Sign in to follow this  
நவீனன்

ஒரே ஒரு பாடல்

Recommended Posts

ஒரே ஒரு பாடல்

 

ட்ராஃபிக் நெரிசல் பிதுங்கலிலிருந்து வெளிவந்து இடப்புறம் மரங்கள் சூழ்ந்த குறுக்குத் தெருவில் திரும்பி ரோஸ் அவென்யூவில் மனோகர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினான் நந்து. வீட்டின் மாடியிலிருந்து மென்மையாய் ‘அனுராகினீ... இதா என் கரளில் விரிஞ்ஞ பூக்கள்...’ என்று ஸ்பீக்கரில் வழிந்த குரல் படிகளில் இறங்கி வந்து அவன் கையைப் பிடித்து இழுத்தது. அதனுடன் சேர்ந்து பாடும் மனோகரின் குரலும்.
14.jpg
சரிதான். மனோகர் இசை மயக்கத்தில் திளைத்திருக்கிறார் போலும் என்று கேட்டைத் திறந்து ஒரு மலர்ந்த புன்னகையுடன் படியேறினான் நந்து. மாடியை அடைந்து அவரின் வீட்டுக்குள் நுழைந்ததும் சற்றே ஆச்சரியமடைந்தான். நவீன் விஜயனும் அங்கு இருந்தார். அவரை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை அவன். “நீங்க வர்ரீங்கன்னு சொன்னார். பாத்துட்டுக் கிளம்பலாம்னு வெய்ட் பண்ணிட்டிருக்கேன்...” கை குலுக்கி மென்மையாகச் சிரித்தார் நவீன் விஜயன். சென்ற முறை பார்த்ததைவிட கொஞ்சம் இளைத்திருந்தார்.

“ஒரு ராக மாலையாய் இது நின்டே ஜீவனில்...” என்று ஜேசுதாஸ் வெண்ணெய்யில் கத்தியாய் வழுக்கினார். “எப்டியிருக்கீங்க விஜயன்? சமீபத்துல ஏதோ படத்துக்கு ம்யூசிக் பண்ணீங்களா? போஸ்டர்ல பேர் பாத்தேன்...” என்றான் நந்து. “அது வேற விஜயன். நான் நவீன் விஜயன். நாமளும் கூடிய சீக்கிரம் பண்ணீருவோம். இந்த வருஷக் கடைசிக்குள்ள குட் நியூஸ் சொல்றேன்...” என்று சிரித்தார். முந்நூற்றி அறுபத்தைந்து நாளும் உள்ள நம்பிக்கைகள். இதுபோல் நிறைய வருடக் கடைசிகள். தொடரும் போட்டுக் கொண்டேயிருக்கும் முயற்சிகள்.

திரைத்துறையில் நவீன் விஜயன் ஒரு இசையமைப்பாளராகும் முயற்சியில் இருக்கிறார். அவர் கோடம்பாக்கத்துக்கு வந்து பதினைந்து வருடங்களாகிவிட்டன. நாற்திசைகளிலும் அவர் இசை ஒலிக்கப்போகும் அந்த தினத்திற்காக, ஒரு பொழுதிற்காக, அவர் சார்ந்த எல்லோருமே காத்துக் கொண்டிருந்தார்கள். அவரைவிட அதிக நம்பிக்கைகளுடன். வீயெல்ஸி ப்ளேயரில் பாடலின் ஒலி அளவைக் குறைத்துக்கொண்டே ‘‘என்னையும் கொஞ்சம் கண்டுக்குங்க நந்து...” என்றார் மனோகர்.

மனோகரை லேசாய் அணைத்தபடி கைகுலுக்கி பாலிவினைல் சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான் நந்து. “ஜான்ஸன் ம்யூசிக்ல அருமையான பாட்டு!” என்றார் நவீன் விஜயன். “என்ன இன்னிக்கு மலையாளக் கரையோரம் ஒதுங்கிட்டீங்க? இளையராஜா எங்க?” என்றான் நந்து. “நீங்க வர்ர வரைக்கும் அவர்கூடத்தான் இருந்தோம்....” என்றார் மனோகர். மனோகர் அதிதீவிர இசை விரும்பி. தனது கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் வெடித்துவிடும் அளவுக்கு லோக்கல் கானாவிலிருந்து உலக இசை வரை நிரம்பித் தளும்ப சேமித்து வைத்திருப்பவர். மலையாளப் பாடல்களும், மலையாள இலக்கியமும் ரொம்பப் பிடிக்கும் என்பதற்காகவே மலையாளம் கற்றுக்கொண்டவர்.

நண்பர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் அந்த இசையும் இசை சார்ந்த இடத்திலும் நவீன் விஜயன் வந்திருக்கிறார் என்றால் கூடுதல் உற்சாகம் பீறிடும். நிறைய பாடல்களுக்கு அதன் பின்னணியை விளக்குவார். யார் பாடுவது, பாடலை எழுதியது யார், என்ன படம், யார் இசையமைத்தது, சிலசமயம் பாடலின் ராகம் என்ன என்றுகூட சொல்வார். லேசாய்ப் பிசிறடிக்கும் கணீர்க் குரலில் அருமையாகப் பாடுவார். சில சமயம் கரோக்கியைப் போட்டுவிட்டு அவரைப் பாடச் சொல்வார் மனோகர். அவ்வப்போது அங்கே ஒரு பெரிய கச்சேரியே நடக்கும்.

“எப்படிப் போகுது முயற்சிகள்?” என்றான் நவீன் விஜயனைப் பார்த்து. “முயற்சிகள்… முயற்சிகள்.. முயற்சிகள்தான்....” என்று சிரித்தார். நெஞ்சை மெதுவாக நீவிவிட்டுக் கொண்டார். அவர் பேச்சிலும், சிரிப்பிலும் வழக்கமான கலகலப்பின் ஏதோ ஒரு இழை தவறியிருப்பதை லேசாய் உணர்ந்தான் நந்து. மூவரும் அமைதியாக இருந்த ஒரு தருணத்தில் மெதுவாகக் கேட்டான்.

“உடம்பு கிடம்பு சரியில்லையா என்ன?” “இல்ல. என்னமோ ஒரு மாதிரி நெஞ்சாங்கூட்ல அன் ஈஸியா இருக்கு. ஏதோ அடைக்கிற மாதிரி. அதான் வேறொண்ணுமில்ல...’’ அவர் குரலில் சுரத்து குறைந்திருந்தது. முகத்தில் ஆயாச ரேகை வரிகள். “இன்னைக்குத்தான் இப்படியிருக்கா? டாக்டரப் பாருங்களேன்...” ‘‘பாக்கணும்...” நிச்சயமற்றுச் சொல்லிவிட்டு நவீன் விஜயன் முகத்தைச் சுருக்கிக்கொண்டு அநிச்சையாக மேலும் லேசாக நெஞ்சைத் தடவினார்.


“ஈ.ஸி.ஜி. எதுனா எடுத்துப் பாக்கறதுன்னாலும் சரிதான். கொஞ்சம் முன்னெச்சரிக்கைக்கு...” “அதெல்லாம் ஒண்ணும் இருக்காது விஜயன். ஒரு ஈனோ குடிங்க சரியாயிரும்...” என்றார் மனோகர். ‘ஆரேயும் பவ காயகனாக்கும் ஆத்ம சௌந்தர்யமானு நீ...’ என்று அடுத்த பாடல் மனசைக் கிளர்த்த ஆரம்பித்தது. “ஆத்ம சௌந்தர்யம்... அபிலாஷ பூர்ணிமா... ஆயிரம் கண்ணுள்ள தீபம்... ஆரோமலே... இப்டியேதான் எழுதுவாங்க. கேக்கறதுக்கே கொஞ்சம் ஜிவ்வுன்னு இருக்கும். அங்க எப்பவும் கவித்துவம் கொஞ்சம் தூக்கல்தான்...” என்றார் மனோகர்.

நந்துவுக்கு லேசாய்ப் பொறாமையாக இருந்தது. அவன் ஐடி கம்பெனியில் பெட்டி தட்டுபவன். ஈமெயில்களுக்கும், கான்ஃபரன்ஸ் கால்களுக்கும், ப்ரோஜெக்ட் டாகுமெண்டேஷன்களுக்கும் இடையே நேரத்தையும், தேக ஆரோக்கியத்தையும் தொலைப்பவன். பைக்கில் அலுவலகம் போகும்போது ஹெட்ஃபோனில் சினிமாப் பாடல்களை ஹார்ன் அலறல்களுக்கு நடுவே நாற்பது நிமிஷம் கேட்பவன். என்றைக்காவது வேலைப் பளு குறைகிற இடைவெளியில் மனோகரைப் பார்க்க வருவான். எதைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலும் பத்து நிமிடத்தில் பாடல்களுக்கு வந்து நிற்பார்கள். பிறகு ஒரு மணி நேரமோ, அரை நாளோ அங்கே ஆக்ரமிக்கும் இசையில் அவர்களோடு அவனும் தற்காலிகமாகத் தொலைந்து போவான்.

‘நீலக்குறிஞ்ஞிகள் பூக்குந்ந வீதியில் நின்னே ப்ரதீக்‌ஷிச்சு நிந்நு...’ மனோகர் அந்தப் பாடலை சிலாகித்துப் பேசிக்கொண்டிருக்க நந்து ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தான். எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது நவீன் விஜயன் ஜன்னல் வழியே வெறிப்பதைக் கவனித்தான். ‘தூரே தூரே சாஹரம் தேடி போக்குவெயில் பொன்னாலம்...’ ‘ஈரன் மேகம் பூவும் கொண்டு பூஜைக்காய் க்ஷேத்ரத்தில் போகும்போள்...’வரிசைகட்டி வந்த பாடல்களைப் பற்றிய தொடர்ந்த உரையாடல்கள் ஒரு மாதிரியான பரவசத்தைக் கொடுப்பதை உணர்ந்தான் நந்து. ‘‘பரமசுகம்” என்றான்.

ஜன்னலிலிருந்து கவனத்தை விலக்கி அதிக உற்சாகமில்லாத ஒரு புன்னகையைச் சிந்தினார் நவீன் விஜயன். அடுத்த பாடல் ஆரம்பிக்கும்போது நந்து சொன்னான். “கவித்துவம் போதும். கொஞ்சம் எனர்ஜி ஏத்தணும். தமிழுக்குப் போயிரலாம். நீங்க என்ன சொல்றீங்க விஜயன்?” “எதுன்னாலும் ஓகே!” என்றார். அவரிடம் என்னமோ சரியில்லையென்று தோன்றியது நந்துவுக்கு. “இன்னைக்கு இவரு சகஜமாயில்ல. ரொம்ப டல்லா இருக்காரு. என்ன மனோகர் நான் சொல்றது?” “உங்க அளவுக்கு எனக்கு அவ்ளோ துல்லியமா கவனிக்கத் தெரியல. டாக்டர்கிட்டப் போவோம் வர்ரீங்களா விஜயன்?” என்றார் மனோகர்.

வேண்டாம் என்பதுபோல் தலையாட்டினார் நவீன் விஜயன். “அயம் ஆல்ரைட்....” அவர் கண்கள் ‘நான் ஆல்ரைட் இல்லை’ என்றன. அடுத்து இளையராஜாவைப் பிழிந்து இசைத் தேனெடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். அங்கே நிகழும் உரையாடல்களில் நவீன் விஜயன் அதிகம் கலந்துகொள்ளாமல் வெகு அமைதியாக இருந்ததையும் நந்து கவனித்தான். ஒருவர் சகஜ நிலையில் இல்லாதபோது, தான் பாட்டுக்கு கேளிக்கையில் கவனம் செலுத்துவது சரியல்ல என்று தன்னுணர்வு குத்தியது. கிளம்பலாம் என்று தோன்றியது. அதைச் செயல்படுத்தும் பொருட்டு “சரிங்க. நல்ல சந்திப்பு இன்னைக்கு, வேறென்ன செய்திகள்?” என்று சேரிலிருந்து எழுந்து சோம்பல் முறித்தான்.

நவீன் விஜயனும் எழுந்துகொண்டார். “கிளம்பலாம்னு பாக்கறேன்...” என்றார் இவனை முந்திக்கொண்டு. “நானும்கூட...” என்றான் நந்து. “கொஞ்சம் வேலையிருக்கு, போய் கொஞ்சம் மெயில் தட்டிவுடணும். வர்ஜீனியாவுல ஒரு க்ளையண்ட் வெய்ட் பண்ணிட்டிருப்பான்...’’ நந்து விடைபெறும் பொருட்டு நவீன் விஜயனிடம் கைநீட்டினான். “மறுபடி சந்திப்போம். உடம்பப் பாத்துக்கங்க...” நவீன் விஜயன் லேசாய்க் கைகுலுக்கிவிட்டு, “கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு கரோக்கி போட்டுறலாமா? ஒரே ஒரு பாட்டு...” என்றார்.

மனோகர் “ஆஹா.. கண்டிப்பா...’’ என்று உடனே கம்ப்யூட்டரில் கரோக்கி ட்ராக்குகளை மவுசால் நிரட ஆரம்பித்தார். நவீன் விஜயன் அவர் பின்னால் போய் நின்று திரையைப் பார்த்து ‘இதப் போடுங்க...’ என்று ஒரு பாடலைச் சுட்டினார். அடுத்த நொடி அந்தப் பாடலுக்கான இசை மட்டும் உயிர்பெற்று ஸ்பீக்கர்களில் கசிய நவீன் விஜயன் கண்களை மூடிக்கொண்டு பாட ஆரம்பித்தார்.

“மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு... கேக்குதா கேக்குதா...” நவீன் விஜயனின் கணீர் குரல் வீட்டின் சதுர அடிகளை நிரப்ப, லேசான தலையாட்டலுடன் மௌனமாய்க் கேட்க ஆரம்பித்தார்கள் நந்துவும் மனோகரும். நவீன் விஜயன் பாடும்போது அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான் நந்து. வந்தது முதல் அதிக களையில்லாமல் காணப்பட்ட அவர் கிளம்பும்போது திடீர் உற்சாகத்துடன் பாட ஆரம்பித்தது ஆச்சரியத்தைத் தந்தது அவனுக்கு. நல்லதுதான் என்று நினைத்தான்.

இடையிசை முடிந்து முதல் சரணம் ஆரம்பம். “குத்தாலத்துத் தேனருவி சித்தாடைதான் கட்டாதோ…” இந்த வரியைப் பாடும்போது நவீன் விஜயனின் குரல் தடுமாறி பாடலினிடையே தொண்டைக்குழியில் ‘க்’ என்று இடறிய ஒரு மிக லேசான சோக விம்மலை விழுங்கப்பார்த்த மாதிரியும், அதைச் சமாளித்து வார்த்தைகளை அதன் போக்கில் ராகமாக வெளிப்படுத்தியமாதிரியும் இருந்தது.

ஒரு நொடிதான். நந்து அதைக் கவனித்துவிட்டான். அவர் மூக்கு விடைத்துச் சுருங்கியது. பாடல் தொடர்ந்தது. பல்லவி, இடையிசை, இரண்டாவது சரணம். மீண்டும் பல்லவி. பாடி முடித்ததும் நவீன் விஜயனின் கண்கள் லேசாய்ப் பனித்திருந்ததை இருவருமே கவனித்தார்கள். ஏதோ ஒரு வேதனையை, மன பாரத்தை மறைக்கச் செய்யப்பட்ட பிரயத்தனம். ஒரே ஒரு பாடலின் மூலம் கண்ணின் ஈரப் பளபளப்பாகவும், குரல் கமறலாகவும் கசிந்து வெளியே தெறித்துவிட்டது என்று தோன்றியது நந்துவுக்கு.

அவன் மனோகரை ஏறிட்டான். அவரும் அதை லேசாக உணர்ந்த மாதிரி ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையால் இவனை நோக்கினார். “அருமை...” என்றான் நந்து. “இன்னொரு பாட்டு?’’ என்று கேட்டார் மனோகர். “தேங்க்ஸ். போதும். இன்னொரு நாள் கண்டின்யூ பண்ணலாம்...” நிர்மலமாகச் சிரித்தார் நவீன் விஜயன். திடீரென்று ஏதோ ஒரு பிரகாசம் வந்து கவிந்ததுபோல் அவர் முகம் ஒளிர்ந்தது. டேபிளிலிருந்து தன் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டார். பிறகு லேசாக நெஞ்சைத் தடவியபடி சொன்னார். “இப்ப சரியாயிடுச்சு, கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு...”
 

 

http://www.kungumam.co.in

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this