Sign in to follow this  
விசுகு

இது கதை போல் நிஜம்...

Recommended Posts

 

இது கதை போல் நிஜம்.....(1)
----------------------------------------------
(எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்)

"அண்ணே.. மாமா நாளைக்கு எயாப்போட்டுக்கு வாறார் என்ர நிலமை தெரியும்தானே போய்க் கூப்பிட ஏலாது ஒருக்கா நீங்கள் போய் கூட்டிக் கொண்டு வாறீங்களா டீசல் காசு தாறன்" 
என்று கேட்ட எங்கள் பக்கத்து வீட்டுக்காற சகோதரியிடம்.
"இல்லையம்மா நீங்கள் காசு தரவேண்டாம் உங்கட நிலமை எனக்குத் தெரியும் தானே.. போய்க் கூட்டிக்கொண்டு வாறன் விபரங்கள மட்டும் தாங்கோ" 
என்றேன். ஒரு தாளில எல்லா விபரத்தையும் எழுதித் தந்த அவரிடம்... 
"மாமாவின்ர படம் ஒண்டு தந்தா ஆளக் கண்டுபிடிக்க சுகமாக இருக்கும்" என்றேன்.
"அவற்ர போட்டோ ஒண்டும் இல்ல அண்ணே... ஆள் சரியான கறுப்பு, வெள்ள முடி" 
என்று அவரின் அடையாளங்களச் சொன்னா.
"சரி தங்கச்சி நான் பாக்கிறன்" 
என்று கூறிவிட்டு வந்து விட்டேன்..
அடுத்த நாள் சரியான நேரத்துக்கு Paris CDG விமான நிலையத்துக்கு சென்று தேடிப்பிடித்து கேற்றுக்கு அருகில் நான் போகவும், பக்கத்து வீட்டு சகோதரி சொன்ன அடையாளத்தில் ஒரு வயோதிபர் வரவும் சரியாக இருந்தது.
"ஐயா.. ஐயா.. நீங்கள் மாணிக்கம் ஐயா தானே" 
என்று கேட்டேன் துரு, துரு என்று என்னை ஏற, இறங்க பார்த்த அவர்..
"நான் மாணிக்கம் தான்.. நீர்.... நீ..என்ர ராசமாணிக்கமே?? " 
என்று வினவினார் தளர்ந்த குரலில் அந்த முதியவர் 
"நான் ராசமாணிக்கம் இல்ல ஜஸ்ரின். அவேன்ர பக்கத்து வீட்டுக் காறன்" என்றேன் நான். எனக்குள் அதிர்ச்சி அவரின் மகன் தான் ராசமாணிக்கம்.. மகனிடம் தந்தையின் படம் இல்லை தந்தைக்கு மகனத் தெரியேல்ல.

"ஐயா மகனுக்கு, மற்றாளுக்கும் வித்தியாசம் தெரியேல்லையா" 
என்று நான் எதார்த்தமாய் கேட்க அவரின் கண்கள் கலங்கியது.
"இல்லை ராசா.. உன்ர பேர் என்ன... கஸ்ரினோ??"
"இல்லை ஐயா..என்ர பேர் ஜஸ்ரின்" 
என்றேன் நான். காரில் ஏறியதும்... கலங்கிய கண்களில் இருந்து கண்ணீர்.. வடிந்தது. 
"என்ர மகன் ஏன் கூப்பிட வரேல்ல"
என்று அவர் எழுப்பிய கேள்வி?
"அப்ப இவருக்கு ஒண்டுமே தொரியாதா..."
என்று எனக்குள் பெரிய கேள்வியை எழுப்பியது......
மீதி நாளை சந்திப்போம்.
என்றும் உங்கள் அன்பில்.
Justin THAMBIRAJAH. 
18/11/2017.

Edited by விசுகு
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது கதை போல் நிஜம்.....(2)
----------------------------------------------
(எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்)

"ஐயா உண்மையில் உங்களுக்கு ஒண்டுமே தெரியாதா?" 
என்று நான் கேட்ட கேள்விக்கு..
"இல்ல.... ராசா... ஏன் கேக்கிறீர்..என்ர மருமகள் அவசரமா எங்கட ஊரில இருக்கிற ஒரு விபரமான ஆளப்பிடிச்சு, அவரும் சட்டுப்புட்டு எண்டு அலுவலப் பாத்து முடிச்சுப் போட்டார்... ஏன்? அந்த தம்பிதான் என்ன இஞ்சால ஏத்தியும் விட்டது. அது... சரி ஒண்டுமே தேரியாதோ எண்டு கேக்கிறீர்.. ஏன் ஏதும் வில்லங்கமோ?"
என்று ஐயா கேட்டதை வச்சு எனக்கு விளங்கீட்டுது. இவருக்கு அவையள் ஒண்டுமே சொல்லேல்ல எண்டு. பிறகு நான் ஏன் முந்திரிக் கொட்டை மாதிரி முந்துவான் எண்டு நினைச்சு. நைசா கதைய மாத்தினன். 
" ஐயா.. 40 கிலோமீட்டர் கார் ஓடவேணும் உங்களப் பத்தி ஏதாவது சொல்லுங்கோ.. அது.. சரி.. ஐயா இவர் ராஜமாணிக்கம் தான் உங்கட மூத்த மகனோ?"
என்று கேட்க ஐயா பழய கேள்விய மறந்து தங்கட குடும்பக் கதையை சொல்லத் தொடங்கினார்.
"தம்பி ஐஸ்ரின்"
என்று அவர் கூப்பிட திரும்பவும் என் பேர் அவரிடம் சிக்குப்பட்டது.
"ஐஸ்ரின் இல்ல ஐயா ஜஸ்ரின்" என்றேன்..
"ஏதோ தம்பி விடடா.."
கண்டதும் "நீர்" என்று தொடங்கி இப்போ "டா"வில் வந்து நின்றது. ஐயா தொடர்தார். "எனக்கு ரண்டு பொடி அதில மூத்தவன் இவன் ராசமாணிக்கம், அடுத்த பொடி கணேசு. இவன் ராசமாணிக்கம். "ஐயா என்ன வெளிநாட்டுக்கு அனுப்பிப் போடு இல்லாட்டி மருந்து குடிச்சு சாவன்" எண்டு அடம்பிடிச்சு ஒரு இருவத்தஞ்சு வரியத்துக்கு முன்னமே இஞ்சால வந்திட்டான்... 
என்னட்ட ஏதணை காசு. இருந்த வீட்ட ஈடுவச்சு, தாயின்ர கொடிய அடைவுவச்சுத்தான் இவன அப்ப இஞ்சால அனுப்பின்னான்.."
என்று கூறிக்கொண்டே தன்ர சின்னப் பையில் கைவிட்டு ஒரு பெட்டிய எடுத்தார் அதுக்குள்ள பாத்தா வெத்திலை, பாக்கு... ஐயோ.. நான் பயந்திட்டன். காருக்க ஐயா வெத்திலை போட்டுத் துப்பப் போறார் எண்டு. ஆனா அவர் ஒரு போயிலைத் துண்ட கிள்ளி வாயில போட்டுக் கொண்டு. தன்ர கதையத் தொடர்தார்....
"இஞ்சால வந்த முதல் ஒரு வரியம் காயிதம் எழுதினான் அதுவும் வேலையில்ல, காசில்ல எண்டு ஓரே ஒப்பாரி. பிறகு ஆளின்ர சிலமனே இல்ல. தாய்தான் கிடந்து அழும். பெத்த வயிறில்லே, பிறகு ஒரு பதினஞ்சு வரியம் களிச்சு ஒரு காயிதம் இவனிட்ட இருந்து வந்திச்சு. அதுவும் ஊருக்கு வந்தவயிட்ட குடுத்து அனுப்பினான். ஏனண்டா என்ர விலாயம் இல்லையாம். தாய்க் கிழவி செத்ததுக்கு கூட ஒரு பதில் காயிதம் இவன் போடேல்ல ராசா.." 
என்று கூறியவர் கண்கலங்கி அழத் தொடங்கினார். ஒரு வயோதிபர் அருகில் இருந்து அழுவது எனக்கு கஸ்ரமாக இருந்தது.. 
மீதி நாளைக்கு .....
என்றும் உங்கள் அன்பில்.
Justin ARULRAJAH.
19/11/2017.

Aucun texte alternatif disponible.
L’image contient peut-être : fleur, plante et nature
L’image contient peut-être : plein air

Share this post


Link to post
Share on other sites

இது கதை போல் நிஜம்.....(3)
----------------------------------------------
(எங்கள் மாவீரர்ளின் பாதங்களில் சமர்ப்பணம்)

"ஒரு வயோதிபர் அருகில் இருந்து அழுவது எனக்கு கஸ்ரமாக இருந்தது.." என்றேன் இல்லையா? அதச் சமாளிக்க, காரில் பாட்டப் போட்டன். அதுவேற, என்ன பாட்டுத் தெரியுமா?
"நீ முந்திப் போனது நியாயம் இல்லையே.
நான் முந்திப் போகவே யோகம் இல்லையே.
கூட்டை விட்டுத் தாய்க்கிளி பறந்ததெங்கே.
பசித்தவன் கேட்கிறேன் பால்ச் சோறு எங்கே...."
"இது என்னடா கஸ்ரகாலம்." அதயும் நிப்பாட்டிப் போட்டு கதையக் குடுத்தன்.
"ஐயா இன்னும் கொஞ்சம் தூரம் போக வேணும் நீங்கள் கதையுங்கோ.." என்றேன். கண்ணத் துடைச்சுக் கொண்டு அவர் விட்ட இடத்தில இருந்து தொடங்கினார். 
"கிழவி செத்தது எனக்கு பெரிய கவலை ராசா... அதவிடக் கவலை அண்டைக்கு நடந்ததுதான்" 
என்று சொல்லிக் கொண்டு தன்ர நாரியத் தடவிப் பார்த்தார்.
"இவன் ராசமாணிக்கம் இஞ்சால வந்ததுக்கு ஒரு சல்லிக் காசு கூட அனுப்பேல்ல. என்ர பிழைப்பு கிழவியும், நானும் காவயித்துக்கு கஞ்சி குடிக்கவே காணாது. ஆனா வீட்ட ஈடுபிடிச்சவை விடுவினையே "வரியக் கணக்கா வட்டியும் கட்டேல்ல முதலயும் திருப்பேல்ல இப்ப ரண்டையும் கூட்டிப்பாத்தா வீட்ட வித்தாலும் பத்தாது. ஒண்டில் காசத் திருப்புங்கோ இல்லாட்டி சுறுக்கா வீட்ட எழுதித் தந்திட்டு எழும்புங்கோ" எண்டு தொண்டக்குழியில பிடிச்சிப்டினம். என்னையிறது. வீட்ட அவைக்கே எழுதிக் குடுத்துப் போட்டு, நானும் கிழவியும். நான் வேலை செய்ற தோட்டத்தில அவையிற்ற கேட்டுப் போட்டு ஒரு குடிசைய போட்டுக் கொண்டு இருந்தம்." 
Highwayயில் ஒரு கார்க்காறன் குறுக்க வர நான் குத்தி break அடிக்க ஐயா கொஞ்சம் குலுங்கிப் போனார். 
"ராசா பாத்து ஒட்டும்... இப்ப என்ன அவசரம்" என்றார்.விசயம் விளங்காமல். நானும் "ஓம்" என்று தலையாட்டி விட்டு தொடர்ந்து ஒடினேன்.. அவரும் கதையத் தொடர்ந்தார்.
"ஒரு நாள் ராசா.... நான் விடியக் காலையே வேற தோட்டத்துக்கு கூலி வேலைக்குப் போட்டன். ஒரு மத்தியானம் போல பெடி ஒண்டு ஓடிவந்து சொல்லிச்சு "ஐயோ மாணிக்கம் ஐயா.. பம்பர் வந்து உங்கட தோட்டத்துக்கு மேல குண்டப் போட்டுட்டான்.." எண்டு பதறியடிச்சு அங்க போய்ப் பாத்தா ராசா...." எண்டு சொல்லிக் கொண்டு விம்மி, விம்மி.. அழத்தொடங்கினார். எனக்கு விழங்கியது. 
"ஐயா அழதேங்கோ.. சாவு எல்லோருக்கும் வரும் " என்ற என் ஆறுதல் வார்த்தையள் அவற்ர வலிக்கு காணாது எண்டே நினைத்தேன்.
"எங்கட குடிசை சுக்கு நூறா குலைஞ்சு கிடந்தது. பாத்தா அங்க கிழவியக் காணேல்ல தேடிப் பாத்தா.. கிழவி கட்டியிருந்த சீலைத் தலப்பு தூரத்தில கிடக்குது. எரியாம கிடந்த கிடுகில கிழவியின்ர சதையள் ஒட்டிக் கிடக்குது ஐயோ..ஐயோ.. எண்டு குழறிக் கொண்டு ஒடிப்பே சீலத்தலப்ப எடுத்து கண்ணில ஒத்தினன் ... சீலத்தலப்பில ஏதோண்டு முடிஞ்சு கிடக்கு. பாவம் கிழவியின்ர கொடிய அடைவுவைச்சு எடுக்காம மாண்டு போனதால தன்ர தாலிய சீலத்தலப்பில முடிஞ்சு வச்சிருந்திருக்கு.. இஞ்ச பார் ராசா"
எணடு தன் நாரிய, சேட்டைத் தூங்கிக் காட்டினார். 
"அண்டைக்கு எடுத்து என்ர அறுணாக் கயிறில கட்டின்னான் இண்டைக்கும் கிடக்குது."
இந்த இடத்தில என்ர இதயத்தின்ர உள்த்தோல் உரியிற மாதிரி வலிச்சுது.
"பிறகு என்ன ஐயா செய்தனிங்கள்"
எண்டு நான் அழுத குரலில கேட்க ஒரு பெருமூச்சு விட்டுட்டு.
"என்ன ராசா செய்யிறது... கூட்டி அள்ளி எரிச்சுப் போட்டு பக்கத்தில இன்னொரு குடிசைப் போட்டுக் கொண்டு இருந்தன். என்ர கஸ்ரகாலம். கோதாரியிலபோற அந்த குண்டு போடுறவை பிறகு அந்தப் பக்கமே வரேல்ல."
எண்டு சொன்னவர் திரும்பவும் தாலியத் தடவிப் பாத்தார்.
"ஏன் ஐயா.. இதுக்குப் பிறகுமா உங்கட மகன்கள் உதவி செய்யேல்ல" 
எண்ட என்ர கேள்விக்கு விடை சொல்லாமல் காருக்குள்ள இருந்து வானத்த முறைச்சுப் பாத்துக் கொண்டு இருந்தார் கண்ணில இருந்து கண்ணீர் மட்டும் வடிஞ்சபடி இருந்திச்சு...
மிச்சம் நாளைக்கு....
என்றும் உங்கள் அன்பில்,
Justin THAMBIRAJAH. 
21/11/2017.

L’image contient peut-être : ciel, nuage, plein air et nature
L’image contient peut-être : fleur et nature
Aucun texte alternatif disponible.
 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

பகிர்வுக்கு நன்றி விசுகு .....தொடருங்கள். உருக்கமாய் இருக்கு......!

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 minutes ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி விசுகு .....தொடருங்கள். உருக்கமாய் இருக்கு......!

நன்றியண்ணா

தொடர்ந்து  பதிகின்றேன்

மாவீரர் வாரத்தில்  வெளியாகிய  பதிவு

தமிழரது சுயநிர்யணயப்போராட்டம் சார்ந்து

தெளிவான பார்வையுடைய படைப்பாளிகளை

இனம் காண்பதும் 

அவர்களை  உற்சாகப்படுத்துவதும்

காலத்தின் தேவை.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது கதை போல் நிஜம்.....(4)
----------------------------------------------
(எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்)

காருக்குள்ள இருந்து வானத்த முறைச்சுப் பாத்துக் கொண்டு கண்ணில கண்ணீர் மட்டும் வடிஞ்சபடி இருந்த ஐயாவ திசை திருப்ப வேணும். என்ர மனசும் இறுக்கிப்போய் இருக்கு. என்ன செய்யலாம் எண்டு யோசிக்கேக்க திடீரெண்டு இந்த கேள்வி ஞாபகத்துக்கு வந்திச்சு.
" ஐயா உங்கட மகன் கல்யாணம் முடிச்சதாவது உங்களுக்கும் தெரியுமோ இல்லையோ?" எண்டு கேட்டன்.
திரும்பவும் தன்ர பையில கையவச்சு ஏதோ தேடி ஒரு கடிதத்த எடுத்து என்னட்ட நீட்டி.
"இதப் படிதம்பி" எண்டார். 
"ஐயா கார் ஓடிக்கொண்டு என்னண்டு கடிதம் வாசிக்கிறது" எண்டு நான் சொன்னதும்
நீட்டின கைய மடிச்சுக் கொண்டு. 
"ஓ.. உண்மைதான். எனக்கும் எழுதப் படிக்க தெரியாது. காயிதம் வந்தா கிழவி தான் வாயிச்சு செல்றது. இந்த காயிதம் வரேக்க கிழவி செத்திட்டுது. வேறொரு விபரமான ஆள்தான் வாயிச்சு சென்னது. அதுதான் நான் அப்போத சொன்னனே இவன் ராசமாணிக்கம் பத்து வரியத்துக்கு முன்னம் வந்தாக்களிட்ட குடுத்து விட்ட காயிதம் எண்டு ... அது தான் கொண்டு வந்தனான். அவற்ற முகத்தில எறிய.." எண்டு சொன்ன ஐயா கடிதத்த மடிச்சுவைச்சார்.
"அதில அப்பிடி என்ன எழுதியிருக்கு ஐயா? எண்ட என்ர கேள்விக்கு. இழுத்து ஒரு பெருமூச்சு விட்டுட்டு ஐயா தொடங்கினார்.
"இந்த நியாயத்தை கேள் ராசா... இவ்வளவுக்கும். இவன் ராசமாணிக்கம் தான் காரணம். ஏன்? தாய்கிழவி செத்ததெண்டு அறிவிச்சும் ஒரு பதில் இல்ல. பிறகு ஏழுதிறார். "ஐயா எனக்கு வயசு முப்பத்திமூண்டு வந்திட்டுது ஒரு கலியாணம் காட்சி இல்ல " ஆ...இல்ல தெரியாம கேக்கிறன் நீ குடும்பத்துக்கு உழைச்சு அக்காள், தங்கச்சியள கரைசேர்த்தே, உனக்கு கலியாணம் காட்சி இல்லாமல் வயசு வட்டுக்க போனது" 
ஐயா கோபத்தின் உச்சியில நிண்டார்.
"மிச்சத்த கேளும் ராசா... ஊரில இளம் பிள்ளையாப் பாத்து பேசட்டாம். அதுகும் நல்ல சீதணத்தோட. இவர் பிராஞ்சில (France) டாக்குத்தர். நான் அங்க இளம் பிள்ளையா நல்ல சீதணத்தோட இவருக்கு கலியாணம் பேசி முடிக்க வேணும். எனக்கு நல்லா வாயில வருது...."
கறுப்பு ஐயாவா காரில ஏறினவர் இப்ப சிவப்பு ஐயாவா இருந்தார்.
"இதுபோதாது எண்டு மிச்சம் எழுதிறார். "சீதணத்த வாங்கி அதில தாலியும்,கொடியும் செய்து மிச்சக் காசில ஏயன்சிய பிடிச்சு. பெட்டையையும் அனுப்பி வைக்கட்டாம். அதுகும் சுறுக்கா."
ஐயா தன்ர பல்ல நறும்பின சத்தம் அவற்ற கோபத்தின்ர உச்சத்த காட்டிச்சு.
"பிறகு என்னையா நடந்தது?" எண்ட என்ர கேள்வி க்கு. 
"மூதேவி மூத்ததா பிறந்ததால மனசு கேக்கேல்ல. ஒரு பிள்ளையப் பாத்து பேசி அணுப்பின்னான். அதுகும் சீதணம் நான் கேக்கேல்ல அதுகளா தாலியும் கொடியும் செய்து தந்ததுகள். இவன் நான் கலியாணம் பேசின உடனேயே அதுகளின்ர விலாயத்த அறிஞ்சு அங்க கதைக்க தொடங்கிட்டானே.. இவனே சிலவேளை கேட்டிருப்பான்"
வீடு நெருங்கியது ஐயாவைப் பார்க்க பாவமாய் இருந்திச்சு. இருந்தாலும் அந்த கொஞ்ச நேரத்தில என்ர கடைசி கேளிவியக் கேட்டன்.
ஐயா பிறகு கலாவ என்னண்டு இஞ்சால அனுப்பினீங்கள்?" (ராசமாணிக்கத்தின் மனைவியின் பெயர் கலா) 
"அதுவா? காசு இல்ல என்னையிறது.. அப்பதான் ஒரு யோசன வந்திச்சு. "நான் முந்திச் செத்துப் போனா, இது உன்ர மிச்ச வாழ்க்கைக்கு. தச்சேலா நீ முந்திச் செத்தா உன்ன மகாராணி மாதிரி உடுத்தி,நிறய பெரிய பூக்களால பாடை கட்டி, ஊரில இதுவரை செய்யாத மாதிரிச் செய்ய" எண்டு கிழவிக்கு சொல்லிப் போட்டு. நான் வேலை செய்ற ஐயாட்ட சொல்லி என்ர உழைப்பில கொஞ்சம், கொஞ்சம் காசு சேர்த்து வச்சனான். கிழவிதானே பாடையில்லாம போட்டுது. பிறகு அந்த காசையும் ஐயாட்ட கேட்டு வாங்கி கூட கொஞ்சம் காசு தாங்கோ நான் சாகுமட்டும் உங்களோடவே கூலியா நிப்பன் எண்டு சொல்லி அவரிட்டவும் காச வாங்கித்தான் கலாவ இஞ்சால அனுப்பின்னான் ராசா..
அது ஒரு அருமையான பிள்ளை. "மாமா" எண்டு கூப்பிட்டா பினாட்டு மாதிரி ரண்டு,மூண்டு தடவை அன்பு பூசி மொழுகிக் கிடக்கும். எப்ப இஞ்சால வந்தாவோ... அதுகும் செத்துப் போச்சு." எண்டு அவர் சொல்லி முடிக்கவும், நான் காரக் கொணடந்து parking பண்ணவும் சரியா இருந்திச்சு. 
"ஐயா.. வந்திட்டம் இறங்கிங்கோ." எண்டு நான் சொல்ல....
"தம்பி.. ராசா.. அப்போத "உங்களுக்கு ஒண்டும் தெரியாதா? எண்டு ஏன்? கேட்டனீர்?" எண்டு ஐயா கேக்க இனியும் அந்தாளுக்கு (உங்களுக்கும்) மறைக்க மனசு வரேல்ல, நான் உண்மையைச் சொல்லத் தொடங்கினேன்....
மிச்சம் நாளைக்கு....
(நாளைக்கு என்னையும் நீங்கள் அறியலாம். காரணம் "உண்மையச் செல்லத் தொடங்கினேன்")

என்றும் உங்கள் அன்பில்,
Justin THAMBIRAJAH. 
22/11/2017.

L’image contient peut-être : ciel et plein air
L’image contient peut-être : fleur et plante
Aucun texte alternatif disponible.
 
 
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இது கதை போல் நிஜம்.....(5)
----------------------------------------------
(எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்)

நான் நடந்த கதையளச் சொல்லத் தொடங்கினன்.
"ஐயா எனக்கு இதச்சொல்ல கஷ்ரமா இருக்கு. அவையள் உங்களுக்கு சொல்லாத விசயத்த நான் உளறக்கூடாது. ஆனா உங்கள பாக்க பாவமாவும் இருக்கு. ஏனண்டா திடீரெண்டு தெரிஞ்சா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும்."
இப்படி நான் சுத்திவழைக்க ஐயா tension ஆகிட்டார்.
"தம்பி சும்மா ரபர்பான் மாதிரி இழுக்காம கதையச் சொல்லும் இல்லாட்டி இறங்குவம்"
எண்டு கார்க் கதவ திறக்கப் போனார்.
"இல்ல கொஞ்சம் பொறுங்கோ... உங்கள இஞ்சால கூப்பிட்பது உங்கட மகனோ, மருமகளோ இல்ல. France government தான் உங்கள இஞ்ச கூப்பிட்டது."
ஐயா தன்ர மூக்குக்கண்ணாடிக்கு மேலால என்னப் பாத்தார். 
"ஓம் ஐயா... உங்கட மகன் உங்க வீட்டில இல்ல Hospitalலதான் இருக்கிறார். அவரிட்ட doctors கேட்டவையளாம் உங்கட கடைசி ஆசை என்ன எண்டு. அப்ப தான் உங்ட மகன் கதைக்கேலாமல் ஒரு துண்டில 'ஐயாவப் பாக்க வேணும்' எண்டு எழுதிக் காட்டினவராம்"
நான் கதையச் சொல்ல ஐயான்ர முகத்தில முதலிருந்த கோபம். இப்ப மரங்கள்ள இலையள் கொட்டுன்ற மாதிரி கொட்டிக் கொண்டு இருந்திச்சு.
"ஏன் ராசா.. இவனுக்கு என்ன நடந்தது. ஆசுப்பத்திரிக்கு போற அளவுக்கு?" எண்டு சரியான கவலையோட ஐயா கேக்க.
"ஐயா ஒரு மனுசர் ஆரோ ஒருதற்ர கதையத்தன்னும் கேக்க வேணும். மனிசி ஒவ்வொரு நாளும் அழுது குழறிச் சொல்லியும், எட்டு வயது மூத்த மகன் சொல்லியும், இஞ்ச ஊருக்க உள்ள சனங்கள் சொல்லியும்... ஏன் ஆயிரம் தரம் doctorsமார் சொல்லியும், கேட்கமாட்டேன் எண்டு இருபத்திநாலு மணி நேரமும் தண்ணியடிச்சா இப்பிடி நிலமைதானே வரும்." எண்டு நான் செல்லேக்க ஐயான்ர முகத்தில கொட்டுப்பட்டு போன கோபம் திரும்பவும் வந்து சேந்திட்டுது.
"என்ன தண்ணியடிக்கிறானா?" எண்டு ஐயா அதிசயமாவும், கோபமாவும் கேட்டார்.
"ஐயா இஞ்ச தண்ணியடிக்கிறது பெரிய விசயம் இல்ல. உங்க எங்ட சில பொம்பிளயளே சாடயா அடிப்பினம். ஏன் நானும் drinks எடுக்கிறநான். ஆனா அதுக்கு ஒரு அளவுகணக்கு பேணும். தலமாட்டில வச்சுக் கொண்டு படுத்தால் இப்படி தான் வரும். வேலவெட்டிக்கு போறேல்ல. மனிசிதான் உழைக்கும். அந்த காசயும் பிடிங்கி தண்ணியடி. இது இப்ப இல்லையாம் வந்த காலத்தில் இருந்தாம்" எண்டதும் ஐயா சென்னார்.
"ராசா.. உங்க பிறகு போவம் காற ஆசுப்பத்திரிக்கு விடும். போய் கன்னத்தில ரண்டு குடுத்தால் திருந்துவார்" இப்பவும் ஐயாவின்ர நிலமைய நினைக்க பாவமா இருந்திச்சு.
"ஐயா அவர்.. அதுதான் ராசமாணிக்கம் நீங்கள் நினைக்கிற கட்டத்தையெல்லாம் தாண்டிட்டார். doctors சொன்னவை நீங்கள் வரும் வரைக்குமே.. 'மன்னிச்சுக் கொள்ளுங்கோ.'. ஆள் உயிரோட இருக்கிறது ஐமிச்சம் எண்டு. கவலப்படாதேங்கோ. முதல்ல வாங்கோ வீட்ட போய்ப் பாப்பம் என்ன நடந்தது எண்டு."
காறில ஏறேக்க இருந்த வயதுபோன தள்ளாட்டம். இப்ப கொஞ்சம் கூடவா இருந்திச்சு ஐயாவின்ர நடையில. நாலுமாடி வேற ஏறவேணும் ராசமாணிக்கத்தின்ர வீட்டுக்கு. ஐயாவ கையில பிடிச்சு மெதுவா ஏத்தினன். 
நாலாம் மாடிக்கு நாலு படி இருக்கேக்கவே கேக்குது கலா.கத்தி அழுகிற சத்தம் எனக்கு விழங்கிட்டுது ஐயாவ பாக்காமலே மகன் ராஐமாணிக்கம் செத்திட்டார் எண்டு.
"ஐயோ... என்னால ஏலாது"எண்டு ஐயா அதிலேயே இருந்திட்டார். ஒருமாதிரி கஷ்டப்பட்டு தூக்கி கைத்தாங்கலா அவேன்ர வீட்ட கூட்டிக்கொண்டு போனன். வாசல் கதவு திறந்து கிடந்தது. நடுவீட்டுக்குள்ள தலையில கைவைச்சு குழறியழுது கொண்டிருந்தா கலா. ஐயாவக் கண்டதும் ஓடிவந்தா. நான் நினைச்சன் கட்டிப் பிடிச்சு அழப்போறாவாக்கும் எண்டு. ஆனா அவ ஐயாவின்ர சேட்டப் பிடிச்சுக் கொண்டு.
"என்ர வாழ்கையப் பாழாக்கிப் போட்டியள். உங்ட மகன் முழுநேரக் குடிகாறன். நீங்கள் என்ர மகன் தங்கம் எண்டு சொல்லி.என்ர வாழ்கைய சீரழிச்சுப் போட்டியள். அங்க பாருங்கோ இரண்டு பிஞ்சுகளையும். நாளைக்கு அதுகள் அப்பா எங்கம்மா? எண்டு கேட்டால் நான் என்னத்தச் சொல்லுவன். நீங்களே சொல்லுங்கோ. நான் என்ன பாவம் செய்தனான் உங்களுக்கு." அழுதுகொண்டே ஐயாவ அவ திட்டினது. எனக்கு பெரிய கவலையாக இருந்திச்சு. நான் ஐயாவ பிடிச்ச பிடிய விடாமல் நின்டன்....
அதுக்குள்ள என்ர wife அங்க வந்திட்டா. அவ ஒருமாதிரி "கலாக்கா please இஞ்சால வாங்கோ" எண்டு அவவ இழுத்துக் கொண்டே அதில கிடந்த கிழிஞ்சு போன மெத்தையில இருத்தினாள். ஆனால் அவ அழுகிறதையும், பேசிறதையும் நிப்பாட்டேல்ல.
"என்ர பிள்ளைகள கொள்ளிவைக்க விடமாட்டன். ஒரு நாள் கூட கொஞ்சாத தகப்பனுக்கு, என்ர பாலன்கள் ஏன் கொள்ளிவைக்க வேணும் விடமாட்டன்..."
அவ இந்த மாதிரி கத்தியழக் காரணமும் இல்லாமல் இல்ல. அவ்வளவு கஷ்டங்கள அவ அனுபவிச்சிட்டா இருந்தாலும் ஐயா பாவம். அப்ப ஐயா சொன்னது இப்பவும் என்ர காதுக்க கேக்குது. ஐயா சென்னார் "பிள்ளை அழாத... அழாத அம்மா... நான் வைக்கிறன் அவனுக்குக் கொள்ளி."
(நாளைக்கு "கதைபோல் ஒரு நிஜம்" ராசமாணிக்கத்தின் செத்தவீட்டில் முடியும். ஐயா உங்களை நாளைக்கு கைதட்ட வைப்பார். என்ற நம்பிக்கையுடன்.)
மிச்சம் நாளைக்கு..

என்றும் உங்கள் அன்பில்,
Justin THAMBIRAJAH. 
23/11/2017.

Aucun texte alternatif disponible.
L’image contient peut-être : plante, fleur et texte
 
 
Edited by விசுகு
  • Like 3

Share this post


Link to post
Share on other sites

இது கதை போல் நிஜம்.....(6)
----------------------------------------------
(எங்கள் மாவீரர்களின் பாதங்களில் சமர்ப்பணம்)

ஐயாவக் கொண்டே அங்க இருந்த ஒரு கதிரையில இருத்தினன். ஐயா பயந்துபோய் முளிச்சுக் கொண்டு நிக்கிற தன்ர ரண்டு பேரக்குழந்தைகள வடிவாப் பாக்கிறார். என்ர கையைப் பிடிச்சு இழுத்து.
"இவை ராசமாணிக்கத்தின்ர பிள்ளையளே" 
எண்டு கேக்க நான் "ஓம்" எண்டு தலையாட்டினன்.திருப்பவும் என்ன இழுத்து.
"அப்பிடியே தேப்பனையும், சித்தப்பனையும் உரிஞ்சு வச்சு மாதிரி இருக்குதுகள்" எண்டு சொல்லிட்டு கண்கலங்கி அழத் தொடங்கினார்.

இப்படியொரு நாள் வாழ்கையில வரக்கூடாது எண்டு நினைச்சுக் கொண்டு. வேற ரண்டு friendsமாரோட சேர்ந்து ஆளுக்காள் நடக்க வேண்டிய காரியங்கள பாத்தம்.
அடுத்த நாள்...........
ராசமாணிக்கத்த மின் மயாணத்துக்கு கொண்டு வந்தாங்கள். கனக்க சனம் இல்ல. ஐயாவுக்கு வேளிநாட்டுச் செத்தவீடு புதுசுதானே, நடக்கிற எல்லாத்தையும் கவனமா பாக்கிறார். அங்க வந்த சனம் அவற்ர காதில விழுகிற மாதிரி 
"உப்பிடிப் பட்டதுகள் இருந்து, ஆருக்கு என்ன பயன். போய்ச் சேரட்டும்".... எண்டும்,
"உவர்தான் குடிகார ராசமாணிக்கத்தின்ர தேப்பனாம்".. எண்டும்,
"பிள்ளைய வளத்த திறத்தில ஊரில இருந்து வந்திருக்கிறார் செத்த வீட்டுக்கு ....எண்டும்,
"உந்த கிழவன்தான் கலாவ கலியாணம் பேசேக்க, தன்ர மகன் தங்கம் எண்டு சொல்லி. சீதணத்தக் கறந்ததாமே.".....எண்டும்,கதைக்கினம்.
ஒருசிலபேர் செத்த வீட்டுக்கு வந்து. தங்கட காறுகளுக்க இருந்து. தண்ணியப் போட்டிட்டு வந்து ஐயாவுக்கு வகுப்பெடுக்கினம்.
"நீங்கள் சின்னிலேயே ஒழுங்கா வளத்திருக்கலாம் பிழைவிட்டுட்டியல்."
மற்றவர். "வெறுமனே பெத்தாப் போதாது ஒழுங்கா வளக்கவும் வேணும்."
எனக்கு இதுகளக் கேக்க மண்டயால போகுது. ஐயாமேல சனங்கள் காறித்துப்பின அசிற் வார்த்தைகளில அவர் அவிஞ்சு போய் நிண்டார். நான் போய். "ஐயா வாங்கோ கொள்ளி வைக்க" எண்டு கூப்பிட. " எங்க ராசா சுடலை" எண்டார். பாவம் சரியா நொந்துபோன நிலமை. "ஐயா இதுதான் இஞ்ச சுடலை வாங்கோ" எண்டு கூட்டிக்கொண்டு அந்த மின் மயானத்தில, கடைசியா button அமத்திற இடத்துக்கு கூட்டிக்கொண்டு போனன். 
"தம்பி இவன்ர முகத்த ஒருக்கா பாக்கேலாதா?" எண்டு ஐயா கேட்டார். விலைகுறஞ்ச சவப்பெட்டி கண்ணாடி வக்கேல்ல. கிருமிகள் தொத்தும் எண்டுவேற ஏற்கனவே மூடிச் சீல் வச்சாச்சு.
இல்லை ஐயா இனிப் பாக்கேலாது" எண்டன். தன்ர நெஞ்ச ஒரு கையால பொத்திப் பிடிச்சுக் கொண்டு அடுத்த கையால buttonன ஐயா அமத்த, ராசமாணிக்கத்தின்ர சவப்பெட்டி தொம் எண்டு கீழயிருக்கிற current அடுப்பில விழுந்திச்சு. ஐயா "ஐயோ... ஐயோ..." எண்டு அழுதார். கலா விசர் வந்த ஆக்கள் போல படுத்துக் கிடந்து கதறிக் கதறி அழுதா.

இப்ப வந்த சனம் கொஞ்சம் கொஞ்சமா குறையத் தொடங்கிச்சு. நாங்கள் கொஞசப் பேர்தான் சாம்பல் தருமட்டும் அங்க நிண்டம். அதுக்குள்ள கலா மயங்கி விழுந்து, அங்க நிண்ட பொம்பிளையள் தண்ணி தெளிச்சு எழுப்பிக் கூட்டிக் கொண்டு வந்திச்சினம். ஐயா பேரப்பிளையள கட்பிப் பிடிச்சு வச்சுக் கொண்டு நிண்டார். 
கலா நேர ஐயாவுக்கு கிட்ட வந்து "மாமா.. மாமா.. என்ன மன்னிச்சுக் கொள்ளுங்கோ." எண்டு திரும்பவும் அழத்தொடங்கினா. ஐயா "அழாதயடி மோனே. உன்ர இடத்தில நானிருந்தாலும் அப்பிடித்தான் கதைச்சிருப்பன். நான்தான் மோனே உன்ர காலில விளுந்து நன்றி சொல்ல வேணும்" எண்டு கலாவுக்கு ஆறுதல் கூறினவர். பிறகு நேரா என்னட்ட வந்தார்.
"ராசா.. நான் திரும்ப ஊருக்கு போகவேணும் அந்த உதவியையும் நீர்தான் செய்வேணும்" எண்டு கைய நீட்டி பிச்சை கேக்கிற மாதிரிக் கேட்டார். எனக்கு பெரிய அந்தரமாப் போச்சு. இருந்தாலும் சின்னக் கோபமும் வந்திச்சு.இவர் இஞ்ச இதுகளுக்கு ஆறுதலா இருக்கலாம். அங்க போய் என்னத்தக் கிழிக்கப் போறார் எண்டு. அப்ப நான் சொன்னன்.
"ஐயா அது பிரச்சினை இல்ல. இப்ப ஏன் அங்க போக நினைக்கீறிங்கள். வீசாப் பிரச்சினைய நான் பாக்கிறன். இஞ்சத்தைய government உங்களுக்கு காசும் தரும். நல்ல medical வசதியள் இஞ்ச உங்கடவயசுக்கு freeயாக் கிடைக்கும். இவயளுக்கு ஒரு துணையா இஞ்ச இருங்கோ" எண்டன்.
"இல்ல மோனே என்ன அங்க அனுப்பி விடு" எண்டு ஐயா சொல்ல. 
"மாமா அங்க தனியா கிடக்காமல் இஞ்ச நில்லுங்கோ."எண்டு கலாவும் சொன்னா.
"இல்ல ராசா.. என்ன அங்க அனுப்பி விடுங்கோ" எண்டு ஐயா அடம்பிடிச்சார். எனக்கு ஐயாவப் பாக்க விசர்தான் வந்திச்சு. இப்ப ஐயா, தான் ஏன் ஊருக்கு போகவேணும் எண்ட காரணத்தச் சொன்னார்.
"ராசா.. நான் சாகுமட்டும் கூலியா நிண்டு உழைச்சுத் தருவன் எண்டு சொல்லி கைநீட்டி காசு வாங்கின்னான். நான் திரும்பிப் போகாட்டி இஞ்சால வந்து ஒளிச்ச மாதிரி போயிடும். என்ன அனுப்பி விடு ராசா.." எண்டார். 
இது என்ன லூசுக் கிழவனா இருக்கு...
"ஐயா இஞ்ச government தாற காசில கொஞ்சத்த சேர்த்து அனுபினால் விசயம் முடிஞ்சுது." எண்டு நான் சொன்னதும். ஐயாவுக்கு விளங்கீட்டுது. நாங்கள் தன்ன திரும்ப ஊருக்கு அனுப்ப மாட்டம் எண்டு. என்ர கைய இறுக்கிப் பிடிச்சு இழுத்துக் கொண்டு கொஞ்சத் தூரம் தள்ளி வந்தார்.


" ராசா... மோனே.. உன்ன என்ர பிள்ளை மாதிரி நினைச்சுச் சொல்லுறன்.

என்ர வயசுக்கு நான் கனநாள் இருக்கப் போற ஆளில்ல.

இஞ்சால இருந்து செத்துப் பேனா, ஒரு குடிகாறன்ர அப்பா. எண்ட பேரோட செத்துப் போவன்.

இதே ஊரில போய் செத்தா ஒரு மாவீரன் லெப்டினன் கேனலின்ர அப்பா எண்ட பெருமையோட சாவனில்லே.

இத ஒருத்தருக்கும் சொல்லிப் போடத ராசா.

பிறகு அவன்ர உண்மையான தியாகத்த நான் வித்துப் பிழைச்ச மாதிரி போமிடும். மோனே..

ரண்டப் பெத்து ஒண்டயாவது ஒழுங்கா வளத்திருக்கிறன்.

அவன் இருக்கிற இடத்தில இருக்கிறது தானே ஒரு தேப்பனுக்கு பெருமை." எண்டு ஐயா சொல்லி முடிச்சு.....


"ஐயோ.. எழும்பு ராசா.." எண்டு அவற்ர காலக் கும்பிட்டுக் கிடந்த என்ன குனிஞ்சு தூக்கினார்.
ஐயாவுக்கு இண்டைக்கு இரவு flight.அவர அனுப்ப Airportக்கு போகவேணும். 27ம் திகதிக்கு முன்னம் அவர் அங்க நிப்பார்.
--------- முடிஞ்சது --------
கதையின் பெயர்தான் "கதை போல் ஒரு நிஜம்" நடந்த சம்பவம் "நிஜம் போல் ஒரு கதை" 
(முடிவின் முற்றுப்புள்ளிவரை பயணித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் விமர்சனங்கள் உளியாக என் எழுத்துக்களை செதுக்கட்டு)


என்றும் உங்கள் அன்பில்,
Justin THAMBIRAJAH. 
24/11/2017.

Share this post


Link to post
Share on other sites

கதையோ நிஜமோ அழகாய் நெய்யப் பட்டிருக்கு. நன்றி விசுகு.....!  tw_blush:

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this