Jump to content

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை


Recommended Posts

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 

‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல்.  

அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர்.  

அடுத்து என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியென்றால், இது சூனிய நிலைதானே. நிச்சயமாக! எந்த நம்பிக்கை வெளிச்சமுமில்லாமல் இருளாகவே நீளும் நிலை என்பது சூனியமே.  

இந்த நிலைக்குத் தனியே அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மட்டும் காரணமில்லை. மக்களுக்கும் இதில் பொறுப்புண்டு.   

அதைப்போல ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சமூக, அரசியல், பொருளாதார ஆய்வாளர்கள், புத்திஜீவிகள் என்போருக்கும் பொறுப்புண்டு. கடந்த காலத்தில் இவர்கள் விட்ட தவறுகளின் விளைவுகளே இன்றைய இந்த நிலையாகும்.  

‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமே’ என்று யாரும் இதைக் கடந்து செல்வதற்கு முற்படலாம். அதிலும், ‘தேர்தல் அரசியலில் இதை எதிர்பார்க்க வேண்டியதே!’ என்றும் அவர்கள் சொல்லக் கூடும்.  

இருக்கலாம். வேறு தரப்புகள் இப்படிச்சொன்னால் அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். தமிழ்த்தரப்பில் இப்படிக் கூறமுடியாது. தமிழ்க் கட்சிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் தங்களைப் போராளிகளையும் விட மேலானவர்கள் என்றல்லவா கருதிக்கொண்டிருக்கிறார்கள்.அப்படித்தானே காட்டிக் கொள்கிறார்கள். 

அப்படிப் போராளிகளாகத் தம்மைக் கருதிக் கொள்வோர், அந்த அடையாளத்துக்கும் அந்த எண்ணத்துக்கும் உண்மையாகக் கொஞ்சமேனும் இருக்க வேண்டாமா?  

ஒரு பெரிய போராட்டத்தை உறுதியாகவும் அர்ப்பணிப்போடும் முன்னெடுத்த தரப்பு, இன்று இப்படிக் குழம்பிச் சிதைந்து சூனியத்திலிருப்பது அதனுடைய தவறன்றி வேறென்ன? நிச்சயமாகக் கூட்டமைப்பை ஆதரித்ததன் தவறுகளே இந்த நிலைக்குக் காரணமாகும்.  

விடுதலைப்புலிகள் இல்லால்போய் எட்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனாலும், அவர்களை ஆதரித்தவர்கள், அவர்களுக்கு எதிராக இருந்தவர்கள், அவர்களுக்குப் பயந்து இருந்தவர்கள், சமூகத்தில் அறிவுஜீவிகள் என்ற எவராலும், ஒரு சரியான அரசியல் பாதையையும் ஒழுங்கான அரசியல் கட்டமைப்பையும் உருவாக்க முடியவில்லை.  

 இருக்கின்ற கட்சிகளும் அவற்றின் தலைமைகளும் கூடத் தங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கும், புதிய சூழலை எதிர்கொள்வதற்கும் ஏற்றவாறு, தம்மை வளர்த்துக் கொள்ளவில்லை. சூழலுக்கேற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தம்மை வளர்த்துக் கொள்ள முற்படாத காரணத்தினால், தற்போதுள்ள எல்லா அரசியல் தரப்புகளும் நெருக்கடிக்குள்ளே சிக்கியுள்ளன. வரலாற்றின் விதி இப்படியே அமையும்.   

முக்கியமாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் கடுமையான விமர்சனத்தைச் சந்தித்திருக்கிறது. அது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, இதில் பலமான ஒன்று. 

இப்படி மக்களின் தேவைகள் குறித்து, அது கரிசனையோடு செயற்படவில்லை என்ற அதிருப்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதுண்டு.  இதனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, கூட்டமைப்பின் அரசியல் தலைமைத்துவத்தை விட்டு விட்டு, மக்கள் தாமாகவே தமது பிரச்சினைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் சிலவற்றில், மக்கள் வெற்றியையும் கண்டுள்ளனர்.  

மேலும், கிழக்கில் கூட்டமைப்பு, செயற்படாத ஓர் அமைப்பாக, மக்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளுவதற்கு முற்படாத அரசியல் பிரமுகர்களைக் கொண்ட கட்சியென மக்களால் கருதப்படுகிறது.   

அரசமைப்பு உருவாக்கத்திலும் கூட, வெளிப்படையான, உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அரசாங்கத்துக்கு அளவுக்கதிகமான விட்டுக்கொடுப்புகளைச் செய்திருக்கிறது என்ற விமர்சனங்கள் கடுமையாக உள்ளன.  இதோடு, வட மாகாணசபையின் வினைதிறனின்மை, அதற்குள் நீடிக்கின்ற குழப்பங்கள், முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்துக்குமிடையிலான இழுபறிகளும் முரண்பாடுகளும் என ஒரு பாதகமான சூழலே கூட்டமைப்புக்குக் காணப்படுகிறது.   

இந்த நிலையில், கூட்டமைப்பின் பலமான பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, 
ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் பிரேமச்சந்திரன் அணியும் வெளியேறியுள்ளது. 

ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணியின் வெளியேற்றத்தை நிரப்புவதற்காக,
 ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் இன்னொரு பிரிவான வரதர் - சுகு ஸ்ரீதரன் அணியை உள்ளே கொண்டு வருவதற்குக் கூட்டமைப்பு முயற்சிப்பதாகக் கூறப்பட்டது.  எனவே, கூட்டமைப்பின் இன்றைய நிலை என்பது, எதிர்மறைகளின் மீது தளும்பிக் கொண்டிருக்கும் பிம்பமாகவே உள்ளது.  

அடுத்தது, ஈ.பி.டி.பியும் தற்பொழுது உடைந்த நிலையிலேயே உள்ளது. அதிலிருந்து விலகிய முருகேசு சந்திரகுமார், புதிதாக உருவாக்கியிருக்கும் ‘சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு’ இன் மூலமாகக் கிளிநொச்சியில் தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

இதனால் கிளிநொச்சியில் கூட்டமைப்புக்கும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக்குமிடையில் வலுவான போட்டியொன்று உருவாகக் கூடும். யாழ்ப்பாணத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக ஈ.பி.டி.பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.   

கூட்டமைப்பின் மீது அதிருப்தியோடு இருப்போரில் ஒரு பகுதியினர், ஈ.பி.டி.பியை ஆதரிக்கக் கூடிய நிலை காணப்படுகிறது. இதை அவர்கள் சத்தமின்றிச் செய்வர். 
அடுத்தது, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆனந்தசங்கரியோடு இணைந்து ஒரு புதிய கூட்டணியை உருவாக்க முயற்சித்துள்ளார். 

இதற்கான முதற்கட்டப் பேச்சுகள் நடந்துள்ளன. இந்த அணி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென்றும் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன எனவும் சுரேஷ், ஊடகவியலாளர்கள் மத்தியிலே தெரிவித்திருக்கிறார்.   

ஆனந்தசங்கரியும் இதற்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். இந்த அணியுடன் வேறு சில பொது அமைப்புகளும் இணைந்து ஆதரவை வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவற்றின் விவரப் பட்டியலைப் பெற முடியவில்லை. கூட்டமைப்பின் அதிருப்தியைத் தமக்குச் சாதமாகப் பயன்படுத்துவதே இந்தத் தரப்பின் குறி.  

ஆனால், கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வரும் சுரேஷ், தம்முடனேயே கூட்டுச் சேர்ந்து கொள்வார் எனத் தமிழ் மக்கள் பேரவையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கருதிக் கொண்டிருந்தன.  இப்போதும் சுரேஷ் தரப்பு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாகாணசபை உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. ஏனையவை அவ்வாறானவையல்ல. ஆகவே, வலுவான தரப்பாகச் சுரேஷே காணப்படுகிறார் என்பதால் சுரேஷுடன் இணைவதைப்பற்றியே கஜேந்திரகுமார் சிந்திக்க முடியும்.  

ஆனால், இதைப் பொருட்படுத்தாமல், சுரேஷுக்கு நிபந்தனை விதிப்பதிலேயே கூடிய முனைப்பைக் காட்டுகிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இது சுரேஷைத் தள்ளிப்போக வைத்துள்ளது. இருந்தாலும் எப்படியாவது சுரேஷைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இல்லையெனில் தனித்து நின்று வெற்றிவாய்ப்பைப் பெற முடியாது என்று அவர்கள் கருகின்றனர். இந்த உண்மையை கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அறிவார்.   

அவர், தன்னுடைய குடும்பத்தின் அடையாளமாகிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தையே முன்னிறுத்துகிறார். 

இந்த நிலையில், எந்தக் கட்சி சரியானது? எந்தத் தரப்பை ஆதரிக்கலாம்? எது வலுவாக உள்ளது? யார் நியாயமாகச் செயற்படுவார்கள்? மக்களுடன் இருப்பவர்கள், இருக்கக் கூடியவர்கள் யார்? கூட்டணிகள் சரியாக அமையுமா? என்ற கேள்விகளுக்குப் பதிலே இல்லை. ஆகவே ஒரு பெருங்குழப்பநிலையே தற்போதுள்ளது.  

இதனால் தமிழ் அரசியலை அவதானிப்போர் திணறிப்போயிருக்கிறார்கள். அவர்களுடைய கணக்குகள், கணிப்புகள் எல்லாவற்றையும் புரட்டிப் போடும் புயலாகச் சுழன்று கொண்டிருக்கிறது நடப்பு நிலைவரம்.  

ஆனால், இதையிட்டு மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. வரலாற்றின் பாடம் அப்படித்தான் உள்ளது. நடப்பிலுள்ள சக்திகளின் பலவீனமும் முரண்நிலைகளும் இத்தகைய குழப்பத்தை உண்டாக்குவதுண்டு.  

இது ஒரு மாற்றம் நிகழ்வதற்கான ஏது நிலையே. அவ்வாறான மாற்றம் நிகழ்வதற்கு முன்னதாக ஏற்படுகின்ற குழப்ப நிலை இதுவாகும்.  

ஆகவேதான் இந்தக் கட்டத்தில் பல இடங்களிலும் சுயாதீனக் குழுக்கள் சுயேட்சைகளாகக் களமிறங்கலாம், சுயேட்சைகளைக் களத்திலிறக்கலாம் எனச் சிந்திக்கின்றன.   

 கட்சிகளின் மீது மக்களுக்கிருக்கும் அதிருப்திகளையும் சலிப்பையும் நம்பிக்கையீனத்தையும் இந்தச் சுயேட்சைகள் பயன்படுத்திக் கொள்ள விளைகின்றன. இது, தவிர்க்க முடியாத ஒரு நிலையே. மாற்றத்துக்கு முன்பாக நிகழும் தள உருவாக்கம் இதுவாகும்.   

இந்தச் சுயேட்சைகள் குறிப்பிடத்தக்க சபைகளில் வெற்றியடைந்தால், அவற்றுக்கிடையில் ஓர் இணைப்பு நடைமுறையில் உருவாகும். வெற்றியடைந்த பிறகு சபைகளை இயக்கும்போது நடைமுறையை எதிர்கொள்வதற்கான திட்டங்களையும் சட்டங்களையும் உருவாக்கும்போது, தவிர்க்க முடியாமல், இந்த இணைப்பு உருவாகும்.

அது பின்னர் ஒரு புதிய அரசியற் தொடக்கத்துக்கான சிந்தனையையும் புரிதலையும் உண்டாக்கும்.  

இதுவரை கிடைத்த தகவல்களின்படி வடக்கிலும் கிழக்கிலும் பல சுயேட்சைக் குழுக்கள், சுயாதீனமாகக் களமிறங்கப்போவதாகத் தெரிகிறது. இவை எந்த அரசியற் தரப்பின் பின்னணியும் இல்லாமல் தனியே - மக்கள் நலனை மட்டுமே முன்னிலைப்படுத்திச் செயற்படவுள்ளதாக அறிவித்திருக்கின்றன.   ஆகவே, மக்கள் கட்சிகளுக்குள் இனியும் அமுதத்தைக் கடைந்தெடுக்கலாம் என்று நம்பிக் கொண்டிருக்காமல், சுயாதீனக் குழுக்களை நம்ப வேண்டும் என்கிறார் சுயாதீனச் செயற்பாட்டாளர் ஒருவர்.  

அப்படியென்றால், இது சுயேட்சைகளின் களமா? அவற்றுக்கான காலமா? என்றால் அது ஒரு வகையில் உண்மை எனலாம்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கழுதை-தேய்ந்து-கட்டெறும்பான-கதை/91-208416

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.