Jump to content

ஜுலி - சிறுகதை நடேசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு நட்சத்திர ஹோட்டல் அறை. அங்குள்ள ஒரே டபிள் பெட்டில் படுத்திருக்கிறேன். குளிர்சாதன இயந்திரம் குளிர்ந்த காற்றை அள்ளித் தாராளமாக வீசிக்கொண்டிருக்கிறது. நான் விழித்தபடி யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாரோ பெண்ணொருத்திக்கான காத்திருப்பாக இருக்கலாம். நிச்சயமாகத் தெரியவில்லை. மனதில் அங்கலாய்ப்பு இருந்தது.

அதிக நேரம் காத்திருக்கவில்லை. எதிர்பார்த்ததுபோல கதவைத் திறந்தபடி அழகான ஐரோப்பிய பெண் ஒருத்தி உள்ளே வருகிறாள்.

அவளது உடலில் இருந்து வந்த வாசனை அறையெங்கும் நிறைக்கிறது. காற்றில் மெதுவாக அசையும் தீபமென அசைந்து உள்ளே வந்தவள் தனது சொந்த படுக்கையறைபோல் உடைகளை ஒவ்வொன்றாக களைந்து பக்கத்தில் உள்ள கதிரையில் போடுகிறாள்.

இப்பொழுது அவளது தலையலங்காரத்தை கலைத்துவிட்டதும் அவளது பொன்னிறக் கேசம் மார்பில் வந்து சிறுபகுதிகளை மறைக்கிறது. சில கணத் தாமதத்தின் பின் எனது கட்டிலில் அமர்ந்து எனது முகத்தை கூர்மையாக அவதானிக்கிறாள்.

அவளது நீள்வட்ட முகத்தின் நீலக்கண்களும், பொன்னிறக் கேசமும் என்னோடு ஒரு காலத்தில் நெருங்கி உறவாடியதாகத் தெரிகிறது. அவள் பெயர்கூட நாக்கில் நனைந்து, வாயின் நுனியில் வந்து, உதட்டருகே தடைப்பட்டு நிற்கிறது.

இப்பொழுது அவள் எனது போர்வைக்குள் தனது பளிங்கு நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட நகங்களைக் கொண்ட பாதங்களை கத்தியாகச் செலுத்தி தனது இருகால்களையும் உள்நுளைத்து எனது கட்டிலில் படுப்பது தெரிகிறது.அவளது செயலை ஊக்கவோ தடுக்கவோ இயலாமல் இருக்கிறேன். படுத்த அந்தப் பெண் என் உடலை நெருங்கி வருகிறாள். எனது உடல் முறுக்கேறி தினவெடுக்கிறது. மகிழ்வான அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது எனது உடலில் கொதி நீர்பட்டதுபோல் எரிவு நெஞ்சில் படருகிறது.அந்த எரிவால் வலது கையை எடுத்து நெஞ்சைத் தடவியபோது அங்கிருந்த அடர்த்தியான கேசங்கள் மறைந்துவிடுகின்றன. அதிர்வுடன் மீசையைத் தடவியபோது அங்கும் முற்றாக சவரம் செய்யப்பட்டிருப்பது தெரிகிறது.கேசமற்ற மார்பகம் இரு பக்கத்திலும் வீங்கி முலைகளாகத் தெரிகிறது. நடுங்கியபடி கால்களின் இடையே கையை விட்டபோது ஆண் உறுப்போ, விதையோ இருக்கவில்லை மாறாக பெண உறுப்பே கைகளில் படுகிறது. மிகுந்த பதற்றத்தில் எழுந்து என்னருகே கட்டிலில் கிடந்த பெண்ணை கைகளால் தள்ள முயற்சித்தபோது அவள் இறுக்கமாக என்னை அணைத்தபடி எனது நெஞ்சில் முகம் புதைத்து ‘என்னைக் காப்பாற்று’ என முனகுவது கேட்கிறது. திமிற முடியாத சுமையாக இருந்தது.ஆனால் அவளது முகத்தை கைகளால் பிடித்து உயர்த்தியபோது அது ஜுலியின் முகமாகத் தெரிந்தது. எனது நெருங்கிய நண்பியாக சகவைத்தியராக வேலை செய்தவள். நட்போடு இருந்தவளோடு எவ்வாறு இப்படி படுக்கையை பகிர்ந்துகொள்வது என எழும்பியபோது, ‘சிவா என்னை அவள் கொலை செய்துவிட்டாள்’ என்றாள்.

இவள் என்ன இப்படிச் சொல்கிறள் என முழுப்பலத்தையும் பாவித்து தள்ளிவிட்டு எழுந்தபோது நான் படுத்திருந்த படுக்கையின் இடப்புறத்தில் எனது மனைவியும் கட்டிலுக்கு சிறிது தூரத்தில் எனது லாப்பிரடோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். ஏதோ ஒருவகையான ரோஜா மலரின் வாசனைத் திரவியத்தின் மணம் மூக்கையள்ளியது. யன்னல்த்திரை விலகிய நிலையில் அதன் கதவும் விலகியிருந்தது. இரவில் அதனை சரியாக பூட்டாமல் விட்டிருக்கலாம்.

ஏதோ அர்த்தமற்ற அசாதாரண கனவு வந்திருக்கிறது என நினைத்தாலும் இந்த ரோஜா மணம் எப்படி திடீரென இங்கு பரவியது ? வெளியே இருந்த செடிகளில் பல ரோஜாக்கள் ஒன்றாக மொட்டவிழ்ந்திருக்குமா ? நேரத்தைப் பார்த்தபோது இரவு மூன்று மணியை அலைபேசி காட்டியது. கண்டது கனவு ஆனாலும் வித்தியாசமாக இருந்தது. இதுவரையும் வராத கோணத்தில் வந்திருக்கிறது. இப்படியும் கனவு வருமா ? நிகழ்காலத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் ? ஆனால், ஒரே ஒரு விடயம்தான் இடிக்கிறது. நேற்று மாலையில்தான் ஓக்லி பொலிஸ் நிலையம் சென்று, இரவுவரையும் அங்கிருந்த சார்ஜன்ட் விக்டர் கிங்குடன் பேசியதுடன் எனது அறிக்கையையும் எழுதிக் கொடுத்திருந்தேன்.

இருபது வருடங்களுக்கு முன்னர் என்னுடன் ஒன்றாக வேலை செய்தவள் ஜுலி வோக்கர். அவளின் அழகு ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் பயித்தியமாக்கும். நான் வேலைக்குச் சேர்ந்த அன்றே அவளும் வேலைக்குச் சேர்ந்தாள்.

அவளுக்கு அப்போது இருபத்து மூன்று வயதாக இருக்கலாம். ஐந்து வருடங்கள் ஒன்றாக வேலை செய்தோம். அதன்பின் நான் சொந்தமாக கிளினிக் தொடங்கியபோது பிற்காலத்தில் மோபைல் வைத்தியராக இருந்துகொண்டு வாரத்தில் ஒரு நாள் எனது கிளினிக்கில் வேலை செய்து வந்தவள். அக்காலங்களில் அவள் செய்யவேண்டிய பெரிய சத்திர சிகிச்சைகளையும் நான் செய்திருக்கின்றேன். அவளால் கருணைக்கொலை செய்யப்பட்ட செல்லப்பிராணிகள் எனது வைத்தியசாலையின் வெளியே உள்ள ஃபிரீசருக்குள் வைக்கப்படும். அதற்காக எனக்கு சிறிய தொகையும் தருவாள். சிறிய வியாபார உடன்பாடும் எமக்கிடையில் இருந்தது.

தஸ்மேனியாவிற்குச் சென்று கடந்த இரண்டு வருடங்களாக அங்கு வேலை செய்ததாக அறிந்தேன். ஒரு மாதம் முன்பாக மீண்டும் மெல்பன் வந்தாள். ஆனால் எனக்குத் தெரியாது. தற்பொழுது ஜுலியைக் காணவில்லை. குடும்பத்தினர் நண்பர்கள் என எல்லோரையும் பொலிசார் விசாரிக்கிறார்கள். அதற்காகவே நான் பொலிஸ் நிலையம் செல்ல நேரிட்டது.

ஜுலியாவோடு எனது சினேகிதம் ஆழமானது. வெட்கத்தை விட்டுச் சொல்வதானால் அவள்மீது எனக்கு ஒருதலைக்காதல் இருபது வருடங்கள் முன்பாக இருந்தது. இருவரும் ஒரே காலத்தில் வேலைக்குச்சேர்ந்தோம் என்பதோடு ஒரே சமயத்தில் வேலை செய்வோம். ஜுலியின் அழகு எவரையும் கவரக்கூடியது. ஒரு இளவரசியை போன்று தன்னைச் சுற்றியிருப்பவர்களை காந்தமாக இழுப்பாள். அவளது தெளிவான ஆங்கில உச்சரிப்பை பார்த்துவிட்டு கேட்டபோது விசேடமாக பயின்றதாகச்சொன்னாள்.

மெல்பன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஜுலி பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவள். இலங்கையில் இருந்து வந்திருந்த என்னை மதித்து என்னுடன் ஒன்றாக மதிய உணவுக்கு வருவதுடன், தனது விருந்துகளுக்கும் என்னை அழைப்பாள். ஏதாவது சிறிய உதவி செய்தால் நன்றியுடன் கட்டியணைப்பாள். பிரமச்சாரியான எனக்கு இவையெல்லாம் மனதை அலைக்கழித்த தருணங்கள். எனது கனவுகளில் வந்து, மோசமான கடன்காரி போன்று தினம் தினம் கலவரம் செய்தாள்.
எனது ஒருதலைக்காதல் அதிக காலம் நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட ஓரு வருடத்தின் பின்னர் எனக்கும் மற்றைய வைத்தியசாலைகளில் வேலை செய்யும் நண்பர்களுக்கும் ஜுலியிடமிருந்து இரவு விருந்தொன்றுக்கு அழைப்பு வந்தது. விருந்து நடக்குமிடம் நான் அதுவரையும் சென்றிருக்காத பிறைட்டன் எனும் கடற்கரையோரமான மெல்பன் பகுதி. பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பிரதேசம். பல மில்லியன் பெறுமதியுடைய வீடுகள் மாளிகைகள் போன்று தோற்றமளிக்கும் இடம். கடற்கரை வீதியில் இரண்டு மாடி வீடொன்றில் வசித்தாள்.

கிட்டத்தட்ட இருபத்தைந்து பேர் வந்திருந்த விருந்து. மதுவுடன் பரிமாறப்பட்ட விருந்தின் பின்னர் ஜுலி மேல் மாடியில் இருந்து வெள்ளை உடையில் வானத்து தேவதை பூமிக்கு இறங்குவதுபோல் வந்தாள். அங்கிருந்த இரவு விடுதிக்கே உரித்தான இருளான சூழலில், குறைந்த ஒளியில் மின்குமிழ்கள் மின்னின. அப்பொழுது எனதருகே இருந்த நண்பன் ‘வருவது மணமகள் போல தோற்றம் தருகிறாள் ‘ என்றான். அவளைத் தொடர்ந்து தடித்த உயரமான பெண் ஒருத்தி ஆண்களைப்போல் சூட் அணிந்து இறங்கினாள். அவளது தலை முடி கிராப்பாக வெட்டப்பட்டிருந்தது.

எனக்கு வந்த அதிர்ச்சியை மறைக்க அதுவரையும் பியர் குடித்துக் கொண்டிருந்த நான் அங்கிருந்த விஸ்கிப்போத்தலை எடுத்து கிளாசில் ஊற்றினேன். என்னை மற்றவர்கள் அதிசயமாக பார்த்தார்கள். அவர்களுக்கு ஜுலியின் மீதான எனது ஒருதலைக்காதல் ஏற்கனவே தெரிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அந்த விஸ்கியோடு கரைந்த பனிக்கட்டியாக லெஸ்பியனைக் காதலித்துவிட்ட அவமானத்துடன் அந்த ஒருதலைக்காதல் இரண்டறக் கலந்தது.

அவர்கள் இருவரும் கைகோர்த்தபடியே எங்களிடம் வந்தனர். பின்பு வந்திருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக தழுவிக்கொண்டு ஜூலி நன்றி சொன்னாள். வழக்கமாக ஜுலியின் தழுவல் உடலில் இரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இம் முறை பொருட்களை நெஞ்சில் வைத்து தூக்கியதுபோல் சுமையாக இருந்தது. மாறாத புன்னகையைத் தூவியபடி கேக்கிருந்த மேசையருகே வந்து மோதிரத்தை அவர்கள் இருவரும் மாற்றிக்கொண்டார்கள். எல்லோரும் கை தட்டியபோது நானும் தட்டினேன். பின்பு கேக்கை வெட்டி பரஸ்பரம் ஊட்டினார்கள். இருவரும் நாக்கைவைத்து முத்தம் கொடுத்தார்கள். நான் மறுபக்கம் திரும்பிக்கொண்டேன். அதன் பின்பு நடந்தவை எதுவும் எனக்குத் தெரியாது. அதிகமாக குடித்துவிட்டேன் என நினைத்து நண்பர்கள் பத்திரமாக வீட்டில் கொண்டுவந்துவிட்டார்கள்

அவுஸ்திரேலியாவில் முளைவிட்ட எனது ஒருதலைக்காதல் அதோடு ரயிலில் நசுங்கிய நாணயக்குற்றிபோல் உருமாறியது.

அதன் பின்னர், திருமணம், குழந்தைகள் என எனது வாழ்க்கை எந்தத் தயக்கமும் இல்லாது கடந்தது. வைத்தியசாலையில் வேலை செய்த காலத்தில் நல்ல நண்பர்களாக இருந்தோம். பின் தனியாக தொழில் தொடங்கி பதினைந்து வருடகாலத்தில் எந்த பழைய நண்பர்களைக் காணும்போதும் பழைய நண்பர்களோடு ஜூலியாவையும் நினைவு கூர்வேன்.

அதிசயமாக பூத்த மலர்போல் ஒரு நாள் எனது கிளினிக்குக்கு மதியநேரத்தில் வந்த ஜுலியைக் கண்டு அதிர்ந்து போனேன். இரண்டு பழைய ஜுலியாக்கள் ஒன்றாக கலந்து உருக்கி வார்த்ததுபோல் இருந்தாள். எனக்கு எச்சிலை ஊறவைத்த அவளது முலைகள் வயிற்றில் இளைப்பாறின. நீள்வட்டமான அவளது முகம் வட்டமானதாக இருந்தது. மொத்தத்தில் அக்கால ஐஸ்வர்யா குஷ்புவாக மாறியிருந்தாள். இவ்வளவிற்கும் அவள் நாற்பது வயதை எட்டவில்லை. எனது கற்பனையில் இருந்த தோற்றம் இதுவரையில் கரைந்திருந்து தற்பொழுது ஆவியாக மறைந்தது.

என்ன நடந்தது என விசாரித்தபோது, தனக்கு மன அழுத்தம். அதற்கு மருந்து எடுத்ததால் உடல் பருத்துவிட்டது. தனது பாட்னர் பார்பரா மனவியல் நேர்ஸ் ஆக இருந்து மனத்தைரியம் கொடுத்து உறுதுணையாக இருந்தாள் என்றாள் ஜூலியா. தற்பொழுது நிரந்தர வேலையில்லை என்பதால் மோபைல் வைத்தியராக வேலை செய்ய விரும்புகிறேன். அதற்கு சில உதவிகள் செய்ய முடியுமா? எனக்கேட்டாள். உதவி செய்வதாக வாக்களித்து சனிக்கிழமைகளில் எனது கிளினிக்கில் வேலை செய்யும்படி கூறினேன். இரண்டு வருடங்கள் ஜுலி வேலை செய்தாள். அக்காலத்தில் பார்பராவும் அறிமுகமானாள். ஜுலி தேனீர் குடித்த கப்புகளில் எப்பொழுதும் உதட்டுச்சாயமிருக்கும். அதை எனது நேர்ஸ்கள் காட்டி சிரிப்பார்கள். ஜுலி உதட்டுச்சாயம் மட்டுமல்ல, முகத்திற்கு மேக்கப், கண்ணுக்கு மை என சகல அலங்காரத்துடன் வருவாள். பார்பரா அப்படியல்ல. எந்த மேக்கப்புமில்லாது டெனிம் ஜீன் மற்றும் லெதர் கோட் அணிந்திருப்பாள். பார்பரா அந்த உறவில் ஆணைப்போலவும் ஜுலி பெண்ணைப்போலவும் நடப்பதாக புரிந்துகொண்டேன்.

இருவரும் இரண்டு வருடங்களின் பின்பாக ஒன்றாக யப்பான், சீனா என்று உல்லாசப்பிரயாணம் போனார்கள். நாங்கள் அந்தப்பயணம் அவர்களின் இரண்டாவது தேன்நிலவு எனப்பேசிக் கொண்டோம் அதன் பின்பாக அவர்களைப்பற்றி அதிகம் கேள்விப்படவில்லை.

888888888

ஒரு மாதத்தின் முன்பாக பார்பரா என்னிடம் வந்து தாங்கள் வீடு மாற இருப்பதால் இந்தப் புத்தகங்களை வைத்திருக்க முடியுமா எனக்கேட்டுவிட்டு ஒரு புத்தகப் பார்சலைக் கொடுத்தாள். அதில் பல மிருக வைத்தியம் பற்றிய புத்தகங்கள் இருந்தன. ‘ அவற்றைப்பின்பு எடுத்துக்கொள்கிறேன்.’ எனச்சொன்ன பார்பரா , தனது “காரில் ஜூலியாவால் கருணைக் கொலை செய்யப்பட்ட ஒரு பெரிய நாய் உள்ளது. இதனை எரிக்கவேண்டும் ‘ எனச் சொல்லி அதற்காக ஐம்பது டொலரையும் கொடுத்தாள். எனது கிளினிக்கின் பின்பகுதியில் உள்ள ஃபிரீசரில் நாயின் சடலத்தை தற்காலிகமாக வைப்பதற்கு எனது நர்ஸ் பார்பராவுக்கு உதவினாள். பெரிய பிளாஸ்ரிக்கில் சுற்றிய நாயின் சடலத்தை தூக்குவதற்கு உதவிசெய்த எனது நேர்ஸ் ‘மிகப் பெரிய நாய்’ என்றாள்.

இரண்டாவது நாள், ஏற்கனவே இருந்த நாய்களின் சடலங்களுடன் ஜூலியாவின் நாயும் , நாய்கள் தகனம் செய்பவர்களால் எடுத்துச் செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.

இவ்வளவும் நடந்தபின்னர் திடீரென்று ஒருநாள் காலையில் பொலிஸில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு அதிர்ச்சியளித்தது. என்னிடம் பேசவேண்டும் என்று பொலிஸ் சொன்னபோது ‘எதைப்பற்றி…?’ எனக்கேட்டேன்.

காணாமல் போன ஜுலி சம்பந்தமாக என்றார்கள்.

பொலிஸ் நிலையம் சென்று இரண்டு வருடங்கள் ஜூலியா என்னிடம் வேலை செய்ததைப்பற்றியும் அவளும் பார்பராவும் ஒன்றாக உல்லாசப்பயணம் போனதையும் சொன்னேன்.
8888888

அந்தக்கனவு என்னை சிந்திக்கவைத்தது. ஜுலியை ஒரு மாதமாக தேடுகிறார்கள். அவள் என்ன சிறுபிள்ளையா காணாமல்போவதற்கு? கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றால் எப்படி உடல் இல்லாது போகும் ? பார்பராவுக்கு யார் மேலாவது சந்தேகமிருக்கலாம்?

எனது மனதில் பொறிதட்டியது. எனது நர்ஸ் அறுபது கிலோ நாய்களை என்னுடன் சேர்ந்து தூக்கியிருக்கிறாள். ஆனால் குறைப்படவில்லை. ஆனால் அன்று பார்பரா எடுத்துவந்தது என்ன…? எனது கிளினிக்கில் வைக்கப்பட்ட உடல் நாயாக இருக்காமல் ஜுலியாவாக இருக்கலாமா..?

காலையில் நாயை எரிக்கும் இடத்தில் தொடர்பு கொண்டபோது அவர்கள் ஏற்கனவே எரித்துவிட்டதாகவும் சாம்பலை எறிந்ததாகவும் கூறினார்கள். அந்த நாய் பெரிதாகவும் கம்பளித்துணியால் சுற்றப்பட்டுமிருந்தது. ‘துணியிலிருந்து வெளியே எடுக்கவேண்டாம். பிரேதபரிசோதனை செய்யப்பட்ட நாய்’ என எழுதியிருந்ததாக அதனை எரித்த ஊழியர் கூறினார்.

சில நாய்களை அப்படிச் செய்வதும்உண்டு. மேலும் பல உரிமையாளர்கள் தமது நாய் படுத்திருந்த துணியோடு எரியுங்கள் என்பார்கள்.

எனது சந்தேகத்தை விக்டர் கிங்கிடம் கூறினேன். அவர் நம்பவில்லை. ஆனாலும் பார்பராவிடம் மீண்டும் விசாரிப்பதாக கூறினார்.

நானே சில விடயங்களை செய்து பார்ப்போம் என நினைத்தேன். படித்த துப்பறியும் கதைகள் மனதில் வந்துபோனது. ஆனால் எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. எதுவும் புரியவில்லை. பார்பராவின் வீட்டை மீண்டும் பொலிஸ் சோதனையிட்டால் ஏதாவது தடயம் கிடைக்க வழியுண்டு. புதினைந்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தவர்கள் ஏதாவது சண்டையில் ஈடுபட்டதால் மரணம் சம்பவித்திருக்கலாம். உடல் வலிமையுடைய பார்பராவுக்கு சண்டையில் வெற்றியடைவதற்கு சாத்தியமுள்ளது. பெண் என்பதால் மென்மையாக பொலிசார் நடக்கிறார்கள்போலத் தெரிந்தது. பலமான ஆதாரங்கள் இருந்தால்தான் நடவடிக்கை எடுப்பார்கள்.

பார்பரா என்னிடம் தந்த புத்தகப் பொதி என்னுடைய மேசையில் கடந்த ஒரு கிழமையாக இருந்தது. அதைப் பிரித்து எடுத்து ஷெல்பில் அவற்றை அடுக்குவோம் என்று நினைத்தேன். பெரும்பாலான புத்தகங்கள் செல்லப்பிராணிகள் பற்றியவை. அதில் நீலநிற எமர்ஜென்சி மருத்துவப் புத்தகத்தை திறந்தபோது அதனது முதல் பக்கத்தில் இரத்த துளிகள் பல இருந்தன. அவற்றின் நிறத்தைப்பார்த்தால் அது சமீபத்தியது போன்று இருந்தது. அந்தப் புத்தகத்தில் இருந்து அந்தப் பக்கத்தை கிழித்து எடுத்து இரத்தத்தை இரத்தப்பரிசோதனைக்கு அனுப்பி அதில் டீ என் ஏ பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தேன். முன்பொருமுறை நாயில் இருந்து அதன் இனவகைகளை அறிய பயன்படுத்திய பரிசோதனையை செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.

என்னைப்பொறுத்தவரை அந்த இரத்தத் துளிகள் மனித இரத்தமா அல்லது நாய் பூனைகளின் இரத்தமா என்பதை அறிய விரும்பினேன். இரத்தத்தை செல்லப்பிராணிகளிலிருந்து எடுத்து பரிசோதனைக்குளாய்களில் விடும்போது சிந்தியிருக்க வாய்ப்புண்டு. மனத்தளர்வுக்கு மருந்துகளை எடுப்பதால் கைகள் இலேசாக நடுங்குவதால் சமீபகாலமாக இரத்தத்தை ஜுலி எடுப்பதில்லை என எனது நர்ஸ் மூலம் அறிந்திருந்தேன்.

இரத்தப்பரிசோதனை முடிவு வர இரண்டு கிழமையாகியது. அது மனித இரத்தமென முடிவாகியதுடன் அந்த இரத்தத்தில் நீரிழிவுக்கான அறிகுறி இருப்பதும் தெரியவந்தது.

இதைப்பற்றி விக்டரிடம் சொன்னபோது மிகவும் ஆச்சரியப்பட்டதோடு என்னிடமிருந்த அந்த பரிசோதனை அறிக்கையை வாங்கிக்கொண்டதுடன் ‘எதற்கும் அவர்களது குடும்ப டீ என் ஏ யுடன் பொருந்துகிறதா எனப்பார்ப்போம் என்றார்.

‘அப்படி இருந்தாலும் நீரிழிவு வியாதியுள்ளதால் இரத்தத்தை சோதிக்கும்போது சிந்திய இரத்தமாகவும் இருக்கலாம்” என்றார். என்னை அவர் பார்த்த விதத்தில் தற்போது மாறுதல் ஏற்பட்டது. அதனால் தங்களுக்கு கிடைத்த விபரங்களை என்னுடன் பரிமாறிக்கொண்டார்.

பார்பரா மற்றும் ஜுலி இருந்த வீட்டின் கார் கராஜைத் தேடியபோது அங்கிருந்த கோல்வ் ஸ்ரிக்குகள் அங்கே இருந்தன. அவற்றை எடுத்துப் பார்த்தபோது ஏற்பட்ட சந்தேகத்தால், அவற்றைப்பரிசோதித்தவேளை, கோல்வ் ஸ்ரிக்கின் கைப்பிடியில் சில இரத்தத் துளிகள் இருந்ததை இறுதியில் கண்டுபிடித்தனர். கொலைக்கான ஆயுதமாக கோல்வ் ஸ்ரிக் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அதைக்கழுவிய போதிலும் கைப்பிடியில் இருந்த இரத்தம் காட்டிக் கொடுத்தது. இதை விசாரித்தபோது ‘ அதற்கு தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தான் எக்காலத்திலும் கோல்வ் விளையாடியதில்லை என பார்பரா மறுத்தாள். எரித்த நாயைப் பற்றிக்கேட்டபோது அதனை ஜுலி தனது காரில் கொண்டுவந்ததாகவும் தனக்கு முதுகுவலி என்பதால் தன்னை எடுத்துச்சென்று தகனம் செய்ய கொடுக்கும்படியும் கேட்டாள்’ என்றாள்.

கொலையுண்ட உடலோ அல்லது கொலைக்கான காரணமோ கண்டுபிடிக்கப்படாததால் பார்பராவைக் கைது செய்யவில்லை. ஆனால் அவள் மீது சந்தேகம் வலுத்தது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக, எனக்கு ஜுலி பற்றிய கனவு வந்தது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இரவில் மட்டும் கனவில் வரும் ஜுலி இப்பொழுது மீண்டும் பகலிலும் இரவிலும் கனவில் வந்தாள். நித்திரையில் ஜுலியினது பெயரைச் சொல்லத் தொடங்கினேன். என்னை எனது மனைவி கடிந்தாள். பல தடவை இறந்த பெண்ணின் ஆவியுடன் குடும்பம் நடத்துவதாகக்கூறி என்னைவிட்டு வேறு அறையில் சென்று தூங்கினாள் .பித்துப்பிடித்த ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

ஒரு நாள் வாரவிடுமுறையில் கோடை வெய்யில் மெல்பனில் தீயை உருக்கி வார்த்தபடி இருந்தபோது, உள்ளே குளிர்சாதனத்தின் காற்று என்னை இதமாகத் தாலாட்டியது. ஞாயிற்றுக்கிழமையாதலால் வயிற்றுக்கு வஞ்சகமில்லாது மதிய உணவை அருந்திவிட்டு சோபாவில் அமர்ந்து ஆவியுலகத்தைப் பற்றிய ஆங்கிலத் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்தபடி தூங்கிவிட்டேன். குறைந்தது அரைமணி நேரமாவது இருக்கும். எனது காலடியில் இதுவரையும் படுத்திருந்த எனது நாய் குலைத்தபடி கதவை நோக்கியபடி ஓடியது. யாராவது விற்பனையாளர்கள் அல்லது அயலவர்கள் வந்திருக்கலாம் என நினைத்து நாயைப் பின்தொடர்ந்து சென்று கதவைத் திறந்தபோது கதவின் வெளிப்பக்கத்தில் ஒரு பார்சல் வந்திருந்தது. இந்தியாவில் இருந்து புத்தகங்கள் அனுப்பப்பட்டிருக்கலாம் என நினைத்து அதனைப்பிரித்தேன். அதில் ஒரு நீல நிற டயறி.

ஜுலி மோபைல் வைத்தியராக இருந்தபோது அப்பொயின்மன்ட் எழுதப் பாவித்த இந்த வருடத்திற்கான டயறி. அதை எடுத்து பக்கங்களை புரட்டினேன். செல்லப்பிராணிகளது உரிமையாளர் விலாசங்கள் மற்றும் பிராணிகளது பெயருடன் மருத்துவக் குறிப்புகளும் இருந்தன. டயறியில் எழுதிய விடயங்கள் எதுவும் முக்கியமாகத் தெரியவில்லை. ஆனால் ஏன் அந்த டயறி எனக்கு வரவேண்டும் என்பது புதிராக இருந்ததால் அதனைச்சுற்றி வந்த பிரவுண் உறையைப் பார்த்தேன்;. அதில் எனது முகவரியே இருந்தது. அனுப்பியவர் முகவரியில்லை. இப்படியான டயறியை யார் இங்கு கொண்டு வந்தது?. ஞாயிற்றுக்கிழமைகளில் கூரியர் வருவது வழமையல்ல. அனுப்பியவர்கள் பெயரில்லாமல் எந்தப்பொருளையும் கூரியர் சேவைசெய்பவர்கள் பொறுப்பெடுக்கமாட்டார்கள். யாரோ ஒருவர்தான் இதனை இங்கு கொண்டுவந்து வைத்துவிட்டுச்சென்றிருக்கவேண்டும்.

அடுத்தநாள் வேலைக்கு சென்றபோது அந்த டயறியை ஏற்கனவே வைத்திருந்த ஜுலியாவின் புத்தகங்களுடன் வைப்பதற்கு முன்பு அதனை விரித்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்தேன். மார்ச் மாதத்தில் முதல் சனிக்கிழமையில் சிறிய எழுத்துகளில் பென்சிலால் எழுதப்பட்டிருந்தது.

‘பல முறை ஐவிஎவ் முறையில் தாயாக விரும்பி அதில் தான் தோல்வி கண்டேன். எடுத்த ஹோமோன்களாலும் மனத்தளர்வு வந்தது. பார்பராவுக்கும் எனக்கும் குழந்தை வேண்டும் என எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. தஸ்மேனியாவில் இருந்தபோது ஒரு நாள் ஒரு பழைய பல்கலைக்கழக நண்பனுடன் மதுவின் மயக்கத்தில் படுக்கையை பகிர்ந்ததால் கரப்பமாகி இரண்டு மாதத்தில் திரும்பி வந்தேன். பார்பராவுக்கு இதில் சந்தோசமா, துக்கமா என்பதும் தெரியாது. இந்த மார்ச் மாதம் முதலாவது சனிக்கிழமை பார்பராவை சிட்னியில நடந்த மாடிகிராவ் வைபவத்தில் சந்தித்தேன். இருபது வருடங்கள் ஒற்றுமையாக இருவரும் இருந்தோம். ஆண்களை வெறுக்கும் பார்பராவிற்கு ஆண் தொடர்பு மூலமாக நான் கர்ப்பமாகிய இந்த விடயம் பிடிக்காது. அதற்காக எனது குழந்தையை அழிக்க நான் தயாராக இல்லை. இதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் நான் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.’

அந்தக்குறிப்பு வருடாந்த மாடிகிறாவ் நடக்கும் நாளில் எழுதப்பட்டிருந்தது. இதுவரையில் காணாமல் விடுபட்டுப் போயிருந்த ஒரு விடயம் கொலைக்கான காரணம் எது என்பதைக் காட்டியது. இனிமேல் பார்பரா தப்பமுடியாது. விக்டரிடம் அந்த யடறியைக்கொண்டு போய்க் கொடுத்ததும் விக்டர் மேலும் இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் காரில் ஏறினார். அப்பொழுது ‘நான் வரட்டுமா?’ என்றபோது என்னையும் ஏறும்படி சொன்னார். அந்தப் பெண்களுடன் பின்சீட்டில் அமர்ந்தேன்.

பார்பராவின் வீட்டையடைந்தபோது அவள் எங்கோ வெளியேறத் தயாராக இருந்தாள். எமது பொலிஸ் வாகனத்தைக் கண்டதும் கலவரமடைந்தாள். கடந்த இருமாதங்களில் அவளது எடை பல கிலோக்கள் குறைந்திருப்பதாகத் தெரிந்தது. விக்டர் நேரடியாக ‘உங்களைக் கைது செய்கிறோம்’என்றதும் ‘சிலருக்கு போன் செய்யவேண்டும் ‘என்றாள். அப்பொழுது இரண்டு பெண் பொலிஸும் அவளோடு உள்ளே சென்றனர். நான் விக்டருடன் வெளியே காத்து நின்றேன்.
பல வருடங்கள் முன்பாக அவர்கள் இருவருக்கும் இதே வீட்டில் நண்பர்கள் நடுவே திருமணம் நடந்தது. அது சட்டதால் திருமணமாக கருதப்படாது விட்டாலும் பாட்னர்கள் என்ற நடைமுறையை இந்த நாடு அங்கீகரிக்கிறது. ஐந்து நிமிடத்தில் பார்பரா பெண்பொலிஸாருடன் வெளியே வந்தபோது ஒரு சிறிய மோல்ரீஸ் இன நாய் அவளைத் தொடர்ந்து வந்தது.

‘இந்த லைக்காவிற்கு நல்ல குடும்பத்தைப் பார்க்கமுடியுமா? ‘ என என்னைப்பார்த்தாள்.

பர்பராவின் கண்களில் அமைதி தெரிந்தது.

‘இது ஜுலியின் நாயல்லவா?’ எனக் கூறிக்கொண்டு அதை வாங்கினேன்.

இப்பொழுது இரண்டு பெண்கள் மத்தியில் பார்பரா அமர்ந்ததும் நான் முன்சீட்டில் விக்டருக்கு அருகில் அமர்ந்தேன். தற்காலிகமாக மீண்டும் லைக்கா பார்பராவின் மடியில் ஏறியது.

மிகுந்த திருப்தியுடன் பொலிஸ் நிலையத்தில் விடப்பட்ட எனது காரில் லைக்காவுடன் ஏறி வந்தேன். வீடு வந்ததும் ‘ஏன் மீண்டும் ஒரு நாய்? யாருடையது?’ என்று கேட்ட மனைவியின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லிய பின்பு ‘ஜுலியின் ஆத்மா இனி சாந்தியாகும்’ என்றேன்.

சிலநாட்களில் விக்டர் தொடர்பு கொண்டு ‘நீங்கள்தான் ஜுலியின் கொலை வழக்கில் முக்கியசாட்சி’ என்றார்.

‘உண்மையை ஒத்துக் கொண்டாளா?’ எனக்கேட்டேன்.

‘ஆம் இருவரும் மாடிக்கிறாவ் செல்ல முடிவு செய்திருந்த நேரத்தில் ஜுலி டாக்டரிடம் போய் செக்பண்ணிவிட்டு வந்ததை அறிந்த பர்பரா, ஜுலியைத் துருவியதும் அவள் உண்மையை சொல்லியபோது ஆத்திரங்கொண்டு கோல்வ் ஸ்ரிக்கரால் அடித்திருக்கிறாள். அடித்தபோது கொலை செய்யும் நோக்கமிருக்கவில்லை. ஆனால் தலையில் அடி பலமாக இருந்ததால் மயங்கிவிட்டாள். நேர்சான பார்பரா பல முதல் உதவிகளை செய்தபோதும் ஜுலி உயிர் பிழைக்கவில்லை. அதன்பின்பு உங்கள் கினிக்கில் எரிப்பதற்கு உடலைக் கொண்டு வந்தாள். உண்மையில் உடலற்றும் மரணத்திற்கான காரணமற்றும் இருந்தபோது இந்த கொலையை நிரூபிப்பது கடினம் என நான் நினைத்திருந்தேன். ஜூலியின் கர்ப்பத்தை பரிசோதித்த டாக்டரின் சான்றிதழும் உள்ளது. விக்டோரியா பொலிஸ் கமிசனரால் நான் விசேடமாக பராட்டப்பட்டேன். அந்தப்பாராட்டு உண்மையில் உங்களுக்கே உரியது என்பதால் நன்றி சொல்லவேண்டும் அத்துடன் நான் கமிசனருக்கு உண்மையை அறிவித்திருப்பதால் உங்களுக்கு ஒரு பாராட்டுப் பத்திரம் வரும்’

‘எனக்கு ஜுலி மீது இருந்த இன்பாச்சுவேசன் நட்பு என்பதை விட ஏதோ அமானுஸ்யமான சக்தி இந்த விடயத்தில் என்னை இயக்கியது. என்மனைவி கூட என்னிடம் ஆவியுடன் கடந்த இருமாதங்களாக குடும்பம் நடத்தியதாக கூறிவந்தாள். என்னைப்பொறுத்தவரை இந்தவிடயத்தில் ஒரு முடிவு வந்தது நிம்மதியை அளிக்கிறது. முக்கியமாக எனது தகவல்களை பொருட்டாக எடுத்து செயல்படுத்தியதற்கு எனது நன்றிகள்’ என தொலைபேசியை வைத்தேன்.

நன்றி- தினக்குரல்

 

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

கனநாளைக்கு பின் ஒரு துப்பறியும் கதை....நன்றாக இருக்கிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.