• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை

Recommended Posts

”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை - பகுதி 1

சென்னை பிறந்த கதை

Chennai: 

சென்னை மாநகரின் பழைய பெயர் மெட்ராஸ். மதராஸ், மதராசபட்டினம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதரேஸ்படான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ் என்றும் இந்த நகரம் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் என இங்கு வந்து வாழ்ந்துவிட்டுப் போன பல இனத்தவரும் அவரவர் நாக்கு வசதிக்கேற்ப இந்த நகரத்தின் பெயரை வளைத்து வளைத்து அழைத்திருக்கிறார்கள்.

 

ஆனால் இறுதியில் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ’மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜென்ட் விஜயநகர அரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னரிடமிருந்து வங்கக்கடலோரம் இருந்த பொட்டல் மணல்வெளியைக் குறைந்த விலைக்கு வாங்கினார். அங்கிருந்துதான் இந்த மாநகரத்தின் கதை தொடங்கியது. அங்கிருந்துதான் மெட்ராஸ் என்ற பெயரும் தொடங்கியது என்கிறார்கள். சந்திரகிரி மன்னர் எழுதித் தந்த சாசனத்திலேயே மதராசபட்டினம் என்ற பெயர் இடம்பெற்றிருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதற்கு வலுசேர்க்கும் வகையில் ஓர் ஆதாரம் மைலாப்பூரில் கிடைத்தது.

1927ஆம் ஆண்டு ஜூலை மாதம், மைலாப்பூரில் செயின்ட் லாசரஸ் தேவாலயம் கட்டுவதற்காக பழைய தேவாலயம் இருந்த இடத்தில் கட்டுமானப்பணி தொடங்கியது. அப்போது மண்ணுக்கு அடியிலிருந்து போர்த்துக்கீசிய எழுத்துகள் பொறித்த ஒரு கல்வெட்டு கிடைத்தது. அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

மெட்ராஸ்

“இது மேனுவல் மாத்ரா மற்றும் அவரின் தாயாரின் கல்லறை,

வின்சென்ட் மாத்ரா மற்றும் லூசி பிரேக் ஆகியோரின் மகன். அவர்கள் இந்த தேவாலயத்தை தங்களின் சொந்தச் செலவில் 1637இல் கட்டினர்”

இதில் மாத்ரா என்று குறிப்பிடப்பட்டிருப்பது அப்போது இந்தப் பகுதியில் வசித்த ஒரு வசதியான போர்த்துக்கீசிய குடும்பத்தின் பெயர். இந்தப் பகுதியின் பல இடங்கள் அவர்களுக்குச் சொந்தமாக இருந்ததால், இந்தப் பகுதியே அவர்களின் பெயரில் மெட்ராஸ் என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது.

1820இல் பண்டல ராமசாமி நாயுடு என்பவர் மெட்ராஸ் பிரசிடென்சியின் வருவாய் முறைகள் குறித்து எழுதிய ஆவணம் ஒன்றில் மெட்ராஸ் என்ற பெயருக்கு வேறொரு புதுக் காரணத்தைக் குறிப்பிடுகிறார். ராமசாமி நாயுடுவின் மூதாதையர்களில் ஒருவரான பேரி திம்மப்பாதான் பிரான்சிஸ் டே இந்த நிலத்தை உள்ளூர் அரசரிடமிருந்து பெறுவதற்கு உதவியாக இருந்தவர். அப்போது இந்த இடத்தில் மீனவக் குப்பம் ஒன்று இருந்தது. அந்தக் குப்பத்தின் தலைவர் கிறிஸ்துவ மதத்தை தழுவியவர். அவர் பெயர் மாதரேசன். அவர் தனது வாழைத்தோட்டம் இருந்த இடத்தை தர மறுத்து தகராறு செய்தார். அவரிடம் சமாதானம் பேசிய பேரி திம்மப்பா, இந்த இடத்தில் ஆங்கிலேயர்கள் கோட்டை கட்டப் போகிறார்கள், பின்னர் அந்த நகரத்திற்கு மாதரேசன்பட்டினம் என உங்கள் பெயரையே வைத்துவிடுகிறோம் என்று சொல்லி இடப் பிரச்னையைச் சுமுகமாக முடித்ததாக பண்டல ராமசாமி நாயுடு குறிப்பிடுகிறார்.

மாதரேசன் கிறிஸ்தவ மீனவர் என்பதை விட, போர்த்துக்கீசிய குடும்பமான மாத்ராவின் மேல் கொண்ட நன்றிக் கடன் காரணமாக தனது பெயரை மாதரேசன் என்று வைத்துக் கொண்டார் என்பதே சரி என வாதாடுகிறார்கள் சில ஆய்வாளர்கள். கோபால் என்பதை கோபாலன் என்று தமிழ்ப்படுத்துவது போல மாத்ரா என்பதை தமிழ்ப்படுத்தி மாதரேசன் என்று பெயர் வைத்திருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். ஆங்கிலேய கவர்னரான தாமஸ் மன்றோவின் மீது கொண்ட அன்பினால் நிறைய பேர் தங்களின் குழந்தைகளுக்கு மன்றோலப்பா என்று பெயர் வைத்த வரலாறு எல்லாம் உண்டு. ஆக எப்படிப் பார்த்தாலும், மாத்ரா குடும்பமே மெட்ராஸ் என்ற பெயருக்குக் காரணமாக இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

சென்னை

மெட்ராஸ் என்பதன் மற்றொரு பெயரான சென்னைப்பட்டினத்திற்கும் இப்படிப் பல பெயர்க் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆன்மிகத்தில் அதிக நாட்டம்கொண்ட பேரி திம்மப்பா இந்தப் பகுதியில் இரண்டு கோவில்கள் கட்ட வழிவகுத்தார். சென்ன கேவசப் பெருமாள் என விஷ்ணுவுக்கும், சென்ன மல்லீஸ்வரர் என சிவனுக்கும் கோவில்கள் கட்டினார். அப்படித்தான் சென்னை கேசவரும், சென்ன மல்லீஸ்வரரும் இருக்கும் பட்டினம் சென்னப்பட்டினம் என்று வழங்கப்பட ஆரம்பித்ததாக ஒரு கருத்து நிலவுகிறது.

சென்னை

சென்னையின் பழைய கோவில்களில் முக்கியமானது காளிகாம்பாள் கோவில். முதலில் கோட்டைக்குள் இருந்த அம்மன் பின்னர்தான் தற்போது இருக்கும் தம்புசெட்டித் தெருவுக்கு இடம்மாறினாள். இந்த அம்மனுக்கு பக்தர்கள் செந்தூரம் பூசி வழிபட்டதால், சென்னம்மன் என்று அழைக்கப்பட்டாள். சென்னம்மன் இருக்கும் இடம் சென்னை என்று மாறியதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். செம் அன்னை என்பதுதான் சென்னை ஆனது என்பது அவர்கள் வாதம்.

நீண்டகாலமாக மெட்ராஸ், சென்னை என இந்த நகரத்திற்கு இருபெயர்களும் தொடர்ந்து புழக்கத்தில் இருந்துவந்தன. பின்னர் 1996இல் தமிழக அரசு இந்த மாநகரின் பெயரை சென்னை என அதிகாரபூர்வமாக அறிவித்தது. இருப்பினும் இன்னும் அந்தப் பழைய மெட்ராஸ் பலருக்கும் நினைவுகளில் நிழலாடிக்கொண்டேதான் இருக்கிறது

https://www.vikatan.com/news/coverstory/109765-the-story-of-chennai-series-1.html

Share this post


Link to post
Share on other sites

மெரினாவில் ஓர் அரண்மனை... மெட்ராஸின் ‘கடன்கார’ மகாராஜா! - சென்னை பிறந்த கதை - பகுதி 2

 
 

சென்னையில்க் இருந்த சேப்பாக்கம் அரண்மனை

 

 

மிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பற்றி கதைகதையாகப் படித்திருக்கிறோம். கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள் போன்றோரின் அரண்மனைகள் இன்றும் மதுரை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் காட்சிப்பொருளாக இருக்கின்றன. இதேபோல மெட்ராசில் ஒரு மகாராஜா வாழ்ந்தார், அவரின் அரண்மனை இன்றும் சென்னையில் இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

சென்னையில் அரண்மனையா? என ஆச்சர்யப்படுபவர்கள், அடுத்த முறை மெரினாவுக்குச் செல்லும்போது காமராஜர் சாலை சந்திப்பில் சற்றே உள்ளடங்கி இருக்கும் பழைய சிவப்பு கட்டடத்தை கொஞ்சம் கவனமாகப் பாருங்கள். அதுதான் சேப்பாக்கம் அரண்மனை. ஆற்காடு நவாப்பின் அதிகாரபூர்வ இல்லமாக இருந்த இந்த கட்டடத்தின் பின் ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

18-ம் நூற்றாண்டில் தமிழகத்தில் வட ஆற்காடு, தென்னாற்காடு, திருச்சி, திருநெல்வேலி, நெல்லூர் ஆகிய பகுதிகளை கர்நாடக நவாப் ஆட்சி செய்து வந்தார். இவரது தலைநகரம் ஆற்காட்டில் இருந்ததால் இவரை ஆற்காடு நவாப் என அழைத்தனர். உலகின் பல சாம்ராஜ்ஜியங்களில் நடந்ததுபோலவே ஆற்காடு நவாப்பின் அரியாசனத்துக்காகவும் அண்ணன் தம்பிக்குள் வெட்டுக் குத்து நடந்தது. 1749-ல் வெடித்த சகோதர யுத்தத்தில் ஒரு தரப்பை பிரெஞ்சுக்காரர்களும், மற்றொரு தரப்பை ஆங்கிலேயர்களும் ஆதரித்தனர். இதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேயர்கள் ஆட்டத்தில் ஜெயித்துவிட்டதால், அவர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற வாலாஜா நவாபான முகமது அலி ஆற்காடு அரியணையில் ஏறினார். சென்னையில் தற்போது உள்ள வாலாஜா சாலைக்கு அன்னார்தான் காரணம்.

அரண்மையின் பழைய புகைப்படம்

வெள்ளைக்காரன் ஆதரவுடன் அரியாசனத்தைப் பிடித்துவிட்டாலும், நவாப்பின் கால்கள் லேசாக நடுங்கத்தான் செய்தன. தோற்றுப்போன இன்னொரு நவாப் எப்போது வேண்டுமானாலும் மீண்டு(ம்) வந்து நம்மை கபாப் போட்டுவிடக் கூடாது என ஆற்காடு நவாப் அலார்ட்டாக இருந்தார். இன்றைக்கு உயிருக்கு ஆபத்துள்ள அரசியல்வாதிகள் கமாண்டோ பாதுகாப்பு கேட்பதுபோல ஆங்கிலேயர்களிடம் பாதுகாப்பு கேட்டார். பக்கத்துல வந்துடுங்க நாங்க பாத்துக்குறோம் என்று ஜார்ஜ் கோட்டை தகவல் சொன்னதால், ஆற்காட்டை காலி செய்துவிட்டு மெட்ராசில் குடியேறத் திட்டமிட்டார்.

ஆங்கிலேயர்கள் வசிக்கும் ஜார்ஜ் கோட்டைக்குள்ளேயே நவாபுக்காக அரண்மனை கட்டுவது என முடிவானது. அப்போதைய கவர்னர் பால்க் இதற்காக கோட்டைக்குள் நிலம்கூட ஒதுக்கிவிட்டார். ஆனால், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சிலர் கூடி நின்று கும்மி அடித்ததில், அந்த திட்டம் ஆரம்பத்திலேயே ஆட்டம்கண்டுவிட்டது. அப்படித்தான் பீச் பக்கம் கரை ஒதுங்கினார் கர்நாடக நவாப். நவாப் அரண்மனைக்காக சேப்பாக்கத்தில் 117 ஏக்கர் நிலம் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டது.

அரண்மனை கட்டும் பணி பால் பென்ஃபீல்ட் (Paul Benfield) என்ற கிழக்கிந்தியப் பொறியாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது. அங்கு அவர் 1768-ல் கட்டி முடித்ததுதான் பிரமாண்டமான சேப்பாக்கம் அரண்மனை. பால் பென்ஃபீல்ட் மிகச்சிறந்த பொறியாளர் என்பதால், அவரை தனக்கு கட்டடம் கட்டும் பணிக்கு அனுப்ப வேண்டும் என்று கோரி நவாப், 1766-ல் கவர்னருக்கு ஒரு கடிதம்கூட எழுதினார். அந்தளவுக்கு நவாப்பின் நன்மதிப்பைப் பெற்ற பென்ஃபீல்ட் அந்த பெயரைக் காப்பாற்றும் வகையில் ஒரு அருமையான கட்டடத்தை கட்டித் தந்தார். இதுதான் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இந்தோ-சராசனிக் பாணி கட்டடம். இதில் இரண்டு பிளாக்குகள் இருந்தன. தெற்கில் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் கலஸ் மஹால் என்றும், வடக்கில் இருந்த ஒற்றை மாடிக் கட்டடம் ஹூமாயுன் மஹால் என்றும் அழைக்கப்பட்டது.

மெட்ராஸ் அரண்மனை

ஆடம்பரப் பிரியரான நவாப் முகம்மது அலி, அந்தக் கால விஜய் மல்லையா மாதிரி கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார். இதனிடையே 1795-ல் நவாப் முகம்மது அலி இறந்துவிட, அவரது மகன் உம்தத்-உல்-உம்ராவின் தலையில் கடன் சுமை இறங்கியது. இதுபோதாதென்று 1799-ல் சீரங்கப்பட்டினம் போரில் மைசூர் சுல்தானுடன் சேர்ந்துகொண்டு உம்தத்-உல்-உம்ரா சதி செய்த செய்தி வெளியானதும் கடுப்பாகிப் போன கிழக்கிந்திய கம்பெனி நவாப்பிடம் இருந்து கர்நாடக ஆட்சி அதிகாரத்தைப் பறித்துக்கொண்டது. நாடாற்ற நவாப்பாகிப் போன கவலையிலேயே அவர் தனது 53-வது வயதில் காலமாகிப் போனார். அதன்பின் சில பல அரசியல் திருப்பங்களை அடுத்து, 50 ஆண்டுகள் கழித்து 1855-ல் பிரிட்டிஷ் அரசு சேப்பாக்கம் அரண்மனையை ஏலம் விட்டது. ஆனால், இதை ஏலத்தில் எடுக்கும் அளவுக்கு யாரிடமும் பணம் இல்லை. எனவே, அரசே இதை கையகப்படுத்தி, அரசு அலுவலகமாக மாற்றிவிட்டது. அன்றில் இருந்து இன்று வரை சேப்பாக்கம் அரண்மனை அரசு அலுவலகமாகத்தான் இருக்கிறது. இதனிடையே நாடு இல்லாத நவாப்புகளான வாரிசுகள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டதுதான் தற்போது ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால்.

இதனிடையே 1860-ல், பிரபல கட்டடக் கலைஞரான ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Fellowes Chisholm) ஹூமாயுன் மற்றும் கலஸ் மஹால்களுக்கு இடையில் ஒரு கோபுரத்தை நிர்மாணித்தார். கர்நாடகப் பகுதி முழுவதையும் பிரிட்டீஷார் கைப்பற்றியதன் நினைவாக இது எழுப்பப்பட்டது. பின்னர் சிஸ்ஹோம், அரண்மனைக்கு முன்புறம், ஸ்காடிஷ் பாணியிலான பொதுப்பணித் துறை கட்டடம், வாலாஜா சாலையைப் பார்த்தபடி, இந்தோ-சராசனிக் பாணியிலான ஆவணக் காப்பகம் மற்றும் வருவாய்த்துறை கட்டடங்களைக் கட்டினார். இதனால் சேப்பாக்கம் அரண்மனை இந்த கட்டடங்களுக்குள் மறைய ஆரம்பித்தது. பின்னர் 1950களில் இப்போதைய எழிலகம் கட்டப்பட்டதும் கொஞ்ச நஞ்சம் தெரிந்த அரண்மனையும் முற்றிலுமாக மறைந்துவிட்டது.

அரண்மையின் புகைப்படம்

 

ஒருகாலத்தில் இன்றைய திருவல்லிக்கேணி காவல்நிலையம்கூட சேப்பாக்கம் அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்ததாக கூறுகிறார்கள். குதிரைக்காரர்களுக்கும், விருந்தினர்களின் உதவியாளர்களுக்கும் உணவு பரிமாறும் இடமாக அது இருந்ததாம். அந்தளவுக்கு பரந்துவிரிந்து இருந்திருக்கிறது நவாப்பின் ஆடம்பர சேப்பாக்கம் அரண்மனை. இப்போதுமட்டும் நவாப் உயிருடன் இருந்திருந்தால் உல்லாசமாக பீச்சில் உலா வந்துவிட்டு, அருகில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சுற்றமும், நட்பும் சூழ ஜாலியாக கிரிக்கெட் பார்த்திருப்பார்.

https://www.vikatan.com/news/tamilnadu/110653-the-history-of-chennai-series-part-2.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this