Sign in to follow this  
நவீனன்

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை!

Recommended Posts

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை!

 

white_spacer.jpg

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! white_spacer.jpg
title_horline.jpg
 
எஸ்.ராமகிருஷ்ணன்
white_spacer.jpg

ஜி. சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் பலமுறை முயன்றிருக்கிறாள். ஆனால், தண்ணீருக்குள் வீசிய ரப்பர்பந்து தானே மேலே வந்துவிடுவது போல, அவள் எவ்வளவு முயன்றாலும் பிறந்த நாள் தானே நினைவுக்கு வந்துவிடுகிறது.

p130.jpg ஜி.சிந்தாமணி ராயப்பேட்டையில் வசிக்கிறாள். 40 வயதை நெருங்குவதற்குள் நரையேறி, பருத்த சரீரம் கொண்டவளாகிவிட்டாள். அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்குக்கூட இப்போதெல்லாம் மறந்து போய் விடுகிறது.

அதை யார் கவனிக்கப் போகிறார்கள்! இப்போது அவள் முகத்தை கூர்ந்து நோக்குகிறவர்கள் யார் இருக்கிறார்கள். அவளாகவே தன்னைப் பார்த்துக்கொள்வதைத் தவிர மற்றவர்களுக்கு அவளிடம் ஈர்ப்பில்லை.

அவள் கடந்த சில வருடங்களாகவே எப்போதும் ஒரு வட்டக்கண்ணாடியை தனது ஹேண்ட்பேகில் வைத்திருக்கிறாள். அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதோ, சாப்பிட்டு முடித்த பிறகோ அந்தக் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொள்வாள். அப்போதெல்லாம் அவளுக்குத் தன் மீதே தாங்க முடியாத வேதனை கவிழத்தொடங்கிவிடும். கண்ணுக்குத் தெரியாமல் உப்பு தண்ணீரில் கரைந்துவிடுவதைப் போல அவளிடமிருந்த அழகு யாவும் கரைந்து போய்விட்டது அவளை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவளுக்குத் தனது பிறந்தநாள் வரப்போவது நினைவுக்கு வந்தது. அதை அலுவலகத்தில் உள்ள யாரிடமாவது சொல்லலாமா என்று யோசித்தாள். கேலி செய்வதைத் தவிர அவர்களால் தனது பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றியது.

இந்த முறை எப்படியாவது அந்த நாளை மறந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளாக முடிவு செய்துகொண்டாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவளுக்கு இரண்டு நாட்களாகவே பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன வயதில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் போலிருந்தது.தன்னை அறியாமல் ஒவ்வொருவரையாகக் கூர்ந்து பார்க்கத் துவங்கினாள். உலகில் 40 வயதைக் கடந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தருவதாக இருந்தது. அதோடு, எவரும் தங்கள் வயதை நேரடியாக வெளிக்காட்டிக்கொள்வது இல்லை என்பது அவளுக்கு மகிழ்வைத் தந்தது.

இன்றைக்கும் அவள் விழிப்பதற்கு முன்பாகவே மனதுக்குள் ஒரு குரல் ‘இன்றைக்கு உனது பிறந்தநாள்’ என்று கூவியது. அதற்குச் செவிசாய்க் காதவளைப் போல கொஞ்ச நேரம் வேண்டுமென்றே படுக்கையில் கிடந்தாள். கல்லூரிக்குச் செல்லும் மகள் குளித்துவிட்டு ஈரத்தலையோடு அறைக்குள் வந்து தனது உடையை தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. மணி ஆறரையைத் தாண்டி யிருக்கவேண்டும்.

p138.jpg சிந்தாமணி எழுந்து எப்போதும் போல அவசர அவசரமாகச் சமையல் செய்யத் துவங்கினாள். இருப்பதிலேயே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத அரக்கு நிற பூ போட்ட சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வீட்டில் அவளது கணவன் டி.வி. பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். சின்னவள் பள்ளிக் கூடம் கிளம்புவதற்காகபுத்த கங்களை எடுத்துத்திணித்துக் கொண்டிருந்தாள்.

யாராவது தனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பார்களோ என்று ஒரு நிமிஷம் தோன்றியது.அவர வருக்கு அவரவர் அவசரம். இதில் தானே சொல்லாமல் எப்படித் தன் பிறந்தநாளை நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்தபடியே, தன் டிபன்பாக்ஸில் சாப் பாட்டை அடைத்துக்கொண்டாள். மணி எட்டு இருபதை நெருங்கும்போது அவள் மணிக்கூண்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பாள். இன்று ஐந்து நிமிஷம் லேட்!

பேருந்து நிலையத்தில் பூ விற்பவள் முன்பாக சிவப்பு, மஞ்சள் ரோஜாக்கள்குவிந்து கிடந்தன. கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருந்தவள் சிந்தாமணியைக் கண்டதும் மௌனமாகிவிட்டாள். தான் மஞ்சள் ரோஜாவை வாங்கமாட்டோம் என்று எப்படி இந்தப் பூக்காரி முடிவு செய்தாள் என்று அவள் மீது ஆத்திரமாக வந்தது. அவளிடம் இனிஒரு போதும் பூ வாங்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பள்ளி மாணவிகள் எதற்கோ சத்தமாகச் சிரிப்பதும் ஒருவரையருவர் வேடிக்கையாக அடித்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ‘40 வயதைத் தொடும்போது உங்களிடமிருந்து சிரிப்பு யாவும் வடிந்து போய்விடும். அதற்குள் சிரிக்கிற மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்’ என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டாள்.

ஜி.சிந்தாமணியின் அலுவலகம் சானிடோரியத்தை ஒட்டியிருந்தது. இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். அன்றைக்கு பேருந்துகளில் கூட்டம் ததும்பிக்கொண்டு வந்தது. அதோடு பேருந்து நிறுத்தத்தை விட்டுத் தள்ளி நிறுத்தினார்கள். அவள் ஓடிப்போய் ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. பெருமூச்சு வாங்க அவள் நின்றபோது, பிறந்த நாளும் அதுவுமாக ஏன்தான் இப்படி உயிரைக் கொடுத்து ஓடுகிறோமோ என்று வருத்தம் கொப்பளித்தது.

பிரமாண்டமாக சிதறிக்கிடக்கும் இந்த நகரம், அதன் லட்சக்கணக்கான மக்கள், இரக்கமில்லாத சூரியன், நெருக் கடியான சாலைகள், எவரையும் அர வணைத்துக்கொள்ளாத கடல், புகையும் தூசியும் படிந்துபோய் காற்றில்லாமல் நிற்கும் மரங்கள் என எல்லாவற்றின் மீதும் கோபம் பொங் கியது. தனக்குத்தானே அவள் எதையோ பேசிக்கொண்டு இருப்பதை அருகில் இருந்த பெண்கள் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வெயில் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டு இருந்தது. முன்பாவது அவள் குடை வைத்திருந்தாள். அதை கல்லூரிக்கு செல்லும் மகள் கொண்டு போக துவங்கியபிறகு புதிதாக குடை கூட வாங்கத் தோன்றவில்லை.

ஒவ்வொரு பேருந்தாகக் கடந்து சென்றபடியே இருந்தது. மணி 9:20-ஐ தாண்டியது. அலுவலகம் போய்ச் சேர் வதற்குள் மணி பத்தரை ஆகிவிடும் போலிருந்தது. இன்றைக்கு ஏலச்சீட்டு விடும் நாள் வேறு. அவள் சீட்டு பிடிக்கிறவள் என்பதால், அதை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிடும்.

சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை ஒரு பசு தின்றுகொண்டு இருந்தது. போஸ்டர் தின்னும் பசுவின் பாலைத்தான் நாம் குடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சிறு ஆத்திரம் முளைவிட்டு எழுந்து, மறுநிமிஷமே அடங்கியது.

ஷேர் ஆட்டோ வந்து நின்றது. ஜி.சிந்தாமணி அதற்குள் தன்னைத் திணித்துக்கொண்டபோது மூச்சு முட்டியது. ஆட்டோவினுள் ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரோடு ஒருவர் நெருங்கி, அடைந்து கிடந் தார்கள். அந்த முகங்களில் நிம்மதி இல்லை.

ஆட்டோ சம்ஸ்கிருத கல்லூரியைக் கடந்தபோது, ‘எதற்காக நான் அலுவலகம் போகவேண்டும்? ஏன் இப்படிப் பறந்து பறந்து வேலை செய்யவேண்டும்? யாருக்குப் பயந்து இப்படி அல்லாடவேண்டும்?’ என்று தோன்றியது. அந்தக் கேள்விகள் அவளுக்குள் நீருற்று போல வேகத் தோடு பொங்கி வழியத்தொடங்கின.ஏதோ முடிவு செய்தவளைப் போல, லஸ் கார்னரில் ஆட்டோ நின்றபோது இறங்கிக்கொண்டாள்.

சாலையைக் கடந்து எதிர் திசைக்கு வந்தபோது, மனது சிக்கலில் இருந்து விடுபட்டது போன்ற நிம்மதி அடைய துவங்கியது. என்ன செய்வது என்று யோசித்தாள். முதலில் ஒரு பூக்காரி யிடம் மஞ்சள் ரோஜாவாகப் பார்த்து வாங்கவேண்டும் என்று தோன்றியது.அவள் தன் ஹேண்ட் பேகை திறந்து பார்த்தாள். சீட்டுப் பணம் ரூ.2000 இருந்தது. ஒன்று போல உள்ள இரண்டு மஞ்சள் ரோஜாக்களை வாங்கிக் கூந்தலில் சொருகிக்கொண் டாள். பிறகு, தன் வட்டக்கண்ணா டியை எடுத்து முகம் பார்த்துக்கொண் டாள். அந்த ரோஜா அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மெல்லிய வெட்கம் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.

p138a.jpg ஏதாவது ஓட்டலில் போய் இனிப்பு சாப்பிடவேண்டும் போல் இருந்தது. ஆட்டோவில் ஏறிக் கொண்டு, பெங்கால் ஸ்வீட்ஸ் விற்கும் கடைக்குப் போகச் சொன்னாள். கடை முழுவதும் குளிர்சாதனம் செய்யப் பட்டிருந்தது. காலை வேளை என்ப தால் ஆட்கள் அதிகம் இல்லை. அவள் ரசகுல்லா, குலோப் ஜாமூன் என நான்கு விதமான இனிப்பு சாப் பிட்டாள். பில் கொடுக்கும்போது, கடையில் இருந்த வயதானவங்காளியிடம் தனக்கு இன்று பிறந்தநாள் என்று சொன்னாள். அவர் மௌனமாகத் தலையாட்டியபடியே மீதிச் சில்லறையைக் கொடுத்தார்.

வெளியே வந்தபோது, சாலையில் வெயில் ஒரு சினைப்பாம்பு போலத் திணறியபடியே ஊர்ந்துகொண்டு இருந்தது. அவள் ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தாள். கடைக்குச் சென்று, பெரிய ஃப்ரேம் வைத்த கறுப்புக் கண்ணாடி ஒன்றை 200 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவளுக்கு வேடிக் கையாக இருந்தது.

திடீரென உலகம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு சாந்தம்கொண்டது போலிருந்தது. ஸ்பென்சருக்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். அவள் தன் மகளோடு ஸ்பென்சருக்கு சென்றிருக்கி றாள். ஆனால், தனியே இது போன்ற இடங்களுக்குப் போனதில்லை.

ஸ்பென்சரில் போய் இறங்கியபோது, உள்ளே இருபது வயதைத் தொட்டும் தொடாமலும் உள்ள இளைஞர்கள் ஆண் பெண் பேதமின்றி ஆங்காங்கே நிரம்பியிருந்தார்கள். இவ்வளவு பேர் இங்கே என்ன வாங்குவார்கள் என்று யோசனையாக இருந்தது.

நீலநிற ஜீன்ஸ் அணிந்த பெண் ஒரு இளைஞனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, மறுகையால் அவன் முகத்தைத் தடவியபடி நடந்துபோய்க்கொண்டு இருந்தாள். ஆங்காங்கே இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

தான் வாழ்வில் ஒரு முறைகூட இதுபோலப் பொதுஇடங்களில் கணவனோடு கை கோத்து வந்ததில்லை; ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றுக் கடந்து போய்விட்டது! 17வய தில் கல்யாணம் நடந்தது.அப்போதும் சிந்தாமணி வேலைக்குப் போய்க்கொண்டு தான் இருந்தாள். திருமணத் துக்காக ஐந்து நாள் லீவு கொடுத் தார்கள். அந்த ஐந்து நாட் களும் அவள் உறவினர்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போனதும், ஒரேயரு சினிமா வுக்குப் போனதும் மட்டுமே நடந்தது.

திருமணமான மூன்றாம் மாதமே அவள் சூல்கொண்டு விட்டாள். அதன் பிறகு எங்கேயும் போகவே முடிந்ததில்லை. அடுத்த வருஷம் ஒரு பையன், அதன் இரண்டு வருஷம் தள்ளி ஒரு பெண் என்று மாறி மாறி குழந்தைப் பேறு. வைத்தியம், வீடு, வேலை தவிர, அவள் இந்த யுவதிகள் போல ஐஸ்க்ரீமை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துச் சாப்பிடுவதை அறிந்ததே கிடையாது.

 

சிந்தாமணி மிகப்பெரிய ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கிக்கொண்டு, தனியே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். ஐஸ்க்ரீமை உதட்டின் நுனியில் வைத்து சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். இந்த ஐஸ்க்ரீம் கரைந்துபோவது போல தன் வயதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விடக்கூடாதா என்று தோன்றியது.

15 வயதில் அவளைப் பார்த் தவர்கள், அவள் நடிகை தேவிகாவைப் போலவே இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்கு தேவிகா வின் நினைவு வந்தது. ‘நீலவானம்’ படத்தில் தேவிகா இப்படியரு கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஓலைத் தொப்பியும் அணிந்திருப்பாள். அவள் சிரிப்பது தன்னைப் போலத்தான் இருக்கிறது. அதை யார் ஒப்புக்கொள்ளாவிட் டாலும் கவலை இல்லை என்று தோன்றியது. தனது ஹேண்ட் பேகில் இருந்த வட்டக் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்துக்கொண் டாள். முகத்தின் ஊடாக எங்கோ தேவிகாவின் சாயல் ஒளிந்துகொண்டிருப்பது போலி ருந்தது.

தான் இப்படிக் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்போல் இருந்தது. அதோடு, எதற்காகவோ தான் சத்தமாகச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. இது போன்ற வணிகவளாகங்களில் எங்கு பார்த்தாலும் சிரிப்பு சிந்திக்கிடக்கின்றது. ஆனாலும், தன் வயதுடைய பெண்களில் எவரும் சிரிக்கிறார்களா என்று ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். அவள் மேஜையைச் சுத்தம் செய்ய வந்த பையனிடம் இன்று தனக்குப் பிறந்தநாள் என்று சொன் னாள். அவன் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

எழுந்து லிப்டில் ஏறி, மூன்றாவது தளத்துக்குச் சென்றாள். விரல் நகங்களுக்கு பூசும் மினுமினுப்பாக பச்சையும் ஜிகினாவும் கலந்த நெயில்பாலீஷ் ஒன்றை வாங்கி பூசிக் கொண்டாள். பினாயில் வாசம் வீசும் பாத்ரூமின் மிகப் பெரிய கண்ணாடி முன் நின்றபடியே தன்னைத்தானே பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

வயது அன்று ஒரு நாள் மட்டும் அவளிடமிருந்து பின்திரும்பிப் போய்க்கொண்டு இருந்தது போலிருந்தது. அவள் சிரிப்பை அடக்கமுடியாமல் கர்சீப்பால் வாயைப் பொத்தியபடி வெளியே வந்தாள். தனது டிபன்பாக்ஸில் இருந்த சாப்பாட்டை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு காலி டிபன்பாக்ஸை பையில் போட்டுக்கொண்டாள். நாள் முழுவதும் அப்படியே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

திடீரென இந்த நகரம் அவளுக்கு மிகப் புதிதாக தெரிந்தது. தான் இதுவரை பார்த்திராத கட்டடங் களும் கார்களும் மனிதர்களும் நிரம்பியதைப் போல் இருந்தது. கால் டாக்ஸியிலும் ஆட்டோவிலு மாக அவள் சுற்றி அலைந்தபடியே இருந்தாள். தனக்கு இந்த நகரில் வீடில்லை. குடும்பமில்லை. தெரிந்த மனிதர்கள்கூட யாருமில்லை. தான் தனியாள், தன் பெயர் தேவிகா என்று சொல்லிக்கொண் டாள். அன்றைய பகல் முழுவதும் திரையரங்கம், உணவகம், ஜவுளிக் கடைகள் என்று அலைந்து திரிந் தாள்.

மாலையில் அவள் கடற்கரையைக் கடந்தபோது, ஆயிரமாயிரம் கால்கள் தழுவிச் சென்றபோதும் கடல் தனிமையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அலுவலகம் முடிந்து ஆட்கள் வீடு திரும்பும் நேரத்தில், அன்றைய நாள் முடிந்து கொண்டு இருப்பது அவளுக்குள் புகையைப் போல ஒரு மெல்லிய வேதனையை வளர்க்கத் துவங்கியது. இன்றைக்கு ஏல நாள்; தன்னை எதிர்பார்த்துக்கொண்டு ஆட்கள் காத்திருப்பார்கள் என்று தோன்றியது. மறுநிமிஷமே அது தனக்கில்லை; ஜி.சிந்தாமணிக்கு! தான் தேவிகா என்று அவளாகவே சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.

இரவில் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே நகரின் வீதிகளில் நடந்துகொண்டிருந்தாள். இரானி டீக்கடையில் அமர்ந்து சமோசாவும் டீயும் குடித்தாள். புதிதாக ஒரு செருப்பு வாங்கிக் கொண்டாள். யோசிக்கும்போது, அவளுக்கு தன்னிடம் ஆசைகள்கூட அதிகம் இல்லை என்று தோன்றியது.

சாலையைக் கடந்தபோது காய்கறிக் காரன் ஒருவன் அப்போதுதான் பறித்து வந்தது போன்ற கேரட்டுகளை குவித்துப் போட்டு விற்றுக்கொண்டு இருந்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகலாமா என்று நினைத்தாள். திருமணமான இந்த 22 வருஷத்தில் எவ்வளவு காய்கறிகள் வாங்கிவிட்டோம்! இனியும் எதற்காக வாங்கவேண்டும் என்று எரிச்சலாக வந்தது. ஒரேயரு கேரட்டை மட்டும் காசு கொடுத்து வாங்கிக் கடித்துத் தின்றபடியே, சாலையைக் கடந்து நடக்கத் தொடங்கினாள்.

சாலையோரம் ஒரு ஆள் ரப்பர் பந்துகள், பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தான். அவன் முன்னால் நாலைந்து பேர் தரையில் கொட்டிக்கிடந்த பொருட்களில் தேடி ஏதோ வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சிந்தாமணி குனிந்து தானும் ஒரு தண்ணீர்த் துப்பாக்கி வாங்கிக் கொண்டாள். அதில் எப்படி தண்ணீர் ஊற்றுவது என்று கேட்டதும், பொம்மை வியாபாரி தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த கலங்கிய தண்ணீரை அதில் ஊற்றி அடித்துக் காட்டினான். அவள் அதைக் கையில் வாங்கி சாலையை நோக்கித் துப்பாக்கி விசையை அமுக்கினாள். தண்ணீர் சாலையில் நெளிந்து போனது அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

மணிக்கூண்டை நெருங்கும் போது, மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. பேருந்து நிலையத் தில் யாருமே இல்லை. ஒரேயரு பிச்சைக்காரன் மட்டும் தனியே ஏதோ கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டு இருந்தான். அவள் தன் வீட்டை நோக்கி நடந்து வர துவங்கியபோது நடை வேகம் கொள்ளத் துவங்கியது. எங்கிருந்தோ மறைந்திருந்து வயது தன்மீது தாவி ஏறிக் கொண்டது போலிருந்தது. அவள் தன்னிடமிருந்த கறுப்புக் கண்ணாடி மற்றும் நெயில் பாலீஷை என்ன செய்வது என்று தெரியாமல், இருட்டில் தூக்கி எறிந்தாள். அவள் வீடு இருந்த சந்தில் தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டு இருந்தது.

தன்னிடமிருந்த தண்ணீர்த் துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு அவள் முகத்தில் வழிந்தது. ஒரு நிமிஷம் தன்னை மறந்து நின்றபடியே அழத் தொடங்கினாள். அன்றைக்குத் தனது பிறந்த நாள் என்பதை நினைத்து, கேவிக் கேவி அழுதாள். பிறகு, ஆத்திரத்தோடு அந்தத் துப்பாக்கியை குப்பைத் தொட்டியை நோக்கி வீசினாள்.

கடகடவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீடு பூட்டிக்கிடந்தது. உள்ளே தொலைகாட்சி ஓடும் சத்தம் கேட்டது. காலிங்பெல்லை அமுக்கும்போது, ஒரு முறை அவளை அறியாமல் தேவிகா வின் நினைவு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் ஜி.சிந்தாமணி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.

கதவு திறந்து, வீடு எந்த மாற்றமும் இல்லாமல் அவளை உள்வாங்கிக் கொண்டது.

https://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this