Jump to content

அரியணைகளின் ஆட்டம்: Game of Thrones


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரியணைகளின் ஆட்டம்: Game of Thrones — தமிழில் ஒரு அறிமுகம்

The wings of the Raven that brings the scroll flutter.

The ink of the Maesters that record history dries.

The black cloak of the rangers who march beyond the wall is adorned.

The Valyrian steel sword that can destroy anything in the known world swings.

The Seven pointed star inscribed on the forehead of the Andals shines.

The sparrows of Lord Varys who hold the secrets of the world chirp.

The wine of Dorne that traverses through your senses pours.

The leaf of the weirwood trees you worship as the Old Gods falls.

The debt that the Lannisters owe is repaid.

The throat of the dragon that broods the fire ignites.

கேம் ஆஃப் த்ரோன்ஸ்.

1*esIScfBz2Im6o9uFB5lS0w.jpeg

Source

நேற்றுடன் ஏழாம் பருவத்தின் (Season) ஏழாவதும் கடைசி அத்தியாயமும் (Episode) நேற்று வெளிவந்து, தொடர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. ஆர்வமாக முதல் பருவம் [தோராயமாக ஐந்தாம் அல்லது ஆறாம் அத்தியாயத்திலிருந்து] வாராவாரம் தொடர்ந்து வருகிறேன். சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுகொண்டிருக்கிற இந்தத் தொடர் பற்றி கேள்விப்படாதவர்கள் மிகச் சொற்பம். அறிமுகம் இல்லாதவர்கள் — விக்கியாவில் விவரமாக அறிந்துகொள்ளலாம். மேற்கொண்டு, என் பங்குக்கு இந்தத் தொடர் பற்றி கொஞ்சம் தமிழில் எழுதலாமென்று எண்ணம். முதலில் ஒரு மேம்போக்கான அறிமுகம். கதையை வரிவரியாக இப்போதைக்கு ஒப்பிப்பதாய் இல்லை. கதையின் தன்மையைப் பற்றியும், கதையின் களத்தைப் பற்றியும் முதலில் தியரியாக சொல்ல உத்தேசம். வெஸ்டரோஸ்/ எஸ்ஸோஸ் என்ற இரு பெரும் நிலப்பரப்புகள் கொண்ட உலகம், அதன் குடிகள் கோன்கள் — இதைச் சுற்றித் தான் கதை. அரியணைகளின் ஆட்டம் என்று தலைப்பிலேயே இருப்பதால், பெரும்பாலும் வெஸ்டரோஸ் கண்டத்தில் தான் கதை நகர்கிறது. ஏனென்றால் அதுவே மொத்த கண்டமும், அதன் ஏழு பிரதேசங்களும் ஒரே அரியணையின் கட்டுப்பாட்டில், ஒரே அரசனால் ஆளப்படுகிற பெருங்கண்டம். எஸ்ஸோசிலும் கதையின் ஒரு பகுதி, அந்த கண்டத்தின் தேசங்கள், இனமக்கள் பற்றி நடந்தாலும் கூட, கதை என்னவோ வெஸ்டரோசைத் தான் மையமாகக் கொண்டுள்ளது. மொத்தம் ஏழு புத்தகங்கள் கொண்ட இந்த கதையின் முதல் பாகத்தின் தலைப்பு தான் Game of Thrones. மொத்தத் தொகுதியின் பெயர் — A song of Ice and Fire.

முதலாவதாக, தொடர்/ புத்தகங்கள் குறித்து எழுதப்பட்டிருக்கிற நிறைய பதிவுகள் — இவர்கள் நல்லவர்கள், இவர்கள் கெட்டவர்கள் என்கிற பார்வையிலிருந்து எழுதப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. என்னையும் செர்சி லேனிஸ்டரையும் பொறுத்த வரைக்கும், அரியணைகளின் ஆட்டத்தில் — ஒன்று ஜெயிக்கலாம், இல்லை சாகலாம். நல்ல, கெட்ட என்பதெற்கெல்லாம் இடமே இல்லை. இந்தக் கதையில் கருப்பு-வெள்ளை என்று ஒரேயடியான பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருமே சாம்பல் நிறம் தான். சாம்பலில் கருப்போ வெள்ளையோ தாக்கம் அதிகமாக இருக்குமே தவிர, பரிசுத்த வெள்ளை என்றெல்லாம் யாரையுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியவே முடியாது. அதுதான் இந்தத் தொடரின் சிறப்பம்சம், வெற்றிக்கும் முக்கியமான காரணம். நல்லவர்கள் ஜெயிப்பார்கள், சம்பவாமி யுகே யுகே என்பதையெல்லாம் மார்ட்டின் அடிகளார் நம்புவதாகத் தெரியவில்லை. இரண்டாவது, எளிமை. புராணம் மாதிரி அதிபிரம்மாண்டமாக எல்லாம் இருந்தாலும், மொத்தத் தொடரின் அடிநாதமாக இருப்பது, எழுத்தின் எளிமை. எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பெயர்கள் வைத்திருக்கிறார் மார்ட்டின். அரண் போன்ற ஒரு பெரிய தடுப்புச் சுவருக்கு நீட்டி முழக்கி பெயரெல்லாம் வைக்காமல், The Wall என்று முடித்துவிடுகிறார். அதைக் காக்கிற வீரர்கள் கருப்பு உடைகள் அணிந்திருக்கிறார்கள், எனவே அவர்களது தலைமைக் கோட்டையை வெறுமனே Castle Black என்று கூப்பிட்டுவிடுகிறார். தலைநகரத்தை King’s Landing என்றும் அரண்மனையை Red Keep என்றும் சொல்லிவிடுகிறார். குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களின் புனைப்பெயர்களைக் கூட சாவகாசமாக வைத்துவிட்டுப் போகிறார். வேட்டை நாய், காட்டுவாசிகள் , சிவப்பு விரியன், சிலந்தி (Hound/ Wildlings/ Red Viper, Spider) — இவ்வளவு தான். மக்கள் எல்லாரும் இன்றைய பேச்சு வழக்கு ஆங்கிலத்தில் தான் பலநூறு வருடங்கள் முன்பு பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவதாக, காவியத்தன்மை. பாகுபலியின் காளகேயர்கள் தனியாக ஒரு பாஷை பேசுவதைப் போலவே, டொத்ராக் இன மக்கள் பேசும் ஒரு மொழி, வலேரியாவைச் சேர்ந்த டார்கேரியர்களும், சில எஸ்ஸோஸ்காரர்களும் பேசும் உயர் வலேரிய மொழி, இப்படி. இன்னும் அந்தந்த இனமக்களுக்கு தனித்துவமான இசைக்கருவிகள், ஆயுதங்கள், உடைகள், பண்டிகைகள், பழக்கவழக்கங்கள் — தமிழின் ஐந்திணை மாதிரி. இவ்வளவு ஏன், ஒரு வியாதியைக் கூட (Greyscale) மெனக்கெட்டு புனைந்திருக்கிறார் ஆசிரியர். வெஸ்டரோசின் அரசகுடும்பங்களுக்கென்று தனி வழக்கங்கள், இறுதி மரியாதை வழக்கங்கள், கொடிகள் (Banners), முத்திரைகள் (Sigil), வாசகங்கள் (Motto), நாட்டுப்புற பாடல்கள் (Ballads) என்று விரிவாகிக்கொண்டே இருக்கிறது உலகம். நான்காவதாக, இந்த உலகின் மாயாஜாலமும் மத வழிபாடுகளும். அரியணை — ஆட்சி — அரசன் என்ற விஷயங்களுக்கெல்லாம் மனித இனம் வருவதற்கு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக, இந்த உலகில் காட்டின் குழந்தைகள் (Children of the Forest) — குழந்தை அளவே இருந்த காட்டுவாசி மனிதர்கள் வசித்து வந்திருக்கிறார்கள். இந்த குழந்தை இனத்தவர்கள் மாயமந்திர ஜாலத்தில் வித்தைக்காரர்கள். அடர்ந்த காட்டிலிருந்த மரங்களில் முகம் போன்ற உருவங்களைச் செதுக்கி, அவற்றை தெய்வங்களாக வழங்கி வந்தார்கள். இதுவே பழைய தெய்வ வழிபாடாகும் (Old gods). கதை நடக்கிற காலகட்டத்திற்கு பனிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, அளவில் பெரியதாகவும், குதிரைகளைச் செலுத்தி, ஆயுதங்களை ஏந்தியும் வாழ்கிற, உலகில் தோன்றிய முதல் மனிதர்கள் (First Men) எஸ்ஸோசிலிருந்து கடல் கடந்து வந்து குழந்தைகளின் பேட்டைகளை ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனாலும், இரண்டு இனங்களும் இணக்கமாகி, இருவரும் பழைய தெய்வங்களையே கும்பிடுகிறார்கள். மனிதர்களுக்கு அப்புறம் ஆண்டல் (Andals) என்கிற இன மனிதர்களும் வெஸ்டரோசை நோக்கி படையெடுக்கிறார்கள். இவர்கள், இயற்கை வழிபாடன்றி நெற்றியில் ஏழு முனை நட்சத்திரம் ஒன்றைக் கீறி அதையே வழிபடுகிறார்கள். தங்களின் அசுர பலத்தால் கண்டம் முழுவதையும் கைப்பற்றி வெஸ்டரோஸ் முழுக்க இந்த மதத்தை பரப்புகிறார்கள். இது புதிய தெய்வ வழிபாடு (New Gods) என்று வழங்கப்படுகிறது. இவ்விரண்டு மதங்களைத் தவிர, முகமற்ற தெய்வம், மூழ்கிய தெய்வம், ஒளி தெய்வம், குதிரை தெய்வம், இத்தியாதி என்று பலதும் உண்டு. புனைவான ஒரு உலகத்தை துல்லியமாக நிர்மாணித்து, அதற்கு அங்குல அங்குலமாக உயிரூட்டி, அசலான மனிதர்களை உலவவிட்டு, அரசர்கால அரசியலை மார்ட்டின் மிகத் தத்ரூபமாக படைத்துள்ளார்.

1*bOc0invriJZudXhoZklGmw.jpeg

Source

வரலாற்று புனைவாகவோ, விட்டலாச்சார்யா பாணி மாயாஜால புராணம் போலவோ இதைச் சுருக்கிவிடுகிற அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அங்குதான் மூலக்கதையை எழுதியிருக்கிற ஜார்ஜ் ஆர்.ஆர் மார்ட்டின் அட்டகாசம் செய்திருக்கிறார். இப்படி ஒரு விஸ்தாரமான உலகத்தை நாம் Harry Potter, Lord of the Rings போன்ற காவியத்தன்மை கொண்ட புத்தகங்கள்/ படங்களில் பார்த்ததுண்டு. ஆனால், அந்தக் கதைகளின் Fantasy தன்மை — மாயாஜாலம் மிக மிக அதிகம். மாயாஜாலம் பிரதானமாகவும், கதைகளின் கதாபாத்திரங்களுக்கிடையேயான சிக்கல்கள், உறவு-பகை, ரகசியங்கள் — இவை பின்னுக்கு தள்ளப்பட்டே வந்திருக்கிறது. மார்ட்டின் மிக நுணுக்கமாக இடைக்கால வரலாற்று பக்கங்களின் ஐரோப்பாவையும் ஆசியாவையும் முன்மாதிரியாக வைத்து எதார்த்தமான களத்தை நம்பும் விதமாக உருவாக்கியிருக்கிறார். இந்தக் களத்தில் நமக்கு மாயாஜாலம் சிறுகச் சிறுக தான் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. செத்துப்போன மனிதர்கள் மீண்டும் உயிர்த்து பிசாசுகளாக வருவதை வெஸ்டரோஸ்காரர்களும் முதலில் நம்பமாட்டேன் என்கிறார்கள். நெருப்பைக் கக்கும் டிராகன் இனம் முன்னொரு காலத்தில் இருந்ததாகவும், அந்த இனமே முற்றிலும் அழிந்துவிட்டதாகவுமே எஸ்ஸோசி/ வெஸ்டரோசி மக்கள் நினைக்கிறார்கள். இது பார்வையாளர்களான நமக்கு கதையை மிக எளிமையாக புரிய வைக்கிறது. கதையை ஒன்றிப்போய் பின்தொடர பெரிதும் உதவுகிறது. இரண்டு புதிய கண்டங்களையே கற்பனையில் வடித்திருந்தாலும் மார்ட்டின் அதை பார்வையாளர்களுக்கு சுலபமாக புரிய வைக்க முயல்கிறார். வெஸ்டரோசை கிட்டத்தட்ட பிரிட்டனின் வடிவத்தில் தான் கற்பனை செய்திருக்கிறார். அளவில் மட்டும் பிரிட்டனை விட பல மடங்கு பெரிய நிலப்பரப்பாக வெஸ்டரோஸ் இருக்கிறது. எஸ்ஸோஸ் பெரும்பாலும் மத்திய ஆசிய, கிழக்கு ஐரோப்பிய (எகிப்து, பாபிலோன், கிரேக்கம், துருக்கி) பகுதிகளை ஞாபகப்படுத்துகிறது. தொடரின் குறிப்பிடத்தக்க அம்சம், தொடக்கத்தில் தோன்றுகிற இந்த உலகின் வரைபடம் காட்டப்படுகிற பாடல். அந்த வாரம், காட்டப்படுகிற அத்தியாயத்தில், எந்தெந்த கதாபாத்திரங்கள் எங்கெங்கு இருக்கிறார்கள், அவர்களது இடைவெளி என்ன என்று நமக்கு ரத்தினசுருக்கமாக விளங்குகிறது. அந்த உலகத்தை வெறும் தட்டையாக அல்லாமல் தனித்தனியான ஏழு நாடுகள், அந்த நாட்டின் புவியியல்-தட்பவெப்பம்-புராதன கட்டிடங்கள் முதற்கொண்டு சட்டென்று நம் கண் முன்னே விரிகிறது.

வடிவத்தில் மட்டுமின்றி அரசியல், ஆட்சியமைப்பிலும் இடைக்கால ஐரோப்பாவில் நிலவிய Feudalism — அதாவது வர்க்க நிலையை அச்சு பிசகாமல் பின்பற்றியிருக்கிறார் ஆசிரியர். ஏழு ராஜ்ஜியங்களுக்கும் சேர்த்து ஒரு அரசன். அரசனுக்கு அடுத்த நிலையில் அதிகாரமும் செல்வமும் பொருந்திய பிரபுக்கள். பிரபுக்களின் கீழ் அதிகாரம் செலுத்திய சிப்பாய்கள், சமூகத்தின் கடைநிலையில் இருந்த குடியானவர்கள். அரசருக்கு ஆலோசனைகள் வழங்க, போர்த் தந்திரங்கள் வழங்க, நிர்வாக மேற்பார்வைக்கு ஒரு சிறிய குழுவும் உண்டு, ஒரு அமைச்சரவை (Small Counsel) போல. அதில் அரசருக்கு வலதுகரம் போன்ற Hand of the King என்றொரு பதவி. நாட்டின் ஜனாதிபதி/ பிரதமர் மாதிரி — அவர் தான் தலைமை. மேலும், Maesters என்று கற்றறிந்த சான்றோர் பெருமக்கள் சிலரும் உண்டு. நிதி நிர்வாகம் செய்வதற்கென்று Maester of Coin, கப்பல்படைகளுக்கு பொறுப்பாளராக Maester of Ships, சட்டதிட்டங்களை வகுத்து வழிநடத்த Maester of Laws, தலைநகர சேனாதிபதியாக Lord Commander of the City watch, ஒற்றர்படைத் தலைவராக Maester of Whisperers — இந்த அவையின் உறுப்பினர்கள் தான் அரசருக்கும், அரசரின் கரத்திற்கும் அடுத்தபடியாக பலம் பொருந்தியவர்கள். ராஜாவின் தனிப்பட்ட மெய்க்காவலர்கள் படையும் ஒன்றுண்டு — Kingsguard. இந்த படையைச் சேர்ந்த வீரர்களுக்கு சொத்துரிமை கிடையாது, திருமணம் செய்துகொள்ளவும் முடியாது.

1*lqDahSbDsNfYFw8FgGHUgg.jpeg

Source

சமூக அமைப்பு மிக விரிவாகவும் தெளிவாகவும் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. தமிழர் மரபான ஐந்நிலங்களைப் போலவே பண்டைய வெஸ்டரோசி நாகரிகமும் நிலப்பரப்பின் தன்மையைக் கொண்டு பெருங்கண்டத்தை ஏழு நாடுகளாகவும், நாட்டிற்கு ஒரு சிற்றரசையும் நியமித்து ஆண்டு வருகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு கோட்டை கொண்ட தலைநகரமும், அந்த நாட்டை ஆளும் அரச குடும்பத்திற்கு ஒரு ராஜமுத்திரையும் வாய்த்திருந்தது. அந்த ராஜ வாரிசுகளை சிறப்பான முறையில் பயிற்றுவிப்பதற்காக Maesters என்ற குருநாதர்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். சிற்றரசும் வரி வசூலித்து உள்நாட்டு பாதுகாப்புக்காக படைபலத்தை பெருக்கியும், நகர நிர்வாகம் செய்தும் வருகிறார்கள். நிகரான குடும்பங்களில் சம்மந்தம் செய்து தங்கள் உறவுகளை, பலத்தைப் பெருக்கிக் கொள்கிறார்கள். முக்கியமான, முதன்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிரபுக்களும், சிப்பாய்களுமே வெஸ்டரோசில் அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவர்கள். குடியான வர்க்கத்தினருக்கு இவர்களைப் போல குடும்பப் பெயர்கள் கூட கிடையாது. எஸ்ஸோசிலும் கூட குடும்பப்பெயர் வைக்கிற வழக்கம் இல்லை. தலைமுறை தலைமுறையாக இந்தக் குடும்பங்கள் அரசியல் அதிகாரத்திற்கு போட்டி போடுகின்றன. இந்த பிரபுக்களுக்குள் இருக்கிற உறவு-பகை, நட்பு-குரோதம், சூழ்ச்சி-ரகசியங்கள், கூட்டணி-துரோகம் — இது அத்தனையும் நடப்பது அந்த அரியணைக்காக. எந்தப் பிரபு அரசாள்கிறாரோ அந்தக் குடும்பத்துடன் இணக்கமாக இருந்து அதிகார பலத்தை தன் வசம் வைத்துக்கொள்ள மீதமுள்ள குடும்பங்கள் மோதுகின்றன. ஒரு பிரதானப் பிரபுவின் குடும்பம் மற்றொரு பிரதானப் பிரபுவின் குடும்பத்துடன் திருமணம் மூலமாக இணைந்து கொள்ளும். அப்படி திருமண பந்தத்தைத் தாண்டி பிறக்கிற பிரபுக்களின் வாரிசுகளை Bastards என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வொரு பிரதேசத்தில் இருக்கிற இப்படியான உரிமையற்ற வாரிசுகளுக்கு பிரதேச-வாரியாக மரபுப் பெயர்கள் உண்டு. உதாரணத்திற்கு டார்ன் நில பாஸ்டர்ட்கள் Sand (உதாரணம் — எல்லாரியா சேண்ட்) என்ற பெயர் கொண்டவர்கள், அதே விண்டர்ஃபெல் நில பாஸ்டர்ட்கள் Snow (உதாரணம் — ஜான் ஸ்னோ) என்று அழைக்கப்படுவார்கள், இப்படி.

Kingdom of The North — House Stark, Winterfell

வடக்கே நிறையவே பனிப்பொழிகிற விண்டர்ஃபெல். ஸ்டார்க்ஸ் (House Stark) ஆட்சி, ஓநாய்ச் சின்னம் பொறித்த கொடி. மந்திரசகதிகள் கொண்ட வெள்ளை மனிதர்கள் விண்டர்பெல்லின் எல்லைகளை ஒட்டி வாழ்வதாக இதிகாச கதைகள் உண்டு. மேலும், நாகரிகம் இல்லாத பனிக்காட்டுவாசி நர மனிதர்கள் வாழ்வதால், 700 அடி உயர பனிப் பெருஞ்சுவர் ஒன்றை எழுப்பி ஏழு தேசங்களுக்கும் இந்த அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கிற பொறுப்பும் இவர்களுடையது. ஏழு தேசங்களில் பழைய கடவுள்களான மரங்களையும், புனல்களையும் இன்னமும் வழிபடும் வழக்கம் கொண்ட ஒரே தேசம் இதுவே.

Kingdom of The Vale and the Mountain — House Arryn, Eyrie

மலையும் மலை சார்ந்த இடமும். வேல் நாட்டின் வீரர்கள் (Knights of the Vale) போர்க்கலையில் மிகவும் வல்லவர்கள். போர்த்தந்திரங்களிலும் வாள்வீச்சிலும் வரலாறு நெடுக பேர் பெற்றவர்கள். சிற்றரசான ஆர்ரின் (House Arryn) ஆட்சி, நிலவும் வல்லூறும் பொறித்த கொடி.

Kingdom of the Isles and the Riverlands — House Tully, Harrenhall

நதிகளும் நீர்நிலைகளும் நிறைந்த பகுதி. மீன் கொடி. டல்லி (House Tully) ஆட்சி. கண்டத்தின் மையமான பகுதியாக இருப்பதாலோ என்னவோ நிறைய போர்களைக் கண்டிருக்கிறது. பிரதேசத்தின் முக்கிய நதியான ட்ரைடெண்ட் (திரிசூல நதி) கரையில் தான் கதையின் மிக முக்கிய பலப்பரீட்சை ஒன்று நடந்தேறுகிறது.

Kingdom of the Rock — House Lannister, Casterly Rock

குன்றுகள் நிறைந்த மேற்கு நாடு. கனிம வளங்கள் — குறிப்பாக தங்க, வெள்ளி சுரங்கங்கள் நிறைந்த பிரதேசம். தொடரின் மிக பலம் வாய்ந்த குடும்பமாகக் கருதப்படுகிற (House Lannister) லேனிஸ்டர்கள் ஆட்சி செய்கிற நாடு. வளமும் பலமும் பொருந்திய சிங்ககொடி பறக்கிற நாடு. தலைமுறை தலைமுறையாக (House Clegane) க்ளெகேன் என்கிற சிப்பாய்க் குடும்பத்துக்காரர்கள் இவர்களுக்கு சேவை செய்து வருகிறார்கள்.

Kingdom of The Stormlands — House Durrandon, Storm’s End

எஸ்ஸோசையும் வெஸ்டரோசையும் பிரிக்கிற குறுங்கடலைக் (Narrow Sea) கரையாகக் கொண்ட நாடு. சிற்றரசு (House Baratheon) பராத்தியன்களை ஈன்ற நாடு. தொடரின் தொடக்கத்தில் அரியணையில் அமர்ந்திருப்பது ராபர்ட் பராத்தியன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இயற்கையின் சீற்றத்திற்கு பழக்கப்பட்ட பகுதி. மான் கொடி.

Kingdom of The Reach — House Tyrell, Highgarden

ஏழில் வளம் அதிகமாகக் கொழிக்கிற பகுதி இதுவே. ஆதியில் கார்டனர்களால் (House Gardener) ஆட்சி செய்யப்பட்டு வந்தது. பின்னாளில் (House Tyrell) டைரெல்களின் கட்டுப்பாட்டிற்கு வந்த நாடு. கொடியில் ரோஜாப்பூ. மேற்குநாட்டிற்கு நிகரான பணபலமிக்க பகுதி. செல்வமிக்க டைரெல் குடும்பத்திற்கு அரணாக காவல் காக்கிற சிப்பாய்க் குடும்பம் ஒன்று உண்டு — டார்லி (House Tarly). சான்றோர் பெருமக்களை வார்த்தெடுக்கிற கல்விக்கூடம் கொண்ட நகரம் — Old Town இங்கு தான் அமைந்திருக்கிறது.

Principality of the Dorne — House Martell, Sunspear

ஏழு சிற்றரசுகளிலும் வெயில் அதிகம் கொளுத்துகிற மணல் பிரதேசம். கொடியில் சூரியனும் ஈட்டியும். வழக்குமொழியும் மீதமுள்ள நாடுகளைவிட அந்நியத்தன்மை கலந்தது. மற்ற ஏழு நாடுகளிலும் புகழற்றவர்களாகக் கருதப்படுகிற பாஸ்டர்ட்கள் இங்கு எல்லோரையும் போல் சமமாக நடத்தப்படுகிறார்கள். டார்ன் கடல் ஒருபக்கம் (Sea of Dorne) மற்றொருபக்கம் செம்மலைகள் (Red Mountains) வெஸ்டரோசையும் டார்னையும் பிரிப்பதே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம்.

இந்த அதிகாரப்பூர்வமான ஏழு சிற்றரசுகள் தவிர இன்னொரு குட்டி ராஜ்ஜியமும் உண்டு. Iron Islands — House Greyjoy, Pyke. க்ரேஜாய் என்கிற குடும்பம் பைக் கோட்டையிலிருந்து இரும்புத்தீவுகள் எனப்படுகிற கடற்புரத்து நகரத்தை ஆட்சி செய்கிறது. இவர்கள் பெரும்பாலும் கப்பலோட்டிகள். மீதமுள்ள ஏழு சிற்றரசுகளைப்போல புதிய தெய்வங்களையோ, பழைய தெய்வங்களையோ வணங்காமல் தங்களுக்கே உரிய மூழ்கிய தெய்வத்தை வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். க்ராக்கென் எனப்படுகிற கடல்வாழ் உயிரினக் கொடியோர்கள்.

தொலைக்காட்சித் தொடராக இருந்தாலும் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டூடியோ படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியான பிரம்மாண்டம் நம்மை அசத்துகிறது. தத்ரூபமாக நம்மை இடைக்கால வரலாற்று காலத்துக்கே கொண்டு செல்ல உலகின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து லொக்கேஷன் பிடிப்பது தொடங்கி, மாயமந்திர சமாச்சார கனவுலகை அப்படியே இம்மியளவு குறையின்றி கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். வியந்து பாராட்ட வேண்டிய மற்றொரு துறை — Casting. இன்ன கதாபாத்திரத்திற்கு இந்த நடிகர்/ நடிகை என்று தேர்ந்தெடுத்திருப்பதில் அநியாயத்திற்கு சொல்லி அடித்திருக்கிறார்கள். குறை சொல்லும்படி ஒரு காட்சியில் தோன்றுகிற நடிகர் கூட கிடையாது. சில நிமடங்களே வந்து போகிற சிரியோ ஃபொரெல் என்கிற நடன ஆசிரியர் ஆகட்டும், தனி சாம்ராஜ்ஜியமே நடத்துகிற டைவின் லேனிஸ்டர் என்கிற சிங்கமாகட்டும் — பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். உடைகள் வடிவமைப்பிலிருந்து, கலையலங்காரம், ஒப்பனை என்று சின்னச் சின்ன காரியங்களில் மிகுந்த கவனம் செலுத்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். தொடரைத் தாங்கிப் பிடிக்கிற தூண் ராமின் ட்ஜவாடியின் இசை. மனிதர் அதகளம் செய்திருக்கிறார். ஒரே பாடலை மூன்று கதையோட்டங்களுக்கு ஏற்றவாறு மூன்று பாணி இசைக்கோவையாக வடித்திருப்பது ஆச்சரியம். 01X01 (முதல் பருவத்தின் முதல் அத்தியாயம்) மன்னரின் வருகை (King’s Arrival), 2X01 வடக்கு மறப்பதில்லை (The North Remembers), 03X09 காஸ்டமியரின் மழை (The Rains of Castamere), 03X10 அன்னை (Mhysa), 06X10 எழுவரின் ஒளி (The Light of the Seven) — இந்த ஐந்து பாடல்களும் எனக்கு ரொம்ப பிடித்தவை. போதுமான அளவிற்கு பாடம் படித்தாகிவிட்டது என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் தொடரைப் பார்க்காத அன்பர்கள் நிச்சயம் முதல் சில அத்தியாயங்களைப் பார்க்க முயற்சி செய்து பாருங்கள். பிடித்தால் தொடருங்கள். தொடரும் பதிவுகளில் இப்பெருந்தொடரில் எனக்கு இஷ்டமான இடங்களை அசைபோடலாமென்று இருக்கிறேன். இன்னும் ஐம்பது வாரங்களுக்கு பொழுதைப் போக்கியாக வேண்டியிருக்கிறதே!

வலார் மொர்குலிஸ்.

 

https://medium.com/@venkiraja/அரியணைகளின்-ஆட்டம்-game-of-thrones-தமிழில்-ஒரு-அறிமுகம்-872a7dd6f810

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியணைகளின் ஆட்டம் — Game of Thrones: முன்கதை சுருக்கம் (பாகம் 1)

 

1*lq0QCyzbULg69-lpXIc30Q.jpeg

Source

Some say the world will end in fire, 
some say in ice.
From what I’ve tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice, 
I think I know enough of hate
to say that for destruction ice
is also great
and would suffice.
 — Robert Frost

உலகம் எப்படி அழியக்கூடும் என்கிற கேள்விக்கான தேடல் தான் இந்தக் கவிதை. ஒருவகையில் உலக வரலாற்றின் முடிவுரை அதுதானே? ஃப்ராஸ்ட்டின் இந்தக் கவிதை தன்னை பெரிதும் பாதித்திருப்பதாக மார்ட்டின் கூறுகிறார். தொடரில் ஒரு பருவமும், புத்தகங்களில் இன்னும் இரண்டும் மீதம் இருக்கிறது. மார்ட்டினை பொறுத்த வரைக்கும் புத்தகங்களின் முடிவு மகிழ்ச்சியா சோகமா என்று அறுதியிட்டுக் கூறமுடியாத சுவையில் இருக்கும். ஆக, இந்த கதையும், உலகமும் எப்படி முடிவைச் சந்திக்கப்போகிறது என்று இன்னும் தெரியவில்லை. முதலில், இந்தக் கதை எங்கு ஆரம்பமாகிறது? இந்த அரியணைகள் ஏன் ஆட்டம் காண்கின்றன? நிலையாக செங்கோல் செலுத்தும் ஆட்சியாளர்கள் யாரும் இந்த வெஸ்டரோஸ் பெருநாட்டில் கிடையாதா? அழித்தொழிப்பும், சூழ்ச்சிகளும், துரோகங்களும், படுகொலைகளும் நிறைந்தது தான் இந்தக் கதையா? குருதிப்புனல்களும், வாள்வீச்சுகளும், போர்முரசுகளும் மட்டும் தான் இங்கு களமா? இல்லை. அமைதியும் செழிப்பும் நிறைந்த உலகமாக வெஸ்டரோஸ் நிறைய காலகட்டங்களில் இருந்திருக்கிறது. அரியணைகள் ஆட்டம் காண்பதற்கு முந்தைய கதைச்சுருக்கத்தை இந்தப் பதிவில் சொல்ல முயற்சி செய்கிறேன். ஆனால், வெறுமனே இந்தப் பிரபு இங்கு படையெடுத்தார், அந்தப் பிரபு இந்த சேனையை முறியடித்தார், இந்த இளவரசி அந்த இளவரசனை மணந்தார் என்று மொட்டையாக இல்லாமல், முக்கியமான நிகழ்வுகளுக்கும் கதாபாத்திரங்களுக்கும் சற்றே விரிவான அறிமுகத்துடன். (அதனால் பதிவின் நீளம் கொஞ்சம் கூடிப்போய்விட்டது) அதிலும், போன பதிவைப் போலவே அனுபவத்தை கெடுக்காமல் இயன்றவரைக்கும் Spoiler-free.

தொடரின் ஒவ்வொரு பருவத்தின் நீலக்கதிர் தகடுடன் (Blu-ray Disc) ஒரு கூடுதல் அத்தியாயம் வெளியாகும். Histories & Lore — சரித்திரங்களும் நாட்டுப்புறக்கதைகளும் என்ற பெயரில் பருவத்திற்கு ஒன்று என்ற வீதம் ஆறு அத்தியாயங்களில் இந்த உலகம், வாழ்ந்த நாயகர்கள், பேர் பெற்ற குடும்பங்கள், முக்கிய கதாபாத்திரங்கள், குழுக்கள், மதங்கள் பற்றி விலாவரியான விவரணை இடம்பெறும். புத்தகங்களைப் போலவே ஏதேனும் ஒரு கதாபாத்திரம் தனது பார்வையிலிருந்து (First person Point-of-View) தன்மையில் ஒரு கதையை வாசிப்பதைப் போல அமைந்திருக்கும். நான் புத்தகங்களை படித்ததில்லை. ஆனால், தொடரில் மொத்த கதையையும் ஒரு பார்வையாளராகப் பார்ப்பதற்கும், புத்தகத்தில்/ சரித்திர நாட்டுப்புறக்கதைகளில் கதாபாத்திரங்களே தங்கள் கதையை சொல்லும் போதும் இருவேறு அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன. உதாரணத்திற்கு — லேனிஸ்டர்கள் ஸ்டார்க் குடும்பத்தைப் பற்றிச் சொல்வதற்கும், ஸ்டார்க் குடும்பத்தினர் தங்களைப் பற்றி சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஒரே சம்பவத்தை விருமாண்டி திரைப்படத்தில் கொத்தாளரும் விருமாண்டியும் மாற்றி மாற்றி விவரிப்பதை மாதிரி. ஆனால், தொலைக்காட்சித் தொடரில், கிட்டத்தட்ட நடுநிலையாக இரண்டு குடும்பங்களுக்கிடையே நிகழும் ஒரு காட்சி மட்டுமே விரியும். இது ஒரு நுட்பமான வேறுபாடு. தங்குதடையின்றி வாசித்து மகிழ ஆங்கிலப் பெயர்களை இடையிடையே அடைப்புக்குறிக்குள் எழுதாமல் பதிவின் முடிவில் வரிசையாக அசல் ஆங்கிலப் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். புத்தகங்கள்/ தொடர்களை மிகத் தீவிரமாக தொடர்ந்துவரும் தோழர்கள் கதையோட்டத்தில் பிழைகள் இருந்தாலோ, தமிழாக்க முயற்சியில் தவறுகள் இருந்தாலோ மன்னித்தருளி பின்னூட்டங்களில் குறிப்பிடவும். (திருத்தம்: நன்றி. நிறைய பேர் கூர்ந்து சொன்ன சில விஷயங்கள். குறிப்பாக புதசெவி & @ImmortalAbul)

முன்னொருகாலத்தில் வெஸ்டரோசிற்கு கிழக்கே அமைந்திருந்த புகையும் கடலை* ஒட்டியிருந்தது வலேரியா. அந்தக் கடலில் காகிதக் கப்பல்கள் கூட ஓடாது. கொடூரமான கடற்பேய்கள் அங்கு உலவியதாக ஒரு நம்பிக்கை. அங்கு வாழ்ந்துவந்த இடையர்கள் திடீரென்று ஒரு புதிய செல்லப்பிராணியைக் கண்டெடுத்தனர் — ட்ராகன்கள். ட்ராகன்களுக்கு மாயமந்திரத்துடன் இணைபிரியாத பிணைப்பு உண்டு. ட்ராகன்கள் இந்த கண்டத்தின் முதலும் மூத்த குடியுமான காட்டின் குழந்தைகளின் மாயமந்திரத்திற்கு இணையான சக்திகொண்டவை. முழு கிராமங்களையே தன் சிறகின் நிழலால் இருளில் மூழ்கச் செய்கிற ராட்சச அளவில் ஓங்கி வளர்ந்து, கூர்மையான பற்களும் நகங்களும் கொண்டிருந்த அந்த அமானுஷ்ய பிராணி மூச்சில் நெருப்பைக் கக்கியது. வலேரியாவைச் சேர்ந்த மக்கள் ட்ராகன்களை பழக்கி, தங்களுக்கு நெருக்கமாக்கிக் கொண்டு மாயாஜாலத் தந்திரங்களில் கைதேர்ந்து அசுர வளர்ச்சி கண்டனர். தங்கள் மதிநுட்பத்தால் பிரத்தியேகமான வலேரிய இரும்பு ஆயுதங்களை வடித்து அண்மையிலிருந்த அத்தனை பட்டினங்களையும் பிரதேசங்களையும் தங்கள் இரும்புக்கரத்தால் வென்றனர். ஒரு கட்டத்தில் எஸ்ஸோசின் பெரும்பகுதியை ஆண்டு வந்த கிஸ்காரி பேரரசையே வீழ்த்தி ஒப்பில்லாத ஒரு சாம்ராஜ்ஜியத்தை எஸ்ஸோசின் எட்டு திக்கிலும் பரப்பி வரலாற்றில் தங்களுக்கென்ற அசைக்க முடியாத ஒரு உயரத்தில் தங்களை மையப்படுத்திக்கொண்டார்கள்.

வெஸ்டரோசில் மிகவும் முக்கியத்துவமாக ஆரூடம் (Prophecy) கருதப்படுகிறது. பிற்காலத்தைக் கணிக்க வல்ல சூனியக்காரர்கள், மாந்திரீகர்கள், ரத்த மாந்திரீகம், ரசவாதம் என்று பலவகையான வித்தைகளில் மக்கள் பெரும் ஆர்வம் காட்டினார்கள். வலேரியாவின் ட்ராகன் பிரபுக்கள் சுமார் நாற்பது குடும்பங்கள் உண்டு. அதில் ஒன்றான டார்கேரியன் குடும்பத்தின் பிரபு ஏனார் டார்கேரியன் தன் மகள் குறி-கோள் சொன்னது கேட்டு குறிக்கோளுடன் வலேரியாவிலிருந்து குடும்பத்துடன் புலம்பெயர்ந்து செல்ல ஆயத்தமானார். தன்னுடன் ஐந்து டிராகன்களையும் அழைத்துச் செல்கிறார். வெஸ்டரோசில் பிரவேசமாகி அவர்கள் முதல் முறையாக எஸ்ஸோசைக் கடந்து வெஸ்டரோசிற்குள் நுழைகிறார்கள். ட்ராகன் பாறையில் முதன் முதலாக கால் பதித்தபோது அவர்களிடமிருந்தது ஒரே ஒரு டிராகன். அதற்கு அவர்கள் இட்ட பெயர் பலேரியான். ஆனால், இறந்து போன டிராகன்கள் இட்ட முட்டையிலிருந்து இரண்டு டிராகன்கள் டார்கேரியர்களுக்கு கிடைத்தன. அவற்றின் பெயர் — வேகார் மற்றும் மெராக்சிஸ். சரி, அந்த டிராகன்கள் ஏன் இறந்து போயின? ஏனாரின் மகள் சொன்ன ஆரூடம் பலித்துவிட்டது. அதீத மாயமந்திரப் பெருவிபத்தோ, எரிமலையோ, ஆழிப்பேரலையோ, எரிகல்லோ — இன்னதென்று தெரியாத இயற்கை நிகழ்வான வலேரியப் பேரழிவு* 5000 ஆண்டுகால வலேரிய ஆட்சியை ஒரே அடியில் பொசுக்குகிறது. பேரிடரில் வலேரியர்களின் வளமும், பலமும் சுக்கல் சுக்கலாக கிழித்தெறியப்படுகிறது. வலேரியர்களிடமிருந்த மாயாஜாலம், அவர்களது வலேரியத் தலைநகரம், ட்ராகன்கள் — அத்தனையும் சாம்பலாகிப் போகிறது. வெஸ்டரோசின் ட்ராகன் பாறையிலிருந்த வலேரியாவின் மிச்சம் மட்டும் உயிர் பிழைக்கிறது. டார்கேரியர்கள் , பாறைக்கு அருகிலிருந்த பெருநில மேலைநாடான வெஸ்டரோசிற்கு பயணப்படுகிறார்கள். புலம்பெயர்ந்து வந்தாலும் வெஸ்டரோசை முழுவதாக தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார் ஒரு மாவீரர். அவர்கள் கொடியில் நெருப்பைக் கக்கும் மூன்று தலை ட்ராகன் இருந்தது. கொடியில் இருந்த அந்த ராட்சச விலங்கு வெஸ்டரோசின் அத்தனை பிரபுக்களையும், மாவீரர்களையும் தீக்கிரையாக்கியது. இந்த சாம்ராஜ்ஜியத்தை வெஸ்டரோசில் உருவாக்கியவர் முதலாம் ஏகான்*.

1*JAoSRIfiddFodrKa38v6BQ.jpeg
Aegon ” The Conqueror” Targaryen

Source

தனது வெற்றிவாகையின் சின்னமாக ஆயிரம் போர்வாள்களை தனது பிரியமான ட்ராகன் பலேரியோனின் நெருப்பில் உருக்கி ஒரு சிம்மாசனம் செய்தார் ஏகான். அவரிடம் மொத்தம் மூன்று ட்ராகன்கள் இருந்தன. அளவில் மிகப்பெரியதும், ஆற்றல்மிக்கதுமான பலேரியானை ஏகான் செலுத்தினார். மீதி இரண்டு விலங்குகளை அவரது தங்கைகள் இருவரும் செலுத்தினார்கள். கூடப்பிறந்த சகோதரிகளையே திருமணம் செய்துகொள்ளும் வழக்கம் டார்கேரிய வம்சத்தில் இருந்தது. தொடர்ந்து இந்த பழக்கத்தை அவர்கள் கடைபிடிக்கக் காரணம் ட்ராகன்களை கட்டுப்படுத்துகிற சக்தி டார்கேரிய ரத்தத்தின் ரத்தங்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்று அவர்கள் ஆணித்தரமாக நம்பியதே. வாழையடி வாழையாக அந்த அரியாசனத்தில் அமர்ந்த இந்தக் குடும்பம் ஏழு தேசங்களையும் தனது கைப்பிடியில் வைத்திருந்தது (மார்டெல்கள் வசமிருந்த டார்ன் மட்டும் குடையின் கீழ் இல்லாமல் டார்கேரியர்களுக்கு இணக்கமான, ஆனால் சமமான உறவுமுறையில் நீடித்திருந்தனர். தட்பவெப்பத்தில் முற்றிலும் வேறாய் இருந்த டார்ன் தேசத்தை எந்த காலகட்டத்திலும் டார்கேரியர்களால் கூட வெல்லமுடியவில்லை. மீதி ஆறு சிற்றரசுகளும் டார்கேரியர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தன) கோலோச்சிய எல்லா பேரரசுகளுக்கும் இறுதி வணக்கங்கள் செலுத்தப்பட்டு வந்ததைத் தான் சரித்திரம் முழுதும் படிக்கிறோம். அப்படி, வரவர ட்ராகன் கழுதையாகிப் போன கதையாக, நாய்களை விட அளவில் சின்னதாக சுருங்கிவிடுகிற ட்ராகன் இனம் நாளடைவில் மொத்தமாக புதைந்தழிந்தே போகிறது. டார்கேரியப் பேரரசின் ஆகப்பெரும் பலமான ட்ராகன்கள் வழக்கொழிந்து போனது அவர்களின் ஆட்சிக்கு அபாயமணியை ஒலித்தது. ஏகானின் ஆட்சிக்காலம் தொடங்கி ஏறத்தாழ இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த சக்தியாலும் வெல்ல முடியாத அமரஜோதியாக ஆதிக்கம் செலுத்தியது டார்கேரியப் பேரரசின் செங்கோல். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரின் தொடக்கத்திற்கு ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன், ஆட்சிபீடத்தில் ஐந்தாம் ஏகான் டார்கேரியன் அமர்ந்திருந்தார். ஒழிந்த ட்ராகன்களை மீண்டும் உயிர்ப்பிக்க இவரும், இவருக்கு முந்தைய சில மன்னர்களும் ரசவாத தந்திரங்கள், ரத்த சூனியம், மாந்திரீகம் என்று என்னென்ன தகிடுதத்தங்களோ செய்து பார்த்தார்கள். ஒன்றும் பலனில்லை. ஏகப்பட்ட ட்ராகன் முட்டைகள் கல்லாகிப் போனதுதான் மிச்சம். கோடை மண்டபத்தில்* செய்த அதுபோன்றதொரு சோதனை முயற்சி மன்னருக்கே சோதனையாகிப் போனது. ட்ராகன் முட்டைகளை பொரிக்க நினைத்து மண்டபம் மொத்தமும் பொரிந்து போனது. அவருடைய அரச மெய்க்காவலர்கள், வாரிசுகள் சிலரும் அங்கேயே தீயில் மாண்டனர். வெஸ்டரோசில் பிரபலமான கட்டுக்கதை ஒன்றுண்டு. கடவுள் ஒரு டார்கேரியனை படைப்பதற்கு முன்னால் ஒரு நாணயத்தை சுண்டி விடுவாராம். தலை விழுந்தால் பேரரசர், பூ விழுந்துவிட்டால் பெரும்பித்தர் என்று முடிவு கட்டுவாராம். கடைசி சில டார்கேரிய மன்னர்களைப் படைக்கும் போது பூ தான் மீண்டும் மீண்டும் விழுந்திருக்கவேண்டும்.

1*QO251usA9qEdfrrwIx-r6A.jpeg

Source

மடமன்னர் ஐந்தாம் ஏகானின் மரணத்திற்குப் முன் நிகழ்ந்த ஒன்பது காசு ராஜாக்களின் போரில்* தீரச்செயல் புரிந்த ஒரு இளம் டார்கேரியனுக்கு அந்த அசௌகரிய அரியணையில் இப்போது அமரும் வாய்ப்பு கிடைத்தது. (அது என்ன ஒன்பது காசு ராஜாக்கள்? ”விஷமிகளும், டார்கேரிய வழிவந்த பாஸ்டர்ட்களும், கடற்கொள்ளையர்களும் கூட சிம்மாசனத்திற்காக துடிக்கிறார்கள்! இந்த ராஜ்ஜியத்தில் ஒரு காசுக்கு ஒன்பது கிரீடங்களா கொடுக்கிறார்கள்?” என மாவீரர்களுக்கெல்லாம் மாவீரர் என்று புகழப்பட்ட டங்கன்* கேலியாக கேட்கப்போய், அதுவே இந்தப் போரின் புனைப்பெயராகத் தங்கிவிட்டது. சோகம் என்னவென்றால் இந்த மாவீரரும் கோடை மண்டப அசம்பாவிதத்தில் மரணத்தை தழுவினார். இப்படி தொடர், கதை நெடுக இடம்பெறுகிற பெயர்களுக்கும், இடங்களுக்கும், குடும்பங்களுக்கும், கட்டிடங்களுக்கும் பின்னால் சின்னச் சின்ன சுவாரஸ்யமான கதைகள் உண்டு) முதலாம் ஏகானைப் போலவே, புதிய மன்னருக்கும் அவரது சகோதரி ரயல்லாவுக்கும் மணமுடிந்து, மகனாக அழகிய இளவரசன் ஒருவரும் அரசதம்பதியருக்கு உண்டு. (தங்கை-தமக்கைகளையே கல்யாணம் செய்துகொள்கிற டார்கேரிய வழக்கம் நிறைய பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. அதனால் தான் கடவுள் நாணயத்தை சுண்டி விடவேண்டியிருக்கிறது என்பதே பரவலான நம்பிக்கை) டார்கேரிய மன்னர்களின் வரிசையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும் என்பதே அரசரின் விருப்பமாக இருந்தது. அவரது கனவுகள் பிரம்மாண்டமானவை. தலைநகரமான வேந்தன் மேடையின்* அருகில், கருநீர் விரிகுடாவின்* மறுபுறம் ஒரு புதிய வர்த்தக மாநகரத்தை நிர்மாணிக்க உத்தேசித்தார். வடக்கு எல்லையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று வாடுகிற எழுநூறு அடி உயர மதில் சுவரை* புதுப்பித்து உயர்த்தி, மேலும் புதிய காவல் கோட்டைகளை அமைக்க கனவு கண்டார். ஆட்சிக்கு வந்தவுடன் தனது முந்தைய அரசருடன் இறந்துபோன பல்வேறு அரசபதவிகளுக்கு வேகமும் விவேகமும் நிறைந்த பேர்களை ஏழு தேசங்களிலிருந்தும் தேடிப்பிடித்து தலைநகருக்கு அழைத்து வந்தார். ஒருவழியாக கடவுள் சுண்டிவிட்ட நாணயத்தில் தலை விழுந்துவிட்டது என்று வெஸ்டரோசி மக்கள் மனமகிழ்ந்தனர். அந்த அரசர் — முதல் மனிதர்களின் மன்னர், ஆண்டல் இன அரசன், ராஜாதி ராஜ ராஜ பராக்கிரம ராஜ குலதிலக இரண்டாம் ஏரிஸ் டார்கேரியன்*.

பொன்னும் வைரமும் அள்ள அள்ளக் குறையாத மேலைதேச சிற்றரசான காஸ்டர்லி பாறையின்* ஆட்சிமாற்றமும் அதே நேரத்தில் அரங்கேறியது. மூப்படைந்த டைடஸ்* தனது மகன் டைவினுக்காக பட்டங்களைத் துறந்தார். தனது குடும்பப்பெயரின் கௌரவத்திற்கு தந்தை டைடஸ் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக அவரது மகன் டைவின் லேனிஸ்டர்* கருதினார். இளகிய மனமும், தயாள குணமும் படைத்தவர் தான் சிற்றரசர் டைடஸ் லேனிஸ்டர். தனது தந்தைக்கு நேர்மாறாக மிகவும் கண்டிப்பானவராகவும் கறாரானவரகவும் இருந்து வந்தார் டைவின் லேனிஸ்டர். அவரது உறவுக்காரி ஜோ-ஆன்னாவை* திருமணம் செய்துகொண்டார். அவரது காதல் மனைவியிடம் அளவுகடந்த அன்பு செலுத்திய டைவினுக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று என இரட்டைக்குழந்தைகள் மூத்த வாரிசுகளாக வாய்த்தனர். பிரபுவாக பட்டமேற்ற டைவின் நிர்வாக சீர்கேட்டால் பாறைதேச சிற்றரசு பெரும் கடன் சுமையில் தத்தளிப்பதை அரசவையில் அறிவித்து, போர்க்கால அடிப்படையில் இழந்த செல்வத்தை மீட்க களமிறங்கினார். தன் அரசுக்கு கப்பம் கட்டாத குறுநிலப் பிரபுக்களுக்கு காகங்கள் மூலம் ஓலை அனுப்பி — அடிபணிந்து கடனைச் செலுத்துங்கள், இல்லையேல் கடனைச் செலுத்தும் வரை பணயக்கைதியாக குடும்பத்தினர் ஒருவரை அனுப்புங்கள் என்று ஆணையிட்டு படையாட்களை நாடெங்கும் அனுப்பினார். அஞ்சிய சில பிரபுக்கள் பணத்தை திருப்பிக் கொடுத்தனர், சிலர் கைதிகளைக் கொடுத்தனர். எனினும், ரெய்ன்* குடும்பத்தைச் சேர்ந்த பிரபு பாறைப்பிரதேச குறுநிலப் பிரபுக்களின் முன்னிலையில் டைடசின் மகனும் தந்தையைப் போலவே ஏமாளியாக இருக்கக்கூடும் என்று ஏளனம் செய்தார். சபையில் இதைக்கண்டு உந்தப்பட்ட மற்றொரு கடனாளியான டார்பெக்* குடும்பத்தைச் சேர்ந்த வால்டெரான் பிரபு லேனிஸ்டர்களை வாளால் வீழ்த்த முடிவு செய்தார். அறியாமையை உணர்வதற்குள் டைவினின் தலைமையிலான லேனிஸ்டர் படையால் சிறைபிடிக்கப்பட்டார் வால்டெரான். பதிலுக்கு லேனிஸ்டர் வாரிசுகள் மூவரைக் கடத்திச் சென்றார் வால்டெரானின் மனைவி. தவறுக்கு மேல் தவறு இழைத்துக்கொண்டிருக்கிறீர்கள், சிற்றரசுக்கு சிரம் தாழ்த்துங்கள் என்று எச்சரித்தார் டைவின். டைடசின் சுபாவ பலவீனத்தால், டைவினின் எச்சரிக்கையை மீறி பணயக் கைதி வால்டரான் பிரபுவை விடுவித்து தனது உறவினர்களை மீட்டார். மூன்று பேரைக் கடத்திச் சென்றவளுக்கு ஒரு பாடமாக அவள் கணவனை மூன்று துண்டாக வெட்டி அனுப்பியிருக்க வேண்டாமா என்று அரண்மனையின் நடுவே டைவின் தனது தந்தையை மிகவும் கடிந்துகொண்டார்.

டைடசின் அரவணைக்கும் குணம் லேனிஸ்டர் சிற்றரசை விட்டகலாது என்றெண்ணி இறுமாந்த ரெய்ன் பிரபுவும் டார்பெக் பிரபுவும் தொடர்ந்து கடனைச் செலுத்தாமல் பகடி செய்தனர். கடுங்கோபம் கொண்ட டைவின் இம்முறை தனது தந்தையை நம்பாமல் தானே படைகளை வழிநடத்தி காஸ்டமியர் கோட்டைக்கு புறப்பட்டார். கூரைகளையும் சுவர்களையும் தகர்த்து எறிந்தார். சிலைகளையும் சிற்பங்களையும் பாதுகாத்து வைத்திருந்த அரங்கங்களுக்கு நெருப்பு முட்டினார். ஈவு இரக்கமின்றி தள்ளாத கிழவர் முதல் பச்சிளம் பாலகர் வரை எல்லோரையும் சரமாரியாக வெட்டித்தள்ளினார். பிரபுக்களும் சகாக்களும் மட்டும் வெட்டிவைத்திருந்த சுரங்கங்களுக்குள் பதுங்கினர். இரண்டு பிரபுக்களும் சுரங்கங்களில் ஒளிந்துகொண்டு மிக்க பொன்னும் பொருளும் தந்து சமரசம் பேச டைவினை அழைத்தனர். சினங்கொண்ட சிங்கம் டைவின் ஈடு கொடுக்கவில்லை. தனது வாள்வீச்சிற்கு இணையான சொல்வீச்சை ஏழுதேசங்களுக்கும் அறிவிக்க தக்க தருணம் வந்துவிட்டதாக எண்ணினார். சுரங்கத்தின் வாயிலை பூட்டிவிட்டு சுரங்கத்திற்கு பக்கத்திலிருந்த நீர்நிலையின் மதகுகளை உடைத்து சுரங்கங்களுக்குள் தண்ணீரை மடைமாற்றினார். பிரபுக்கள் நீரில் மூழ்கி மூச்சுதிணறி இறந்துபோனார்கள். அன்றுடன் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கோலோச்சி வந்த இரு பிரபுக்களின் வம்சமும் வேருடன் பிடுங்கி எறியப்பட்டது. அன்றிலிருந்து டைவினின் பெயரை மேற்குநாட்டில் கேட்டாலே அத்தனை குறுநிலப் பிரபுக்களுக்கும் வயிற்றில் புளியமரத்தையே கரைத்தது. ரெய்ன் பிரபுவின் சின்னமும் சிங்கமுகம் தான், லேனிஸ்டர் பிரபுவின் சின்னமும் சிங்கமுகம் தான். இந்த இரு பிரபுக்களுக்குமான உரையாடல் தான் காஸ்டமியரின் மழை* என்ற பாடலாகி டைவினின் இறவாப்புகழை இன்றுவரை பறைசாற்றுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு டைவின் இசைக்கலைஞன் ஒருவனை புல்லாங்குழலுடன் சென்று இந்தப் பாடலை அவையில் இசைக்கச் சொல்வாராம். பாடல் முடிவதற்குள் டைவினுக்கு சேர வேண்டிய பொன்னும் தானியமும் மூட்டைகளில் ஒன்றுக்கு இரண்டாக குதிரைவண்டிகளில் ஏறும் என்பது செவிவழிச் செய்தி. இந்த செய்தி மன்னரின் காதுக்கு எட்டியது. டைவினை அரசர் ஏரிசுக்கு பால்ய வயதிலேயே பழக்கம் உண்டு. அரசவையின் பணியாளாக சேவை புரிந்த நாட்களில் டைவினும் ஏரிசும் நெருங்கிய தோழர்கள். அவர்களுடன் புயல்தேசத்துப் பிரபு ஸ்டெஃபன் பராத்தியன் நல்லவிதமாக நட்பு பாராட்டினார். இவரது மகன் தான் ராபர்ட் பராத்தியன் என்பது தான் திருப்புமுனை! நிதி நிர்வாகத்திலும், போர்த்தந்திரத்திலும் கைதேர்ந்த ஆலோசகர் தனக்கு வேண்டுமென்று விரும்பிய மாமன்னர் இரண்டாம் ஏரிஸ், டைவினை தனது வலதுகரமாக* பதவியேற்க ஓலை அனுப்பினார். காலம் தாழ்த்தாத இளஞ்சிங்கம் வேந்தர் மேடைக்கு விரைந்தது. வெஸ்டரோசின் வரலாற்றிலேயே மிக இளவயதில் மன்னரின் வலக்கர பதவிக்கு வந்த பெருமை டைவினையே சாரும்.

 

ஏழு என்பது அரியணைகளின் ஆட்டத்தில் சிறப்பம்சம் வாய்ந்த எண் — மார்ட்டினின் ஏழு புத்தகங்கள், ஏழு பிரதேசங்கள், ஏழு-முனை நட்சத்திரம், ஏழு …, ஏழு அரசமெய்க்காவல் சகோதரர்கள்*. நாட்டின் ஆகச்சிறந்த மாவீரர்களை ஒன்றுதிரட்டிய ஏழு இணையற்ற மறச்சகோதரர்களின் கூட்டணியே மன்னரின் மெய்க்காவலர் படையாகும். புயல்நாட்டினைச் சேர்ந்தவரும் “அஞ்சாநெஞ்சன்”என்ற பேர் கொண்டவருமான பெருந்தகை பேரிஸ்டர் செல்மி*, “விடியலின் வாள்” என்று புகழாரம் கொண்ட பெருந்தகை ஆர்த்தர் டேன்* (விடியல் என்ற பேர்கொண்ட குடும்ப வாள் எரிநட்சத்திரம் ஒன்றின் ஆற்றலைத் திரட்டி வடிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெருபேறாகவே டேன் பெருந்தகைகளால் காப்பாற்றப்பட்டு வந்திருக்கிறது. இந்த வாளைக் கைகொள்ளும் பலமும் மேன்மையும் பொருந்திய வீரருக்கு அளிக்கப்படும் சிறப்புப்பெயரே விடியலின் வாள்) டார்ன் நாட்டின் இளவரசர் லூவின் மார்ட்டெல்*, ஹாரென் மண்டபத்து* சிற்றரசர் வால்டர் வெண்ட்டின் தம்பி பெருந்தகைஆஸ்வால் வெண்ட்*, புயல்நாட்டைச் சேர்ந்த பெருந்தகை க்வேன் கான்ட்*, நதிப்பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தகை ஜானதர் டேரி*. இவர்கள் ஆறு பேரையும் தலைமை காத்தார் வெள்ளைக் காளை என்று அன்போடு அழைக்கப்பட்ட பெருந்தகை ஜெரால்ட் ஹைடவர்*. (இந்த பிரபுக் குடும்பம் அந்த சமயத்தில் ரீச் பகுதியின் பொறுப்பாளர்களாக வகித்து வந்தனர்) தன்னுயிரைக் கொடுத்தாவது மன்னரின் உயிரைக் காக்க இந்தச் சகோதரர்கள் எழுவரும் உறுதிமொழி ஏற்று, திருமணசுகத்தைத் துறந்து, வெள்ளை நிறச்சீருடை அணிந்து வலம் வந்தனர். ராஜகுருவாக மேஸ்டர் பைசெல்* அரசவை அங்கம் வகித்தார். இப்பேர்பட்ட வியத்தகு நாயகர்களின் மத்தியில் வளர்ந்த பட்டத்து இளவரசர் ரேகார் டார்கேரியன் போர்க்கலை மட்டுமின்றி, நுண்ணறிவிலும் மிகுந்த ஆற்றல் பெற்றவராய் விளங்கினார். புத்தகப்புழுவான அவருக்கு இசையிலும் அவருக்கு பெரும் ஆர்வம் இருந்தது. கவிதைகள் இயற்றும் திறனும் கொண்டிருந்தார். கோடை மண்டபத்திற்கு அடிக்கடி சென்றுவருகையில் அவர் பாடும் உருக்கமான பாடல்கள் கேட்போர் கண்ணில் நீரைப் பெருகச்செய்பவை என்று சொல்லக்கேள்வி.

1*_S8IbEHQgM2uF1MmujxvZw.jpeg
Kingsguard of Aerys-II Targaryen

Source

டைவின் வலக்கரமாக பதவி ஏற்றுக்கொண்டது முதலே வெஸ்டரோஸ் செல்வச்செழிப்பில் களித்தது. வரிகள் முறையாக வசூலிக்கப்பட்டு காலியாக இருந்த அரண்மனை கஜானா நிரம்பி வழிந்தது. டைவினின் திறமையை மெச்சி அரசர் சிறு அவையில்* புகழ்பாடாத நாளே இல்லை எனும் அளவிற்கு டைவினின் செல்வாக்கு உயர்ந்து நின்றது. படைகளை டைவின் செம்மைப்படுத்தினார். காலம் கனிந்திருக்க, தனது புதிய நகரம் மற்றும் மதில்சுவர் கோட்டைகள் பற்றிய கனவை டைவினிடன் அரசர் தெரிவித்தார். கனவுகளை மெய்ப்பிக்க எண்ணி, அரசரின் அனுமதியுடன் வரிகளை டைவின் உயர்த்தினார். தென்மேற்கு பிரபுக்களையும், மேலைநாட்டின் பிரபுக்களையும் வரிச்சுமை பெரிதாக பாதிக்கவில்லை. ஆனால், தலைநகரமான வேந்தர் மேடையின் அபரிமிதமான வளர்ச்சி காரணமாக, நகரத்திற்கு அண்மையில் இருந்த ஊர்கள் வறுமையில் வாடின, வரியைச் செலுத்தமுடியாமல் மக்கள் குமுறினர். டைவினின் அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. இது மன்னரின் நிம்மதியைக் கொன்றது. பெண்டோசிலிருந்த ஒரு உளவாளியின் பெயர் செங்கோட்டையில்* அடிக்கடி அடிபட்டது. தூதுகாகங்களை அனுப்புவதில் பாண்டித்தியம் பெற்ற மேஸ்டர்கள் அவ்வப்போது அவரது பரந்து விரிந்த ஒற்றர் படையைப் பற்றி பெரிதும் சிலாகித்து வந்தனர். அரசர், வெஸ்டரோசின் அரசவை உளவாளியாக அவரைக் கொண்டுவர முடிவு செய்தார். உலகின் மிகப்பெரும் பேரரசரின் அழைப்பை ஏற்று அரசவைக்கு வந்து சேர்ந்தார் — சிலந்தி என்ற அடைமொழிக்குரிய வேரிஸ் பிரபு*. தனது தேர்ந்த ஒற்றர்படையின் மூலம் அரசர் இதுவரை கண்டிராத கேட்டிராத தேசத்து செய்திகளை எல்லாம் வேரிஸ் கொண்டு வந்து சேர்த்தார். ஏரிசின் மூத்த மகனும் பட்டத்து இளவரசனுமான ரேகார் டார்கேரியனிற்கு வயது கூடிக்கொண்டே போனது. ஆனால், ராணி ரயெல்லாவின் அடுத்தடுத்த கர்ப்பங்கள் நிலைக்கவில்லை. கூடப்பிறந்த சகோதர சகோதரிகளையே திருமணம் செய்துகொள்ளும் டார்கேரிய வழக்கத்திற்கு முட்டுக்கட்டையாக ராஜவாரிசுகள் தொடர்ந்து இறந்தன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள எண்ணிய டைவின் தனது மூத்த மகளான செர்சி லேனிஸ்டரை இளவரசர் ரேகாருக்கு சம்மந்தம் செய்யக்கோரி முடியரசரிடம் வேண்டினார். பெருங்கோபம் கொப்பளித்த அரசர், ஒரேயடியாக இந்த எண்ணத்தைக் கைவிடுமாறு டைவினிடம் சுடுசொற்களால் செல்லிவிட்டார். மனமுடைந்து போனார் டைவின். இதையடுத்து டைவினின் காதல் மனைவி ஜோ-ஆன்னா மூன்றாம் பிள்ளையை பிரசவித்து இறந்துபோனார். மேலும், பிறந்த குழந்தை டிரியனும் வளர்ச்சி குறைந்த விசித்திரக்குள்ளனாக வாய்த்தது. பெருஞ்சோகத்தில் ஆழ்ந்தாலும், தொடர்ந்து மன்னரின் சேவையில் செங்கோட்டையிலேயே பணிபுரிந்தார். பட்டத்து இளவரசருக்கு எழு தேசங்களுள் தங்கள் முடிக்கு கீழே இல்லாத ஒரே தேசமான டார்ன் தேசத்து மார்டெல் பிரபுக்களின் வாரிசு எலியா மார்ட்டெலுடன் மணமுடித்தார் அரசர் ஏரிஸ். இதனால் டைவினுக்கும் ஏரிசுக்கும் இடையே மெல்லிய விரிசலாக தொடங்கிய சச்சரவு பனிப்போராகவே மாறத் தொடங்கியது.

1*-q_8jRVUzWcVp4BRj0sqlw.jpeg
Westeros — Map with Territory marked by Sigils of the

Source

மீன்கொடி பொறித்த டல்லி பிரபுக்களின் சிற்றரசை ஆளும் ப்ரெண்டின் டல்லி பிரபுவுடன் புதிய விருந்தாளியாக ஹேரன் மண்டபக் கோட்டைக்கு* இளைஞன் பீட்டர் வந்து சேர்கிறார். வேல் நாட்டின் புகழ்பெற்ற வீரப்பெருந்தகைகளின்* வரிசையில் அதிகம் கேள்விப்படாத பேலிஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர் என்று தகவல். வந்த மாத்திரத்திலேயே பிரபுவின் இளைய மகள் லிசா, பீட்டர் மீது காதல் வயப்படுகிறாள். ஆனால், பீட்டரின் கடைக்கண் பார்வை லிசாவின் மூத்த சகோதரி கேட்டலின் மீதே சாய்கிறது. அவரது மெல்லிய தோற்றத்தால் பீட்டர் என்கிற பெயரை விட டல்லி சகோதரிகளின் தம்பி எட்மயர் டல்லி சூட்டிய பட்டப்பெயரான சிறுவிரல்* என்றே அநேகம் பேருக்கு அறிமுகம். (பேலிஷ் குடும்பம் இருந்த கடற்கரைப் பகுதி வரைபடத்தில் கைவிரல்களைப் போலவே காட்சியளிப்பதாலும் இந்த பெயர் பீட்டருக்கு ரொம்பவே பொருந்திப் போகிறது) மூத்த மகளான கேட்டலினுக்கு வடக்குதேசமான விண்டர்ஃபெல்லின் பிரபு ரிக்கார்ட் ஸ்டார்க்கின் மூத்த மகனும் சிற்றரசுக்கு பட்டத்து இளவரசருமான பிராண்டன் ஸ்டார்க்கை மணமுடிக்க பெற்றோர்கள் நிச்சயிக்கிறார்கள். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுவிரல், பராக்கிரமசாலியான பிராண்டனை வாள்வீச்சு போட்டிக்கு* அழைக்கிறார். (வெஸ்டரோசில் கத்திசண்டை போட்டிகளுக்கு பஞ்சமே இல்லை. ஒருவரை போட்டியில் வீழ்த்துபவருக்கே பந்தயத்தில் வெற்றியும், மண்ணோ/ பொன்னோ/ பெண்ணோ கிடைக்கும். இவ்வளவு ஏன், குற்றம் சாட்டப்பட்டு அரசரின் விசாரணையில் இருந்தாலும் கூட போட்டிக்கு அழைக்க* குற்றவாளிக்கு உரிமை வழங்கப்படும். நியாயத்தின் பக்கமே தெய்வங்கள் வெற்றியைத் தருவார்கள் என்பது வெஸ்டரோசின் நீதி) பெயருக்கேற்ற மாதிரியே வலுவில்லாத சிறுவிரல் போட்டியில் படுதோல்வி அடைகிறார். கேட்டலின் டல்லி — பிராண்டன் ஸ்டார்க் திருமணம் உறுதியாகிறது.

பிராண்டனுக்கு பேரழகும் பெருங்கோபமும் ஒருங்கே கொண்ட லையான்னா ஸ்டார்க் என்றொரு தங்கையும், பொறுமையும் தீரமும் கொண்ட எட்டார்ட் ஸ்டார்க், பெஞ்சன் ஸ்டார்க் என்று இரு தம்பிகளும் உண்டு. லையான்னாவிற்கும் புயல்தேச சிற்றரசின்* இளவரசர் ராபர்ட் பராத்தியனுக்கும் நிச்சயம் நடந்தேறுகிறது. உடன்பிறவா சகோரர்களாக உயிர் நண்பர்களாகப் பழகி வந்த ராபர்ட்டும் எட்டார்டும் மலைப்பிரதேச சிற்றரசைச் சேர்ந்த ஈரிக்கோட்டையில் ஆட்சி புரிந்த ஜான் ஆரினின் கண்காணிப்பில் தங்களது இளமைக்காலத்தை கழித்து வருகிறார்கள். ராபர்ட் பராத்தியனுக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உண்டு — ஸ்டான்னிஸ் பராத்தியன் மற்றும் ரென்லி பராத்தியன். இத்தனை பிரதான குடும்பத்து சிற்றரசுகளின் இளவரசர்களுக்கு ஞானம் போதிக்க பிரபுக்கள் பிரத்தியேகமாக மேஸ்டர்களை வரவழைத்து போதித்தனர், போர்க்கலையை பயிற்றுவிக்க சிற்றரசின் கீழிருந்த தலைசிறந்த வீரப்பெருந்தகைகள் நியமிக்கப்பட்டார்கள். பல ஆண்டுகள் கழித்து மன்னருக்கு இரண்டாவதாக ஒரு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு விசேரிஸ் என்று பெயரிட்டார் மன்னர். அடிக்கடி திருவிழாக்கள், போட்டா போட்டிகள், திருமண வைபோகங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் அண்மையிலிருந்த சிற்றரசர்கள், பிரபுக்கள், பெருந்தகைகள், சான்றோர் பெருமக்கள் அனைவரும் சந்தித்து உள்நாட்டு உறவுகளை மேம்படுத்திக்கொண்டனர். சில பெரும் வைபோகங்களில் மன்னரே கூட கலந்துகொண்டார். இப்படியான சந்திப்புகளில் புதிய திருமண நிச்சயங்கள், புனைப்பெயர் சூட்டல்கள், பதவியேற்புகள் நடக்கலாம், அதே நேரம் இரு குடும்பங்களுக்கிடையே தீராத பகை கூட உண்டாகலாம்.

கருநீல விரிகுடாவை ஒட்டிய கரையிலிருந்த ஊரான டஸ்கெண்டேலுக்கு அரசர் ஏரிஸ் தனது மெய்க்காவலர் ஒருவரான க்வேன் கான்ட் துணையுடன் விஜயமளித்தார். வரிச்சுமையால் தவித்துவந்த உள்ளூர் பிரபு டெனிஸ் டார்க்லின் மன்னருக்கெதிராக கலகத்தைத் தூண்டினார். அதிருப்தியால் வாடிய மக்களின் உதவியுடன் மெய்க்காவலரைச் சாய்த்துவிட்டு அரசரை சிறைபிடித்தனர். காட்டுத்தீ போல பரவிய இந்த செய்தி டஸ்கெண்டேல் கலகம்* என்றறியப்பட்டது. சினங்கொண்ட அரசரின் வலக்கரம் டைவின் உடனடியாக நிபந்தனைகளைக் கேட்டு ஒருபுறம் ஓலைகளை அனுப்பியவாறே அஞ்சாநெஞ்சர் பாரிஸ்டனுடன் மன்னரை உடனடியாக மீட்க திட்டம் தீட்டினார். ஏழு நாடுகளும் அடிபணிந்த டார்கேரிய மன்னரின் செல்வாக்கு பெருமளவு சரிந்தது. பேச்சுவார்த்தைக்கு ஈடுகொடுக்காத டார்க்லி பிரபுவால் டைவின் லேனிஸ்டர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஆறுமாத காலமாக போராடி கடைசியில், டைவினின் திட்டப்படி தனியொரு வீரராக புறப்பட்ட பேரிஸ்டன் செல்மி டஸ்கெண்டேலில் மக்களுடன் மக்களாகக் கலந்து, கோட்டைக்குள் ரகசியமாகப் புகுந்து, தனது குதிரையிலேயே அரசரை வெற்றிகரமாக வேந்தர் மேடைக்கே மீட்டு வந்தார். மன்னரை பத்திரமாக அழைத்து வந்த பிறகு கலகக்காரர்களையும் அவர்களுக்கு தலைமையேற்ற டெனிஸ் டார்க்லின் பிரபுவையும் கொன்றனர் டைவின் அனுப்பிய சிப்பாய்கள்.

1*fechMD5oq5sGDf39luM_3A.png

Source

இந்தத் துயர நிகழ்விற்குப் பின்னால் அரசர் செங்கோட்டையை விட்டு வெளியேற மறுத்துவிட்டார். அவரது சுபாவம் அடியோடு மாறிப்போனது. நகங்களைக் கூட வெட்டாமல் பித்து பிடித்தவரைப் போல உரக்க சிரித்துக்கொண்டும், திரும்பத் திரும்ப பேசிக்கொண்டும் பொழுதைப் போக்கினார். அரசரின் வெற்றிடத்தை மீறி நாட்டின் நிர்வாகத்தை டைவினே திறம்பட கவனித்துக்கொண்டதைக் கண்டு ஏரிசுக்கு பொறாமை உருவானது. டைவினின் கொடுங்கோல் வரித்திட்டங்களால் தான் தன்னை மக்கள் சிறைபிடித்ததாகக் கருதி, டைவினின் ஒவ்வொரு அசைவிலும் தேவையற்ற பீதியடைந்தார். புதிதாகப் பிறந்த பேரக்குழந்தைகளைக் கூட தனது மருமகளைப் போல டார்ன் தேச வாடை வீசுவதாகக் கேலி செய்து தொடவே மறுத்துவிட்டார். மூப்படைந்துவிட்ட காலத்தில் தன்னை எந்நேரமும் ஆபத்து சூழ்ந்திருப்பதாக கற்பனை செய்து தனது மகன் ரேகார் டார்கேரியன், தனது வலக்கரம் டைவின் — இருவரையும் சந்தேகக்கண்ணோடு மட்டுமே அணுகினார். அவர் கேட்டிசைந்த ஒரே குரல் தனது ஒற்றர்படைத்தலைவர் வேரிசுடையது மட்டுமே. எல்லாவற்றுக்கும் மேலாக காட்டுத்தீ* என்கிற அபாய ரசவாத முயற்சியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். எரியத் தொடங்கினால் எளிதில் அணையாத இந்த வேதிப்பொருள் தான் கோடை மண்டபத்தையும் தனக்கு முந்தைய அரசரையும் பலி கொண்டது என்று நன்கறிந்தும் யாருடைய ஆலோசனைக்கும் செவி மடுக்காமல், தொடர்ந்து இன்னல்கள் தந்தார். இது அனைத்தையும் மீறி டைவின் தனது மனைவியின் மறைவைக் கூட கடந்து நாட்டை பின்னாலிருந்து இயக்கி வந்தார். மாதக்கணக்கில் கோட்டைச்சுவர்களுக்கு பின்னாலேயே அடைந்து கிடந்து குழந்தையின் கேசம் போல நீளமாக வளர்ந்த நகங்களும், உரத்த சிரிப்பொலியுமாய் மாறிப்போன பேரரசர் ஏரிஸ் டார்கேரியனுக்கு மக்கள் வைத்த பட்டப்பெயர் — பித்த ராஜா*! ஆக, சுண்டிவிட்ட நாணயத்தில் இந்த முறையும் விழுந்தது பூ தானோ என்று நாடே கவலையில் ஆழ்ந்தது. மக்களின் சோகத்தைப் போக்க கதிரவன் பயிர்களின் மேல் பட்டொளி வீசி எழுந்தது. கோடைக்காலத்தின் வருகையை ஒட்டி வென்ட் பிரபுவின் மகளது பெயர்சூட்டு விழாவிற்கு நாடெங்கும் அழைப்பிதழ்களைத் தாங்கிய காகங்கள் சிறகடித்தன. அரசல் புரசலாக பட்டத்து இளவரசருக்கு முடிசூட்டுகிற சரியான தருணம் பற்றி சிறு அவையில் சலசலப்புகள் தொடங்கின. வெஸ்டரொஸ் பெருங்கண்டமே வரவிருக்கும் புதிய கோடையையும், புதிய மன்னரையும் எதிர்நோக்கிக் காத்திருந்தது.

(தொடரும்)

கலைச்சொற்கள்

  1. புகையும் கடல் — Smoking Sea

2. வலேரியப் பேரழிவு — Doom of Valyria

3. ட்ராகன் பாறை — Dragonstone

4. டார்கேரியர்கள் — House Targaryen

5. முதலாவது ஏகான் டார்கேரியன் — Aegon — I Targaryen

6. கோடை மண்டபம் — Summerhall

7. ஒன்பது காசு ராஜாக்களின் போர் — War of the Nine Penny Kings

8. மாவீரர் டங்கன் — Ser Duncan, the Tall

9. வேந்தர் மேடை — King’s Landing

10. கருநீர் விரிகுடா — Blackwater Bay

11. மதில் சுவர் — The Wall

12. இரண்டாவது ஏரிஸ் டார்கேரியன் — Aerys — II Targaryen

13. காஸ்டர்லி பாறை — Casterly Rock

14. டைடஸ் லேனிஸ்டர் — Titus Lannister

15. டைவின் லேனிஸ்டர் — Tywin Lannister

16. ஜோ-ஆன்னா லேனிஸ்டர் — Joanna Lannister

17. ரெய்ன் பிரபு — Lord Reyne

18. டார்பெக் பிரபு — Lord Tarbeck

19. காஸ்டமியரின் மழை — Rains of Castamere

20. அரசரின் வலதுகரம் — Hand of the King

21. அரசமெய்க்காவல் சகோதரர்கள் — Brothers of the Kingsguard

22. பெருந்தகை பேரிஸ்டன் செல்மி — Barristan “The Bold” Selmy

23. “விடியலின் வாள்” என்ற பெருந்தகை ஆர்த்தர் டேன் — Sword of the Morning aka Arthur Dayne

24. இளவரசர் லூவின் மார்ட்டெல் — Prince Lewin Martell

25. ஹாரென் மண்டபம் — Harrenhall

26. பெருந்தகை ஆஸ்வால் வெண்ட் — Ser Oswall Whent

27. பெருந்தகை க்வேன் கான்ட் — Ser Gwayne Gaunt

28. பெருந்தகை ஜானதர் டேரி — Ser Jonothor Darry

29. வெள்ளைக் காளை என்ற பெருந்தகை ஜெரால்ட் ஹைடவர் — Ser Gerold “The White Bull” Hightower

30. ராஜகுரு பைசெல் — Grandmaester Pycelle

31. சிறு அவை — Small Council

32. செங்கோட்டை — Red Keep

33. சிலந்தி (எ) வேரிஸ் பிரபு — Lord Varys aka The Spider

34. ஹேரன் மண்டபம் — Harrenhall

35. வேல் நாட்டின் வீரப்பெருந்தகைகள் — Knights of the Vale

36. சிறுவிரல் — Littlefinger

37. போட்டி — Duel

38. போட்டியின் பால் விசாரணை — Trial by Combat

39. புயல்தேச சிற்றரசு — Stormlands

40. டஸ்கெண்டேல் கலகம் — Duskendale Mutiny or The defiance of Duskendale

41. காட்டுத்தீ — Wildfire

டிஸ்கி: கதைச்சுருக்கம் பற்றி மேலதிக தகவல்களுக்கு ரெட்டிட் அல்லது விக்கியாவை நாடுங்கள். பேட்ரியான் என்கிற தளத்தில் தங்கள் பதிவுகளைப் பகிர்கிற யூட்யூப் அரியணைகளின் ஆட்ட ரசிகப் பெருமக்கள் ஏராளமான விஷயங்களைப் பேசிப் பேசி மாய்கிறார்கள். எனக்கு பிடித்த சில யூட்யூப் அலைவரிசைகளை நீங்களும் பின்தொடர பரிந்துரை செய்கிறேன் — The Last Harpy, Secrets of the Citadel, GoT Academy, Daemon Blackfyre, Fire and Blood, Game of Theories, Talking Thrones.

 

https://medium.com/@venkiraja/அரியணைகளின்-ஆட்டம்-game-of-thrones-முன்கதை-சுருக்கம்-பாகம்-1-8ea14e54bc58

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் இப்போதெல்லாம் எனது பொழுதுபோக்கு இத்தகையவற்றைப்பார்ப்பதுதான் ஒரு சீசன் முடிந்தால்தான் பார்ப்பது. எபிசோட் எபிசோட்டாக பார்க்க விரும்புவதில்லை. ஏற்கனவே வான் கெல்சிங், ஸ்ரேஞ்சேர்ஸ் பவர், வோக்கிங் டெத் இப்படியாக அடுத்த சீசன் முடிவுவரும்வரைக்கும்  காத்திருக்கவேண்டி இருக்கிறது. கேம் ஒப் த்ரோன்ஸ் பற்றி வேறு சிலரும் கூறியுள்ளார்கள் உங்கள் பதிவு ஆர்வத்தை தூண்டுகிறது தற்சமயம் ஸ்கூல் கொலிடே பிள்ளைகள் என்னைப் பார்க்க அனுமதிக்கும் எபிசோட்டுகளோடு நானும் இருந்துவிட்டால் அவர்களுக்கு மகிழ்ச்சி. இந்த இணைப்பிற்கு நன்றி கிருபன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சீரியல் பார்க்க விரும்புவதில்லை. எனவே முன்னர் சீசன்களைப் பார்க்கவில்லை. இந்த வருடம் பார்ப்போம் என்று சம்மரில் ஆரம்பித்து சீசன் 7 வரை பார்த்து முடிக்க டிசம்பர் ஆகிவிட்டது.

இறுதி சீசன் 2019 இல்தான் வரும் என்று சொல்கின்றார்கள். அதுவரை இப்போதைய வேலையைத் தொடர்ந்தால் இலவசமாகப் பார்க்கலாம்?

பி.கு. Game of Thrones பிள்ளைகளுடன் பார்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியணைகளின் ஆட்டம் — கேம் ஆஃப் த்ரோன்ஸ்: முன்கதை சுருக்கம் (பாகம் 2)

டிசம்பர் 12, 2017 இந்த ஆண்டின் வரலாறுகளும் நாட்டுப்புறக்கதைகளும் அத்தியாயம் வெளிவரவிருக்கிறது. அதையொட்டி HBO வெளியிட்டிருக்கிற முன்னோட்டம்.

தொடரும் சம்பவங்கள் பற்றிய சிலபல தகவல்கள் தொடரை இன்னும் பார்க்காதவர்களுக்கு அப்பட்டமாக நிறைய மர்மங்களை போட்டு உடைக்கக்கூடியவை. ஆகவே, அவற்றுள் முக்கியமான சில சம்பவங்களை இலைமறை காய்மறையாக வேறு வழியின்றி தவிர்த்திருக்கிறேன். மறுபடியும் குறிப்பிடுகிறேன், நான் இன்னும் புத்தகங்களை வாசிக்கவில்லை. தொடர்ந்து மார்ட்டினின் வாசகர்களும் தொடரின் நேயர்களும் ரெட்டிட்டில் உரையாடுவதையும், காணொளிகளில், ட்விட்டரில், விக்கியாவில் பார்த்த விஷயங்களின் வெளிப்பாடே இந்தப்பதிவு. சென்ற பதிவைப் போலவே தமிழாக்கப்பட்ட சொற்களுக்கு இணையான ஆங்கில சொற்கள் பதிவின் முடிவில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ளன. மொழிபெயர்ப்பிலோ, தகவல்களிலோ பிழைகள் இருப்பின் மன்னித்தருளி பின்னூட்டங்களில் தெரிவிக்கவும்.
1*9ZEFHgIRQNoYtRlwhRGvdA.jpeg
War of the Usurper. Source: http://aminoapps.com/page/thrones/8153652/back-through-the-reeds

புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே, வெஸ்டரோசில் கோடைக்காலம் அரும்பியதாக எண்ணி மக்கள் குதூகலித்தனர். பொழுதுகள் கதகதப்பாக புலர்ந்தன, மண்ணெங்கும் மலர்கள் மணம் வீசின. குடியானவர்களின் வயல்கள்தோறும் கதிர்கள் ஆளுயர வளர்ந்து, நாட்டினர் எழிலும் ஏற்றமும் கொண்டனர்; பிரபுக்களின் தோளில் முத்தும் பொன்னும் ஜொலித்தது. நூறாண்டுக்கு ஒருமுறை பொங்கும் வசந்தகாலத்தில் ஹேரன் மண்டபம் விழாக்கோலம் பூண்டது. எல்லா திசைகளிலும் காகங்களின் கால்களில் வால்டர் வெண்ட் பிரபுவின் மகளது பெயர்சூட்டல் திருவிழா அழைப்பிதழ்கள் விரைந்தன. அதே தருணத்தில், மன்னர் ஜஹேரிசின் காலத்திலிருந்தே அரசமெய்க்காவலராகப் பணிபுரிந்த பெருந்தகை ஹார்லன் க்ராண்டிசன் மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரது இடத்தை நிரப்ப மன்னரின் தேர்வு — டைவினின் மூத்த மகனும் பாறைதேச பட்டத்து இளவரசருமான ஜேமி லேனிஸ்டர். 15 வயதே நிரம்பிய ஜேமி மெய்க்காவலர் சகோதரர்களின் நீண்ட பட்டியலில் இடம்பெறுவதையே பெரும்பேறாக, அதிலும் வரலாற்றின் மிக இளைய பெருந்தகையாக அமைவதை பிறவிப்பயனாகவே கருதினார். ஆனால், தந்தை டைவின் இந்த முடிவைக் கொஞ்சமும் ஏற்கவில்லை. மேற்குநாட்டின் ஒரே வாரிசாக ஜேமியைத் தான் அவர் பாவித்தார். பிறந்ததிலிருந்தே விசித்திரக்குள்ளனாக சபிக்கப்பட்ட மற்றொரு மகன் டிரியனை துச்சமாக மதித்தார். ஒரே மகளுக்கு ரேகாரை மணமுடிக்க மறுத்ததுமின்றி, தற்போது மகனின் சிற்றரச மகுடத்தையும் பறித்துக்கொண்ட மன்னரின் சூழ்ச்சியைக் கண்டுகொண்ட டைவின் மனக்கசப்பின் உச்சியில், முடிவாக தனது வலக்கர பதவியைத் துறந்து மேற்குநாட்டிற்கு திரும்பினார். பித்தம் தலைக்கேறிய அரசர் தனக்கு பொழுதெல்லாம் துதிபாடுகிற வயசாளி ஓவென் மெர்ரிவெதருக்கு அந்தப் பதவியை வழங்குகிறார். பெருநாட்டின் மையப்புள்ளியான ஹேரன் மண்டபத்துத் திருவிழாவிற்கு பலப்பல பிரபுமார்களும் பெருந்தகைகளும் வந்து குவிகின்றனர். நூற்றுக்கணக்கான நாட்களாக செங்கோட்டையிலேயே அடைபட்டுக் கிடந்த மன்னர் ஏரிசும் வருகை புரிய இருப்பதாக சலசலப்பு எழுந்தது.

1*05NEIkojS974_DjLsjHeEw.png
Aerys II Targaryen’s Kingsguard. Source: reaprycon.deviantart.com

வால்டர் வெண்ட் பிரபுவின் மகளுக்கு பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவி என்ற பட்டம் வழங்கப்பட்டு மலர்க்கிரீடம் அணிவிக்கப்பட்டது. போட்டிகள் கோலாகலமாக ஆரம்பமானது. வில்லாயுதப் போட்டி, ஈட்டியெறியும் போட்டி, குதிரையேற்றப் போட்டி, கோடரி சுழற்றும் போட்டி என்று வீரர்கள் பலப்பரீட்சை வெகு விமர்சையாக நடைபெற்றது. செல்வச்சீமான்களான லேனிஸ்டர் பிரபுக்கள் அழைப்பு விடுத்த முந்தைய போட்டியை விட இம்முறை பரிசுகள் மூன்று மடங்கு உயர்ந்திருந்ததால் மோதல் மிகக்கடுமையாக இருந்தது. விழாவை முன்னிட்டு பெருநாட்டில் வந்தவர்களை விட வராதவர்களை எண்ணுவதே சுலபம் என்று சொல்லுமளவிற்கு பெருந்தலைகளின் நடமாட்டம் அலைமோதியது. ஆறு அரசமெய்க்காவலர் பெருந்தகைகள், ஈரிக்கோட்டை சிற்றரசர் ஜான் ஆரின், அவரது இளவல்கள் புயல்தேச இளவரசர் ராபர்ட் பராத்தியன், வடக்குநாட்டின் எட்டார்ட் ஸ்டார்க், அவரது தங்கை லையான்னா ஸ்டார்க், தமையன் பிராண்டன் மற்றும் பெஞ்சன் ஸ்டார்க், எட்டார்டின் காதலியும், மெய்க்காவலர் ஆர்தர் டேனின் தங்கையுமான அஷாரா டேன், ஜான் கானிங்டன் பிரபு, ரீச் சிற்றரசைச் சேர்ந்த மேஸ் டைரெல், இளவரசர் ரேகார் டார்கேரியன், மனைவியும், இளவரசியுமான எலியா மார்ட்டெல் மற்றும் மாமன்னர் ஏரிஸ் டார்கேரியன் என்று ஏழு சிற்றரசுகளின் பிரதான அரசியல் தலைவர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக்கொண்டனர். விருந்தினர்களை மகிழ்விக்க கேளிக்கை நிகழ்ச்சிகள், நாட்டிய நாடகங்கள், விருந்து உபசாரங்கள் என்று முதல் சில தினங்கள் களை கட்டியது. திருவிழா, கேளிக்கை என்றாலே சச்சரவுகளுக்கு பஞ்சமிருக்காது தானே? அடையாளம் தெரியாத ஒரு வடக்குதேசத்துக்காரரை 15 அகவை கூட நிரம்பாத நான்கு முரட்டு சேவகர்கள் மூர்க்கமாக தாக்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். வெஸ்டரோஸ் வரைபடத்தில் மதிற்சுவருக்கு முந்தைய பகுதி கழுத்தைப் போல தோற்றமளித்ததால் அந்தப்பகுதிக்கு கழுத்து என்ற பேரே நிலைத்துவிட்டது. அங்கிருக்கிற எளிமையான பனிதேசத்துக்காரர்கள் எளிமையான குடில்களில் வாழ்பவர்கள். தேகம் மெலிந்து உடற்பளுவின்றி உயரம் குறைவாகவே அவர்கள் காணப்பட்டனர். புஜபலமிக்க வெஸ்டரோசி மக்கள் கழுத்தூரார்களை அசட்டை செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள். தாக்குதலுக்குள்ளான நபர் அந்தப்பகுதியைச் சேர்ந்தவர் போலத்தான் தெரிந்தார். இந்த விஷமத்தனத்தை கண்டு பொறுக்காத லையான்னா ஸ்டார்க் நான்கு சேவகர்களையும் புரட்டி எடுத்தார். முரடர்கள் அத்தனை பேர் மீசையிலும் மண். அநேகமாக தர்ம அடி வாங்கிய வடக்குநாட்டவர் ஹாலண்ட் ரீடாக இருக்கக்கூடும் என்று தகவல். அவர் லையான்னாவின் அண்ணன் பிராண்டனின் நெருங்கிய நண்பர் என்பதாலேயே லையான்னா சீற்றம் கொண்டார் என்று பரவலாக பேச்சு. ரீட் எளிமையான மனிதராக இருந்தாலும் அவரது சிற்றூருக்கு அவரே பிரபு என்பதால் அவருக்கும் உபசாரங்களும் விருந்துகளும் அளிக்கப்பட தன் அண்ணன் பெஞ்சன் ஸ்டார்க்கிடம் லையான்னா முறையிட்டார். பொருத்தமான உடைகளுடன் அரசவிருந்திற்கு ரீட் பிரபுவுடன் சங்கமித்தனர்.

நாட்டின் மிக முக்கிய நபர்கள் அத்தனை பேரும் அந்த அரங்கத்தில் குழுமியிருந்தனர். அரசர் உட்பட. பல மாதங்களாக பொதுவில் யாருமே பார்க்காத அரசர் நீண்ட நகங்களுடனும், கேசத்துடனும் முழுப்பைத்தியக்காரராக காட்சியளித்து மக்களுக்கு பெரும் சங்கடத்தைத் தந்தார். சான்றோர்கள் முன்னிலையில் ஜேமி லேனிஸ்டரின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது. முறையாக வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டு அரச மெய்க்காவலர் பொறுப்பேற்றார் ஜேமி. மதுவிலேயே திளைத்த ராபர்ட் பராத்தியன் அங்கு நடந்த குடிமகன்களுக்கான போட்டி ஒன்றில் பட்டையைக் கிளப்பினார். ஹாலண்டைத் தாக்கிய பேர்களில் மூவரை அண்ணன் பெஞ்சனிடம் அடையாளம் காட்டினார் லையான்னா. அண்ணன் பிராண்டனின் விண்ணப்பத்தின் பேரில், தனது காதலி அஷாரா டேனுடன் நடனமாடினார் எட்டார்ட் ஸ்டார்க். முடிவில், இளவரசர் யாழிசையுடன் பாடிய பாடலில் லையான்னா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தமுடியாமல், கண்ணீர் மல்க மனமுருகினார். அதைக்கண்டு கிண்டல் செய்த பெஞ்சனின் தலையில் மதுவை ஊற்றினார் லையான்னா. விருந்தை முடித்துக்கொண்டு கிளம்புகையில், ஹாலண்ட் ரீட் பிரபுவிற்கு நடந்த சோகத்திற்கு ஈடாக பழிவாங்க குதிரையும் ஆயுதங்களும் தந்து மேலும் சில உதவிகளும் செய்து தருவதாக அவருக்கு வாக்களிக்கிறார் பெஞ்சன் ஸ்டார்க். போட்டிகள் உச்சகட்டத்தை எட்டின. மாவீரர்களையே கதிகலக்கும் வேல்வீச்சு* போட்டிகள் அறிவிக்கப்பட்டன. ஏழு நாட்கள் நடக்கிற போட்டியில் ஐந்து நாட்கள் வரை நடைபெற்ற ஆகக்கடுமையான போட்டி அதுவே. ஆகவே, பரிசுகளை அள்ளிக்குவிக்கும் வாய்ப்பு வேல்வீச்சின் வெற்றிவீரரையே சாரும். நீளமான தடுப்புகளின் இருபுறமும் வேலேந்திய வீரர்கள் குதிரைகளின் குளம்போசை அதிர மோதிக்கொள்ள வேல் செலுத்தி கேடயத்தைத் தாண்டி போட்டியாளரை குதிரையிலிருந்து திறம்பட வீழ்த்துவதே ஆட்டத்தின் குறிக்கோள். ஆட்டத்தில் ஜெயிக்கிற வீரருக்கு பொன்னும் பொருளும் மட்டுமின்றி தன் மனம் கவர்ந்த பெண்ணுக்கு பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவி* என்கிற பட்டத்தை வழங்கும் அரிய வாய்ப்பும் உண்டு. விழாவின் துவக்கத்தில் அந்த பட்டத்தைப் பெற்ற வால்டர் வெண்ட் பிரபுவின் மகளது கௌரவத்தை அவளது தமையன்மார்களும், பிரபுவின் தம்பியும், அரசமெய்க்காவல் படையைச் சார்ந்த பெருந்தகை ஆஸ்வால் வெண்ட்டும் காக்க களத்தில் குதித்தனர். பாரம்பரிய வடிவப்போட்டிகள் முதலில் நடத்தப்பட்டன. ஏழுபேர் கொண்ட மோதலான அந்த வில்வீச்சுப் போட்டியில் கலங்காத கலைமான் ராபர்ட் பராத்தியன் ஆதிக்கம் செலுத்தினார்.

1*j6UgoVzlj_mz1HJGLxleng.jpeg
Source: awoiaf.westeros.org/index.php/Tourney_at_Harrenhal

நவீன வடிவப்போட்டி அதன் பிறகு நடைபெற்றது. முதலாம் நாள் முடிவில், பெயர்போன கோட்டைகளின் பெருந்தகைகள் அல்லாத சிறிய சிற்றரசு சேனைகளின் சிப்பாய்கள் மூன்றுபேர் சுற்றுகளைக் கடந்தனர். அவர்கள் வேறு யாருமல்ல ஹால்ண்ட் ரீட் பிரபுவைத் தாக்கிய அதே மூவர் தான். இரண்டாவது நாள் இவர்கள் மூவரையும் களம் கண்டு மர்மப் பெருந்தகை ஒருவர் சவாலுக்கு அழைத்தார். அவருக்கு தண்மையான குரல், குறைவான உயரம். ஏகப்பட்ட தையல்களுடைய உடைகள் அணிந்து விசித்திரமாக இருந்தார். அவரது கையிலிருந்த கேடயத்தில் சிரிக்கும் முகம் பதித்த வியர்வுட் மரம் இருந்தது. அதைத்தவிர அணிகலன், ஆயுதம் எதிலும் எந்த சிற்றரசின் சின்னமும் பொறிக்கப்படவில்லை. அதுவரைக்கும் அவரை அங்கு யாரும் பார்க்கவும் இல்லை, அவரது பெயர் கூட யாருக்கும் தெரியவில்லை. கூடியிருந்த மக்களின் பேரார்வத்தின் மத்தியில் மூன்று பேரையும் நையப் புடைத்தார் அந்த மர்மப் பெருந்தகை. தோற்ற வீரர்களின் குதிரைகளையும் ஆயுதங்களையும் பரிசாகப் பறித்துக்கொண்டவர், அவர்களது தலைமைப் பிரபுக்களிடம் தங்கள் சேவகர்களுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிக்க அறிவுரைக்கச் சொன்னார். அந்த ஒரு போட்டிக்குப் பிறகு அவர் திடீரென்று மாயமானார். தன்னை எந்நேரமும் ஆபத்தும் சூழ்ச்சி வலையும் தாக்கக்கூடுமென்று அஞ்சிய மடமன்னர் ஏரிஸ், புன்னகை மரப் பெருந்தகையை* தன் விரோதியாக அறிவித்தார். டைவினின் எண்ணத்திற்கு எதிராக ஜேமியை மெய்க்காவல் படையில் இணைத்ததற்காக லேனிஸ்டர்களின் சதித்திட்டம் இந்த மர்ம வீரனின் பின்னணியில் இருக்கும் என்று கணித்த அரசர், தனது மகன் ரேகாரிடம் விரைந்து அந்த மர்மப்பெருந்தகையை தேடிப்பிடித்து உடனே தனது கண்முன் நிறுத்துமாறு கட்டளையிட்டார். ஆனால், ரேகாரின் கண்களில் மண்ணைத்தூவிய அந்த வீரர் பிடிபடாமல் மறைந்தார். இளவரசரால் அரசரிடம் ஒப்படைக்க முடிந்தது புன்னகைக்கும் மர இலச்சினை பொறித்த அந்த கேடயத்தை மட்டுமே. அந்த கவசத்திற்கு பின்னாலிருந்த முகத்தை கடைசிவரைக்கும் யாராலும் பார்க்கமுடியாமல் போனது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில் இளவரசர் ரேகார் டார்கேரியனின் வேல் மீதமிருந்த அத்தனை வீரர்களை விடவும் பராக்கிரம் வாய்ந்த கரங்களில் இருந்தது. தோல்வியைத் தழுவாத மாவீரர்களான பிராண்டன் ஸ்டார்க், ஆர்தர் டேன், யோன் ராய்ஸ் எல்லோரையும் மண்ணைக் கவ்வ வைத்து முடிவில் துணிச்சலின் மறுபெயரான பெருந்தகை பேரிஸ்டன் செல்மியையே வீழ்த்தி பெருவெற்றி பெற்றார். பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவியாக ரேகார் தன் உள்ளங்கவர்ந்த மங்கையை அறிவித்து நீலநிற ரோஜா கிரீடம் அணிவிக்கும் நேரம் வந்தது. இளவரசி எலியா மார்ட்டெலுக்கு மகுடத்தை இளவரசர் சூட்டும் கண்கொள்ளா காட்சியை நாட்டுமக்கள் பார்த்து அகமகிழ ஏங்கிக் காத்திருக்கிறார்கள். தொடக்கம் முதலே போட்டியில் நிறைய மர்மங்கள் இருப்பதை நாம் இப்போது உணர முடியும். (லேனிஸ்டர் பிரபுக்களுக்கே சவால் விடுகிற ஒரு போட்டியும் விருந்தும் வழங்கும் அளவுக்கு வெண்ட் பிரபுக்கள் செல்வாக்கு படைத்தவர்கள் அல்ல. இவ்வளவு முக்கியஸ்தர்கள் கூடும் இடத்திற்கு டைவின் பிரபு வராமல் போனதும் நிறைய சந்தேகங்களுக்கு வழிவகுக்கிறது. ரேகார் டார்கேரியன் ஏழு பிரதான சிற்றரசர்களிடமும் கூடிப்பேசி ஏரிஸ் மன்னரின் தலையிலிருக்கிற மகுடத்தை தான் சூடிக்கொள்ள முன்னேற்பாடு செய்யத்தான் இந்த ஏற்பாடு என்று மன்னரின் காதில் வேரிஸ் ஓதியதன் பயனால் தான் செங்கோட்டையிலிருந்து வெளியே வரவே ஏரிஸ் ஒத்துக்கொள்கிறார். போர்க்கலையில் தேர்ந்தவர் தான் ரேகார் எனும் போதும், அரச மெய்க்காவலர்கள் அத்தனை பேரும் சட்டென சாய்ந்ததும் நிறைய வெறும்வாய்களுக்கு அவலைத் தந்தது போலாகிப்போனது. எல்லாவற்றுக்கும் மேல் மர்மப் பெருந்தகை ஒருவனது திடீர் தோற்றமும் மறைவும் எதேச்சையானதாக இல்லை) அந்த மர்மங்களையெல்லாம் தூக்கி சாப்பிடுவதைப்போன்ற திருப்பம் ஒன்று நேரப்போவதை அதுவரைக்கும் யாரும் அறியவில்லை. கூடியிருந்த அத்தனை பேரும் வாய்பிளந்து நின்றனர். நாணத்தில் தலைகுனிந்து காத்திருந்த எலியாவைக் கடந்த இளவரசர் ரேகார் டார்கேரியன் புயல்தேச சிற்றரசருக்கு மணமுடிக்கக் காத்திருந்த விண்டர்பெல்லின் செல்லப்பிள்ளை லையான்னா ஸ்டார்க்கிற்கு நீலநிற ரோஜாக்கிரீடத்தை அணிவித்தார். பேரதிர்ச்சியில் திருவிழாக்கோலம் பூண்ட ஹேரன் மண்டபம் சலனமற்று மௌனத்தில் ஆழ்ந்தது. ஒரே நொடியில் ஸ்டார்க், பராத்தியன், மார்ட்டெல் — மூன்று கோட்டை பிரபுக்களையும் பகைத்துக்கொண்டார் இளவரசர். திருவிழா முடிந்து, சில தினங்களுக்குப் பிறகு இரண்டு ராஜவாரிசுகளின் தந்தை ரேகார் டார்கேரியனும் வடக்கின் வதனம் லையான்னா ஸ்டார்க்கும் மாயமாகிப் போனதாகவும், ரேகார் தான் லையான்னைவை கடத்திக்கொண்டு போனதாகவும் நாடெங்கும் சேதி கசிந்தது. கோடைக்காலம் என்று மக்கள் ஆர்ப்பரித்த பகல் கனவு கானல் நீராகக் கலைந்தது. மேகங்கள் மீண்டும் கருகின. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு பொய்த்த வசந்தத்தின் ஆண்டென* பின்னாளில் அறியப்பட்டது.

1*GVkGPMKieXXcQuZi5P1xjw.jpeg
Tourney of Harrenhal. Source: paolopuggioni.com/illustrations/world-ice-fire

வடக்கிலிருந்து நதிகளின் தேசத்திற்கு கேட்டலின் டல்லியை மணமுடிக்கச் சென்றுகொண்டிருந்த பிராண்டன் ஸ்டார்க் சேதியைக் கேட்டறிந்து வீரர்கள் சிலரை சேகரித்துக்கொண்டு பாதிவழியில் தெற்கிலிருந்த தலைநகரம் நோக்கி தடம் மாறினார். அரண்மனை வாயிலில் வீரர்களுடன் வந்த வடநாட்டு இளவரசர் நீதிகேட்டு மன்னரை நாடினார். இரண்டு பிள்ளைகளின் தகப்பனாக இருந்துகொண்டு மாற்றானுக்கு நிச்சயம் செய்த தன் தங்கையைக் கடத்திக்கொண்டுபோன ரேகாரின் தலையை தனியாகக் கேட்டார். மகனின் தலையைத் தரமறுத்து ராஜதுரோகத்தின் பேரில் பிராண்டனை சிறையில் தள்ளினார் அரசர். மகன் அரியணைக்கெதிராக செயல்பட்டதற்கு உரிய பதில் தரவேண்டி வடக்குநாட்டின் பிரபு ரிக்கார்ட் ஸ்டார்க்கிற்கு ஓலை பறந்தது. விரைந்தோடி வந்த ரிக்கார்ட் பிரபு நீதியை போட்டியின்பால் கோரினார் (சென்ற பதிவில் சொன்னதைப் போல வழக்காடி வெல்ல முடியாத நேரங்களில் தங்களது வாள்வீச்சையும், தெய்வத்தின் தீர்ப்பையும் நம்பி தானே நேரடியாக, அல்லது தங்களது பிரதிநிதியை போட்டியில் இறக்குவது வெஸ்டரோசின் வழக்கம்) அரசர் போட்டியில் தனது பிரதிநிதியாக காட்டுத்தீயை அறிவித்தார். தனது அரசவை ரசதந்திரவாதிகள் காட்டுத்தீயில் ரிக்கார்டை வாட்ட ஆயத்தமானார்கள். செய்வதறியாது விம்மிய இளவரசர் பிராண்டன் பிரபுவிற்கு ஒரு வாய்ப்பு வழங்கினார் அரசர். கழுத்தைப் பிணைக்கிற தூக்குக்கயிற்றால் கட்டப்பட்ட பிராண்டனுக்கு அருகில் ஒரு நீளமான வாள் வைக்கப்பட்டது. கரங்களை நீட்ட நீட்ட கயிறு இறுகும். ஆனால், வாளைக் கைகொண்டால் தகப்பனாரை தண்டனையின்றி விடுவிப்பதாகச் சொன்னார் ஏரிஸ். தந்தையின் உடல் தீக்கிரையாகி அங்குலம் அங்குலமாகக் கருகிய வேளையில் வாளைத் தொட முயன்ற மகனின் கழுத்தை தூக்குக்கயிறு நெரித்துக் கொன்றது. இந்தக் கோர சம்பவத்தை மொத்த அரசவையும் கண்ணீர் பெருக ஊமை சாட்சியாக கண்டு குமுறியது. முச்சூடும் சித்தம் கலங்கிய மன்னர், ராபர்ட் பராத்தியனின் தலையயையும் எட்டார்ட் ஸ்டார்க்கின் தலையயும் தன்னிடம் சேர்க்குமாறு ஜான் ஆரினுக்கு ஓலை அனுப்பினார். பெருங்கோபத்தின் உச்சியில் டார்கேரிய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த ஜான் ஆரின் பிரபு போர் முரசுகளைக் கொட்ட ஆணையிட்டார். ஹாஸ்டர் டல்லிப்பிரபுவின் துணையுடன் ஏழுதேசங்களிலும் ஆதரவுக்கரம் தேடி ஸ்டார்க் — பராத்தியன் — டல்லி — ஆரின் நான்கு பிரபுக்களின் பேரில் அரசருக்கு எதிராக புரட்சி வெடித்தது.

1*EzM_hlbh8XB-0R6XNC5NAg.png
Madness of the Crown. Source: reaprycon.deviantart.com

பிரபுக்கள் கிளர்ந்தெழுந்தாலும், மக்களின் ஆதரவு முடியரசரின் பக்கம் தான் இருந்தது. ஈரியைத் தலைநகரமாகக் கொண்ட மலைதேசமும், வடக்குதேசமும் மட்டுமே முழுமையாக போராளிகளின் பக்கம் நின்றது. பராத்தியனின் ஆட்சியிலிருந்த புயல்தேசத்திலும் அரசுக்கு ஆதரவாகவே கொடிகள் எழும்பின. எந்தப்பக்கமும் சாயாமல் டைவின் லேனிஸ்டர் பிரபுவைப் போல சிலர் மௌனம் காத்தனர். ராபர்ட்டும் எட்டார்டும் ஈரிக்கோட்டையிலிருந்து தங்கள் நாடுகளுக்கு சென்று சேனையைத் திரட்டிவர புறப்பட்டனர். அரசரின் ஆணைக்கிணங்க தனது காலடியில் கலக்காரர்கள் ராபர்ட் மற்றும் எட்டார்டை ஓவென் மெர்ரிவெதர் பிரபு பொறுப்புள்ள வலக்கரமாக கைது செய்யவில்லை. சந்தேக நோய் பீடித்த அரசர், வலக்கரமும் கலகக்காரர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி புரிவதாக எண்ணி மெர்ரிவெதர் பிரபுவை பதவிநீக்கம் செய்தார். இந்த வேளையில் லையான்னாவை ரேகார் அரசமெய்க்காவலர்கள் சிலருடன் டார்னுக்கு அழைத்துக்கொண்டு போவதாக வதந்திகள் பரவின. புயல்தேசத்து எல்லையிலிருந்த கோடை மண்டபத்தின் அருகாமையில் மூன்று வெவ்வேறு இடங்களில் அரசரின் ஆதரவாளர்களை செருக்களத்தில்* வீழ்த்தினார் ராபர்ட். இந்த மாவீரத்தைப் போற்றிப்பாடும் நாட்டுப்புறப்பாடல்கள் கூட உண்டு. தோல்வியுற்ற தன்னாட்டு மக்களில் சிலரை தனது ஆதரவாளர்களுடன் இணைத்துக்கொண்டு வடக்கிலிருந்து எட்டார்ட் தலைமை தாங்கும் புரட்சியாளர்களுடன் குழுமப் புறப்பட்டார். செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக ரீச் சிற்றரசின் ரேண்டல் டார்லியின் தலைமையிலான ஒரு படையும் மேஸ் டைரெலின் தலைமையிலான ஒரு படையும் சேர்ந்து புரட்சியாளர்களுடன் ஆஷ்ஃபோர்டில் கடும் தாக்குதலில்* ஈடுபட்டன. சுதாரித்துக்கொண்ட ராபர்ட் பராத்தியன் துரிதகாலத்தில் தாக்குதலிலிருந்து விடுபட்டு வடக்குநோக்கி நகர்ந்தார். டைரெல் மற்றும் டார்லி படைகள் கிழக்கிலிருந்த புயல்தேசக் கோட்டையைத் கைப்பற்ற முன்னேறிச் சென்றனர். அங்கு ராபர்ட்டின் தம்பி ஸ்டேனிஸ் பராத்தியன் கோட்டை சேனையின் பொறுப்பிலிருந்தார். எல்லைப்புயல் கோட்டை* முற்றுகையிடப்பட்டது. நதிப்பிரதேசத்திலிருக்கிற ஸ்டோனி ஆலயத்தில் வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் புரட்சியாளர்கள் கூடுவதாக உத்தேசிக்கப்பட்டது. அவர்களை மோப்பம் பிடித்து சுற்றிவளைக்க புதிதாக மன்னரின் வலக்கரமாகப் பதவியேற்றுக்கொண்ட ஜான் கானிங்க்டன் பிரபுவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. புகழ்வாய்ந்த ஸ்டோனி ஆலயத்தை சுற்றியிருந்த நெரிசலான தெருக்களில் மக்களோடு மக்களாக கலந்துவிட்ட புரட்சியாளர்களை அடையாளம் கண்டுபிடிப்பதே கானிங்க்டன் பிரபுவிற்கு பெரும் சவாலாக இருந்தது. இரண்டு நாட்களாக தேடிக்களைத்த அரசரின் படைகளை ஹாஸ்டர் டல்லி — எட்டார்ட் ஸ்டார்க்கின் கூட்டுப்படைகள் தாக்கின. யுத்தம் மூண்டதை ஊராரிடம் அறிவிக்க ஆலயமணியோசை எழுப்பியது நகராட்சி. ஆகவே இந்த யுத்தம் ஆலயமணிகளின் யுத்தம்* என்ற பேர் பெற்றது. நகரின் தெருக்களில் களைகட்டிய கடும் வாள்வீச்சுக்கிடையே ஒரு உல்லாச விடுதியிலிருந்து வெளியேறிய ராபர்ட் பராத்தியன் சட்டென்று ஜான் கானிங்டனுடன் தனியொருவனாக மல்லுக்கு நின்றார். எதிர்பாராத திடீர் தாக்குதலை எதிர்கொண்ட கானிங்க்டன் பிரபு மயிரிழையில் உயிர் தப்பி தோல்வியுற்று தலைநகருக்கு எஞ்சிய படையினருடன் தப்பியோடினார். கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமல் புறமுதுகிட்டுவந்த கானிங்க்டனின் நிலங்களையும் செல்வங்களையும் மணிமுடியின் பேரில் திரும்பப்பெற்ற அரசர் பிரபுவின் பட்டங்களை நீக்கி நாடுகடத்தினார். ராபர்ட் புரட்சியின் முதல் பெருவெற்றி இதுவே.

1*pjkwJ5YUfnfSvg5pwUjgtg.jpeg
Robert’s Rebellion. Source: Histories & Lore, HBO

நிலைமையின் தீவிரத்தை உண்ர்ந்த அரசர் தனது பழைய நண்பரான டைவினை தலைநகருக்கு திரும்புமாறு காலில் விழாத குறையாக வேண்டிக்கொண்டார். கோபம் தணியாத டைவின், மன்னரின் வேண்டுகோளுக்கு செவிமடுக்கவில்லை. வேரிஸ் பிரபுவின் அறிவுரைப்படி தனது மனைவி ரயெல்லாவையும் தனது இரண்டாவது மகன் விசேரிசையும் செங்கோட்டையிலிருந்து ட்ராகன் பாறைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். அந்நேரம் அரசி கருவுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் கூட தனது மருமகள் எலியா மார்ட்டெலையும், பேரக்குழந்தைகளையும் பத்திரப்படுத்த அவர் யோசிக்கவுமில்லை, செங்கோட்டையை விட்டு வெளியேற அனுமதிக்கவும் இல்லை. முடியரசிற்கு எதிராக டார்ன் தேசமும் சதிவலை பின்னுகிறது என்று அவரது சந்தேக வியாதி சகலத்தையும் பீடித்திருந்தது. மேலும், தனது இரசதந்திரவாதிகளிடம் காட்டுத்தீயை ஏகப்பட்ட கிண்ணங்களில் நகரம் முழுக்க பூமிக்கடியில் விதைக்கச் சொன்னார். மன்னரின் குலைந்துபோன மதியின் மிச்சம் ஒரு ஓரமாக எட்டிப்பார்த்து பட்டத்து இளவரசரை தலைநகருக்கு திரும்பக்கோரி தகவல் சொல்லி ஆள் அனுப்பினார். தெற்கிலும் தென்மேற்கிலும் மகுடத்திற்கு விசுவாசிகள் பலரை வழிநடத்தி வேந்தர் மேடைக்கு வந்த இளவரசர் ரேகார் தலைநகரத்திலிருந்த படைகளையும் இணைத்துக்கொண்டு மூன்று அரசமெய்க்காவலர்களான — பெருந்தகை பேரிஸ்டன் செல்மி, பெருந்தகை ஜானதர் டேரி மற்றும் இளவரசர் லூவின் மார்ட்டெல் துணையுடன் வடக்கு நோக்கி சென்றார். நதிப்பிரதேசத்தின் புகழ்பெற்ற திரிசூல நதிக்கரையில்* மன்னரின் ஆசியுடன் சுமார் நாற்பதாயிரம் பேர் கொண்ட ட்ராகன் கொடியேந்திய படையும், முப்பதாயிரத்தி சொச்சம்பேர் கொண்ட புரட்சிப்படைகளின் கொடிவீரர்களும் நேருக்கு நேர் மோதினார்கள். வடக்குக்கரையில் காத்திருந்த புரட்சிப் படைகளை நேரடியாக நீர்நிலையைக் கடந்துவந்து தாக்கியது அரசரின் சேனை. வலதுபுறமாக சுத்தியல் சுழற்றிய ராபர்ட்டுடன் மோதினார் இளவரசர் லூவின். பரிதாபமாக கார்ப்ரே பிரபுவின் பலத்த அடியில் உயிரிழந்த டார்ன் தேசத்து இளவரசரைத் தொடர்ந்து பல பெருந்தகைகளும் பிரபுக்களும் படுகாயமடைந்தும் உயிரிழக்கவும் கூட நேர்ந்தது. ஆனால், யுத்தத்தின் வேகமோ வீரியமோ குறையவே இல்லை. உச்சகட்டமாக அரசகாவலர்களின் வரிசைகளைத் தகர்த்த ராபர்ட் பராத்தியன், தனது நெஞ்சார்ந்த காதலி லையான்னா ஸ்டார்க்கை கவர்ந்து சென்ற இளவரசர் ரேகார் டார்கேரியனை சந்தித்தார். உக்கிரமாக நடைபெற்ற மோதலின் இறுதியில் ராபர்ட்டின் சுத்தியல் ரேகாரின் நெஞ்சைப் பிளந்தது. பெருஞ்சப்தத்துடன் அவர் இடித்த அதிர்வில் இளவரசரின் கவசத்திலிருந்த மாணிக்கங்கள் மண்ணில் சிதறின. குதிரையிலிருந்து சாய்ந்த இளவரசர் வீரமரணம் அடைந்தார். தலைவனின் இழப்பு அரசசேனை மன உறுதியைக் குலைத்தது. படைகள் தோல்வியை உணர்ந்து தத்தம் ராஜ்ஜியங்களுக்கே திரும்பின. போர் முடியும் நேரத்தில் தனது படைகளுடன் வந்து புரட்சியாளர்கள் பக்கம் சேர்ந்து கொண்ட ஃப்ரெய் பிரபு, படுகேவலமாக கேலிக்குள்ளானார். போர்க்களத்தில் பலரைக் காவு கொண்ட பெருந்தகை பேரிஸ்டன் செல்மியின் பராக்கிரமத்தைப் பாராட்டி படுகாயங்களை தனது கோட்டையின் மேஸ்டர்களைக் கொண்டு வைத்தியம் பார்க்க பரிந்துரைத்தார் ராபர்ட் பராத்தியன். உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கவே உற்ற நண்பரும் படைவீரருமான நெட் ஸ்டார்க்கை தலைநகருக்கு விரைந்து செல்லப் பணித்தார் ராபர்ட். திரிசூல நதிக்கரைப் போர் வெஸ்டரோஸ் வரலாற்றின் மிகமுக்கிய நிகழ்வாக நிலைத்தது. ரேகாரின் கவசத்து மாணிக்கங்கள் சிதறுண்டதால், அந்த இடத்திற்கே மாணிக்கக்கரை* என்ற பெயரும் உண்டானது.

1*DYzOMjJffJsPxIlsRRncdQ.jpeg
Battle of the trident, Source: https://nickkalinin.deviantart.com/gallery/59860015/Song-of-ice-and-fire

திரிசூல நதிக்கரை போரில் இளவரசர் ரேகாரின் மரணச்செய்தியை அறிந்துகொண்ட டைவின் சற்றும் தாமதிக்காமல் வேந்தர் மேடைக்கு புறப்பட்டு சென்றார். தன் காரியதரிசி வேரிசின் எச்சரிக்கையை மீறி மேஸ்டர் பைசெல்லின் அறிவுரைப்படி அரசர் டைவினுக்கு வாயிற்கதவுகளை திறந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஆனால் டைவினின் திட்டம் வேறாக இருந்தது. நெட் ஸ்டார்க் தலைநகர வாயிலுக்கு வருவதற்குள் வேந்தர் மேடை சூறையாடப்பட்டிருந்தது. செங்கோட்டைக்குள் நுழைந்த லேனிஸ்டர் படைகள் நகரத்தையே கொலைக்களமாக மாற்றினர். புரட்சியாளர்களுக்கு தனது விசுவாசத்தையும், சார்புநிலையையும் நிரூபிக்க வேண்டி இளவரசி எலியா மார்ட்டெலையும், அரசரின் பேரக்குழந்தைகள் இருவரையும் கொல்லச்சொல்லி பெருந்தகை க்ரெகார் க்ளெகேனை ஏவினார் டைவின். ஈவு இரக்கமின்றி இளவரசியை கற்பழித்துக்கொன்ற க்ரெகார் அரசவம்ச வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக இரண்டு பிஞ்சுக்குழந்தைகளையும் துடிதுடிக்க கொன்றான். நேரக்கூடாது என்றெண்ணிய அசம்பாவிதம் ஒருவழியாக நடக்கப்போவதை உணர்ந்த அரசர் தனது தலைமை இரசவாதியிடம் நகரம் முழுக்க இருக்கிற காட்டுத்தீயை பற்ற வைக்குமாறு பணித்தார். நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதை உணர்ந்த பெருந்தகை ஜேமி லேனிஸ்டர் தலைமை இரசவாதியை வேறு வழியின்றி கொன்றார். வேறு யாரையேனும் அரசர் திரியைப் பற்றவைக்க அனுப்பக்கூடும் என்று அஞ்சி தலைநகரத்தைக் காக்கவேண்டி அரச மெய்க்காவல் உறுதிமொழியை மீறீ, அரசரை முதுகில் குத்திக் கொன்றார். இந்தக்காட்சியைக் கண்ட எட்டார்ட் ஸ்டார்க் ஜேமிக்கு ராஜவஞ்சகன்* என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த அவமானப் பட்டப்பெயரைச் சுமந்த ஜேமி லேனிஸ்டர் பல நூறாண்டுகளாய் கோலோச்சிய டார்கேரியப் பேரரசை முடிவுக்கு கொண்டுவந்தார். போர் முடிவுற்றது. டார்கேரிய வம்சம் ஆதிக்கத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறியப்பட்டது. புரட்சி வென்றது.

1*A685nh0f_9NZeoxHsWN56A.jpeg
Kingslayer. Source: https://nickkalinin.deviantart.com/gallery/59860015/Song-of-ice-and-fire

நெட் ஸ்டார்க் அரண்மனையில் நுழைந்து கண்ட காட்சியைக் கண்டு அதிர்ந்து போனார். ஒருபுறம் மார்ட்டெல் இளவரசி மற்றும் அவர் குழந்தைகள் ரத்தவெள்ளத்திலும், மறுபுறம் தனது அரசரை அவரது மெய்க்காவலரே கொன்ற அவலத்தையும் கண்டு பெரும் கவலை கொண்டார். டைவின் லேனிஸ்டர் முற்றுகையிட்ட நகரத்தை கலகக்காரர்களை தலைமையேற்று நடத்திய ராபர்ட்டிடம் சமர்ப்பித்தார். அரியணைக்கு எவ்வித பாதகமும் நேராத வண்ணம் டார்கேரிய வம்சத்தையே அழித்தொழித்த டைவினின் தந்திர உத்தியை மெச்சினார் ராபர்ட். இந்தப் புள்ளியில் நெட்டுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தலைநகரிலிருந்து கிளம்பிய நெட் ஸ்டார்க், முடிவுக்கு வந்திருந்த போரின் கடைசி முன்னெடுப்புகளாக நெட் ஸ்டார்க் புயல்தேசக் கோட்டையையும் ராபர்ட்டின் தம்பி ஸ்டேனிசையும் மீட்டார். புயல்தேசத்திலிருந்து தனது தங்கையை வைத்திருப்பதாக சொன்ன டார்ன் தேசத்திலிருந்த ஆனந்த கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். எஞ்சிய அரச மெய்க்காவலர்களான பெருந்தகை ஆர்த்தர் டேன், பெருந்தகை ஜெரால்ட் ஹைடவர், பெருந்தகை ஆஸ்வால் வெண்ட் ஆகிய மூன்று மாவீரர்களையும் தன்னுடன் வந்திருந்த சொற்ப வீரர்களுடன் வென்று முன்னேறினார். ஆனால், அங்கும் அவருக்கு சோகமே பரிசாகக் காத்திருந்தது. நெட் தன் ஆருயிர் தங்கையின் உயிர் பிரியும் தருவாயில்தான் லையான்னாவை சந்திக்க நேரிட்டது. போரில் வென்றாலும், தனது தந்தை, அண்ணன், தங்கை என்று மொத்தக் குடும்பத்தையும் இழந்து நின்றார் நெட் ஸ்டார்க் பிரபு. தனது காதலியை இழந்தார் ராபர்ட் பராத்தியன். தனக்கு மணமுடிக்கவிருந்த மணமகனை இழந்தார் கேட்டலின் டல்லி. தனது தம்பி தங்கையை இழந்தார் டார்ன் தேச இளவரசர் ஓபரின் மார்ட்டெல். அனைத்து பிரபுக்களின் குடும்பங்களிலும் போரில் ஒரே ஒரு உயிராவது மாய்ந்து போனது. தன் தங்கையைத் தவிர அனைத்து சொந்தங்களையும் இழந்தார் விசேரிஸ் டார்கேரியன்.

டார்கேரிய வம்சத்தின் கூறுகளைக் கொண்டிருந்தவரும், கிளர்ச்சியின் முக்கிய சக்தியாகவும் செயல்பட்டு இளவரசர் ரேகாரை களத்தில் வென்ற ராபர்ட் பராத்தியன் ஏழு தேசங்களின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். டைவினின் மூத்த மகளான செர்சி லேனிஸ்டரை திருமணமும் செய்துகொண்டார். தனது காதலியின் தமையன் விடியலின் வாள் ஆர்த்தர் டேன் இறந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிட்டு, அவர்களது குடும்பத்தின் உயரிய கௌரவத்துக்குரிய வாளை அஷாரா டேனிடம் திருப்பித் தந்தார் நெட் ஸ்டார்க். அதிர்ச்சியில் வாளுடன் மலையுச்சியிலிருந்து அவள் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டதாக செவிவழிச் செய்தி. தனக்கிருந்த கடைசி தம்பி பெஞ்சன் ஸ்டார்க்கும் மதிற்சுவரைக் காக்க முடிவெடுக்க, விண்டர்ஃபெல் கோட்டையின் பிரபுவானார் நெட் (எ) எட்டார்ட் ஸ்டார்க். பிறகு, தனது அண்ணனுக்கு நிச்சயித்த மணப்பெண்ணான கேட்டலின் டல்லியை மணமுடித்துக்கொண்டார். போரின் போது வைலா என்ற பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்ட நெட் ஸ்டார்க்கிற்கு ஜான் என்கிற பாஸ்டர்ட் வாரிசும் உண்டு. கேட்டலினின் தங்கை லைசா டல்லி, ஈரீக்கோட்டையின் பிரபு ஜான் ஆரினை மணந்துகொண்டார். தனது வழிகாட்டியான ஜான் ஆரினை அரண்மனையில் பக்கபலமாக செயல்பட மன்னர் ராபர்ட் பராத்தியன் தனது வலக்கரமாக நியமிக்கிறார். பெருந்தகை பேரிஸ்டன் செல்மியின் மாவீரத்தைப் போற்றி அவருக்கு அரசமெய்க்காவலர் பதவியை உறுதிசெய்தார். சிலந்தி (எ) வேரிசை தொடர்ந்து ஒற்றர்படைத்தளபதியாக நீடிக்கவும் ஆணையிட்டார். பேரறிஞர் மேஸ்டர் பைசெலுக்கும் அவரது அரசவைப் பதவியே வழங்கப்பட்டது. நெட் ஸ்டார்க் பிரபு வடக்குதேசத்தின் பாதுகாவலராகவும், டைவின் லேனிஸ்டர் பிரபு மேற்குநாட்டின் பாதுகாவலராகவும், புரட்சிக்கெதிராக செயல்பட்டாலும், தற்போது இணக்கமாகிவிட்ட மேஸ் டைரெல் தென்மேற்கு ரீச் தேசத்தின் பாதுகாவலராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்கள். புயல்தேசம் மீண்டும் தன் வசமானதும் ஸ்டேனிசும், நெட் ஸ்டார்க்கும் ஒன்றிணைந்து தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த இரும்புத்தீவுகளைச் சேர்ந்த க்ரேஜாய் பிரபுக்களையும் மன்னர் ராபர்ட்டின் ஆட்சிக்காலத்தில் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள். பிறகு, புதிய மாமன்னர் ராபர்ட்டின் சொல்படி டார்கேரிய வாரிசுகள் ட்ராகன் பாறையில் இருப்பதைக் கண்டறிந்து அவர்களைக் கொல்லப் புறப்பட்டார் ஸ்டேனிஸ் பராத்தியன். மூன்றாவதும் கடைசியுமாக ஏரிஸ் டார்கேரியனின் வாரிசாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த ரயெல்லா டார்கேரியன் மகப்பேறின் போது மரணமடைந்தார். சாவதற்கு முன் அவர் குழந்தைக்கு இட்ட பெயர் — டனேரிஸ் டார்கேரியன். டனேரிஸ், விசேரிஸ் என்கிற இரண்டே இரண்டு பேர் தான் வெஸ்டரோசையே தன் விரலசைவில் வைத்திருந்த ஏகான் டார்கேரியன் நிறுவிய பேரரசின் மிச்சம். ஆனால், ஸ்டேனிசின் வருகைக்குள் வாரிசுகள் இருவரும் பெருந்தகை வில்லெம் டேரியின் உதவியால் ட்ராகன் பாறையிலிருந்து கிழக்கே குறுங்கடலுக்கு* அப்பால் இருந்த எஸ்ஸோஸ் கண்டத்திற்கு கடத்தப்பட்டார்கள்.

அரியணைகள் ஆட்டம் காணத் துவங்கின.

கலைச்சொற்கள்:

  1. வேல்வீச்சு — Joust

2. பேரழகுக்கும் பேரன்புக்கும் தலைவி — Queen of Love and Beauty

3. புன்னகை மரப் பெருந்தகை — Knight of the Laughing Tree

4. பொய்த்த வசந்தத்தின் ஆண்டு — Year of the false spring

5. கோடைமண்டபப் போர்கள் — Battles of Summerhall

6. ஆஷ்ஃபோர்ட் போர் — Battle of Ashford

7. எல்லைப்புயல் கோட்டை — Castle of Storm’s End

8. ஸ்டோனி ஆலயம் — Stoney Sept

9. ஆலயமணிகளின் யுத்தம் — Battle of the Bells

10. திரிசூல நதிக்கரைப் போர் — Battle of the Trident

11. மாணிக்கக்கரை — Ruby Ford

12. ராஜவஞ்சகன் — Kingslayer

13. குறுங்கடல் — Narrow Sea

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியணைகளின் ஆட்டம் — கேம் ஆஃப் த்ரோன்ஸ்: அடுத்த வாரிசு

தொடரை மீண்டும் இரண்டாவது முறை பார்க்கிற போது பின்னால் நடக்கவிருக்கிற சம்பவங்களோடு ஏற்கனவே நடந்த சம்பவங்களை ஒப்பிட முடிகிறது. கதையின் போக்கில் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லாததால், குறிப்பாக உணர்த்தப்படுகிற சூசகங்கள், அரை வரி வசனத்தில் ஒளித்துவைக்கப்படுகிற புதையல்கள், ஒப்பனை/ ஆடை வடிவமைப்பில் செய்திருக்கிற நகாசு வேலைகள், இசையை கூடவே இழையோடவைத்திருக்கிற அற்புதம் என்று ஏகப்பட்ட விஷயங்களில் கவனத்தைக் குவிக்க முடிகிறது. ஜாடை மாடையாக சூழவிருக்கிற அபாயங்களையும், திருப்பங்களையும் முன்கூட்டியே (Foreshadowing) மார்ட்டின் அடிகளார் முணுமுணுப்பதும் காதில் அகப்படுகிறது. நிறைய நுணுக்கங்களை முதல் முறை காணும் பார்வையாளர்களே எளிதில் உள்வாங்கிக்கொள்ளும் விதத்தில் தான் தொடர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும் கூட, மீண்டுமொருமுறை பார்க்கையில் சர்வநிச்சயமாக சிற்சில விடுபட்ட அட்டகாசங்கள் எதேச்சையாக கண்ணில் பட்டே தீரும். மேலும், புத்தக வாசிப்பில் அநியாயத்திற்கு விவரங்களும் விவரணைகளும் குவிந்து கிடப்பதைப் பார்த்து மலைத்துப் போகிறோம்.

மேற்குநாட்டின் பாதுகாவல் பிரபு (Warden of the West) டைவின் லேனிஸ்டரின் இரண்டாவது வாரிசென்றாலும் கூட, பிரபுவின் பட்டங்களுக்கும் நிலங்களுக்கும் ஏகபோக உரிமை ஜேமிக்கே உண்டு. செர்சி பெண் என்பதால், அரசாளும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது. டைவினின் மூத்த மகனும் செர்சியின் இரட்டைச் சகோதரனுமான ஜேமி, ஏரிசின் குறுக்குபுத்தியால் பிரபுத்துவ/ சொத்து உரிமைகளை இழக்கிறார். வெண்கவசம் பூண்டு அரச மெய்க்காவலில் (Kingsguard) சேர்பவர்களுக்கு பட்டங்களோ, நிலபுலன் சொத்து சுகங்களோ, திருமண பந்தமோ வாய்க்கப்பெறாது என்பதே விதி. ஆக, இடைக்கால அரசியல் வரலாற்று அமைப்பின் படி, ஜேமியின் தம்பி டிரியனுக்கே கோட்டைப்பிரபுவாக கோலோச்சவும், நிலபுலன்களுக்கு உரிமை கோரவும் அதிகாரம் உள்ளது. ஆனால், தனது குடும்பத்தின் அவமானச்சின்னமாக சித்திரக்குள்ள டிரியனை கருதும் டைவின் உரிய கௌரவங்களைத் தர மறுத்துவிடுகிறார். இப்படி மூத்த மகன்களுடைய தம்பிகளாக குறிப்பிட்டு சொல்லும்படி பல இளவல்களை வெவ்வேறு குடும்பங்களில் படைத்திருக்கிறார் மார்ட்டின். அடிப்படையில் இவர்கள் அத்தனை பேருக்கும் கோட்டையை ஆளும் பிரபு ஆகும் உரிமை கிடையாது. அப்படி பட்டமேற்கும் பிரபுவின் கீழ் கொடியைச் செலுத்தி போர் புரிவதும், வரி வசூலிப்பதுமே அதிமுக்கிய கடமையாகிப்போகிற மிகச் சராசரி வாழ்க்கையாகவே அது இருக்கவேண்டும். இருந்தபோதிலும், அவர்கள் அத்தனை பேரும் தங்கள் சகோதரர்களின் குணாதிசயங்களை வெறுமனே நகலெடுக்காமல் எவ்வளவு தனித்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறார்கள் என்று கவனிக்கையில் பெரும் ஆச்சரியம் மேலிடுகிறது. ஒவ்வொரு கதைமாந்தரின் அமைப்பும் குணமும் எவ்வளவு ஆழத்துடன் இந்த உலகில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது, அவர்களது உறவுமுறைகளுக்குள்ளான சிக்கல்கள் எப்படி பரிணாம வளர்ச்சி அடைகிறது என்றெண்ணி பிரமித்து நிற்கிறேன்.

மன்னரின் கொடுங்கோலுக்கு பலியான அண்ணனின் மரணத்தை ஈடுசெய்ய, புரட்சியை வென்றெடுத்து மாமன்னரையே வீழ்த்தும் நெட் ஸ்டார்க்கைப் போன்ற மாண்புமிக்க தம்பிகளும் இங்குண்டு. உப்பு அரியாசனத்திற்கு (Salt throne) ஆசைப்பட்டு, கண்ணசந்த நேரத்தில் கூடப் பிறந்த சகோதரனையே பாலத்திலிருந்து தள்ளிக் கொலை செய்கிற துரோகி யூரான் க்ரேஜாய் போன்ற தம்பியும் இங்குண்டு. அதில் சிலரைப் பற்றியே இப்பதிவு.

1*eStW6DiCxztv-rNSlk8hwQ.jpeg

அ. நெட் (எ) எட்டார்ட் ஸ்டார்க்: பிராண்டன் ஸ்டார்க்கின் (Brandon Stark) தம்பி. படைக்கு அஞ்சாமல், சினங்கொண்டு பெருநாட்டின் அரசரிடமே கோபித்துக்கொள்ளும் அளவிற்கு கணம் பொருந்திய குடும்பத்தின் மொத்த சுமையும் இவரது தலையில் விழுகிறது. தமையனையும் தந்தையையும் இழந்து நிற்கிற வேளையிலும் குடும்ப கௌரவத்தை முன்னிறுத்தி அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்கிறார். அதற்கு அப்புறம் செருக்களத்தில், தனது காதலி அஷாரா டேனின் (Ashara Dayne) அண்ணன் பெருந்தகை ஆர்த்தர் டேனை (Ser Arthur Dayne) வாள்முனையில் சந்திக்கிறார். அந்த வாள்கலப்பில், ஆர்த்தர் டேன் இறந்தும் போகிறார். தனது பழைய காதலியை மீண்டும் சந்திக்கும் தறுவாயில் அந்த வீரனின் வாளை மரியாதை நிமித்தம் தரப்போகிறார் நெட். துக்கம் தாளாமல், அந்த வாளுடன் மலையுச்சியிலிருந்து குதித்து அஷாரா தனதுயிரை மாய்த்துக் கொள்ள நேரிடுகிறது. புரட்சியை (Rebellion) ஆரம்பித்து வைத்தை அண்ணனையும் இழந்து, நீதி கேட்கப்போன தந்தையையும் இழந்து, புரட்சிக்கான முக்கியக் காரணமான தனதுயிர் தங்கையையும் இழந்து நிர்கதியாய் நிற்கிறார் எட்டார்ட் ஸ்டார்க் பிரபு. ரத கஜ துரக பதாதிகளை புரட்சியில் வீழ்த்திய போதும், அரியணையை ஒரு பொருட்டாகக் கருதாமல் தன் நாடு திரும்புகிறார். அப்போதும், தங்கைக்கு தருகிற வாக்கின்படி தனது கடைசி மூச்சுவரை ஜான் ஸ்னோவினுடைய பிறப்பின் இரகசியத்தை காத்து வருகிறார் நெட். அத்தனை துன்பங்களையும் தன் மீது சுமந்த நெட் பழைய தெய்வங்களின் (Old Gods) மீது அசையாத நம்பிக்கை கொண்டிருந்தவர், தன் பிள்ளைகளுக்கு ஆதர்சமானவராகவும் நல்வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். ஆனால் முடிவில், அரியணைக்கு துரோகம் இழைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனையும் வழங்கப்படுகிறார். பெருஞ்சோகத்தின் ஏக உருவம்.

ஆ. பிரான் ஸ்டார்க்: ’வடக்கிலிருக்கிற வேந்தன்’ ராப் ஸ்டார்க்கின் (’King in the North’ Robb Stark) தம்பி. துடுக்குத்தனமாக ஒரு ரகசியத்தை ஒளிந்திருந்து பார்க்கப்போய், இப்போது உலகின் அத்தனை ரகசியத்தையும் பார்க்கிற வல்லமையை அடைகிற பிரான், ஒரு சுவாரசியமான ஸ்டார்க். பட்டம், பதவி எதையும் விரும்பாத இளமையைத் தொலைத்த ஒரு தனிமையான சிறுவன். ஆர்யாவுக்கும் சான்சாவுக்கும் இருக்கிற வஞ்சம், ஜானுக்கு இருக்கிற பொறுப்பு, ராப்பிற்கு இருக்கிற தலைமைப் பண்பு என்று எந்தவித பளுவையும் தன் தலைமேல் ஏற்றிக்கொள்ளாத ஏகாந்த நிலையில் இருக்கிற ஒரு இளைஞன். இந்த உலகையே உலுக்கிவிடுகிற மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கண்ணால் கண்ட, கரத்தால் தீண்டப்பட்ட வெகுசிலரில் ஒருவன் ப்ரான். அவனது சக்திகளின் முழுவீச்சை நாம் இன்னும் பார்க்கவில்லை. சிறுகச்சிறுக இவ்வுலகின் மிகப்பெரும் புதிர்களுக்கு விடை வைத்திருக்கிற பிரானிடமிருந்து நமக்கு இன்னும் நிறைய மர்மங்கள் புலப்படலாம்.

இ. விசேரிஸ் டார்கேரியன்: இளவரசர் ரேகார் டார்கேரியனின் தம்பி. ரேகார் கலையார்வம் கொண்டவர், புத்தகப்புழு. மெத்தப் படித்தும், சான்றோர்களிடம் கற்றறிந்தும் ஞானம் செறிந்த பேரறிவாளர். ஆனால் விசேரிஸ் மக்குப்பயல். ரேகார் வீரர்களுக்கெல்லாம் வீரராகப் புகழப்படுபவர். “விடியலின் வாள்” ஆர்த்தர் டேனையும் (‘Sword of the Morning’ Ser Arthur Dayne), “துணிச்சல் பெருந்தகை” பேரிஸ்டன் செல்மியையும் (Barristan ‘the Bold’) பந்தயத்தில் வீழ்த்திய மாவீரர். விசேரிசுக்கு வாளை முழுதாகப் பிடிக்கக்கூட பயிற்சியளிக்கப்படவில்லை. அவனது யுத்தத்திற்கே அவன் கால் ட்ரோகோவின் ஒத்துழைப்பை வேண்டி நிற்பவன். ரேகாரின் பாடல்களைக் கேட்கும் பெண்கள் விம்மி விம்மி அழுவார்கள் என்று செவிவழிச் செய்தி. விசேரிஸ் கொல்லப்படுவதை அருகிலிருந்தே பார்த்தும் கூட அவனுடன் கூடப்பிறந்த சகோதரியே கூட ஒரு சொட்டுக் கண்ணீரைச் சிந்தவில்லை. விசேரிஸ் டார்கேரியனின் ஒரே மற்றும் வாழ்நாள் சாதனை அவனுடைய பேரையே டனேரிஸ் ஒரு டிராகனான விசேரியானுக்கு (Viserion) வைத்திருக்கிறார் என்பது மட்டுமே. மரணித்து பல ஆண்டுகள் ஆகியும் செங்கோட்டையிலிருந்து (Red Keep) விண்டர்ஃபெல் கோட்டை (Winterfell) வரை ரேகாரின் பெயர் இன்றும் பலரது பேசுபொருள். விசேரிசுக்கு எஸ்ஸோசின் சுதந்திர நகரங்களில் பிச்சைக்கார இளவரசன் என்பதுதான் செல்லப்பெயர்.

ஈ. யூரான் க்ரேஜாய்: அண்ணன் பேலானைக் கொன்றுவிட்டு உப்புச் சிம்மாசனைத்தைக் கவர்கிற யூரானுக்கு புத்தகங்களில் இன்னுமே அதிக பலங்கள் கூறப்படுகின்றன. டிராகன்களையே ஆட்டிவைக்கிற மந்திரக்குழல் ஒன்றை யூரான் கைவசம் வைத்திருப்பதாகக் கேள்வி. க்ரேஜாய் வம்சத்தில் எஞ்சியிருக்கும் வெகுசிலரில் ஒருவனான யூரான் தனது சகோதரனைக் கொன்று, செர்சியுடன் கூட்டணியமைத்து தனது அண்ணன் பிள்ளைகளுக்கு எதிராக சேனையைத் திரட்டி, டெனேரிஸ் டார்கேரியனின் படைகளுக்கும் கணிசமான பின்னடைவை ஏற்படுத்திவிட்டு, இப்போது எஸ்ஸோசில் புகழ்பெற்ற கூலிப்படையைத் திரட்டும் பொறுப்புடன் கடலில் திரிந்துகொண்டிருக்கிறார்.

உ. சாண்டோர் க்ளெகேன்: மாமிச மலைகளான க்ளெகேன் சகோதரர்களில் இளையவர். வேட்டை நாய் (Hound) என்று அழைக்கப்பட்ட சாண்டோர், முகத்தை நெருப்பில் வாட்டி வதைத்த தன் அண்ணனைக் கொல்லத் துடிக்கிறார். ஜாஃப்ரியை ஏசிவிட்டு தன் பொறுப்புகளைத் துறந்துவிட்டு தலைநகரிலிருந்து நீங்கிச் செல்கிறார். ஆர்யாவை சந்தித்து, பெரிக்கை போட்டியில் வீழ்த்துகிறார். ஒரு நொடி செத்துப்போகிற பெரிக் டொண்டாரியன் மீண்டும் உயிர்த்து எழும் விந்தையைப் பார்க்கிறார். வழியில் ப்ரையென்னிடம் கத்திமுனையில் தோற்று குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்து நூலிழையில் உயிர் பிழைக்கிறார். இருளரசனின் (Night King) இறந்த சேனையிலிருந்து (Army of the Dead) ஒரு பிசாசை (Wight) கொணரச் செல்லும் எழுவர் படையில் இணைந்து, மீண்டும் வஞ்சம் தீர்க்க வேந்தர் மேடைக்கே (King’s Landing) வந்து சேருகிறார். தொடர் நெடுக வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டே இருக்கிற சாண்டோர், தொடரின் கடைசி பருவத்தில் வஞ்சம் தீர்ப்பாரா அல்லது மடிந்து போவாரா?

ஊ. ஸ்டேனிஸ் பராத்தியன்: அரசுக்கெதிராக கிளர்ச்சியில் அண்ணன் ராபர்ட் பராத்தியனுக்கு தோளோடு தோள் கொடுத்த தம்பி. இடையில் சிக்கி சின்னாபின்னமாகி புதிய அரசரான தன் அண்ணனின் துணையுடன் க்ரேஜாய் கிளர்ச்சியை அடக்கி புயல்தேசத்திற்கு (Stormlands) திரும்பும் ஸ்டேனிஸ் அண்ணனின் மரணத்திற்குப் பிறகு லேனிஸ்டர்களுக்கெதிராக படைகளைத் திரட்டிக்கொண்டு புறப்படுகிறார். மற்றொரு சகோதரனான ரென்லியை சூனியக்காரி ஒருத்தியின் பேச்சைக்கேட்டு கொலையும் செய்கிறார். மேலும் மூன்று அட்டைப்பூச்சிகளை நெருப்பு தெய்வத்திடம் (Lord of the Light) ராப் ஸ்டார்க், பேலான் க்ரேஜாய், ஜாஃப்ரி பராத்தியன் மூவரையும் கொல்லவும் ஏவல் செய்கிறார். தொடர்ச்சியாக, தனது ஆருயிர் மகளையே பலியாகத் தருகிறார், தனது மனைவி தற்கொலை செய்துகொள்ளக் காரணமாகிறார். முடிவில், கருநீல விரிகுடா யுத்தத்தின் போது சுக்குநூறாக வெடிக்கிற போர்க்கப்பல்கள் போல இவரது அரியாசனக் கனவும் வெடித்துச் சிதறுகிறது.

எ. டாம்மென் பராத்தியன்: முறையிட வந்த பிரபுக்களை நெருப்பில் வாட்டியெடுத்த ஏரிஸ் டார்கேரியன் தொடங்கி, மதுக்கிண்ணங்களிலும் வேட்டைகளிலும் கேளிக்கை விடுதிகளிலும் பொழுதுகளைக் கழித்த ராபர்ட் பராத்தியன், சித்ரவதை செய்வதையே முழுநேர வேலையாக வைத்திருந்த டாம்மெனின் அண்ணன் ஜாஃப்ரி பராத்தியன் என வெஸ்டரோஸ் வரலாற்றிலேயே யாரிடமுமில்லாத மழலை முகமும், இளகிய குணமும் பொருந்தியவர் மன்னர் டாம்மென். எடுப்பார் கைப்பிள்ளையான டாம்மென், செர்சியிடமும் மார்ஜெரியிடமும் மாறி மாறி மத்தளக் கொட்டுபட்டு அலைக்கழிய நேரிடுகிறது. ஆனால், டாம்மெனின் அன்பு பரிசுத்தமானது. செர்சியின்பால் கொண்ட தாய்ப்பாசமும் சரி, மார்ஜரியின் மீது கொண்ட காதலும் சரி. அப்படி ஆட்டுவிக்கிற இரண்டு பேரும் சிறையில் அடைக்கப்பட, டாம்மென் புதிய தெய்வங்களுக்கு இறைச்சேவை செய்யும் மதத்தின் பிடியில் சிக்குகிறார். அப்போதும், அவர் புதிய தெய்வங்களை (New Gods) ஆணித்தரமாக நம்புகிறார். நாட்டுமக்களை நல்வழிப்படுத்தவே இறைத்தூதருடன் (High Sparrow) கைகோர்க்கிறார். இந்த தருணத்தில், தான் மிகவும் நேசித்த மனைவியும் கொல்லப்படுகிறார், அவர் நிறுவ விரும்புகிற மதவழி அரசு என்கிற கனவும் சிதறடிக்கப்படுகிறது. முதன்முதலாக டாம்மென் தொடரில் தோன்றும் காட்சி — அரியணையில் செர்சியின் மடியில் அமர்ந்திருக்கிற குழந்தை டாம்மெனுக்கு விஷத்தைக் கொடுத்துவிட்டு, தானும் குடித்து, ஸ்டேனிசின் தாக்குதலுக்கு முன்னாலேயே உயிரைப்போக்கிக்கொள்ள காத்திருக்கிற காட்சி. ஸ்டேனிசுக்கு பதில் வாயிலில் போரை வென்று வருகை புரியும் தந்தை டைவினைப் பார்த்து தற்கொலை எண்ணத்தைக் கைவிடுகிறார் செர்சி. வெஸ்டரோசில் வாய்க்கும் மரணங்களில் மிகக்கொடியதாகக் கருதப்படுவது தற்கொலையே. ஆனால், நாட்டின் மிக மென்மையான மன்னர் டாம்மென் அவ்வாறு செங்கோட்டையிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாவது ஒரு வகையில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேறு ஒரு வகையில், ஏற்புடையதே.

ஏ. டிக்கான் டார்லி: வெஸ்டரோசின் புகழ்மிக்க பெரும் குடும்பங்களில் டார்லி குடும்பம் ஒன்றல்ல. ஆனாலும், ரீச் பிரதேசத்தில் வீரத்திற்கு பெயர் போன புகழ்மிக்க வீரர் ரேண்டில் டார்லியின் பெயரைப் பறைசாற்றும் கோட்டை தான் அவர் ஆளும் ஹார்ன் மலைக்கோட்டை. மூத்த டார்லி வாரிசு சேம்வெலுக்கு (Samwell Tarly) போர்க்கலையில் துளியும் ஈடுபாடு கிடையாது. சான்றோர் பெருமக்களின் வரிசையிலேயே வர விரும்பிய சாம்வெலுக்கு பதிலாக போர்முனையில் வாள் சுழற்றினார் டிக்கான். தந்தையுடன் வீரமரணம் அடைகிற டிக்கான் சிறிது நேரமே தோன்றினாலும் குறிப்பிடத்தக்க கனத்தில் அவரது பாத்திரம் அமைந்திருப்பது கண்கூடு.

ஐ. இளவரசர் ஓபெரின் மார்ட்டெல்: ஒபரினின் பிரபலமான பட்டப்பெயர் — செவ்விரியன் (Red Viper). புத்தகங்களில் குறிப்பிடத்தக்க வசனம் ஒன்று வரும். அவரது தமையனார் டோரான் கூறுகிறார் — “நான் குருடனும் அல்ல, செவிடனும் அல்ல. நீங்கள் எல்லாரும் என்னை பயந்தவனாகவும் வலுவற்றவனாகவும் கருதுகிறீர்கள். ஆனால், ஓபரினை அப்படி நீங்கள் கருத மாட்டீர்கள். யாரும் அவனை வம்புக்கு இழுத்து சீண்ட மாட்டீர்கள். அவனுக்கு நேரெதிர்மாறாக மென்மையான, தண்மையான, தயாளனான அவன் அண்ணன் என்னை, எல்லாரும் புல்லைப் போல மிதிப்பார்கள். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், விரியன் ஒளிந்துகொள்ள ஏற்றது இந்தப் புல் தரை தான் என்று!” (நன்றி: ரெட்டிட்) லேனிஸ்டர்களின் கரங்களில் இறந்த தனது தங்கையின் கொலைக்கு பழிதீர்க்கத் துடிக்கிற ஓபரின் சான்றோர்களிடம் (Maesters of the Citadel) விஷங்களைப் பற்றி நன்கு கற்றறிந்தவர். வேல் வீசும் வீரர். நிறைய பெண்களுக்கு ஆதர்சமானவர். டிரியனின் பேரில், பெருந்தகை க்ரெகாருடன் மோதும் இளவரசர் வெற்றி வாகையின் வாயிற்கதவுகளிலிருந்து தலை நொறுங்கிச் சாவது தொடரின் மிகச் சுவாரசியமான திருப்பங்களில் ஒன்று.

ஒ. பிரிண்டின் டல்லி: தனது சிறப்புப் பெயர் காரணமாக, குடும்ப சின்னமான மீனைக் கூட கருப்பு நிறத்தில் பிரத்தியேகமாக அணிந்து வலம் வந்த ‘கருப்பு மீன்’ ப்ரெண்டின் டல்லி (Black fish Brynden Tully), ஹாஸ்டர் டல்லியின் தம்பி. லைசாவும் கேட்டலினும் ஹாஸ்டர் பிரபுவின் மகள்களாவர். ரத்தவெள்ளத்தில் நடந்தேறுகிற எட்மயர் டல்லியின் திருமணத்திற்குப் பிறகு (Red Wedding) தனது குடும்பத்தின் கோட்டையை மீண்டும் மீட்டெடுக்கிற பிரிண்டின் அங்கேயே ஜேமியின் கைகளில் மாண்டு போகிறார். இறுதிச் சடங்குகளில் கூட தனித்தன்மைகளைக் கொண்டிருக்கிற வெஸ்டரோஸ் பிரதேசங்களில், நதிப்பிரதேச வழக்கங்கள் தொடரில் நுட்பமாகக் காட்சிப்படுத்தப்படுகின்றது. இறந்த உடலை படகில் கிடத்தி ஆற்றங்கரையில் மிதக்கவிட்டு, தீ அம்புகளால் படகை நெருப்பிலிட்டு இறுதி மரியாதை செலுத்தும் சடங்கை எட்மயர் தடுமாறும் போது, ப்ரிண்டின் சட்டென்று வில்லைப் பறித்து குறி தப்பாமல் எய்வது — Family,Duty,Honor: குடும்பம், கடமை, பெருமை என அவரது டல்லிக் குடும்ப வாசகத்தை பறைசாற்றுகிறது.

ஓ. டிரியன் லேனிஸ்டர்: ’ராஜவஞ்சகன்’ ஜேமி லேனிஸ்டரின் (‘Kingslayer’ Jamie Lannister) தம்பி. டிரியன் பிரசவத்தின் போது தான் தாய் ஜோ-ஆன்னா உயிரை இழக்கிறார். டிரியன் சிறையிலிருந்து தப்பும் போது தந்தை டைவின் உயிரை இழக்கிறார். ட்விட்டரிலும் ஒரு கேள்வி வந்தது. குள்ளன்/ சித்திரக்குள்ளன் சரி, அது ஏன் டிரியனை விசித்திரக்குள்ளன் என்று கூப்பிட்டிருக்கிறீர்கள் என்று. பிறந்தபோதே கால்களுக்கு நடுவே ஒரு வாலும், கூரிய நகங்களும் டிரியனுக்கு இருந்ததாக செய்தி நாடெங்கும் பரவியதென்று இளவரசர் ஓபரின் மார்ட்டெல் டிரியனிடம் சொல்கிறார். ஜோ-ஆன்னா டைவின் திருமணத்திற்கு முன்பு, அரசர் ஏரிஸ் ஜோ-ஆன்னாவின் மீது காதல் வயப்பட்டதாக செய்திகள் உண்டு. செங்கோட்டையிலிருந்த போது ஒருவேளை அரசர் ஏரிசுக்கும் ஜோ-ஆன்னாவிற்கும் பிறந்த பிள்ளை தான் டிரியன் என்று டைவினே கருதியிருப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. கருநீர் விரிகுடா யுத்தம் முடிவடைந்த பிறகு டைவினிடம் சென்று தனக்குரிய காஸ்டர்லி கோட்டையை (Casterly Rock) டிரியன் வேண்டும்போதும் கூட டைவின் விடாப்பிடியாக மறுத்துவிடுகிறார். டைவின் முதல் அம்பால் காயப்பட்டிருக்கும் போது கூட, நீ என் மகனே கிடையாது என்றே கோபித்துக்கொள்கையில், நான் உங்கள் மகன் தான் என்று கண்ணீருடன் இரண்டாவது அம்பை நெஞ்சில் எய்து டைவினைக் கொல்கிறார் டிரியன். இப்போது ஜான் ஒரு டார்கேரியன் என்பது நமக்கு புலப்பட்டுவிட்ட வேளையில், ரேகார் கருதிய ஒரு தீர்க்கதரிசனத்திற்கு இது ஆணித்தரமான சாட்சியாகக்கூட இருக்கலாம். டார்கேரியர்களின் சின்னமான மூன்று-தலை டிராகன் தீர்க்கதரிசனம் தான் அது. நீண்ட இரவை (Long Night) முடிவுக்கு கொண்டு வர மூன்று தலையுடைய டிராகன் (ஜான் — டனேரிஸ் — டிரியன்) ஒரே அணியாக இணைவதே வழி என்று ரேகார் நம்பினார். மேலும், பல ஆண்டுகளாக யாருடைய புத்திக்கும் எட்டாத காட்டுத்தீயை (Wildfire) கருநீர் விரிகுடாவின் போரில் (Battle of Blackwater Bay) பற்பல ஆண்டுகள் கழித்து சாதுர்யமாக உபயோகிக்கிறார் டிரியன். காட்டுத்தீயை தீவிரமாக ஒரு ஆயுதமாக வார்த்தெடுத்தவர்கள் டார்கேரிய வம்சத்தினரே. செர்சி பேலார் ஆலயத்தைத் தகர்ப்பதற்கு (Sept of Baelor) பல்லாண்டுகள் முன்பே டார்கேரிய மன்னர்களின் ஆட்சிக்காலம் கழித்து முதன்முதலில் அதைவைத்து போர்த்திட்டம் தீட்டியது டிரியன் தான். ஆசிரியர் ஜார்ஜ் மார்ட்டினுக்கு நாவல்களில் மிகவும் விருப்பமான கதாபாத்திரமாக டிரியனையே குறிப்பிடுகிறார்.

டிஸ்கி: சில வாரங்கள் பதிவிடமுடியாமல் போனது வருத்தமே. பணிச்சுமையைத் தாண்டி, பதிவுகளாய் எழுதுவதை கூடவே காணொளிகளாக யூட்யூபில் பதிய எண்ணி நேரம் செலவிட வேண்டியிருந்ததால் தள்ளிப்போய்விட்டது. வெகு விரைவில் எளிய தமிழில் காணொளிகளுடன் சந்திக்கிறேன். ஐயாயிரம் சொற்களுக்கு மிகையாக முன்கதையை, ராபர்ட்டின் கிளர்ச்சி வரைக்கும் விரிவாக எழுதத் துவங்கியதற்கு காரணம் உண்டு. முதல் காணொளியில் இது குறித்து மேலும் விரிவாக உரையாடலாம். அதில் ஒரு துளியும், யூட்யூப் பக்க இணைப்பும். தொடர்ந்து வாசித்து வருகிற அன்பர்கள் இங்கும் பின்தொடருமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்: YouTube Channel

Link to comment
Share on other sites

இதை இங்கு இணைப்போம் என நினைத்து விட்டு பிறகு இங்கு இதை யார் படிக்க போகிறார்கள் என நினைத்து விட்டு விட்டேன் 

ஆரம்பத்தில் வெறுக்கப்படுபவர்களாக இருப்பார்கள்  பின் விரும்ப்ப்படுபவர்களாக மாறிடுவார்கள் உ-ம் சஞ்சா வின் நடவடிக்கைகள் முதல் சீசனில் வெறுப்பை தான் தரும் 

Battle of bastard ல் அவள் முக்கியமான திருப்பு முனையாகிறாள் 

டேமி லனிஸ்ர்ர் ம் அப்படியே 

ஆரம்பத்திலிருந்து விரும்ப படுபவர்களாக ஆர்யா ஜோன் டனேரியர்ஸ் இருக்கிறார்கள் 

எனக்கு night king பின் உள்ள மர்ம்ம் விளங்கவில்லை இதுவரை 

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அரியணைகளின் ஆட்டம் — கேம் ஆஃப் த்ரோன்ஸ்: தீர்க்கதரிசனங்கள்

அரியணைகளின் ஆட்டம் — Game of Thrones: ஒரு அறிமுகம்.
அரியணைகளின் ஆட்டம் — Game of Thrones: முன்கதை சுருக்கம் (பாகம் 1)
அரியணைகளின் ஆட்டம் — Game of Thrones: முன்கதை சுருக்கம் (பாகம் 2)
அரியணைகளின் ஆட்டம் — கேம் ஆஃப் த்ரோன்ஸ்: அடுத்த வாரிசு
முன்குறிப்பு: Spoiler அநேகம் உண்டு.
1*zfj1qA2T8zmW4z_mWbOicQ.jpeg

தீர்க்கதரிசனங்கள் (Prophecy) அரியணைகளின் ஆட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

S05E01, மேகி (எ) நுணல் (Maggie, the Frog) சூனியக்காரி செர்சி லேன்ஸ்டருக்கு (Cersei Lannister) ஆரூடம் தெரிவிக்கிறாள். மூன்று கேள்விகளுக்கு பதில் கேட்கிறாள் சிறுமி செர்சி. முதலாவதாக — தான் இளவரசரை மணப்பாரா என்று. மேகி அதற்கு, “நீ இளவரசரை மணக்க மாட்டாய், ஆனால் மன்னரை மணப்பாய்” என்கிறாள். குழம்பிய செர்சி, இரண்டாவதாக — தான் என்றைக்காவது இராணி ஆவாளா என்று கேட்க, “நிச்சயமாக நீ இராணி ஆவாய். ஆனால், உனக்குப் பிறகு உன்னைவிட இளைய/ உன்னை விட அழகான பெண்ணொருத்தியால் அந்தப் பதவியை இழக்க நேரிடும்” என்று கட்டியம் கூறுகிறாள். மூன்றாவது — எனக்கும் அரசரருக்கும் எத்தனை பிள்ளைகள் பிறப்பார்கள் என்று வினவுகிறாள். “உனக்கு மூன்று பிள்ளைகளும், அரசருக்கு பதினாறு பிள்ளைகளும் பிறப்பார்கள்” என்று சொல்கிறாள் மேகி. கூடவே, “பொன்னாலான கேசம் தரித்த உன் பிள்ளைகளின் முடிவு உன் கண்முன்னேயே நடக்கக்கூடும்” என்றும் சொல்கிறாள். இந்த ஆரூடம் படிப்படியாக பலிக்கிறது. இளவரசர் ரேகாருடன் செர்சியின் திருமண ஒப்பந்தப் பேச்சுவார்த்தை படுதோல்வியில் முடிகிறது. ரேகாரை வீழ்த்தி அரியணையில் அமரும் புதிய மன்னர் ராபர்ட் பராத்தியனுடனே செர்சிக்கு திருமணம் நடந்தேறுகிறது. அரசருடன் குழந்தைகளைப் பெறாத செர்சி, மூன்று தங்கநிற மயிர் தரித்த பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார் — ஜாஃப்ரி, டாம்மென், மிர்செல்லா. இப்போது இராணியாக அமர்ந்திருக்கிற செர்சிக்கு தன்னை விட அழகான சான்சாவின் மீது முதலில் வன்மம் பிறக்கிறது. பிறகு தன்னை கேஸ்டர்லி பாறைக்கு (Casterly Rock) துரத்தியடித்துவிட்டு மொத்த அதிகாரத்தையும் கைப்பற்ற துடிக்கிற மார்ஜரி டைரலுக்கு எதிராக வஞ்சனை சூல் கொள்கிறது. மகனின் உற்ற மனைவி என்று நன்கறிந்தும், தூள்தூளாக வெடித்து சிதறடிக்கிறார். தீர்க்கதரிசனங்களைப் பொறுத்தமட்டில், எவ்வளவு தூரம் ஆரூடத்தை பொய்க்க வேண்டி நாம் மெனக்கெடுகிறோமோ, அவ்வளவு சர்வநிச்சயமாக ஆருடம் நடந்தேறும். செர்சி பொத்திப் பொத்தி பாதுகாக்கிற அவளது குழந்தைகள் வரிசையாக மரணத்தைத் தழுவுவதை ஆவதை அவளால் ஒருபோதும் தவிர்க்க முடிவதில்லை.

1*gwN3qaokjHt_RUzYd8hQiA.jpeg
Source: Pinterest [https://www.pinterest.com/pin/569283209132845062/]

தொடரில் இடம்பெறாத நுணலின் இன்னொரு முக்கியக் குறிப்பு புத்தகங்களில் இடம்பெறுகிறது — ”பிள்ளைகளைப் பறிகொடுத்து கண்ணீரில் மூழ்கும் நீ, உனது இளவலின் கைகளால் கழுத்து இறுக்கப்பட்டு, உன் உயிரின் கடைசி துளி பருகப்படும்” என்ற மேலதிக தகவல். “வலோன்கார்” (Valonquar — வலேரியச் சொல்) என்ற இந்த இளைய சகோதரராக செர்சி பால்ய வயது முதலே கருதுவது, தனது தாயின் உயிரை பிறக்கும் போதே பறித்துக்கொண்ட டிரியன் லேனிஸ்டரைத் தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் முன்னேறும் விதத்தை வைத்துப் பார்க்கும் போது அது ஏன் ஜேமி லேனிஸ்டராக இருக்கக்கூடாது என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது. ஜேமியும் செர்சியும் ஒன்றாக உலகத்திற்கு வருகை புரிந்த இரட்டைக்குழந்தைகள். பிறக்கையில் செர்சியின் காலை தனது கரங்களால் இறுகப் பிடித்தவாறே ஜேமி பிறந்ததாக ஒரு கதை உண்டு. அந்தக் கையையே, வெட்டுப்பட்டு பின்னால் ஜேமி இழக்கிறார். இரண்டு பேருக்குள்ளும் இருந்த பந்தத்திலேயே வெட்டு விழுவதாக பூடகமாக இங்கு ஒரு கருத்து தொனிக்கிறது. அதே சமயத்தின் போது ஜேமியின் கடைக்கண் பார்வையில் ப்ரியென் இருப்பதையும் நம்மால் இதனுடன் சேர்த்து புரிந்துகொள்ளமுடிகிறது. ராஜவஞ்சகன் (Kingslayer) என்ற அவப்பெயரைச் சுமக்கிற ஜேமிக்கு தன்னுடன் பிறந்த சகோதரியே, பித்தரான ஏரிஸ் டார்கேரியன் (‘Mad King’ Aerys Targaryen) செய்யத் துணிந்த அதே பெரும்பாவத்தைச் செய்யக் கண்டு கட்டுக்கடங்காத கோபம் பிறக்கிறது. தங்கள் குடும்பத்தின் கடைசி வாரிசும் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள வேறு நேரிடுவதால் மிகப்பெரிய மனமாற்றத்தைச் சந்திக்கிறார் ஜேமி. ஜேமியின் பார்வையிலேயே மீண்டும் ஒரு சுழற்சி புலப்படுகிறது — பித்து பிடித்த ராஜா போய் பித்து பிடித்த ராணி அரியணையில் அமர நேர்கிறது. ஆனால், மேகியின் கூற்றுக்கெதிராக இப்போது செர்சி மறுபடியும் கருவுற்றிருப்பது திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. இன்னும் புத்தகங்கள் இவ்வளவு தூரம் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

”உனது குறைபாட்டை நீ கவசமாக அணிந்துகொள். அப்படி நீ வலம் வந்தால், அதை உனக்கெதிராக யாராலும் பயன்படுத்த முடியாது!” என்று டிரியன் ஜானிடம் முதல் பருவத்தின் முதல் அத்தியாயத்தில் (S01E01) சொல்லுவார்.

டிரியனின் குறைபாடு அவரது உயரம்.
ஜானின் குறைபாடு அவரது ஸ்னோ இயற்பெயர். Cripples, Bastards, and Broken Things — முதல் அத்தியாயத்தின் தலைப்பு, அத்தியாயத்தின் இறுதிக்காட்சியை நினைவுகூர்கிறது. தொடரின் மிக முக்கியமான இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்குமே அளப்பெரிய குறைபாடுகள் உண்டு. இவர்கள் யாரும் அவதாரபுருஷர்கள் அல்ல. டனேரிசிடம் மாயாஜால சக்திகள் இருக்கிற போதிலும், அவளால் கருவுற முடியாத நிலையில் தான் (தற்போது வரை) நீடித்து வருகிறார். இவர்கள் தவிர தொடர் முழுக்க அத்தனை கதாபாத்திரங்களும் இப்படி நிறைய குறைகளுடன் தான் சித்தரிக்கப்படுகின்றன. ரொம்ப நல்லவண்டா-வுக்கு மிக அருகிலிருக்கிற நெட் ஸ்டார்க் கூட தந்திரமின்மையால் உயிரையே ஆட்டத்தில் பணயமாக வைக்க நேரிடுகிறது. ஜேமியின் குறைபாடு அவரது துண்டிக்கப்பட்ட கரம். டனேரிஸ்/ஒலென்னா/ செர்சியின் குறைபாடு அவர்களது பெண்பால் சார்ந்த அதிகாரமின்மை. ஸ்டேனிசின் குறைபாடு அவர் மூத்த வாரிசாகப் பிறக்காதது. ப்ரானின் குறைபாடு அவனது உடைந்த கால்கள். சேம்வெல்லின் குறைபாடு அவனது கோழைத்தனம். சேம்வெல்லின் தந்தை ரேண்டலின் குறைபாடு அவருடைய கோழைத்தனம் வாய்ந்த மூத்த மகன், வெண்பிணங்களின் (Wights) குறைபாடு ட்ராகன்பாறை, (Dragon glass) வெள்ளை மனிதர்களின் (White walkers) குறைபாடு வலேரிய இரும்பு. இப்படி குறைபாடுடைய நிஜமான பாத்திரங்களும், அவர்களது முரண்பாடுகளுக்குள் நடக்கிற சுவாரசியமும் தான் கேம் ஆஃப் த்ரோன்சின் அதியற்புதமான கதையாடல் ஆகும். இந்த விந்தையான நகைமுரண்— Oxymoron, மிகக் கவித்துவமாக கதையினை உந்திச் செல்கிறது. புத்தகங்களின் பெயரிலேயே ஒரு முரண் தொடை — பனிநீரும் நெருப்பும் (A song of Ice & Fire) இருப்பதே சான்று.

தீர்க்கதரிசனங்களில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடைய இன்னொருவர் இளவரசர் ரேகார் டார்கேரியன். பனிநீர் — நெருப்பு (The Prophecy of Ice and Fire aka Azhor Ahai): இந்த தீர்க்கதரிசனத்தை, தான் வாசித்த சில புத்தகங்களின் வாயிலாக அறிந்துகொள்கிறார் ரேகார் டார்கேரியன். அவர் இசைக்கலையில் பெரிய விற்பன்னராக இருந்திருப்பதை நாம் அறிவோம். அதிலும், கோடை மண்டபத்தில் (Summer hall) அவர் யாழ் மீட்டும் ராகங்கள் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்ய வல்லவை என்று சொல்லக்கேள்வி. ஹேரன் மண்டபத் திருவிழா (The Great Tourney at Harrenhall) விருந்தில், ரேகார் தன்னை மறந்து பாடும் பாடலில் கரைந்து கண்ணீர் சிந்துகிறார் லையான்னா ஸ்டார்க். ரேகார் அப்போது பாடிய பாடல் தான் “A song of Ice and Fire” என்பதும், அதில் அதிகாரப்பூரவமற்ற செய்தி. பொதுப்படையாக ஒரு சோகப்பாடலாகத் தோன்றினாலும் ஆயிரமாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் நாயகன் ஒருவனைப் பற்றிய தேடலின் தோல்வியையே பாடலாக ரேகார் யாழ் நரம்பு மீட்டியிருக்கிறார். குறிப்பாக, தாயுள்ளம் ஒரு பிள்ளையின் பிரிவில் வாடும் உணர்வை அந்தப் பாடல் பெண்களிடம் கடத்தியதாம். அங்கிருந்த பனிநீரின் பெண்ணுருவம் லையான்னா, காந்தம் இரும்பைக் கண்டதைப்போல, வண்டு மலரைக் கண்டதைப் போல ஒரு அதீத ஈர்ப்பில் அந்த நொடியே ரேகாரின் மறைமுக விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கிறார் என்று தான் ஊகிக்க முடிகிறது. மேலும், ஹாலண்ட் ரீட் பிரபுவிற்கு பக்கபலமாக உயரத்தில் குறைந்த, மெல்லிய குரலுடன் திடீரென்று தோன்றிய அந்த மர்மப் பெருந்தகை (Mystery Knight aka Knight of the laughing tree) லையான்னாவாக இருக்கக்கூடும் (பெஞ்சன் ஸ்டார்க் அல்லது பெருந்தகை ஜேமி லேனிஸ்டராகவும் இருந்திருக்கலாம் என்பது அரசரின் கணிப்பு) என்பதும் பரவலான ஒரு செய்தியே. சேவகர்களுக்கு பாடம் புகட்டிவிட்டு மறைந்தோடிய அந்த வீரரை, அரசரைக் கொல்வதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சியின் ஆயுதம் என்று கருதி அவனைப் பிடித்துவருமாறு ரேகாரைத் தான் அரசர் ஏவுகிறார். ரேகார் வெறுங்கையுடன் திரும்பி வந்தபோதும் கூட, இது உண்மைக்கு புறம்பாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்பது அநேக ரசிகர்களின் நிலைப்பாடு. மர்மப்பெருந்தகையைப் பிடிக்கிற ரேகார் டார்கேரியன், அது வேறு யாருமல்ல — லையான்னா தான் என்றறிந்து கொண்டு, அதையே சாக்காக வைத்து லையான்னாவுடன் காதல் கொண்டு மேலும் நெருங்கிப்பழக இது ஒரு வசமான சந்தர்ப்பமாக அமைந்துவிடுகிறது என்பதும் ரசிகர்கள் மத்தியில் பரவலான கருத்து. அப்போது வலுப்படுகிற காதல், எலியாவை முற்றிலுமாகக் கடந்து லையான்னா-ரேகார் திருமணமாகவும் மலர்கிறது. இருவரின் மனம் போல, தங்களின் பெருநாட்டைக் காக்க வந்த மாவீரர்களுக்கெல்லாம் மாவீரன் (Azhor Ahai) நெருப்பும் உறைபனியும் சந்திக்கையில் பிறக்கிறான். ஏகான் டார்கேரியன் நெட் ஸ்டார்க்கின் கைகளில், வேறு வழியின்றி வைல்லா என்ற இல்லாத வைப்பாட்டிக்கு மகனாகிப் போகிறான். இந்தப் பொய்யின் மீது கட்டப்பட்டது தான் ராபர்ட்டின் கிளர்ச்சி. (Robert’s Rebellion)

சரி, ஐந்து ராஜாக்களின் போர் (War of the Five Kings) எந்தப் பொய்யின் மூலம் வலுப்பெறுகிறது? ஜான் ஆரினைக் கொலை செய்தது லேனிஸ்டர்கள் தான் என்பது லைசா ஆரின் பீட்டர் பேலிஷின் வார்த்தைகளில் மயங்கி, தமக்கை கேட்டலின் ஸ்டார்க்குக்கு ஓலையில் அனுப்புகிற பொய். அந்த எண்ணத்தை மேலும் வலுப்பெற வைக்க கூலிப்படைக்காரன் ஒருவனிடம் தனது குத்துவாளைக் கொடுத்தனுப்பிவிட்டு ஸ்டார்க்குகளிடம் இந்தக் கத்தி டிரியன் லேனிஸ்டருடையது என்று பீட்டர் பேலிஷ் சொல்வது மற்றுமொரு பொய். இந்தப் பொய்களின் வேர் தான் இருபெரும் குடும்பங்களுக்கிடையில் பெரிய பகையை விழுதுவிட்டு வளரச்செய்கிறது. ஐந்தாம் பருவத்தின் ஏழாம் அத்தியாயத்தின் (S05E07) தலைப்பு — The Gift. டிரியன் தன்னையே டனேரிசுக்கு பரிசாக பெருந்தகை ஜோரா மார்மண்டின் தீரச்செயலுக்குப் பின் ஒப்படைக்கிற காட்சி இடம்பெறும் அத்தியாயம் அதுவே. அதே அத்தியாயத்தில் பேலிஷ் ஒலென்னாவிற்கு ஒரு பரிசை அளிக்கிறார். அந்தப் பரிசு ஏற்கனவே செர்சீக்கு அவர் அளித்திருந்த பரிசுக்கு சரிநிகர் சமானமானதாகும். ஒலென்னாவிடம் செர்சி/ லேன்சல் இருவரது உறவு குறித்த இரகசியத்தை பரிசளிக்கிற பேலிஷ், முதலில் குழந்தையைக் கிள்ளிவிடுகிற கதையாக செர்சியிடம் லோரசின் ஓரினச்சேர்க்கை இரகசியத்தைக் கசியவிடுவது தந்திரமாக தொட்டிலையும் ஆட்டிவைக்கிற இடம். மேலும், ஒலென்னா டைரெலுடன் கைகோத்த்துக்கொண்டு ஜாஃப்ரி பராத்தியன் நஞ்சுண்டு மரணிப்பதற்கும் காரணம் சிறுவிரல் (Littlefinger) பிரபுவே. மேற்கொண்டு சான்சாவை போல்டன்களிடம் ஒப்படைத்துவிட்டு மேலும், லோரஸ் டைரெல்-ரென்லி பராத்தியனின் தகாத உறவுமுறையை செர்சியிடம் விளக்குகிறார். தன்னை ஒருமுறை அவமதித்து, பின்னால் மதக்காவலர்களால் (Faith Militant) தனது கேளிக்கை விடுதிகளை ஒடுக்கும் செர்சியை ஒரேயடியாக ஒழித்துக்கட்ட, ஒலென்னாவிடமும் திரியைக் கிள்ளிப்போடுவதும் சிறுவிரல் தான். உயர்குடும்பம் எதிலும் பிறக்காமல், தேர்ந்த போர்வீரனாகவும் இல்லாமல், கற்றறிந்த சான்றோனாகவும் இல்லாமல் தனது சாதுரியத்தாலும், கனகச்சிதமான திட்டமிடுதலாலும் படிப்படியாக வெஸ்டரோசின் மிகப்பெரும்பலம் வாய்ந்த மனிதர்களுள் ஒருவராக பீட்டர் பேலிஷ், எப்போதும் ஒரு உயர்ந்த நிலையில் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறார்.

1*UrF1e-VukqTeWsO4Reo-QA.jpeg
“He would see this country burn if he could be king of the ashes.” — Lord Varys, the Spider

பெரும் விளைவுகளை உண்டாக்கும் நுட்பமான சூழ்ச்சிகள் புரியும் பீட்டர் பேலிஷ் தனது ஆருயிர்க்காதலி கேட்டலினை பிராண்டனிடம் பறிகொடுத்த கோபத்தில், கேட்டலினை திருமணம் செய்துகொள்ள போகிற பிராண்டனின் காதில் ரேகார் லையான்னாவுடன் காதலில் விழுந்ததைச் சொல்லாமல், கடத்திக்கொண்டு போயிருக்கிறான் கிராதக இளவரசன் என்று சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது, இல்லையா? அல்லது தன்னை முழுமையாக நம்பினாலும் சித்தம் கலங்கிய மன்னர் அரியணையில் அமர்ந்திருப்பது பெருங்கண்டத்திற்கு எந்த விதத்திலும் நல்லதுக்கில்லை என்றெண்ணிய வேரிஸ் பிரபு தனது பரந்த வானின் குருவிகள் யாரிடமாவது செய்தியை அரசல் புரசலாகக் கசியவிட்டு அந்த வதந்தியை பிராண்டனின் காதுகளில் பொய்யாகப் போய்ச்சேர அனுமானித்திருக்கலாம் தானே? அல்லது, தனது மணமுறிவையும் புதுமணத்தையும் ஊராரிடம் செய்தியாக/ பாடலாக பரப்ப எண்ணிய ரேகாரே இந்தக் கருத்தை எக்குத்தப்பாக பிராண்டனின் காதுகளில் போட்டாரா? இதுபோன்ற எண்ணற்ற சூழ்ச்சி வலைகள் பின்னப்படும் அத்தனை சாத்தியக்கூறும் இருக்கிற இடம் தான் இந்தப் பெருநாடு. ஒரு சம்பவத்தை ஆராய்ந்தால் அதன் சாத்தியக்கூறுகள் எத்தனை வெவ்வேறு கோணங்களில் விரிகிறது என்பதில் தான் மார்ட்டின் கட்டமைக்கிற மர்மம் மேலும் மேலும் ஆழமாக புதைந்துகொண்டு பார்வையாளர்களை கிறங்கடிக்கிறது.

இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை — இரண்டே பேர் தான் இந்தப் பொய்யை அடிப்படையாக வைத்து ஒரு பெரும் கலகத்தை உண்டுசெய்யக்கூடியவர்கள். முதலாவதாக, தன் மனங்கவர்ந்த மங்கை லையான்னாவின் இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியாத ராபர்ட், ரேகாருக்கும் லையான்னாவுக்குமிடையே காதல் தான் என்று அறிந்தும், எலியாவிற்கும் ரேகாருக்கும் நடந்த திருமணம் முறிந்துவிட்டதை அறியாமலும் ராபர்ட்டே கிளர்ச்சியை துவங்கியிருக்கலாம். அல்லது, இரண்டாவதும் நான் மிக திடமாக நம்பக்கூடியதுமானது — கௌரவத்திற்கு குறைச்சல் இல்லாத ஸ்டார்க் பிரபுக்களே,”மணமாகி, இரண்டு பிள்ளைகளின் தந்தையை தன் வீட்டின் திருமகள் மணப்பிள்ளையாக எண்ணுவதா? கேவலம்!” என்று புழுங்கி இருவருக்குமிடையே இருந்த காதலை அறியாமல் தொடங்கிய இந்தப் புரட்சி தான் இந்த ஒட்டுமொத்த குழப்பமும் நிலவுவதற்க்குக் காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து. செர்சி விரிவாக்கி உயிரூட்டிய ஆலயப் பாதுகாவல் படையே (Faith Militant), பின்னாளில் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி, அவரது உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடுகிற அபாயம் நேர்வதைப் போல. டல்லி பிரபுக்கள் சீராட்டி சிறுவயது முதலே வளர்த்த சிறுவிரல் பீட்டர் பேலிஷ் பிரபு (Littlefinger aka Lord Petyr Baelish), அவர்களது குடும்பத்தின் இரண்டு பெண் வாரிசுகளுக்குமே மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்குகிறார். மட்டுமின்றி, டல்லி சகோதரிகளுக்குள் பூசல் மூட்டிய பேலிஷ் கடைசியில் ஸ்டார்க் சகோதரிகளின் கையில் முடிந்துபோவதும் கூட இந்த முரண்பாடுகளில் அடக்கம் என்று மனதைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. வளர்த்த கிடா மார்பில் பாயும் நகைமுரணை, ஒரு மிக முக்கியமான கதையாடலாக மார்ட்டின் பயன்படுத்தியிருக்கிறார். மனித இனத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக தொடரில் தோன்றும் வெள்ளை மனிதர்களின் (White Walkers) தலைவனான இருளரசன் காட்டின் குழந்தைகளால் (Children of the Forest) உருவாக்கப்பட்டவர் தானே? பாதை நெடுக நகைமுரண்களின் குவியல்.

1*y0gYQSsmFCo2joJL6lXoFg.jpeg
ஆஸோர் ஆஹாய், காவிய நாயகன் [Source: http://themicos.blogspot.in/]

அறிமுகப் பதிவிலேயே குறிப்பிட்டுச் சொன்னதைப் போல, இந்தத் தொடரின் மையக் கருத்தியலே நன்மை — தீமை என்ற தட்டையான அணுகுமுறையிலிருந்து விலகி மனித மனத்தின் அளப்பரிய குணமான தெளிவின்மை — இன்னதென்று அறுதியிட்டு ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’ போல சட்டென்று பகுத்துவிட முடியாமல் இருக்கிற ‘Ambiguity’ தன்மையை அடிப்படையாகக் கொண்டுள்ளதே. இருளரசன் (Night King) திடீரென்று எல்லா ரசிகர்கள் மத்தியிலும் வில்லன்/ “தீய சக்தி” என்பது போன்ற குரல்கள் சத்தமாகக் கேட்கத் துவங்கியுள்ளன. இது ஒரு முரண்பாடு. பலரைப் போல மனிதராக வாழ்ந்துகொண்டிருந்த நபரை பலவந்தமாக வேறு வழியே இல்லாமல் இருளரசனாக உருமாற சபிக்கப்பட்ட கதாபாத்திரம் தான் பரிதாபத்துக்குரிய Night King. மனிதர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் உருவாக்கிய பேரழிவு ஆயுதம் தான் அவன். பீட்டர் பேலிஷ் நூறு சதவிகித மனநிறைவோடு தான் செர்சியைப் பற்றிய ரகசியத்தை ஒலென்னாவிடம் கூறுகிறார். செர்சி விருப்பப்பட்டு தான் பேலோர் ஆலயத்தை (Sept of Baelor) தவிடுபொடி ஆக்குகிறாள். நெட் ஸ்டார்க், மரணதண்டனையை விதிக்க மட்டுமில்லாமல் தானே நிறைவேற்றச் செய்வதும் கூட விருப்பத்தின் பேரிலேயே. ஜாஃப்ரி முழுமனதோடு தான் நெட் ஸ்டார்க்கின் தலையைக் கொய்கிறான். ஒலென்னா டைரெல் மனமுவந்து தான் ஜாஃப்ரிக்கு விஷம் வைத்துக் கொல்கிறார். காட்டின் குழந்தைகளின் (Children of the Forest) மந்திரசக்தி இவ்வுலகிலேயே மிகவும் ஆற்றல் நிறைந்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்களது மந்திரசக்தியால் இட்ட கட்டளையை மட்டுமே நிறைவேற்றும் ஒரு பொம்மையாக மட்டுமே குழந்தைகள் இருளரசனை உருமாற்றுகிறார்கள். தங்களை அழிவிலிருந்து காத்துக்கொள்வதாக எண்ணி தங்களையே படுகுழியில் தள்ளிவிட்டுக்கொண்டார்கள். குழந்தைகளை வேறு வழியே இல்லாமல் பேரழிவு நிகழ்த்தும் மந்திர மனிதர்களை உருவாக்கும் அளவுக்கு தள்ளியது மனித இனத்தின் பெரும்பிழை தானே? மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டக் கொளுத்திய கதையாக தங்கள் பாதுகாவலுக்கென உருவாக்கிய ஒரு புதிய இனம் தங்களையே பூண்டோடு ஒழித்துவிடும் அபாயம் ஒன்றை தங்கள் மேலேயே வலிந்து திணித்துக்கொண்டது குழந்தைகளின் தவறு தானே?

ஒரே ஒரு வார்த்தையைக் கூட இன்னும் உச்சரிக்காத மர்மமே உருவான இருளரசனை அடுத்த பருவம் முழுக்க காட்சிப்படுத்தவிருக்கிறார்கள். அவனது சக்திகள் பற்றி நமக்கு இன்னும் முழுதாக தெரியவில்லை. அவரது நோக்கம் என்ன? ஒருவேளை வெஸ்டரோசின் மனித இனத்தை அழித்தொழித்துவிட்டால், அதற்கப்புறம் என்ன? அப்படி மனிதர்களை கொன்று குவிப்பதால், இவர்களின் கர்த்தா காட்டின் குழந்தைகளுக்கு பலன் உள்ளதா? குழந்தைகள் யாராவது உயிருடன் எஞ்சியிருக்கிறார்களா? ஏற்கனவே ஒருமுறை இருளரசரையும் பனி மனிதர்களையும் வடக்குதேச எல்லைக்கு அப்பால் அனுப்பி குழந்தைகளின் துணையுடன் மதிற்சுவரை நிர்மாணித்து காத்த ப்ரான் (Bran ‘The Builder’) என்ற புராணக் கதையில் எழுதப்பட்டிருப்பது மீண்டும் நிகழுமா? இருளரசனைப் போலவே பெரும்பாலும் அமைதியாகவும் மர்மமாகவும் இருக்கிற பிரான் ஸ்டார்க்கின் சக்திகளையும் முழுவீச்சில் அடுத்த பருவம் காணலாம் என்று எதிர்பார்க்கிறேன். பனிக்கட்டி ஆயுதங்கள் கொண்டு உலோக வாள்களை தூள் தூளாக சிதறடிக்கிற, சிறிய கையசைவில் செத்தவர்களை உயிருடன் கொண்டுவருகிற, ஒரே ஒரு ஈட்டியில் டிராகனையே கொன்று வீழ்த்துகிற அளவிற்கு தேர்ந்த மந்திரவித்தைக்காரர் ஒருபுறம், கண்ணசைவில் காலத்தைப் புரட்டிப்போடும்/ வேறொரு உயிரினத்தை இருந்த இடத்திலிருந்தவாறே கட்டுப்படுத்தும் ப்ரான் ஸ்டார்க் மறுபுறம். இருவரும் என்னென்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்று ஆவலாக எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறேன். எந்த ஆட்டத்திலும், தொடங்கி ஒரு வட்டம் முழுமையடைந்த பிறகு தாயம் போட்டு மீண்டும் அதே ஆட்டம் அரங்கேறும்.

Winter is coming.

The promise of a spring beckons.

Spring is coming.

அது யாருக்கான வசந்தம்?
அந்த வசந்தகாலப் பொழுதுகளில் தீர்க்கதரிசனங்கள் மெய்யாகுமா?

 

https://medium.com/@venkiraja/அரியணைகளின்-ஆட்டம்-கேம்-ஆஃப்-த்ரோன்ஸ்-தீர்க்கதரிசனங்கள்-162486da036f

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியணைகளின் ஆட்டம் எப்படி முடியப்போகிறது?

How will #GameOfThrones end?

இன்னும் சில மாதங்களில் எழுதப்படப்போகிறது தொடரின் பிரம்மாண்ட முடிவுரை. சுமார் எழுபது மணி ஒளிபரப்பைத் தாண்டிய இந்த மாய உலகின் முடிச்சுகள் எல்லாம் அவிழப்போகின்றன. மீதம் இருக்கிற சில மாதங்களில் நமது பொழுதுபோக்கு, ஆடும் இந்த அரியணைகள் எப்படி நிலைகொள்ளப் போகின்றன என்பதை அசைபோடுவது தான். சொல்ல அவசியம் இல்லை, இருந்தாலும் டிஸ்கி: Spoiler Alert.

1*cWG2jmlWVm9M75pkInjwVw.jpeg

http://www.youtube.com/watch?v=NspqGM0DbbQ

என் கணிப்பின்படி, அரியணை ஏதுமின்றி அரியணைகளின் ஆட்டம் முடியப்போகிறது. அதாவது மன்னராட்சி கோலோச்சிய இடைக்கால வரலாறு முடிந்து, மக்களாட்சி மலரும் நவீனகால வரலாற்றின் தொடக்கமாக அது அமையும்.

1*LZbIkb7I3sdUdQTT4fldPw.jpeg

தொடரின் ஆரம்பத்தில் வெஸ்டரோசில் மாயமோ மந்திரமோ கிடையாது. டிராகன்கள் கிடையாது, இருளரசனோ (Night King), வெள்ளைப் பிசாசுகளோ (White Walkers) கிடையாது. அவை கதைகளாகவே பலகாலம் நிலைத்து புராண-இதிகாச அந்தஸ்தை பெற்றிருந்தன. ஆனால், அரியணைகள் ஆட்டம் கண்ட பிறகு — டையர் ஓநாய்கள் மீண்டும் தரித்தன. டிராகன் முட்டைகள் பொறித்தன. செங்குமரி (Red Woman) கர்ப்பத்திலிருந்து பூதம் கிளம்பியது, பிணங்கள் உயிர்பெற்றன, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் கண்ட காட்டின் குழந்தைகள் (Children of the Forest) மீண்டும் காட்சி தந்தனர், இருளின் மொத்த உருவமான அசுரபலம் வாய்ந்த இருளரசன் டிராகனையே சின்ன ஈட்டியால் கொன்று வீழ்த்துகிறான். அடிப்படையில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் இடைக்கால வரலாற்றை ஒட்டிய கதைக்களம். வரலாற்று நிகழ்வுகளிலிருந்து ஏராளமான துணுக்குகள் கதை நெடுக மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. நிஜத்தில் நாம் வாழ்கிற சமகால நவீன வரலாற்றுக்காலமானது, இடைக்கால வரலாற்றின் கடைசியில் இரண்டு பெரும் உலகப் போர்கள் நடைபெற்ற காலகட்டத்தைத் தாண்டியது. தொடரில் ஏற்கனவே உலகம் மொத்தமும் மோதிக்கொண்ட முதல் போரான ராபர்ட்டின் கிளர்ச்சி நடைபெற்றது.

தொடரின் முன்கதைச் சுருக்கத்தையே கொஞ்சம் ரத்தினச்சுருக்கமாகப் பார்ப்போம்:

1*IA0Pijwyg8Czw7u9y4kvgg.jpeg

ரேகார் தனது மனைவி எலியா மார்ட்டெலைத் துறந்து, லையான்னா ஸ்டார்க்கை கரம் பிடிக்கிறார். இது லையான்னாவின் அண்ணன் ப்ராண்டன் ஸ்டார்க்கிற்கு பெருங்கோபத்தை வரவழைக்கிறது. மேலும், லையான்னாவிற்கு நிச்சயிக்கப்பட்டவரான ராபர்ட் ப்ராத்தியனையும் கடுஞ்சினத்துக்குள்ளாக்குகிறது. பிராண்டன் ஸ்டார்க் பித்து பிடித்த ஏரிசிடம் முறையிட, பைத்தியக்கார மன்னர் அவரை சிறைபிடிக்கிறார். இதனால் வெகுண்டெழுகிற பிராண்டன்/ எட்டார்ட் மற்றும் பெஞ்சன் ஸ்டார்க்கின் தகப்பனார் ரிக்கார்ட் ஸ்டார்க் படைவீரர்கள் சிலருடன் தலைநகரம் வருகிறார். முறையிட்ட ரிக்கார்டையும், அவரது மூத்த மகன் பிராண்டனையும் அரசவையிலேயே கொடூரமாகக் கொலை செய்கிறார் ஏரிஸ். இது நெட் ஸ்டார்க்கை களத்திற்கு அழைக்கிறது. நெட் ஸ்டார்க்கும், ராபர்ட் பராத்தியனும், ஜான் ஏரின் பிரபுவின் தலைமைக்கு கீழ் படைகளைத் திரட்டி நதிக்கரை தேசத்து கோட்டையை ஆளும் டல்லி பிரபுக்களின் ஆதரவுடன் டார்கேரியப் படைகளை போரில் சந்திக்கிறார்கள். ரேகார் டார்கேரியன் செருக்களத்தில் வீரமரணம் அடைகிறார். அந்த நேரம் பார்த்து, அதுவரைக்கும் மகுடத்திற்கு விசுவாசமாக இருந்த லேனிஸ்டர்கள் டைவினின் தலைமையில் தலைநகரை துவம்சம் செய்து, ராணி எலியா மார்ட்டெலையும், அவளது வாரிசுகளையும் கொன்று குவிக்கின்றனர். பித்து தலைக்கேறிய மன்னர் தோல்வி உறுதியடைந்த பின்னர், தன்னுடன் சேர்த்து ஒட்டுமொத்த தலைநகரையும் பல்லாயிரக்கணக்கானோரையும் ரசவாத காட்டுத்தீயின் (Wildfire) மூலம் சாம்பலாக்க எண்ணினார். அந்த நேரத்தில் டைவின் லேனிஸ்டர் பிரபுவின் மூத்த மகனும், அரசரின் தனி மெய்க்காவல் படையைச் சேர்ந்தவருமான ஜேமி லேனிஸ்டர் ஏரிஸ் டார்கேரியனை முதுகில் குத்திக் கொல்கிறார். போர் முடிவடைகிறது. டார்கேரிய ஆட்சிக்கு பக்கபலமாக இருந்த டைரெல் பிரபுக்கள், மார்ட்டெல் பிரபுக்கள், க்ரேஜாய் பிரபுக்கள் என சகலமானவர்களும் ராபர்ட் பராத்தியனின் ஒற்றை குடையின் கீழ் அடங்கிப் போகிறார்கள். இத்தனை களேபரத்திற்கு நடுவிலும் டார்கேரிய வம்சத்தின் கடைசி வாரிசுகளான டனேரிஸ் டார்கேரியன், விசேரிஸ் டார்கேரியன் இருவரும் குறுங்கடலைத் தாண்டி உயிர்தப்பி தஞ்சம் புகுந்துகொள்கின்றனர்.

மேலும் விரிவாக ராபர்ட்டின் கிளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள, நீங்கள் வாசிக்க வேண்டிய பதிவுகள்:

ராபர்ட்டின் கிளர்ச்சி (முன்கதைச் சுருக்கம்) — பாகம் 1

ராபர்ட்டின் கிளர்ச்சி (முன்கதைச் சுருக்கம்) — பாகம் 2

மேற்கண்ட போரின் ஆரம்பப்புள்ளியான லையான்னா, ரேகார் — இருவருமே மரணத்தைத் தழுவுகிறார்கள். போரின் நாயகன் ராபர்ட் பராத்தியன் தான் விரும்பிய லையான்னாவுடன் இணையவில்லை. பட்டத்து ராணி செர்சீ தான் விரும்பிய ரேகாரைக் கரம் பிடிக்கவில்லை. போரின் மற்றொரு சாகச வீரர் நெட் ஸ்டார்க், தனது ஆருயிர் அண்ணன் பிராண்டன், அன்புமிகு தந்தை ரிக்கார்ட், பாசமலர் தங்கை லையான்னா என பலரை இழந்து, எஞ்சியிருக்கிற ஒரே தம்பி பெஞ்சனும் பெருஞ்சுவருக்கு (The Wall) புறப்பட்டுவிட கதியற்று நிற்கிறார். போர்க்களத்தில் தோல்வியே அடையாத போதிலும், டார்லிப் பிரபுக்களும் டைரெல் பிரபுக்களும் ராபர்ட்டின் வாளுக்கு அடிபணிந்து போகவேடியிருக்கிறது. போரில் வெற்றிபெற்றிருந்தாலும், தனது கடைசி மகன் ஊனத்துடன் பிறந்து, தன் காதல் மனைவியையும் அந்த பேறுகாலத்தில் பறிகொடுத்து, மூத்த மகனுக்கு நிலங்களோ பட்டங்களோ பெற உரிமையற்ற அரசமெய்க்காவலில் பிணைக்கப்பட்டிருப்பதை எல்லாம் எண்ணி தன்னை வருத்திக்கொள்கிறார் டைவின் லேனிஸ்டர். டார்கேரியப் பேரரசை வீழ்த்தியிருந்தாலும், வெஸ்டரோஸ் பெருநாட்டின் மன்னரின் வலதுகரமாக பட்டம் சூடிக்கொண்டாலும், தனக்கென ஒரு வாரிசின்றி தவிக்கிறார் ஜான் ஆரின். ஏழு தேசங்களையும் கட்டியாண்ட டார்கேரியர்களின் கடைசி இரண்டு வாரிசுகள் விசேரிசும் டனேரிசும் நாடு நாடாக பரதேசிகளைப் போல செல்வந்தர்களின் கொடையில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை சோக கீதங்கள் இசைத்தாலும், அடர்ந்த கேசமும், நீண்ட நகங்களும் கொண்ட பைத்தியம் பிடித்த ஏரிஸ் மன்னர் தலைநகரம் முழுவதையும் தீக்கிரையாக்கவில்லை. வசந்தகாலம் பிறப்பதற்கான தோரணை வந்துவிட்டது. நாட்டில் போர் நின்றது, மக்கள் மனமகிழ்ந்தனர். ஆனால், டார்கேரிய ஏகாதிபத்தியத்தில் பட்டொளி வீசிப் பறந்த டிராகன் கொடியும், டிராகனின் நெருப்பில் வெந்துருகிய வாள்களால் ஆன அரியணை பல நூறாண்டுகாலம் கழித்து ஆட்டம் கண்டது தான் தாமதம். பல ஆண்டுகளுக்கு ஆட்டம் நிற்கவில்லை.

1*0-PwPE5kGXsT-O_7sVbFpA.jpeg

இத்தனை நீளமாக முன்கதையின் பின்புலத்தைச் சொன்னதற்கு காரணம் இருக்கிறது — கார்ல் மார்க்ஸ் தந்த பொன்மொழி. எந்த ஆட்டத்திலும், தொடங்கி ஒரு வட்டம் முழுமையடைந்த பிறகு தாயம் போட்டு மீண்டும் அதே ஆட்டம் அரங்கேறும். முன்கதையை வாசிக்கையிலேயே சில இடங்களில் உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம். முன்கதைச் சுருக்கத்தில் விரிகிற சம்பவங்களுக்கும், கதாபாத்திரங்களுக்கும் நாம் தொடரில் ஏழு பருவங்களாக பார்த்த சில சம்பவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது போல உணர்கிறீர்களா? “Foreshadowing” என்கிற திரைக்கதை உத்தி நூலாசிரியர் மார்ட்டினுக்கு கைவந்த கலை. பின்னால் நடக்கவிருப்பதை குறிப்புகளால் சமிக்ஞையாக உணர்த்தும் நுட்பமான திரைக்கதையமைப்பே foreshadowing ஆகும்.

1*1fv26bF76S4eSAASd4jiPQ.jpeg

பெருந்தகை பேரிஸ்டன் செல்மி டஸ்கண்டேலில் மக்களோடு மக்களாகக் கலந்து முகத்தை முக்காடு போட்டு மறைத்துக்கொண்டு கோட்டைக்குள் ரகசியமாக நுழைந்து கைது செய்யப்பட்ட மன்னரை மீட்பார். S03E01 — பேரிஸ்டன் செல்மி, அஸ்டபோரில் மக்களோடு மக்களாகக் கலந்து அதே போல முகத்தை மறைத்து டனேரிசைக் கொல்வதற்கு அனுப்பப்பட்ட கருந்தேளைக் கத்தியால் குத்திக்கொன்று டார்கேரியக் குடும்பத்தின் வாரிசை மீட்பார்.

1*8flann4-6ccbfpLNXVsrMg.jpeg

இது எதேச்சையானது அல்ல. தொடரின் மிக முக்கிய சம்பவங்களின் பின்புலம், பிரதான கதாபாத்திரங்களின் வெற்றி-தோல்விகள், இதில் அசாதாரண ஒற்றுமை இருக்கிறது. ராபர்ட்டின் கிளர்ச்சியே ஒரு பொய்யின் மேல் கட்டப்பட்டிருக்கிறது என்று ஏழாம் பருவத்தின் கடைசி அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார் ப்ரான் ஸ்டார்க். ஐந்து ராஜாக்களின் போர் (War of the Five Kings) என்று தொடங்கிய பெருங்குழப்பமெனும் ஏணி மொத்தமும் பொய்யின் மேல் கட்டப்பட்டது தானே?

1*800onk1-GvrufblE6MRTsw.jpeg

ரேகார் டார்கேரியனுக்கு எலியா மார்ட்டெலுடன் திருமணமாகி இரண்டு பிள்ளைகளும் உண்டு. மேலும், ராபர்ட் பராத்தியனே லையான்னா ஸ்டார்க்கிற்கு நிச்சயிக்கப்படுகிற மணமகன். ஆனால் திருமண பந்தத்தையும், வேறொரு திருமண நிச்சயத்தையும் மீறி, அவளை ரேகார் கவர்ந்துகொண்டு போவது தான் கிளர்ச்சியில், ரேகார்-லையான்னா இருவருக்கும் மட்டுமின்றி இதை அலட்சியப்படுத்தும் மன்னர் ஏரிசுக்கும் சேர்த்து வினையாக முடிகிறது. வால்டர் ஃப்ரேய் பிரபுவின் பெண்ணொருத்திக்கும் ராப் ஸ்டார்க்கிற்கும் இடையில் திருமண நிச்சயத்திற்கு சம்மதிக்கிறார் கேட்டலின் ஸ்டார்க். அதை ராப் ஸ்டார்க் மீறுகிறார். இதனால் தான் ஃப்ரெய் பிரபுவின் கோட்டையில் ஒப்பந்தத்தை மீறிய ராப் ஸ்டார்க், அவரது மனைவி டாலிசா மட்டுமின்றி, அலட்சியமாக நடந்துகொண்ட கேட்டலினின் உயிருக்கும் கேடாக முடிகிறது.

ராபர்ட் பராத்தியன் டார்கேரிய வம்சத்தில் சகோதர சகோதரிகள் மணந்துகொண்டு சித்தம் கலங்கிய பைத்தியக்காரர்கள் பிறப்பதாக நெட்டிடம் வெளிப்படையாகக் கடிந்து கொள்கிறார். டார்கேரிய ரத்தத்திலேயே பைத்தியக்காரத்தனம் ஊறிப்போயிருப்பதாக தீர்க்கமாக நம்புகிறார். ஆனால், ராபர்ட்டிற்குப் பிறகு மகுடத்தைத் தரித்திருக்கும் ஜோஃப்ரியும் டாம்மெனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் இருவருமே சகோதர-சகோதரிகளின் புணர்ச்சியில் உருவான வாரிசுகளே. ஜாஃப்ரியின் மனப்பிறழ்வுக்கு அதுவுமே கூட ஒரு வலுவான காரணமாக இருக்கக்கூடும்.

ஏரிஸ் ஸ்டார்க்கிற்கு பித்து பிடித்திருப்பதை அறிந்தும் படையுடன் சென்று பட்டத்து இளவரசரின் தலையை மிரட்டிக் கேட்கிறார் பிராண்டன் ஸ்டார்க்.. கழுத்து நெரித்துக் கொல்லப்படுகிறார். செர்சியின் சுபாவத்தை நன்கறிந்திருந்தும் நெட் ஸ்டார்க், அவளை மிரட்டிப் பணியவைக்கப் பார்க்கிறார். ராஜதுரோகி என்ற பழி
சுமத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டு கழுத்தறுந்து சாகிறார்.

1*pd2S1fkb6J0fXrk5KUnLlQ.jpeg

அரசவையில் மகனின் குற்றங்களுக்கு பதிலளிக்க அழைத்துவரப்பட்டு தனது மகன் முன்னிலையிலேயே தீக்கிரையாகி செத்துப்போகிறார் ரிக்கார்ட் ஸ்டார்க். எட்மயரின் திருமண விழாவிற்கு வரவேற்கப்பட்டு வஞ்சகமாக கத்தி பாய்ந்து இறந்து போகிறார்கள் தாய் கேட்டலின் ஸ்டார்க் மற்றும் மகன் ராப் ஸ்டார்க்.

தங்கை எலியா மார்ட்டெலைக் கற்பழித்து, அவளது பிஞ்சுக்குழந்தைகளைத் துடிதுடிக்கக் கொன்று, அவளது உடலையும் சிதைத்து கொடூரமாகக் கொல்லும் பெருந்தகை க்ரெகார் க்ளெகேனையும், அவனை ஏவிய டைவின் லேனிஸ்டரையும் கொல்ல கங்ஙனம் கட்டிக் காத்திருக்கிறார் இளவரசர் ஓபரின் மார்ட்டெல். பொறுமை காக்கிறார் மூத்த அண்ணன் இளவரசர் டோரான் மார்ட்டெல். செய்யாத குற்றத்திற்காக தனது தந்தைக்கு மரண தண்டனை வழங்கி, அண்ணனின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக கருவிலிருக்கிற் குழந்தையை அவர் கண்முன்னே துடிதுடிக்கக் கொன்று, வஞ்சகமாக தனது அண்ணனைக்கொன்று, அண்ணனின் மனைவியைக் கொன்று, தனது தாயையும் கொல்கிற/ கொல்ல ஆணையிடுகிற செர்சி, டைவின், ஜாஃப்ரி லேனிஸ்டர்கள், பெருந்தகை இலின் பெய்ன், பெருந்தகை மெரின் ட்ராண்ட், வால்டர் ஃப்ரெய் பிரபு என்கிற பெரிய பட்டியலுடன் வஞ்சம் காணக்காத்திருக்கிறாள் ஆர்யா ஸ்டார்க். அவளது அக்கா சான்சா ஸ்டார்க் விண்டர்ஃபெல் கோட்டையை முதலில் வசமாக்கிக் கொண்ட பிறகு பழிவாங்க முடிவுசெய்கிறாள்.

காட்டுத்தீயின் மூலம் ஒட்டுமொத்த வேந்தன் மேடை (King’s Landing) நகரமும் தீப்பிடித்து கருகி இலட்சக்கணக்கில் உயிர்ச்சேதம் ஆவதைத் தடுக்கவே பெரும்பழியைச் சுமக்க நேரிட்டாலும், இன்னுயிர் ஈந்தேனும் அரசரைப் பாதுகாப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டதை மீறி அரசரையே கொல்கிறார் ஜேமி. ஆனால், அதே அசம்பாவிதத்தை செர்சி லேனிஸ்டர் விளைவுகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல் நகரத்தில் ஒரு பங்கை நெருப்பில் வாட்டுகிறாள்.

அரசவை மாற்றங்களில் கூட ஏகப்பட்ட ஒற்றுமை நிலவுவதை நாம் ஒப்புநோக்க முடிகிறது. டைவின் லேனிஸ்டரின் நிலையான நீண்ட பொறுப்பாட்சிக்கு பிறகு அரசரின் வலக்கரமாக பதவி வகிப்பவர்கள் நீடிப்பதில்லை. ஓவென் மெர்ரிவெதர் பிரபு, ஜான் கானிங்க்டன் பிரபு, கார்ல்டன் செல்ஸ்தெட், விஸ்டம் ரோசார்ட் என்று நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக பதவி அலைகழிகிறது. ராபர்ட்டின் அரசவையில் அவரைப் பேணி வழிநடத்திய ஜான் ஆரின், நிலையான நீண்ட நிர்வாகத்தைத் தந்தபின் அகால மரணமடைகிறார். அதற்குப் பிறகு பொறுப்பேற்கிற நெட் ஸ்டார்க்கின் கதியை நாமறிவோம். டைவின் சிறிது காலம் அந்தப்பதவியை வகிக்கிறார். பின்னர் அவரது இளைய மகன் டிரியன். மீண்டும் டைவினே பொறுப்பேற்கிறார், இறந்தும் போகிறார். டாம்மென் கெவன் லேனிஸ்டரை நியமிக்கிறார் (புத்தகங்களில் இந்த காலகட்டத்தில் வேறு இரு வலக்கரங்கள் நிர்வகிக்க நேரிடுகிறது) அவரும் இறந்துபோகவே, தற்போது மேஸ்டர் ச்சீபெர்னுக்கு அந்த பதவியை பேரரசி செர்சி லேனிஸ்டர் வழங்குகிறார்.

ஒற்றர்படைத் தலைவராக அரசவையில் அமர்ந்த சிலந்தி (எ) வேரிஸ் பிரபுவைத் தவிர யாருக்கும் அரசர் ஏரிஸ் செவிமடுக்கவில்லை. டாம்மெனின் ஆட்சிக்காலத்தில் அதே ஒற்றர்படைத் தலைவராக நியமிக்கப்படுகிற மேஸ்டர் ச்சீபர்ன் தவிர அவையில் யாருக்கும் செர்சி லேனிஸ்டர் செவிமடுப்பதில்லை.

வெஸ்டரோசை வென்ற முதலாம் ஏகான் டார்கேரியன் மேற்குலகம் பார்த்திராத மூன்று டிராகன்களுடன் வந்து ஆட்சியைப் பிடித்தார். டனேரிஸ் டார்கேரியன் பெரும்பாட்டனுக்கு கொஞ்சமும் குறையாமல் அதே போன்ற மூன்று டிராகன்களுடன் வெஸ்டரோசிற்கு மீண்டும் வந்திருக்கிறார்.

ஏகான் டார்கேரியனை எதிர்த்து முதலில் நின்றது லேனிஸ்டர்கள் தான். டார்கேரிய அரசர் கைகோர்த்துக்கொண்டதும் டார்ன் நிலத்து மார்ட்டெல்களுடன் தான். லேனிஸ்டர்களுக்கு முதலில் துணை நின்றதும் தென்மேற்குப் பிரதேசத்தின் உயர்சோலைக் (Highgarden) கோட்டைப்பிரபுக்கள் தான். ஐந்து ராஜாக்களின் போரில் லேனிஸ்டர்களுக்கு தோள் கொடுப்பது உயர்சோலை கோட்டையை தற்போது ஆண்டுவரும் டைரெல் பிரபுக்களே. ஆக, அதே கூட்டணி மீண்டும் (தற்காலிகமாக) வடக்கிலிருந்து வரும் எதிர்ப்பைச் சமாளிக்க இணைகிறது. அதில் குறிப்பாக ரீச் தேசத்து பிரபுக்களான கார்டெனர்கள் வம்சம் ஏகானின் கரங்களில் வேரோடு அழிய நேரிடுகிறது. தற்போது நடந்து முடிந்திருக்கிற போர்களுக்குப் பிறகு தெற்குதேசத்தைக் கார்டனர்களுக்கு பிறகு கையகப்படுத்திய டைரெல் பிரபுக் குடும்பமும் முற்றிலுமாக அழிய நேர்கிறது.

1*rkIRqSTlxHSDx3VMcB3dug.jpeg

சுருங்கச் சொல்வதென்றால், இது இரண்டாம் முறை மீண்டும் நடக்கவிருக்கிற பெருஞ்சோகமாக இருக்கலாமென்று கருதுகிறேன் —” Second as a farce.” மாயமந்திரம் உலகை விட்டு ஒரேயடியாக நீங்கலாம். டிராகன்களும் அழிந்து போக நேரலாம், இருளரசனும் காட்டின் குழந்தைகளும் மாய்ந்து போகலாம். ரேகார்-லையான்னா ஜோடியைப் போலவே ஜான்-டனேரிஸ் ஜோடியும் மரணத்தையே தழுவலாம். High Sparrow வழியில் மதகுரு செப்டன்கள் நீதித்துறையை வார்த்தெடுப்பார்கள். மீதமிருக்கிற ரசவாத காட்டுத்தீ குடுவைகளும் இருளரசன் வேந்தர் மேடையை வந்தடையும் போது வெடித்துச் சிதறலாம். இம்முறை ராஜவஞ்சகனான ஜேமி லேனிஸ்டர். வலோன்கார் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிக்கும் வண்ணமாக அரசியை வதைக்கலாம். வாழ்க்கை முழுக்க டிரியனை வெறுத்த செர்சிக்கு உடல் வளர்ச்சியற்ற டிரியனைப்போன்றதொரு பிள்ளை பிறக்கலாம். லையான்னாவைப் போலவே டனேரிசும் பேறுகாலத்தில் இறந்து போகலாம். ரேகாரைப் போல போரில் ஜான் கொல்லப்படலாம். இருளரசனும், அவனது பிசாசுகளும் சேர்ந்து ஒற்றை பாடசாலைக் கேந்திரமான சிட்டடெல்லை சிதைத்துவிட, பிழைத்து எஞ்சுகிற சில மேஸ்டர்களின் துணையுடன் உலகெங்கும் பல பல்கலைக்கழகங்கள் நிறுவப்படலாம். அநேகமாக சாம்வெல் டைரெலின் சிறந்த பங்களிப்புடன் இது நடைபெறலாம். பெருந்தகைகளின் தலைமையில் ராணுவ அமைப்புகள் தோற்றுவிக்கப்படும். வாணிபம் முக்கியத்துவம் பெற்று விளங்கும். என் கணிப்பின்படி ஆர்யா ஸ்டார்க் வெஸ்டரோசின் மேற்கிலிருக்கிற (What is west of Westeros?) புதிய தேசங்களைக் கண்டாய்வார். மதங்கள் எல்லா திக்கு திசைகளிலும் பரவும். டனேரிசுக்கும் ஜானுக்கும் பிறக்கிற குழந்தையை சான்சா ஸ்டார்க்கின் கண்காணிப்பிலும், டிரியனின் அரவணைப்பிலும், வேரிஸ் பிரபுவின் பக்கபலத்துடனும் பட்டத்து இளவரசனாகலாம். அல்லது, அரசாட்சி முற்றி மக்களாட்சி — தேர்தல் நடைமுறைகள் உருவாகலாம். டனேரிசின்/டிரியனின் வழியில் நாடுகள் அடிமைகள் விடுதலை அடையலாம். ப்ராவோசின் இரும்பு வங்கி வழியாக பல வங்கிகள் பணப்பரிமாற்றத்திற்கென உருவாகலாம். குளிர்காலம் முடிவுக்கு வந்து வசந்தப் பொழுது புலரலாம்.

இடைக்கால வரலாறு முடிந்து, நவீனகால வரலாற்றின் தொடக்கமாக அது அமையும்.

 

https://link.medium.com/kXvKa05FKS

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.