிலிருந்து பென்டிரைவை எடுத்தான்.

“வைரஸ் இல்லாம பார்த்துக்குங்க சார்...’’ என்ற சீனுவை முறைத்தான். “ஆன்டி வைரஸ் சாஃப்ட் வேர் போடச் சொல்லுப்பா உங்க முதலாளியை...’’ வாசலில் அழைப்பு மணி ஒலித்தது. சீனு கதவைத் திறக்க சென்ட் மணக்க தயாரிப்பாளரும் அவன் சம்சாரமும் நுழைந்தனர். தயாரிப்பாளரின் சம்சாரம் அணிந்திருந்த லெக்கின்ஸ் பயமுறுத்துவதாக இருந்தது. பின்னால் சில்வர் ஷங்கரும் கூடவே நுழைந்தான்.

சீனுவும் மாதவனும் தயாரிப்பாளர் அமரச் சொல்லும் வரையில் நின்றுகொண்டிருந்தனர். கூடம் முழுவதையும் அடைத்துக் கொண்டு திவான் போடப்பட்டிருந்தது. சுவரில் நான்கைந்து தலையணைகள் சதுர வடிவில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. சில்வர் ஷங்கர் யார் முன் அனுமதியுமின்றி ஒரு தலையணையின் மேல் சாய்ந்து கையில் ஒரு ஸ்க்ரிப்ளிங் அட்டையுடன் அமர்ந்தான். தயாரிப்பாளர் ஒரு தலையணையில் சாய்ந்து கொண்டார்.
“மாதவன்...” சில்வர் ஷங்கர் அழைத்தான்.

“சொல்லுங்க சார்...’’ “சாருக்கு உன் கதை பிடிச்சுப் போயிடுச்சாம். ரொம்பப் பாராட்டினாரு. இருந்தாலும் பெண்களுக்குப் பிடிக்குதா இல்லையான்னு தெரிஞ்சுக்க அவரு மேடத்தைக் கூட்டிகிட்டு வந்திருக்காரு. உன்னால் மேடத்திற்குக் கதை சொல்ல முடியுமா?’’தயாரிப்பாளரின் சம்சாரம் எவ்வித ஆபத்தையும் எடுக்க முயற்சிக்காமல் ஓரத்தில் போடப்பட்ட சோஃபா ஒன்றில் அமர்ந்து கொண்டாள். தனக்கு அருகில் இன்னொரு நாற்காலி போடச் சொன்ன அவளது நாகரீகம் மெச்சும்படி இருந்தது என்றாலும் மாதவன் நின்று கொண்டே கதை சொல்வதாகக் கூறினான். அவனால் நின்றபடி, நடந்தபடி, தான் உருவாக்கிய கதையைக் கூறுவது எளிதாக இருப்பதாக எண்ணுபவன்.

பத்து பேருக்கு ஒரே கதையைக் கூறினாலும் முதன் முறையாகக் கூறுவதைப் போன்ற உணர்வுடன் கூறவேண்டும் என்பதுதான் அவனுக்கு அளிக்கப்பட்ட பாலபாடம். அதை நினைவில் வைத்துக்கொண்டு தயாரிப்பாளரின் சம்சாரத்திற்குக் கதை சொல்லத் தொடங்கினான். நாற்பது காட்சிகளையும் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கூறிய விதத்திலும், கதையில் இருந்த புதுமையிலும், இடையிடையே அந்தக் காட்சிகளை மனத் திரையில் ஓடவிட்டு வாய் விட்டுச் சிரித்தும், முக பாவங்களை மாற்றியும் அவள் கதை கேட்ட விதம் அவனை மேலும் ஆர்வத்துடன் கதை சொல்ல வைத்தது.

இறுதியில் அவன் உச்சக்கட்ட காட்சியை விவரித்து முடித்ததும் தயாரிப்பாளரின் சம்சாரம் எழுந்து நின்று கை தட்டினாள். “ரொம்ப நல்லாருக்கு...” பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் முகத்தில் அநியாயத்திற்கு திருப்தி நிலவியது. அனைவருக்கும் மதிய உணவு வரவழைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்குத் தாவியபடி உணவு பரிமாறப்பட்டது. இயக்குனர், மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், இசையமைப்பு, கேமராமேன், லொகேஷன் போன்ற பல விஷயங்கள் ஆராயப்பட்டன.

கிளம்பும்போது, ‘‘உங்க சிஷ்யன்னா சும்மாவா? தம்பி கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுங்க...” என்று கூறிவிட்டுத் தயாரிப்பாளர் கிளம்பினார். மாதவன் எதுவும் பேசாமல் இருந்தான். தனது அபிப்பிராயத்தின் மேல் அவனால் அங்கு ஒரு வார்த்தை கூடப் பேச முடியாது என்பதை அறிந்தவன் என்பதால் மெளனமாக இருந்தான். உள்ளே ஒரு திருப்தியான எண்ணம் ஓடியது. விரைவில் இந்தப் படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும். ஒரு பெரிய பேனரிலிருந்து தனது முதல் கதை வசனம் வருகிறது என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.

எத்தனை அவமானங்கள்! “கதை நாடகம்னு சுத்தி சுத்தி தண்டமா வந்து நிக்கறியே. இருபத்தாறு வயசாச்சு இனிமேல் அரசாங்க வேலைக்கு லாயக்கில்லை. என்ன பண்ணப் போற?” எத்தனை கேள்விகள்! எத்தனை எள்ளி நகையாடல்கள்! அத்தனையும் ஒரு முடிவிற்கு வரப்போகிறது. “மாதவன்...” சில்வர் ஷங்கரின் குரல் அவனை பூமிக்குக் கொண்டு வந்தது.

“சொல்லுங்க பாஸ்...’’ “உனக்கு இந்த புரொடியூசரைப் பத்தி தெரியும். இவர் படம் அப்படின்னாலே எல்லா சென்டரிலும் படம் வித்திடும். இவரும் தனது படத்துக்கு சாதாரண நடிகர்களையோ கலைஞர்களையோ புக் பண்ண மாட்டார். இவரது படத்தின் எல்லா விஷயத்திலும் ஒரு தரம் இருக்கும்...’’“ஆமா பாஸ். இவர் பேனரில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் நடிகைங்க பேட்டி கொடுத்ததைப் பார்த்திருக்கேன்...’’ “இவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சுப் போயிடுச்சு. நேத்திக்கே ஓகே சொல்லிட்டாரு. இன்னிக்கு சம்சாரத்தைக் கூட்டிகிட்டு வந்ததெல்லாம் ஒரு கண் துடைப்புதான்.

இவ்வளவு பெரிய பேனரில் எடுக்கப் போகும் படத்திற்கு ஓர் அமெச்சூர் எழுத்தாளன் கதை என்று விளம்பரப்படுத்தினால் போணியாகுமா அப்படின்னு யோசிக்கிறார்...” “என்ன சார் கே.பி. சாரோட ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஏ.வி.எம் பேனரில்தானே படமா எடுத்தாங்க?” “ஆனா, அதுக்கு முன்னால் அவரு ஒரு எஸ்டாபிளிஷ்டான நாடக ஆசிரியர் மாதவன்...’’ மாதவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஒரு சின்ன காம்ப்ரமைஸ் பண்ணிக்கச் சொன்னார்...’’ மாதவன் மௌனத்தைத் தொடர்ந்தான். “ கதை உன்னுதாவே இருக்கட்டும். ஆனால், திரையிலும் மற்ற விளம்பரங்களிலும் கதை திரைக்கதை வசனம்னு என் பேரு இருக்கட்டும்னு சொல்றாரு...’’ மாதவனுக்கு அப்போது ஏற்பட்ட வலியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மாதவனாக இருந்தால்தான் முடியும். “எனக்கு ஒரு நாள் டைம் கொடுப்பீங்களா பாஸ்?” கேட்ட மாதவனின் குரலில் இருந்த உற்சாகம் உருகி ஓடிய தடம் கூடக் காணவில்லை.

“தாராளமா கூட ரெண்டு நாள் கூட எடுத்துக்க. ‘ஃபிலிம் ஃபேர்’ அவார்ட் ஃபங்ஷனுக்கு அவரும் அவர் சம்சாரமும் பெங்களுர் போறாங்க. வருவதற்கு திங்கட்கிழமையாகும். அப்ப சொல்லு. ஆனா ஒண்ணு மாதவன்...” “சொல்லுங்க பாஸ்...” “முதல் படத்திற்கு நீ ஒரு தயாரிப்பாளர்கிட்டே இருந்து வாங்கும் சம்பளத்தை விட என் பெயரில் இந்தக் கதை வந்தால் அதன் மூலம் அவர் எனக்குக் கொடுக்கும் தொகையிலிருந்து நான் உனக்குக் கொடுக்கப்போகும் தொகை அதிகமாக இருக்கும். சரியா?’’
 

(அடுத்த இதழில் முடியும்)

http://www.kungumam.co.in

Share this post


Link to post
Share on other sites

உயிர்ப்பு

 

பணம்தான் அனைத்தையும் தீர்மானிக்கும் வஸ்துவா? அதற்கு மீறிய பொருள்..? மாதவன் சிரித்தான். வஸ்துவிற்கு வடமொழியில் திரவியம் என்று பெயர். தமிழில் பொருள். பொருளை மீறி எதுவுமில்லை போல. தான் கொண்டு வந்த பென்-டிரைவை அப்படியே எடுத்துக் கொண்டான். நல்லவேளை அவனது கணினியின் டெஸ்க் டாப்பில் தனிக் கோப்பில் சேமித்து வைக்காததும் ஒருவிதத்தில் நல்லதற்குத்தான். மீண்டும் வேளச்சேரிக்குப் பேருந்து பிடித்து விஜயநகர் பேருந்து நிலையத்தில் இறங்கினான். மனம் எவ்வித சிந்தனையுமின்றிச் சலனமற்று இருந்ததைக் கண்டு அவனுக்கே வியப்பாக இருந்தது. வீட்டை நெருங்கியதும் அதன் கதவு மூடப்பட்டு நாதங்கியில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் சிறிது கலவரமானான்.
3.jpg
அடுத்த வீட்டு காமாக்‌ஷியின் மகன் அவர்கள் வீட்டிலிருந்து வெளியில் வந்து அவனிடம் வீட்டுச் சாவியை நீட்டினான். “மாமிக்கு நீங்க போனவுடனே உடம்பு கொஞ்சம் முடியாமப் போயிடுத்து. மூச்சுத் திணறல்னு நினைக்கிறேன். என்னோட அம்மாதான் ஆட்டோவில் உங்கம்மாவை எப்பவும் போகும் கிளினிக்கிற்குக் கூட்டிண்டு போயிருக்கா. உங்களுக்கு நாலஞ்சு முறை மொபைலில் கூப்பிட்டாங்களாம். நீங்க எடுக்கலன்னு அம்மாவே மாமியைக் கூட்டிகிட்டு போயிருக்காங்க...”கதவைத் திறந்து பார்த்தான். கொடியில் காய்ந்து கொண்டிருந்த அம்மாவின் நைட்டி இரண்டு, படுக்கை விரிப்பு, கூடை போன்றவற்றைக் காணவில்லை.

தனது கைப்பேசியை பார்த்தான். நான்கைந்து முறையன்று, காமாக்‌ஷி மொத்தம் பதினொரு முறை அழைத்திருக்கிறாள். மடையன், கதை சொல்லும் மும்முரத்தில் சலனமற்ற நிலையில் கைப்பேசியை வைத்தது நினைவிற்கு வந்தது. வெளியில் வந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.“அம்மாவுக்குத் தீரவும் முடியலை மாதவா. மூச்சு விட முடியலை. வாந்தி எடுக்க வர்றா மாதிரி இருக்குன்னு சொல்றா. ஆனா, வாந்தி வர மாட்டேங்கறது. முதுகுக்குக் கீழே வலிக்கறதுங்கறா. கால்ல நீர் சேர்ந்து போயிருக்கு. டாக்டர் ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்திருக்கார். எழுநூறு ரூபாய் பணம் கட்டணும்....” ஒரு தேர்ந்த ஆர்.ஜே போல நிறுத்தாமல் பேசினாள்.

“அம்மா என்ன சாப்பிட்டாங்க?’’“எது சாப்பிட்டாலும் வாந்தி வருதுன்னு சொல்றவங்களுக்கு என்ன கொடுக்க முடியும்..?” “டாக்டர் பார்த்துட்டாரா?” “பார்த்துட்டார். அவர்தான் ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுத்திருக்கார். பிளட் ரிப்போர்ட் வந்ததுக்கப்புறம்தான் சொல்ல முடியும்னு சொல்லிட்டார். சரி மாதவா. வீட்டில் போட்டது போட்டபடி இருக்கு. நான் கிளம்பிப் போயிட்டு வந்துடறேன். இந்தா இந்தப் பைசாவை வச்சுக்கோ. நான் பிளட் ரிப்போர்ட்டுக்குப் பைசா அடைச்சிட்டேன். மத்ததைப் பத்தி அப்புறம் பேசிக்கலாம்...’’பதில் கூற விடாமல் நெடுகப் பேசி விட்டு காமாக்‌ஷி சென்ற திசையை அவன் மிரண்டு போய்ப் பார்த்துக் கொண்டான்.

இந்த ஆஸ்பத்திரி வாசம் வேண்டாம் வேண்டாம் என்றுதான் அம்மா, பிள்ளை இருவரும் தள்ளித் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தது இப்போது வேறு வழி எதுவுமின்றி முடிந்திருக்கிறது. அன்றைய இரவு முழுவதும் அவனுக்கும் அம்மாவிற்குமான இரவாக அமைந்தது. காமாக்‌ஷி ஒரு முறை வந்ததோ இரவு ரத்தப் பரிசோதனையின் முடிவுடன் டாக்டர் வந்ததோ எதுவும் நினைவில் இல்லாமல் அப்படி ஓர் இரவாக அமைந்தது. அம்மாவிற்குப் பெரிய சரித்திரப் பின்னணி எதுவுமில்லை. அப்பா ஒரு பெரிய சமையல் காண்டிராக்டரிடம் உதவியாளராக வேலையில் இருந்தார். குடி, சீட்டு, ரேஸ்-எல்லா கண்றாவிகளும் உண்டு.

அம்மா வீட்டில் ஐந்து பெண்கள். தாத்தாவுக்கும் அதிகப்படியான வருமானம் இல்லை. வலிய வந்த அப்பா வீட்டினரின் சம்பந்தத்தை உதறும் அளவிற்கு தாத்தாவிற்கு மனமில்லை என்பதால் வறுமையில் உழலும் ஒவ்வொரு இல்லத்தில் இருக்கும் பெண்களைப் போலவே அம்மாவும் பலியானாள். மூன்று பிள்ளைகள் என்ற கருணையைத் தவிர அப்பாவிடமிருந்து அம்மாவிற்கு வேறு எந்த சுகமும் இல்லை. அம்மா சமையல் வேலைகளுக்குப் போகத் தொடங்கினாள். அந்தப் பணத்தையும் அப்பா குடிப்பதற்கும் சூதாட்டத்திற்கும் எடுக்கப் போக அம்மா துணிந்து அப்பாவை, ‘‘வெளியே போயிடுங்கோ...” என்று கூறி விட்டாள்.

அன்று வெளியேறிய அப்பாவை வீட்டில் வேறு யாரும் பார்க்கவில்லை. அம்மா அது குறித்துப் பிறகு எதுவும் பேசவில்லை. “மாதவா வா, இப்படி பக்கத்தில் உட்காரு...” அம்மா அழைத்தாள். மாதவன் அவள் அருகில் அமர்ந்தான். “நீ அப்போ பொறக்கலை. கணேசனுக்கு நாலு வயசு. நாராயணனுக்கு ஒன்பது மாசம். ஓயாமல் கபம் அவனுக்கு இருந்துண்டே இருக்கும். ஒருநாளைக்குத் தூளியில் இருந்து குழந்தையை எடுத்தா நிக்கவே இல்லை காலு ரெண்டும் துணி மாதிரி துவளறது. உங்கப்பாவோ சீட்டு விளையாடப் போயிட்டார். இப்போ மாதிரி அப்போ டெலிபோன் வசதி எல்லாம் கிடையாது. ஒரு கையில் கணேசனைப் பிடிச்சிண்டு இன்னொரு கையில் நாராயணனை மாரோட அணைச்சிண்டு தர்மாஸ்பத்திரிக்குக் கூட்டிண்டு போனேன்.

அவங்களே பயந்து போயி ராயப்பேட்டை கவர்ன்மென்ட் ஆசுபத்திரியில் காட்டச் சொல்லிட்டாங்க. எனக்கு அப்போ திக்கும் தெரியாது திசையும் தெரியாது. கற்பகாம்பா காப்பாத்திக் கொடுடி தாயே, செவ்வாய்க் கிழமை முழுப் பட்டினி இருக்கேன்னு வேண்டிண்டேன். கபாலீஸ்வரரை அவதான் அனுப்பி வச்சா மாதிரி ஒரு பெரியவர் வந்து என்னை ராயப்பேட்டா ஆஸ்பத்திரி வரை கொண்டுபோய் விட்டார். எமர்ஜென்சி கேஸ்னு நின்னப்போ டாக்டர் அரைமணிநேரம் காலதாமதமாயிருந்தா குழந்தையை உசிரோட பார்த்திருக்க முடியாதுனு சொன்னார்...’’

அம்மா செவ்வாய்க் கிழமைகளில் உணவு எதுவும் சாப்பிட மாட்டாள் என்பது தெரியும். இது பொதுவாக எல்லாப் பெண்களும் ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்கும் விரதம் என்றுதான் நினைத்தான். ஆனால், காரணம் இன்றுதான் தெரிந்தது. “சும்மா இரும்மா. ஏற்கனவே உன்னால பேச முடியலை. டாக்டர் வந்தா சத்தம் போடப் போறார்...’’ அதட்டினான். அம்மா அவனைப் பார்த்துச் சிரித்தாள். “மூத்தவன் ப்ளஸ் டூவில் கொள்ளை கொள்ளையா மார்க் வாங்கினான். கிண்டி இஞ்சினியரிங் காலேஜில் இடம் கிடைக்கும்னு சொன்னாங்க. அதே மாதிரி கிடைச்சுது. அவனும் ரொம்ப சிரத்தையா படிச்சான். அட்வகேட் ராமானுஜம் வீட்டில் சமையலுக்குப் போயிண்டிருந்தப்போ வக்கீல் கிட்ட சொல்லி மோட்டார் கம்பனியில் உத்தியோகம் வாங்கித் தரச் சொன்னேன்.

உன்னை யாரு சிபாரிசுக்குப் போய் நிக்கச் சொன்னாங்க என்று எப்பவும் போல வள்ளுன்னு விழுந்தான். அன்னிக்கு அப்படி கேட்டிருக்காட்டி இன்னிக்கு அதே கம்பனியில் இத்தனை உசரத்திற்கு அவனால போயிருக்க முடியுமா? நான் சொல்ல வந்தது அதில்லை...’’ அம்மா சுவாசத்தில் தடை ஏற்பட, பேசுவதை சற்று நிறுத்தினாள். “அம்மா நாளைக்குப் பேசிக்கலாம்மா. டாக்டர் வந்தா சத்தம் போடப் போறார்...”“சும்மா இருடா. நாளைக்குப் பேச முடியாமப் போயிட்டா? வக்கீல் மாமா வேலைக்குதான் சொன்னாரே ஒழிய கம்பனிக்காரன் ரொக்கமா இருபத்தையாயிரம் ரூபாய் கேட்டான். இந்தச் சமையல் கிழவிகிட்ட ஏது அவ்வளவு பணம்?

கல்யாணம் பண்ணி வந்த புதுசில் மூத்த அக்கா, உங்க பரிமளம் பெரியம்மா, எனக்கு ரெண்டு பவுனில் ஒரு தங்கச் சங்கிலி பண்ணிப் போட்டா. நான் உள்ளே ஏறின உடனே அப்பாவோட குணத்தைத் தெரிஞ்சிண்டுட்டேன். சத்தமே போடாம நகையைக் கழற்றி ஒரு பெருங்காய டப்பாவில் போட்டு பரணியில் எடுத்து வச்சேன். மூணு வீடு மாத்தினோம். டப்பாவும் மாறலை நகையும் மாறலை. அந்த ரெண்டு பவுன் சங்கிலியைத்தான் மார்வாடிகிட்டே மொத்தமாவே கொடுத்து பணம் பெரட்டிக் கொடுத்தேன். இப்போ மூணு பெட்ரூம் ஃப்ளாட்டில் இருக்கான். அதில் ஒரு பெட்ரூமில் கூட பெத்தவளுக்கு இடமில்லை...”

“நான்தான் உனக்கு ஆறாவது விரல் மாதிரி எவ்வித பிரயோஜனமும் இல்லாம ஒட்டிண்டு இருக்கேனே..?’’“என்னைப் பேச வேண்டாம்னு நீதானே சொன்னே?”அவன் பதில் சொல்லும் முன்னர் அம்மாவே தொடர்ந்தாள். ‘‘எனக்குதான் ரொம்ப அடிச்சுக்கறது. அவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்தது மாதிரி உனக்கு சரியான படிப்பைக் கொடுக்கலியோன்னு தோணும். எல்லா படிப்பும் சம்பாதிச்சுக் கொடுக்கற படிப்பாதான் இருக்கணும் என்பதில்லை. நீ இஷ்டப்பட்ட மாதிரி உன்னைப் படிக்க வச்சிருக்கலாம். ஆனா, மூத்தவங்க ரெண்டு பேரும் நீ உருப்படாத துறையைத் தேர்ந்து எடுத்துட்டன்னு சொல்லிக் காட்டிண்டே இருக்காங்க. அதுதான் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.

அப்பல்லாம் நினைச்சுப்பேன். சாதாரணமா வாழ்க்கையில் முன்னேறணும்னா எத்தனை பேரோட கையைக் காலைப் பிடிச்சு முன்னுக்கு வர வேண்டியிருக்கு? சினிமான்னா சும்மாவா? போட்டி பொறாமை, அவனை இவனுக்கு ஆகாது, இவனை அவனுக்கு ஆகாது, தலைக்கனம், பின்னாடி குழி பறிக்கிறதுன்னு எவ்வளவோ இருக்கும். அத்தனையும் தாண்டித்தானே நீ மேல வர வேண்டியிருக்கும்?”நர்ஸ் ஒருத்தி உள்ளே வந்தாள். இரத்த அழுத்தம் பார்க்கும் கருவியை அம்மாவின் தோளில் சுற்றி அதனை அழுத்தி பாதரச அளவைப் பார்த்தாள்.“பாட்டிம்மா பிரஷரு எகிறிப் போயி இருக்கு. இப்படி ராத்திரி முச்சூடும் எதுனா புலம்பிக்கிட்டு இருந்தா எப்படி? நிம்மதியா தூங்குங்க. நாளைக்கு டாக்டர் வந்தா சத்தம் போடப் போறாரு...”

நர்ஸ் சொன்னதற்காக அம்மா சற்று நேரம் கண்மூடிக் கிறங்கிக் கிடந்தாள். அவன் வெளியில் கிளம்பி அருகில் இருந்த பெட்டிக் கடையில் ஒரு சிகரட் வாங்கிப் பற்றவைத்தான். நாளை டாக்டர் பெரிதாக எதுவும் சொல்லப் போவதில்லை. இரத்தப் பரிசோதனையை நாள் கடத்தியதன் காரணம் கூட அவர் மனதளவில் போட்டு வைத்திருந்த கணக்கு தவறியதால் கூட இருக்கலாம். ஸ்க்ரிப்டின் முப்பத்தேழாவது காட்சியில் ஒரு சின்ன லாஜிகல் தவறு நிகழ்ந்திருக்கிறது. சட்டென்று தனது சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பென்-டிரைவ் தட்டுப்பட்டது. அந்த இடத்தை மட்டும் கொஞ்சம் மாற்ற வேண்டும். சிகரட்டை அணைத்து விட்டு உள்ளே போனபோது அம்மா விழித்துக் கொண்டிருந்தாள்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்றாள். மெல்ல அவளை எழுப்பிக் கட்டிலிலிருந்து இறக்கி - வீட்டு நார்க் கட்டிலை விட இது கொஞ்சம் அதிக உயரம் இருந்தது - கழிப்பறையில் கொண்டு விட்டான். அம்மா வெளியில் வரும்போது, ‘‘சிகரட் பிடிப்பியா?’’ என்று கேட்டாள். “ம்...’’ என்றபடி அம்மாவை மெல்ல படுக்கையில் கிடத்தினான்.“எனக்குத் தெரிஞ்சே உங்கப்பாவுக்கு சூளையில் ஒரு பெண்ணோட தொடர்பு இருந்தது. சம்பாதிக்கறதைக் குடிச்சா பரவாயில்லை. கடன் வாங்கிக் குடிக்கணுமா? மாசம் பொறந்தா முதல் பத்து தேதிக்கு ஊரில் இருக்க மாட்டார். நானும் எத்தனை கடன்காரனுக்கு பதில் சொல்ல முடியும்? இதை உனக்கு எதுக்கு சொல்றேன்னா... நீ போற இடம் அப்படி. குடி, போதை, பொம்மனாட்டி எல்லாம் இருக்கும். அதையும் தாண்டி வர்றவங்களாலதான் ஜெயிக்க முடியும்.

அடிப்படையா மனுஷ குலத்துக்குன்னு ஒரு நேர்மை, தர்மம் இருக்கு. அதை விட்டுடாதே. அதர்மமும் பொய்யும் பீடத்தில் உட்கார்ந்திண்டு இருக்கறப்போ இது என்ன புது வியாக்கியானம்னு நினைக்காதே. தோணித்து...”மறுநாள் டாக்டர் காலையில் பத்து மணிக்கு கையில் இரண்டு மூன்று ரிப்போர்ட்டுகளுடன் நுழைந்தார். முதல் கட்ட பரிசோதனைகளைக் கடந்து அவனைத் தனியாக அழைத்துச் சென்றார்.“அம்மாவோட நிலைமையை வச்சுப் பார்க்கறப்போ அவங்களுக்கு சிறுநீரகம் பழுதாக வாய்ப்பு அதிகம். சிடி ஸ்கேன்  ஒண்ணு எடுக்கணும். என் கிளினிக்கில் இதற்கான வசதி கிடையாது. ஒண்ணு செய்யி, மத்யானம் ரெண்டு மணிக்கு பணத்தோட வா. நான் முழு மெடிகல் ஹிஸ்டரி எழுதி வைக்கிறேன்.

மைலாப்பூரில் ஒரு பெரிய நர்சிங் ஹோம் இருக்கு. வசதியில்லாதவங்களுக்கு கிட்டத்தட்ட இலவசமா பார்க்கறாங்க. இருந்தாலும் நீயும் கொஞ்சம் பணம் தயார் பண்ணி வச்சுக்கணும். முடியுமா?” என்று கேட்டார். மாதவன் உற்சாகமாக ‘‘முடியும் டாக்டர்...” என்றான். காலையில் காமாக்‌ஷி வந்திருந்தாள். அவளை அங்கே அம்மாவிற்குத் துணையாக வைத்துவிட்டு அவசர அவசரமாக சாலிகிராமம் நோக்கிப் பயணித்தான். வழி நெடுகிலும் ஒரு மனம் இன்னொரு மனதை சமாதானம் செய்தபடி வந்தது. ஒரு கணத்தைத் தீர்மானிப்பது தர்மங்களோ, நெறிகளோ இல்லை.

பணம்தான் தீர்மானம் செய்கிறது. அந்தத் தீர்மானத்திற்கு அவன் வெறும் கருவி மட்டும்தான். அவனது பிறப்பு, வாழ்க்கை, படிப்பு, அவன் பெற்றோர், அவன் உடன்பிறப்புகள், அவனது கல்யாணம், கொண்டாட்டம் எல்லாவற்றையும் அந்த ஒரு கணம்தான் கட்டமைக்கிறது. அந்த ஒரு கணத்திற்கு என்று தனியாக வரைமுறைகள் உள்ளதா? இருக்கலாம். நெறிகளுக்கு உட்பட்டதா இல்லையா என்பதெல்லாம் அந்த ஒரு கணத்திற்குத் தெரியாது. அந்தக் கணம் இயங்கச் சொல்வதற்கு ஏற்பவே மொத்த பிரபஞ்ச இயக்கமும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனை மீறுவதற்கு அவன் யார்? சில்வர் ஷங்கர் அவனது அலுவலக அறையில் இருந்தான்.

“நானே உன்னைக் கூப்பிடணும்னு நினைச்சேன் மாதவா. அம்மா எப்படி இருக்காங்க?”“க்ரானிக் ரீனல் ஃபெயில்யூரா இருக்கலாம்னு டாக்டர் சந்தேகப்படறார். கூடை கூடையா பணம் வேணும்னு சொல்றார்...”“அதுக்கென்ன? நான் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைக்குப் பத்து இலட்சம் கேட்டிருக்கேன். அவரு மட்டும் தயாரிப்பாளர் இல்லையே? அதையும் சொல்லி மிரட்டியிருக்கேன். சரின்னு சொல்லிடுவார்னு நினைக்கிறேன். மொத்தமா உனக்கு மூணு இலட்சம் கொடுக்கறேன். உனக்கும் அம்மாவுக்கு வசதியா மருத்துவம் பார்த்த சமாதானம் இருக்கும்...”சில்வர் ஷங்கர் பேச்சில் இரக்கத்தை விட வியாபாரம்தான் கூடுதலாகத் தெரிந்தது.

மாதவன் கணினி முன்பு அமர்ந்தான். தனது சட்டைப் பையிலிருந்த பென் டிரைவை எடுத்தான். சில்வர் ஷங்கர் மிக முன்னேற்பாட்டுடன் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருப்பான். ஆனால் இவனுக்கு எவ்வித ஒப்பந்தமும் கிடையாது. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையையும், வல்லூர் தேவராச பிள்ளையையும் நினைத்துக் கொண்டான். சில்வர் ஷங்கர் தனிக் கணினி யில் டெஸ்க் டாப்பில் தனி கோப்பில் திரைக்கதையை ஏற்றி விடலாம் என்று எண்ணினான். பிறகு அவன் பாடு.“என்ன பண்ற?’’ சில்வர் ஷங்கர் கேட்டான். சொன்னான்.“நீ என்னோட மெயிலுக்கு ஒரு நகல் அனுப்பிடு...’’ தனது விசிட்டிங் கார்டை நீட்டினான்.

“உனக்கு வருத்தம் இல்லையே?” ஒரு சமாதானக் கேள்வியும் வந்தது.“வருத்தப்பட என்ன இருக்கு? ஆனால், ஒரே ஒரு குறை. எனது முதல் நுழைவிற்கே நான் இப்படி வளைந்து கொடுக்க ஆரம்பித்து விட்டால் இது தொடருமோ என்ற குறை. வேறு வழிகளையெல்லாம் மூடிவிட்ட இந்தக் கணத்தை நம்மில் வேறு யாரால் தடுக்க முடியும்?’’ என்று கேட்டான். சில்வர் ஷங்கர் பதிலே சொல்லவில்லை. ஒரே ஒரு க்ளிக்தான். அவனது மொத்த திரைக்கதையும் ஒரு கோப்பின் மூலம் சிவர் ஷங்கரின் மின்னஞ்சலுக்குப் போயிருக்கும். அதற்குள் அவனது கைப்பேசி அவனை அழைத்தது. யார் என்று பார்த்தான். காமாக்‌ஷி. “சொல்லுங்க...’’“எங்கேயிருந்தாலும் கிளம்பி வா மாதவா. அம்மா காலமாயிட்டாங்க...”

http://www.kungumam.co.in

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   நன்றி
    
   நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்‌ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர்.   மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டார். ‘‘நன்றியே யாருக்கும் இல்லை!’’ - இந்தப் புலம்பலின் முடிவில் நிவேதாவுக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘சே, செய்த ரெஸிபிக்கு ஒரு சின்ன அங்கீகாரம் கூட கிடைக்கலையே! எதுக்காக கஷ்டப்படணும்?’’ - முணுமுணுத்தபடியே சாப்பிட்டவள், மீதத்தை நாய்க்குக் கொண்டுபோய் போட்டாள். அதைச் சாப்பிட்ட விக்கி, வாலை ஆட்டிக்கொண்டு வந்து நிவேதாவின் காலை நக்கிற்று. மனதுக்குள் ஒரு சின்ன பூரிப்பு. மலர்ச்சியுடன் மறுநாள் சமையலுக்கான ரெஸிபியைத் தேடத் துவங்கினாள் நிவேதா!    
    
   இல்லை
   தெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி ‘சட்’டென தன் அறைக்குள் நுழைந்தார். மனைவியை அழைத்து, ‘‘இதோ பார்! தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன்!’’ என்று சொல்ல, பால்சாமிக்கு பகீரென்றது.   போனை கட் செய்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பிய தியாகராஜன், ‘‘நண்பனா இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆயிரம் ரூபா கூட கடன் தரமாட்டேங்கறான். கஞ்சப் பய. வீட்ல இருந்துக்கிட்டே இல்லைன்னு வேறே பொய் சொல்றான். அதான் வருத்தப்படட்டும்னு சும்மா புருடா விட்டேன்’’ என்றார்.   
    
   தெய்வம்
   ‘‘ஹலோ, சம்பத் சாரா? சுதா நர்சிங் ஹோமுக்கு உடனே வாங்க!’’ ‘‘என்ன விஷயம்? நீ யாருப்பா?’’ ‘‘என் பேர் பொன்னுச்சாமி... சீக்கிரம் வாங்க சார், நேர்ல சொல்றேன்!’’ இருபது நிமிடங்களில் அங்கிருந்தான் சம்பத். ‘‘சார், உங்க பையன் ஸ்கூல் விட்டு வரும்போது ஆட்டோக்காரன் மோதிட்டுப் போயிட்டான். தம்பியோட பள்ளிக்கூட அட்டையில இருக்கிற உங்க போன் நம்பரை வச்சுதான் போன் பண்ணேன். தம்பிக்கு தலையில பலமா அடி பட்டிருச்சி. எல்லாரும் வேடிக்கை பாக்கறாங்களே தவிர, உதவிக்கு வரல. அதான் நானே ஆட்டோ பிடிச்சி இங்கே கொண்டுவந்து சேர்த்தேன்!’’ - முடிக்கும் முன்னமே பதட்டமாகிவிட்ட சம்பத், ஓடிப் போய் டாக்டரைப் பார்த்தான்...   ‘‘சரியான சமயத்தில் தூக்கிட்டு வந்ததால ஆபத்து ஒண்ணுமில்ல... காப்பாத்திரலாம்!’’ என நம்பிக்கை தந்தார் டாக்டர். நிம்மதிப் பெருமூச்சோடு வெளியே வந்த சம்பத், அப்போதுதான் பொன்னுச்சாமியை கவனித்துப் பார்த்தான். அழுக்கேறிய உடை... ஒரு கால் செயல் இழந்து தொங்கிக் கொண்டிருந்தது. ‘‘நீங்க...’’ ‘‘நான் அந்த ஸ்கூல் பக்கத்தில் இருக்கிற கோயில்ல பிச்சை எடுக்குறவன் சார்!’’ அதிர்ச்சியில் உறைந்த சம்பத், தெய்வம் கோயிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியிலும் இருக்கிறது எனப் புரிந்துகொண்டான்!
    
   http://kungumam.co.in
  • By நவீனன்
   பிரிவு
    
   இந்திரன் ஓய்வு பெறுகிறார். பிரிவு உபசார விழாவிற்கு வந்த கம்பெனி சேர்மன், ‘‘உங்களுக்கு என்ன வேணும்? தயங்காம கேளுங்க!’’ என்றார். முப்பது ஆண்டுகள் கடும் உழைப்பை கம்பெனிக்காக அர்ப்பணித்தவர் இந்திரன். சின்ன அளவில் துவங்கிய அந்த நிறுவனம் பத்து கிளைகள் பரப்பி வளர பெரிதும் உதவியவர். கம்பெனியைச் சுற்றி வளர்ந்த மரங்கள், தோட்டம், புல்வெளி... எல்லாமே இவர் உருவாக்கியவை. அவர் கேட்டால் எதையும் கொடுக்க அந்த நிறுவனம் ரெடி. வேலையில்லாத மகன், இளம் வயதிலேயே கணவனை இழந்து தனிக்கட்டையாய் நிற்கும் தங்கை, தொழில் துவங்க நிதி உதவி எதிர்பார்க்கும் தம்பி என அனைவருமே ‘தனக்குத்தான் ஆதாயம் பெற்றுத் தருவார்’ என எதிர்பார்த்தனர்.   ‘‘உங்களுக்கு வரவேண்டிய எல்லா தொகைக்கும் ‘செக்’ ரெடி. இது தவிர... என்ன வேணுமோ கேளுங்க!’’ - சேர்மன் மீண்டும் சொல்ல...சட்டென அழத் துவங்கினார் இந்திரன். ‘‘ஐயா! இந்த இயற்கை, அமைதி, பசுமை, முப்பது வருஷமா பழக்கப்பட்ட கம்பெனி... இதையெல்லாம் மறந்து வாழ என்னால் முடியாது. ஓய்வு பெற்ற பிறகும் சம்பளமில்லாம வேலை பார்க்க எனக்கு அனுமதி கொடுங்க. அது போதும்!’’ கண்ணீருடன் இந்திரன் சொல்ல, சேர்மன் உட்பட அனைவரும் ஸ்தம்பித்தனர்.      
    
   சண்டை
    
   டி.வி. சீரியல் பார்த்துக்கொண்டிருந்த ராகவன், யாரோ அழைக்கும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார். அதே அபார்ட்மென்ட்டில் மேல்தளத்தில் குடியிருக்கும் மூர்த்தி நின்றிருந்தார். ‘‘சார்... கீழே பார்க்கிங்ல பசங்க விளையாடிட்டு இருந்தப்ப எங்க பையனுக்கும் உங்க பையனுக்கும் ஏதோ சண்டை. சட்டை கிழிஞ்சிருச்சு...’’ என்று அவர் தொடர்ந்து பேசுவதற்குள்... ‘‘இதுதான் நீங்க பிள்ளை வளர்க்கிற லட்சணமா? இப்படி ரவுடித்தனம் பண்றதுதான் விளையாட்டா? இப்ப என் பிள்ளைக்கு ஏதாவது ஆகியிருந்தா யார் பொறுப்பு?’’ எனப் பொறிந்து தள்ளினார் ராகவன். ‘‘சார்... சார்... கொஞ்சம் பொறுமையா...’’   ‘‘என்னய்யா பொறுமை வேண்டிக் கிடக்கு...’’ என்ற ராகவன், சற்று குரல் தாழ்த்தி ‘‘அதான் தராதரம் தெரியாம கண்டவங்களையும் குடி வைக்கக் கூடாதுங்கறது’’ என்று முணுமுணுத்தார். ‘‘என்ன சார் இதுக்குப் போய் இப்படிப் பேசுறீங்க? உங்க பையன்தான் என் பையனை அடிச்சி சட்டையைக் கிழிச்சிருக்கான். இது தெரிஞ்சா நீங்க அடிப்பீங்கனு பயத்துல உங்க பையன் அழுதுகிட்டிருக்கான். சின்னப் பசங்கன்னா இப்படித்தான்... இன்னிக்கு அடிச்சிப்பாங்க, நாளைக்கு கூடிப்பாங்க. அவனை அடிக்காதீங்கனு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். வர்றேன் சார்!’’ என்ற மூர்த்தியை நிமிர்ந்து பார்க்க இயலாமல் தலை குனிந்தார் ராகவன்.                          
    
    
   நிம்மதி
    
     கம்ப்யூட்டர், இன்டர்நெட், இ-மெயில், செல்போன் அழைப்புகள்... வெறுத்துப் போனான் சேகர். களைப்பாகவும் சோர்வாகவும் உணர்ந்தான். எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒரு வாரம் நிம்மதியாய் எங்காவது தங்கி தன்னைப் புத்துணர்வாக்கிக்கொள்ள விரும்பினான். உடனே அவன் நினைவுக்கு வந்தவன் அருண்தான். சேகரின் சித்தப்பா மகன். கிராமத்தில் விவசாயம் செய்கிறான். ‘ரொம்ப நாளாக அருண் வேறு கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவன் வீட்டுக்குப் போனால் பார்த்த மாதிரியும் ஆச்சு... கிராமத்துக்குப் போய் புத்துணர்ச்சி பெற்ற மாதிரியும் ஆச்சு!’ ‘ஒரு வாரம்... செல்லைக்கூட எடுக்காமல் நிம்மதியாய், சந்தோஷமாய் இருக்கவேண்டும்’ என முடிவெடுத்து அருணின் வீட்டுக்குக் குடும்பத்தோடு கிளம்பினான். அருணுக்கு சேகரைப் பார்த்ததும் சந்தோஷம்.   ‘‘வாடா... இப்பதான் வழி தெரிஞ்சுதா...’’ என்று குடும்பத்தோடு வாசலுக்கு வந்து வரவேற்றான். அருமையான சாப்பாடு. சாப்பாட்டுக்குப் பின் சேகரிடம் அருண் சொன்னான். ‘‘என் பையன் புதுசா லேப்டாப் வாங்கி இருக்கான். கம்ப்யூட்டர், நெட் எல்லாம் கத்துக்கணும்னு ஆசைப்படறான். நீதான் அதுல எக்ஸ்பர்ட் ஆச்சே... இங்க இருக்கற ஒரு வாரத்துல அவனை கம்ப்யூட்டர், இன்டர்நெட்ல தேத்தறது உன் பொறுப்பு. ஓகேவா..?’’ மயக்கம் வந்தது சேகருக்கு!    
   http://kungumam.co.in
  • By நவீனன்
   தண்ணீர்... தண்ணீர்...
    
    
   வீட்டு ஜன்னலிலிருந்து சாரா எட்டிப் பார்த்தாள். தண்ணீருக்காக பல வண்ண பிளாஸ்டிக் குடங்கள் தெருவில் நிறைந்து கிடக்க... வாகனப் போக்குவரத்துக்காக இடம் விட்டு தண்ணீர் லாரிக்காகக் காத்து நிற்கும் பெண்கள்... அக்கம் பக்க கதைகள் பேசுவது ஒருபுறம் என்றால், சீரியல் கதைகள் பேசுவது மற்றொரு புறம். தண்ணீர் லாரி எந்த நேரத்திலும் வந்துவிடலாம். ஆனால் சரியான நேரத்திற்கு முன்பாக ஆஜராகிவிடும் அவர்கள் வீட்டு வேலைக்காரி மகேசுவை இன்னும் காணவில்லை. சாராவின் கணவர் ஜான்சன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். சாராவும் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவள். அவர்கள் வீடு நல்ல வசதியுடன் மிக முக்கியமான இடத்தில் இருந்தபோதும், தண்ணீர் வற்றிய பழைய ‘போரை’ ஆழப்படுத்தவோ அல்லது புதிதாக போர் போட இடவசதியோ இல்லை.

   மெட்ரோ வாட்டர் அடிபம்பிலும் தண்ணீர் வருவதில்லை. மெட்ரோ வாட்டர் தண்ணீர் லாரி நான்கு ஐந்து நாட்கள் என்று எப்போதாவது ஒருநாள் எட்டிப்பார்த்தது. லாரி தண்ணீர் வாங்கி ஊற்றிக்கொள்ளவும் ‘சம்ப்’ வசதியில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் வீடு கட்டிய காலத்தில் எண்பது அடி ஆழம் வரையே போடப்பட்ட ‘போர்’. அந்தக்காலத்தில் அஸ்திவாரம் தோண்டும்போதே சில அடிகள் ஆழத்திலேயே தண்ணீர் வந்துவிடும். இப்போது வசதி படைத்த அக்கம்பக்கத்தினர் இருநூறு அடி ஆழத்திற்கும் அதிகமாகவே ‘போர்’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

   மெட்ரோ வாட்டர் டிபார்ட்மென்டு ‘போர்’ அமைக்க விதிமுறைகள் நிர்ணயித்திருந்தாலும் அதை யாரும் பின்பற்றாமல் பூமத்திய ரேகையைத் தொடும் அளவிற்கு ‘போரை’ இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதியிருந்தும், புதிய போர் இறக்க இடவசதி இல்லாத காரணத்தால் சாராவும் ஜான்சனும் லாரி தண்ணீரை எதிர்பார்த்து... மகேசு இவர்கள் வீட்டு வேலைக்காரி. பல வீடுகளில் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலை பார்த்தாலும், ஜான்சன் - சாரா தம்பதியினர் வயதானவர்கள் என்பதால் இவர்கள் வீட்டை மையமாய் வைத்து வந்து போவாள். அவள் வந்துதான் லாரியிலிருந்து பத்து இருபது குடங்கள், சின்னஞ்சிறு பாத்திரங்களில் எல்லாம் நீர் நிறைத்து வைப்பாள்.

   நான்கைந்து நாட்கள் தண்ணீர் வராவிட்டாலும் சமாளித்துக் கொள்வார்கள்.‘‘சாரா, மாடியில் வேலை செய்யும் தேவானை வந்துட்டாளா? அவளையாவது நமக்கு தண்ணீர் பிடித்துத் தரச்சொல்வோம்...’’ என்ற ஜான்சன் தன் மழிக்கப்படாத தாடியை நீவிவிட்டபடி, சாய்வு நாற்காலியில் தன் மூக்குக் கண்ணாடியை சரிபார்த்தபடி சாய்ந்திருந்தார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள். நால்வரும் வெளிநாடுகளில் தத்தமது குடும்பத்தோடு ஐக்கியமாக... தாயும், தந்தையும் இங்கே இப்படி அல்லாடி அல்லல்பட்டு...‘‘மார்னிங் அவ வந்தப்பவே கேட்டேன். அவ பெண்ணுக்கு பிரசவமாம். சீக்கிரம் போகணும்னு சொல்லிட்டு மாடியிலிருந்து போயிட்டா...’’லாரி வந்து தண்ணீர் பிடித்து நிறைத்ததும், இவர்கள் வீட்டு மாடியில் குடிவந்துள்ள பெண்ணும் தன் பணிக்குப் புறப்பட்டு விடுவாள்.

   இதுதான் நடைமுறை. மாடியை யாருக்கும் குடித்தனம் விடாமல், பிடிவாதமாக காலியாகவே வைத்திருந்தாள் சாரா, தங்கள் தனிமைக்கு குந்தகம் வருமோவென்று. குடித்தனத்திற்காக வந்த மனோன்மணி என்ற பெண்ணின் வற்புறுத்தலால் மனம் மாறி அவளுக்கு மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டாள். குடிவந்த பெண் இளவயதினள். வயது முப்பது இருக்கலாம். தன் கணவன் தனியார் கம்பெனியில் வேலை செய்வதாகவும் தானும் ஒரு கம்பெனியில் வேலை செய்வதாயும் சொன்னாள். பார்க்க அழகாய்... நல்ல பெண்போல சுடிதார் உடுத்தி முடியை முன்னும் பின்னும் புரளவிட்டு... மாத வாடகை பத்தாயிரம் ரூபாய்.

   அட்வான்ஸ் பணமாக ஒருலட்ச ரூபாயைக் கொடுத்துவிட்டு மனோன்மணி மாடிப்பகுதிக்குக் குடிவந்தபோது தங்கள் தனிமை தொலைந்ததாய் நினைத்தார்கள். மனதிற்குள் மத்தாப்பாய் சிறு சந்தோஷம். அவள் தங்களுடன் நன்கு பழகுவாள் என்றிருந்தார்கள். ஆனால், அவள் வீட்டு வேலைக்காரி தேவானைதான் அதைச் சொன்னாள். ‘‘அந்த அக்கா சினிமாவிலே நடிக்கறாப்பல... வேண்டியவங்க அழைச்சா டிவி சீரியல்லே கூட போய் நடிக்குமாம். சொந்த வீடெல்லாம் இருக்காம். ஷூட்டிங்குக்கு போக வசதியா, இங்கே குடிவந்திருக்காங்களாம்...’’போயும் போயும் ஒரு நடிகைக்காக மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டோம். தாங்கள் மாடிப்பகுதியை எத்தனை நாள் பூட்டியே வைத்திருந்தோம்.

   அவள் வற்புறுத்தலுக்காக மனம் மாறி வாடகைக்கு விட்டால்... சினிமாவைப் பார்க்காத, பார்க்க விரும்பாத இவர்கள் வீட்டில் ஒரு  நடிகை குடிவருவதா. அவளது கார் வேறு இவர்கள் காருக்குப் பக்கத்தில் போர்ட்டிகோவில் நிற்கிறது.‘‘நடிகையின்னா எங்கும் வாடகைக்கு வீடு குடுக்க மாட்டேன்னு சொல்றாங்களாம். அதான் கம்பெனியிலே வேலை செய்யறதா உங்ககிட்ட பொய் சொல்லி வந்திருக்கு. கல்யாணம் ஆயிருச்சாம். லவ் மேரேஜாம். இப்ப விவாகரத்துக்காக கோர்ட்டுக்குப் போயிருக்காம்...’’கூடுதல் தகவலாய் தேவானை இதை வேறு சொன்னாள். கேட்டதும் மூக்குக் கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொண்டு ஸ்வெட்டருக்கு பட்டன் தைத்துக்கொண்டிருந்த சாராவுக்கு இரத்தம் கொதித்தது.

   ‘‘ஓகே. காலைல நல்லா கேட்டுட்டு வீட்டை காலி பண்ணச் சொல்லிரலாம். பி காம் சாரா... அப்புறம் பிபி எகிறிடும்...’’ ஜான்சனின் ஆறுதல். பிள்ளைகள் வந்தால் தங்கிக் கொள்ள வசதி என மாடிப் போர்ஷனை வைத்திருந்தார்கள். வசதி படைத்த பிள்ளைகளும் பண உதவி செய்வதில்லை. இவர்களுக்கு எந்த ஓய்வூதியமும் கிடையாது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும், பணியில் இருந்த காலத்தில் வீட்டுக்கடன் பெற்று வீட்டை கட்டி, வட்டியுடன் திருப்பிச் செலுத்தியதிலும் பொருளாதாரம் சரிப்பட்டு விட்டது. வயதான காலத்தில் உணவைவிட மருந்து மாத்திரைகளின் செலவு அதிகமாகிறது. அதை ஈடுகட்ட எண்ணி வாடகைக்கு விட்டால்... இப்படியா?

   மாடி போர்ஷனுக்குச் செல்ல படியும் வழியும் தனியாக இருக்கும். இவர்கள் தூங்கியபின் மனோன்மணி எப்போது வருகிறாள் எனத் தெரியாது. சில நேரம் தன் போர்ஷனில் மனோன்மணி ஆண்களுடனோ பெண்களுடனோ பேசிக்கொண்டிருப்பாள். இவர்களுக்கு ஏதும் புரியாது. கண்டிக்க இயலாமல் சங்கடப்பட்டார்கள். துணிந்து அவளிடம் பேசிவிடலாம் எனக் காத்திருக்கும்போது அவளது கார் அவர்கள் கேட்டை கடந்துவிட்டிருக்கும். அலைபேசி யில் தொடர்புகொண்டு பேசலாம் என்றால் அது எப்போதும் உபயோகத்தில் இருப்பதாய் புலம்பும். இப்படி அவர்கள் அவளது தொடர்புக்காகக் காத்திருந்தபோது... இரண்டு வாலிபர்களுடன் அவள் காரில் வந்து இறங்கினாள். போர்ட்டிகோவில் நின்றிருந்த சாரா, ‘‘பிளீஸ் உள்ளே வந்துட்டு போறீங்களா மனோன்மணி?’’ என அழைத்தாள்.

   அந்த முதியவளால் அவளைப் பார்த்துப் புன்னகைக்க முடியவில்லை. மனதில் குமுறல். பொய் சொல்லி குடித்தனம் வருவதென்றால்... என்ன சாமர்த்தியம்?‘‘என்ன ஆன்ட்டி... வாடகைக்கு உண்டான செக்கைக் கூட உங்க போஸ்ட்பாக்சிலே இரண்டு நாளைக்கு முன்னர் போட்டேனே... வேறு என்ன விசேஷம்?’’ உடன் வந்தவர்களிடம் தன் போர்ஷனின் சாவியைக் கொடுத்து மேலே செல்லுமாறு சைகையால் சொல்லிவிட்டு சாராவைப் பின்தொடர்ந்தாள் மனோன்மணி. அவர்களிருவரையும் சலனமின்றி பார்த்துக் கொண்டிருந்த கணவரிடம், ‘‘ஜான்சன் சொல்லிருங்கப்பா... நமக்கு சினிமா அது இதுவெல்லாம் சரிப்பட்டு வராது. பொய் சொல்றது பாவம் என்கிறார் தேவன்...’’ சொன்ன சாராவின் முகத்தில் சிடு சிடுப்பு எட்டிப் பார்த்தது.

   ‘‘எஸ்... மிஸ்... நீங்க மிஸ்ஸா... மிஸஸ்ஸா... என்ன சொல்றது? ஏதோ கம்பெனியிலே வேலை செய்யறதா சொன்னீங்க. நாங்களும் நம்பி வீட்டை வாடகைக்கு விட்டோம். ஆனா நீங்களோ...’’ஜான்சனின் பேச்சைக் கேட்ட மனோன்மணியின் முகம் கருத்தது.‘‘ஸாரி... ஸாரி... அங்கிள். சினிமாவிலேயும் சீரியல்லேயும் நடிக்கிற எனக்கு வாடகைக்கு வீடு தர யாரும் தயாராயில்ல. உங்க வீட்டை வாடகைக்கு பார்க்க வந்தப்ப ஆன்ட்டியையும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சி. அதான்...’’‘‘பொய் சொல்லலாம்னு தோணுச்சி. அப்படித்தானே? ஸாரிமா. நீ எவ்வளவு முடியுமோ அவ்வளவு குயிக்கா காலி பண்ணிரு. அட்வான்ஸையும் வாங்கிப் போயிடு...’’ சிடுசிடுத்தார் ஜான்சன்.

   முகத்தைத் திருப்பிக்கொண்டாள் சாரா. ஒருவாரம் ஆயிற்று. மனோன்மணி சப்தம் போடாமல் போவதும் வருவதுமாய் இருந்தாள். இவர்கள் தூங்கி எழுவதற்கு முன் போய்விடுவாள். ஒருமுறை அலைபேசியில் வீடு காலி செய்வதை நினைவூட்டினார்கள். சில நாட்களில் தண்ணீர் லாரி வரும்போது, தண்ணீர் பிடிக்கும் கெடுபிடியில் இவர்கள் இருக்க ஓசையின்றி அவள் போய்விடுவதுண்டு. விடுமுறை நாட்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அல்லது இவர்கள் ‘சர்ச்’சுக்குப் போயிருக்கும்போதோ நான்கைந்து கார்கள் வீட்டின் முன் நிற்கும். இவர்கள் ‘சர்ச்’சுக்குப் போய் இறைவனை வழிபட்டுவிட்டு, காலைச்சிற்றுண்டியை நல்ல ஒரு உணவு விடுதியில் முடித்துக்கொண்டு வீடு திரும்பினால் இவர்கள் காரை போர்ட்டிகோவிற்கு கொண்டு செல்ல முடியாமல் ஏகப்பட்ட கார்கள் இவர்கள் வீட்டு வாசலில் நிற்கும்.

   வீட்டிற்குள் நுழைந்தால் மாடிப் போர்ஷனிலிருந்து வரும் சப்தமும் சலசலப்பும் மனதுக்கு சற்றும் பிடிக்கவில்லை. அமைதிக்காக மனம் ஏங்கிற்று. மனோன்மணி வீட்டில் இருக்கும்போதெல்லாம் ‘ஹோம் தியேட்டரி’லிருந்து திரைப்பட பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும். இல்லாவிட்டால் அவள் அலைபேசியில் மலையாளம், தெலுங்கு, தமிழ் என ஏதாவது ஒரு மொழியில் சரளமாய் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பாள். அப்போதெல்லாம் அவள் கணவன் - மனைவி எனப் பொய் சொல்லி வீட்டுக்கு குடிவந்தது அவர்கள் கண்முன் தோன்றி தங்கள் கையாலாகாத செயலை எண்ணி உள்ளத்தை கோபம் பிறாண்டும். அவள் இல்லாத வேளையில், அவளைத்தேடி ஆணோ பெண்ணோ யார் வருவதும் பிடிக்கவில்லை.

   சிடுசிடுப்பாய் அவர்களிடம் பதில் சொல்வார்கள். தங்கள் தனிமையையும் அமைதியையும் குலைக்க வந்தவளாகவே அவர்களுக்கு அவள் தோன்றினாள். ‘‘சாரா... தண்ணி லாரி வந்து நிக்குது. எல்லாம் பிடிச்சிட்டுப் போறாங்க டார்லிங். மகேசு வந்திருவாளா?’’‘‘அவ புருஷனுக்கு பஸ்ஸில் அடிபட்டுடுச்சாம். ஹாஸ்பிடலுக்குப் போறாளாம்... வரமுடியாதுன்னு சொல்லி அனுப்பிட்டா...’’‘‘இப்ப வாட்டருக்கு என்ன பண்றது? அந்த மனோன்மணி என்ன பண்ணுவா?’’ ‘‘விடுப்பா... அவ எங்காவது போய் குளிப்பா.. சாப்பிட்டுக்குவா. இல்ல தண்ணீர் வச்சிருப்பா...’’‘‘சாரா டார்லிங்... ஒண்ணு செய்வோமா. நீ லாரியிலிருந்து தண்ணி பிடிச்சி அப்படியே இழுத்து வச்சிடு. நான் மெல்ல எடுத்து வந்து உள்ள ஊத்திடறேன்...’’
   ‘‘என்ன ஜான்சன்... உமக்கு ஹார்ட் வீக்கா இருக்கு.

   பி கேர்ஃபுல்னு டாக்டர் சொல்லலை. மறந்து போச்சா... வேணாம்பா. நான் ரெண்டு ரெண்டு பக்கெட்டா பிடிச்சிட்டு வரேன்...’’‘‘நோ... நோ... உனக்கே உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு... அதெல்லாம் சரி வராது...’’வாசற்படியிலிருந்து மனோன்மணி குரல் கொடுத்தாள். ‘‘அங்கிள்.. நாளைக்கு நான் என் போர்ஷனை காலி பண்ணிடறேன். அட்வான்ஸ் கூட உடனே தரணும்னு இல்ல... ஆனா, செக்கா தராதீங்க...’’ என்றவள் தன் தோள் பையையும் குளிர் கண்ணாடியையும் மேசையில் வைத்தாள். இடது கையில் ஒன்று, இடுப்பில் மற்றொன்று, வலது கையில் இன்னொன்று என மூன்று பிளாஸ்டிக் குடங்களை அவர்கள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு தெருவுக்குச் சென்றாள்.

   தாங்கள் சீரியல்களிலும், திரைப்படங்களிலும் பார்க்கும் நடிகை தங்களுடன் சேர்ந்து லாரித் தண்ணீர் பிடிப்பாள் என தெருப்பெண்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எல்லாரும் நகர்ந்து மனோன்மணிக்கு வழி விட்டு சிரிப்பும் பூரிப்புமாய் நிற்க... சில பெண்கள் அவளுக்கு தண்ணீர் பிடித்துத் தந்து உதவினார்கள். இருபது நிமிடங்களில் சாரா - ஜான்சனுக்கு தேவையான நீரை நிறைத்து விட்டாள். சொன்னபடி மனோன்மணி மறுநாள் வீட்டை காலி செய்தாள். சாரா - ஜான்சன் மகளாக அவர்கள் வீட்டில் குடிபுகுந்தாள்!              
   http://www.kungumam.co.in
  • By நவீனன்
   இல் அறம்
       வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன.

   அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் பெற்றவர்களே கரித்துக் கொட்டினார்கள் அவளை. கல்யாணம் அவளுக்கு ஒரு கதவைத் திறக்கும் என நினைத்தாள். இன்னுமான இருட்டு சூழ்ந்திருந்தது அவள் வாழ்க்கையில் இப்போது. வெளியே அந்த இளம் மாலைக்கு சீக்கிரமே இருட்டி விட்டது. மேகம் பொருமிக் கொண்டிருந்தது. நாடகம் துவங்குமுன் அரங்கில் ஒளி குறைக்கப்பட்டாப் போல இருள் சூழ்ந்து கவிந்தது. மழை நாடகம் துவங்கப் போகிறது என்று பட்டது அவனுக்கு.

   கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகின்றன. தான், அவளிடம் சிக்கிக்கொண்டதாகவும் இனி இந்த ஜென்மத்தில் இதிலிருந்து மீள முடியாது என்றும் அவன் நினைத்தான். ஆத்திரமாய் இருந்தது அவனுக்கு. அடிமனசில் சிறு கசப்பு திரண்டு விஷமாய் உள்ளே இறுகி வெறுப்பென கெட்டிப்பட்டு ஆத்திரச் சீற்றமாய் இந்நாட்களில் உள்ளே உறும ஆரம்பித்திருந்தது. இடியுறுமல் வெளியே அல்ல, அவன் உள்ளே என்று தோன்றியது.

   நேற்றுவரை பொழுது மேகந்திரள்வதும் இருள்வதுமாய்ப் போக்கு காட்டிவிட்டு விலகிச் செல்வதாய் இருந்தது. மழைக்கு முந்தைய வெயிலோ புழுக்கமோ தாள வொண்ணாதிருந்தது. மனுசர்கள் எல்லாருமே ஒரு வெறுப்புடன் நடமாடிக்கொண்டிருந்தார்கள். அதுவும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வரை மழை அடையாளங்கள் இல்லாமல், கிளம்பித் தெருவில் நடக்கையில், பஸ்சில் இருந்து வீடடையும் நேரத்தில் மழை பயமுறுத்தியது. உலகம் கலவரங்களால் ஆனது என்று தோன்றியது.

   எல்லாவற்றையும் விட கலவரம், வீடடைதல். வீடடைய அவனுக்குப் பிடிக்கவில்லை. அலுவலகம் வருவது அவனுக்கு ஆசுவாசம் தருவதாய் அமைந்தது. அலுவலக நேரம் முடிந்ததும் எல்லாரும் வீட்டுக்குக் கிளம்புகையில் உற்சாகமடைந்தார்கள். சிலர் எப்ப ஐந்து மணியாகும் என்று கூட பொறுமையில்லாமல் காத்திருந்தார்கள், அவனைத் தவிர.

   ஐந்து மணி ஆனதும் அவன் பெரும் திகைப்புக்கு உள்ளானான். இனி அலுவலகத்தில் இருக்க முடியாது. வீடு நோக்கித் திரும்பவுது தவிர்க்க முடியாத விசயமாய் இருந்தது. கால்கள் பலவீனமாகி தெம்பே இல்லாமல் சோர்வாய் உணர்ந்தன. அவளுக்கு படிப்பு வரவில்லை. எட்டாவது வரையே கூட ஆசிரியர்கள் இரக்கப்பட்டு அவளை பாஸ் போட்டார்கள். தமிழையே எழுத்து கூட்டி வாசிக்க சிரமப்பட்டாள். எழுத அதிக சிரமப்பட்டாள். ஒன்பதாம் வகுப்பில் வயதுக்கு வந்த போது, இனிமே பள்ளிக்கூடம் போக வேண்டாம் எனத் தோன்றிவிட்டது.

   ‘‘சரிடி, வீட்ல இருந்து என்ன செய்யப் போற..?” அம்மா கேட்ட கேள்விக்கு மௌனமாய் நிற்கத்தான் முடிந்தது அவளால். ஆற்றோடு போகிற மரக்கட்டை அவள். படிப்பு அத்தோடு நின்று போனது. பெரிய லண்டன் மாப்பிள்ளையா வரப் போகிறான்? அவளும் எதிர்பார்க்கவில்லைதான். அட வாரம் ஒரு வெள்ளிக்கிழமையில் ஒரு முழம் பூ. கோயிலுக்கு அழைத்துப் போக என்ன செலவு இருக்கும்? ஒரு எஃப் எம் ரேடியோ இருந்தால் நல்லது. விடிய விடிய அதில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தனிமை தெரியாது.

   பெண் பார்க்க வந்திருந்தான் அவன். அவனை நிமிர்ந்து பார்த்தாள். பெரும் ஆர்வம், ஆசை, கனவு… அதெல்லாம் இல்லை. அளவெடுக்கிற பார்வை. நெடு நெடுவென்று உயரமாய் இருந்தான். தொண்டை எலும்பு துருத்தி வெளியே தெரிந்தது. கன்னங்கள் ஒட்டி மயிர் வளராமல் கிடந்தது. முழுக்கைச் சட்டை நாதசுரத்தை உறைபோட்டு மூடினாப் போல. நேரே அவன் கண்களைப் பார்த்தாள். வெட்கம் எல்லாம் இல்லை. அவன் கண்ணும் அவள் கண்ணும் சந்தித்து மீண்டன. அவனிடம் சலனம் இல்லை. சற்று சிரிப்பான் என நினைத்தாள். தான் சிரிக்க நினைத்தாள். அவன் சிரிக்காமல் அவள் சிரிப்பதாவது... அவன் மனசில் என்ன நினைக்கிறான் தெரியவில்லை.

   ஒரு பெருமூச்சு வந்தது அப்பவே அவளுக்கு. வாழ்க்கை அப்படித்தான் அமைகிறது அவளுக்கு. அவள் உப்பு விற்கப் போனால் மழை வருகிறது. மாவு விற்கப் போனால் காற்றடிக்கிறது. அவன் அவளைப் பார்த்தான். அதே நேரம் அவளும் அவனைப் பார்ப்பாள் என அவன் எதிர்பார்க்கவில்லை. வறண்ட அவள் கண்கள். அவனிடம் அவை என்ன எதிர்பார்க்கின்றன? சரி, நான் அவளிடம் என்ன எதிர்பார்க்கிறேன்? இங்கே நான் எதற்கு வந்திருக்கிறேன்? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? அம்மாக்களுக்குப் பிள்ளைகளையிட்டுப் பெருமை பாட வேண்டியிருந்தது.

   அந்தப் பொய்களும் இல்லாமல் அவர்களால் வாழ முடியாதிருந்தது. புருசப் பெருமைகள் காற்றில் கரைந்து விட, இப்போது பிள்ளைகளையிட்டு நம்பிக்கை சார்ந்த, கனவு சார்ந்த பெருமை. அவனுக்கு தன்னைப் பற்றி அம்மா பேசுவது பிடிக்கவில்லை. அதிகப் பிரசங்கம். இப்படித்தான் அவனது பாட்டி இவளை, அம்மாவை ஏமாற்றி தன் அப்பாவைக் கட்டி வைத்திருப்பாள் என்று தோன்றியது. கல்யாணம் என்றால் யாராவது வந்து வலை விரிக்கிறார்கள். பிறகு அவன் அவளைக் கல்யாணம் செய்துகொண்டான்.

   அவளை ஏன் கல்யாணம் செய்துகொண்டான், அவனுக்கே புரியவில்லை. அட ஓர் ஆண்மகன் ஏன் பெண் ஒருத்தியை மணந்துகொள்கிறான்? அதன் தேவைதான் என்ன? அதுவே குழப்பமாய் இருந்தது அவனுக்கு. அவனது சம்பாத்தியம் அவன் ஒருத்தனுக்கே பற்றவில்லை. இப்பவே அம்மா தாராளமாய்க் கடன் வாங்கினாள். அவளது கடன் வாங்கும் வேகம் பார்த்தே அவர்களை நகரத்துக்கு அழைத்துவர மறுத்தான் அவன். அவள் கடன் வாங்குகிற சுவாதீனம் பார்த்தே கல்யாணத்தைத் தவிர்த்தான்.

   அவனுக்கு வீட்டில் சாப்பிடவே யோசனையாய் இருந்தது. ஓரிடத்தில் கடன் வாங்கி இன்னொரு இடத்தில் அடைத்தாள் அம்மா. அதற்குப் பேர் சாமர்த்தியம். இதன் நடுவே சாமர்த்தியமாய் அவள் அவனுக்குக் கல்யாணம் வேறு நடத்திக் காட்டினாள். கல்யாணச் செலவுக்கு? கடன் வாங்கிக்கலாம்… சைக்கிளில் வீட்டிற்கு வந்து கடன் தந்தார்கள். வட்டி எவ்வளவு, அவன் கேட்கவில்லை.

   நகரத்துச் சிறு வீடு. ஓடெடுத்த வீடு. அவனும் நண்பன் ஒருவனுமாய்ப் பகிர்ந்துகொண்ட வீடு. இவனுக்குக் கல்யாணம் என்று நண்பன் விலகிக்கொள்ள நேர்ந்தது. வேலைக்குப் போகிற பெண் என்றால் அதிகம் கேள்விகள் கேட்பாள் அவனை. நகை நட்டு புடவை சினிமா என சற்று பறந்து திரிய ஆசைப்படவும் கூடும். அவன் கல்யாணமே வேண்டாம் என்றவன். இப்போது வேலை பார்க்காத பெண் என்றதும்தான் ஆசுவாசமாய் இருந்தது.
    
   சிறிய அளவில். வாடகையை அவன் ஒருவனே சுமக்க வேண்டும் இப்போது. சாப்பாட்டுச் செலவு, அதுவும் ரெட்டிப்பானது. அவன் அலுவலகம் போய்விட்டால் கரண்ட் செலவாகாது. இவள் வீட்டில் இருந்தாள். ஆகவே… எல்லாமே தலைமேல் வெள்ளம் என ஓடுவதாய் இருந்தது. அம்மாவுக்கு இதையெல்லாம் விளக்க முடியாது. வீட்டுக்கு வீடு வாசப்படி, என்கிறாப் போல எதாவது சொல்லிச் சிரிக்கிறாள். இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
    
   சின்ன இரண்டு அறை வீடு. சமையல் அறை சற்று ஒதுங்கி ஒரு நீள வராந்தா போல. ஒருவர் நின்று சமைக்கலாம். அந்தச் சின்ன இடத்தில் இருவர் வளைய வர வேண்டியிருந்தது. அவளை அவனால் தவிர்க்கவே முடியாதிருந்தது. அவள் அருகில் வரும்போது சிறு குற்ற உணர்வு அவனை வாட்டியது. தனக்கு சம்பந்தம் இல்லாமல் இங்கே வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாள் இவள். இதுகுறித்து தன்மீதே ஆத்திரம் குமுறியது.

   தப்பு அவன் மேல் தானே? அவன் மறுத்திருக்க வேண்டும். அவள் வீட்டுக்கு வந்தபின் வீடே நரகமாகி விட்டது. தன் அறையில் அப்படியே மூலையில் சுருண்டு கிடப்பான். விடுமுறை நாட்கள் அவனுக்கு வெறுப்பாய் இருந்தன. வெளியே வேடிக்கை கேளிக்கை என்று போக அவன் விரும்பியதே இல்லை. தனக்கு அவையெல்லாம் சபிக்கப்பட்டவை என்று ஏனோ நினைத்தான். இந்த உலகம் மகிழ்ச்சிகரமானது அல்ல. இங்கே சிரிக்கிறவர்கள் நடிக்கிறார்கள்.
    
   ‘மழை வர்றாப்ல இருக்கு’ என்று சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து எல்லாரும் கிளம்பி விட்டார்கள். சீக்கிரம் கிளம்ப அவர்களுக்கு ஒரு சாக்கு கிடைத்தாயிற்று. அவன்தான் தவிக்கும்படி ஆகிவிட்டது. வேறு வழியும் இல்லாமல் கிளம்பினான். பஸ் ஏறாமல் வீடுவரை நடந்தே போகலாமா என்று கூட இருந்தது. மேகம் கருத்து அது வேறு யோசனையாய் இருந்தது.

   பஸ்சில் இருந்து இறங்கி நடந்தான். வழியெல்லாம் மழை பயமுறுத்திக்கொண்டே வந்தது. மழைக்காலம் பிறக்குது, மழைக்காலம் பிறக்குது, என குடுகுடுப்பை அடித்தது இடி. வெளிச்சத்தை நாய்க்குட்டியாய் கவ்விக் கொண்டது இருள்நாய். வீடடைய மனம் அப்படியே குறுகி கால்கள் தளர்ந்தன. இப்படியே இருள் பெருகி நிறைந்து அவனையும் கரைத்துவிட்டால் நல்லது. வீடு பயமுறுத்தியது. பிசாசு சந்நிதி அது. அவள் அருகில் இருக்கிற ஒவ்வொரு கணமும் இப்படி ஒரு குறுகல் வந்துவிடுகிறது. அவளிடம் பேச பயந்தான். எந்தவொரு வார்த்தையும் மறுவார்த்தையாக  தனக்கு எதிராகக் கிளம்பி விடுமோ என அஞ்சினான்.

   இங்க பார் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை.. என்று முகத்துக்கு எதிரே சொல்லிவிட்டால் கூட நல்லதுதான். எனக்கு பெண்கள் யாரையுமே பிடிக்கவில்லை… என் அம்மா உட்பட. பெண்கள் தங்களுக்கான உலகில் ஆண்களை சுவிகரித்து, ஆக்கிரமித்து வாழ்கிறதாக அவன் நினைத்தான். தங்கள் எதிர்பார்ப்புகளால் அவர்கள் ஓர் ஆணின் விலா எலும்புகளை நொறுக்குகிறார்கள். தெரிந்தே இதில் ஆண்கள் சிக்கி வசப்படுகிறார்கள் என்கிற வாழ்க்கையின் அபத்தம் வெறுப்பாய் இருந்தது. கதவைத் தட்ட நினைத்த வேளையில் கதவைத் திறந்தாள் அவள்.
    
   (அடுத்த இதழில் முடியும்) http://www.kungumam.co.in
  • By நவீனன்
   சாமர்த்தியம்
    
    
   ‘‘அக்கா... போன்ல அத்தான்...’’ என்றபடி போனை கவிதா விடம் நீட்டினாள் வசந்தி. ‘‘என்னங்க..?’’ ‘‘காபிக்கு எத்தனை ஸ்பூன் சுகர்... பால், தண்ணீர்... கொஞ்சம் சொல்லேன்..?’’ கவிதாவின் கணவர் முருகராஜ். ஹோட்டல் சாப்பாடு சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. அதனால் கவிதா வெளியூர் செல்லும்போதெல்லாம் இப்படி  கேட்டுக் கேட்டாவது செல்ஃப் குக்கிங்தான்.

   பதில் சொல்லிவிட்டு போனை வைத்தாள் கவிதா. தொடர்ந்து காலை டிபன், மதிய சாப்பாடு, இரவு உணவு என்று அவ்வப்போது ரெசிபிகளையும் கணவனுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள். கேட்டுக் கொண்டு இருந்த வசந்திக்கு ஒரு சந்தேகம்.. ‘‘ஏன்க்கா நீ சொல்ற அளவெல்லாம் வித்தியாசமா இருக்கே... இப்படியா நீ சமையல் பண்றே..?’’   ‘‘இல்லடி... இது அவருக்கான அளவு. இந்த அளவுப்படி சமைச்சா சாப்பாட்டை வாயில வைக்க முடியாது!’’ ‘‘அடிப்பாவி... என்னடி சொல்றே..?’’ ‘‘ஆமாடீ... இதெல்லாம் ஒரு டெக்னிக். சரியான அளவு சொல்லி ருசியா சமைச்சுப் பழகிட்டார்னு வையேன்... என்னைத் தேட மாட்டார். எத்தனை நாள் வெளியூர்ல இருந்தாலும் கண்டுக்க மாட்டார். வீட்ல சண்டை வந்தாலும் அவரே சமைச்சு சமாளிச்சுக்குவார். சமாதானமாக நாளாகும். அதான் இப்படிச் சொன்னேன்! இப்போ பாரேன், ஊர்லே இருந்து எப்ப வருவேன்னு என்னை எதிர்பார்த்திட்டே இருப்பார்!’’ அக்காவின் சாமர்த்தியத்தைக் கண்டு வசந்தி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனாள்.      
    
    
   பிராயச்சித்தம்
    
   ஆர்.கே இண்டஸ்ட்ரீஸின் சூப்பர்வைசர் ராஜதுரை ரொம்பவே ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்! வேலையை முடித்தபிறகுதான் தொழிலாளர்களை சாப்பிடவே அனுமதிப்பார். லஞ்ச் டைம் என்ற கணக்கெல்லாம் அவரிடம் செல்லாது. அவர் சொன்ன வேலையை முடிக்காதவர்கள், மதிய உணவை மறந்துவிட வேண்டியதுதான். பசி நேரத்தில் சாப்பிடக் கூட விடாமல் தங்களைக் கசக்கிப் பிழியும் ராஜதுரையை தொழிலாளர்கள் வசை பாடினார்கள். முதலாளியிடம் முறையிட்டும் எதுவும் நடக்கவில்லை. ஆண்டுகள் நகர்ந்தன. ராஜதுரை பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வந்தது. ேஹாட்டலொன்று ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லிவிட்டு, அனைவரிடமும் விடைபெற்றார் ராஜதுரை.ஒரு நாள் ராஜதுரையைப் பார்க்க, அவருடைய பால்ய நண்பர் ஒருவர் ஹோட்டலுக்கு வந்தார்.   ‘‘என்னப்பா இது! உனக்கு பணத்தாசை இன்னுமா போகல? நல்ல நிலைமையில இருந்துதானே ரிட்டயர் ஆகியிருக்கே? பிள்ளைகளும் நல்லா சம்பாதிக்கிறாங்க. வீட்ல நிம்மதியா ஓய்வெடுக்காம, இந்த ேஹாட்டல் வியாபாரம் உனக்குத் தேவையா?’’ என்றார் நண்பர். ராஜதுரை கனத்த குரலில் பேச ஆரம்பித்தார்...

   ‘‘தொழிலாளர்களைப் பட்டினி போட்டு நிறைய பாவம் சம்பாதிச்சிட்டேன். அதுக்கு பிராயச்சித்தமாதான் ேஹாட்டல் ஆரம்பிச்சிருக்கேன். குறைஞ்ச விலையில தரமான சாப்பாடு போடறேன். சாப்பிடறவங்க என்னை மனசார வாழ்த்திட்டுப் போறாங்க. என்னுடைய கல்லா நிறையல. ஆனால் மனசு நிறைஞ்சிருக்கு!’’ ‘‘என்னை மன்னிச்சிடுப்பா!’’ என்றார் நண்பர்.                  
    
    
   கொட்டாவி
    
   என்ன முயன்றும் குழந்தை அஞ்சலி தூங்குவதாகத் தெரியவில்லை. அஜித் குழந்தைக்கு ேசாட்டா பீம் கதையெல்லாம் சொல்லிப் பார்த்தான். குழந்தை ‘உம்... உம்...’ என்று கண்களை விரித்து ஆர்வமாகக் கேட்டதே தவிர, தூங்குவதாகத் தெரியவில்லை. ஷாலினியும் தன் பங்குக்கு மாய மந்திரக் கதைகளை எல்லாம் சொன்னாள். களைப்பாகி ஷாலினிக்கு தூக்கம் வந்ததுதான் மிச்சம். குழந்தை கொட்டக் கொட்ட விழித்திருந்தாள். கொஞ்சமும் கண் அசரவில்லை.   ‘‘என்னங்க இது? உங்கம்மா கதை சொன்னா மட்டும் உடனே தூங்கிடுறா. நாம இத்தனை கதைகளைச் சொல்லியும் தூங்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறா! அவங்க அப்படி என்ன கதையைத்தான் சொல்வாங்க?’’ கிராமத்திற்குச் சென்றிருக்கும் தன் தாயையே செல்லில் அழைத்தான் அஜித்.போன் வழியே அறிவுரை வந்தது...

   ‘‘விதவிதமான கதையெல்லாம் சொன்னா, ‘அடுத்து என்ன? அடுத்து என்ன?’ங்கிற எதிர்பார்ப்பிலயே எந்தக் குழந்தையும் தூங்காது. கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போன கதையைச் சொன்னா உடனே கொட்டாவி வந்துடும். அழுத்திக் கேட்டா, ‘எனக்கு இந்தக் கதைதான் தெரியும்’னு சொல்லிடணும். நான் தினமும் அஞ்சலிக்குச் சொல்ற கதையையே சொல்லுப்பா!’’ இதை ஒட்டுக் கேட்ட ஷாலினி, பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்ல ஆரம்பிக்க, குழந்தையின் கண்கள் சொக்க ஆரம்பித்தன. கூடவே அஜித்தின் கண்களும்!  
     
    
    
   நியாயமா?
    
   மாதம் பிறக்கிறதோ இல்லையோ, தவறாமல் அண்ணன் வீட்டில் ஆஜராகி விடுவாள் சுமதி. கண்ணைக் கசக்கி, அழுது புலம்பி, அண்ணனிடம் வேண்டியதை அவள் வாங்கிக்கொண்டு போவதை அண்ணி பூங்கொடி எரிச்சலுடன் பார்ப்பாள். அன்று வீட்டுக்கு வந்த  சுமதியை கோபத்துடன் கேட்டே விட்டாள் பூங்கொடி.   ‘‘கல்யாணம் ஆகி இத்தனை வருஷமாகியும் இப்படி அடிக்கடி வந்து, அது வேணும் இது வேணும்னு கேட்டு உன் அண்ணனைத் தொந்தரவு பண்றியே, இது உனக்கு தப்பா தெரியலையா சுமதி?’’ சுமதி விரக்தியுடன் சிரித்தாள்.

   ‘‘அண்ணி! உங்களுக்கு வசதியான ஒரு நல்ல மாப்பிள்ளை அமையணும்னு உங்க அண்ணனும் அண்ணியும் அக்கறையா தேடித் தேடி என் அண்ணனை உங்களுக்குக் கட்டி வச்சாங்க, இல்லையா? அந்த மாதிரி என் அண்ணியான நீங்களும், என் அண்ணனும் அக்கறையா தேடித் தேடி எனக்கு ஒரு நல்ல, வசதியான மாப்பிள்ளையா பார்த்துக் கட்டி வச்சிருந்தா, நான் ஏன் இங்கே வர்றேன்? வீட்டை விட்டு போனா போதும்னு வசதி இல்லாத இடத்தில்தானே நீங்க என்னைத் தள்ளி விட்டிருக்கீங்க? தப்பை உங்க மேல வச்சுக்கிட்டு என் மேல  கோபப்படறது நியாயமா அண்ணி?’’ அண்ணி பூங்கொடி வாயடைத்து நின்றாள்.     
    
     http://kungumam.co.in
  • By நவீனன்
   பால்ய பொழுதொன்றில்
       - குலசிங்கம் வசீகரன்

   பருத்தித்துறை மருதடி வைரவர் கோயிலடியில் செழியன் நடந்தான். உயர்ந்து வளர்ந்திருந்த மருதமர நிழலில் வைரவர் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். மருதமர குளிர்மை வீதியின் வெம்மையை சற்றே தணித்தது. செருப்பைக் கழற்றிவிட்டு திருநீற்றை பூசி, நீர்த்தன்மை குறைந்திருந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டான். சூலத்தை கொஞ்சநேரம் பார்த்துக்கொண்டிருந்து விட்டு குனிந்த தலை நிமிராமல் நடக்கத் தொடங்கினான். வகுப்புக்குத் தேவையான கொப்பிகள் தோளில் உள்ள துணிப்பைக்குள். சீ.எம். இட்யூஷ னில் மூன்று மணிக்கு வகுப்பு. நிமிர்ந்து பார்க்காமலேயே நடந்தாலும் தன்னை தாண்டிப்போவது சைக்கிளா, மோட்டார்சைக்கிளா அல்லது வேறு வாகனமா என்பது செழியனுக்கு நன்றாக விளங்கியது.

   யாராவது தெரிந்தவர்கள், தான் நடந்து போவதைப் பார்த்து, ‘‘வாடாப்பா... இறக்கிவிடுறன்...’’ என்று கேட்டு விடுவார்களோ என்ற எண்ணத்தில் தலையை நிமிர்த்தவேயில்லை. ‘எனக்கென்று சைக்கிள் இல்லை. அதனால் யாருடனும் டபிள்ஸ் போவதில்லை...’ மனசுக்குள் ஒரு வன்மம்.‘ஏன் கடவுள் எனக்கு மட்டும் இப்பிடி பண்ணிடறார்? கூடப்படிக்கிற கன பெடியள் சைக்கிள்ள வாறாங்கள். நான் மட்டும்தான் நடந்து போறன்...’ இதுதான் செழியனின் மனதிலுள்ள கோபம். செழியனின் தந்தை ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர். தாயாரும் ஓர் ஆங்கில ஆசிரியர்தான். செழியன் இரண்டாவது பிள்ளை. ஓர் அக்கா, ஒரு தங்கச்சி என அளவான குடும்பம்.

   இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டு இந்த வருமானத்தில் எவ்வாறு அவர்களைக் கரையேற்றுவது என்ற எண்ணத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டு வெளிநாடு செல்ல தீர்மானித்தார் செழியனின் தந்தை. ஆனால், தாய்க்கு அதில் சம்மதமில்லை. தந்தையோ தன் நண்பர்கள் சிலர் அவ்வாறு சென்று நல்ல வருமானத்தை ஈட்டுவதாகக் கூறி, தான் நினைத்தபடியே வெளிநாடு சென்றார். அதற்காக சில லட்சங்கள் கடனும் பட்டார். வெளிநாட்டு வருமானத்தில் விரைவிலேயே கடனையும் திருப்பிக் கொடுத்து பிள்ளைகளுக்கும் பணம் சேர்க்கலாம் என நம்பினார்.

   ஆனால், போன நாட்டில் அவர் எண்ணியபடி வருமானத்தை ஈட்டமுடியவில்லை. கடனாக வாங்கிய பணத்திற்கான வட்டியும் முதலுமே அவரால் அனுப்பக் கூடியதாக இருந்தது. போதாததற்கு ஒருமுறை வங்கியில் போடுவதற்கென தபாலில் அனுப்பியிருந்த காசோலையை கொழும்பு தபாலகத்தில் வேலைபுரிந்தவர்கள் சிலர் எடுத்து காசாக்கியிருந்தார்கள். அதனால் ஒருமாதம் வட்டியும் முதலும் செலுத்த முடியவில்லை. கடந்தமுறை விடுமுறையில் வந்தபோது கொழும்பிலேயே நின்று பொலீசில் முறைப்பாடுகள் செய்து அலைந்து திரிந்து விட்டுத்தான் ஊருக்கு வந்திருந்தார். தாய்க்கு இவையெல்லாம் மிகவும் மன உளைச்சலையும் வேதனையையும் கொடுத்தது.
    
    

   ‘‘அப்பவே நான் சொன்னனான். உந்த வெளிநாட்டு வேலை ஒண்டும் தேவையில்லை, கஞ்சியோ கூழோ எல்லாரும் ஒண்டா இருந்து குடிப்பமெண்டு...’’தந்தைக்கு அது இப்போது விளங்கியிருந்தாலும் காலம் கடந்த ஞானமாகவே இருந்தது. இடைநடுவில் வேலையை விட்டுவர முடியாத நிலை. அவர் விடுமுறை முடிந்து செல்லும் முன்னர் காசோலையை மாற்றி பணத்தை எடுத்தவர்களை கண்டுபிடித்த பொலீசார் பணத்தை மீளவும் தந்தைக்கு வழங்கினார்கள். அதோடு அந்த பிரச்னை ஓரளவு ஓய்ந்தாலும், வட்டிப்பணம், முதல் என்பவற்றையே அவரால் ஒவ்வொரு மாதமும் அனுப்ப முடிந்தது. இப்போது தாயின் வருமானம் மட்டுமே வீட்டுச் செலவுகளுக்கு.

   தந்தை வெளிநாட்டில் வேலை, தாய் அரச உத்தியோகம். ஆனாலும் வருமானம் அன்றாடச் செலவுகளுக்கே போதுமானதாக இருக்கிறது. பிள்ளைகளுக்கு அத்தியாவசிய விடயங்களில், முக்கியமாக சாப்பாட்டில் எந்தவித குறையும் விடக்கூடாது என்பதில் தாய் கவனமாக இருப்பார். அப்படி இப்படி என்று கொஞ்சம் மிச்சம்பிடித்து சேமித்தாலும் அதுதான் வருடப்பிறப்பு, தீபாவளி, பிறந்தநாள் என்று மேலதிக செலவுகள் வரும்போது கைகொடுக்கும். இருந்தாலும் அந்தமாதிரியான விசேட தினங்களுக்காக அனைவருக்கும் புது ஆடைகள் வாங்குவதென்பது கூட சிலவேளைகளில் முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறான நிலையில் செழியனின் மனக்குமுறலை தாயால் எவ்வாறு உடனடியாகத் தீர்த்து வைக்க முடியும்?

   செழியன் இரவில் படுக்கையில் மற்றவர் அறியாவண்ணம் தன் நிலையை பெரிய சோகமாக நினைத்து வராத அழுகையை வலுக்கட்டாயமாக வரவைத்து அழுவான். அதேபோலத்தான் பாடசாலைக்கும் ட்யூஷனுக்கும் போகும்போதெல்லாம் யாரோடும் டபிள்ஸ் போக மாட்டான். எல்லாம் ஒருவித வீம்புதான். அக்காவிடம் மட்டும் தன் ஆசையைச் சொன்னான். தமக்கையாருக்கு தம்பி மீது பாசம் அதிகம். உருகி உருகி அன்பைப்பொழிவார். தம்பியார் படுக்கையில் அழுவதும் அதற்கான காரணமும் தமக்கைக்குத் தெரிந்தே இருந்தது. தம்பியுடன் கல்வி கற்கும் மற்றைய பெடியள் பலரும் சைக்கிளில் பாடசாலைக்கு, ட்யூஷனுக்கு எல்லாம் சென்று வரும் போது தன் தம்பி மட்டும் நடந்து போய் வருவது அவருக்கும் மிகப்பெரிய குறையாகவே தெரிந்தது.

   இறுதியில் தம்பியும் வாய்விட்டு தனது விருப்பத்தைக் கேட்டதும், தாயிடம் சென்று, “அம்மா, தம்பிக்கு உடன சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோ. அவனும் மற்ற பெடியள் மாதிரி சைக்கிள்ள போய்வரோணும்...” என்றார். தாய்க்கும் ஏற்கனவே ஓரளவு விஷயம் விளங்கியே இருந்தது. செழியன் நடந்தே எங்கும் போய்வருவதைப் பார்க்கும்போதெல்லாம் எப்படியாவது மகனுக்கு சைக்கிள் ஒன்று வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று  எண்ணியிருந்தார். மகள் வந்து சொன்னதும், ‘‘அவன் நடந்து திரியிறது எனக்கும் கவலைதான் பிள்ளை. கொஞ்சம் பொறுத்துக் கொள்ளட்டும். அடுத்த மாதம் அரியேர்ஸ் வர இருக்கு. வாங்கிக் குடுக்கிறன்...” என்றார்.

   தாய் சைக்கிள் வாங்கித்தர சம்மதம் தெரிவித்து விட்டார் என்பதை அறிந்த நேரத்தில் இருந்து செழியனின் கால் நிலத்தில் படவில்லை. அடிக்கடி மருதடியில் இருந்த ராஜன் சைக்கிள் கடைக்கு போய் அங்கு நிற்கின்ற சைக்கிள்களைப் பார்ப்பதும், என்ன என்ன சோடனை செய்யலாம், ஒவ்வொன்றும் என்ன விலை என்று விசாரிப்பதிலுமே கூடிய நேரத்தை செலவிட்டான். அடுத்த மாத இறுதியில் அம்மாவின் சம்பள அரியர்ஸ் கிடைத்து சைக்கிள் வாங்கும் நாளும் வந்தது. மாலையில் செழியனையும் கூட்டிக்கொண்டு தாயார் கடைக்கு புறப்பட்டார்கள். தமக்கைக்கு கைகாட்டிவிட்டு துள்ளல் நடை நடந்தபடி தாயோடு புறப்பட்டான் செழியன். சைக்கிள் கடைக்கு இருவரும் சென்றார்கள்.

   இவர்களைக் கண்டதும் முதலாளி, “என்ன டீச்சர், மகன் ஒவ்வொரு நாளும் கடைக்கு வந்து சைக்கிள்களை சுத்தி சுத்தி பாத்திட்டு போறார், சைக்கிள் ஒண்டு வாங்கிக் குடுங்கோவன்...” என்றார், “ஓம், அதுக்குதான் வந்தனாங்கள். நல்ல சைக்கிளா ஒண்டு தம்பி கேக்கிற மாதிரி வடிவா பூட்டிக் குடுங்கோ...’’ “அவற்ற விருப்பப்படியே நல்லதா ஒரு சைக்கிள் பூட்டிக் குடுக்கிறன் டீச்சர்...” என்று கூறியபடி கடையின் உள்ளே திரும்பி வேலைக்கு நின்ற பெடியனைப் பார்த்து, “தம்பியை உள்ள கூட்டிப்போய் எந்த சைக்கிள் வேணும் எண்டு கேட்டு, அதுக்குத் தேவையான சாமான்களையும் எடுத்துக்கொண்டு வா...’’ என்றார்.

   செழியன் கடைப்பெடியனுடன் உள்ளே சென்று, தான் பார்த்துவைத்திருந்த லுமாலா சைக்கிளைக் காட்டினான். அதை கொண்டு வந்து கடைவாசலில் விட்டுவிட்டு உள்ளே சென்று சொக்கன்சோர், ரோலிங் பெல், ஒரிஜினல் லுமாலா சீட், பார் கவர், சில்லுக்குரிய பூக்கள், அழகிய மட்காட் லைட் என செழியன் கற்பனைசெய்து வைத்திருந்த சைக்கிளை உருவாக்கத் தேவையான அனைத்துப் பொருட்களையும் கொண்டுவந்து கரியரில் வைத்தான்.
   ‘‘சேர்விஸ் பண்ணி எல்லாம் பூட்ட ஒன்பதினாயிரத்தி அறுநூறு வருது டீச்சர்...’’ என்றார் முதலாளி. அம்மா காசை எண்ணிக்கொடுத்து சீட்டை வாங்கினார்.

   செழியன் சைக்கிளை பொருட்களுடன் சேர்த்து மெதுவாக உருட்டிக்கொண்டு கடையைச் சுற்றி பின்புறம் சென்றான். அங்குதான் சேகரம் அண்ணாவின் சைக்கிள் திருத்தும் கடை இருக்கிறது. ராஜன் சைக்கிள் கடைக்கு தேவையான சைக்கிள்களை பூட்டிக் கொடுப்பதும், தனியாக திருத்த வேலைகளும் செய்து கொடுப்பார்.

   சேகரம் அண்ணா சைக்கிள் திருத்துவதை வகுப்பு முடிந்து வரும் வழியில் சில வேளைகளில் பாத்துக்கொண்டு நிற்பது செழியனின் பொழுதுபோக்கு. அதனால் ஏற்கனவே சேகரம் அண்ணாவுடன் செழியனுக்கு அறிமுகம் இருந்தது. அண்ணனைக் கண்டதும் மகிழ்ச்சிபொங்க, ‘‘சேகரம் அண்ணை, இது என்ர சைக்கிள். அம்மா வாங்கித்தந்தவ. வடிவா கழுவிப்பூட்டித் தாங்கோ. முதலாளி கழுவிப்பூட்டவும் சேர்த்து காசு எடுத்திட்டார்!’’ என்றான்.
    
   (அடுத்த இதழில் முடியும்) http://www.kungumam.co.in
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை செல்லினம்!
   பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல... அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள் எல்லோரும்!   சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர், அப்படியே முடிந்து போனார். ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம் தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல, ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே ரமணாவைத் தேடி பிள்ளையார் கோயிலுக்கு வந்தார்.

   இளைஞர்கள் தனித்தனியே ஆளுக்கொரு செல்லை தடவித் தடவிப் பார்த்து, அதன் திரையில் மூழ்கியபடி அமைதியாக இருந்தார்கள். அவர் வந்ததைக்கூட யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

   ‘‘ரமணா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   ‘‘தாத்தா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   ‘‘தாத்தா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   கணேசன் ஒரு முடிவுக்கு வந்தவராக தன் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் பகிர்ந்தார்.
   ‘‘ஐயோ தாத்தா... போயிட்டீங்களா!’’ - கதறி அழுதான் ரமணா. அழுது..?           
   http://kungumam.co.in/
  • By நவீனன்
   பார்வை
   தழையத் தழைய புடவை கட்டி, நெற்றியில் குங்குமப் பொட்டுடன், மணக்கும் மல்லிகையை ஒரு கை மொத்தத்துக்கு தலையில் வைத்திருந்த பாவனாவை டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பார்த்து அதிர்ந்தாள் கமலா.‘‘போன வருஷம் கணவனை ஆக்ஸிடென்ட்ல பறிகொடுத்த பாவனா, இவ்வளவு அலங்காரத்தோட பந்தா பண்ணுறாளே!’’ - கணவனிடம் சொன்னாள்.

   ‘‘இது 2017. இப்படிப்பட்ட பெண்களுக்கு சுமங்கலி போன்ற தோற்றம் பாதுகாப்பா இருக்கு. இதுல என்ன தப்பு?’’ என்றான்.‘‘இல்லைங்க! ஒண்ணு, அவ ரெண்டாவது கல்யாணம் பண்ணியிருக்கணும்! இல்லைன்னா யார் கூடயாவது லிவிங் டுகெதர்ல இருக்கணும்! இவ்ளோ அலங்காரம், ெராம்ப சந்தோஷமா குடும்ப வாழ்க்கை இருந்தா மட்டும்தான் வரும்!’’ - வாதாடினாள் கமலா.

   அடுத்த நாள் பாவனா, கமலாவின் வீட்டுக்கே வந்தாள். அலங்காரம் சற்றும் குறையவில்லை. பரஸ்பர நலம் விசாரித்துவிட்டு, ‘‘என்ன கமலா இது? கணவனை இழந்த நானே நல்லா டிரஸ் பண்ணி, அவரு என் கூடவே இருக்கிற ஃபீலிங்ல ஊரைச் சுத்தறேன். நீ குத்துக் கல்லாட்டம் புருஷனை வச்சுக்கிட்டு ரொம்ப ஆர்டினரியா டிரஸ் பண்ணிக்கிட்டு, வாழ்க்கையை அடமானம் வச்சுட்ட மாதிரி வருத்தமா இருந்தியே! உனக்கும், உன் ஹஸ்பெண்டுக்கும் ஏதாவது பிரச்னையா?’’ என அக்கறையாக விசாரித்தாள்.கமலாவுக்கு மண்டை காய்ந்தது.              
    
   kungumam.co.
  • By நவீனன்
   தெளிவான தேர்வு
    
   மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான்.

   அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்!’’

   ‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா சொல்லித் தருவான். வினய்க்கு ஸ்டைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது!’’‘‘ஆமா, நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன? தெரியாட்டா என்ன?’’‘‘வினய் சூப்பரா இருக்கான். செவப்பா, அழகா... உயரம் என்ன ஒரு அஞ்சரை இருக்குமா? செம டிரஸ்ஸிங் சென்ஸ்... அவன் முடியை கோதி விட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும். நீ அதிர்ஷ்டக்காரிதான்!’’

   சிந்து ஏதும் சொல்லவில்லை.‘‘என்னடி சிந்து..? நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ எதுவும் பேச மாட்டேங்குற?’’சட்டென்று திரும்பிய சிந்து, சீப்பை டிரஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு, கிரிஜாவை இழுத்துவந்து படுக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தாள்.
   ‘‘கிரி, வினய் ஸ்டைலுதான். லுக்குதான்.

   ஆனா, அதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. முரளிக்கு நாளைக்கு வேலையே கிடைக்கலைன்னாலும், அவன் தெரிஞ்சு வச்சிருக்குற பிஸிக்ஸ், மேத்ஸ் அவனைக் காப்பாத்தும். இவ்ளோ கஷ்டமான விஷயத்தை புரிஞ்சிக்கிறவன், நாளைக்கு பொண்ணு மனசையும் புரிஞ்சிக்குவான். வினய் இப்படி எந்தத் திறமையையும் வளர்த்துக்காம ஸ்டைல் காட்டிக்கிட்டு சுத்தறான்னா அதுக்குக் காரணம் உன்னையும் என்னையும் மாதிரி பொண்ணுங்கதான்!’’ என்றாள் சிந்து.

   ‘‘என்னது! நானா அவனை அப்படி சுத்தச் சொன்னேன்?’’ ‘‘அதை ரசிக்கிறியே... அது போதாதா? நாம பொண்ணுங்க கிரி. நாமதான் தேர்ந்தெடுக்கணும். ட்ரிக்கர் நம்மகிட்டதான் இருக்கு. என்னைக் கேட்டா அரை மணி நேர சந்தோஷத்துக்குக் கூட எந்த பொண்ணும், ஸ்டைலு, அழகுனு ஒரு ஆம்பளைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அப்படி குடுக்கக் குடுக்கத்தான், நம்மளை பின்னால ஏய்க்கிறானுங்க. முரளிதான் என் சாய்ஸ் என்பதில் நான் உறுதியா இருக்கேன்.

   நம்ம தேர்வுதான் ஆம்பளைகளை தீர்மானிக்குது. நாமதான் அவனுங்களைப் பழக்கப்படுத்தணும். அந்தக் காலத்துல மனுஷன் காட்டு விலங்கான ஓநாயைப் பழக்கப்படுத்தித்தான் வீட்டு விலங்காக்கினான். அப்படிப் பழக்கப்படுத்தணும். அவனுங்க நம்மளை பழக்கப்படுத்தலை, ‘ஜீன்ஸ் போடாத... இதைச் செய்யாத...

   அதைச் செய்யாத’னு! அவனுங்க தெளிவாதான் இருக்காங்க. நாமதான் தேர்ந்தெடுக்கத் தெரியாம அவங்களையும் குழப்பி, நாமும் குழம்பறோம். நாம தெளிவா இருக்கணும். நாம முரளி மாதிரி ஆளுங்களைத்தான் தேர்வு பண்ணுவோம்னு தெரிஞ்சிட்டா, அவனுங்க ஏன் சீன் போடப் போறாங்க’’ என்றாள் சிந்து தெளிவாக!          
   kungumam.co
  • By நவீனன்
   மாற வேண்டாம்!
    
   சாரு தன் கணவர் மாதவனைப் பற்றி இப்படித்தான் புலம்புவாள்...‘பெரிய கம்பெனியில் ஜெனரல் மேனேஜர்னு பேர். என்ன சம்பளம் வாங்கி என்ன புண்ணியம்? மனுஷன் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார். வீட்டுக்கு அரிசி, பருப்பு கூட கெமிக்கல் பேலன்ஸில் அளந்து அளந்து வாங்குவார்...

   தரித்திரம்! மாப்பிள்ளை, பொண்ணுங்க விசேஷம்னு வந்தா கூட இருக்கறதுலயே மலிவான ரகத்துல துணிமணி வாங்கித் தருவார்.’ ‘‘ஏங்க, போகும்போது பணத்தை தலையில கட்டிக்கிட்டா போகப் போறோம்? கொஞ்சம் தாராளமாத்தான் செலவழியுங்களேன்!’’ என்றாள் ஒரு நாள்.மாதவன் புன்னகைத்து பதில் சொன்னார்...

   ‘‘என் குடும்பம் ரொம்பப் பெருசு!’’‘‘இருந்த ரெண்டு பொண்ணுங்களையும் கட்டிக் கொடுத்தாச்சு. இதுக்கு மேல யாருக்கு சம்பாதிக்கணும்? சாக்கு போக்கு சொல்றீங்களே தவிர நீங்க மாறவே மாட்டீங்களா?’’பதில் சொல்லாமல் உள்ளே சென்றார் மாதவன்.

   அடுத்த நாள் மாதவனின் செல்போனில் அழைப்பு... சலித்தபடி எடுத்தாள் சாரு. ‘‘லீலா எஞ்சினியரிங் காலேஜிலிருந்து பேசறேன். பட்டமளிப்பு விழாவுக்கு கொடை வள்ளல் மாதவன் சாரை அழைச்சிருந்தோம். மாலையில் விழா... ஞாபகப்படுத்தத்தான் இந்த போன்!’’ என்றது மறுமுனை.

   ‘‘என்னது! கொடை வள்ளலா? ராங் நம்பர் சார்!’’‘‘இல்லை மேடம்... நீங்க வேணும்னா விழாவுக்கு நேர்ல வந்து பாருங்க!’’
   மாலையில் மாதவன் கிளம்பும்போது, ‘‘ஏங்க, நானும் விழாவுக்கு வரேன்!’’ என்றாள் சாரு.கொஞ்ச நேரம் யோசித்து, ‘‘சரி, வா’’ என்றார் மாதவன்கல்லூரியில் ஏகப்பட்ட வரவேற்பு. மாணவர்கள் மலர்க்கொத்து கொடுத்து ராஜமரியாதையுடன் மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

   முதல்வர் தன் வரவேற்புரையைத் தொடங்கினார்... ‘‘மாதவன் சார் செய்திருப்பது சாதாரண காரியமில்லை. ஒவ்வொரு வருடமும் நன்றாகப் படிக்கும் 20 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கோர்ஸ் முழுக்க டியூஷன் ஃபீஸ், புக், ஹாஸ்டல் ஃபீஸ் எல்லாம் கட்டுகிறார். இந்த ஆண்டு முடித்த 20 பேரும் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனாலும் இவர் கையால்தான் டிகிரி வாங்குவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறார்கள். இவர் இன்னும் நூறாண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன்!’’ என்றார்.

   சாருவுக்கு தூக்கி வாரிப் போட்டது. அவளால் நம்ப முடியவில்லை. மாணவர்கள் எல்லோரும் மாதவன் கையால் சான்றிதழ் வாங்க, மீண்டும் தொடர்ந்தது பாராட்டு மழை.‘‘வலக்கை செய்யும் தர்மம் இடக்கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். இவர் செய்யும் தர்மத்தை மனைவியிடம் கூட சொன்னதில்லை என்பது இன்று காலை தொலைபேசியில் அழைத்தபோதுதான் தெரிந்தது. வானம் கூட மழை பெய்தால் இடி இடித்து சொல்லிக் காட்டுகிறது. ஆனால் இவர் கிரேட்!’’ என்று ஒருவர் பாராட்ட, ஒரு மிதப்பிலேயே சாரு வீடு வரை வந்தாள்.

   ‘‘என்ன பேசமாட்டேங்கறே?’’ என்று மாதவன் கேட்க, சாருவிடம் பொலபொலவென்று கண்ணீர்.‘‘உண்மை தெரியாம கஞ்சன், கருமினு திட்டியிருக்கேன். அப்பகூட ஒரு வார்த்தை சொல்லலையே!’’‘‘தர்மம் செய்தால் வெளியே சொல்லாம நாம மறந்துடணும். அப்பத்தான் கடவுள் மறக்க மாட்டார்!’’‘‘உங்களை அடிக்கடி மாறுங்க, மாறுங்கனு திட்டுவேன். இப்ப சொல்றேன். நீங்க இனிமே மாறாதீங்க. ப்ளீஸ்!’’ - தழுதழுத்த குரலில்
   வேண்டினாள் சாரு.                
   kungumam.co