Jump to content

அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி!


Recommended Posts

 
அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (1)
 
 
E_1509074923.jpeg
 

'அந்தமானில் எருமையா... என்ன ரீல் சுத்துறீங்க...' என்று அந்தமான் சுற்றுலாச் சென்று வந்தோர் நினைக்கலாம்; அந்த கதைக்கு வருவதற்கு முன், பயணத்தின் முன்கதைக்கு வருவோம்...
ஒரு மனிதனுக்கு, குரு, மனைவி, மக்கள் மற்றும் மனை சிறப்பாக அமைய வேண்டுமென்றால், அதற்கு நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறது, இந்து சாஸ்திரம். அவ்வகையில், நாம் பணிபுரியும் இடத்தையும் குறிப்பிடலாம். காரணம், சுயநலமான இந்த உலகில், எத்தனை நிறுவனங்களில், எவ்வளவு முதலாளிகள் தாங்கள் சென்று வந்த சுற்றுலா தல இன்பங்களை, தங்கள் ஊழியர்களும் அனுபவித்து மகிழ வேண்டும் என்று கருதுகின்றனர்!
ஆனால், எங்கள் பாஸ், தான் அனுபவித்து மகிழ்ந்த இடங்களுக்கு எல்லாம் தன் ஊழியர்களையும் அனுப்பி, அவர்கள் சந்தோஷம் அடைவதைக் கண்டு, கேட்டு ஆனந்தம் கொள்வார். அத்துடன், பெண் ஊழியர்களின் கஷ்டங்கள் புரிந்து, பரிவுடன், 'ஆண்களுக்கு பொழுது போக்கு என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கு; ஆனால், பெண்களுக்கு அப்படியல்ல. தாய் வீட்டில் சீராட்டி, பாராட்டப்பட்டு, கவலையற்று வளரும் பெண்கள், திருமணம் ஆனதும், வீடு, கணவன், பிள்ளைகள், அலுவலகம் என்ற குறுகிய வட்டத்திற்குள், எந்த பொழுது போக்கும் இல்லாமல் உழன்று கிடக்கின்றனர். அவர்களுக்கு சிறு ஓய்வு; ரிலாக் ஸேஷன் அளிக்கவே இந்த சுற்றுலா...' என்று கூறி, பெண் ஊழியர்களையும் சுற்றுலா அனுப்புவார்.
என் வாழ்விலும் கூட, வீடு, பள்ளி என்பதைத் தவிர, வேறு எங்கும் சென்றறியாத, கிராமத்துப் பெண்ணான என்னை, பணிக்கு சேர்ந்த சிறிது நாட்களிலேயே, என் குணங்களை அவதானித்து, 'நீங்க இப்படி உலகம் தெரியாமல் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டக் கூடாது; போய் வெளி உலகத்தை தெரிஞ்சுட்டு வாங்க...' என்று கூறி, வலுக்கட்டாயமாக இரண்டு ஆண்டுகள் டில்லி அலுவலகத்திற்கு அனுப்பினார், பாஸ். அன்று, அவர் எனக்களித்த ஊக்கமே, தொடை நடுங்கியான என்னை தைரியசாலியாக, தன்னம்பிக்கை கொண்ட பெண்ணாக மாற்றியது. அதனால் தான் சொல்கிறேன்... பணிபுரியும் இடம் நன்றாக அமையவும் கொடுப்பினை வேண்டும் என்று!
அன்று, மொபைல் போனில் என்னை அழைத்த பாஸ், 'லட்சுமி... நம்ம சீனியர் ஸ்டாப்கள் நாலு நாள் டிரிப்பாக அந்தமான் போறாங்க; நீங்களும் அவங்களுடன் போயிட்டு வாங்க...' என்று கூறியதும், பட்டாம்பூச்சியாய், மனம் சிறகடிக்க ஆரம்பித்தது. நன்றி சொல்லக் கூட தோன்றவில்லை.
நினைவு பின்னோக்கி நகர, பள்ளிக் காலத்தில், இந்திய வரைபடத்தில், வங்காள விரிகுடா கடலில், தொட்டும் தொடாமல், வண்ணப் பூக்களை விட்டு விட்டு தூவியது போல் இருக்கும் அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு, வண்ணக் கலவையை குழைத்து வண்ணம் தீட்டி, மகிழ்ந்தது ஞாபகம் வந்தது. அப்போது நினைத்து பார்த்திருப்பேனா... அந்த தீவுகளுக்கு நான் பயணப்படுவேன் என்று!
பெண்களுக்கே உரிய விசேஷ குணம் எனக்குள்ளும் தொற்றிக் கொள்ள, என்ன உடை அணிவது, செருப்பு, அணிகலன்கள் என்று மனம் பட்டியல் போட்டதில், இரண்டு நாட்கள் ஆனந்தத்தில் தூக்கம் வரவில்லை.
கூடவே, வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயம். தேனி அருகே ஒரு சிறு கிராமத்தில் உள்ள என் அம்மாவோ, போனில், 'உங்க பாஸ் அனுப்புகையில் என்னிடம் எதுக்கு கேக்குறே... சந்தோஷமா போயிட்டு வா...' என்று கூற, என் தங்கையோ, 'ம்... உனக்கு என்ன... கொடுத்து வச்ச ராஜாத்தி போயி, நல்லா ஊர் சுத்தி பார்த்துட்டு வா...' என்றாள். அவளை வெறுப்பேற்றிய மகிழ்ச்சியில், 'அழகே அந்தமானே... உன்னை காண வருகிறேன் இந்த மானே...' என, நடிகர் டி.ராஜேந்தர் பாணியில் ரைமிங்காக பாடியபடி தூங்கப் போனேன்.
டூர் கிளம்பும் நாள், அதிகாலை, 4:00 மணி -
குளித்து முடித்து, முகத்தில் பவுடரை அப்ப, என் மொபைல் போன் சிணுங்கியது. பாசின் பி.ஏ., கலா, 'லட்சுமி கிளம்பிட்டயா... சரியா மணி, 4:30 கார் வந்துடும் தயாரா இரு...' என்றார். அதேபோன்று, 4:30 மணிக்கு கார் வர, நான் ஏறியதும், அடுத்த ஸ்டாப்பில் காத்திருந்த உடன் பணியாற்றும் பானுமதியை, 'பிக்கப்' செய்து, டூர் ஒருங்கிணைப்பாளர் கல்பலதாவையும் ஏற்றிக் கொண்டு, விமான நிலையம் விரைந்தது, கார்.
அங்கு, நேரிடையாக, செல்வி, கோகிலா மற்றும் அவரது மகள் ஸ்வேதாவும் வந்து சேர்ந்து கொண்டனர்.
சிட்டுக் குருவிகள், கறுப்பு, வெள்ளை உடை அணிந்து, அங்கும் இங்கும் தத்தி நடந்து செல்வதைப் போல், அலுவலக பெண் ஊழியர்கள் ஆறு பேரும், உடன் பணியாற்றும் கோகிலாவின் ப்ளஸ் 1 படிக்கும் மகளுமாக விமான நிலையத்தை, தங்கள் அழகு நடைகளில் நிரப்ப, காண்போர் கண்கள் எல்லாம், 'யார் இவர்கள்...' என்ற கேள்வியை கேட்காமல் கேட்டன.
விமான நிலைய, 'பார்மாலிட்டிஸ்' எல்லாம் முடிந்து, விமானத்திற்குள் நுழைந்த போது, 'செல்வி மேடம் நீங்க பாடுங்க; பானுமதி மேடம் ஆடுவாங்க...' என்று கோகிலா கேலி பேச, 'நான் பாட ரெடி, இவங்க ஆடுவாங்களா...' என்று அவர் பதில் கேள்வி கேட்க, 'நான் ஆட ரெடி; நீங்க பாக்க ரெடியா...' என, ஒருவரை ஒருவர் கலாய்க்க, விமான பணியாளர்கள் எங்கள் கலகலப்பில் மகிழ்ந்தனர்.
விமானம் பறக்க ஆரம்பித்தது; என், கற்பனையில் அந்தமான், 'இதோ வந்துட்டேன்...' என்று ஆனந்த நர்த்தனம் ஆடத் துவங்க, அதன் ஆட்டத்தில் மயங்கி கண்கள் செருக, தூக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். சரியாக ஒன்றரை மணி நேரம், விமானம், அந்தமான் தலைநகரம், போர்ட் பிளேயரில் இறங்கியது.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது, திரும்பிப் பார்த்தேன். 'வீரசாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையம்' என்ற போர்டு தென்பட்டது. 'யார் இந்த வீரசாவர்க்கர்...' என்ற எண்ணம் மனதிற்குள் ஓட, அதற்குள், நாங்கள் பயணப்பட வேண்டிய கார் வந்து நிற்கவே, தற்காலிகமாக அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, காரில் ஏறி, நாங்கள் தங்க வேண்டிய, 'ஷாம்பென்' ஓட்டலுக்கு புறப்பட்டோம்.
தினமும், லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் போர்ட் பிளேயர் நகர் சாலைகள், அப்போது தான், கழுவித் துடைத்தது போல், குப்பை கூளங்கள் இன்றி, 'பளீச்' சென்று இருந்தன. சாலையின் ஒரு புறம் பசுமை; மற்றொரு புறம் கடல் என, பூமி தன் அழகை எல்லாம் ஒட்டு மொத்தமாக கடைவிரித்திருந்தது, அந்தமானில்!
விமான நிலையத்திலிருந்து, 10 நிமிட தூரத்தில் தான், ஷாம்பென் ஓட்டல் இருந்தது.
அறையில், எங்கள் உடைமைகளை போட்டு விட்டு, குட்டிக் குளியலை முடித்து, 100 ஆண்டுகள் பழமைமிக்க மரம் அறுக்கும் ஆலைக்கு சென்று, சுற்றி பார்த்தபின், வரலாற்று சிறப்பு மிக்க செல்லுாலர் ஜெயிலை பார்க்க கிளம்பினோம். வழியில், தமிழர் நடத்தும் அன்னபூர்ணா சைவ ஓட்டலில், மதிய உணவு!
சுதந்திரப் போராட்ட வீரர்களை, ஆங்கிலேயேர் அடைத்து வைத்திருந்த செல்லுாலர் ஜெயிலுக்கு சில அடி தூரத்திலேயே, டிரைவர் காரை நிறுத்தி விட, இறங்கி நடக்க ஆரம்பித்தோம். ஒருபுறம், காலாபானி என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும், கரிய நிற போர்ட் பிளேர் கடல்... அதன் முனையில், 327 சதுர கி.மீ., பரப்பளவிற்கு பரந்து விரிந்து கோட்டையைப் போன்று உயர்ந்து நிற்கும் கட்டடம், எத்தனையோ வீரர்களின் வாழ்க்கையோடும், உயிரோடும் விளையாடிய மவுன சாட்சியாக அமைதியாக காட்சியளித்தது.
ஜெயிலின் வாயிலில் நின்று, அனைவரும் வெள்ளைக்காரன் ஸ்டைலில் தொப்பி, கூலிங் கிளாஸ் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டாலும், உள்ளே நுழைந்த போது கனத்த அமைதி. அங்கே ஒரு காட்சி...
அனைவருக்கும் முன், ஒரு எருமைக் கன்றுக்குட்டி கால்கள் தடுமாற, ஜெயில் வாயிலுக்குள் நுழைந்தது. அதன் கண்களிலோ கண்ணீர்!
அதைப்பற்றிய தகவலுக்கு அடுத்த வாரம் வரை காத்திருங்கள்...
— தொடரும்.

அந்தமானில் உள்ள வீரசாவர்க்கர் விமான நிலையம், சென்னை விமான நிலையத்துடன் ஒப்பிடுகையில் அதன் கால்வாசி பகுதி கூட இருக்காது. அந்த அளவு மிகச் சிறிய விமான நிலையம்.
ஆனாலும், சென்னை, கொல்கத்தா, டில்லி, பெங்களூர், ஐதராபாத் என, நாட்டின் முக்கிய நகரங்களுக்கும், இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் என வெளிநாட்டு விமானங்களும் இங்கு வந்து போகின்றன.
அதேபோன்று, சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகபட்டினத்திலிருந்து, போர்ட் பிளேயருக்கு, கப்பல் போக்குவரத்தும் உண்டு. மேலும், அந்தமான் நிகோபர் நிர்வாகம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கிடையே சுற்றுலா பயணிகளுக்கென்றே, பயணியர் மற்றும் சரக்கு கப்பல் என, 15 சிறிய கப்பல்களையும், எம்.வி.ராமானுஜம் எனும் பெரிய கப்பலையும் நிர்வகிக்கிறது.
தொல்லியல் துறையினரால், கி.மு., இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்படும் அந்தமான் நிகோபர் தீவுகளில், மொத்தம், 572 தீவுகள் இருந்தாலும், மக்கள் குடியிருப்பதென்னவோ, 36 தீவுகளில் மட்டும் தான். அதிலும் சுற்றுலா பயணிகளுக்கு என்று அனுமதிக்கப்பட்டது சில தீவுகளே!

செவன் சிஸ்டர்ஸ்

http://www.dinamalar.com

தொடரும்...

Link to comment
Share on other sites

அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (2)
 
 
 
E_1509681499.jpeg
 

சுதந்திர போராட்ட வீரர்களை, ஆங்கிலேயர், தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருந்த செல்லூலர் ஜெயிலுக்குள் நுழைந்தோம். அப்போது, ஒரு எருமை கன்றும் நுழைந்தது என்று கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா...
அதைப் பற்றி அப்புறம் சொல்கிறேன்...
மைய கோபுரத்தில் இருந்து ஏழு பிரிவுகளாக, மூன்று மாடி, 690 கொட்டடிகளாக கட்டப்பட்ட இச்சிறைச்சாலை, தற்போது, நான்கு பிரிவுகளுடன் காட்சியளிக்கிறது.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பான் அரசின் ஆளுமைக்கு இத்தீவு வந்த போது, நேதாஜியின் படை வீரர்கள் இதன் இரண்டு பிரிவு கட்டடங்களை இடித்து நொறுக்கி விட்டனர். நாடு சுதந்திரம் அடைந்த பின், ஒன்று இடிக்கப்பட, தற்போது, நான்கு பிரிவுகள் மட்டும், அங்கு நிகழ்ந்த அநியாயங்களை உலகுக்கு உணர்த்தும் சாட்சியாக நிற்கின்றன.
ஒவ்வொரு பிரிவு கட்டடமும், மற்ற கட்டடத்தின் பின்புறத்தை நோக்கி இருக்குமாறு சக்கர வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையும், 13.5 அடி நீளமும், 7.5 அகலமும் கொண்டதாகவும், வெளிப்புறத்தில் இருந்து பூட்டும் விதமாக, கனமான இரும்பு தாழ்பாள் உள்ளது. 3 அடி நீளமும், 1 அடி அகலமும் கொண்ட இரும்பு கம்பிகளாலான சிறிய ஜன்னல் தான், அறைக்குள் வெளிச்சம் மற்றும் காற்று வருவதற்கான ஒரே வழி.
அனைத்துப் பிரிவுகளின் வராந்தாக்களும் மைய கோபுரத்துடன் இணைக்கப்பட்டு, இரும்பு கதவால் பூட்டப்பட்டுள்ளது.
அந்த சிறை அறைகளுக்குள் நுழைந்து பார்த்த போது, ஒவ்வொரு சுவரும், ஆயிரக்கணக்கான நம் நாட்டு இளைஞர்களின் உதிரம் சிதறிய கதையை, மவுனமாக நம்மிடம் கதைக்கிறது.
நுழைவு வாயிலை ஒட்டி, வட கிழக்கு மூலையை நோக்கிய பிரிவில், மூன்றாவது மாடியில் உள்ள கடைசி அறையோ, நம்மிடம் எத்தனையோ கதைகளை சொல்ல துடிக்க, அதன் மவுன பாஷையை அறியாமல் மற்ற பகுதிகளை பார்க்க சென்று விட்டோம்.
பின், அங்கு காண்பிக்கப்படும் ஒளி - ஒலி காட்சி, மாலை, 6:30 மணிக்கு என்று அறிந்து, கார்பியன் பீச்சுக்கு கிளம்பினோம்.
ஏழு பேரும் இரு குழுக்களாக பிரிந்து, இரு மோட்டார் படகுகளில் ஏற, சுற்றிலும் பார்வையை சுழல விட்டேன். மோட்டார் படகுகளும், ஜெட்ஸியும், கடல் நீரை பிளந்து சீறிப் பாய்வதைப் பார்த்ததும் உள்ளுக்குள் பரவசம்.
எங்களுக்கு முன் சென்ற படகில், உடன்பணியாற்றும் பானுமதி, கோகிலாவின் மகள் ஸ்வேதா, ஒருங்கிணைப்பாளர் கல்பலதா போன்றோர், ஆரவார குரல் எழுப்பியவாறு சென்றனர். நாங்கள் ஏறிய படகோ, அதிகப்படியான பாரம் ஏற்றிய மாட்டு வண்டியைப் போல், படகோட்டி எவ்வளவு தள்ளினாலும் நகர மறுத்து, எங்கள் பொறுமையை சோதித்தது. முன்னால் சென்ற டீம், உற்சாகமாக கத்தியபடி கரைக்கு திரும்பியும் விட்டனர். ஆனால், நாங்கள் அமர்ந்திருந்த படகோ, பாறையில் முட்டி, நகரக் காணோம். பின், வேறு இருவர் வந்து தள்ளியதில் மெதுவாக நகர்ந்து வேகமெடுக்க ஆரம்பித்தது.
ஆகா... கடலில், காற்றைப் போல் சீறும் படகில், ஒரு த்ரில்லான அனுபவம் கிடைக்கப் போகிறது என்ற ஆனந்தத்தில் நாங்கள் இருக்க, பாசின் பி.ஏ., கலா, இந்தியில், 'தம்பி... வேகமாக போகாத; மெதுவா போ...' என்று கூற, அவர், இதுதான் சாக்கு என்று ஆமை வேகத்தில் படகை நகர்த்த, வெறுத்து நொந்து போனோம்.
சிறிது தூரத்தில், கடலில், களி மண்ணைப் பிடித்து வைத்தது போன்று, 'வைப்பர் ஐலண்டு' தென்பட்டது. அதில், எந்த வித தாவரங்களும் இல்லை; வெறும் பாறை. வளைந்து, நெளிந்த குறிப்பிட்ட தூரம் வரை பரந்து விரிந்திருந்தது.
அதன் அருகில் படகை கொண்டு போன படகோட்டி, 'இது தான், ஸ்னேக் தீவு நல்லா பாத்துக்கங்க...' என்றார். ஸ்னேக் தீவு என்றதும், 'ஆங்கிலப் படங்களில் வருவது போன்று விதவிதமான ராட்சச பாம்புகள் இங்கு இருக்கும் போலிருக்கு...' என எனக்குள் கற்பனை விரிய, 'தம்பி... இங்கு நிறைய பாம்புக இருக்குமோ...' என்று கேட்டேன்.
'பாம்பெல்லாம் இல்ல; பாம்பு மாதிரி இந்த தீவு வளைந்து நெளிந்து காணப்படுவதால், அப்படி சொல்வாங்க...' என்றவன், அப்படியே வந்த வழியே கரைக்கு படகை திருப்பினான்.
கரையில் அமர்ந்திருந்த எங்கள் குழு, 'எப்படி இருந்தது...' என்று கேட்க, செல்வி, 'எங்க... அலுங்காம, குலுங்காம அப்படியே போயி இப்படியே திரும்பி வந்தோம்... ஒரு த்ரிலும் இல்ல; அதுதான் கலா, 'ஸ்பீடு பிரேக்கர்' போட்டாச்சே...' என்றதும், கலாவின் முகம் வாடியது. 'அடடா... நம்மால் இவர்கள் உற்சாகம் கெட்டு விட்டதே...' என்ற கவலை அதில் தென்பட்டது.
உடனே, கல்பலதா, 'சரி விடுங்க... நாளைக்கு ஹவ்லாக் தீவு போறோம்ல்ல... அங்க வச்சுக்குவோம் நம்ம ஆட்டத்தை...' என்று கூறி, எங்களை கிளப்பினார்.
மறுபடியும் செல்லூலர் ஜெயில்!
நாங்கள் சென்ற போது, முதல், 'பேட்ச்' ஒளி - ஒலி காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தது. அதுவரை, எதிரில் இருந்த பூங்காவில் அமர்ந்திருந்தோம். அங்கு, விடுதலைப் போராட்ட வீரர்களின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. ஒவ்வொரு சிலையாக பார்த்தவள், கம்பீரமாக நின்ற அந்த சிலையைப் பார்த்ததும், உள்ளுக்குள் சிலிர்ப்பு. பெயரைப் பார்த்தேன்; வீர் சாவர்க்கர் என்று இருந்தது. மீண்டும் எனக்குள், 'யார் இந்த வீர் சாவர்க்கர்...' என்ற கேள்வி தொற்றிக் கொண்டது.
சரியாக, 7:30 மணிக்கு ஒளி, ஒலி காட்சிக்கு அனுமதிக்கப்பட்டோம். அந்த இருளில், விளக்கு ஒளியினால் ஆங்காங்கே வட்டமிட்டு காட்டி, அந்த சிறை கொட்டடிகளில் நம் நாட்டு இளைஞர்கள் பட்ட, சொல்லண்ணா துன்பங்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் உணர்ச்சி பொங்க விவரித்த போது, துக்கத்தில் நெஞ்சு விம்மியது.
இந்நிலையில், விளக்கு ஒளி, வட கிழக்கு மூலையை நோக்கிய பிரிவில் மூன்றாவது மாடியில் உள்ள கடைசி அறைக்கு சென்றது. அது, மஹாராஷ்டிர மாநிலம், நாசிக் அருகில், பாகுர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விநாயக் தாமோதர் என்ற வீர சாவர்க்கர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியதால், 50 ஆண்டுகள், தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அறை என்று அறிந்த போது, இதயத்தை ஈட்டியால் குத்தியது போலிருந்தது.
இந்திய சுதந்திர போராட்டத்தில், இவரைப் போல், 50 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் யாருமில்லை.
அதைவிடக் கொடுமை... அதன் நேர் கீழ் தரைத்தள அறையில் அவரது சகோதரர், 11 ஆண்டுகள் சிறையில் இருந்ததைக் கூட, அவர் அறிந்திருக்கவில்லை என்பது!
பின், ஓட்டலுக்கு திரும்புமுன், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு சென்றோம்.
அனைவருக்கும் முன் துள்ளிக் குதித்தபடி ஓடியது அதே எருமைக்கன்று... அட, இந்த வாரமும் அந்த எருமைக் கன்றைப் பற்றி சொல்ல முடியவில்லையே... கண்டிப்பாக அடுத்த வாரம் முடியுமா பார்க்கிறேன்... காத்திருங்கள்...
— தொடரும்.

அந்தமானில் மொத்த நிலப்பரப்பு: 8,249 சதுர கி.மீ.,
மக்கள் தொகை: 3,79,944.
மொழி: தமிழ், வங்காளி, இந்தி மற்றும் மலையாளம்
கல்வியறிவு: 86.27 சதவீதம்
ஆண் - பெண் விகிதம்: 1000:878
தலைநகர்: போர்ட் பிளேயர்
மொழி: தமிழ், வங்காளி
மக்களவை இடங்கள்: 1
துணைநிலை ஆளுநர்: தேவேந்திர குமார் ஜோஷி.

- செவன் சிஸ்டர்ஸ்

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

அந்தமானில் ஒரு எருமைகன்றுகுட்டி! (3)
 
 
 
 
 
E_1510031611.jpeg
 

செல்லுாலர் ஜெயிலில் ஒலி - ஒளி காட்சியை பார்த்தபின், கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றோம்.
முத்து, பவழம், மரத்தாலான கைவினை பொருட்களுக்கு மத்தியில், அந்தமான் பழங்குடியினரின் மரச் சிலைகள் கண்களை கவர்ந்தன.
இப்பழங்குடி மக்களைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்... இன்றும், ஜாரவா, செண்டினல், ஷான்பென், ஒன்கே மற்றும் அந்தமானியர் என பழங்குடி மக்கள், தெற்கு மற்றும் நடு அந்தமானில் உள்ள காடுகளில், வெளி உலகத் தொடர்பின்றி வாழ்கின்றனர். இவர்கள் வசிக்கும் தீவுகளுக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு அனுமதியில்லை.
செண்டினல் பழங்குடி மக்களோ, அந்தமானில் உள்ள வடக்கு செண்டில் என்ற தீவில், ஒரு சிறு கிராமத்தில் வாழ்கின்றனர்.
டிசம்பர், 26, 2004ல் வங்காள விரிகுடா கடலில் ஏற்பட்ட சுனாமியின் போது, இப்பழங்குடியின மக்கள் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லையாம். காட்டையும், கடலையும் மட்டுமே நேசித்து, அதனுடனே தங்கள் வாழ்வை பிணைத்துக் கொண்ட இவர்கள், இயற்கையின் சீற்றத்தையும், அதிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் வழிகளையும் அறிந்து வைத்திருந்ததே இதற்கு காரணம். இருப்பினும், பல்வேறு காரணங்களால், இன்று, இப்பழங்குடியின மக்கள் சில நுாறு பேரே இருப்பதாக கூறுகின்றனர்.
கடைகளில், அந்தமானில் மட்டுமே கிடைக்கும் பொருட்களை வாங்கி, ஓட்டல் திரும்பினோம்.
இரவில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலிலேயே, காளான் சூப், சாதம், சாம்பார், சப்பாத்தி, சோளா பட்டூரா, உருளைக் கிழங்கு கறி, சிக்கன் குழம்பு, அப்பளம், ஊறுகாய் என, வெட்டு வெட்டி, துாங்கப் போனோம்.
மறுநாள் காலை, இட்லி, தோசை, சப்பாத்தி, தேங்காய் சட்னி, பிரட் ஆம்லெட், அவல் உப்புமா, பழச்சாறு என, தொண்டை வரை உணவைத் திணித்து, போர்ட் பிளேரிலிருந்து, 'பெர்ரி' எனப்படும், கப்பல் வடிவில் காணப்படும் பெரிய ரக உல்லாச படகில், ஹவ்லாக் தீவிற்கு பயணமானோம். சமுத்திர ராஜன் தாலாட்ட, சுகமான ஒரு மணி நேர பயணத்திற்கு பின், ஹவ்லாக் தீவில் இறங்கினோம்.
டாக்சியில், முக்கால் மணி நேரம் ராதா நகர் கடற்கரையை நோக்கிய பயணம்...
வழி நெடுக, பாக்கு, தென்னை, மூங்கில் மற்றும் ஓக் மரங்கள் வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்து, கம்பீரமாக அணிவகுத்து, மிரட்டின.
கடல், காடு, மலையை காதலிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா... அது மூன்றும் ஒரே இடத்தில் காணக் கிடைத்தால், வாய் பேச முடியாதோருக்கும் கவிபாடத் தோன்றுமே... அப்படியிருக்கையில், பெரிய பெரிய வாய்களை வைத்துள்ள எங்களுக்கு தோன்றாமல் இருக்குமா... எல்லார் உதடும் அவரவருக்கு பிடித்த பாடல்களை, 'ஹம்மிங்' செய்ய, எங்களுக்கு கார் ஓட்டிய வாலிபனிடம் பேச்சு கொடுத்தார், கல்பலதா...
வங்காளியான அந்த இளைஞரின் முன்னோர்கள், பிழைப்பு தேடி, அந்தமானுக்கு வந்தவர்கள் என்றும், இன்று, அங்கேயே நிலம் வாங்கி, விவசாயம் செய்து வாழ்வதாகவும் கூறினார், அந்த வாலிபர்.
இவரைப் போன்றே, நிறைய வங்காளிகள், வடக்கு அந்தமான், மத்திய மற்றும் சிறிய அந்தமானில் வசிக்கின்றனர். வங்கதேச பிரிவினையின் போது, முன்னாள் பிரதமர் இந்திராவால் குடியேற்றப்பட்டவர்கள் இவர்களின் முன்னோர். அதே போன்று, தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் போர்ட் பிளேயரில் அதிகம் வசிக்கின்றனர்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகள் பேசப்பட்டாலும், பிரதான மொழியாக ஹிந்தியே இங்கு அனைவராலும் பேசப்படுகிறது.
ஹவ்லாக் தீவில் இறங்கும் போதே மணி, 12:30 ஆகி விட்டதால், டிரைவரிடம், 'சாப்பிட இங்கே ஓட்டல்கள் இருக்குமா?' என்று கேட்க, 'ராதா நகர் கடற்கரை அருகே, சைவம், அசைவம் இரண்டும் கிடைக்கும் ஓட்டல் ஒன்று உள்ளது. ஆனால், மதியம், 1:00 மணிக்கு மேல் அங்கு உணவு கிடைக்காது...' என்றார். அத்துடன், 'வழியில் பழக்கடைகள் இருக்கும்' என்றார்.
ஏதோ பெரிய ஓட்டல், பழமுதிர் சோலை போன்று பெரிய பழக்கடைகள் இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், அங்கோ, பெட்டி கடைகள் என்றே சொல்லும் அளவுக்கு இருந்ததே, ஏழெட்டு கடைகள் தான்; அதுவும், கீற்றுக் கொட்டகைகள். அந்த சிறிய ஓலை குடிசைகளுக்குள், கொஞ்சம் துணிகளை தொங்க விட்டிருந்தனர்.
கடல் போன்ற ஜவுளிக் கடைக்குள் பெண்கள், நுழைந்தாலே, அக்கடை, யானையின் காலில் மிதிப்பட்ட கரும்பாகி விடும். இந்த சின்ன கடைகள் எம்மாத்திரம்... நம் குழு உள்ளே புகுந்து, டி - ஷர்ட், கம்மல், சங்கு என, வாங்கி குவித்தனர். பின், இளநீர் குடித்தோம். ஒரு இளநீர் விலை, 40 ரூபாய்!
டிரைவர் சொன்ன பழக்கடை எங்கிருக்கிறது என்று என் கண்கள் தேட, நம் ஊரில் காணப்படும் ரோட்டோர தள்ளுவண்டி போல் மூன்று வண்டிகள் தென்பட்டன. அதில், மா, பலா, வாழை, ஆப்பிள், கொய்யா, வால்பேரி, பப்பாளி பழம் என்று சிறு பெட்டியில் அடுக்கப்பட்டிருக்க, அதிலிருந்து சிறிது, 'கட்' செய்து, சாட் மசால் துாவி கொடுக்க, குச்சியில் குத்தி ருசித்தபடி, ராதா நகர் கடற்கரையை அடைந்தோம்.
ஆங்காங்கே இருந்த அழகான மரக் குடில்களில் அமர்ந்து, இயற்கை எழில் கொஞ்சும் அந்த அழகிய கடற்கரையை அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தனர், சுற்றுலா பயணியர். கல்பலதா மற்றும் செல்வி இருவரும், 'நாங்கள் பைகளை பாத்துக்கிறோம்...' என்று கூறி, மரக் குடிலில் அமர்ந்து, வம்பளந்து கொண்டிருக்க, நாங்கள், நால்வரும், கடலில் குதியாட்டம் போட கிளம்பினோம்.
இதுபோன்ற அழகான கடற்கரை உலகில் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு, எங்கும் பசுமை பூத்துக் குலுங்க, பளிங்கு போன்று தண்ணீர் பளபளத்தது. வியந்து பார்த்த எங்களுக்கு ஒரு நிமிடம் அள்ளி பருகத் தோன்றி விட்டது; அத்தனை சுத்தம்!
குமரிப் பெண்ணின் துள்ளல் நடை போன்று கும்மாளம் போட்டு வந்த அலையில், சிறிது நேரம் நாங்களும் குதித்து ஆடி, குடிலுக்கு திரும்பினோம்.
அங்கு, தமிழர் நடத்தும் சைவ ரெஸ்டாரன்ட் ஒன்று இருந்தது. சப்பாத்தி, சாதம், கடி எனும், குஜராத்தி மோர் குழம்பு, உருளைக் கிழங்கு பொரியல், அப்பளம் என்று மதிய உணவை அங்கேயே முடித்து, ஹவ்லாக் நகருக்கு திரும்பி, 'பெர்ரி'யில் போர்ட் பிளேயர் திரும்பினோம்.
அங்கிருந்து திரும்பவும், செல்லுாலர் ஜெயில் சென்று, முதல் நாள் பார்க்காமல் விட்ட இடங்களை பார்த்து, திரும்பிய போது, எதிரில் இருந்த பூங்காவில் அதே எருமைக் கன்று... அதன் கரிய நிறக் கண்களில் ஏதோ ஒரு செய்தி... பார்க்கலாம் அடுத்த வாரமாவது இதைப் பற்றி சொல்ல முடிகிறதா என்று!
தொடரும்.

செவன் சிஸ்டர்ஸ்
இத்தீவுகளில், ஆயிரம் ஆண்டுகளாக, வாழ்ந்து வருகின்றனர் மக்கள். இங்குள்ள, 572 தீவுகளில், மனிதர்கள் வசிப்பது, 38 தீவுகளில் மட்டுமே!
சுபாஷ் சந்திர போஸ் தலைமையிலான, இந்திய தேசிய ராணுவம் அந்தமான் தீவை கைப்பற்றி, சுவராஜ் - சாஹிப் தீவுகள் என்று பெயர் சூட்டியது.

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=39950&ncat=2

Link to comment
Share on other sites

அந்தமானில் ஒரு எருமை கன்றுக்குட்டி! (4)
 
 
 
E_1510893076.jpeg
 

இரவில், ஷாம்பென் ஓட்டலில், வடமாநில, தென்மாநில உணவுகளை ஒரு கை பார்த்து, ஏப்பமிட்டு, அப்படியே மர நாற்காலிகளில் சாய்ந்த போது, கல்பலதா, 'சரி... பாசுக்கு போன் போட்டுடுவோமா...' என்று கேட்டு, பாசுக்கு போன் செய்ய, லைனில் வந்த பாஸ், ஒவ்வொருவரிடமும், 'சுற்றுலாவை நல்லா என்ஜாய் செய்றீங்களா... சந்தோஷமா இருக்கீங்களா... வீட்டுக்கு போன் செய்து, நீங்க பார்த்து ரசித்த விஷயங்களை எல்லாம் சொன்னீங்களா... அவங்க சந்தோஷப்பட்டாங்களா...' என்று கேட்ட போது, அதில், ஒரு தந்தையின் அக்கறை வெளிப்பட, எல்லார் கண்களிலும், ஆனந்த கண்ணீர்.
இதுதான் அவர் குணம்!

வெள்ளிக் கிழமை -
ஷாம்பென் ஓட்டலில், காலை உணவை முடித்து, போர்ட் பிளேயரில் இருந்து, மோட்டார் படகில், நார்த் பே தீவிற்கு சென்றோம். 15 நிமிடத்தில், நார்த் பே வர, எங்களை இறக்கி விட்ட, அப்படகில் உள்ளோர், 'பார்க்க வேண்டியவைகளை பார்த்துட்டு, 1:30 மணிக்குள் திரும்புங்க...' எனக் கூறி, படகை திருப்பிச் சென்று விட்டனர்.
மிகச் சிறிய தீவான இங்கு குடியிருப்பு வீடுகள் இல்லை. எங்கு நோக்கினும், வான் வெளியை முட்டுவது போல், தென்னையும், பாக்கு மரமும் அடர்ந்து காணப்பட்டன. படகுத் துறையில், மொத்தமே, 10 கடைகள் தான் இருந்தன. முத்து மாலைகளும், சிப்பி மற்றும் மரத்தால் செய்யப்பட்ட வீட்டு அலங்கார பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழர்களும் கடை வைத்திருக்கின்றனர்; சரளமாக தமிழ் பேசுகின்றனர்.
இங்கு, மீனவர்கள் உதவியுடன், ஆழ் கடல் நீச்சலில், கடல் வாழ் உயிரினங்களை நேரில் கண்டு களிக்கலாம். ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கட்டணம். நாங்கள், 'சப்-மெரின்' எனும் நீர் மூழ்கி கப்பலில் சென்றோம். 'பெர்ரி' என சொல்லப்படும் உல்லாச படகை போல், ஏ.சி., வசதி செய்யப்பட்டு, விசேஷ கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது, இந்த நீர்மூழ்கி கப்பல். இதன் உட்புறம், இருபுறமும் நீண்ட, பலகைகளில் அமர்ந்து, கண்ணாடிகளின் வழியே, கடல் வாழ் உயிரினங்களை கண்டு களிக்கலாம்; நுாறு பேர் வரை பயணிக்கலாம்.
இருக்கையில் ஏறி அமர்ந்ததும், கடல் வாழ் உயிரினங்களை பார்க்கும் ஆசையில், கண்ணாடியை முட்டி அமர்ந்தோம். பத்து நிமிடம் கடந்தது; கடலை உற்று உற்றுப் பார்த்து, கழுத்து வலித்தது தான் மிச்சம். ஒரு மீனைக் கூட பார்க்கவில்லை; மாறாக, கப்பல் செல்லும் வேகத்திற்கு ஏற்ப, நீர்குமிழிகள் தான் ஜாலம் காட்டியது.
கல்பலதா, 'மீன காட்டுறோம்ன்னு கடலுக்கு அடியில கூட்டிட்டு வந்து, இப்படி நீர் குமிழிகள காட்டுறீங்களேப்பா... எப்பப்பா வரும் மீனு...' என்று கேலி செய்ய, கலா, 'வரும்... ஆனா, வராது...' என்று தமாஷ் நடிகர் வடிவேல் பாணியில் கூற, கொல்லென்று சிரித்தோம். அங்கிருந்த பணியாள் சிரித்தபடி, 'கொஞ்ச நேரத்தில் வந்துரும் மேடம்...' என்றார், தமிழில்!
அவர் கூறியது போல், அடுத்த சில நிமிடங்களில், எங்கள் வாய் எங்களை அறியாமல், 'வாவ்... சூப்பர்... இங்க பாரு கலர் பிஷ்... அங்க பாரு ஆமை... நட்சத்திர மீனப் பாரு... எம்மாம் பெரிய கடல் அட்டை...' என, ஆளாளுக்கு ஆழ் கடல் காட்டிய அதிசயத்தில், எங்களை மறந்து, உற்சாக குரல் எழுப்பினோம்.
ஒரு மணி நேர, 'கோரல் சபாரி' உற்சாகத்துக்கு பின், 'நார்த் பே' தீவில் இருந்து, நாங்கள் வந்த படகிலேயே, ராஸ் தீவிற்கு சென்றோம்.
இத்தீவு, இந்திய கடற்படையால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு கடைகள் இல்லை; ஒரே ஒரு உணவகம் மட்டும் இருந்தது. ஆங்காங்கே இடிந்து சிதைந்த நிலையில் கட்டடங்களும், அவற்றை, தன் வேர்களால் பிணைத்து, உயர்ந்து வளர்ந்த மரங்களும், வியக்க வைத்தது.
அடர்ந்த தென்னை மரங்களுக்கு இடையே தோகை விரித்து ஆடும் மயில்களையும், துள்ளி ஓடும் மான்களை கண்டதும், எல்லாரும், 'அந்தமானைப் பாருங்கள் அழகு...' என்று பாட, அதற்கு, பானுமதி மற்றும் செல்வி இருவரும், சிவாஜி கணேசன், சுஜாதா போன்று அபிநயம் பிடிக்க, நாங்கள் சிரித்த சிரிப்பொலியில், அத்தீவே அதிர்ந்தது.
அங்கிருந்த சிறு ஓட்டலில், மதிய உணவாக வெஜ் ரைஸ், நுாடுல்ஸ், டோக்லா, வெஜ் பர்கர் சாப்பிட்டோம். அப்போது கோகிலா, நுாடுல்சை எடுத்து மானுக்கு கொடுக்க, அதுவும் நன்றாக சப்புக் கொட்டி சாப்பிட்டது. உடனே, அங்கிருந்த ஓட்டல் பணியாளர், 'மான்களுக்கு, மனிதர்கள் சாப்பிடுவதை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம்...' என்று கூறி, ராஸ் தீவின் முகப்பில் இருந்த எச்சரிக்கை போர்டைக் காட்ட, மான் மற்றும் மயிலிடம் பிரியா விடைபெற்று, போர்ட் பிளேர் திரும்பினோம்.
அந்தமானில் மாலை, 6:00க்கே இருட்ட ஆரம்பித்து விடுவதால், ஏழு மணிக்கு ஓட்டல் திரும்பினோம். பின்னர் குளியல் முடித்து, சிறு ஓய்வுக்கு பின், மறுபடியும் கடைகளுக்கு படையெடுப்பு!
இரவு ஓட்டலுக்கு திரும்பி, சாப்பிட்டு முடித்ததும், ஓட்டல் ஊழியர் ஒருவர் பெரிய கேக் கொண்டு வந்தார். ஏற்பாடு: கல்பலதா மற்றும் செல்வி. அதில், மெழுகு வர்த்தி ஏற்றப்பட, அனைவரும், 'பாஸ்... மெனி மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆப் த டே...' என்று சொல்லி, சென்னையில் இருக்கும் எங்கள் பாஸுக்கு திருமண நாள் வாழ்த்து கூறினோம். பின், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் கேக் கொடுக்க, அவர்களும், ஆச்சரியத்துடன், இவ்வளவு துாரம் வந்தும், மறக்காமல் தங்கள் முதலாளிக்கு திருமண வாழ்த்து கூறுகின்றனர் என்றால், அந்த முதலாளி எவ்வளவு நல்லவராக இருக்க வேண்டும் என்று தங்களுக்குள் பேசியபடி, எங்கள் பாஸுக்கு வாழ்த்து கூறினர்.
எல்லாருடைய வாழ்த்தும், பாஸ், அவரது மனைவி மற்றும் குடும்பத்தாருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும் என்ற சந்தோஷத்தில் துாங்கச் சென்றோம்.
மறுநாள், சனிக்கிழமை  - காலை உணவு முடிந்ததும், போர்ட் பிளேயர் விமான நிலையத்திற்கு கிளம்பிய போது, 'ஐயோ... அதற்குள் நான்கு நாள், 'டூர்' முடிந்து விட்டதே...' என தோன்ற, மவுனமாக சென்னை செல்லும் விமானத்தில் ஏறி, அந்தமான் எனும் அழகிய நங்கையிடம் எங்கள் மனதை பறி கொடுத்தவர்களாக சென்னை வந்து சேர்ந்தோம்!
எல்லாம் சரி... அந்த எருமைக் கன்றுக் குட்டியைப் பற்றி சொல்லவே இல்லையே என்கிறீர்களா...
அதொண்ணுமில்லீங்க... எருமை போல் பொறுமையாக இருப்பதால், எங்க பாஸ் செல்லமாக, என்னை, 'எருமை கன்றுக் குட்டி' என்று அழைப்பார். என்னைப் பற்றி நானே என்னத்தை சொல்வது...
ஹி... ஹி... ஹி!

இங்கு, 1,347 பதிவு பெற்ற கைவினை மற்றும் சிறு தொழில் அமைப்புகள் உள்ளன.
* சுற்றுலா திருவிழா, சுபாஷ் மேளா, விவேகானந்த மேளா, பங்குனி உத்திரம், பொங்கல், துர்கா பூஜை மற்றும் ஓணம் முக்கிய விழாக்கள்.
*இந்தியாவில், மூன்று படைகளின் தலைமையிடமும் ஒரே இடத்தில் அமைந்திருப்பது, அந்தமான் - நிக்கோபாரில் மட்டும் தான்.
* டிச., 12, 1755ல் கிழக்கிந்திய டேனியக் குடியேற்றங்களால், ஜன., 1, 1756ல் நிக்கோபார் தீவுகள், புதிய டென்மார்க் என்று பெயரிடப்பட்டது.

செவன் சிஸ்டர்ஸ்
— முற்றும் —

http://www.dinamalar.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.