Jump to content

மைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் - ‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்!


Recommended Posts

மைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் - ‘வசூல்ராஜா’ பாணியில் தேர்வெழுத வந்த தில்லாலங்கடி ஐ.பி.எஸ்!

 
Chennai: 

திருடன்- போலீஸ் ஆட்டம் விளையாடியிருப்போம். ஆனால், ஒரு போலீஸே திருடனாய் மாட்டிக் கொண்ட கதை தெரியுமா..? நாங்குனேரி துணைச்சரக உதவிக் காவல்துறை கண்காணிப்பாளரான சபீர் கரிம்தான் மாட்டிக் கொண்ட போலீஸ். ஆம் 30-ம் தேதி சென்னையில் நடந்த சிவில் சர்வீஸ் பிரதானத் தேர்வில்  'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் ஸ்டைலில் `ப்ளூடூத்' உதவியோடு தேர்வெழுதி மாட்டிக் கொண்டார். இதற்கு அவர் மனைவி ஜாய்ஸியும் உடந்தை என்பதுதான் ஹைலைட்! 

போலீஸ்

 

‘குற்றங்கள்... அதிலும் தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்யப்படும் குற்றங்களைத் தடுக்கக் காவல்துறை நவீனமயமாக்கப் படவேண்டும்.' - இதுதான் இஸ்ரேலுக்குச் சில மாதங்களுக்கு முன் பயிற்சிக்காக சபீர் கரிம் அரசின் சார்பாகச் சென்று வந்ததன் நோக்கம். உலகின் தொழில்நுட்பக் குற்றங்களைக் கண்டறிந்து களையும் பயிற்சியை இஸ்ரேல் போலீஸ் இந்திய போலீஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு அளித்து வருகிறது. இந்தப் பயிற்சி முடித்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அதற்குள் அவரே தொழில்நுட்பக் குற்றவாளியாக எப்படி மாறினார் என்பதுதான் ஷாக்கோ ஷாக். 

கடந்த 30ம் தேதி எழும்பூரில் இருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்குத் தேர்வெழுத வந்த சபீர் தன் சட்டையின் பாக்கெட்டில் மைக்ரோ கேமராவை கூகுள் டிரைவோடு கனெக்ட் செய்து வைத்திருந்தார்.  காதில் ப்ளூடூத் மாட்டி அதில் பஞ்சையும் வைத்திருந்தார். பார்ப்பவர்களுக்கு எளிதில் சந்தேகம் வர வாய்ப்பில்லை. காரணம், முதல்நாளே அவரைப் பயிற்சியில் இருக்கும் காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி அதை யூ.பி.எஸ்.சி தேர்வு நடத்தும் அதிகாரிகள் உறுதி செய்ததால் யாருக்கும் அவர்மீது துளியும் சந்தேகம் வரவில்லை. அன்று பொதுஅறிவு எழுத்துத் தேர்வில் கேள்வித்தாளை வாங்கியதும் முதல்வேளையாக கேமரா மூலம் ஸ்கேன் செய்து கூகுள் டிரைவ் வழியாக ஹைதராபாத்திலிருக்கும் தன் மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் சபீர். ஜாய்சியும் சாதாரண ஆள் இல்லை.

ஹைதராபாத்திலிருக்கும் லா எக்சலன்ஸ் ஐ.ஏ.எஸ் ஸ்டடி சர்க்கிள் என்ற பயிற்சி மையத்தில் உட்கார்ந்து கொண்டு சுடச்சுட இணையத்திலும் புத்தகங்களிலும் இருந்து சபீருக்குத் தேவையான பதில்களை வாய்மொழியாகவே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். முதல் 20 நிமிடம் எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்தபோது எப்படி மாட்டிக் கொண்டார் சபீர்?

போலீஸ்

இடையில் ப்ளூடூத் சிக்னல் கிடைக்காமல் தடுமாற, மனைவியின் பதில் தெளிவாக சபீருக்குக் கேட்கவில்லை. உடனே தேர்வுத்தாளில் எனக்குத் தெளிவாக கேட்கவில்லை. மீண்டும் சொல்லவும்' என்பதை ஆங்கிலத்தில் எழுதி ஸ்கேன் செய்து அனுப்பும்போது சந்தேகத்தின் பேரில் இன்விஜிலேட்டரிடம் மாட்டிக் கொண்டார். காவல்துறையினருக்குத் தகவல்போனதும், காதிலிருக்கும் பஞ்சை எடுக்கச் சொன்னபோது எடுக்க மறுத்திருக்கிறார். கட்டாயப்படுத்தி எடுக்கச் சொன்னபோது ப்ளூடூத்தோடு காதும் களவுமாக மாட்டிக் கொண்டார் சபீர். ப்ளூடூத்தின் வழியாக தொடர்பிலிருந்த அவரது மனைவி ஜாய்சியையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 'லா எக்ஸலென்ட்  ஐ.ஏ.எஸ் ஸ்டடி சர்க்கிள்' என்ற மையத்தின் உதவியாளர் டாக்டர் ராம்பாபுவும் மாட்டிக் கொண்டார்கள். இவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தது டெபுடி கமிஷனர் அரவிந்தன் என்ற இளம் ஐ.பி.எஸ் அதிகாரி.போலீஸ்

இபிகோ 420, 120 பி போன்ற பிரிவுகளில் கைது செய்திருப்பதாலும், சபீர் இன்னமும் பயிற்சியில் இருப்பதாலும் அவரது ஐ.பி.எஸ் பறிக்கப்படும் என்கிறார்கள். சபீரின் பின்னணி குறித்து விசாரித்தால் பரிதாபமே மிஞ்சுகிறது. கடந்த 2015-ல் கேரள அரசின் கேட் எக்ஸாமில் முதல் மாணவராகத் தேர்வானவர். ஆனால், அதே வருடம் திருவனந்தபுரத்தில் ஐ.ஏ.எஸ் கோச்சிங்குக்காக ஒரு பயிற்சி மையத்தை ஆரம்பித்துப் பாடம் நடத்தி மாணவர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். 2016-ல் தன் மையத்தில் பொருளாதாரப்பாடம் எடுக்க வந்த ஜாய்சியை காதல் திருமணம் செய்திருக்கிறார். கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் 112-வது ரேங்க் எடுத்து ஐ.பி.எஸ்ஸை விருப்பமாகத் தேர்ந்தெடுத்தவர். 'ஆசையாகப் பதவிக்கு வந்தவருக்கு ஏன் மீண்டும் ஐ.ஏ.எஸ் ஆசை?' என்று நண்பர்கள் வட்டத்தில் விசாரித்தபோது வேறு கதை சொல்கிறார்கள். ''ரொம்பத் திறமையான இளைஞர் சபீர். சமீபத்தில் போலீஸ் பயிற்சியின்போது காயமடைந்து அந்த வேலைக்கு ஃபிட்னெஸ் இல்லாதவர் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலிலும், ஐ.ஏ.எஸ் ஆவது தன்வசமிருக்க வேண்டும் என்ற உந்துதலிலும் அவர் அப்படித் தவறு செய்திருக்கக்கூடும்.'' என்கிறார்கள். எது எப்படியோ, குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைச் சட்டத்தின் பிடியில் ஒப்படைக்க வேண்டிய காவல்துறையின் பயிற்சி அதிகாரியே இப்படிக் குற்றச்செயலில் ஈடுபட்டது மிக மிக கண்டிக்கத் தக்கது. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பதே நீதி! 

டெய்ல் பீஸ்:

 

ஐ.ஏ.எஸ் தேர்வில் சீட்டிங் செய்வது இது முதன்முறை அல்ல... சில வருடங்களுக்குமுன்னர், வயதைக் குறைத்துக் காட்டி தேர்வெழுதி, கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டு பலபேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதிலும் வினோதமான கேஸும் உண்டு. கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் இதேபோன்ற முறைகேட்டில் ரதி பால் சரோஜ் என்பவர் ஈடுபட்டதாக சர்ச்சை கிளம்பியது. அவரது சகாக்களோடு சேர்ந்து பிரதான தேர்வின் பதில் தாளை மாற்றிக் கொடுத்தார் என்பதே புகார். மார்ச் 2, 1992-ல் தான் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமாகி நீதிமன்ற தீர்ப்பின் வழி அவரது ஐ.ஏ.எஸ் பறிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த தேஷ் ராஜ் சுக், ப்ரமோத் மத்தூர், இந்தர்நாத் உப்பல் என்ற மூன்று பேருக்கும் தண்டனை கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்மீது சந்தேகம் வந்து அவர் எழுதிய பிரதானத்தேர்வின் பதில் தாள்களைக் கைப்பற்றவும், அவர்மீது குற்றத்தை நிரூபிக்கவும் காலதாமதமான கேப்பில் மத்திய அரசில் அவர், டெபுடி செக்ரட்டரி லெவலுக்கு பதவி உயர்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகுதான் கம்பி எண்ணவைத்து, ஐ.ஏ.எஸ் பறிக்கப்பட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/106465-story-of-a-police-who-was-caught-as-a-thief.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.