Jump to content

நிர்வாகிகளை மிரட்டிய எடப்பாடி


Recommended Posts

மிஸ்டர் கழுகு: நிர்வாகிகளை மிரட்டிய எடப்பாடி

 
 

 

p2aa_1513336116.jpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆர்.கே. நகர் தொகுதியில் மையம் கொண்டுள்ளதால், அங்கேயே கழுகாரும் வலம்வந்து கொண்டிருந்தார். அங்கிருந்து அலுவலகம் வந்த கழுகாரைப் பார்த்ததும், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் தினகரன் தரப்புக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளதே?’’ என்றோம்.

‘‘தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைப்பதற்கு முன்பே, பிரசாரத்தை அவர் தரப்பு தொடங்கிவிட்டது. அவர்களது பிரசார வேகத்தைப் பார்த்த அ.தி.மு.க-வினர் ஆரம்பத்திலேயே ஆடிப்போய்விட்டனர்” என்றார் கழுகார்.

‘‘அப்படி என்ன தினகரனுக்கு அங்கு செல்வாக்கு வளர்ந்துள்ளது?”

“ஆர்.கே. நகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டு, திஹார் சிறைக்குச் சென்றுவந்தார். அதன்பிறகு, கட்சியிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். அவர் பக்கம் வந்த எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். சசிகலா, தினகரன் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ரெய்டுகள் நடத்தப்பட்டன. தினகரன் அதை எதிர்கொண்ட விதமும், ஊடகங்களுக்குப் பேட்டிகள் அளித்த விதமும் ஆர்.கே. நகரில் மட்டுமல்ல; தமிழகம் முழுவதும் அவருக்கு ஒரு கவர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை ஆர்.கே. நகரில் போட்டியிட்ட தினகரனுக்காக, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், இன்றைய முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களும் வாரி இறைத்த பணம் இப்போது தினகரனைத் தாங்கிப்பிடிக்கிறதாம்!”

‘‘அ.தி.மு.க-வை விட்டு தினகரன் நீக்கப்பட்டதால், அவருக்கு வேலை பார்க்கக்கூட ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று அமைச்சர்கள் சொல்லிவந்தார்களே?”

p2a_1513336135.jpg

‘‘ஆரம்பத்தில் அமைச்சர்கள் அப்படித்தான் நினைத்தார்கள். நிர்வாகிகளாக இல்லாத லோக்கல் ஆட்கள் கணிசமான அளவில் தினகரனுக்குத் தான் வேலைபார்க்கின்றனர். அதனால்தான், அவரின் பிரசாரம் வேகமாக உள்ளது. அதேபோல், தினகரனின் பிரசார அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்தமுறைபோல வாகனத்தில் நின்றே பிரசாரம் செய்யாமல், இறங்கி வந்து மக்களோடு உறவாடி பிரசாரம் செய்கிறார். தினகரனை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று சசிகலா உறவுகளும் களம் இறங்கியுள்ளன!”

‘‘அப்படியா, குடும்பம் ஒன்றுகூடிவிட்டதா?”

‘‘தினகரனுக்கு ஆதரவாக டெல்டா மாவட்டங் களிலிருந்தும், தென் மாவட்டங்களிலிருந்தும் கணிசமான அளவில் ஆட்கள் வந்துள்ளார்கள். திவாகரனின் மகன் ஜெயானந்த் தீவிரமாக இருக்கிறார். ஆர்.கே. நகரில் வேலை செய்துவரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைச் சந்தித்த அவர், ‘எதைப்பற்றியும் கவலைப்படாமல் வேலை பாருங்கள். உங்களுக்கு வேண்டியதை நான் செய்துதருகிறேன்’ என்று உறுதி கொடுத்துள்ளார். அவர்களுடன் மதிய உணவு அருந்திவிட்டுச் சென்றுள்ளார். அதேபோல், டாக்டர் வெங்கடேஷ் அவ்வப்போது ஆர்.கே. நகர் பக்கம் தலைகாட்டுகிறார். அவருக்கு வேண்டிய நிர்வாகிகள் இருக்கும் ஏரியாக்களுக்குச் சென்று சில கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டுப் பறந்துவிடுகிறாராம். இப்படி தினகரனுக்கு பலம் அதிகமாகிவருகிறது.”

‘‘இவையெல்லாம் எடப்பாடிக்கும் பன்னீருக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்குமே?”

‘‘ஆமாம்! ‘நமக்குத்தான் வெற்றி’ என்று நினைத்து ஆரம்பத்தில் மெத்தனமாக இருந்தார்கள். தி.மு.க வேகமெடுத்ததும் இவர்கள் தரப்பில் சுணக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு தினகரன் பரபரப்பு ஆனதும், அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்தார்கள். இவை அனைத்தும் முதல்வர் காதுக்குப்போய், அவர் நேரடியாக விவகாரங்களை டீல் செய்ய ஆரம்பித்தார். இப்போது, மீண்டும் வேலையை முடுக்கி விட்டுள்ளார்கள்.”

‘‘அப்படியா?”

‘‘எப்படியாவது கடைசிநேரக் கவனிப்புகள் மூலம் கரைசேர்ந்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரம் செய்யும் இடங்களுக்கு ஆட்களை அழைத்துவரவே மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறதாம். அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு, கூட்டங்களுக்கு ஆள்பிடிப்பதே பெரிய வேலையாக இருக்கிறதாம். இதைச் சொல்லியே புலம்புகிறார்கள். கடந்த முறை தினகரனுக்கு வாக்கு கேட்ட அமைச்சர்கள், இந்தமுறை அவரை வசைபாடி வாக்கு கேட்கிறார்கள். இது, தங்களுக்குச் சங்கடமாக இருப்பதாக சில அமைச்சர்கள் புலம்பியிருக்கிறார்கள். பல இடங்களில் அ.தி.மு.க-வினரும், தினகரன் ஆதரவாளர்களும் கலந்து உறவாடிவருவது மதுசூதனன் தரப்புக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது.பேசிப் பேசிக் கவிழ்த்துவிடுவார்களோ என்று மதுசூதனன் பயப்படுகிறாராம்!”

‘‘அமைச்சர்களுக்குத்தான் ஏற்கெனவே ஏரியாக்களைப் பிரித்துக் கொடுத்துவிட்டாரே முதல்வர்?”

‘‘அமைச்சர்களும் களத்தில் இறங்கிப் பணியாற்றுகிறார்கள். ஆனால், கரன்சியை இறக்குவதில்தான் தயக்கம் காட்டுகிறார்களாம். ‘எல்லாம் மேலிடத்திலிருந்து வரும், பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று இருக்கிறார்களாம். அதனால்தான், பல இடங்களில் அ.தி.மு.க-வின் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘ஆர்.கே. நகர் தன் ஆட்சிக்கு வாழ்வா, சாவா போர்’ என்பதை எடப்பாடி உணர்ந்துள்ளார். ‘தொகுதி இப்போது அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இல்லை’ என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதால், அவர் முகத்தில் சந்தோஷம் இல்லை.”

‘‘ஓஹோ!”

‘‘அதை அவரது பேச்சில் காணமுடிகிறது என்கிறார்கள் கட்சியினர். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, ‘ஆர்.கே. நகர் தேர்தலில் நாம் எப்படியும் வெற்றிபெற வேண்டும். கடந்தமுறைபோல இந்தமுறை நீங்கள் அனைவரும் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். உங்களுக்கு வேண்டிய வசதி வாய்ப்புகளைக் கேளுங்கள்; செய்து தருகிறோம். ஆனால், ஏதாவது காரணம் சொல்லி ஊருக்குப் போகக் கூடாது. ஊருக்குப் போனால் திரும்பி வரவேண்டாம். அங்கேயே இருந்துகொள்ளுங்கள்’ என்று மிரட்டும் தொனியில் பேசினாராம். ‘இதுபோன்று கடுமையாக ஜெயலலிதாதான் பேசுவார். அதே ஸ்டைலில் எடப்பாடியும் பேசுகிறார்’ என்கிறார்கள் நிர்வாகிகள். இந்தப் பேச்சை முன்னணி அமைச்சர்கள் சிலரே ரசிக்கவில்லையாம்.”

‘‘பன்னீரும் அமைதியாக இருக்கிறாரே?”

“பழனிசாமிக்கும் பன்னீருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டது. பன்னீருக்கு வேண்டிய சிலவற்றை முதல்வர் தரப்பு செய்து கொடுத்ததால், பன்னீர் அமைதியாகிவிட்டார். அதேபோல், பன்னீர் அணியில் இருந்தவர்களையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்வயப்படுத்திவருகிறார் பழனிசாமி. அதில், முதல் நபர் கே.பி.முனுசாமி. ஆரம்பத்திலிருந்தே முரண்டு பிடித்து வந்தவர் முனுசாமி என்பதால், அவருக்குக் கட்சியில் முதலில் பதவிகொடுத்து ஆஃப் செய்தார்கள். அவருடைய ஒரே இலக்கு, தம்பிதுரையை டம்மியாக்க  வேண்டும் என்பதுதான். அதற்கும் முதல்வர் தரப்பு ஓகே சொல்லிவிட்டதாம்!”

‘‘ம்!”

‘‘மைத்ரேயன், ‘மனங்கள் ஒட்டவில்லை’ என்று பதிவிட்டபிறகு, அவரிடம் தனிப்பட்ட முறையில் முதல்வர் பேசியுள்ளார். அப்போது, சில வில்லங்க விவகாரங்களைப் பற்றியும் சொல்லி, ‘நீங்கள் அமைதியாக இருந்தால் போதும்’ என்று சுட்டிக்காட்டியுள்ளது முதல்வர் தரப்பு. அதனால், மைத்ரேயனும் எடப்பாடியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டார். ‘ஆர்.கே. நகர் தேர்தல் பிரசாரத்தில், மைத்ரேயன் பி.ஜே.பி-யை அட்டாக் செய்து பேசியதற்கு இதுதான் காரணம்’ என்கிறார்கள். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மூலம் மனோஜ் பாண்டியனை ஆஃப் செய்துவிட்டார்கள். அவருக்கு வேண்டியவர்களுக்கு அரசு வழக்கறிஞர் பதவியைத் தர ஓகே சொல்லிவிட்டார் எடப்பாடி. இந்த வகையில், பன்னீரைச் சுற்றி இருந்த முக்கியஸ்தர்களை ஆஃப் செய்து, தன்னை ஒரு தலைவராக முன்னிறுத்தும் திட்டத்தில் எடப்பாடி கச்சிதமாகக் காய் நகர்த்தி வருகிறார் என்கிறார்கள்.’’

‘‘சூப்பர் ஆசாமியாக இருக்கிறாரே?’’

‘‘எடப்பாடி பழனிசாமியை, ‘இரட்டை இலைக்கு முந்தைய இ.பி.எஸ்’, ‘இரட்டை இலைக்குப் பிந்தைய இ.பி.எஸ்’ என்று பிரித்துச் சொல்கிறார்கள். ‘இப்போது இருப்பதுதான் உண்மையான இ.பி.எஸ்’ என்கிறார்கள். தினகரன் அணியில் இருக்கும் சஸ்பெண்டு செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களிடம்கூட எடப்பாடி அணி பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம். ஐந்து பேர் அணிமாறும் மனநிலையில் இருக்கிறார்கள். ஆர்.கே. நகர் தேர்தல் முடிந்த பிறகு, அணிமாறும் படலம் நடக்கும் என்கிறார்கள்.”

‘‘தேர்தலுக்குப் பிறகு நிறைய அதிரடிகளை எதிர்பார்க்கலாமோ?”

‘‘ஆமாம்! ஆர்.கே. நகர் தேர்தலில் வென்றால், அமைச்சர்கள் சிலரின் துறைமீது கை வைக்கலாம் என்ற யோசனையும் எடப்பாடியிடம் உள்ளது” என்றபடி கழுகார் பறந்தார்.

படங்கள்: ரா.ராம்குமார், வி.ஸ்ரீனிவாசுலு


p2_1513336082.jpg

dot_1513336038.jpgமன்னர் பெயர் கொண்ட அவர், அமைச்சர் ஒருவரிடம் பி.ஏ-வாக இருக்கிறார். அமைச்சருக்கும் துறைச் செயலாளருக்கும் பசையான வேலைகளைப் பார்த்துக்கொடுப்பதே இவர்தான். இந்தத் துறை சார்ந்த வேலை ஒன்றைச் செய்யுமாறு, முதலமைச்சர் அலுவலகம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் கட்டளையிட்டுள்ளது. ‘பலே பாண்டியா’வாகச் செயல்பட்ட பி.ஏ., ‘அமைச்சருக்கு வர வேண்டியது வராது’ என உணர்ந்தார். அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ‘‘அமைச்சருக்குத் தெரியாமல் இது நடக்கிறது. அதனால், செய்துதர வேண்டாம்’’ என்று சொன்னாராம். அதை அந்த நிறுவனம் முதலமைச்சர் அலுவலகத்துக்குச் சொல்ல, அங்கிருந்து அமைச்சரை அழைத்துக் கண்டித்துள்ளார்கள். அநேகமாக அந்த பி.ஏ பதவி விரைவில் காலியாகலாம்.

dot_1513336038.jpg போயஸ் கார்டனில் பூங்குன்றனைத் தெரிந்த அளவுக்கு, சங்கரை எல்லோருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் அறிக்கைகளை கம்ப்யூட்டரில் டைப் அடிக்கும் வேலை சங்கருடையது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், போயஸ் கார்டனுக்குப் போய்வந்தார். தினகரனுடன் நெருக்கமாகத்தான் இருந்தார். சமீபத்தில் சசிகலா, தினகரன் உறவினர்களைக் குறிவைத்து நடைபெற்ற ரெய்டு சூறாவளியில், சங்கர் மாட்டிக்கொள்ளவில்லை. அதன்பிறகு என்ன ஆனதோ... திடீரென ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆதரவாளராக மாறி, தலைமைக் கழகத்தில் கம்ப்யூட்டர் அறையில் முக்கியமான பொறுப்பில் சங்கர் அமர்த்தப்பட்டுள்ளார். “சங்கர் எப்போதுமே ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் விசுவாசிதான். இவர்களின் ஸ்லீப்பர் செல்லாகத்தான் அவர் இத்தனை நாள்கள் தினகரனுடன் இருந்தார்’’ என்கிறார்கள்.

dot_1513336038.jpg பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பணிக்கான தேர்வில், நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட 10 பேரில் வேறு ஒரு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒருவரும் இதே பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளரும் இறுதிச்சுற்றில் இருக்கிறார்கள். அந்த முன்னாள் பதிவாளருக்கு ‘அடிப்படைத் தகுதியே இல்லை’ என்பது உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள், பல்கலைக்கழக மட்டத்திலான கல்வியாளர்கள். பல்கலைக்கழகத்திலோ, கல்லூரியிலோ ஆசிரியராக இல்லாமல், உடற்கல்வி இயக்குநராக மட்டுமே இருந்தவரை நேர்காணலுக்கு அழைக்கலாமா என்பது கல்வியாளர்களின் கேள்வி! ‘‘கல்வி, ஆராய்ச்சி போன்ற துறைகளில் எவ்வித பங்களிப்பும் செய்யாத இவருக்கு, கேரளாவின் முக்கியப் புள்ளியும், ஐந்து தமிழக அமைச்சர்களும் ‘உறவுப்பாலமாக’ உறுதியளித்திருக்கிறார்கள்’’ என்கிறார்கள் கல்வியாளர்கள்.

dot_1513336038.jpg ஆர்.கே. நகர் தேர்தலில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, ஸ்டாலின் - வைகோ நட்பு பலப்பட்டுள்ளதாம். ‘‘அந்தக் கூட்டத்தில் வைகோ பேச எழுந்ததும் ஏற்பட்ட ஆரவாரம், தி.மு.க மாநாட்டை ஞாபகப்படுத்தியது’’ என்று பலரும் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.

dot_1513336038.jpg ஒகி புயல் தாக்கிய கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ராகுல் காந்தி வரப்போகிற தகவல் தெரிந்தே தமிழக முதல்வர் எடப்பாடி அவசரமாக வந்தாராம். டிசம்பர் 10-ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியானதும் உஷாரான பி.ஜே.பி தரப்பு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மூலம் பிஷப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக முதல்வரை அழைத்து வரச் செய்தது. அதுபோல 12-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தூத்தூர் வந்து மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினார். இதனால் பல கிராமங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பின. அதனால்தான் 14-ம் தேதி ராகுல் தூத்தூர் வந்தபோது, பெரிய பரபரப்பு இல்லை. குஜராத் தேர்தல் பிரசாரம் காரணமாக மீனவர்களைத் தாமதமாகச் சந்திக்க வந்ததற்கு மன்னிப்புக் கேட்டார் ராகுல். அவரைப் பார்க்க மீனவர்களைவிட காங்கிரஸ்காரர்கள்தான் அதிகம் வந்திருந்தனர்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.