Jump to content

“வீடியோ கடையும்... போயஸ் தொடர்பும்..!” - சசிகலா வீழ்ந்த கதை


Recommended Posts

“வீடியோ கடையும்... போயஸ் தொடர்பும்..!” - சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 1

 

Sasikala_22033.jpg

Chennai: 

ஜெயலலிதா மரணித்தபோது, மகாபாரதத்தில் சகுனி ஆடிய சதுரங்கத்தைவிட மோசமான அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவோடு 30 ஆண்டு காலமாக இருந்த சசிகலா, அவரிடம் கற்ற அரசியலை, அவருக்கு பின்னால் ஆட ஆரம்பித்தார். - ‘சசிகலா ஜாதகம்’ என்ற பெயரில் ஜூனியர் விகடனில் எழுதப்பட்ட தொடரின் முதல் அத்தியாயத்தின் சாரம்சம் இது! 

ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி அரண் அமைத்தவர்கள், ஜெயலலிதாவை எப்படி சுற்றி வளைத்தார்கள்? அரசியல் அரிச்சுவடியை சசிகலா எங்கே கற்றார்... அவருக்குப் பின்னால் இருந்து இயக்கும் சசிகலா குடும்பத்தினர் செய்த மாயங்கள் என்ன... எப்படி வந்தார்கள்... வளர்ந்தார்கள்? என்பதை ‘சசிகலா ஜாதகம்’ தொடரில் 80 அத்தியாயங்களில் எழுதினோம். ஜூ.வி-யில் முடிந்த ‘சசிகலா ஜாதகம்’ தொடரின் 2.0 வெர்ஷன் இது. ஜூ.வி-யில் வெளியான 80 அத்தியாங்களின் முன்கதை தெரிந்தால்தான் சசி பாரதத்தை புரிந்துகொள்ள முடியும். அதனால் சில அத்தியாயங்களில் விரிகிறது முன்கதை சுருக்கம். 

விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதிக்கு, சுந்தரவதனன், விநோதகன், ஜெயராமன், வனிதாமணி, சசிகலா, திவாகரன் என 6 வாரிசுகள். இந்த வாரிசுகளும் அவர்களின் வாரிசுகளும் பெண் எடுத்தவர்களும் கொடுத்தவர்களும் சேர்ந்து மன்னார்குடி மகா சமுத்திரம் ஆனது. இவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரின் கட்சியை ஆட்டிப்படைத்து வருகிறார்கள்.

திருத்துறைப்பூண்டி போர்டு ஹைஸ்கூலில் 10-ம் வகுப்பு வரை படித்த சசிகலாவை எம்.நடராசனுக்கு மணமுடித்து வைக்கிறார்கள். அரசு மக்கள் தொடர்பு அதிகாரியான நடராசனுக்கு, அரசு அதிகாரிகள் பலரும் பழக்கம். அதில் கடலூர் கலெக்டராக இருந்த சந்திரலேகாவும் ஒருவர். ஜெயலலிதா அ.தி.மு.க-வில் சேர்ந்தபோது அவரின் பொதுக்கூட்டத்தை கவர் செய்வதற்கான சான்ஸ் சந்திரலேகா மூலம் சசிகலாவுக்கு அடிக்கிறது. ‘வினோத் வீடியோ விஷன்’ என்ற பெயரில் வீடியோ கடையை நடத்திவந்த சசிகலா, ஜெயலலிதாவின் பொதுக்கூட்ட கவரேஜ்களை செய்து கொடுத்ததோடு படங்களின் வீடியோ கேசட்டுகளையும் கொடுக்கிறார். அந்தத் தொடர்பு போயஸ் கார்டனுக்குள் சசிகலாவை கால் பதிக்க வைக்கிறது.

 

எம்.ஜி.ஆர் திரைப்பட நகரத் தொடக்க விழாவில்

 

பெங்களூரு ஜிண்டால் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சசிகலா பார்த்து நலம் விசாரிக்கிறார்.  ‘‘உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டதுமே நலம் விசாரித்துவிட்டு வரலாம் என கிளம்பிவந்துட்டேன். உங்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் நான் இங்கே இருந்து உதவக் காத்திருக்கிறேன்’’ என சொன்னதும் ஜெயலலிதா நெகிழ்ந்து போனார். இந்த சம்பவம்தான் சசிகலா மீதான நம்பிக்கையை ஜெயலலிதா மனதில் விதைத்தது.

அப்போது ஜெயலலிதாவுக்கு பி.ஏ-வாக இருந்த பிரேமாவுக்கு அப்பன்டீஸ் ஆபரேஷன் நடக்க... அந்த சந்தர்ப்பத்தைப் சசிகலா பயன்படுத்திக் கொண்டார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க ஜெயலலிதா டெல்லி போனபோது அவருக்கு உதவியாக போன சசிகலா, பிரேமாவின் இடத்தைப் பிடித்துக்கொண்டார். நடராசனின் மீடியா உதவி, வீடியோ கவரேஜ், கேசட் விடு தூது, பெங்களூரு மருத்துமனையில் ஜெயலலிதாவுக்கு நலம் விசாரிப்பு எல்லாம் சேர்ந்து ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம் பிடித்தார் சசிகலா. 

கட்சிக்குள் ஜெயலலிதாவைக் கொண்டுவந்த எம்.ஜி.ஆர், அவரை கண்காணிக்க நினைத்தார். ‘ஜெயலலிதா அருகிலேயே ஓர் ஒற்றர் இருந்தால் நல்லது’ என நினைத்தபோது, சசிகலாவின் பெயர் அடிப்பட்டது. அவர் அரசு அதிகாரி நடராசனின் மனைவி என தெரிந்ததும், அவரையே உளவாளியாக நியமித்தார் எம்.ஜி.ஆர். ஒரு பெண்ணைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை உளவுபார்த்தார். சசிகலாவின் என்ட்ரிக்கு முன்பே போயஸ் கார்டனில் வேலை பார்த்தவர்கள் எல்லாம், சசிகலாவால் விரட்டியடிக்கப்பட்டார்கள். ஜெயலலிதாவின் அம்மா சந்தியா காலத்தில் இருந்தே வேலை பார்த்து வந்த மாதவன் நாயர், ஜெயலலிதாவின் கார் டிரைவர் ஜெயமணி, ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதிக் கொடுத்த வலம்புரி ஜான், ஜெயலலிதாவின் ஆரம்பகாலத் தோழி லீலா என யாரும் தப்பவில்லை.

போயஸ் கார்டனில் சசிகலா குடிபுகுவதற்கு முன்பு, ஆழ்வார்பேட்டை பீமண்ண கார்டன் தெருவில்தான் சசிகலா வசித்துவந்தார். அதே தெருவில்தான் ‘வினோத் வீடியோ விஷ’னும் இருந்தது. ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து போயஸ் கார்டனுக்கு ஆட்டோ ரிக்‌ஷாவில்தான் சசிகலா வருவார். அந்த ஆட்டோ ரிக்‌ஷாவுக்கான கட்டணம் ஐந்து ரூபாயை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தின் மேனேஜர் துரையும் கேஷியர் சாமிநாதனும்தான் சசிகலாவுக்குக் கொடுப்பார்கள். இவர்களையும் பிறகு சசிகலா விட்டு வைக்கவில்லை. கடைசியில் ஜெயலலிதாவின் ரத்த உறவுகளும்கூட தப்பவில்லை. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மனைவி விஜயலட்சுமியோடு சென்னையில் வாழ்ந்துவந்தார். அண்ணன் மகள் தீபாவுக்கு அந்தப் பெயரை வைத்தவரே ஜெயலலிதாதான். ‘போயஸ் கார்டனில் பிறந்தவர்’ என்பதால் தீபா மீது ஜெயலலிதாவுக்குப் பாசம் அதிகம். கார்டனில் செல்லப்பிள்ளையாக இருந்தார் தீபா. இவர்களையும் ஜெயலலிதாவோடு நெருங்கவிடாமல் தடுத்தார் சசிகலா. இது ஒரு கட்டத்தில் தீபாவின் திருமணத்துக்கு ஜெயலலிதாவை வராவிடாத அளவுக்கு போனது. அண்ணி விஜயலட்சுமியின் இறப்புக்குக்கூட ஜெயலலிதா வரவில்லை. 

“எங்கள் குடும்பத்தைப் பற்றி அத்தையிடம் தவறாகச் சொல்லி நெகட்டிவான செய்திகளைப் பரப்பி, ரத்த பந்தங்களிடையே பிரிவை ஏற்படுத்திவிட்டார்கள். ரத்த உறவுகளான எங்களை மட்டுமே சந்திக்கவிடாமல் தடுப்பது எதற்காக என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் உள்ளே வந்தால் அவர்களின் ரிலேஷன் கட்டாகிவிடும் என நினைக்கிறார்கள்.” என சொல்கிறார் தீபா.

(தொடரும்...)

http://www.vikatan.com/news/coverstory/107132-the-raise-and-fall-of-sasikala-of-admk-series-part-1.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

கஞ்சா வழக்கு கலாசாரம் ஆரம்பம்! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 2

 
 

சசிகலா

‘அ.தி.மு.க-வின் சட்ட மூளை’ என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர் கே.சுப்பிரமணியம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்து, பிறகு இனைந்த நேரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்டு கொடுத்ததில் கே.சுப்பிரமணியத்துக்கு பெரிய ரோல் இருந்தது. ஜெயலலிதா, 1991-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோது கே.சுப்பிரமணியம், அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தினரனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதலில் கே.சுப்பிரமணியதை சசிகலா குடும்பம் விரட்டியடித்தது.

 

ஜெயக்குமார் திருமணம் (புகைப்படத்தின் இடது பக்கம் ஜெயலலிதா)


கே.சுப்பிரமணியத்துக்கு நேர்ந்த கொடுமைதான் வழக்கறிஞர் ஜோதிக்கும் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த அவரது வழக்குகள் பலவற்றில் வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதி. குறிப்பாக டான்சி வழக்கில் ஜோதியின் வாதம்தான் ஜெயலலிதாவின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஜோதியிடமும் தினகரன் மோதினார். இதற்கு காரணம் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கையும் தினகரன் சம்மந்தப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாக சேர்த்ததுதான்.

இந்த இரண்டு வழக்கையும் சேர்த்தால் வழக்கு இன்னும் கொஞ்ச காலத்துக்கு இழுத்தடிக்கப்படும் என நினைத்தார் ஜோதி. ஆனால், இது தினகரனுக்கு பிடிக்கவில்லை. ஜோதியை அசிங்கமான வார்த்தைகளில் தினகரன் திட்ட... ‘‘என்னைக் கொலை செய்துவிடுவேன் என தினகரன் மிரட்டினார். மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். என் பெற்றோரைக் கேவலமாக விமர்சித்தார்’’ எனக் கொதித்தார் ஜோதி. அவர் கொளுத்திய தீ தினகரனின் பொருளாளர் பதவியைக் காவு வாங்கியது. தினகரனின் உண்மை முகத்தை ஜெயலலிதாவிடம் அம்பலப்படுத்தியதற்காக, ஜோதியை பழிதீர்க்க சசிகலா நடத்திய சித்து விளையாட்டில், ஜோதி கட்டம் கட்டப்பட்டார். 

22p2_08356.jpgஉதவியாளர்கள், உறவுகள், நண்பர்கள், நம்பிக்கையாளர்கள் என ஜெயலலிதாவின் உள்ளத்தில் இருந்தவர்கள் சசிகலாவின் ‘சதி’ராட்டத்தில் ஒவ்வொருவராகச் சாய்ந்து கொண்டிருந்தார்கள். அதில் மேகநாதனும் ஒருவர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருக்கு உதவியாக இருந்தவர்தான் மேகநாதன். சசிகலா வரவால் போயஸ் கார்டனில் இருந்து தி.நகர் சிவஞானம் தெருவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்திருந்தார் ஜெயக்குமார். மேகநாதனுக்குத் திருமணமாகி குழந்தையும் இருந்தது. உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஜெயக்குமாருக்குச் சகல பணிவிடைகளையும் மேகநாதன்தான் செய்து வந்தார். அதனால் அவர்மீது ஜெயக்குமாருக்குப் பற்றுதல் அதிகம். தான் கார்டனுக்குப் போக முடியாத சூழலில் மேகநாதன் மூலமாகத்தான் ஜெயலலிதாவைத் தொடர்புகொள்வார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாவதையும் செல்வாக்கு பெறுவதையும் சசிகலா குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயக்குமார் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மீடியேட்டராகச் செயல்பட்ட மேகநாதன்மீது கஞ்சா வழக்கு பாய்ந்தது. மேகநாதன் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனு போட்டார். அதில் இருந்த வாசகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘ஜெயக்குமார் குடும்பத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கம் உண்டாக்க என் கணவர் முயன்றார். அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் உத்தரவின் பேரில்தான் போலீஸ் அதிகாரிகள், என் கணவர்மீது கஞ்சா வைத்திருப்பதாகப் பொய் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்’ என மனுவில் சொல்லியிருந்தார்.

மேகநாதனை மீட்கும் முயற்சிகள் எடுத்தார் ஜெயக்குமார். முதல்வர் வீட்டுக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டும், 22p3_08038.jpgஜெயலலிதாவுடன் பேச முடியவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரம். கார்டனுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேச ஜெயக்குமார் முயன்றுகொண்டிருந்ததால், அவர் வீட்டு டெலிபோன் இணைப்பே துண்டிக்கப்பட்டது. மேகநாதன் கைதுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தன. தன்னை சிறையில் வந்து பார்த்த பத்திரிகையாளர் ஒருவரிடம், ‘‘சசிகலாவுக்கு என்னைப் பிடிக்காது. போயஸ் கார்டனுக்கு நான் வருவதையும் அவர் விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடராசனுடன் நான் போயஸ் கார்டனுக்குள் போனேன். உடனே ‘ஏன் மேகநாதனையெல்லாம் உள்ளே அழைத்து வருகிறீர்கள்?’ என நடராசனிடம் சசிகலா சத்தம் போட்டார். சசிகலாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் பணிவாகத்தான் பேசுவேன். ஆனாலும், என்மீது அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் ஏதாவது பாவம் செஞ்சிருந்தா... என்னைக் கடவுள் தண்டிக்கட்டும்’’ என புலம்பினார் மேகநாதன்.

போயஸ் கார்டனுக்கு ஜெயக்குமார் நேரில் போனபோதுகூட தங்கையைச் சந்திக்க முடியவில்லை. கடைசியில் தங்கைக்குக் கடிதம் எழுதினார். ‘ஜெ.ஜெயக்குமார் BA, சந்தியா இல்லம், 9 சிவஞானம் ரோடு, தியாகராய நகர், சென்னை - 17’ என்ற முகவரியுடன் கூடிய தனது லெட்டர் பேடில் ஜெயக்குமார் விரிவாகக் கடிதம் ஒன்றை எழுதி அதை கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பினார். ஜெயலலிதாவை ‘அம்மு’ என்று ஜெயக்குமாரும், ஜெயக்குமாரை ‘பாப்பு’ என்று ஜெயலலிதாவும் அழைப்பார்கள். 1993-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியிட்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்ன?

பிரியமுள்ள அம்மு! 

 

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். நானும் என் குடும்பமும் பெரிய சிக்கலில் இருக்கிறோம். உன்னுடன் தொலைபேசியில் பேசுவதற்காக மூன்று வாரங்களாக முயற்சி செய்கிறேன். நடந்தவை எதுவுமே எங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில் மேகநாதன் குற்றவாளி கிடையாது. அவன் அப்பாவி. அடுத்து என்ன நடக்கும் என புரியாமல் பீதியில் நாங்கள் உள்ளோம். என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நீ செவிசாய்த்து, மேகநாதனை விடுவிப்பாய் என நம்புகிறேன். எதற்கும் நான் மேகநாதனையே சார்ந்திருக்கிறேன். எனக்கு மேனேஜர், உதவியாளர், டிரைவர் எல்லாமே அவன் ஒருவன்தான். கடந்த மூன்று வாரங்களாக எனக்கு உதவ யாருமின்றி தவித்து வருகிறேன். உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டன. வேறு வழில்லாமல்தான் கடைசி முயற்சியாக இந்தக் கடிதத்தை உனக்கு ஃபேக்ஸ் செய்கிறேன். என் வேண்டுகோளை நீ மதிப்பாய் என நம்புகிறேன். நன்றி!

உன் அன்புள்ள பாப்பு (ஜெயக்குமார்)

தொடரும்...

https://www.vikatan.com/news/coverstory/110626-the-era-of-sasikala-and-the-let-down-series-part-2.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா வீட்டிலிருந்து தீபா வெளியேற்றப்பட்டது ஏன்? - சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 3

 
 

சசிகலா தொடர்

 

 

ஜெயலலிதாவோடு அவரது அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தைச் சேர்க்க ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர்மீது கஞ்சா வழக்குப் பாய்ந்தது. மேகநாதனின் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் போட்ட ஹேபியஸ் கார்பஸ் மனுவில்தான் சசிகலாவின் சதி அம்பலமானது. ‘தமிழக முதல்வரையும் அவரின் சகோதரர் குடும்பத்தையும் சேர்த்து வைக்கும் முயற்சியை என் கணவர் மேகநாதன் செய்துவந்தார். அதை சசிகலா தடுக்கிறார். அதனால்தான் என் கணவர்மீது கஞ்சா வழக்குப் போட்டிருக்கிறார்கள். சசிகலாவின் தூண்டுதலில்தான் இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது’’ என ஹேபியஸ் கார்பஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ரேணுகாதேவி. அந்த நேரத்தில்தான் எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவின் அண்ணி விஜயலட்சுமி மனு ஒன்றை நீதிமன்றத்தில் அளித்தார். ‘முதல்வருடன் என் குடும்பத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்த மேகநாதன் போராடினார். இது பிடிக்காத சசிகலா, எங்கள் குடும்பத்தில் இருந்து மேகநாதனை வெளியேற்ற முயற்சிசெய்து வந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான், அப்பாவியான மேகநாதன்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது’ என அந்த மனுவில் சொல்லியிருந்தார் விஜயலட்சுமி.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம் கார்டனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கும், ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் மீது கஞ்சா வழக்கு பாய்ந்தற்கும் மையப்புள்ளி தீபா. ஜெயக்குமார் குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்தபோது ‘செல்லப் பெண்’ணாக வலம் வந்தார் தீபா. அவரின் துடுக்குத்தனமும் குறும்பும் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும். ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் சசிகலா ஆட்களால், தீபா தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தினரை தீபா சட்டை செய்யவில்லை. தீபாமீது ஜெயலலிதா அளவு கடந்த பாசம் வைத்திருந்ததும் சசிகலாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. போயஸ் கார்டனில் புது வரவுகளாக சசிகலாவும் அவரின் உறவுகளும் தங்க ஆரம்பித்தனர். ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சிறுசிறு உரசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த சசிகலா குடும்பத்துக்கு, ஜெயக்குமார் குடும்பத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. குறிப்பாக தீபாவை. காரணம், அவர் ஜெயலலிதா சாயலில் இருந்தது மட்டுமல்ல. இன்னும் வேறுவேறு காரணங்கள்.

தீபா

ஒரு நாள் போயஸ் கார்டன் வீட்டில் முதல்வர் ஜெயலலிதா அமரும் நாற்காலியில் தீபாவும் அமர்ந்தார். அது, முதல்வர் மட்டுமே அமரும் பிரத்யேக நாற்காலி. அதில் அமர்ந்த தீபா, ஜெயலலிதாவைப் போல போஸ் கொடுத்து அமர்ந்தார். விவரம் அறியாத சின்னப் பெண்ணாக தீபா நடந்துகொண்டதை ஜெயலலிதாவிடம் வேறுமாதிரியாகக் கொண்டு சேர்த்தார்கள்.  ‘‘உங்களைப் போலவே தீபா இமிடேட் செய்கிறாள்’’ என ஜெயலலிதாவிடம் ‘வத்தி’ வைத்தார்கள். விளைவு? ஜெயக்குமார் குடும்பம் வெளியேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் சாயலில் இருப்பதால், ஜெயலலிதாவைப் போலவே இமிடேட் செய்வதால், ‘தீபா, அடுத்த வாரிசு அவதாரம் எடுக்கலாம்’ என அச்சப்பட்டது சசிகலா குடும்பம்.

 

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அண்ணி விஜயலட்சுமி, இவர்களின் பிள்ளைகள் தீபா, தீபக், சித்தி ஜெயலட்சுமி என ரத்த உறவுகள் மீண்டும் உயிர் பெறுவதை விரும்பாத சசிகலா எடுத்த அஸ்திரம்தான், ‘வளர்ப்பு மகன்’! ஜெயக்குமார் குடும்பத்தினர், வாரிசாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் அக்கா வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை ஜெயலலிதாவின் தத்துப்பிள்ளையாகக் கொண்டுவந்தார் சசிகலா. தன் தத்துப்பிள்ளையாக சுதாகரனை ஏற்றுக்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார். ஜெயலலிதாவுக்கு வாரிசாக வருபவர்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என நினைத்தார் சசிகலா.

 

வளர்ப்பு மகன் சுதாகரனின் தடபுடல் திருமணம், 1995-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. வளர்ப்பு மகனாக அவரைத் தேர்வு செய்தபோது ஜெயக்குமார் குடும்பத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. திருமணத்தை நடத்தியபோதும் அந்தக் குடும்பத்துக்கு அழைப்பு போகவில்லை. சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்த பிறகு, ஜெயக்குமார் குடும்பம் நொறுங்கிப் போனது. `ஜெயலலிதாவோடு இனி எந்தக் காலத்திலும் சேர முடியாது’ என்பது தெரிந்து போனது. ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்த ஜெயக்குமார், வளர்ப்பு மகன் திருமணத்துக்குப் பிறகு மேலும் பாதிப்படைந்தார். அந்தத்  திருமணம் நடந்த அடுத்த மாதமே, ஜெயக்குமாரின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது.  அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. ஜெயக்குமார் இறந்த 13 நாள்களுக்குள் தீபாவளி வந்தது. அண்ணன் மறைவால் தீபாவளியை ஜெயலலிதா கொண்டாடவில்லை. ‘‘முதல்வரின் அண்ணன் இறந்ததால் வளர்ப்புமகன் சுதாகரனுக்குத் தலைதீபாவளி வேண்டாம்’’ என குடும்ப புரோகிதர் சொல்ல, சசிகலாவுக்குக் கவலை தொற்றிக்கொண்டது. ஆனாலும் தலைதீபாவளியை சுதாகரன் கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. ‘‘சுதாகரன், அவன் மாமனார் வீட்டில்தானே தலைதீபாவளி கொண்டாடப் போகிறான். அதை எதற்குத் தடுக்க வேண்டும்’’ என வாதாடினார் சசிகலா.

https://www.vikatan.com/news/coverstory/111208-the-rise-and-fall-of-sasikala-series-part-3.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

எம்.ஜி.ஆர் ஓய்வும் நடராசன் சதுரங்கமும்! - சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 4

 

 

சசிகலா

 

 

''தஞ்சாவூர்க்காரன் புத்தி வேறு எவனுக்கும் கிடையாதுப்பா...” - நெருக்கமான நண்பர்களிடம் பெருமையுடன் அடிக்கடி நடராசன் உச்சரிக்கும் வார்த்தைகள் இவை. அந்தப் புத்தியை வைத்து அவர் அரசியலில் நடத்திய காரியங்கள் ஏராளம்.

அரசியல்மீது சிறுவயதிலேயே பார்வையைப் பதித்தார் நடராசன். தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியில் பி.ஏ படிக்கப் போனபோது அது துளிர்விட ஆரம்பித்தது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ கற்கப் போனபோது ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தில் குதிக்கும் அளவுக்குப் போனது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே தி.மு.க அனுதாபியாக மாறியிருந்தார். அப்போது தி.மு.க-வில் இருந்த எல்.கணேசன், எஸ்.டி.சோமசுந்தரம் (எஸ்.டி.எஸ்.) இருவரையும் அடிக்கடி சந்தித்துப் பேசுவார். எல்.கணேசனிடம் காட்டிய நெருக்கம், நடராசனுக்கு அரசுப் பதவியைத் தேடிக்கொடுத்தது. கருணாநிதி முதன்முறையாக முதல்வரான நேரத்தில்தான் செய்தித் துறையில் மக்கள்தொடர்பு பதவி, நடராசனுக்குக் கிடைத்தது.

 

உத்யோகம் கிடைத்துவிட்டது. அடுத்த புருஷ லட்சணம் வந்து சேர்ந்தது. மன்னை நாராயணசாமியின் உறவினர் மகளான சசிகலாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குத் தலைமை தாங்கி நடத்திவைத்தவர், அன்றைய முதல்வர் கருணாநிதி. அந்த நேரத்தில் நடராசன், அரசியல் கணக்கு ஒன்றைப் போட்டார். ‘எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியல் வாழ்வு இனி ஜெயலலிதாவுக்குதான்’ எனக் கணித்தார். கட்சியில், ஜெயலலிதாவின் கிராஃப் உயர்ந்துகொண்டிருந்தது. இதை எம்.ஜி.ஆர் அவ்வப்போது கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார். இதனால் எம்.ஜி.ஆர் மீது மனவருத்தம் கொண்டார் ஜெயலலிதா. அதை நடராசன் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சிக்குப் ‘பலம்’ சேர்க்கும் காரியங்களில் ‘கணக்காக’ இறங்கினார் நடராசன்.

 

ஜெயலலிதாவின் கூட்டங்களுக்குத் திரண்ட மக்களை நேரில் பார்த்ததாலும், அந்தக் கூட்டங்களை வீடியோ கவரேஜ் செய்ததாலும், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அடுத்த வாரிசாக ஜெயலலிதா வருவார் என நடராசன் நினைத்தார். அது பலித்தது. எதிர்கால ஜெயலலிதா ஆட்சியில் அதிகாரம் செலுத்த, ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆரையே சமாளிக்க ஆரம்பித்தார் நடராசன். அதுவரை ஜெயலலிதாவைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோரும், ஒவ்வொரு காலகட்டத்திலும் நடராசனால் வீழ்த்தப்பட்டனர். சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே ஜெயலலிதாவைச் சுற்றியிருக்கும் நிலையைக் கச்சிதமாகக் கட்டமைத்தார் நடராசன்.

ஜெயலலிதா சசிகலா

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசர், கே.கே.எஸ்.எஸ்.ஆர், திருச்சி செளந்தரராஜன் போன்றவர்கள் ஜெயலலிதா ஆதரவாளர்களாக இருந்தார்கள். இவர்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே மீடியேட்டராக இருந்தார்கள் நடராசனும் சசிகலாவும். ஜெயலலிதா சொன்னவற்றையும், அவர் சொன்னதாக நடராசன் சொன்னவற்றையும் இவர்கள் செய்து கொடுத்தனர். ‘தன் உதவியில்லாமல் இவர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடாது’ என்கிற நிலைமையை உண்டாக்கினார் நடராசன்.

 

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலிருந்து திரும்பிய எம்.ஜி.ஆர், ஆட்சி நிர்வாகத்தை நடத்திக்கொண்டிருந்தார். ஆனால், முன்பு போல ஆக்டிவாக செயல்பட முடியவில்லை. அதனால், எம்.ஜி.ஆரின் இடத்தைப் பிடிக்க ஜெயலலிதா ஆசைப்பட்டார். அதற்கு நடராசன் தூபம் போட்டார். ஆனால் அந்த முயற்சிகள் பலனளிக்காமல் போயின. ஆனாலும் டெல்லியின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். எம்.ஜி.ஆர் ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கான ஏற்பாடுகளை அருகில் இருந்தவர்களே செய்ய ஆரம்பித்தார்கள்.

 

‘முதல்வர் ஆசை’ நிறைவேறாத நிலையில் கேபினெட்டுக்குள்ளாவது கால் பதித்துவிட காய்கள் நகர்த்தப்பட்டன. எப்படியாவது ஜெயலலிதா துணை முதல்வர் ஆகிவிட வேண்டும் என நினைத்தார் நடராசன். அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியிடம் தொடர்ந்து இதை வலியுறுத்திக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. ‘‘வேலைப்பளுவால் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. உங்களுக்கு உறுதுணையாக ஒருவரை வைத்துக் கொள்ளுங்கள்’’ என கவர்னர் குரானா மூலம் மறைமுகமாக எம்.ஜி.ஆரிடம் வலியுறுத்தினார் ராஜீவ் காந்தி.

‘‘சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், எத்தனை காலத்துக்கு உயிர் வாழ்வார்கள்’’ என டாக்டர்களை அணுகிக் கேட்க ஆரம்பித்தார்கள். இந்தநிலையில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை மீண்டும் பாதிப்புக்குள்ளானது. அதற்காக வெளிநாடு சென்றார்.அவருக்கு என்ன ஆகும் என்பதைத் தெரிந்துகொள்ள நடராசன் களமிறங்கினார். வெளிநாட்டில் இருக்கிற நண்பர்கள் மூலம், எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றிய தகவல்களைத் திரட்ட முயன்றார். கடைசியில் ‘‘எம்.ஜி.ஆருக்கு என்ன பயிற்சி கொடுத்தாலும் சரியாகப் பேச வராது’’ என்கிற தகவல் வந்து சேர்ந்தது.

இப்படியான காலகட்டத்தில்தான் ‘ஜெயலலிதாவைத் துணை முதல்வர் ஆக்க வேண்டும்’ என டெல்லியிலிருந்து பிரஷர் வந்தது. இதைச் சமாளிக்க உடனே எம்.ஜி.ஆர் டெல்லி சென்றார். ‘அமைச்சரவையில் ஜெயலலிதாவுக்கு இடம் தர வேண்டும்’ என்கிற மத்திய அரசின் மறைமுக மிரட்டலைக் கண்டு எம்.ஜி.ஆர் வெம்பினார். ‘ராஜீவ் காந்தியிடம் இருந்துதான் இப்படியான உத்தரவுகள் வருகிறதா... அல்லது அவரின் அலுவலகத்தில் இருக்கிற ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்டவர்கள் இதனைச் செய்கிறார்களா’ என்கிற குழப்பம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.  

இந்த நிலையில்தான் நேரு சிலை திறப்பு விழாவில் சதி ஒன்று அரங்கேறியது. சென்னை கிண்டி கத்திபாராவில் நேருவுக்குச் சிலை அமைத்து, திறப்பு விழாவுக்குத் தேதி குறித்திருந்தார்கள். சிலையை, பிரதமர் ராஜீவ் காந்திதான் திறந்து வைத்தார். இந்த விழாவில் ஜெயலலிதாவையும் மேடையேற்றிவிட முயன்றார் நடராசன். ராஜீவ் காந்தியிடம் செல்வாக்கோடு இருக்கும் ஜெயலலிதா, ராஜீவ் காந்தி பங்கேற்கும் கூட்டத்திலும் தான் இருக்க வேண்டும் என நினைத்தார். எனவே, ‘நேரு சிலை திறப்பு விழாவில் என்னையும் சேர்க்க வேண்டும்’ என ஜெயலலிதா வலியுறுத்தினார். அந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் ராஜீவ் காந்தியிடம் தன் செல்வாக்கைக் காட்ட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் நோக்கமாக இருந்தது. அந்த விழாவில், புரட்சியாளர் அருணா ஆஸப் அலியை, சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் தேர்வு செய்திருந்தார். ‘அவருக்குப் பதிலாகத் தன்னைச் சேர்க்க வேண்டும்’ என எம்.ஜி.ஆரிடம் வாதிட்டார் ஜெயலலிதா.

எம்.ஜி.ஆரின் மனவருத்தம் ராஜீவ் காந்தியிடம் பக்குவமாகச் சொல்லப்பட்டது. அதன்பின்,  ‘எம்.ஜி.ஆரின் விருப்பத்துக்கேற்ப சிலை திறப்பு விழாவில் ஜெயலலிதா பங்கேற்க மாட்டார்’ என்கிற உறுதிமொழி தரப்பட்டது. தலைநகர் தந்த வாக்குறுதியால் எம்.ஜி.ஆர் நிம்மதியடைந்தார். ஆனாலும் நிம்மதி நீடிக்கவில்லை.

விழாவுக்கான அழைப்பிதழ்கள் ரெடி ஆனபோது அதில் ஜெயலலிதாவின் பெயர் இடம்பெற்றிருந்து. தமிழக அரசின் பொதுத்துறையின் மேற்பார்வையில்தான் அழைப்பிதழ்களைச் செய்தித் துறை அச்சடித்தது. விசாரித்தபோதுதான் இரண்டு வகையான அழைப்பிதழ்கள் தயாரானது தெரியவந்தது. அரசு போட்ட உத்தரவைத் தாண்டி போயஸ் கார்டன் ஒரு உத்தரவைப் போட... இன்னொரு அழைப்பிதழ் ரெடி செய்துவிட்டார்கள். இந்த வேலையைப் பார்த்தவர்கள் யார் என விசாரணையில் இறங்கினார்கள். எல்லோரின் விரல்களும் நடராசனைக் கைகாட்டின. அப்போது செய்தித் துறையில்தான் நடராசன் இருந்தார்.  எம்.ஜி.ஆரைப் பகைத்துக் கொண்டு, ஜெயலலிதாவின் கட்டளைகளை நிறைவேற்றினார் நடராசன்.

நேரு சிலையைத் திறந்து வைத்து ராஜீவ் காந்தி பேசினார். ‘தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆர்.’ என சொல்லாமல் ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ என்றார். அந்த மேடையிலேயே அவர் எம்.ஜி.ஆரிடம் சொன்னார். ‘Mr. MGR, You are so sick. Handover the responsibility to some other person, or make somebody as Deputy Chief Minister and take rest’ என்றார்.

‘துணை முதல்வரை நியமித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்’ என ராஜீவ் காந்தி சொன்னபடியே எம்.ஜி.ஆர் ஓய்வு எடுத்துக்கொண்டார். எம்.ஜி.ஆர் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி, இந்த நேரு சிலை திறப்பு விழாதான்! 1987 டிசம்பர் 21-ம் தேதி நேரு சிலை திறப்பு விழா நடந்தது. டிசம்பர் 24-ம் தேதி  எம்.ஜி.ஆர் மரணமடைந்தார்.

எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அப்போது ஜெயலலிதாவின் பக்கத்தில்தான் இருந்தார்கள் சசிகலாவும் நடராசனும். ஜெயலலிதாவை நிர்வாகிகள் நெருங்க முடியாத அளவுக்குச் சுவர் எழுப்பியிருந்தார்கள் மன்னார்குடியினர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற ஜானகி தலைமையிலான அமைச்சரவை, ஒரு மாதம்கூட நீடிக்கவில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத சூழலில் சட்டசபையில் மோதல் ஏற்பட்டது. இதனால் சட்டசபை கலைக்கப்பட்டது. அதன்பிறகு 1989-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலை ஜானகி, ஜெயலலிதா அணிகள் எதிர்கொண்டன. அந்தத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அந்தத் தேர்தலின்போது வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை நடத்தியதாக நடராசன்மீது புகார்கள் கிளம்பின. தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் பணத்தைக் கேட்டு நிர்பந்தம் செய்தார்கள். இப்படிப்பட்ட நிலையில்தான் 'அரசியலிலிருந்து ஓய்வு' என அறிக்கை விட்டார் ஜெயலலிதா. தனது எம்.எல்.ஏ பதவியையை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு பத்திரிகைகளில் வெளியானது. ஆனால், ஜெயலலிதாவின் அரசியல் ஓய்வு அறிக்கையும் ராஜினாமா கடிதமும் பத்திரிகை அலுவலங்களுக்குப் போவதற்கு முன்பே அதை நடராசன் கைப்பற்றினார். இதனால் நடராசனுக்கும் ஜெயலலிதாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆனால், சில நாள்களிலேயே ஜெயலலிதா மனம் மாறினார். ''அறிக்கையும் கடிதமும் எழுதியது உண்மைதான். அதை நடராசனிடம் கொடுத்திருந்தேன். நடராசன் வீட்டில் சோதனைப் போட்டு அதை பத்திரிகைகளிடம் வெளியிட்டுவிட்டார் கருணாநிதி'' என சொன்னார் ஜெயலலிதா. வேட்பாளர்களிடம் பணம் வாங்கிய விவகாரத்தில் நடராசன் கைது செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் ராஜினாமா விவகாரம் சட்டசபையில் மோதலை உண்டாக்கியது. காயமடைந்த ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தார்.

https://www.vikatan.com/news/coverstory/115354-the-rise-and-fall-of-sasikala-part-4.html

Link to comment
Share on other sites

”நடராசனைக் கொல்லத் திட்டம் தீட்டினாரா கருணாநிதி? அறிக்கைவிட்ட ஜெயலலிதா!” - சசிகலா வீழ்ந்த கதை! பகுதி 5

 
 

சசிகலா

 

 

சென்னை மயிலாப்பூர் தேவகி மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். சட்டசபையில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, உடனே கவர்னர் மாளிகைக்குப் போய் புகார் அளித்தார். அதன்பிறகு போயஸ் கார்டனில், சட்டசபை மோதல் தொடர்பாக பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். இவ்வளவும் நடந்த பிறகுதான் தேவகி மருத்துவமனைக்குப் போனார்.

தாக்குதலுக்கு உள்ளான ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் பலவும் ஆதரவு அறிக்கை விட்டன. சிலர் தலைவர்கள் ஜெயலலிதாவை நேரில் போய் பார்த்து ஆறுதல் சொன்னார்கள். ஆனால், காங்கிரஸ் பிரமுகர்கள் ஜெயலலிதாவைப் பார்க்க வரவில்லை. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த மூப்பனார், ஜெயலலிதாவை வந்து பார்க்க வேண்டும் என விரும்பினார் நடராசன். தி.மு.க. ஆட்சியைக் கவிழ்த்திவிட்டு காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது நடராசனின் பிளான். அதற்காகத்தான் மூப்பனார் - ஜெயலலிதா சந்திப்பு நடைபெற வேண்டும் என விரும்பினார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தால், காங்கிரஸ் வி.ஐ.பி-கள் வந்து பார்ப்பார்கள் எனக் கணக்குப் போடப்பட்டது. சட்டசபையில் தாக்குதலுக்கு ஆளாகி, கவர்னர் மாளிகைக்குச் சென்று புகார் அளித்து, அதன்பிறகு போயஸ் கார்டனில் பேட்டி கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை இருந்தபோதும், தனக்கு வேண்டப்பட்ட தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலேயே அரசியல் புதைந்திருந்தது. ரங்கராஜன் குமாரமங்கலம், மூப்பனார் போன்றவர்கள் மருத்துவமனையில் வந்து ஜெயலலிதாவைப் பார்த்து நலம் விசாரித்தனர். இதன் பிறகு சில நாள்களிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிருந்து மூப்பனார் நீக்கப்பட்டு, ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்ட வாழப்பாடி ராமமூர்த்தி புதிய தலைவர் ஆனார். அதை ஜெயலலிதா தரப்பு கொண்டாடியது.

ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்குப் பெரிய காயம் எதுவும் ஏற்படாத நிலையில் அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வைத்தது நடராசன் குடும்பம்தான். மருத்துவமனை காட்சிகளை வைத்து அரசியலுக்கு அச்சாரம் போட நினைத்தார்கள். 'ஜெயலலிதாவுக்கு ஒன்றுமில்லை' என உலகுக்குச் சொல்ல நினைத்தது அன்றைய ஆளும் தி.மு.க. அதற்காக காய் நகர்த்தினார்கள்.

தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப் சட்டசபையில் ஒரு தகவலை பகிர்ந்தார்.  ''எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி மக்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். டாக்டர் குழுவை அனுப்பி அவரின் உடல்நிலையைப் பரிசோதித்து, நாட்டு மக்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.'' என சட்டசபையில் குரல் எழுப்பினார். நடராசன் போட்ட நாடகத்துக்குப் போட்டியாக கருணாநிதி இந்த நாடகத்தை அரங்கேற்றினார். அப்படி டாக்டர் குழு வந்து, பரிசோதனை நடத்தினால் குட்டு அம்பலம் ஆகிவிடும் என சசிகலா குடும்பத்தினர் நினைத்தார்கள். இந்த நிலையில்தான், தேவகி மருத்துவமனையின் டாக்டர் சொக்கலிங்கம், திடீரென் பத்திரிகையாளர்களை அழைத்து ஜெயலலிதாவுக்கு என்னென்ன நோய்கள் இருக்கிறது எனப் பட்டியல் போட்டு சொன்னார். ஜெயலலிதாவுக்கு வேண்டப்பட்ட டாக்டர் சொக்கலிங்கத்தையும் இயக்க ஆரம்பித்தார்கள் மன்னார்குடியினர்.

தேவகி மருத்துமனை காட்சிகள் நடந்த நிலையில், நடராசன் - சசிகலாவுக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ''என்னையும் எனது குடும்ப நண்பர் நடராசன், அவரது மனைவி சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரை ஒரு மாத காலத்துக்குள் கொன்றுவிட வேண்டும் எனக் கருணாநிதி உத்தரவுப் போட்டிருக்கிறார். உணவில் விஷம் வைத்தோ அல்லது வேறு வழியிலோ என்னைக் கொலை செய்ய முயற்சி செய்யலாம். நடராசன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரை செட்டப் செய்யப்பட்ட விபத்துகளைக் கொண்டு கொலை செய்யப்படலாம்'' எனச் சொல்லியிருந்தார் ஜெயலலிதா. இந்த அறிக்கைத் தயாரிப்பிலும் நடராசனின் கைங்கரியம் இருந்தது. ''நான் மருத்துமனையில் இருந்தபோது அங்கே கோயில் பிரசாதம் என சர்க்கரைப் பொங்கலும் ரவா கேசரியும் இருந்தன. அதை யார் கொடுத்தார்கள்... எப்படி வந்தது? எனத் தெரியவில்லை. என்னைக் கொலை செய்ய உத்தரவிட்ட தகவலை பிறகுதான் தெரிந்து கொண்டேன். முன்பே தெரிந்திருந்தால் அதனை பரிசோதனை செய்திருப்பேன். இப்போதிருந்து தி.மு.க.வின் ஆட்சிக் காலம் எண்ணப்படுகிறது. இது பாஞ்சாலி சபதம் அல்ல. ஜெயலலிதாவின் சபதம்.'' என அந்த அறிக்கையில் சொல்லியிருந்தார் ஜெயலலிதா.

''விஷம் இல்லாதவர்களுக்கு விஷம் வேலை செய்யும். ஏற்கெனவே விஷமாக உள்ளவர்களுக்கு யாரால் விஷம் கொடுக்க முடியும்'' என எதிர்வினை ஆற்றினார் கருணாநிதி.

தொடரும்...

https://www.vikatan.com/news/coverstory/115641-the-rise-and-fall-of-sasikala-in-admk-series-part-5.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பூனைப்படைத் தளபதி திவாகரன்..என்ட்ரியான தினகரன்! - சசிகலா வீழ்ந்த கதை- பகுதி 6

 

சசிகலா

 

 

 

டராசனுக்கு ஆதரவாக ஜெயலலிதா அறிக்கைவிட்டதால், போயஸ் கார்டனில் நடராசனுக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.

போயஸ் கார்டனைச் சுற்றி நின்றிருந்த பூனைப் படை, 1989 சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காணாமல் போயிருந்தது. தேர்தலில் போட்டியிட டிக்கெட் கேட்டு, பணம் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்த நேரத்தில்தான், 'அரசியலுக்கு முழுக்கு' என அறிவித்தார் ஜெயலலிதா. அப்போது பூனைப் படையும் பதுங்கியது. நடராசனின் ரீ என்ட்ரிக்குப் பிறகு, பூனைப் படையும் கார்டனுக்குள் புகுந்தது. அதற்கு முன்பு வரையில் பூனைப் படைக்குத் தளபதியாக இருந்த திவாகரன், போய் தினகரன் வந்தார்.

சசிகலா

1988-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழ் நொண்டி அடிக்க ஆரம்பித்தது. சசிகலா, சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் சகோதரி மகன் தினகரன் ஆகியோர்தான் 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழில் பங்குதாரர்களாக இருந்தார்கள். பொருளாதார நெருக்கடியால், 1989-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி 'நமது எம்.ஜி.ஆர்' நிறுத்தப்பட்டது. ஆனால், சசிகலா குடும்பத்தினருக்கு நஷ்டம் இல்லை. அன்றைக்கு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசால் பாட புத்தகங்கள் அச்சடிப்பதற்கான ஆர்டர்கள் நமது எம்.ஜி.ஆருக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அதனால் பிசினஸில் நட்டம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள் சசிகலா குடும்பத்தினர்.

சசிகலா குடும்பத்தினரின் நல்லது, கெட்டதுகளில் பங்கேற்கும் அளவுக்கு சசிகலா குடும்பத்துடன் ஜெயலலிதா மீண்டும் நெருங்க ஆரம்பித்திருந்தார். 1989 ஜுன் மாதத்தில் சசிகலாவின் தாய் கிருஷ்ணவேணி உடல்நலக் குறைவால் தஞ்சாவூர் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவரைப் பார்ப்பதற்காக ஜெயலலிதா நேரில் போய் வந்தார். அதன்பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை போயஸ் கார்டன் மீண்டும் மன்னார்குடியின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தகவல் தொழில்நுட்பம் வளராத 1980-களில் லேண்ட் லைன்தன் தகவல் தொடர்புக்கு முக்கிய சாதனமாக இருந்தது. அப்படிப்பட்ட சூழலில், சசிகலாவுக்கு வேண்டப்பட்ட சீனிவாசன் என்பவர்தான் போயஸ் கார்டனில் வரவேற்பாளர் கம் டெலிபோன் ஆப்பரேட்டராக அமர்த்தப்பட்டார். இந்த சீனிவாசன் வந்த பிறகு, வழக்கமாக கார்டனுக்கு வந்து போய் கொண்டிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு கதவு அடைபட்டது. முத்துசாமி, மாதவன் போன்ற சீனியர்களுக்கு அங்கே மரியாதை கிடைக்கவில்லை. அப்படி ஒரு வி.ஐ.பி-க்கு நேர்ந்த அவமானம் இது. ஜெயலலிதாவைச் சந்திக்கப் போனார் அந்த வி.ஐ.பி. வரவேற்பரையில் சீனிவாசன் இருந்தார். மாடியிலிருந்து சீனிவாசனுக்கு அழைப்பு. ''சரிம்மா..'' என்ற சீனிவாசன், நம்பரைத் தட்டி, மற்றோர் அறையிலிருந்த சசிகலாவிடம் பேசினார். ''அம்மா உங்களை ரூமுக்கு வரச் சொன்னாங்க'' என்றார். திரும்பி, அந்த வி.ஐ.பி-யைப் பார்த்த சீனிவாசன், ''அம்மா வெளியூரில் இருக்கிறார். வருவதற்கு 20 நாள்கள் ஆகும். நீங்க அப்புறம் வாங்க..'' எனச் சொல்லி, அந்த வி.ஐ.பி.யை பேக் அப் செய்ய வைத்தார். அதற்குள் மாடிப்படி வழியாக சசிகலா இறங்கி, போர்ட்டிகோவில் நின்றிருந்த திரை போட்ட காரில் கிளம்பி வெளியே சென்றார். ''உயிர்த்தோழி இல்லாமல் அம்மா வெளியூர் போக மாட்டாரே'' என அந்த வி.ஐ.பி-க்குச் சந்தேகம் எழ.. ''அம்மா எங்கு போனாலும் கூடவே சின்னாவும்தானே போவார்'' எனக் கேட்டபோது, சீனிவாசனிடம் பதில் இல்லை.

நமது எம்.ஜி.ஆரில் நீண்ட காலம் பணியாற்றிய ஒருவர் நடராசனைத் தேடி போயஸ் கார்டனுக்கு வந்தார். அவருக்கு அதே ரெடிமெட் பொய். ''நடராசன் தஞ்சாவூர் போயிருக்கிறார். வர ஒரு வாரம் ஆகும்'' என சீனிவாசன் சொன்னார். அந்த நேரம் பார்த்து, அங்கே நடராசன் வர... சீனிவாசனுக்கும் நடராசனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது. ''பத்திரிகையை நிறுத்தி ஒரு வாரம் ஆச்சு. என்ன செய்வது என்றே தெரியவில்லை'' என அந்த ஊழியர் நடராசனிடம் சொல்ல.. ''மாதம் தோறும் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுது. அதனால் பத்திரிகையை அம்மா நிறுத்தச் சொல்லிட்டாங்க'' எனச் சொல்லிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் நடராசன்.

'நமது எம்.ஜி.ஆர்' நிறுத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருந்தன. அப்போது கட்சியின் மூத்த துணைப் பொதுச் செயலாளராக இருந்த ராகவானந்தம், நமது எம்.ஜி.ஆருக்கு கட்டுரை ஒன்றை அனுப்பியிருந்தார். அப்போது அங்கே சூப்பர் எடிட்டராக இருந்த தினகரன், ''அதை பிரசுரிக்க வேண்டாம்'' எனச் சொல்லிவிட்டார். அதன்பிறகு, பொருளாளர் மாதவன் தொண்டர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதை நமது எம்.ஜி.ஆருக்கு அனுப்பி வைத்தார். அதை முதல் பக்கம் கால் பக்கத்துக்குப் போட நடராசன் சொன்னார். ஆனால், அதன்பிறகு தினகரன் ''அதை போட வேண்டாம்'' எனச் சொல்லிவிட்டார்.

'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழுக்குப் பொறுப்பாசிரியராக பி.சி.கணேசன் இருந்தார். பத்திரிகை நிற்பதற்கு முன்பே அவரை வெளியேற வைத்தார்கள் சசிகலா குடும்பத்தினர். நடராசன்தான் பி.சி.கணேசனை 'நமது எம்.ஜி.ஆர்' நாளிதழுக்கு அழைத்து வந்தார். 'நமது எம்.ஜி.ஆர்' அலுவலகத்தில் பி.சி.கணேசனுக்குத் தனி கேபின் தரப்பட்டிருந்தது. அரசின் பாடநூல்கள் அச்சடிக்கும் ஆர்டர், நமது எம்.ஜி,ஆரின் ஜெயா பப்ளிகேஷனுக்குக் கிடைத்த பிறகு, அந்தப் பாட நூல்களை அடுக்கி வைப்பதற்கு போதிய இடமில்லை. கடைசியில் பி.சி.கணேசன் கேபினையும் எடுத்துக்கொண்டார்கள். மூன்றாம் வகுப்பு சமூகவியல் பாட நூல்களை அங்கே ஸ்டாக் வைத்தார்கள். அவருக்கு உட்காருவதற்குகூட இடமில்லை. வேறுவழியில்லாமல் பி.சி.கணேசன் 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையிலிருந்து விடை பெற்றார்.    

(தொடரும்...)

https://www.vikatan.com/news/coverstory/116500-the-rise-and-fall-of-sasikala-in-aiadmk-part-6.html

Link to comment
Share on other sites

துக்கமும் தூக்க மாத்திரைகளும்... துயரத்தில் ஜெயலலிதா! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 7

 
 

சசிகலா

 

 

 

''நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில், கட்டிய வீட்டில் இருக்கிறேன். எனக்கு 41 வயது ஆகிறது. நான் குழந்தை அல்ல. என்னை யாரும் ஒளித்து வைக்க முடியாது. சில காலத்துக்கு நான் தனிமையாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய சொந்த விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது'' - 1989 ஜூலையில் ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் இவை.

'சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் ஜெயலலிதா இருக்கிறார்' என்ற விமர்சனங்கள் 1989-ம் ஆண்டே எழுந்தன. அந்த நேரத்தில்தான், இந்த பதிலடியைக் கொடுத்தார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதா சொன்னதற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது.

'தேர்தலில் போட்டியிட பணம் பெற்றுக்கொண்டு, அதைத் திருப்பித் தராமல் நடராசன் மிரட்டினார்' என தேனி ஶ்ரீதர் கொடுத்த புகாரில் நடராசன் கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி நடராசன் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். அவரின் தலையீடு இல்லாததால், போயஸ் கார்டனுக்குள் சீனியர்கள் நுழைவதில் கெடுபிடி கொஞ்சம் குறைந்திருந்தது. பிறகு சென்னைக்குள் நுழைந்ததும் நடராசனின் ஆட்டம் ஆரம்பம் ஆனது. நடராசன் தனது அரசு வேலையை ராஜினாமா செய்ததைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. 7576 என்ற பதிவு எண் கொண்ட சிவப்பு நிற மாருதி காரில் நடராசன் கார்டனுக்கு வருவதும் போவதுமாக இருந்தார்.

1989 ஜூலையில் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு நான்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான தேர்தல் ஜூனில் நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க-வுக்கு 27 எம்.எல்.ஏ-க்களும் காங்கிரஸுக்கு 26 எம்.எல்.ஏ-க்களும் இருந்தனர். காங்கிரஸ் தயவில், அ.தி.மு.க. சார்பில் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் தேர்வு செய்ய முடியும் என்ற சூழலில், அந்தப் பதவியைப் பிடிக்க ஏக டிமாண்ட். ஹண்டே, முத்துசாமி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அந்த சீட்டுக்கு குறி வைத்திருந்த நிலையில் நடராசனும் அந்தப் பதவியைப் பிடிக்க நினைத்தார்.

விநோதகன்காங்கிரஸுடன் ஜெயலலிதா நெருக்கம் பாராட்ட ஆரம்பித்த நேரம் அது. நடராசனின் பிரஷர் தாங்க முடியாமல், அந்த சீட்டை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தார் ஜெயலலிதா. அந்த சீட்டில்தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.கே.டி.ராமசந்திரன் ஜெயித்தார். நடராசனுக்கு சீட் கொடுத்தால், கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும். கட்சியில் வேறு யாருக்கும் தந்தால், நடராசன் எதிர்ப்பார். காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தால் கூட்டணிக்கு அச்சாரமாக இருக்கும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தினார் ஜெயலலிதா.

இதன்பிறகும் நடராசன், சசிகலா ஆகியோரின் தலையீடு குறையவில்லை. அவர்களை கட்டுப்படுத்த ஒரு வழியைத் தேடினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் தோழி பிரேமா மீண்டும் கார்டனுக்குள் கால் பதிக்கத் தொடங்கினார். ஜெயலலிதாவின் பி.ஏ-வாக இருந்த இந்த பிரேமா, சசிகலா வருகையால் கார்டனில் இருந்து வெளியேறினார். பிரேமாவை அடிக்கடி அழைத்து, அவருடன் அளவாடிக்கொண்டிருந்தார் ஜெயலலிதா. சசிகலாவுக்கு பாடம் புகுத்த ஜெயலலிதா போட்ட திட்டம் இது. விஜய் மல்லையாவின் உறவினர்தான் பிரேமா. 1989 சட்டசபைத் தேர்தலுக்கு விஜய் மல்லையாவிடம் இருந்து தேர்தல் நிதியைப் பெற்றுத் தந்ததில் பிரேமாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதன்பிறகு கார்டனுக்குள் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இதன்பிறகுதான் 'ஜெயலலிதா எங்கிருக்கிறார்' என்ற சர்ச்சை பூதாகரமாக எழுந்தது.

அப்போது என்ன நடந்தது? மூத்த பத்திரிகையாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் இது. ''சசிகலா குடும்பத்தினரோடு ஏற்பட்ட தகராறில் கோபம் அடைந்த ஜெயலலிதா, தூக்க மாத்திரைகளை அதிகமாக போட்டுக் கொண்டார். பதறிய சசிகலா, நடராசனுக்கு தகவல் சொன்னார். சசிகலாவின் அண்ணன் டாக்டர் விநோதகன் விரைந்து வந்து, சிகிச்சை அளித்தார். இந்த விஷயம் வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். சுமார் ஒரு மாத காலமாக ஜெயலலிதா வெளியே வரவில்லை. போயஸ் கார்டனில்தான் இருக்கிறாரா... அல்லது வெளியூர் சென்றிருக்கிறாரா? எனத் தெரியாமல் கட்சியினர் குழம்பிப் போனார்கள். நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல போயஸ் கார்டனில்கூட அவரின் தரிசனம் கிடைக்கவில்லை. 'உடல்நலக் குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் ஜெயலலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்' என செய்திகள் றெக்கை கட்ட ஆரம்பித்தன. சசிகலா குடும்பத்தினர் எஸ்.டி.எஸ்-ஸை அழைத்து, 'அம்மா சிகிச்சைக்காக பெங்களூர் போயிருக்கிறார். வருவதற்கு சில நாள்கள் ஆகும்.' எனச் சொல்லி செய்தியைக் கசியவிட்டார்கள்.'' என்றார்கள் அந்த மூத்த பத்திரிகையாளர்கள்.

இப்படிப்பட்ட சூழலில்தான், ''ஜெயலலிதாவை சசிகலா குடும்பம் ஒளித்து வைத்திருக்கிறார்கள்'' எனப் பேச்சுகள் கிளம்பின. வழக்கம்போல சசிகலா குடும்பத்தின் மகுடிக்கு ஆடினார் ஜெயலலிதா.

கடைசியில் வேறுவழியில்லாமல் ஜெயலலிதா விளக்கம் சொல்லும் அளவுக்குப் போனது. ''நான் குழந்தை அல்ல. என்னை யாரும் ஒளித்து வைக்க முடியாது. என்னுடைய சொந்த விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.'' என திருவாய் மலர்ந்தார் ஜெயலலலிதா.

ஜெயலலிதாவின் விளக்கவுரை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், சசிகலா குடும்பத்துக்கு அல்ல. சசிகலா குடும்பம் ஜெயலலிதாவைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தது. முதலீடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. போயஸ் கார்டனில் இருந்த இரண்டு கார்கள் கூத்தாநல்லூரில் உள்ள ஒரு டாக்டர் பெயருக்கு மாற்றப்பட்டன.

(தொடரும்...)

https://www.vikatan.com/news/coverstory/116595-the-rise-and-fall-of-sasikala-of-admk-series-part-7.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

''நடராசனின் வீட்டுக் காவலில் ஜெயலலிதா!'' - சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 8

 

 

நடராசன் சசிகலா

 

 

1989 மார்ச் 25-ம் தேதி நடைபெற்ற சட்டசபை மோதல் சம்பவத்துக்குப்பின், தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார் ஜெயலலிதா. மே, ஜூன் மாதங்களில் ஜெயலலிதாவின் சுவடே வெளியே தெரியவில்லை. இதனால், 'ஜெயலலிதா எங்கிருக்கிறார்?' என்ற விமர்சனங்கள் எழுந்தன. 'உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெற்று வருகிறார்' என்கிற செய்திகள் வலிந்து பரப்பப்பட்டன.

'உடல்நலக் குறைவு காரணமாக அரசியலில் தீவிரமாக ஈடுபடாமல் இருந்த ஜெயலலிதா, விரக்தி நிலைக்குப் போனார்' என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன. 'ஜெயலலிதாவுக்கு விரக்தியா?' என்ற தலைப்பில் செய்தி ஒன்றை பதிவு செய்தது தினமணி.

'சென்னையிலா... பெங்களூரிலா... ஜெயலலிதா எங்கிருக்கிறார்?' என இரண்டு மாதங்களாக மர்மம் நீடித்து வந்த நிலையில், இரண்டு பத்திரிகைகள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குகள் போட்டார் ஜெயலலிதா. இதுதொடர்பான ஆவணங்களில், ஜெயலலிதா கைழுத்திட்டிருந்தார். அதை வைத்து அவர் சென்னையில்தான் இருக்கிறார் என பேசப்பட்டன. இந்த அவதூறு வழக்குக்குப் பின்னணியும் உண்டு. வழக்கு போடப்பட்ட பத்திரிகைகளில் அப்போது வெளியாகிக் கொண்டிருந்த 'தராசு' பத்திரிகையும் ஒன்று. 'தராசு' மீது வழக்கு பாய்ந்த கதையை பார்ப்போம்.

'ஜெயலலிதா எங்கிருக்கிறார்? என கண்டுபிடித்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்' என 'தராசு' வார இதழின் ஆசிரியர் ஷ்யாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைப் போட்டார். அந்த மனுவில் என்ன சொல்லியிருந்தார்?

'பொது மக்கள் நலன்கருதி, இந்த ரிட் மனுவை போட்டிருக்கிறேன். ஜெயலலிதாவின் ஆலோசகர், குடும்ப நண்பர் என கூறப்படும் எம்.நடராசன் மற்றும் அவரது ஆட்கள் ஜெயலலிதாவை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகத் தெரிகிறது. அரசியல் மற்றும் பொது விஷயங்கள் குறித்து, ஜெயலலிதாவின் கருத்தை கேட்க, நிருபர் சென்றால் அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் பெங்களூர் அருகே உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக நடராசன் கூறுகிறார். ஆனால், அங்கே சென்று பார்த்தால், ஜெயலலிதா இல்லை. பொது விஷயங்கள் குறித்து ஜெயலலிதாவின் கருத்தையறிய பொது மக்களுக்கு உரிமையுண்டு. எனவே, ஜெயலலிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சுதந்திரமாக நடமாட விட வேண்டும்.' என அந்த மனுவில் சொல்லியிருந்தார் ஷ்யாம்.

ஜெயலலிதா

ஜெயலலிதாவை நேரில் ஆஜர்படுத்த கோரும் ஹேபியஸ் கார்பஸ் மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அதே நேரம், அப்போது சபாநாயகராக இருந்த தமிழ் குடிமகனிடமும் ஒரு மனு அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொந்த தொகுதியான போடியிலிருந்து வாக்காளர் ஒருவர், சட்டமன்ற செயலகத்தில் மனு ஒன்றை அளித்தார். 'எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதாவை சட்டசபையில் ஆஜர்படுத்த சபாநாயகர் உத்தரவிட வேண்டும்' என அவர் கேட்டிருந்தார். ''எதிர்க்கட்சித் தலைவரை சட்டப்பேரவையில் நேரில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு உத்தரவிட முடியாது'' என சொன்னார் தமிழ் குடிமகன்.

ஷ்யாம் போட்ட வழக்கு, நீதிபதிகள் எஸ்.சிவசுப்பிரமணியன், டி.எஸ்.அருணாசலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் முன்பு  1989 ஜூன் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்காமலேயே தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். உத்தரவில் நீதிபதிகள் சொன்ன விஷயம் இதுதான்.

'பொது மக்கள் நன்மை கருதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதை ஏற்க முடியாது. அதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் திருப்திபடுத்தும் வகையில் மனுதாரர் வைக்கவில்லை. ஜெயலலிதா சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் மனுதாரர் கூறவில்லை. ஏதோ அனுமானத்தின் பெயரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காற்றுவாக்கில் கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு, ஜெயலலிதா எங்கேயோ அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என முடிவு செய்து, மனு தாக்கல் செய்துவிட்டார் மனுதாரர். எதிர்க் கட்சித் தலைவராக உள்ள ஒருவரை, தனிப்பட்ட ஒருவர் எப்படி சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்க முடியும்? என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சித் தொண்டர்களோ தலைவர்களோ ஜெயலலிதாவை நடராசன் அடைத்து வைத்துள்ளார் என்பது பற்றி எந்தவிதமான புகாரையும் கூறவில்லை. நிருபரோ அல்லது பொது மக்களோ ஒரு தலைவரிடம் இருந்து, கருத்துகளை எதிர்பார்க்க எப்படி உரிமையுள்ளதோ அதே போல், அந்தத் தலைவர், அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க உரிமையுண்டு. ஜெயலலிதாவைப் பல இடங்களில் தேடியதாக மனுதாரர் கூறியிருக்கிறார். அவர் போலீஸாரின் உதவியை நாடியதாகத் தெரியவில்லை. தேவைப்பட்டால் அவர் போலீஸாரின் உதவியை நாடலாம்.' என சொன்னார்கள் நீதிபதிகள்.

ஷ்யாம் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் எஸ்.கிருஷ்ணசாமி, ''சுப்ரீம் கோர்ட்டில் அப்பிள் மனு தாக்கல் செய்ய அனுமதி வேண்டும்'' எனக் கேட்டார். ஆனால், நீதிபதிகள் அனுமதி தரவில்லை.

அதன்பிறகு என்ன நடந்தது? 

தொடரும்...

https://www.vikatan.com/news/coverstory/118526-the-rise-and-fall-of-sasikala-in-admk-series-part-8.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

''சட்டவிரோதமாக ஜெயலலிதா அடைத்து வைக்கப்பட்டாரா?”- சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 9

 
 

ஜெயலலிதா

ஜெயலலிதாவை நேரில் ஆஜர்படுத்த கோரும் ஹேபியஸ் கார்பஸ் மனு 1989 ஜூன் 20-ம் தேதி தள்ளுபடியான அடுத்த நாள்தான் 'தராசு' பத்திரிகை மீது அவதூறு வழக்கு போட்டார் ஜெயலலிதா. அதன்பிறகு 10 நாள்கள் வரையில் ஜெயலலிதாவிடமிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

 

ஜூலை மாதம் பிறந்தது. 'இரண்டு மாத அஞ்ஞாதவாசத்துக்குப் பிறகு, ஜெயலலிதா வெளியே வரப்போகிறார்' எனச் செய்திகள் றெக்கைக் கட்ட ஆரம்பித்தன. கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஜெயலலிதா வருவார் என ஜூலை முதல் தேதியிலிருந்தே தகவல்கள் கிளம்பின. இதனால், கட்சித் தொண்டர்களும் செய்தியாளர்களும் தலைமை அலுவலகத்திற்கு தினமும் படையெடுத்தார்கள். பட்டாசுகளுடன் தலைவியை தரிசிக்க காத்திருந்த தொண்டர்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. கடைசியாக, 'ஜூலை 3-ம் தேதி வருவார்' எனத் தகவல் வெளியானது. அன்றைக்கும் ஜெயலலிதா வரவில்லை. ஆனால், அடுத்த நாள் 4-ம் தேதி கட்சியின் சீனியர்கள் சிலரை, கார்டனுக்கு அழைத்துப் பேசினார் ஜெயலலிதா.

ராகவானந்தம், மாதவன், ஹண்டே, காளிமுத்து, முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த திருநாவுக்கரசரும் கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆரும் அழைக்கப்படவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற காளிமுத்து ஏனோ கூட்டம் முடிவதற்கு முன்பே வெளியே வந்துவிட்டார்.

கூட்டத்தில் பொரிந்து தள்ளிவிட்டார் ஜெயலலிதா. அவரின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. ''அரசியலில் என்னைச் சிலர் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார்கள். நிர்பந்திக்கிறார்கள். நீங்கள் எல்லோருமே என்னை வைத்து வியாபாரம் நடத்த பார்க்கிறீர்கள். எனக்கு அரசியலே வேண்டாம். நான் ஒதுங்கிக் கொள்கிறேன். வேறு பொதுச் செயலாளரை தேர்வு செய்து கொள்ளுங்கள்.'' என சீறினார் ஜெயலலிதா.

நடராஜன்

'ஜெயலலிதா விரக்தியில் இருக்கிறார்' என்பது அப்போதுதான் சீனியர்களுக்குத் தெரிய வந்தது. ''ஜெயலலிதா சுய உணர்வுடன் பேசவில்லை. கார்டனுக்குள் இருக்கும் ஒரு கூட்டம் அவரை ஆட்டிப்படைக்கிறது. சசிகலா - நடராசன் பிடியில் அவர் இருக்கிறார்'' என முணுமுணுத்தார்கள் சீனியர்கள். ஆனால், இந்த விஷயத்தை மாதவன், ராகவானந்தம் மறுத்தார்கள். போயஸ் கார்டனில் நடந்த கூட்டம் பற்றி பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, மாதவனும் ராகவானந்தமும் ''சொல்வதற்கு ஒன்றுமில்லை'' என்றார்கள். ''சொல்லக் கூடாதது எதுவும் இருக்கிறதா?'' என நிருபர்கள் கேட்டபோது, சிரித்தபடியே பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்.

இந்த நிலையில், அடுத்த நாள் அதாவது ஜூலை 5-ம் தேதி அதிரடி ஒன்று கிளம்பியது. 'ஜெயலலிதாவை நடராசன் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்' எனப் புகார் கிளம்பியது. 'அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவை, அவரது குடும்ப நண்பரும் ஆலோசகருமான நடராசன் உள்ளிட்ட சிலர், சட்டவிரோதமாக அடைத்து வைத்திருக்கிறார்கள். எனவே, ஜெயலலிதாவை வெளியே கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.' என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.விஸ்வநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் துரையிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

இதன் நகலை ஜனாதிபதி, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர், கவர்னர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு விஸ்வநாதன் அனுப்பி வைத்தார். பொறியாளரான இந்த விஸ்வநாதன் வேறு யாருமில்லை. தேவகி மருத்துமனையின் டாக்டர் சொக்கலிங்கத்தின் சகோதரர். ஜனவரியில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. ஜெ அணியின் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனவர்தான் விஸ்வநாதன். இத்தனைக்கும் நடராசனுக்கு மிக நெருக்கமானவர். மிக உயர்ந்த விலை கொடுத்துதான் தேர்தல் சீட்டை விஸ்வநாதன் வாங்கினார் என அப்போது கட்சி வட்டாரத்தில் செய்திகள் உளவின.

ஜெயலலிதா, சசிகலா

 

''வேட்பாளர்களிடம் பணம் வாங்கி அதைத் திருப்பித் தராமல் மிரட்டிய வழக்கில், கைதான நடராசன் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன்பின் ஜெயலலிதாவை பார்ப்பதற்காகப் பல முறை முயன்றும் முடியவில்லை. அவரை வெளியே நடமாட முடியாமல் நடராசன் உள்ளிட்டவர்கள் வீட்டுக் காவலில் வைத்திருக்கிறார்கள் என நான் அஞ்சுகிறேன்.' எனப் புகார் மனுவில் தெரிவித்திருந்தார் விஸ்வநாதன்.

ஜெயலலிதாவை வெளியே ஆஜர்படுத்த கோரும் ஹேபியஸ் கார்பஸ் மனுவை சில வாரங்களுக்கு முன்பு 'தராசு' பத்திரிகை ஆசிரியர் ஷ்யாம் உயர்நீதிமன்றத்தில் கொண்டு வந்தார். 'இது தொடர்பான புகாரை போலீஸில் அளிக்க வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தனது மனுவில் சுட்டிக்காட்டினார் விஸ்வநாதன்.

புகார் மனு அளித்த விஸ்வநாதன் பத்திரிகையாளர்களிடம் விரிவாகப் பேசினார். ''பொது மக்களையும் தொண்டர்களையும் ஜெயலலிதா அடிக்கடி சந்திப்பவர். நடராசனின் நிர்பந்தத்தால் கடந்த சில காலமாக ஜெயலலிதா, யாரையும் சந்திக்கவில்லை. எல்லாத் தொடர்புகளும் நடராசன் மூலமே நடைபெறுகிறது. நடராசன் சிறையில் இருந்தபோது ஜெயலலிதா அனைவரையும் தவறாமல் சந்தித்து வந்தார். நடராசன் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, ஜெயலலிதாவை யாரும் சந்திக்க முடியாமல் செய்து வருகிறார் நடராசன். சட்டசபை கூட்டத்துக்கூட ஜெயலலிதா வரவிடமால் நடராசன் ஆட்கள் தடுக்கிறார்கள் எனச் சந்தேகப்படுகிறேன். கட்சியின் மூத்த தலைவர்களை ஜெயலலிதா சந்தித்தபோது, தான் அரசியலை விட்டு விலக விரும்புவதாக விரக்தியுடன் தெரிவித்திருக்கிறார். இதற்கும் நடராசனின் நிர்பந்தம்தான் காரணமாக இருக்கக் கூடும். ஜெயலலிதா தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் விருப்பம். கட்சியே அவர்தான் என்பது எங்களது அசைக்க முடியாத எண்ணம். எனவே, எங்களைப் போன்ற தொண்டர்களைப் பொறுத்தவரையில் அவர் வெளியே வந்து, மக்களை சந்திக்க வழியேற்பட வேண்டும்'' என மீடியாவிடம் விளக்கமாகப் பேசினார் விஸ்வநாதன்.

விஸ்வநாதனின் புகார் மனு வேலை செய்ய ஆரம்பித்தது.

(தொடரும்)

https://www.vikatan.com/news/coverstory/118752-the-rise-and-fall-of-sasikala-in-admk-series-part-9.html

Link to comment
Share on other sites

”நடராசன், சசிகலா என் வேலைக்காரர்கள் அல்ல!”- படபடத்த ஜெயலலிதா - சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 10

 
 

நடராசன் சசிகலா

இந்தத் தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க...

 

ஷ்யாம் போட்ட ஹேபிஸ் கார்பஸ் மனு, விஸ்வநாதன் போலீஸில் கொடுத்த புகார் என அடுத்தடுத்து அஸ்திரங்கள் வீசப்பட.. கார்டனுக்குள் புகைச்சல். அன்றிரவே போயஸ் கார்டனில் இருந்து, பத்திரிகை அலுவலங்களுக்கு போன். ''நாளை காலை கார்டனில் பத்திரிகையாளர்களை மேடம் சந்திக்கிறார்'' என தகவல்கள் பறந்தன. விஸ்வநாதன் புகார் கொடுத்த அடுத்த நாள். அதாவது ஜூலை 6-ம் தேதி வியாழக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஜெயலலிதா. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவின் தரிசனம் உலகுக்கு கிடைத்தது.

''நான் குழந்தை அல்ல. என்னை யாரும் ஒளித்து வைக்க முடியாது.'' என எடுத்த எடுப்பிலேயே கர்ஜிக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. ''என்னை யாரும் சிறை வைக்கவில்லை. நான் யாருடைய கட்டுப்பாட்டிலும் கிடையாது. இதுபோன்ற பொய்யான செய்திகளை அரசியல் நோக்கத்துடன் சிலர் வெளியிடுகிறார்கள். எனது குடும்ப நண்பர் எம்.நடராசனின் கட்டுப்பாட்டில் நான் இருப்பதாகவும் என்னைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் என் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர், போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். சிலருடைய தூண்டுதலின் பேரில், அவர் புகார் அளித்திருக்கிறார். கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காகவும் கட்சியை கேலிக்குரியதாக ஆக்கியதற்காகவும் விஸ்வநாதனை கட்சியிலிருந்து நீக்கியுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் தனியாக இருக்க விரும்புகிறேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. நான், என் சொந்தப் பணத்தில் கட்டிய வீட்டில் இருக்கிறேன். இங்கு நான்தான் எஜமானி. நான் ஒன்றும் குழந்தை அல்ல. 41 வயதான நான், யாருடைய கைதியாகவும் இங்கு இல்லை. சசிகலா எனது நெருங்கிய தோழி. அவரது கணவர் நடராசன். இருவரும் எனக்கு வேலைக்காரர்களும் அல்ல. ஆலோசகர்களும் அல்ல. என் வீட்டில் யாரையும் தங்க வைக்க எனக்கு உரிமை உண்டு. கட்சி அலுவலகத்தில், நான் யாரையும் தங்க வைக்கவில்லை. 'கட்சிக்காரர்கள் யார் வந்தாலும் வீட்டில் அனுமதிக்க வேண்டாம்' என நான் உத்தரவிட்டிருக்கிறேன். அப்படியிருக்கும்போது நடராசன் மீது பழிபோடுவது சரியல்ல. அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த யாரும் நடராசனுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது. அவர் எனது உதவியாளர் அல்ல. அவர், எனது தோழி சசிகலாவின் கணவர் அவ்வளவுதான். சசிகலா, நடராசன் ஆகியோருக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இத்தனைக்கும் அவர்கள், அ.தி.மு.க.-வில் உறுப்பினர்கள்கூட அல்ல. கட்சித் தொடர்பான செய்திகளை தெரிந்து கொள்ள, கட்சி அலுவலகத்தில், உள்ள துரை என்பவருடன் தொடர்பு கொள்ளலாம். நடராசனுடன் கண்டிப்பாக தொடர்பு கொள்ள வேண்டாம். இதையும் மீறி, நடராசனுடன் கட்சியினர் தொடர்பு கொள்வதால்தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.'' என சசிகலா, நடராசன் ஆகியோருக்கு கேடயமாக நின்று பேசினார் ஜெயலலிதா.

ஜெயலலிதா

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடப்பதற்கு சரியாக மூன்று மாதம் முன்பு, அதாவது, ஏப்ரல் 4-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, ''செங்கோட்டையன், எனது குடும்ப நண்பர்கள் சசிகலா, நடராசன் ஆகியோரை சாலை விபத்து மூலம் இன்னும் ஒரு மாதத்துக்குள் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு (தி.மு.க.) மிக நெருக்கமான வட்டாரத்தில் இருந்து, எனக்கு தகவல் வந்திருக்கிறது.'' என நடராசன், சசிகலாவுக்கு ஆதரவாக அப்போது திருவாய் மலர்ந்தார். இந்த மூன்று மாதக் காலத்தில் மன்னார்குடியின் ஆட்டம் கார்டனுக்குள் முரசு கொட்டிக் கொண்டிருந்தது. ஜெயலலிதாவை, அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இவ்வளவுக்கு பிறகும் சசிகலாவையும் நடராசனையும் ஜெயலலிதா ஏன் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார் என்பதில், அவர்களுக்குள் என்னவோ ஒரு விவகாரம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது. .

''நான் சிறை வைக்கப்படவில்லை'' என ஜெயலலிதா முழுங்கிய அந்த பிரஸ்மீட்டில், ''அரசியலில் தீவிரமாக ஈடுபடாததால், என் தொகுதி மக்களுக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு அரசியல் தலைவர் சில காலம் ஒதுங்கியிருப்பது வரலாற்றில் புதியது அல்ல. சீனாவில் மாசேதுங் கூட பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்திருக்கிறார்.'' என்றார். உடனே ஒரு நிருபர், ''இது ஜனநாயக நாடு அல்லவா? இங்கே எப்படி ஒதுங்கியிருக்க முடியும்?'' எனக் கேள்வி எழுப்பியபோது, ''ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நான் யாரையும் சந்திக்காமல் இருந்ததற்கு காரணம் உண்டு. அதை வெளியே சொல்ல முடியாது.'' என்றார் ஜெயலலிதா. அப்படி அவர் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு, அவர் மன உளச்சலுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதுதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு சொல்லும் செய்தி.

அந்த பிரஸ் மீட்டில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஜெயலலிதா அளித்த பதில்களும்கூட விஷயம் பொதிந்தவைதான்.

கேள்வி: ''இரண்டு நாட்களுக்கு முன்பு, கட்சித் தலைவர்களை அழைத்து பேசும்போது, அரசியலில் இருந்து விலகப் போவதாக நீங்கள் சொன்னதாக தகவல் பரவியதே...?''

ஜெயலலிதா: ''தற்போது நான் அரசியலில்தான் இருக்கிறேன்.''

கேள்வி: ''நீங்கள் கோவாவுக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறதே?''

ஜெயலலிதா: ''பல இடங்களுக்கு நான் சென்றேன். பெங்களூரில் என் அத்தை வீட்டில் தங்கியிருந்தேன்.''

கேள்வி: ''அரசியலில் இருந்து விலகும் எண்ணம் உண்டா?''

ஜெயலலிதா: ''அரசியலில் இருந்து இப்போதைக்கு நான் விலகவில்லை. நாளை என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. வரும் 12-ம் தேதி சென்னை கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது இதுதொடர்பாக தெளிவான விளக்கத்தை அளிப்பேன்.''

கேள்வி: ''காங்கிரஸைவிட அதிக எம்.எல்.ஏ-களை வைத்திருக்கும் நீங்கள், ராஜ்ய சபா எம்.பி பதவியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது ஏன்?''

ஜெயலலலிதா: ''இரு கட்சிகளிடையே நல்லுறவை நீடிக்கவும் உறவைப் பலப்படுத்தவும் சீட்டை விட்டுக் கொடுத்தோம். இரு கட்சித் தலைவர்களும் பேசிதான் முடிவு செய்தோம்.'' என்றார். ஆனால், இந்த முடிவை ஜெயலலிதா எடுப்பதற்கு காரணமே அந்த ராஜ்ய சபா சீட்டுக்கு நடராசன் குறி வைத்ததுதான். அதனால்தான் சீட்டை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தார் ஜெயலலிதா.


தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ''நான் சிறை வைக்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த மட்டுமே இந்த பிரஸ் மீட் வேறு கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.'' என்றார்.

சுமார் அரை மணி நேரத்திலேயே பிரஸ் மீட் முடிந்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் அவர், ''அரசியலில் நீடித்து இருப்பேன்'' என்பதை ஜெயலலிதா திட்டவட்டமாக சொல்லவில்லை. இதனால் அவர் அரசியலில் இருந்து எந்த நேரமும் விலகலாம் என்பதே, அவர் பேச்சின் வெளிப்படாக இருந்தது. ''ஜூலை 12-ம் தேதி சென்னை கட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-கள் கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது இதுதொடர்பாக தெளிவான விளக்கத்தை அளிப்பேன்'' என ஜெயலலிதா சொன்னதுபோல எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அது அடுத்த சில மாதங்களிலேயே அதாவது டிசம்பர் மாதத்திலேயே வெடித்தது. அந்த டிசம்பர் புரட்சி என்ன?

(தொடரும்)

https://www.vikatan.com/news/coverstory/119815-the-rise-and-fall-of-sasikala-in-aiadmk-series-part-10.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.