Jump to content

சினிமா விமர்சனம்: கொடிவீரன்


Recommended Posts

சினிமா விமர்சனம்: கொடிவீரன்

சசிகுமார், பசுபதிபடத்தின் காப்புரிமைKODI VEERAN

சில வாரங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் தற்கொலைசெய்துகொண்டதால் தலைப்புச் செய்திகளில் பேசப்பட்ட திரைப்படம்.

   
நடிகர்கள் சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், விக்ரம் சுகுமாரன்
   
இசை என்.ஆர். ரகுநந்தன்
   
இயக்கம் முத்தைய்யா

கொடிவீரன் (சசிகுமார்) தங்கை பார்வதி (சனுஷா) மீது பெரும் பாசம் கொண்டவன். அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைக்காரன் (பசுபதி), அவனுடைய தங்கை (பூர்ணா) கணவர் அதிகாரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார் உள்ளூர் வட்டாட்சியர் (விதார்த்). இதனால், வட்டாட்சியரையும் அவருக்கு உதவும் அரசு வழக்கறிஞரையும் கொலைசெய்வதென முடிவெடுக்கிறான் வெள்ளைக்காரன். இதற்கிடையில் அந்த வட்டாட்சியருக்கு தன் தங்கையை மணம் முடித்துக்கொடுக்கும் கொடிவீரன், வட்டாட்சியரை விட்டுவிடும்படி வெள்ளைக்காரனிடம் கேட்கிறான். ஆனால் வெள்ளைக்காரன் தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபட, ஒரு சண்டையில் அதிகாரம் கொல்லப்பட, தங்கையின் சபதத்திற்காக கொடிவீரனையும் வட்டாட்சியரையும் கொல்ல முயற்சிக்கிறார் வெள்ளைக்காரன். ஆனால், தன் அண்ணன் எப்படியும் தன் கணவரைக் காப்பாற்றுவார் என உறுதியாக இருக்கிறார் பார்வதி.

தன் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் தூக்கில் தொங்குவதை தத்ரூபமாகக் காட்டுவதில் துவங்குகிறது படம். அப்படித் தூக்கில் தொங்கும் பெண்ணுக்கு அதே நேரத்தில் குழந்தை பிறக்கிறது. இவ்வளவு கொடூரமான துவக்க காட்சி, சமீப காலத்தில் எந்தத் திரைப்படத்திலும் வந்ததாகத் தெரியவில்லை.

மஹிமா நம்பியார்படத்தின் காப்புரிமைKODI VEERAN

இதற்குப் பிறகு படம் முழுக்க, வெட்டு, குத்து, மொட்டையடித்தல், கொலை, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சடலங்களுக்கு சடங்கு, தாலி அறுப்பது, பழிவாங்குவதற்கான சபதங்கள் என நகர்கிறது படம்.

பல ஆக்ஷன் திரைப்படங்களில் இப்படி வெட்டு, குத்து, பதிலுக்குப் பதில் கொலைகள் என்று இருப்பது வழக்கம்தான். ஆனால், வேறு படங்களில் இப்படி இறுதிச் சடங்குகளையும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சடலங்களையும் அடிக்கடி காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தியதாக நினைவில் இல்லை.

தன் கணவனை இழந்தை பெண்ணுக்கு ஊரே சேலை வாங்கிப் போடுகிறது. இந்தக் காட்சியில் அண்ணனும் சேலை வாங்கிப் போட, ஆட்டுத் தலையை வெட்டியதுபோல எதிரியின் தலையை வெட்டச் சொல்கிறாள் தங்கை. மற்றொரு காட்சியில் அண்ணன், தங்கையிடம் தாலி அறுக்கச் சொல்கிறான். அதேபோல, கொடிவீரனின் தங்கையும் தாலி அறுக்க வேண்டுமென சபதம் கேட்கிறாள் தங்கை. எவ்வளவு நேரம்தான் இதுபோன்ற காட்சிகளைத் தாங்க முடியும்?

பசுபதிபடத்தின் காப்புரிமைKODI VEERAN

அதற்குப் பிறகு சசிகுமாருக்கான பஞ்ச் வசனங்கள். "அவன் கொடி வீரன் இல்ல, குலத்துக்கே வீரன்", "இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே", "தப்புப் பண்ணினா கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்", "எங்க அண்ணன் எவன் எதுக்கயும் வர்றவன் இல்ல, எவனையும் எதிர்க்க வர்றவன்" என்று சசிகுமாரின் தங்கையும் ஊர்க்காரர்களும் பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார்கள். இது பரவாயில்லை என்று பார்த்தால், அஜீத் படங்களைப் போல வில்லனாக வருபவரும் "நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்" என்று ஹீரோவின் புகழ் பாடுகிறார்.

இதற்கு நடுவில் சோகப் பாட்டு, தத்துவப் பாட்டு, டூயல் என பல பாடல்கள்.

படத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் நடுரோட்டில், சிறையிலிருந்து வருபவரால் கொல்லப்படுகிறார். அதற்குப் பிறகும் காவல்துறையும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வட்டாட்சியர் உயிருக்கு பல முறை குறிவைக்கப்படுகிறது. அதையும் அவர் சொந்தமாகத்தான் சண்டைபோட்டுத் தீர்த்துக்கொள்கிறார்.

இந்தக் களேபரத்திற்கு நடுவில் கதாநாயகன் - கதாநாயகி இடையிலான காதல் பெரிதாக எடுபடவில்லை.

சசிகுமார்படத்தின் காப்புரிமைKODI VEERAN

படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. குறிப்பாக சனுஷா, மஹிமா நம்பியார், பூர்ணா, பசுபதி ஆகியோருக்கு குறிப்பிடத்தக்க படம்.

இந்தப் படத்தின் இயக்குனர் முத்தைய்யா, ஏற்கனவே குட்டிப் புலி, மருது, கொம்பன் என ஒரு சமூகம் சார்ந்தே படம் எடுத்தவர். இந்தப் படத்திலும் அந்தக் கோணம் உண்டு.

இந்தப் படத்தின் பாராட்டத்தக்க அம்சம், படத்தின் ஒளிப்பதிவு. கிடாரி படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த எஸ்.ஆர். கதிர் இதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42265113

Link to comment
Share on other sites

இயக்குநர் முத்தையா... சினிமாவை இதற்குப் பயன்படுத்தாதீர்கள்...ப்ளீஸ்! கொடிவீரன் விமர்சனம்

 

"நல்லதையே நினைக்கும் ஹீரோ சசிகுமாருக்குத் தன் தங்கை சனுஷா மீது பாசம் அதிகம். கெட்டதையே நினைக்கும் வில்லன் பசுபதிக்கு தன் தங்கை பூர்ணா மீது பாசம் அதிகம். நல்ல பாசம்... ’கெட்ட’ பாசத்துக்கு இடையில் வென்றது யார் என்பதை வன்முறை, பகை, பாசம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

கொடிவீரன் விமர்சனம்

 

'குட்டிப்புலி'யில் அம்மா, 'கொம்பன்' படத்தில் மாமனார், 'மருது'வில் அப்பத்தா, இதில் தங்கச்சி. இயக்குநர் முத்தையா படம் எடுக்க இன்னும் பல உறவுமுறைகள் தமிழ் கூறும் நல்லுலகில் இருக்கிறது. உறவுகளின் உன்னதத்தை அழகாகச் சொன்ன சினிமாக்கள் தமிழ்சினிமாவில் அதிகம். ஆனால், அந்த உணர்வுகளை சினிமா என்ற காட்சி ஊடகத்தில் வெறியேற்ற மட்டுமே முத்தையா பயன்படுத்துவது ஏனோ!?  

தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்ளும் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை விழும் முதல் காட்சியில் 'ஹீரோ என்ட்ரியோ?' என நினைக்கவைத்துவிட்டு, 'இல்லை இல்லை' என முதல் பல்பு கொடுக்கும் இயக்குநர், நாம் எதிர்பார்க்கவே முடியாத பன்ச் வசனங்கள், தத்துவங்கள், சண்டைக் காட்சிகள் எனப் பதறவைக்கிறார். சமீபத்தில் வன்முறையை இந்தளவுக்குத் தூக்கிப்பிடித்த சினிமாக்கள் வந்ததில்லை. மிக மோசமான வன்முறைக் காட்சிகள் மட்டுமல்ல, கதாபாத்திரங்கள்கூட காட்டுமிராண்டிகளைப் போலத்தான் படம் நெடுக வருகிறார்கள். படத்தில் காமெடிக்கான ஸ்கோப் அத்தனை இடத்தில் இருக்கிறது. ஆனால், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும், பன்ச் வசனங்களுக்கும் மெனக்கெட்டதில் கொஞ்சம் கூட காமெடிக்கு வழங்கப்படவில்லை. 

கொடிவீரன் விமர்சனம்

படத்தில் எல்லோரும் பன்ச் வசனங்கள் பேசுவதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். கறி-வெறி, சிவன்-எமன்... எனக் கபீம்குபாம் ரக ரைமிங் கேட்கமுடியவில்லை. 'சுப்ரமணியபுரம்' கொடுத்த இயக்குநர் சசிகுமார், 'மதயானைக்கூட்டம்' கொடுத்த இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இருவரையும் 'கொடிவீரனி'ல் காதுகுத்தி, கிடா வெட்டியிருக்கிறார் முத்தையா. இருவரும் ரியலி... பாவம். 'நாலு பாட்டு, அஞ்சு ஃபைட்டு, கொஞ்சம் சென்டிமென்ட்' என்ற ஃபார்முலாவில் இருந்தும், தன் அனைத்துப் படங்களிலும் சாதிப்பெருமையைப் புகுத்தி ரசிக்கும் மனநிலையில் இருந்தும் எப்போது மீண்டு வருவீர்கள் முத்தையா?

எல்லாக் காட்சிகளிலும் சுமாராக நடித்திருக்கிறார் சசிகுமார். வழக்கமான குறும்புத்தனம் இல்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில்கூட டல் மூடில் வந்து போகிறார். அத்தனை பெரிய மீசை, வேட்டி - ஜிப்பா என சாமியாடி கெட்டப்பில் கல்லூரிப் பெண்களுடன் அவர் டூயட் பாடுவதெல்லாம் கடி காமெடி! வில்லன் பசுபதி அவரைவிடப் பாவம். வெறும் வசனங்களாலேயே வில்லத்தனங்களைச் செய்து, சசிகுமாரை விட்டுவிட்டு நம்மை வெறியேற்றுகிறார். சுகர் பாடி... எப்படித்தான் இத்தனை பன்ச் டயலாக்குகளைத் தாங்கினாரோ! 
அனுஷா அழகாக இருக்கிறார், அழகாக நடித்திருக்கிறார். ஆனால், அண்ணன் - தங்கை பாசத்தை வெறும் பில்ட்-அப் வசனங்களாக மட்டுமே காட்சிப்படுத்தியிருப்பதால், சசிகுமார் - அனுஷா காம்பினேஷனை மட்டுமல்ல, பசுபதி - பூர்ணாவின் அண்ணன் - தங்கை பாசத்தையும் உணர்வுபூர்வமாக உள்வாங்க முடியவில்லை. 'எங்கண்ணன் ஆடி பார்த்திருப்பே... அடிச்சுப் பார்த்ததில்லையே', 'தப்பு பண்ணா தடுக்க கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்' எனப் படம் முழுக்க ஏகத்துக்கும் ஜாங்கிரி பூங்கிரி வசனங்கள், முடியல பாஸ்!

கொடிவீரன் விமர்சனம்

படத்திலேயே கொஞ்சமே கொஞ்சம் அசரடிப்பவர் பூர்ணா மட்டுமே. கண்களாலேயே மிரட்டல் நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதிலும் தாலியைக் கழட்டி நீட்டும் காட்சியில் அதி ஆக்ரோஷம். ஆனால், இந்தப் படத்திற்கும், அதில் இடம்பெற்ற உப்புச்சப்பில்லாத காட்சிக்குமா ஒரிஜினலாகவே மொட்டை போட்டீர்கள் பூர்ணா? என்றும் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது.  
விதார்த், நல்ல அரசு அதிகாரியாக வந்துபோகிறார். ஆனால், கடைசிக் காட்சியில் ஹீரோ இருபது பேரை வெட்டிச் சாய்க்கிறார், மொத்தப் பிரச்னைகளுக்கும் காரணமாக இருந்தவனும், விதார்த்தின் நண்பரைக் கொலை செய்தவருமான வில்லனை மன்னித்து அனுப்புகிறார் ஹீரோ. 'நல்ல அரசு அதிகாரி'யான விதார்த், சுமாராக 20 கொலை செய்த சசிக்குமாரை மட்டும் விட்டு வைப்பது என்ன லாஜிக் சாமியோவ்?! 

படத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் சடங்கு சம்பிரதாயங்கள் (திருமணம் முதல் சாவு வரை) முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. பெருமை பேசி அதை வன்முறை கலந்து என்ன சொல்ல முயற்சி செய்கிறீர்கள் முத்தையா?! 

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் 'களவாணி உன்னை எண்ணி' பாடல் ஓகே ரகம். மூச்சை இழுத்துப் பிடிக்கும் திரைக்கதையை கதிரின் கேமரா ஆக்சிஜன் கொடுத்து சமாளித்திருக்கிறது. தற்கொலைக் காட்சியில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை... கதிர் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். 

கொஞ்சம் கொஞ்சமாக உலக அளவிலான கவனத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவைப் பின்னோக்கி இழுத்துப் பிடிக்கிறார் முத்தையா. 'தான் கடந்துவந்த வாழ்க்கையைத்தான் படமாக்குகிறேன்' என அவர் காரணம் சொன்னால், ’ஸாரி முத்தையா... அதற்கு சினிமாவைப் பயன்படுத்தாதீர்கள்’!

https://cinema.vikatan.com/movie-review/110155-kodiveeran-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.