Jump to content

பிரிவுகள் தரும் சுமை.


shanthy

Recommended Posts

பிரிவுகள் தரும் சுமை.

01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது.
 
வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. 
தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.
 
அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது.

படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன்.
 
இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்லை. பிள்ளைகளின் நினைவுகளிலேயே அறுபடும் உறக்கத்தை மீட்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் உதவுவதில்லை.

காரணம் சொல்லத் தெரியாது கணங்கள் ஒவ்வொன்றையும் கண்ணீரால் கடக்கிறேன். சந்திக்கும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் கண்ணீராலேயே அவர்கள் முன்னும் தொலைகிறேன்.

எங்களுக்கு நாடுமில்லை வீடுமில்லை...பலதடவைகள் சொல்லிவிட்டாள். 
 
சொந்தநாடில்லாத துயரத்தை அவள் இப்போது அதிகம் உணர்கிறாள் என்பதை அவள் சொல்லும் கதைகளில் இருந்து புரிகிறேன்.

சொந்த நிலமில்லாதவர்களின் பிள்ளைகள் என்றோ ஒருநாள் தன் வேர்களைத் தேடும் என்பதை என் குழந்தையின் ஏக்கங்களிலிருந்து கற்றுக் கொள்கிறேன்.

19வருடம் அவள் அருகாமை இல்லாத நாட்கள் மிகவும் அரிதானவை.

2 அல்லது 3நாட்கள் சென்று வரும் பாடசாலை பயணங்கள தவிர அவள் என்னைப்பிரிந்து தூரம் போனதில்லை.
 
அவர்கள் வரும் நாள்வரையும் அவர்களது
படுக்கையில் உறங்கி அவர்கள் அறையில் என்னைத் தொலைப்பேன்.
 
02.10.2017 அவளும் நானும் அவளது தோழிகள் இருவரும் அவளது பல்கலைக்கழக தங்குவிடுதிக்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டோம். 

எண்ணங்கள் எங்கே போகிறது என்பது தெரியாமல் ஏதேதோ நினைவுகள். எனது காரும் 61ம் இலக்க நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறேன். 

அவள் அடுத்துவரும் தனிமையை புதிய இடம் புதிய மனிதர்கள் எல்லோரையும் சமாளித்து தன்னை எப்படி தயார்படுத்திக் கொள்ளப் போகிறாள் என்பதே என் அந்தரமாக இருந்தது.

என் குழந்தை என் முன்னால் பெரிய மனிசியாக தனது அலுவல்களை ஓடியோடிச் செய்து கொண்டிருந்தாள். 

அவள் போல நூற்றுக்கணக்கான மாணவமாணவியர் அந்தப் பகுதியெங்கும் தங்கள் பொருட்களோடும் உறவினர்களோடும் திரிந்தார்கள். 

அம்மா,அப்பா,சகோதரர்கள்,பேரன்,பேர்த்தி என ஆளாளுக்கு அவர்களது பொருட்களைக் காவிவந்து கொண்டிருந்தார்கள்.

என் குழந்தைக்கு அனைத்து உறவாயும் நானொருத்தி மட்டுமே. அவள் தனக்குள் அழுதிருப்பாள். உறவுகளே இல்லாது நாங்கள் தனித்திருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பாள்.

02.10.2017 தொடக்கம் 04.10.2017 வரையும் அவளது பல்கலைக்கழக தங்குமிட விடுதிக்கு போய் வந்து கொண்டிருக்கிறேன். பொருட்கள் கொள்வனவு செய்தல் , பதிவுகள் என ஓடியது.

05.10.2017 காலை எட்டு மணிக்கு அவளது மீதிப் பொருட்களையும் காரில் ஏற்றினோம். 
இனிமேல் இந்த வீட்டுக்கு வரமாட்டேன்.... 
 
தான்உலவிய ஒவ்வொரு இடமாய் நின்று நின்று பயணம் சொன்னாள். அவளுக்கு 6வயதில் இந்த வீட்டுக்கு குடிவந்தோம். 
 
துயரங்களைத்தான் அதிகம் சுமந்த வீடு. 
2012இல் இந்த வீட்டை விட்டு எங்காவது போவோம் எனக் கேட்ட போது ஓமென்றாள். 
 
வீட்டைவிட்டு வெளியேற இருந்த தடைகளை பிள்ளைகள் இருவரையும் வைத்துக் கொண்டு அலைய துணிவும் இருக்கவில்லை. அதற்கான வழிகளும் கடினமாக இருந்தது. 
 
அவளும்பல்கலைக்கழகம் போகும் வரை சூனியம் சூழ்ந்த இந்த வீட்டிலே இருப்போமென என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

உளவள ஆலோசகர்களும் மருத்துவர்களும் இந்த வீட்டைவிட்டு வெளியே போ தூரம் போ... புதிய இடம் புதிய வாழ்வு உன்னையும் பிள்ளைகளையும் மீட்கும் என சொன்னவர்களின் வார்த்தைகளை செயற்படுத்தக் கூடிய வலு என்னிடம் இல்லாதிருந்தது.

அவளும் ஒரு கட்டத்தில் இந்த வீட்டில இருக்கேலாது வெளியேறுவம் என அழுத காலமும் ஒன்று வந்தது. அது அவளுக்கான பள்ளிப்படிப்பு இறுதிக்கால இரண்டு வருடங்களாக இருந்தது. 

பிள்ளையின்ரை படிப்பு முடிஞ்சு நீங்க யூனி போக ஒரேயடியா மாறுவம். அதுவரை பொறம்மா...அவளைச் சமாதானம் செய்தாலும் அவள் இந்த வீட்டில் அமைதியாக இருந்தது அரிது. 
000          000             000
காரில் ஏறியவள் தனது பொருட்களை மீண்டும் சரிபார்த்தாள். இன்னும் சில மணித்தியாலங்களில் அவளைத் தனியே விட்டுவிட்டு நான் தனியே திரும்பி வர வேண்டும்.

குண்டம்மா கவனமா இருங்கோ , வடிவாச் சாப்பிடுங்கோ , நித்திரை கொள்ளுங்கோ, மருந்தை ஒழுங்கா போடுங்கோ,எப்ப கதைக்க வேணுமெண்டாலும் எந்த நேரமெண்டாலும் என்னோடை கதையுங்கோ....,
அவள் பெரிய பட்டியலொன்றை சொல்லிக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளே என் இதுவரைகால உலகம். அவர்களும் ஒருநாள் தங்கள் பாதைகள் நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை மறந்த அம்மா நான். 

கொண்டு வந்த பொருட்களை அவளும் நானும் அவளது அறைக்குக் கொண்டு சென்றோம். இனி சமையல்,படிப்பு,படுக்கை, இருப்பு எல்லாமே அந்த ஒற்றை அறையில் தான். காலம் இப்படியும் ஒரு நாளை என் குழந்தைக்குக் கொடுக்குமென்று நினைத்திருக்காத எனக்கு அது பெரும் ஏமாற்றமே.

இன்றிலிருந்து அவள் தனியே இருக்கப் போகிறாள். தனிமையை உணராத மன அமைதியையும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அவளுக்கு காலம் கொடுக்க வேண்டும். எனது பிரார்த்தனைகள் அவளைக் காக்குமென்று நம்புகிறேன்.

சரி செல்லம் அம்மா வெளிக்கிடப்போறன்...கவனம்...அவள்கட்டிப்பிடித்து காதுக்குள் சொன்னாள். குண்டம்மா சந்தோசமா இருந்தா நான் சந்தோசமா இருப்பேன். அம்மாச் செல்லம் கவனம். 

என் குழந்தையின் அணைப்பிலிருந்து விடுபட்டு நடக்கிறேன். உடல் நடுங்குகிறது.நெஞ்சுக்குள் ஏதோ வலி. உயிரைப்பிடுங்கிக் கொள்கிறது துயர். 
வாகனத்தரிப்பிடம் வரையும் வந்தாள். வழியனுப்பிவிட்டு திரும்பி நடக்கிறாள். 

வாகனம் 61நெடுஞ்சாலைக்கு ஏறுகிறது. கண்ணீர் வழிகிறது. கத்தியழுகிறேன். இப்போதெல்லாம் இப்படித்தான் எனது பயணங்கள் அமைகிறது. காரில் ஒலிக்கும் பாடலும் இலத்திரனியல் வழிகாட்டியின் குரலும் தான் என்னோடு கூட வருகிறது. 

ஒலிக்கும் பாடலைச் சேர்ந்து பாடுவதும் , சில பாடல்களில் கரைந்து அழுவதுமாக அலைகிறேன். கார் போன போக்கில் என் பயணங்கள் தொடர்கிறது.

கார் ஓடுகிறது வீதிவழியே. பிள்ளைகளின் நினைவுகளோடு ஓடுகிறது எண்ணம். பிள்ளையை திரும்ப கூட்டிவா என்கிறது உள் மனசு. வந்த தரிப்பிடமொன்றில் காரை நிறுத்துகிறேன். அதிகம் ஆட்களில்லாத அந்தத் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கி அருகிருந்த காட்டுவழி கொஞ்சத்தூரம் நடக்கிறேன். 

பிள்ளைகளே கடைசிவரையென இதுவரை ஓடிய என் கால்களை இந்த நாட்கள் இழுத்துக் கட்டி வைத்துள்ளது. காலம் மாறும் நீயும் மாறவேண்டுமென்கிறார்கள் நண்பர்கள். என்னால் முடியவில்லை. 
 
இதுவும்கடந்து போகுமென்று ஆறுதலடையவும் முடியவில்லை. 

இதுவும் கடந்து போக வேண்டும். 
 
Link to comment
Share on other sites

இப்போது பேஸ் டைம், வாட்ஸ் அப் என்று எல்லாம் நேரில் பார்த்து கதைக்கலாம் தானே. வீட்டில் கமெராவை பூட்டி 24/7 பார்த்துக்கொண்டும் இருக்கலாம். மகளுடன் வாட்ஸ் அப்பில் படங்கள், வீடியோக்கள் என்று அனுப்பி தொடர்பில் இருங்கள். இப்போது மோபைல் உலகத்தில்தானே நாங்கள் வாழ்கின்றோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் நாம் பார்த்த துணிவான சாந்தியைக் காணவில்லை. காலம் கோழையாக்கி விட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு தாயாக  உங்களை உணர முடிகிறது.  தன்னம்பிக்கையை  கைவிடாதீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவின் சுமையை இலகுவாக எடுப்பது கடினம்தான். ஆனாலும் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி நாம் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நானும் நான்கு வருடமாக அனுபவித்த சுமையை இந்த வருடம்தான் இறக்கி வைத்தேன். ஒருமகள் படிப்பு முடித்து வீட்டுக்குவர மற்றமகள் திருமணமாகி போய் விட்டார். ஒவ்வொரு படிகளிலும் சுகங்களும் சோகங்களும் வாழ்வின் நியதி. மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகும்.

Link to comment
Share on other sites

வல்வை சகாறா சொன்ன மாதிரி துணிச்சல் மிக்க சாந்தியை காணவில்லை என்று எழுத நினைத்தாலும் நானும் இப்படித்தான் பிள்ளைகளின் பிரிவை சந்திக்கும் போது உடையக் கூடியவன் என்பதால் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

உணர்வுகள் பரிதவித்தாலும் ஒரு நல்லது நடந்துள்ளது என்பதே உண்மை. எங்கள் கைக்குள் இருக்கும் வரை, ஒரு ஒட்டுண்ணி உறவுநிலை இருக்கும் வரை இவ்வுலகோடு போரடி வாழும் திறனை குழந்தைகள் முழுமையாக பெறமுடியாது. காலத்தையும் சூழலையும் அவர்கள் கையாள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம். எமது காலத்தின் பின் எமது பிள்ளைகளின் கதி என்னாகும் என்ற உணர்வு பலருக்கும் வதைக்கும். ஏனெனில் தாய் நிலம் இனம் சனம் எல்லாத்தையும் விட்டு ஒரு அந்நிய தேசத்தில் எமது பிள்ளைகளை விட்டுச் செல்லப் போகின்றோம். எமது காலத்துக்குள்ளாகவே நாம் வாழும் நாடுகளில் அவர்கள் சுயமாக வாழும் தன்மையை உருவாக்குவது ஒன்றே நல்ல வழி. ஆதாலால் இது இருள் சூழும் உணர்வுக்குள் ஒரு வெளிச்சம் என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கடினமான சூழ்நிலை ஆனால் இதையும் கடந்துதான் போகவேணும்...பகிர்வுக்கு நன்றி

Link to comment
Share on other sites

கருத்திட்ட கலைஞன் , சகாரா, நிழலி ,கண்மணியக்கா ,நிலாமதி ,சண்டமாருதன் ,புத்தன் அனைவரின் அன்புக்கும் நன்றி.

On 27.12.2017 at 11:41 PM, வல்வை சகாறா said:

முன்பெல்லாம் நாம் பார்த்த துணிவான சாந்தியைக் காணவில்லை. காலம் கோழையாக்கி விட்டதா?

துணிச்சலும் தோற்றுப்போகும் சகாரா பிள்ளைகள் பிரிவில். பழைய என்னை மீண்டும் கொண்டு வருவேன் காலம் மாறும் நம்புகிறேன்.

On 28.12.2017 at 2:46 AM, Kavallur Kanmani said:

பிரிவின் சுமையை இலகுவாக எடுப்பது கடினம்தான். ஆனாலும் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி நாம் இதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நானும் நான்கு வருடமாக அனுபவித்த சுமையை இந்த வருடம்தான் இறக்கி வைத்தேன். ஒருமகள் படிப்பு முடித்து வீட்டுக்குவர மற்றமகள் திருமணமாகி போய் விட்டார். ஒவ்வொரு படிகளிலும் சுகங்களும் சோகங்களும் வாழ்வின் நியதி. மனதை திடமாக வைத்துக்கொள்ளுங்கள். இதுவும் கடந்து போகும்.

மகன் யுனி போனபோது இன்னொரு வகையான துயரம் அலைவு. அப்போது வீட்டில் மகள் இருந்தாள். இரண்டு பேரும் இல்லாத காலம் மிகவும் பயங்கரமாக இருக்கிறது அக்கா.

On 28.12.2017 at 2:57 AM, நிழலி said:

வல்வை சகாறா சொன்ன மாதிரி துணிச்சல் மிக்க சாந்தியை காணவில்லை என்று எழுத நினைத்தாலும் நானும் இப்படித்தான் பிள்ளைகளின் பிரிவை சந்திக்கும் போது உடையக் கூடியவன் என்பதால் எழுதவில்லை.

என்னதான் இரும்பாக இருந்தாலும் பிள்ளைகளின் பிரிவு அதை அனுபவிக்கும் தருணங்கள் மிகவும் கடுமையான காலம். இப்பிரிவை தயார்படுத்திக் கொள்ளவும் முடியாது.

Link to comment
Share on other sites

On 28.12.2017 at 5:31 AM, சண்டமாருதன் said:

உணர்வுகள் பரிதவித்தாலும் ஒரு நல்லது நடந்துள்ளது என்பதே உண்மை. எங்கள் கைக்குள் இருக்கும் வரை, ஒரு ஒட்டுண்ணி உறவுநிலை இருக்கும் வரை இவ்வுலகோடு போரடி வாழும் திறனை குழந்தைகள் முழுமையாக பெறமுடியாது. காலத்தையும் சூழலையும் அவர்கள் கையாள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம். எமது காலத்தின் பின் எமது பிள்ளைகளின் கதி என்னாகும் என்ற உணர்வு பலருக்கும் வதைக்கும். ஏனெனில் தாய் நிலம் இனம் சனம் எல்லாத்தையும் விட்டு ஒரு அந்நிய தேசத்தில் எமது பிள்ளைகளை விட்டுச் செல்லப் போகின்றோம். எமது காலத்துக்குள்ளாகவே நாம் வாழும் நாடுகளில் அவர்கள் சுயமாக வாழும் தன்மையை உருவாக்குவது ஒன்றே நல்ல வழி. ஆதாலால் இது இருள் சூழும் உணர்வுக்குள் ஒரு வெளிச்சம் என்பதே உண்மை. 

நீங்கள் சொல்லும் இதே வார்த்தைகளைத் தான் எனக்குள் நினைத்துக் கொள்கிறேன். என் பிள்ளைகளுக்கு உறவுகள் என யாருமே இல்லை. பிள்ளைகள் தங்கள் காலில் வாழ வேண்டும் அதற்காக இதையும் கடக்க வேண்டுமென்கிற எண்ணம் இருந்தாலும் பலநேரங்கள் பெரும் சவாலாவே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் படிக்கிற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் இந்த நிலையை கடந்துதான் வரவேண்டும் சகோதரி....இங்கு மட்டுமல்ல ஊரிலும் கூட....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 months later...
On 18.1.2018 at 5:59 PM, suvy said:

கொஞ்சம் படிக்கிற பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்கள் எல்லோரும் இந்த நிலையை கடந்துதான் வரவேண்டும் சகோதரி....இங்கு மட்டுமல்ல ஊரிலும் கூட....!  tw_blush:

உங்கள் கருத்திற்கு நன்றி சகோதரரே.பிரிவுகளை தாங்கும் சக்தியை காலம் தருகுதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் லண்டன் வந்து படித்த முதல் பாடம் வாழக்கையில்  ஒருவரையும் சார்ந்து இருக்க கூடாது என்பது தான்....இனிமேல உங்கள் பிள்ளைகள் படித்து முடித்து தங்கட வேலையை பாரத்து கொண்டு போய் விடுவார்கள்.. உங்கட வாழக்கையை நீஙகள்,உங்கள் விருப்பத்துக்கேற்ற வாழ பழக வேண்டும்.:rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.