Sign in to follow this  
நவீனன்

கேடலோனியா: சுதந்திரமா, பின்னடைவா?

Recommended Posts

கேடலோனியா: சுதந்திரமா, பின்னடைவா?

 

 
13CHVCM-EDIT2-CATALONIA

ஸ்

பெயினின் கேடலோனியா மாகாணத்தவர் தனிநாடு பிரகடனத்தை வெளியிட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று புரியாமல் திகைத்து நிற்கிறது ஐரோப்பிய ஒன்றியம். கடந்த அக்டோபர் 27 அன்று கேடலோனியா நாடாளுமன்றம் தன்னுடைய பிரதேசம் தனி நாடாக ஆகிவிட்டதாகவும் தாங்கள் இனி கேடலோனியக் குடியரசு என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பெயினின் தளைகளை முறித்துக்கொண்டு சுதந்திரம் பெற்றுவிட்டதாக முழங்கியது.

தொழில் வளம் மிக்க தங்களுடைய பகுதியின் கனிம வளத்தையும் நிதி வளத்தையும் உறிஞ்சும் ஸ்பானிய அரசு தங்களுடைய மாகாணத்துக்குப் போதிய நிதியையும் செயல்பாட்டு அதிகாரத்தையும் அளிக்காததால், தங்களுடைய நாடாளுமன்ற (மாகாண சட்டமன்றம்) சட்டத்தில் உள்ளபடி பிரிந்து செல்வதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பில் கிடைத்த பெரும்பான்மை முடிவுக்கு ஏற்ப, சுதந்திரத் தைப் பிரகடனம் செய்வதாக உலகுக்கு அறிவித்தது.

 

முடக்கப்பட்ட சுதந்திரக் குரல்

இதனால் ஆத்திரமடைந்த ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அரசியல் சட்டத்தின் 155-வது கூறு அளிக்கும் அதிகாரப்படி, கேடலோனிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார். மாகாணத்தின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்துக் கொண்டார். அந்த அரசில் பதவியிலிருந்து அமைச்சர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். புதிய நாடாளுமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 21-ல் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். கேடலோனிய நாடாளுமன்றத்தின் சுதந்திரப் பிரகடனத்துக்கு ஆதரவாக அந்த மாகாணத்தில் மக்கள் வீதிகளில் திரண்டு ஊர்வலம் சென்று, ஸ்பெயின் அரசின் அடக்குமுறையை எதிர்த்து கோஷங்கள் எழுப்புகின்றனர். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலும் பிற மாகாணங்களிலும் ஸ்பெயின் துண்டாடப்படக் கூடாது என்று கருதும் தேச பக்தர்கள் கேடலோனியப் பிரிவினைவாதிகளைக் கண்டித் தும் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்புகின்றனர்.

சுதந்திரப் பிரகடனம் வெளியான பிறகு, கேடலோனிய அரசில் அமைச்சர்களாக இருந்தவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மட்டுமின்றி பிரதமராகப் பதவி வகித்த கார்லஸ் பியுஜிடிமான்ட் மீதும் தேசத்துரோகம், ஸ்பெயின் அரசுக்கு எதிராக மக்களைக் கலகம் செய்யத் தூண்டியது, அரசின் பணத்தைப் பிரிவினை நடவடிக்கைகளுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றங்களைச் செய்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே கார்லஸ் பியுஜிடிமான்ட் அண்டை நாடான பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சம் புகுந்துவிட்டார். ஆனால் அந்த நாட்டின் பிரதமர் சார்லஸ் மைக்கேல், “பியுஜிடிமான்ட் தானாகவே வந்தார், பிற ஐரோப்பியக் குடிமகன்களைப் போலவே இங்கு இருக்கிறார், பெல்ஜிய அரசு ஸ்பெயினின் உள் விவகாரங்களில் தலையிடவோ, பியுஜிடிமான்டுக்கு அரசியல் புகலிடம் அளிக்கவோ விரும்பவில்லை” என்று அறிவித்திருக்கிறார்.

தேசத்துரோகக் குற்றச்சாட்டின்படி மட்டும் பியூடிமான்டுக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும். இதர குற்றச்சாட்டுகளுக்கும் இதே போல சிறைவாசம் உண்டு. இவற்றை சேர்த்தோ தனித்தனியாகவோ அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால் பியுஜிடிமான்ட் தனது எஞ்சிய ஆயுள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும்.

 

கேடலோனியர்கள் அனைவருமே பிரிவினையை, அதாவது சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை. கடந்த மாதம் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பில்கூட பங்கேற்றவர்களின் எண்ணிக்கைக் குறைவு; அதிலும் வாக்களித்தவர் எண்ணிக்கை மிகவும் குறைவு. காரணம், பாதி வாக்கெடுப்பின்போதே ஸ்பெயின் அரசின் மத்திய காவல் துறையினர் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்குப் பெட்டிகளைக் கவர்ந்து சென்றதுடன் வாக்காளர்களை விரட்டியடித்து, வாக்கெடுப்பை வலுக்கட்டாயமாக முடிவுக்குக் கொண்டு வந்தனர். ஆனால் ஸ்பெயின் அரசின் ஆவேசமான நடவடிக்கைகள் பிரிவினைக்கு எதிரானவர்களைக்கூட மனம் மாறச் செய்துவருகிறது. இவ்வளவு முரட்டுத்தனமாக நடக்க நாம் என்ன எதிரிகளா, இந்நாட்டின் மக்கள்தானே என்று அவர்கள் உரத்த சிந்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

டிசம்பர் 21-ல் நடைபெறவுள்ள கேடலோனிய நாடாளுமன்ற (மாகாண சட்டமன்ற) பொதுத் தேர்தலில், சுதந்திரம் கோரும் கட்சிகள் அனைத்தும் கூட்டாகப் போட்டியிட்டு மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவை வாக்குச் சீட்டுகளில் பதிவு செய்ய வேண்டும் என்று கார்லஸ் பியுஜிடிமான்ட் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய அரசில் இடம் பெற்றிருந்த தோழமைக் கட்சிகளையும் பிற கட்சிகளையும் தொடர்பு கொண்டு வருகிறார். பெல்ஜியத்தில் இருந்தாலும் தன்னால் அங்கிருந்தபடியே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் என்றும், பெல்ஜியத் தில் அரசியல் புகலிடம் தேடும் எண்ணம் தனக்கு இல்லையென்றும் அறிவித்திருக்கிறார்.

 

வலுக்கும் விமர்சனங்கள்

ஸ்பெயின் அரசு நினைப்பதைப்போல பிரிவினைவாதக் கட்சிகளுக்கு ஆதரவு கிடைக்காமல் அவை தோல்வியுற்றால்தான் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்புக் குப் பலன் இருக்கும். ஒருவேளை மக்கள் பெருவாரியாக பிரிவினை கோரும் கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டால் ஸ்பெயின் பிரதமரால் அதற்குப் பிறகு மக்களுடைய விருப்பத்துக்கு மாறாக, எதையும் செய்ய முடியாது. ஸ்பெயின் பிரதமர் அவசரப்பட்டுவிட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே பெல்ஜியத்தில் இருக்கும் பியுஜிடிமான்டைக் கைது செய்ய ஸ்பெயின் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி கார்மென் லாமெலா வாரண்ட் பிறப்பித்திருக்கிறார். இது ஸ்பெயின் நாட்டு வாரண்ட்; பெல்ஜியத்தில் இதற்கு என்ன செல்வாக்கு என்று தெரியவில்லை. ஐரோப்பிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் என்ன ஆகும் என்ற விவாதமும் இப்போது நடந்து வருகிறது. பெல்ஜிய நாட்டுச் சட்டப்படி அந்நாட்டுக்கு வந்த ஐரோப்பியர்களைக் கைது செய்து கூட்டிச்செல்வது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு எளிதான காரியம் அல்ல. அவ்வளவு சட்ட நடைமுறைகள். எனவே அரசியல் புகலிடம் கோராமலேயே பியுஜிடிமான்ட் சில மாதங்களுக்கு அங்கேயே தங்கியிருக்க முடியும் என்று தெரிகிறது.

‘கைது செய்யப்பட்ட கேடலோனிய அரசின் முன்னாள் அமைச்சர்களை சிறையில் மோசமாக நடத்துகின்றனர், ஆடைகளை முழுதாகக் களையவைத்து சோதனையிட்டனர், மரியாதைக் குறைவாகப் பேசினர், கடுமையாக ஏசினர்’ என்றெல்லாம் கைதானவர்கள் வெளியில் இருப்பவர்களுக் குத் தகவல்களை அனுப்பியுள்ளனர். கேடலோனிய சுதந்திரப் பிரகடனத்தை ஏற்காத பிற ஐரோப்பியர்கள் கூட ஸ்பெயின் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளைப் பார்த்து முகம் சுளிக்கின்றனர். பிரிவினை கோருகிறவர்களிடம் சுமுகமாகப் பேசித் தீர்ப்பதை விட்டுவிட்டு ஏன் இப்படி பிரச்சினையை வளர்த்துக் கொண்டே போகின்றனர் என்று அங்கலாய்க்கின்றனர். அதே சமயம், உலகின் எந்த நாட்டிலும் இப்படி உள் விவகாரம் நடந்தால் ‘பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று உபதேசிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் இப்போது தனக்கே தலைவலி வந்த பிறகு ஏன் மூலையில் ஒடுங்கப் பார்க்கிறது என்று ராஜீய வட்டாரங்கள் கேலி பேசுகின்றன.

 

அடுத்தது அமெரிக்காவா?

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மார்டி அத்திசாரியும் இந்த நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்திருக்கிறார். “கேடலோனியாவுக்கு சுதந்திரம் என்பது முட்டாள்தனமான சூதாட்டம், இதனால் மற்றவர்களுக்குப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன; அதே வேளை ஸ்பெயின் அரசு நிகழ்த்தியுள்ள எதிர்வினை முரட்டுத்தனமாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள உள்விவகாரம் இப்போது வேறு சில பிரிவினை எண்ணமுள்ள மாகாணங்களுக்கும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்திலும் இப்போது பிரிவினையாளர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர். அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராகவும் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் பெரும்பாலானவர்கள் வாக்களித்த மாகாணம் கலிபோர்னியா. அமெரிக்காவிலும் மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து செல்ல அரசியல் சட்டம் வழிவகுத்துள்ளது. ஆனால் அதற்கு நாடாளுமன்றத்தில் திரட்ட வேண்டிய ஆதரவு வாக்குகளைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல.

கலிபோர்னியா மட்டும் வாக்களித்து பிரிந்து சென்றுவிட முடியாது. கேடலோனிய முடிவை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது பிரிட்டன். பிரிட்டனில் ஸ்காட்லாந்துக்காரர்கள் இப்போதே முண்டா தட்ட ஆரம்பித்துவிட்டனர். ஸ்பெயினிலேயே பிரிவினைகோரும் பாஸ்க் பகுதியினர், கேடலோனியர்களைப் போலச் செயல்படத் தவறிவிட்டோமே என்று வருத்தப்படுகின்றனர். மொத்தத்தில், கேடலோனியாவில் அடுத்து நிகழவிருக்கும் சம்பவங்கள் மேலும் சில நாடுகளில் எதிரொலிக்கும் என்றே எதிர் பார்க்கலாம்!

- வ.ரங்காசாரி,

http://tamil.thehindu.com/opinion/columns/article20377911.ece

Share this post


Link to post
Share on other sites

கேடலோனியா - கால்பந்து மட்டும் பிரச்னை அல்ல... இது 400 ஆண்டு கால தனிநாடு தாகம்! #Catalonia #MustRead #VikatanExclusive

 

ஆர்.கே நகருக்கு தற்போது ஏன் எம்.எல்.ஏ இல்லை என்றுகூட யோசிக்காத பலரும், எங்கோ இருக்கும் கேடலோனியாவின் (#Catalonia) சுதந்திரத்தைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் நடக்கும் மொழி, மத அடக்குமுறைகளைக் கண்டு ஏங்காதவனும், ஸ்பெயின், கேடலோனியா மீது திணித்திருக்கும் அடக்குமுறையைக் கண்டு கலங்குகிறான். காரணம், கால்பந்து... பார்சிலோனா. அவனைப் பொறுத்தவரையில், மெஸ்ஸி எனும் சாம்பியன் ஸ்பானிஷ் லா லிகா தொடரில் ஆட முடியாமல் போகலாம், ரொனால்டோ vs மெஸ்ஸி போட்டிகளைக் காண முடியாமல் போகலாம். கால்பந்துக்காக மட்டும் ஸ்பெயினைக் கவனிக்கும் உலக மக்களுக்கு அதுமட்டுமே பிரச்னை. ஆனால், கேடலோனியா என்பது பல நூற்றாண்டு வரலாறு. கலாசாரம், மொழி, ரத்தம், போர் அனைத்தும் கலந்தது. அரசியல் ஊறியது. அதைக் கால்பந்து அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றது உண்மைதான். அதைத் தாண்டிய பகைமை கேடலோனிய மக்களின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது என்பதே உண்மை.

#catalonia

 

கேடலோனியா என்பது, ஸ்பெயினில் இருக்கும் ஒரு தன்னாட்சி சமூகம். ஸ்பெயின், கூட்டாட்சி அரசியலமைப்புகொண்ட தேசம் அல்ல. 17 தன்னாட்சி சமூகங்கள்கொண்ட ஒருமுக அரசு. ஒரு கொடி, `ஜெனரலிடேட்' எனப்படும் தனி ஜனாதிபதி, ஓர் அரசியல் சாசனம் என வித்தியாசமான அமைப்பைக்கொண்டது ஸ்பெயினின் அரசியலமைப்பு. அந்த 17 தன்னாட்சி சமூகங்களில் ஒன்றுதான் மாட்ரிட், கேடலோனியா போன்றவை.

அக்டோபர் 27-ம் தேதி `கேடலோனியா, இனி சுதந்தர நாடு' என அறிவிக்கிறார் அதன் அதிபர் கார்லஸ் புயூடிமான்ட். பல நூறு ஆண்டுகளாக இருக்கும் பிரச்னை, சில ஆண்டுகளாக தீவிரம் அடைய, `ஒருநாள் அது விஸ்வரூபம் எடுக்கும்' என்று எதிர்பார்த்திருந்தது ஸ்பெயின். உடனடியாக கேடலோனியாவின் தன்னாட்சி அதிகாரத்தை ரத்துசெய்து, அதன் நாடாளுமன்றத்தைக் கலைத்து, துணைப் பிரதமர் சொராயா சேன்ஸிடம் பொறுப்புகளை ஒப்படைத்துள்ளார் பிரதமர் மரியானோ ரஜோய்.

அக்டோபர் முதல் தேதி கேடலோனியாவின் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு பற்றிய அறிவிப்பு வந்ததும், அதைத் தடுக்க ஸ்பெயின் அரசு அப்போதே பல முயற்சிகள் மேற்கொண்டது. ஸ்பெயின் போலீஸ் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 893 பேர்  உள்பட 1,324 பேர் காயமடைந்தனர். அவற்றையும் மீறி நடந்த ஓட்டெடுப்பில் வாக்களிக்க உரிமையுள்ள 53,13,564 பேரில் 22,86,217 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதில் 2.83 சதவிகித ஓட்டுகள் செல்லாமல்போக, மிச்ச ஓட்டுகளில் 92.01 சதவிகிதம் ஓட்டுகள் சுதந்திரத்துக்குச் சாதகமாகக் கிடைத்தன. அதன் அடிப்படையில் புயூடிமான்ட் சுதந்திர அறிவிப்பை வெளியிட்டதும், ஆர்ட்டிகிள் 155-யை நடைமுறைக்குக் கொண்டுவந்து, கேடலோனிய நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டது ஸ்பெயின். 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை. புயூடிமான்ட் இப்போது பெல்ஜியத்தில் இருப்பதாகத் தகவல். இப்போது கிட்டத்தட்ட கேடலோனியாவில் ராணுவ ஆட்சி. இன்னொரு சுதந்திரப் போராட்டம் அதிகாரத்தின் அடக்குமுறையால் அமுக்கப்படுகிறது.

#catalonia

அதன் அடையாளங்களை எல்லாம் அடக்கிவைத்து, இத்தனை ஆண்டுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களை லேசில் விட விருப்பமில்லை. கேடலோனியா தனி நாடானால், ஸ்பெயினில் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியால் ஸ்பெயின் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டது. இன்னும் அவர்களால் முழுமையாக அதிலிருந்து மீள முடியவில்லை. இந்த நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவிகிதம் பங்களிக்கும் கேடலோனியாவை விடுவது என்பது அவர்களைக் கடுமையாக பாதிக்கும். கேடலோனியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஆண்டு ஒன்றுக்கு 314 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது கிட்டத்தட்ட ஹாங்காங், போர்ச்சுகல் நாடுகளைவிட அதிகம். ஸ்பெயினில் உள்ள தன்னாட்சி சமூகங்களில் வணிகரீதியாக அதிக செல்வாக்கு உடைய இடம் என்பதால் கேடலோனியா, ஸ்பெயினுக்கு நிச்சயம் தேவை.

கேடலோனியா ஏன் தனி நாடாகத் துடிக்கிறது? இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுந்த பிரச்னை. 15-ம் நூற்றாண்டில், ஆரகான் பகுதியை ஆண்ட மன்னர் ஃபெர்டினான்டும், கேடலோனியாவின் அரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடக்க, இரு ராஜ்ஜியங்களும் இணைக்கப்பட்டன. அதன் பிறகு மற்ற மாகாணங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இணைய உருவானதுதான் ஸ்பெயின். ஆனால், கேடலோனியா தனித்துவம் வாய்ந்த பகுதி. கலாசாரம், உணவு, பண்டிகைகள், பழக்கவழக்கம் என அனைத்திலும் தனித்துவம்கொண்ட பகுதி. தங்களின் கலாசாரத்தைப் பெருமையாகக் கருதுபவர்கள். திருவிழாக்களில், மக்கள் ஒருவர்மேல் ஒருவர் நின்று கட்டடம்போல் அமைக்கும் `கேஸ்டெல்'-க்கு பேடன்ட் வாங்கிவைத்துள்ளனர். அந்த அளவுக்கு கலாசாரத்தைப் பேணுபவர்கள். இவை அனைத்தையும் தாண்டிய மிகப்பெரிய பிரச்னை, மொழி! 

#catalonia

கேடலோனிய மக்களின் தாய்மொழி ஸ்பானிஷ் அல்ல, கேடலன். ஆனால், அங்கு ஸ்பானிஷைத் திணித்தது ஸ்பெயின் அரசு. 1970-ம் ஆண்டில் பிரான்சிஸ்கோ பிரான்கோவின் சர்வாதிகார ஆட்சி நடந்தவரையில், கேடலோனியாவில் ஆட்சிமொழியாக... ஏன் கல்வி மொழியாகக்கூட கேடலன் அனுமதிக்கப்படவில்லை. கல்விமுறையிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டது. அந்த அளவுக்கு கேடலோனியா மீது அவருக்கு வெறுப்பு.

அந்தக் காலகட்டத்தில்தான் கேடலோனியாவின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. தங்கள் மொழியை, தங்கள் உரிமைகளைக் காக்க, பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியது கேடலன் நாடாளுமன்றம். கேடலன் மொழியைப் பள்ளிகளில் கட்டாய மொழியாக்கினர், ஆட்சிமொழியாக்கினர். கேடலன் மொழியைப் பேசாதவர்களுக்கு அபராதம் விதிப்பதுகூட நடந்தது. 1979-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கேடலன் மட்டுமே கல்வி பயிலும் மொழியாக இருந்தது. வாரத்துக்கு மூன்று மணி நேரம் மட்டும் ஸ்பானிஷ் வகுப்புகள் நடந்தன. அந்த அளவுக்கு தங்கள் மொழியைக் காப்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தனர். பிறகு சமஉரிமைப் பிரச்னைகள் தலைதூக்க, பின்னாளில் ஸ்பானிஷும் கல்வி பயிலும் மொழியாகச் சேர்க்கப்பட்டது.

ஸ்பெயினின் தலைநகராக விளங்கியதால் மாட்ரிட், கேடலோனியா இரண்டு சமூகங்களுக்கும் இயல்பாகவே உரசல் இருந்துகொண்டே இருந்தது. இரண்டு சமூகங்களும் நேர்எதிர் கொள்கைகளை உடையவை. மாட்ரிட் – பழைமைவாதத்தை விரும்பும் வலதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பகுதி. கேடலோனியாவோ, குடியரசுத்துவத்தை ஆதரிக்கும் இடதுசாரிக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் பகுதி. முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளால் இந்தப் பகுதி மக்களுக்கு அரசியல்ரீதியாக புகைச்சல் அதிகரித்தது. கேடலோனிய மக்கள், மாற்றத்தை மிகவும் விரும்புபவர்கள்; உழைப்பாளிகள். உழைக்கும் விலங்கான கழுதையை, தங்கள் சின்னமாகக்கொண்டவர்கள். விளைவு, உலகின் மாபெரும் டெக்ஸ்டைல் நகராக மாறியது பார்சிலோனா. தொழிற்புரட்சியில் கேடலோனியா பல படிகள் முன்னேறியது. மாட்ரிட்வாசிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாட்ரிட்டின் பெரும் தலைகளாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வலுப்பெற்றது மாட்ரிட் - கேடலோனியா மோதல்.     

#Catalonia

கேடலோனிய பெயர்கொண்ட குழந்தைகளுக்கு சர்ச்சில் ஞானஸ்நானம் கொடுக்க மறுத்த கொடுமைகளும் அரங்கேறின. என்னதான் கலாசாரமாக இருந்தாலும், காளைகளைக் கொல்லவேண்டியிருப்பதால் 2012-ம் ஆண்டு காளைச் சண்டைக்குத் தடைவிதித்தது கேடலோனியா. ஆனால், காளைகள் கொல்லப்படாத `புல் - டாட்ஜிங்' (Bull Dodging) எனப்படும் முறைக்கு அவர்கள் தடைவிதிக்கவில்லை. cataloniaகேடலோனிய அரசு விதித்ததாலேயே, 2016-ம் ஆண்டில் அந்தத் தடைக்குத் தடைவிதித்தது ஸ்பெயின் உச்ச நீதிமன்றம். ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட் பகுதிகளில் நடக்கும் கால்பந்து போட்டிகளுக்கு கேடலோனியாவின் சுதந்திரக் கொடி எடுத்துவர அடிக்கடி தடைவிதிக்கப்படும். 2016-ம் ஆண்டு அப்படியொரு தடை விதிக்கப்பட்டது. ஆனால், கேடலோனிய மக்கள் அதை சாதாரணமாக விட்டுவிடவில்லை.  தங்களைப்போலவே, 2014-ம் ஆண்டு பிரிட்டனிலிருந்து பிரிய முயற்சி மேற்கொண்டு தோற்றுப்போன ஸ்காட்லாந்து நாட்டின் கொடியை எடுத்துச்சென்று மைதானத்தில் தங்களின் ஸ்பெயின் எதிர்ப்பை அறிவித்தனர்.

இவ்வாறு, அரசியல் எதிர்ப்புகளைக் காட்டுவதற்கான கருவியாகப் பயன்பட்டதுதான் கால்பந்து. காரணம், போர் சூழாத இன்றைய உலகில் மேட்ரிட்டை கேடலோனியா எதிர்க்கக்கூடிய களம் கால்பந்து களம் மட்டும்தான். முதலில் கேடலோனியாவின் தலைநகர், பார்சிலோனாவுக்கும் ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டுக்கும் எதிரான சுதந்திரப் போராக இருந்தது. கால்பந்து அரங்கத்தில் பார்சிலோனா கால்பந்து க்ளப்புக்கும் ரியல் மாட்ரிட் கால்பந்து க்ளப்புக்கும் இடையே `எல் கிளாசிகோ' எனும் கால்பந்துப் போராக மாறியது. மாட்ரிட் நகரில் மட்டுமே ரியல் மாட்ரிட், அத்லெடிகோ மாட்ரிட் என இரண்டு அணிகள் உள்ளன. ஆனால், ரியல் மாட்ரிட் மீது மட்டும் ஏன் பார்சிலோனா ரசிகர்களுக்கு அவ்வளவு வெறுப்பு? இதற்கும்  பிரான்சிஸ்கோ பிரான்கோ என்ற அந்தச் சர்வாதிகாரிதான் காரணம்.

1930-களில் ஸ்பெயினின் அரசியல், மிக மோசமான நிலையைச் சந்தித்தது. இதனால் 1936-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் மூண்டது. தேசியவாதிகள் ஒரு பிரிவாகவும் குடியரசுவாதிகள் ஒரு பிரிவாகவும் போரிட்டனர். அந்தச் சமயம் கேடலோனியா மாட்ரிட்டுக்கு எதிராகச் செயல்பட்டதால் ஜெனரல் பிரான்கோ, மாட்ரிட் அணிக்குப் பல்வேறு வழிகளில் பக்கபலமாக இருந்தார். இந்நிலையில், 1936-ம் ஆண்டு பார்சிலோனா கால்பந்து க்ளப்பின் தலைவராக இருந்த ஜோசம் சன்யோல், பிரான்கோவின் படையால் கைதுசெய்யப்பட்டு, பிறகு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம், மாட்ரிட் மீதான கேடலோனிய மக்களின் வெறுப்பை பன்மடங்கு அதிகப்படுத்தியது. `மோர்தன் எ க்ளப்’ (More than a club) என்னும் மோடோவை பார்சிலோனா க்ளப் நிர்வாகம் வெளியிட, மாட்ரிட் கொதித்தெழுந்தது.

1943-ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம், பார்சிலோனாவின் தன்மானத்தைச் சீண்டியது. கோபா டெல் ரே அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட்  அணிகள் நேருக்குநேர் மோதின. பார்சிலோனாவில் நடந்த முதல் சுற்றில் 3 - 0 என மாட்ரிட் தோல்வியடைந்தது. மூன்று கோல்களும் தவறாக வழங்கப்பட்டவை என மாட்ரிட் அணி குறை கூறியது. அதுமட்டுமின்றி, பார்கா ரசிகர்கள் போட்டியின்போது விசில் ஊதி மாட்ரிட் வீரர்களை வெறுப்பேற்றினார்கள். விசில் ஊதுவது, ஸ்பெயின் கலாசாரத்தில்  அவமதிப்புக்குச் சமம். மாட்ரிட்டில் நடந்த இரண்டாம் சுற்றில் மாட்ரிட் மொத்தமாக பார்காவைப் பழிதீர்த்தது. பார்சிலோனா ரசிகர்கள் மைதானத்துக்கு வர தடை, மாட்ரிட் ரசிகர்கள் பார்கா வீரர்களைக் கேலிசெய்ய டிக்கெட்டோடு விசில் விநியோகம், மைதானத்துக்குள் பறந்த காசுகள், பாட்டில்கள், போலீஸால் மிரட்டப்பட்ட பார்சிலோனா பயிற்சியாளர் என அது வேறு லெவல் விளையாட்டு. பெரிதும் பாதிக்கப்பட்ட பார்சிலோனா அணி 11 - 1 என அவமானப்படுத்தப்பட்டது. அந்நிகழ்வு அந்த அணியின் வரலாற்றிலும், அதன் ரசிகர்களின் மனதிலும் அழியா வடுவாக இன்னும் இருக்கத்தான் செய்கிறது.

கால்பந்து வீரர்களின் ஒப்பந்தம்கூட இந்தப் பகுதி மக்களுக்கு இடையே பகைமையை அதிகரித்தது. 1953-ம் ஆண்டில் `பிளான்ட் ஏரோ’ எனப் புகழப்பட்ட அர்ஜென்டின ஜாம்பவான் டி ஸ்டெஃபானோவை ஒப்பந்தம் செய்ய இரு அணிகளும் மல்லுக்கட்டின. மீண்டும் பிரான்கோவின் தலையீட்டின் காரணமாக சூழ்நிலை ரியலுக்குச் சாதகமாக அமைந்தது. டி ஸ்டெஃபானோ மாட்ரிட் அணிக்காக 396 போட்டிகளில் 307 கோல்களை அடித்து நொறுக்கினார். அவர் அங்கு விளையாடிய 11 ஆண்டுகாலத்தில் அந்த அணி 8 லா லிகா, 1 கோபா டெல் ரே, 1 இன்டர்-கான்டினென்டல் கோப்பைகளை வென்றது. இதை எல்லாம் தாண்டி ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கோப்பையைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வென்று மாபெரும் சக்தியாக தன்னை நிலைநிறுத்தியது. இதை கேடலோனிய மக்களால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? 2000-ம் ஆண்டு பார்சிலோனா வீரர் லூயிஸ் ஃபிகோ, சர்ச்சைக்குரிய முறையில் ரியல் மாட்ரிட்டுக்கு மாறியபோதும் பூதாகாரப் பிரச்னை வெடித்தது. இரு அணிகளும் மோதிய போட்டியில் ஃபிகோ மீது பன்றித் தலைகளையெல்லாம் வீசினார்கள் பார்சிலோனா ரசிகர்கள். 

figo

இந்தப் பிரச்னைகள் எளிதில் முடிந்துவிடவில்லை. பார்சிலோனா வீரர் ஜெரார்ட் பிக்குவுக்கும், மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸுக்கும் ஆகவே ஆகாது. இருவரும் ஸ்பெயின் தேசிய அணிக்காக ஆடியவர்கள். ஆனால், மோதிக்கொண்டே இருப்பார்கள். சமூக வலைதளங்களின் தாக்கம், இந்த மோதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டது. இவர்கள் அரசியல் காழ்ப்புணர்வால் மோதிக்கொள்ள, இதைப் புரிந்துகொள்ளாத மெஸ்ஸி - ரொனால்டோ ரசிகர்களும் கோதாவில் இறங்கி, இந்த ஸ்பானிஷ் சுதந்திரப் போராட்டத்தை உலக அரங்குக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். ஆட்டத்தைக் காணும்போது வர்ணனையாளர்களின் குரலை மட்டுமே கேட்பதால், மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களின் சத்தம் நம்மவர்களுக்குக் கேட்பதில்லை. அவர்கள் அணியின் வீரர்களின் பெயர்களைச் சொல்வதாக நினைத்துக்கொள்கின்றனர். அந்த அரங்குகளில் அமர்ந்து கேட்டால்தான், அது ஓர் இனத்தின் சுதந்திரப் போர் முழக்கம் என்பது புரியும்.

சரி, எதற்காக விளையாட்டைப் பற்றி இவ்வளவு விவாதிக்க வேண்டும்? ஏனெனில், பார்சிலோனாவின் அடையாளத்தை மாற்றியது, கேடலோனிய சுதந்திரப் போர் ஸ்பெயினுக்குள் முடங்காமல் உலக அரங்குக்குப் போனது என அனைத்துக்கும் காரணம், விளையாட்டுதான். இதில் கால்பந்துக்கு மட்டுமல்ல, ஒலிம்பிக்குக்கும் பங்கு உண்டு. 1992-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடரை நடத்தும் உரிமைத்தைப் பெற்றது பார்சிலோனா. அதற்குக் காரணம், அன்றைய தேதியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்த ஜுவான் ஏண்டோனியோ சமாரன்ச். உலகமே கூடும் இந்த விளையாட்டை நல்லபடியாக நடத்துவதுதான் ஸ்பெயினுக்கு வெற்றி. பார்சிலோனாவை தயார்செய்ய, மாட்ரிட்டின் கஜானா திறந்தது. பிரான்கோவின் சர்வாதிகார ஆட்சியின்போது தொழிற்சாலைகளின் கழிவுத்தொட்டிபோல் மாற்றப்பட்ட பார்சிலோனா, பொலிவடைந்தது; புதுமையடைந்தது. 

barcelonaஅதுவரை பார்சிலோனாவை `கால்பந்து நகரம்', `டெக்ஸ்டைல் நகரம்' என்று மட்டுமே அறிந்திருந்த உலகம், அதன் கலாசாரத்தைத் தெரிந்துகொண்டது. காரணம், ஒலிம்பிக் வெறும் விளையாட்டல்ல; அது ஒரு தேசத்தின் கலாசாரத்தின் பிரதிபலிப்பு. கேடலோனியாவின் கலாசாரத்தை உலகுக்கு உரைத்தது பார்சிலோனா ஒலிம்பிக். இதன் தொடக்க விழாவில் ஸ்பெயின் தேசியக்கொடியோடு சேர்ந்து கேடலோனியாவின் கொடிக்கும் அன்றைய மன்னர் ஜுவான் கார்லோஸ் மரியாதை செலுத்தவேண்டியதாயிற்று. அப்போதே பார்சிலோனா ஒலிம்பிக் தொடர் வெற்றியடைந்தது!

கேடலோனியாவின் சுதந்திரப் போராட்டம் ஒன்றும் 20-ம் நூற்றாண்டில் தொடங்கிய கதையல்ல. அவர்கள் ஸ்பெயினோடு இணைந்த காலத்திலிருந்தே தனி நாடாவதற்காகப் போராடிவருகின்றனர். 1635-ம் ஆண்டு முதல் 1659-ம் ஆண்டு வரை நடந்த பிரெஞ்சு - ஸ்பானிஷ் போரில், பிரெஞ்சுப் படையோடு கைகோத்தது. போரில் தோல்வி. ஸ்பெயினால் கைப்பற்றப்பட்டது. 17-ம் நூற்றாண்டில், ஸ்பெயின், தெற்கு நெதர்லாந்து, இத்தாலியின் சில பகுதிகளோடு பல ஊர்களை ஆண்டுவந்தவர், மன்னர் இரண்டாம் சார்லஸ். அவர் 1700-ம் ஆண்டு மரணம் அடைந்தார். வாரிசு இல்லாத அவரின் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுவதில் போட்டிபோட்டன அண்டை நாடுகள். பிரிட்டன், ஆஸ்திரியா, ஹாலந்து மூன்று தேசங்களும் இணைந்து பிரான்ஸுக்கு எதிராகப் போர் தொடுக்க, 14 ஆண்டுகள் நடந்த அந்தப் பெரும் யுத்தத்தில், பிரிட்டன் பக்கம் நின்றது கேடலோனியா. போர் முடிந்ததும் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக, பிரான்ஸுக்கு எதிராக நின்ற காரணத்தால் ஸ்பெயின் ராஜ்ஜியத்தின் அங்கமாக்கப்பட்டது. ஸ்பானிஷ் சிவில் வார் சமயம், பிரான்கோவின் படைக்கு எதிராக நிற்க, 3,500 பேர் கொல்லப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது. இப்படி நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கிறது இந்த மக்களின் போராட்டம்.

#Catalonia

 

ஆயுதம் கொண்டு நடத்திய போரிலும் சரி, ஜனநாயகத்தைப் பின்பற்றி குரல் கொடுத்தபோதும் சரி, அதிகாரத்தின் பிடியில் சிக்கி இன்னொரு சுதந்திரப் போரும் அமைதியாக நசுங்கிக்கொண்டிருக்கிறது. இது வெறும் கால்பந்து கௌரவத்துக்கான யுத்தம் அல்ல; தன் மொழி, கலாசாரம், அடையாளங்களுக்காகப் போராடும் ஓர் இனத்தின் போர். இந்தியப் பெருங்கடலில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நினைத்த ஓர் இனத்தைப் போன்று, இன்று மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த இனம் போராடுகிறது. அதிகாரம், போர்களை முடக்கலாம்; போராட்டங்களை அடக்க முடியாது!

https://www.vikatan.com/news/sports/107499-catalonian-independence-is-a-400-year-protest.html

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this