Jump to content

சமத்துவத்திற்கொரு முயற்சி


Recommended Posts

சமத்துவத்திற்கொரு முயற்சி - ஆண்களின் சமையல் பயிற்சி

காலம் காலமாக, பல நூற்றாண்டுகளாக அடுப்பின் நெருப்பு நம் பெண்களை வேகவைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களின் உலகம் சமையலறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை அறியாதவர் எவரும் இல்லை.

காலம் மாறி வருகிறது. வான்வெளிக்குக்கூட பெண்கள் செல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆண்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் பெண்களால் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டார்கள். ஆனால் பெண்கள் செய்யும் சமையலை மட்டும் ஆண்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. இதுவே உண்மை. தொழில்முறை சமையல்காரர்கள் கூட தத்தம் வீடுகளில் தன் மனைவி கையால் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். அதை விருப்பம் என்பதை விட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றே கொள்ள வேண்டும்.

அறுசுவை நடராஜன் சொல்கிறார் "நான் கல்யாண வீடுகளில் எத்தனை வகையாய் உணவு சமைத்துப் பரிமாறினாலும் வீட்டுக்குப் போய் அவள் கையால் ஒரு கரண்டி ரசம் சாதம் சாப்பிடவே விரும்புவேன்'' என்று. நிறைய ஆண்கள் "என் பெண்டாட்டி கையால் சாப்பிடத்தான் எனக்குப் பிடிக்கும்'' என்று பெருமையடித்துக் கொள்வார்கள். அந்தப் பெண்களுக்கும் கணவன் கையால் சமைத்துச் சாப்பிட விருப்பம் இருக்கும் என்று உணராமலேயே, அல்லது உணர்ந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களாகவே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.

இன்றைய சூழல் ஓரளவு பெண்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஏற்றதாய் மாறி வருகிறது. குறிப்பாய் மத்தியதரவர்க்கப் பெண்கள் படிக்கவும், பொருள் ஈட்டவும் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். இருப்பினும் சமையலிலும், உணவு தயாரித்தலிலும் மீண்டும் அவர்களே பணியாற்ற வேண்டிய சூழலே இன்னும் நிலவுகிறது.

தொடர்ந்து கலாச்சார, பண்பாட்டுத் தளங்களில் பல புதுமைகளையும், மாற்றங்களையும், கொண்டுவரும் முனைப்புடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது மாநில மாநாட்டில் இயற்றிய தீர்மானங்களில் வீட்டு வேலைகளில் குறிப்பாக சமையலில் ஆண்களும் பங்கு பெற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் ச. தமிழ்ச்செல்வன் "ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்'' என்ற நூலை வெளியிட்டு உள்ளார்.

கடந்த டிசம்பர் 9-ம் தேதி பாரதியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சேலத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் "ஆண்களுக்கான சமையல் பயிற்சி முகாம்'' நடத்தப்பட்டது. மாநிலப் பொதுச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். சாதம், சாம்பார், பொரியல், ரசம் என்று நான்குபேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சமைப்பதற்கு பயிற்சி அளித்தார். தமிழ்ச் செல்வனுடன் சேர்ந்து எழுத்தாளர் போப்பும் பல குறிப்புகள் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்டோர் பயிற்சியில் கலந்து கொண்டனர். பார்வையாளர்களாக சுமார் இருபது பெண்களும் கலந்து கொண்டனர். ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜோதிலட்சுமி பயிற்சியைப் பற்றி பேசினார். இதுபோன்ற செய்கைகளை வரவேற்க வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கணவர் கல்யாணசுந்தரம் சமையலில் 75 சதவீதம் உதவு வதாலேயே தன்னால் சமூகப் பணிகளை சிரமமின்றி செய்ய முடிகிறது என்று விளக்கமும் கொடுத்தார்.

இத்தகைய பயிற்சி முகாம்களின் தொடர் செயல்பாடுகள் குடும்ப அமைப்பினுள் பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

நன்றி பெண்ணியம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.