Jump to content

விவேக் குவித்த சொத்துகள்; மலைத்து போன வருமான வரித்துறை..!


Recommended Posts

'பாக்யராஜுக்கு அப்புறம் அந்த வீட்ல வாடகைக்கு இருக்கோம்!’ - ரெய்டின்போது அசராத விவேக் ஜெயராமன்

 
 

Vivek_interview_2_12331.jpg

Chennai: 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூருரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அ.தி.மு.க (அம்மா) அணியின் பொதுச் செயலாளர் சசிகலா அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்களான விவேக், கிருஷ்ணப்ரியா, திவாகரன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான அதிகாரிகள் ஐந்து நாள்கள் தொடர்ச்சியாக நடத்திய சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள், தங்க, வைர நகைகள் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஐந்து நாள்கள் சோதனைக்குப் பின்னர் விவேக்கை விசாரணைக்கு அழைத்துச் சென்றது வருமான வரித்துறை. இரவு வரை நீட்டித்த இந்த விசாரணையின்போது விவேக் அசராமல் பதில் அளித்துள்ளார்.

 

இது குறித்து மன்னார்குடி உறவினர்கள் சிலரிடம் பேசியபோது, "ஐந்து நாள்களில் நடந்த விசாரணையின்போது விவேக் தொடர்புடைய ஜாஸ் சினிமா, ஜெயா டிவி உள்ளிட்டவற்றில் நடந்த சோதனையில் பெரியதாக எதுவும் கைப்பற்றப்படவில்லை. அமெரிக்க டாலர்கள் அதிகப்படியாகக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அதிகாரிகள் வந்தார்கள். அதிகப்படியாக அமெரிக்க டாலர்கள் இருந்தால் அமலாக்கத்துறை விசாரணையைத் துரிதப்படுத்தி கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்வதுதான் அவர்களின் நோக்கமாக இருந்தது. அமெரிக்க டாலர்கள் விவேக்கின் நண்பர்கள் சிலரிடம் வீட்டில் இருக்கிறதைத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் குறிவைத்து அதிகாரிகள் போனார்கள். ஆனால், டாலர்கள் எதுவும் பெரிதாகச் சிக்கவில்லை. முதல் மூன்றுநாள் சோதனைக்குப் பின்னர் அடுத்த இரண்டு நாள் விவேக்கைக் கடுமையாக மனரீதியான டார்ச்சருக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். "எங்களுக்கு மேலிடத்திலிருந்து தகவல் வரும் வரைக்கும் 100 நாள்கள் ஆனாலும் உங்கள் வீட்டில்தான் தங்கியிருப்போம்" என்று அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். ஜாஸ் சினிமாவில் சோதனை நடந்துகொண்டிருந்தபோது, "இது எங்களது நூறாவது சோதனை" என்று கூறி அதிகாரிகள் கேக் வெட்டிக்கொண்டாடியிருக்கிறார்கள். கடைசி இரண்டு நாள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த விவேக்கை எழுப்பி கேள்வி கேட்பது, பிறகு "ஜெயலலிதா உங்கள் பெயரில் வாங்கிய சொத்தை எங்கு வைத்திருக்கிறீர்கள் "என்று கேட்டுள்ளனர். "அதெல்லாம் இல்ல சார்" என்று கூறியிருக்கிறார். பின்னர் தூங்கப்போங்க என்று கூறிவிட்டு அரைமணி நேரம் கழித்து மீண்டும் எழுப்பி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். இரவு முழுவதும் தூக்கம் இல்லாமல் கூப்பிட்டுக் கூப்பிட்டு கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்துள்ளனர். 'பெங்களூருவில் உங்கள் பெயரில் சொத்து வாங்கினீங்களே அந்த டாக்மென்டை எடுத்துவாங்க' என்று கேள்விகேட்டுக்கொண்டே இருந்துள்ளனர். 'அப்படியெல்லாம் இல்ல சார்' என்று கூறியிருக்கிறார். 'இல்ல, லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொன்னாங்களே' என்று கூறியிருக்கிறார்கள். "சார் அப்படியெல்லாம் இல்ல" என்று கூறிய விவேக்கிடம் கேள்விக்குமேல் கேள்விகேட்டு உளவியல் ரீதியாகக் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். மன்னார்குடியில் ஏழ்மையில் உள்ள விவேக்கின் நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள். விவேக்கின் மனைவி கீர்த்தனா தங்க, வைர நகைகளுக்கெல்லாம் கணக்கு கேட்டுள்ளனர். பில் அனைத்தும் சரியாக இருந்திருக்கிறது. டி.டி.வி.தினகரன், திவாகரன், விவேக் இந்த மூன்றுபேரும் ஆக்டிவ் அரசியலுக்கு வரக் கூடாது அப்படிங்கிற நோக்கத்துக்காகதான் இந்தச் சோதனை நடந்திருக்கிறது.

jaya_TV_Office_12273.jpg

மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டில் சோதனை நடந்தபோது வீட்டின் சொத்துப் பத்திரங்களைக் கொண்டு வாங்க என்று சொல்லியிருக்கிறார்கள். "சொத்துப்பத்திரம் எல்லாம் கிடையாது சார். எனக்கு முன்னாடி நடிகர் பாக்யராஜ் இந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவருக்குப் பிறகு நான் வாடகைக்கு குடியிருக்கிறேன். இது என்னுடைய சொந்தவீடு இல்லை" என்று கூறியிருக்கிறார். இதை அதிகாரிகள், நம்பவே இல்லை. கிருஷ்ணப்ரியா, இளவரசி மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களெல்லாம் கூடுதல் சிக்கல்களை உருவாக்கும். நண்பர்களிடமிருந்து வாக்குமூலம் வாங்கி விவேக்கை சிக்க வைக்கணும். ஜெயா டிவியை முடக்க வேண்டும். தினகரன், திவாகரன் எல்லாவற்றையும் விட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. குறிப்பாக, அரசியல் ரீதியாக திவாகரன் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்ட எல்லா இடத்திலும் அவர்தான் வருகிறார். அவரை ஆக்டிவ் அரசியலிலிருந்து முடக்கதான் இந்தச் சோதனையின் முக்கிய கட்டமாக இருக்கிறது. இதை அனைத்தையும் எதிர்கொண்டு நாங்கள் வருவோம்" என்றனர். 

ஐ.டி அதிகாரிகள் தரப்பில், "இந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருக்கிறது. பினாமி என்ற பெயரில் உள்ள சொத்துகள் யார் பெயரில் எப்போது வாங்கப்பட்டது என்பது குறித்த அனைத்து ரிப்போர்ட் (பஞ்சநாமா ரிப்போர்ட்) எங்கெங்கு கைப்பற்றப்பட்டிருக்கிறது என்ற அனைத்து விவரத்தையும் வைத்துக்கொண்டும் விவேக் யார் யார் பெயருக்கு எப்போது சொத்துகளை மாற்றினார். திவாகரன் சொத்துகளைப் பராமரிப்பது யார் என்பது உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மிகத் துல்லியமாகக் குறிவைத்து இந்த ஆபரேஷன் நடந்திருக்கிறது. இது தொடக்கம்தான். கார்டனின் முழு கஜானாவை கொண்டுவரும் வரை எங்கள் ரெய்டு ஓயப்போவதில்லை" என்கின்றனர்.

 

விவேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அதிகாரிகள் கூறுகையில், என்ன விவேக் எதுக்குமே கேள்வி கேட்டால் இயல்பாகவே பதில் சொல்லிக்கொண்டிருங்கீங்க என்றோம். "சார், ஸ்கூல் படிக்கிற காலத்தில போயஸ்கார்டனில்தான் தங்கியிருந்தேன். அப்பா இறந்தபிறகு அம்மாவையும் அக்காவையும் நான் கைக்குழந்தையாக இருந்தபோது ஜெயலலிதா கூட்டிட்டு வந்துட்டாங்க. வீட்டில் இருக்கும்போது 91-96-ல் ஜெயலலிதாவின் கார்டன் வீட்டில் சோதனை நடந்தபோது நான் இங்கேதான் சுத்திக்கிட்டு கிடப்பேன். அதிகாரிகள் நாள் முழுவதும் சோதனை செஞ்சிக்கிட்டுயிருப்பாங்க. டையடால் நான் தூங்கிவிடுவேன். சோதனை முடிந்தபின்னர் அதிகாரிகள் என்னை எழுப்பிவிட்டு போவாங்க. இந்தமாதிரி பல ரெய்டுகளைப் பார்த்திருக்கிறேன். உங்கள் ரெய்டு பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கவில்லை" என்று அசராமல் கூறியதாகத் தெரிவித்தனர்.

https://www.vikatan.com/news/coverstory/107862-we-live-in-this-house-for-rent-says-vivek-jayaramman-during-it-raids.html

Link to comment
Share on other sites

ரெய்டு நோக்கம் ’சுபம்’... சசிகலா உறவுகளிடையே பிரிவினை!

 
 

தினகரன், சசிகலா, விவேக்

“தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் ஒரேநேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்து 187 இடங்களில் ரெய்டு நடத்தியது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை”. சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட குடும்பங்களில், நண்பர்கள் வீடுகளில், அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமானவரித் துறையினர் சொன்ன வாசகம்தான் அது.  

 

இந்தச் சோதனையில் வருமானவரித் துறையின் ஒட்டுமொத்த பார்வையும் சசிகலா அண்ணன் ஜெயராமன் மகன் விவேக் குடும்பத்தின் மீதுதான் இருந்தது. தமிழகத்தில் ஐந்து நாள்களாக நடந்த இந்தச் சோதனையில் 1,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான கணக்கில் வராத சொத்து ஆவணங்களும், கிலோ கணக்கில் தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் ரெய்டு நடக்காதபோதும், புதுச்சேரி அருகேயுள்ள அவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் ரெய்டு நடந்தது. ரெய்டுக்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய தினகரன், “இது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. தற்போது கட்சியைக் கைப்பற்ற நினைப்பவர்களின் தூண்டுதலின்பேரில்தான் இந்த ரெய்டு நடைபெற்றுள்ளது. இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு பயப்படமாட்டோம். எங்களை அரசியலைவிட்டு ஒதுக்கிவைக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் சதி நிறைவேறாது. எங்களின் கட்சி சிறிய அளவிலானது என்று கேலி செய்கின்றனர். எங்களின் பலம் தேர்தல் வரும்போது தெரியும்” என்றார். 

அதேபோல், விவேக் ஜெயராமன் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கும் ‘ஜெயா டி.வி.’, ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ், ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் அலுவலகங்கள், விவேக் வீடு, அவரின் சகோதரி கிருஷ்ணபிரியா வீடு, விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீடு, விவேக் குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் மிடாஸ் சாராயத் தொழிற்சாலை, கொடநாடு எஸ்டேட் போன்றவற்றிலும் வருமானவரித் துறை அதிகாரிகளின் சோதனை நீடித்தது. 

சசிகலா, தினகரன்

இந்தச் சோதனைக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த விவேக், “வருமானவரித் துறை சோதனையின்போது, நான் பொறுப்பு வகிக்கும் நிறுவனங்களின் கணக்கு, வழக்குகள் குறித்து விளக்கம் கேட்டனர். அதற்குப் பதில் சொன்னேன். திருமணத்தின்போது எனது மனைவிக்குப் போடப்பட்ட நகை குறித்து விவரம் கேட்டனர். நான் முறையாகக் கணக்குக்காட்டி வரி கட்டுகிறேன். இந்தச் சோதனையில் விளக்கம் கேட்டுள்ளார்கள், அவ்வளவுதான். பதில் சொல்லி இருக்கிறேன். இனி எப்போது அழைத்தாலும் பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

சசிகலா தரப்பு குடும்பத்தில் சோதனை நடத்தப்பட்டிருப்பது குறித்து மன்னார்குடி உறவுகளிடம் பேசினோம். “உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் நடராசனைப் பார்க்க, சசிகலா பரோலில் வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் விவேக். தினகரன் ஏற்கெனவே இருமுறை சசிகலாவுக்குப் பரோல் கோரி முயற்சி செய்தபோதிலும், அப்போது அது தள்ளிப்போனது. ஆனால், விவேக் சார்பில், தமிழகக் காவல் துறையின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாநில அரசின் சார்பில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே சசிகலாவுக்குப் பரோல் கிடைத்தது. மேலும், சசிகலா எங்கு தங்க வேண்டும், யாரைச் சந்திக்க வேண்டும் என எல்லாவற்றையும் விவேக்தான் முடிவுசெய்தார். அத்துடன், மீண்டும் சசிகலாவைப் பத்திரமாகச் சிறைக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்வரை விவேக் அனைத்தையும் கவனித்துக்கொண்டார். அவரின் இந்த நடவடிக்கைகள் சசிகலாவின் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சமயத்தில், தினகரன் சார்பில், ஓ.பன்னீர்செல்வம் மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் புகார் வாசிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து கட்சியைக் காப்பாற்றத்தான் தனியாளாகப் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றும், குடும்பத்தில் இருப்பவர்களே தனக்குக் குடைச்சல் கொடுக்கும் வேலைகளைச் செய்கிறார்கள் என்றும் புகார் சொல்லப்பட்டது. அதேபோல் விவேக்கும், திவாகரனின் மகன் ஜெயானந்தும் புகார் வாசித்துள்ளனர். இதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வந்த சசிகலா, கட்சியைத் தினகரனிடமும், சொத்துகள் தொடர்பான நிர்வாகத்தை விவேக்கிடமும் ஒப்படைத்துள்ளார். இதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்” என்றனர். 

சசிகலா, விவேக்

சசிகலாவின் இந்தக் கருத்தை மன்னார்குடி உறவுகள் அப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், அவர்களுக்குள் பனிமோதல் நீடித்து வருவதாகவே கூறப்படுகிறது. தினகரன் மட்டுமே அ.தி.மு.க. அம்மா அணியில் முன்னிலைப்படுத்தப்படுவதை, விவேக் தரப்பு விரும்பவில்லை என்று தெரிகிறது. அவர்களுக்குள் ஏதோ மனக்கசப்பு உள்ளதாகவும், நிர்வாகத்திலும், அரசியலிலும் இரண்டு தரப்பும் தங்கள் தலையீட்டை அதிகரிக்க நினைத்ததாகவும் விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற சூழலில், பணப் பரிமாற்றமும் நடைபெற்றதாகவும், அது குடும்பத்துக்குள் ஏற்கெனவே இருந்த பிரச்னைகளை மேலும் அதிகரிக்கச் செய்து, விவேக், தினகரன் என இரண்டு அணிகளாகப் பிரியும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

இதனைத் தெரிந்துகொண்ட இரு தரப்பிலும் உள்ள சிலர், திட்டமிட்டு வருமானவரித் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததன்பேரிலேயே இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ‘ஜெயா டி.வி.’ யில், தினகரன் ஆதரவு செய்திகளையும் தமிழக அரசுக்கு எதிரான செய்திகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தாலும், விவேக்குக்கும், தினகரனுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் நிலவியதாம். ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்ற பழமொழிக்கேற்ப சசிகலா குடும்பத்துக்குள்ளேயே அவரின் சொந்தங்கள் இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இதைப் பயன்படுத்தி இந்தச் சோதனைமூலம் மேலும் அவர்களைப் பலவீனப்படுத்திவிடலாம் என்பது தற்போதைய ஆட்சியாளர்களின் கணக்கு.

 

இதனை உணர்ந்து, இரு தரப்பினரும் நடந்து கொண்டால் சரி... அ.தி.மு.க-வில்தான் இரு அணிகள் என்றால், தற்போது மன்னார்குடி உறவுகளிலும் அணிகள் உருவாகி இருப்பது, சசிகலா குடும்பத்தினர் பலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

https://www.vikatan.com/news/tamilnadu/107891-has-the-incometax-raid-brought-down-a-crack-in-sasikalas-family.html

Link to comment
Share on other sites

 வருமான,வரித்துறையினரின்,பிடியில்,சசிகலா,சிக்குகிறார்!

வருமான வரித் துறையினரின் பிடியில், சசிகலா சிக்குகிறார். இத்துறையின் அதிரடியில்
சிக்கிய அவரின் உறவினர்கள், 'இனிமேல் தாங்காது' என்பது போல், 'போட்டுக் கொடுத்த' தகவல்களால், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம், விரைவில்
விசாரணை நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக, சசி குடும்பத்தினரின் வீடுகள், நிறுவனங்களில் நடந்த, ஐந்து நாள் சோதனையில் அள்ளிய, 1,430 கோடி ரூபாய் ஆவணங்கள் விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

 வருமான,வரித்துறையினரின்,பிடியில்,சசிகலா,சிக்குகிறார்!

சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன், திவாகரன், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலாவின் வீடுகள்; ஜெயா, 'டிவி' மற்றும், 'மிடாஸ்' மதுபான ஆலை என, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட இடங்களில், நவ., 9 முதல் ஐந்து நாட்கள், வருமான வரி சோதனை நடந்தது. அதையடுத்து, விவேக், பூங்குன்றன், சிவகுமார், கிருஷ்ணபிரியா, அவரின் கணவர், கார்த்திகேயன், ஷகிலா, அவரின் கணவர், ராஜராஜன் உள்ளிட்டோர், வருமான வரித்துறை விசாரணைக்கு, நேரில் ஆஜராகி வருகின்றனர்.

இதில், முதல் கட்டமாக, 1,430 கோடி ரூபாய் அளவுக்கு, கணக்கில் காட்டாத சொத்துகள்; 12 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தவிர, ஏராளமான சொத்து ஆவணங்கள், பினாமி சொத்து பரிவர்த்தனைகள் தொடர்பான கோப்பு களையும், அதிகாரிகள் அள்ளி வந்துள்ளனர். அவற்றை அலசி ஆராய்ந்த திலும், விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா உள்ளிட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இருந்தும், இந்த விவகாரத்தில், திடீர் திருப்பம் ஏற்பட்டு உள்ளது.சசி கும்பல் சேர்த்த பணத்தை,

அவரது சகோதரர், திவாகரன், பல மட்டங்களில் முதலீடு செய்து உள்ளது, விசாரணையில் தெரிய வந்தது.

ஆனால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்ற விசாரணையில், சசிகலாவை தான் கை காட்டி உள்ளனர். 'ஒட்டுமொத்த குடும்பத்தினரின் அனைத்து வித வருவாய்க்கும், சொத்து குவிப்புக்கும் மூலக்காரணம், அவர் தான்' என, விசாரணையில் கூறியதாக தெரிய வந்துள்ளது.
 

வருமான வரித்துறையினர் கூறியதாவது:


சோதனை மேற்கொண்ட இடத்தில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில், சசிகலாவை விசாரிக்கலாம் என, முடிவெடுத்து உள்ளோம். உடனடியாக இல்லாவிட்டாலும், அவரிடம் விசாரித்தே தீர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக, பெங்களூரு சிறைக்கு சென்று, சசிகலாவுக்கு, 'சம்மன்' கொடுத்து விசாரிக்க உள்ளோம்.

அவருடன் சேர்த்து, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடமும் விசாரணை நடைபெறும். அந்த விசாரணை, மேலும் சில புதிய திருப்பங்களுக்கு வழிவகுக்க வாய்ப்பு உள்ளது. சசி குடும்பத்தினர், வேறு எங்கெல்லாம் ஆவணங்களை பதுக்கியுள்ளனர்; வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளனர் என்பது போன்ற பல கேள்விகளுக்கு, சசிகலா, இளவரசியிடம் நடக்கும் விசாரணையில் விடை கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

விவேக் பேட்டி: தினகரன் அதிர்ச்சி


'வருமான வரி சோதனையில், அரசியல் உள்நோக்கம் இல்லை' என, இளவரசியின் வாரிசுகள் கூறியது, சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாக, குரல் கொடுத்த, அரசியல் தலைவர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர் கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், நிறுவனங்கள் என, 187 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள்,ஒரே நேரத்தில்

 

சோதனை நடத்தினர். ஐந்து நாட்கள் சோதனை நடந்தது. சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனைக்கு, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர், எதிர்ப்பு தெரிவித்தனர்.

'பா.ஜ., அரசு, வருமான வரித்துறையை, தவறாக பயன்படுத்துகிறது. சசிகலா குடும்பத்தினர் வீடுகளில், திடீரென நடத்தப்படும் சோதனைக்கு, அரசியல் உள் நோக்கம் தான் காரணம்' என, தெரிவித்தனர். இதையடுத்து, தங்கள் குடும்பத்திற்கு ஆதரவாக, குரல் கொடுத்த, அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களைக் கூறி, அவர்களுக்கு, தினகரன் நன்றி தெரிவித்தார்.

ஆனால், நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய, இளவரசியின் மகன், விவேக்கும், நேற்று பேசிய இளவரசியின் மகள், கிருஷ்ணபிரியாவும், 'வருமான வரி சோதனையில், அரசியல் உள்நோக்கம்
எதுவும் இல்லை' என, தெரிவித்தனர்.

சோதனையில் சிக்கியவர்களே, சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கிடையாது என்று
கூறியது, அவர்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய, அரசியல் தலைவர்களுக்கும், தினகரனுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

புலம்பிய பூங்குன்றன்!


சென்னை, போயஸ் இல்லத்தில், ஜெயலலிதா வின் உதவியாளராக இருந்த, பூங்குன்றனின் வீட்டில், ஐந்து நாட்கள் சோதனை நடந்தது. அதில், சில சொத்து ஆவணங்கள் சிக்கின. 'நான், ஜெயலலிதாவின் அரசியல் உதவியாளர். அரசியல் ரீதியான நிகழ்ச்சிகளை மட்டும் தான், நான் கவனித்து வந்தேன்' என, புலம்பியுள்ளார்.
 

'லாக்கர்'கள் திறப்பு!


'ஐந்து நாள் சோதனையில்,சசி குடும்பத்தினரின், 15 வங்கி லாக்கர்களுக்கு, 'சீல்' வைத்து இருந்தோம். தற்போது, அவற்றை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நாளை முதல், அவற்றை திறந்து, கோப்புகள், நகைகள்ஆகியவற்றை மதிப்பிடவுள்ளோம்' என, வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1897589

Link to comment
Share on other sites

சிக்கியவர்களும் தப்பியவர்களும்!

 

 

மெகா ரெய்டில் சசிகலா குடும்பத்தினர் குறிவைக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை. சொல்லப்போனால், அவர்கள் இதை ஓரளவுக்கு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், இந்த ரெய்டின்போது, சம்பந்தமே இல்லாத சில இடங்களைப் புரட்டிப்போட்டுத் தேடியது வருமானவரித் துறை. யார் அவர்கள்... எதற்காக அவர்கள் சோதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்?

p46d.jpg

p46b.jpgமிஸ் ஆன ராவணன்!

சசிகலாவின் ஆசியோடு 2001 முதல் 12 ஆண்டுகள் கட்சி, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்குடன் வலம் வந்தவர் ராவணன். சசிகலாவின் சித்தப்பா மருமகனான இவர் சொல்வதுதான் கொங்கு மண்டல அ.தி.மு.க-வில் சட்டமாக இருந்தது. கொடநாடு எஸ்டேட், கர்ஸன் எஸ்டேட் உள்பட கொங்கு மண்டலத்தில் உள்ள சொத்துகள் எல்லாம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆனால், ரெய்டில் இவர் சிக்கவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவால்தான், வருமானவரிச் சோதனையிலிருந்து ராவணன் தப்பினாராம். இது தொடர்பாக விசாரித்தபோது, ‘‘2011-ல், இவர் பார்வைபட்டு அமைச்சரானவர்களில் முக்கியமானவர்கள் இப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர். இப்போதும் தொடரும் இவர்களின் நெருக்கம்தான் ராவணனைக் காப்பாற்றியது’’ என்றார்கள் விவரம் அறிந்தவர்கள். p46e.jpgஅ.தி.மு.க சீனியர்களோ, ‘‘ராவணன் இப்போது பல் பிடுங்கப்பட்ட பாம்பு. அவரிடம் சோதனை நடத்துவது அவசியமற்றது’’ என்றனர்.

எம்.எல்.ஏ தப்பினார்... உதவியாளர் சிக்கினார்!

தமிழகம் முழுக்க ரெய்டு தொடங்கியதற்கு மறுநாள், தேனி கம்பம் நகரிலுள்ள தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வனின் அலுவலக உதவியாளர் கனகராஜ் வீட்டில் சோதனை போடப்பட்டது. கம்பம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகேயுள்ள ஒரு வீட்டின் மேல்தளத்தில் வாடகைக்குக் குடியிருக்கிறார் கனகராஜ். வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், கனகராஜை ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டிலிருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கே 10 நிமிட விசாரிப்புக்குப் பிறகு, மீண்டும் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார் கனகராஜ். மாலை 3.15 மணிக்குத் தொடங்கிய சோதனை, இரவு 9.30 மணி வரை நீடித்தது.

p46f.jpg

மிடாஸிலிருந்து நகைக்கடைக்கு...

சசிகலா குடும்ப ரெய்டுகளின் ஓர் அங்கமாக, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி என்ற நகைக்கடையிலும், அதன் கிளைகள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களிலும் நான்கு நாள்கள் சோதனைகள் நடந்தன. இந்த நகைக்கடை நிறுவனம், புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான மஞ்சக்குப்பத்தில் ‘ஓஷன் ஸ்ப்ரே’ என்ற பெயரில் சுமார் 200 கோடி ரூபாயில் சொகுசு ரிசார்ட்ஸைக் கட்டியது. இதில் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால், கடும் நஷ்டத்தைச் சந்தித்தது நிறுவனம். இந்த ரிசார்ட்ஸ்,  மிடாஸ் நிறுவன பிரமுகர் ஒருவரின் பெயரில் கைமாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதை மோப்பம் பிடித்துதான் குறி வைத்துள்ளனர்.

p46a.jpgஜோதிடர் போர்வையில் தரகர்!

கடலூர் ஜோதிடர் சந்திரசேகர் வீட்டில் மூன்று நாள்களாக சோதனை நடந்தது. அவ்வளவாக வெளியே தெரியாத மனிதர், இந்த ரெய்டால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். பல முக்கியப் புள்ளிகளுக்கு இவர்தான் ஆஸ்தான ஜோதிடர். இவர், பங்குச்சந்தை தரகு மற்றும் ரியல் எஸ்டேட் தரகு ஆகியவற்றிலும் ஈடுபட்டுவருபவர். இவரை தினகரனுக்கு அறிமுகப்படுத்தியவர், அமைச்சர் எம்.சி.சம்பத். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரு கோயிலைக் கட்டினார் தினகரன். ‘இது வேண்டாம். சிறைவாசத்துக்கு வழிவகுக்கும்’ என்றார் ஜோதிடர் சந்திரசேகர். அவர் பேச்சை மீறியதால், சிறைக்குப் போனார் தினகரன். அதன்பிறகு தினகரன், இவரைக் கேட்டே பல முடிவுகள் எடுக்கிறாராம்.

சமீபத்தில், பல சொத்துகள் கைமாறியதில், சந்திரசேகரின் பங்கு இருப்பதாக வருமானவரித் துறை சந்தேகிக்கிறது.  ஒரு நகைக்கடைக் குழுமத்துக்குச் சொந்தமான சொகுசு ரிசார்ட்ஸ், சசிகலா குடும்பத்தினருக்குக் கைமாறியதில் இவர் பங்கு என்ன என்பதைத்தான் விசாரித்தார்களாம்.  

p46.jpgராஜநடை போட்ட ராஜேஸ்வரன்!

தஞ்சையில் சசிகலா உறவுகளுக்கு அப்பால், ரெய்டில் சிக்கிய ஒரே நபர் ராஜேஸ்வரன். இவர் வீட்டில் இரண்டு நாள்கள் சோதனை நடைபெற்றது. டாக்டர் வெங்கடேஷின் பள்ளிக்கால நண்பர் இவர். சசிகலா குடும்ப நிகழ்ச்சிகளில் முதல் ஆளாக நின்று எல்லா வேலைகளையும் செய்வார். ‘‘அமைச்சர்கள் பலரிடம், ‘தான் சசிகலா குடும்பத்துக்கு உறவினர்’ எனச் சொல்லியே பல காரியங்களை சாதித்துள்ளார்’’ என்கிறார்கள். கவுன்சிலராக இருந்தவர்தான் என்றாலும், அமைச்சர் தோரணையில் நிர்வாகிகளிடம் அதட்டலாகவே பேசுவாராம்.

தினகரன் தஞ்சாவூர் வந்தால், அவருக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது இவர்தான். ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்தபோதும், பிறகு தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் புதுச்சேரியிலும் கர்நாடகாவின் குடகிலும் தங்க வைக்கப்பட்டிருந்தபோதும் அவர்களைக் ‘கவனித்து’க் கொண்டவர்களில் இவர் முக்கியமானவர். இவருடைய வீட்டில் சிக்கிய சில ஆவணங்கள், சசிகலா குடும்பத்துக்குப் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள் உள்விவரம் அறிந்தவர்கள்.

உதவிய உதயகுமார்!

உதயகுமார், மன்னார்குடியில் பிரபல வழக்கறிஞர். அமைச்சர் காமராஜின் ஒன்றுவிட்ட அக்கா மகன். காமராஜ், திவாகரனுக்கு எதிரணியில் இருக்கிறார். ஆனாலும், மன்னார்குடி திவாகரன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்தபோது, உதயகுமார் வீட்டிலும் நுழைந்தனர். அதாவது எடப்பாடி அணியைச் சேர்ந்தவர் வீட்டிலேயே ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது. மன்னார்குடியில் முக்கியப் புள்ளிகள் சொத்து வாங்குவதாகவும் விற்பதாகவும் இருந்தால், உதயகுமாரிடம்தான் ஆலோசனை கேட்பார்கள். ஆவணங்களைச் சரிபார்ப்பதில் இவர் கில்லாடி. அதுதொடர்பாகவே, உதயகுமாரிடம் விசாரணை நடந்ததாம்.

இவர் போலவே ரெய்டில் சிக்கிய இன்னொருவர், பொன் வாசுகி ராம். அமைச்சர் காமராஜின் தீவிர ஆதரவாளர். அமைச்சர் தொடர்பான அரசு கான்ட்ராக்ட் வேலைகளை இவர்தான் செய்துவருகிறார். மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருக்கும் இவர் வீட்டில், கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நேரத்திலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

திவாகரனும் அமைச்சர் காமராஜும் எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும், ‘இருவருக்கும் ரகசிய நெருக்கம் இருக்கிறதோ’ என்ற சந்தேகத்தை இந்த ரெய்டு ஏற்படுத்திவிட்டது. அடுத்து காமராஜும் குறி வைக்கப்படலாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

ரெய்டின் அடுத்தகட்டம் என்ன... விவேக் ஜெயராமன் கைது செய்யப்படுவாரா..? #ITRaid #JayaTV

 
 

சசிகலா குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் அவர்களின் அலுவலகங்கள் என 187 இடங்களில் 1,800 அதிகாரிகள் அண்மையில் வருமான வரிச் சோதனை நடத்திய செய்தி, ஒருவாரமாக அகில இந்திய சேனல்களில் தலைப்புச் செய்தியாக இருந்தன. டெல்லி தலைமை வருமான வரித்துறையே ஒவ்வொரு நாளும் சோதனையில் கிடைத்த ஆவணங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தது. சசிலாவுக்கு எதிர் முகாமில் இருந்தவர்களும் இந்த சோதனைகளை உன்னிப்பாக கவனித்து வந்தார்கள். 

விவேக் சசிகலா

 

ஜெயலலிதா, தன் வளர்ப்பு மகனாக சசிகலாவின் அக்காள் மகன் வி.என். சுதாகரனை அறிவித்து, நாடே திரும்பிப் பார்க்கும்வகையில் அவருக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடத்திவைத்தது, பலத்த அதிர்வலைகளை உருவாக்கியது. அப்போது செய்த ஆடம்பரங்கள், சொத்துக்களை வாங்கிக் குவித்தது போன்றவை எல்லாம் பின்னாளில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்குகளாகப் பாய்ந்தன. தி.மு.க. ஆட்சியில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து நடத்தப்பட்ட வழக்குகள், பல கட்டங்களைக் கடந்து, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயில் தண்டனை விதித்தது. பின்னர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, ஜெயலலிதா உள்பட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பின்னர், இந்த வழக்கில் கீழ்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விதித்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இப்போது, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு ஜெயிலில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். சசிகலா, இளவரசியை கம்பி எண்ணவைத்த சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்ட விசாரணையில் இருந்தபோதுதான், இளவரசியின் மகன் விவேக், புதிய அதிகாரமையமாக உருவெடுத்தார். 

2015-ம் ஆண்டு, விவேக் தொடங்கிய ஜாஸ் சினிமாஸ் தமிழக அரசியலில் அதிர்வலைகளை உருவாக்கியது. தொழில் நிறுவனங்களில் விவேக் செய்த முதலீடுகள் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அப்போது கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால், எதைப்பற்றியும் கவலைப்படாமல், 25 வயதில் விவேக் ஜெயராமனின் வளர்ச்சி 'கிடுகிடுவென்று' உயர்ந்தது. சசிகலாவின் உறவுகள் அனைவரையும் 'ஓவர்டேக்' செய்துவிட்டு, விவேக்கின் வளர்ச்சி அசுரவேகத்தில் இருந்தது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது, விவேக் மீது ஏராளமான புகார் வெளியானதால் அவரின் திருமணம் சென்னையில் நடந்தபோதிலும், ஜெயலலிதா நேரில் போகவில்லை. ஆனாலும், சசிகலாவின் முழு ஆசிர்வாதம் இருந்ததால் விவேக்கின் வளர்ச்சிக்கு யாராலும் முட்டுக்கட்டை போடமுடியவில்லை. இளவரசியின் மகன் விவேக்கின் அசுர வளர்ச்சியே சசிகலா குடும்பத்திற்கு தற்போது தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. 

விவேக்

'ஜெயலலிதா மரணம்.., அ.தி.மு.க-வில் பிளவு, சசிகலா சிறையில் அடைப்பு', என அடுத்தடுத்து ஏற்பட்ட சரிவுகள், சசிகலா குடும்பத்தினரிடையே அரசியல் அதிகாரம் தொடர்பாக புயல் கிளம்பியது. அரசியலில் இருந்து படிப்படியாக சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டது. இந்த நிலையில்தான், சசிகலா குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக வாங்கிக்குவித்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள், போலி நிறுவனங்கள், பினாமிகள் பட்டியல் என்று அடுத்தடுத்து கிளம்பிய புகார்கள், பொருளாதார உளவுப் பிரிவுக்கு பறந்தன. அந்தப் புகார்களைப் பார்த்து பொருளாதார உளவுப் பிரிவே மலைத்துப்போனது.

இந்தப் புகார்களை எல்லாம் பல மாதங்களாக ரகசியமாகக் கண்காணித்த பிறகே, வருமான வரித்துறையினர், நவம்பர் 9-ம் தேதி அன்று அதிரடியாக களத்தில் இறங்கி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனை குறித்து இதுவரை வருமான வரித்துறை சார்பில் வெளிப்படையான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. "ஏன் இந்த மவுனம்" என்று வருமான வரித்துறையின் மூத்த அதிகாரிகள் சிலரை நாம் நேரில் சென்று சந்தித்தோம். 'வருமான வரித்துறை சோதனை குறித்து அதிகாரபூர்வமாகத் தகவல் வெளியிட நீதிமன்றங்கள் விதித்த தடை அமலில் உள்ளது' என்று கூறிய அதிகாரிகள், 'பெயர் வெளியிடக் கூடாது' என்ற நிபந்தனையோடு சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர். அதை அப்படியே தருகிறோம்.

''வரி ஏய்ப்பு குறித்து உறுதியான தகவல் கிடைத்ததால்தான், இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. ஐந்து நாட்கள்வரை நீடித்த விசாரணையில் 1,430 கோடி ரூபாய் மதிப்பளவுக்கு சொத்து ஆவணங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன. ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் சிக்கி உள்ளன. 65-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்துள்ளோம். அவற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. 15 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 187 இடங்களில் ரெய்டு நடந்தபோது, பல இடங்களைச் சீல் வைத்துள்ளோம். அந்த இடங்களை திறந்துப் பார்த்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

போயஸ் கார்டன் வீட்டில் கைப்பற்றப்பட்ட லேப் டாப், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் மூலம் சசிகலா குடும்பத்தினர் நடத்தியதாக சொல்லிக் கொள்ளும் நிறுவனங்களின் டின் எண்கள் கிடைத்துள்ளன. அவை மூலம் நடந்த பண பரிவர்த்தனை விவரங்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றியும், ஏற்கனவே நடந்த சோதனைகள் குறித்தும் சம்மன் அனுப்பி வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் அழைத்து முறையான விசாரணையை சம்பந்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ள இருக்கிறோம். சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்ல; யார் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாலும் எங்களுக்கு வரும் புகாரில் அடிப்படை ஆதாரம் இருந்தால் எங்கள் கடமையைச் செய்வோம். வெளிநாட்டில் பதுக்கினாலும் எங்களுக்குத் தகவல் கொடுக்கலாம்.

ஜாஸ் சினிமா

இப்போது பெரிய பணக்காரர்களே பினாமியாக இருக்கிறார்கள். 'சசிகலா குடும்பத்தில் யார்-யார் பினாமியாக இருக்கின்றனர்? அவர்களுக்கு எங்கெல்லாம் சொத்துகள் இருக்கின்றன? பினாமிகளாக இருப்போர் எந்த நாட்டில் இருக்கிறார்கள்? எங்கெல்லாம் சொத்துகள் உள்ளன?' என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் மீது பினாமி தடுப்புச்  சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுக்கப்படும். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை  மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்தால், பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

 

 

வருமான வரி சோதனையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும் அதிகாரம், நீதிமன்ற உத்தரவின்பேரில் செயல்படுத்தப்படும். முன்பெல்லாம் வருமான வரித்துறை சோதனை முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கம்  மற்றும் பல விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். அதுதொடர்பாக நிறைய வழக்குகள், நீதிமன்றத்தில் போடப்பட்டு, வருமான வரி ரெய்டு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட எங்களுக்கு அனுமதி இல்லை. எனவேதான், எங்களால் ரெய்டு தொடர்பான தகவல்களை வெளியிட முடியவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே நாங்கள் செயல்படுகிறோம். தற்போது பெங்களுரு சிறையில் உள்ள சசிகலா, இளவரசியிடமும் தேவைப்பட்டால் விசாரணை நடத்துவோம்" என்றனர். 

 

ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட  இடங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான விவரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, அவர்களை மீண்டும் நேரில் அழைப்பதற்கும், நீதிமன்ற அனுமதியோடு, கஸ்டடி எடுத்து விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளியே கொண்டுவருவதற்கும் வருமான வரித்துறை தயாராகி வருகிறது. வருமான வரித்துறையின், அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி சசிகலா குடும்பம் மட்டுமல்ல... ஒட்டுமொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

https://www.vikatan.com/news/coverstory/108595-what-is-the-next-move-in-jaya-tv-it-raid-will-vivek-jayaraman-be-arrested.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.