Sign in to follow this  
நவீனன்

கண்கள் திறந்தன!

Recommended Posts

கண்கள் திறந்தன!
 
 
 
E_1509681335.jpeg
 

பணி இட மாறுதலில் வந்திருந்தான், முரளி. சுறுசுறுப்பாக இருந்ததுடன், சீனியர் பத்மநாபனிடம், நல்ல பேரை சம்பாதிக்க, பவ்யமாகவும் நடந்தான். அதைக் கவனித்த பத்மநாபன், 'இங்க பாருப்பா... நீ, உன் வேலைய கவனமாக செய்தாலே போதும்; அதுவே, எனக்கு கொடுக்கிற மரியாதை. மற்றபடி, முகஸ்துதி செய்வதோ, கூழைக் கும்பிடு போடுவதோ வேணாம்...' என்று, 'பட்'டென்று சொல்லி விட்டார்.


ஆனாலும், மேலதிகாரி என்ற பந்தா இல்லாமல், சினேகமாக பழகிய பத்மநாபனை, முரளிக்கு பிடித்து விட்டது.
மேலும், அவர் இலக்கிய ஆர்வம் உள்ளவர் என்பது தெரியவர, சந்தோஷமானான்.
'எனக்கும் இதெல்லாம் பிடிக்கும் சார்... எங்க ஊர்ல, 'பூம்பொழில்'ன்னு, ஒரு மன்றம் நடத்தியிருக்கேன். இலக்கியப் பேச்சாளர்கள வரவழைச்சு, பேச வைத்து, பரிசெல்லாம் கொடுப்பேன். வேலைக்கு சேர்ந்த பின் முடியல...' என்றான்.
அவனுக்கு, செங்கல்பட்டுக்கு பக்கத்தில், ஒரு சிற்றூர்; திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள். இடம் மாற்றலாகி வந்து, வேலையில் சேர்ந்தவுடன், இரண்டு நாள் லீவு போட்டு, வீடு பார்த்து, குடும்பத்தை வரவழைத்தான்.
மதியம், காபி குடிக்கும் போது, ''பேரன்ட்ஸ் இருக்காங்களா...''என்று கேட்டார், பத்மநாபன்.


''அம்மா இல்ல; இறந்துட்டாங்க. அப்பா இருக்காரு...'' என்றான்.
''என்ன செய்றார்...''
''தொல்ல செய்றார்...'' என்றான்.
சிரித்தார் பத்மநாபன்.
''சிரிக்காதீங்க சார்... மனுஷன், பார்வைக்கு பரம சாது; செய்யறதெல்லாம் தாங்க முடியாது...''
''அப்படி என்ன செய்துட்டார்,'' என்று கேட்டார்.
''என்ன செய்யலன்னு கேளுங்க... வயசாச்சே, போட்டத தின்னுட்டு, வீட்டுக்கு ஒத்தாசையா இருப்போம்ன்னு இல்லாம, எல்லாத்துலயும் மூக்கை நுழைப்பார். அது என்ன, இது என்னன்னு தொட்டதுக்கெல்லாம் நூறு கேள்வி... நான் அவரோட மகன்... 'அட்ஜஸ்ட்' செய்துக்கலாம். வந்தவ பொறுப்பாளா... தினமும் கம்ப்லெயின்ட். வீட்ல அவளாலும் நிம்மதியா இருக்க முடியல; எனக்கும் ஆபிஸ்ல வேலை ஓடல. பார்த்தேன்... கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேர்த்துட்டேன்,'' என்றான்.


பத்மநாபனுக்கு, முகம் வாடியது.
''வயசானவங்க கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருப்பாங்க; நாம தான் அரவணைச்சு போகணும். பெரியவர்கள காப்பாத்த வேண்டியது, நம் கடமை இல்லயா...''
''நான் ஒண்ணும் அம்போன்னு விட்டுடலயே... மாசம், 15 ஆயிரம் ரூபாய் கட்டி, வசதியான இல்லத்தில் தானே சேர்த்து விட்டிருக்கேன்,'' என்றான்.
''நம்ம பார்வைக்கு, அது சரியாக இருக்கலாம்; ஆனா, உங்கப்பா என்ன நினைப்பார்ங்கிறத அவரோட கோணத்தில் நின்னு பாரு. 'பிள்ளைய, பேரக்குழந்தைகள விட்டுட்டு, அனாதை போல, இங்கே வந்து இருக்கோமே'ன்னு பீல் செய்ய மாட்டாரா...''
''அதான், மாசத்துக்கு ஒரு தரம், குடும்பத்தோடு போய் பாத்துட்டு வர்றோமே...''
''அது போதுமா...''


''சார்... நானாவது, இந்த அளவுக்கு செய்றேன்; அவனவன் பெத்தவங்கள பிளாட்பாரத்துல விட்டுட்டு போறான்,'' என்றான்.
''அத சரின்னா நினைக்கிறே... பெத்தவங்கள கைவிடறது, பாவமில்லயா...''
''அந்த அளவுக்கு பெத்தவங்க தொல்ல கொடுத்திருப்பாங்க... வெளியில் இருந்து பாக்கிறவங்களுக்கு தெரியாது; அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும். உங்களுக்கு, அப்பா இருக்காரா சார்?''
''இல்ல...''
''அதனால்தான் இப்படி வக்காலத்து வாங்கறீங்க,'' என்றான். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை.
''ஒரு நாள், எங்கள் வீட்டுக்கு வாங்க சார்,'' என்று அழைப்பு விடுத்தான்.
''ஏதும் விசேஷமா...''
''நீங்க வந்தாலே, விசேஷம் தான்,'' என்றான்.
''ஐஸ் வைக்காதய்யா...''
''அதுக்கெல்லாம் நீங்க மயங்க மாட்டீங்கன்னு தெரியும். உங்கள பிடிச்சிருக்கு; மரியாதை நிமித்தமா கூப்பிடுறேன். ஒரு நாள், வீட்டுக்கு வந்து சாப்பிட்டீங்கன்னா, சந்தோஷமாக இருக்கும்,'' என்றான்.
''சரி... ஒரு நாளைக்கு வர்றேன்.''
''எப்போ சார்?''


''ஹோம்ல விட்டு வந்திருக்கிற உங்க அப்பாவ, வீட்டுக்கு அழைச்சுட்டு வர்ற அன்னைக்கு...''
''வரமாட்டேன்னு நேரடியா சொல்லுங்களேன்... அதென்ன சுத்தி வளைச்சு பேச்சு.''
மீண்டும் சிரித்தார் பத்மநாபன்.
''சரி... இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வர்றேன்,'' என்றார்.
''உங்க முகவரியச் சொல்லுங்க சார்; நேர்ல வந்து அழைச்சுட்டு போறேன்.''
''பரவாயில்ல; நானே வந்துடறேன்.''
''ஏன் சார்... நான், உங்க வீட்டுக்கு வரக்கூடாதா...''
''எதையும் குதர்க்கமாகவே எடுத்துக்கறியே,'' என்ற பத்மநாபன், ஒரு காகிதத்தில், தன் முகவரியை எழுதிக் கொடுத்தார்.
''காலை, 11:00 மணிக்கு வந்து, என்னை, 'பிக் அப்' செய்துக்கிட்டால் போதும்; சாப்பாடு எளிமையாக இருக்கணும்; ஒரு கீரை மசியல், ஒரு பொரியல், கொஞ்சம் மோர் போதும்; தடபுடல் செய்துடாதே,'' என்றார்.
ஞாயிற்றுக் கிழமை -


பத்மநாபன் சொன்ன ஐட்டங்களையும், கூடவே, வடை, பாயசம், கேசரி என, மனைவியிடம் செய்யச் சொல்லி, டாக்சியில், அவர் வீட்டை அடைந்தான், முரளி.
''டாக்சி எதுக்கு; பஸ்சே போதுமே,'' என்றார், பத்மநாபன்.
''டாக்சிகாரங்க பிழைக்க வேணாமா சார்,'' என்றபடி, அவரை பின்தொடர்ந்து, வீட்டினுள் நுழைந்தான்.
வரவேற்பறையில் அமரச் சொன்னார்.
''வீட்ல மனைவியும், குழந்தைகளும் கும்பகோணத்திற்கு போயிருக்காங்க,'' என்றவர், வேலைக்காரம்மாவிடம், முரளிக்கு காபி கொடுக்கச் சொல்லி, ''இதோ வந்திடறேன்,'' என்று ஒரு அறைக்குள் போனார்.
காபி குடித்து முடித்து, டீபாயில் இருந்த அன்றைய தினசரிகளையும் படித்து முடித்து விட்டான். அப்போதும், வெளியில் வரவில்லை, பத்மநாபன். 'உள்ளே அப்படி என்ன தான் செய்கிறார்...' என்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த முரளி, திகைத்தான்.


முதியவர் ஒருவருக்கு, ஸ்பூனில் சாதத்தை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டிக் கொண்டிருந்தார். முதியவருக்கு, 70 வயதிருக்கும்; பக்கவாதம் பீடித்திருந்தது. கட்டிலில், சாய்வாய் படுத்திருந்தார்.
''போதுமாப்பா...'' என்று கேட்டு, வாயை துடைத்து விட்டார்.
''பத்திரமாயிருங்க... நான், ஒரு நண்பர் வீடு வரை, போயிட்டு வர்றேன். நான் வரும் வரை, வேலைக்காரம்மா உங்கள பாத்துக்குவாங்க. நான் போய்ட்டு, சீக்கிரம் வந்துடறேன்,'' என்று எழுந்தார்.
வேகமாக, தன் இருக்கைக்கு திரும்பினான், முரளி. பத்மநாபன் வெளியில் வந்ததும், அடக்க முடியாமல், ''என்ன சார்... என்கிட்ட அப்பா இல்லன்னு பொய் சொல்லிட்டீங்களே...'' என்றான்.
''அது, என் அப்பா இல்ல; என் நண்பனோட அப்பா.''
''என்ன சார் சொல்றீங்க...''


''எனக்கு, பாலுன்னு ஒரு நண்பன்; சின்ன வயசிலிருந்தே ஒண்ணா படிச்சு, வளர்ந்தோம். தாயில்லா பிள்ளையான அவன, கண்ணுக்குள்ள வச்சு வளர்த்தார், அவனோட அப்பா. அவனும் அப்பா மீது உயிரையே வச்சிருந்தான். எதிர்பாராத விதமாக, ஒரு விபத்துல இறந்துட்டான். அந்த அதிர்ச்சியில், இவருக்கு, 'ஸ்ட்ரோக்' வந்திருச்சு. இந்த சூழ்நிலையில், பாலு இருந்தால் அவரை எப்படி கவனிச்சுக்குவானோ, அப்படி கவனிச்சுக்கறது தானே, ஒரு நண்பனோட கடமை; அதை, நான் செய்துகிட்டிருக்கேன்,'' என்றார்.
''கிரேட் சார் நீங்க,'' என்று கும்பிட்டான்.
''இதுல வியப்படைய ஒண்ணுமில்ல; கிளம்பலாமா,'' என்றார்.
''இன்னைக்கு வேணாம் சார்... இன்னொரு நாள் வந்து, அழைச்சுட்டு போறேன்,'' என்று சொல்லி சென்று விட்டான்.
மறுநாள், அவன் ஆபிசுக்கு வரவில்லை. அதற்கும் மறுநாள் வந்து, ''இந்த வாரம் வாங்க சார்,'' என்றான்.
''என்னை, சோத்துக்கு அலையற ஆள்ன்னு நினைச்சியா... நினைச்சால் வான்னு சொல்வே... பின், வேணாம்பே... அதுக்கெல்லாம் சம்மதிச்சு, பின்னால் வருவேன்னு நினைச்சியா,'' என்றார், கோபமாக!


''கோபிச்சுக்காதீங்க சார்... ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தால், உங்கள வரவேற்க, நாங்க மட்டும் தான் இருந்திருப்போம்; ஆனா, இந்த வாரம், எங்க அப்பாவும் இருப்பார். ஆமாம் சார்... அப்பாவ, முதியோர் இல்லத்திலிருந்து அழைச்சுட்டு வந்துட்டேன். நீங்க, நண்பரின் நோயாளி தந்தைய, தன் தந்தையாக பாவித்து, சேவை செய்யும் போது, நான் என் சொந்த அப்பாவ வீட்ல வச்சு, காப்பாத்த வேணாமா... அதுதான், அழைச்சுட்டு வந்துட்டேன். முதல்ல, எங்கப்பா, நம்பாம, நான், ஏதோ டிராமா செய்றேன்னு நினைச்சார். உங்கள பற்றியும், நீங்க என் கண்ணை திறந்த விதத்தையும் சொன்னேன். உங்கள பாக்க ஆவலாக இருக்கார்; அதனால, நீங்க கண்டிப்பா வரணும்,''என்றான்.
''நீ கூப்பிடலைன்னாலும், வருவேன்யா,'' என்றார், மகிழ்ச்சியுடன் பத்மநாபன்!

http://www.dinamalar.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this