Jump to content

பிறை நிலா


Recommended Posts

பிறை நிலா
 
சிறுகதை
 
Bild könnte enthalten: 1 Person, Text
 

பிறை நிலா
நியதி வரதன்

காலை நேர பரபரப்பில் பம்பரம் போல் சுற்றி கொண்டிருந்தாள் வித்யா .இன்னும் பதினைந்து நிமிடத்தல் மகனின் பள்ளி வாகனம் வந்து விடும் அதற்குள் அவனை தயார் படுத்த வேண்டும் .மகனை ஒருவழியாக வாகனத்தில் ஏற்றி விட்டு ,கணவனை அலுவலகத்திற்கு அனுப்பி விட்டு சற்று ஓய்வாக இருக்கையில் மணி எட்டு என்பதை காட்ட அவள் பரபரப்பு இன்னும் அதிகமானது .

சட்டென்று ஒரு குளியலை போட்டு விட்டு கைக்கு கிடைத்த புடவையை கட்டினால் போதும் என்பது போல் உடுத்தி விட்டு ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள் .சாலை நெரிசல் இல்லையென்றால்
அவள் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பதினைந்தே நிமிடத்தில் சென்று விடலாம் ஆனால் நகரை பொருத்தவரையில் காலை நேர போக்கு வரத்து நெரிசலுக்கு அது சாத்தியம் இல்லாத ஒன்று .அதனால் சற்று முன்பாக கிளம்பி விடுவாள் .

பேருந்து நெரிசலில் சிக்கி அலுவலகம் போய் சேருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும் அவளுக்கு.அன்று அதிசயமாக ஜன்னலோர இருக்கை கிடைத்தது.ஒரு காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சி தந்திருக்கும் இந்த ஜன்னலோர இருக்கை.அதில் அமர்ந்து பேருந்தில் ஒலிக்கும் பாடலை கேட்டவாறு வெளிப்புறத்தல் நகரும் காட்சிகளை ரசித்தவாறே செல்வது அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

ஆனால் இப்போது அப்படி இல்லை ஏதோ "இருப்பதுக்கு ஒரு இடம் கிடைத்து விட்டதே"என்பது போன்றே இருந்தது.பேருந்தில் ஒலிக்கும் பாடல் கூட அவளுக்கு தலைவலியை தான் தந்தது."அலுவலகம் வந்து போக ஒரு பைக் வாங்கிகொள்"என அவள் தோழி நிலா சொல்வது அப்பொழுது தான் நினைவுக்கு வரும்.ஆனால் அவள் கணவர் அது பாதுகாப்பு இல்லையென மறுத்து விட்டார்.

 அம்மா அப்பாவிடம் அடம்பிடத்து வாங்கிய பைக் இப்போது தங்கை ஓட்டி திரிகிறாள் . அந்த அடம் பிடிக்கும் குணம் இப்பாது எங்கே போனதென்றே தெரியவில்லை. அன்றாட வாழ்வின் அழுத்தம் ,பொருப்பு அவளை மாற்றி விட்டது என்றே சொல்லலாம்.

அலுவலகம் சென்று அவள் இருக்கையில் அமர்கையில் ,நிலா சிரித்த முகத்துடன் அன்று தான் மலர்ந்த மலர் போல அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தாள். என்னதான் தோழியாக இருந்தாலும் நிலாவை காணும் போது சற்று பொறாமை ஏற்படுவதை வித்யாவால் தவிர்க்க முடியவில்லை.

அவள் உடுத்தும் உடை .அணியும் நகை என அணைத்தும் ரசிக்கும் படி தான் இருக்கும் . அவளுக்கு நிலா என்று பெயர் வைத்ததில் தவறே இல்லை. அவ்வளவு பிரகாசம் அவள் முகத்தில்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தான் நிலா இந்த அலுவலகத்தில் சேர்ந்தாள். அவள் சேர்ந்த புதிதில் ,ஆண்களிடம் சகஜமாக பழகும் விதமும் . அவள் உடுத்தும் ஆடையும் அவள் மேல் தவறான அபிப்ராயத்தையே பெரும்பாலானோருக்கு ஏற்படுத்தியது .

ஆரம்பத்தில் திருமணம் ஆகாதவள் என்றே அனைவரும் எண்ணினர் . திருமணம் ஆனதிற்கான எந்த வித அறிகுறியும் அவள் இடத்தில் இல்லை . என்னதான் நாகரீக பெண்ணாக இருந்தாலும் ஒரு மெட்டியாவது அணியலாமே என பலரும் சலித்து கொண்டனர். கணவர் வெளிநாட்டில் என்பதால் எவ்வளவு சுதந்திரம் இவளுக்கு என தங்களது பொறாமையை பல பெண்கள் வெளிப்படையாகவே வெளிகாட்டினர்.

வித்யாவிற்கும் இவ்வாறான எண்ணங்கள் வராமல் இல்லை . அதனால் நிலாவுடன் பேசவோ பழகவோ முன்வரவே இல்லை அவள். ஒரு நாள் வித்யாவின் கணவருக்கு வாகன விபத்தில் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்க பட்ட வேளையில் நிலா தான் தானாக முன் வந்து பண உதவி மட்டுமின்றி இதர உதவிகளையும் வித்யா கூடவே இருந்து செய்து கொடுத்தாள். அதன்பிறகே வித்யா ,நிலாவை தன் தோழியாக ஏற்று கொண்டாள். அவளுடன் பழகிய பின் நாட்களில் நிலாவின் குணம் அவளுக்கு மிகவும் பிடித்து போனது .

கள்ளம் ,கபடமில்லாத குழந்தை மனம் நிலாவின் மனம் என அறிந்த பிறகு அந்த ஆங்கில வரிகள் அவள் கண் முன் வந்தன" don't judge a book by its cover "
ஒரு நாள் மதிய இடைவேளையில் வித்யா பேச்சு வாக்கில் " எப்போ குழந்தை பெத்துக்குற போற"என்றதுக்கு"இப்ப என்ன அவசரம் அதுக்கு கொஞ்ச நாள் ஃப்ரீயா இருந்துட்டு போறனே"என்பாள் . மிஞ்சி போனால் வித்யாவை விட இரண்டு வயது தான் குறைவாக இருப்பாள் . இரண்டு வருடங்களுக்கு முதல் ஐந்து வயது மகனுக்கு தாய் வித்யா . சில நேரம் நிலாவின் வாழ்க்கையை கண்டு பெருமூச்சு விட்டு கொள்வாள் வித்யா .

கணவர் வெளிநாட்டில் . எந்த வித கட்டுப்பாடும் இல்லை.பணத்திலும் குறைவில்லை. அழகை ஆண்டவன் அள்ளி கொடுத்திருக்கிறான். புகுந்த வீட்டு பிரச்சனை இல்லை."மாமியாரா? அவங்க எனக்கு அம்மா மாதிரி" என்பாள் அடிக்கடி.
வித்யாவிற்கு திருமணம் முடிந்து மூன்றாம் மாதத்திலேயே அவளின் மாமியார் "என்னம்மா,ஏதும் விசேஷமா"என கேட்க தொடங்கி விட்டாள்.

குழந்தை பிறந்து ,ஒருவருடம் கழித்து வேலைக்கு போக தொடங்கி விட்டாள் .அலுவலக வேலை ,வீட்டு வேளை என சுற்றி தன்னை கவனிக்க மறந்து போனாள். அதன் விளைவு அவளின் தோற்றம் கலையிழந்து போனது.நிலா அவ்வப்போது எதாவது அழகு குறிப்பு அவளிடம் சொல்லுவாள் .அதையெல்லாம் செய்ய ஏது நேரம்.
நிலாவை பார்க்கும் போது "கடவுள் ஒரு சிலருக்கு மட்டுமே இப்படி ஒரு வாழ்க்ககையை தருகிறார் . கொடுத்து வைத்தவள் என மனதிற்குள்ளே எண்ணி கொள்வாள்.

இரண்டு நாட்களாக நிலா அலுவலகத்திற்கு வரவில்லை. அலைபேசியிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. உடம்பு சரியில்லை என்றே விடுப்புக்கான காரணத்தை மேலதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். நேரில் சென்று பார்த்து விட்டு வருவோம் என அவள் வீட்டிற்கு சென்றாள் வித்யா.

முகவரி தெரியுமமே தவிர இன்று தான் முதன் முறையாக வீட்டிற்கு வருகிறாள். காலிங் பெல்லை அடித்தவுடன் சற்று தாமதத்திற்கு பிறகே கதவு திறக்கப்பட்டது . அங்கு ஐம்பது வயது மதிக்க தக்க பெண்மணி நின்றிருந்தார். நிலாவின் அம்மாவாக தான் இருக்க வேண்டும் . அவளின் சாயல் இருந்தது. ஆனால் நிலாவை போன்ற பிராகசம் இல்லை . சோகம் பதிந்த முகம் அது.கண்களில் ஒளி இல்லை . அழுது கருமை படிந்த கண்கள் அவை.
யார் என்பது போலிருந்தது அவள் முகபாவனை

"நான் வித்யா ,நிலா வீடு இது தானே? "
"ஓ,வித்யாவா உள்ள வா! நிலா உன்னை பத்தி சொல்லிருக்கா ,நானே உன்னை பார்க்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்"அவள் சொல்லி முடிப்பதற்குள் அறையிலிருந்து அவசரமாக வெளியே வந்த நிலா"ஹேய் வித்யா , உள்ளே வா ,உட்கார்,அம்மா வித்யா வுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வாங்க"

"என்ன பேச விட மாட்டியே"என்றபடி சமையலறைக்கு போனாள் நிலாவின் அம்மா சாந்தி.
"ஏன் ,உடம்புக்கு என்னாச்சு , ?""ஒன்னுமில்லை ஃபீவர் தான் .மாத்திரை எடுத்திட்டு இருக்கேன் சரியாகிவிடும்"
"ஏன் ஃபோன் ஷ்விச் ஆஃப் ல இருக்கு எத்தனை தடவை உன்க்கு ட்ரை பன்னினேன் தெரியுமா ?"
"ஹேய் ,'சாரி 'வித்யா ,ஃபோன் கால் வந்துட்டே இருந்துது என்னால ரெஸ்ட் எடுக்க முடியல அதான் ஆஃப் பன்னிட்டேன்"

"உன் வீட்டுக்கார் எப்படி ஃபோன் எடுப்பார்"?
ஆ...அது.. அதான் வீட்ல லான்ட்லைன் இருக்குல்ல அதுக்கு கால் பண்ணுவார் "குரலில் தடுமாற்றம்
"என்ன நிலா முகமெல்லாம் வாட்டமா இருக்கு . கண்ணெல்லாம் வீங்கி ,சிவந்திருக்கு ,ஆர் யு ஓ.கே ?"
"காய்ச்சலால் அப்படி இருக்கு .நைட் ஒழுங்க தூங்கல அதான் கண் சிவந்திருக்கு "

"ஏன் பொய்க்கு மேல பொய்யா சொல்ற ,அவ உன் தோழி தானே உண்மையதான் சொல்லேன் . யார்கிட்டையும் சொல்லாம மனசுக்குள்ளயே வச்சு ஏன் அழுற,யார் கிட்டாயாவது சொன்னா தான் மன பாரம் தீரும்,இப்படியே இருந்த உன்னை பார்த்து பார்த்து மனசு தாங்காம நான் சீக்கிரம் போய் சேர்ந்திடுவேன்"அழுகையும் கோபமும் கலந்திருந்தது சாந்தியின் குரலில்.

வித்யாவிற்கு ஒன்றுமே புரியவில்லை .நிலாவன் வாழ்வில் ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெளிவாக புரிந்தது.
நிலா மௌனமானாள். கண்களில் நீர் அணையை உடைத்த வெள்ளம் போல் ஓடிகொண்டிருந்தது . நிலாவை அப்படி ஒரு கோலத்தில் அவள் பார்த்ததே இல்லை. என்னசெய்வதென்றே தெரியவில்லை வித்யாவிற்கு.

"என்ன பிரச்சனை நிலா,விரும்பினா எங்கிட்ட சொல்லு ,என்னால எதாவது செய்ய முடியுமானு பார்கிறேன் . ப்ளீஷ் அழாத" "எழுந்து உள்ளே போனவள் வரும் போது கையில் சில புகைபடங்கள்
"இவர் தான் என் முதல் கணவர் "
'முதல் கணவரா'அப்படி என்றால் ...
அவள் காட்டிய புகைப்படம் அவள் திருமணத்தன்று எடுக்கப்பட்டது போலும்.நிலா இதில் இன்னும் அழகாக இருந்தாள். அவளுக்கு பொருத்தமே இல்லாத கணவர் . எப்படி இவள் சம்மதித்தாள் ?

நான் கல்லூரி படிப்பை முடிச்சது லண்டனில் தான் "லண்டனா ?வாயடைத்து போனால் வித்யா .
"அங்க படிக்கும் போது நிறைய பேர் எங்கிட்ட ப்ரபோஷ் பண்ணினாங்க ஆனால் யாரையும் எனக்கு கல்யாணம் பன்ற அளவுக்கு பிடிக்கல . அவங்க கிட்ட நான் எதிர் பார்த்த காதல் இல்லை.நான் எதிர் பார்த்தது என் அப்பா என்னோட அம்மா மேல வச்சிருந்த காதல் மாதிரியான ஒரு காதலை தான் . அப்பா ,அம்மா காதலிச்சு தான் திருமணம் செய்து கொண்டார்கள் . அம்மா வசதியான வீட்டு பெண் ,அப்பா அவங்க வீட்டு கார் ட்ரைவர் ,அம்மாவை திருமணம் முடிச்ச பிறகு எல்லாரும் ஒதுக்கினாலும் அவரோட சொந்த உழைப்பால இரவு பகலா உழைச்சு ட்ராவல்ஸ் நடத்தி முன்னேறினார்.

அம்மாவ ராணி மாதிரி பார்த்தார்.அவரை பார்க்கும் போது தான் நினைப்பேன் எனக்கு வர போர கணவர் காசு பணம் இல்லைனாலும் அன்பா இருந்தா போதும்னுாஅம்மா அப்பா கிட்ட சொல்லிட்டேன் எனக்கு பண வசதி இருக்கிற மாப்பிள்ளளைதான் வேணும்னு இல்லை அன்பா ,நல்ல பையனா இருந்தா போதும்னு. அழகு ,பணம் நிறைந்த நிறைய பேர பார்த்திருக்கிறேன் ஆனால் நான் எதிர் பார்த்த அந்த மனசு இல்லை.

நான் இந்த கால பெண்ணா இருந்தாலும் என் எதிர் பார்ப்பு பழைய கால கணவன் ,மனைவி மாதிரியான ஒரு குடும்ப வாழ்க்கையை தான் . சொந்ததிலே ஒரு பையன் இருக்கிறதா சொல்லி இவரை பார்த்தாங்க அழகு இல்லனைாலும் நல்ல மனசு இருக்கும்னு நம்பினேன் . ஊர்ல எல்லாரும் அவரை பத்தி சிறப்பாதான் சொன்னாங்க. சந்ததோஷமாதான் கல்யாணம் பண்ணினேன்.

அப்பறம் தான் தெரிய வந்தது அவனுக்கு என் மனசு மேல காதல் இல்லை என் அழகு மேல் தான் காதல்னு. குழந்தை பிறந்தா அழகு போய்விடும்னு குழந்தை இப்போதைக்கு வேணாம்னு தள்ளி போட சொல்லிட்டான் . அவன் அழகு இல்லைன்ற தாழ்வு மனபான்மையை என் மூலமா தீர்த்து கொள்ள நினைச்சான். மத்தவங்க கிட்ட என்னை அறிமுகம் படுத்தும் போது அவ்ளோ பெருமிதம் அவன் முகத்தில இருக்கும்.அழகை ஆராதித்தவன் போக போக அதவைத்தே சந்தேக பட ஆரம்பித்து விட்டான் .

நான் எங்கேயும் போக கூடாது ,யாரோடும் பேச கூடாது . நல்லதா உடுத்த கூடாதுனு நிறைய கட்டுபாடு. சந்தேகம் எல்லை தாண்டி போய்விட்டது . மறுத்து பேசினால் அடி ,உதை. இப்படி ஒரு வாழ்க்கை தேவை இல்லை என்று விவாகரத்து செய்து அம்மா ,அப்பா கூட இருந்தேன். ஒரு நாள் அப்பாவும் மாரடைப்புல இறந்திட்டார்
கல்யாணத்தில இருந்த நம்பிக்கையே போய்டுச்சு. அம்மா ,கட்டாயபடுத்தி அடுத்து ஒரு கல்யாணம் பண்ணி வச்சாங்க .

அவங்க சந்தோஷத்திற்காக பண்ணிகிட்டேன். நல்லாதான் பாத்துகிட்டான் . எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனதுக்கு அப்பறம் அவங்க அம்மா பேச்சை கேட்டு கேட்டு என் மேல வெறுப்பு வர ஆரம்பிடுச்சு. எவ்ளவோ ட்ரீட்மெண்ட் பார்த்தும் சரிவரல. என்னோட பணத்திற்காக என்னோடு குடும்பம் நடத்திட்டு இருந்தான். சொத்தை எல்லாம் அவன் பேர்ல மாத்தி தர சொல்லி தொல்லை பண்ணினான் . நான் மறுக்க கடைசியில என்னை வேணாம்னு விவாகரத்து நோட்டீஷ் அனுப்பிட்டான். அதான் மன ஆறுதலுக்கு இந்த ஊருக்கு வந்து ,வேலை பாத்திட்டு இருக்கனே
இவ்ளோ சோகத்தையும் தாங்கிட்டு எப்டி நிலா இப்டி இருக்க?

"வேற எப்டி இருக்க சொல்ற வித்யா .என் சோகத்தை எல்லார்டையும் சொல்லி அழ சொல்றியா? மத்தவங்க பரிதாப படுறது எனக்கு பிடிக்காது. நான் சொன்னாலும் அதை காரணமா வச்சு சில ஆண்கள் என்னை நெருங்க பார்பார்கள். அதான் கணவர் வெளிநாட்டில்னு பொய் சொன்னேன். தாலியும் ,மெட்டியும் புனிதமானதா நான் நினைக்கிறேன் புனிதமே இல்லாதவனுக்காக அதை நான் அணிய விரும்பல. என் காது படவே என்னை பத்தி நிறைய பேர் தப்பா பேசுனாங்க . அதை பத்தி நான் கவலை படல என்னை பத்தி எல்லார்டையும் விளக்கம் சொல்ல முடியுமா ? நான் யார்னு என் மனசாட்சிக்கு தெரிந்தால் போதும்.சில நேரம் கடவுள் மேல தான் எனக்கு கோபம் வரும்.

இந்த அழகையும் .பணத்தையும் அளவுக்கு மீறி ஏன் கொடுத்தார்னு!.யாருக்கும் என் மனசு தெரிய மாட்டேனுதே!
நீ கொடுத்து வைத்தவள் வித்யா எவ்ளோ அக்கரையான ,அன்பான கணவர்.அழகான குழந்தை . சில நேரம் தனிமையில் இருக்கும் உன்னோட மகனை கூட்டிட்டு வந்து என்கூட வச்சுக்களாமானு தோனும்.ஒரு குழந்தை இருந்தால் இப்படி பழயை நினைவெல்லாம் நினைக்க நேரம் கிடைக்காதுல்ல?

உன்னை பார்க்க பொறாமையா இருக்கு வித்யா.நல்ல கணவர் ,குழந்தை தான் ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியே அந்த வகையில நான் அன்லக்கி"என்றாள் நிலா
இவ்வளவு நாளும் அவள் கண்ணுக்கு தெரிந்தவள் நிலா இல்லை பிறை நிலா
மீண்டும் அந்த ஆங்கில வரிகள் வித்யாவின் கண் முன்னே
''Don't judge a book by its cover ''

 

https://www.facebook.com/mangayarmalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இக்கரைக்கு அக்கரை பச்சை.....!நிலாவின் வாழ்வும் அதுபோல்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.