Sign in to follow this  
Innumoruvan

அபத்தம்

Recommended Posts

மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள்.
பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்தம் என்றிருந்தது.


ஒரு கதைப்புத்தகம் மண்டபத்தின் முன்னால் வைக்கப்பட்டிருந்தது. அப்புத்தகத்திற்குப் பொழிப்புரை என பல்வேறு முயற்சிகள் மண்டபததிற்குள் நடந்துகொண்டிருந்தன. புத்கத்தைச் சிலர் கொண்டாடினர், அப்புத்தகத்தின் உள்ளடக்கங்களைச் சித்தரிப்பதாகத் தமக்குத் தோன்றிய விடயங்களைச் சித்திரங்களாக்கி, அவற்றை நிரையாக கணனிவழி சுவரில் தெறித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் முடிவு சார்;ந்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருந்தார்கள். கதையின் முடிவில் ஆதிக்கம் செலுத்தியதாக அவர்கள் நம்பிய அக புறக் காரணிகள் சார்ந்து அவர்கள் தங்கள் விமர்சனங்களைச் சொல்லிக்கொண்டார்கள். ஏதோ ஒரு வகையில் பலரது மனம் புத்தகத்தின் ஏதோ ஒரு அம்சத்தில் குவியப்பட்டிருந்தபோதும், வந்திருந்தவர்களிற் சிலர், புத்தகத்திற்குச் சற்றும் சம்பந்தமில்லாத தமது பிணக்குகளையும் உரசிப்பார்த்தார்கள்.


முட்டை மண்டபம் அமைந்திருந்த காணி விசித்திரமாக இருந்தது. ஒரு உயரமான மரத்தில் ஏறி நின்று கீழ் நோக்கி அந்தக் காணியினைப் பார்க்கின் அது ஒரு அடைக்கோழி போன்று தோற்றமளித்தது. முட்டைக்கு அடைக்கோழி பொருத்தமாகத் தான் இருந்தது. கோழி வாலறுந்ததாக இருந்தது. அது உண்ட இரைகள் விசித்திரமான முறையில் கோழியின் வயிற்றின் ஒரு பகுதியில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. உணவு செரித்துவிட்டபோதும், தான் உண்ட அனைத்து இரையினையும் கோழி வயிற்றிற்குள் அடையாளப்படுத்தி வைத்திருந்தது. கோழியின் தொண்டைவழி மண்டபத்திற்கு மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

மண்டபத்திற்குள் வைக்கப்பட்டிருந்த புத்தகம் புதியதோர் உலகம் போன்று ஒரு கூட்டு முயற்சியாக இருந்தது. எழுத்தாளர்கள் மண்டபத்திற்குள் இருந்தார்கள். புத்தகத்தை வாசித்தவர்கள் அதனை ஒரு புனைவுபோன்றும் சமயத்தில் கொண்டாடியபோதும், புத்தகம் உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. கதைமாந்தர்களும் அந்த மண்டபத்திற்குள் இருந்தார்கள். புத்தகத்தைப் பார்ப்பதும், பின் கதைமாந்தர்களைக் கண்களாற் தேடுவதுமாக வந்திருந்தவர்கள் மண்டபத்திற்குள் இருந்தார்கள். கதைமாந்தரைக் கண்டமாத்திரத்தில் வரையறுக்கப்பட்ட வித்தில் தாம் நடந்துகொள்ளவேண்டும் என்று வந்திருந்தவர்கள் ஏனோ நம்பினார்கள். ஆனால், விசித்திரமான முறையில், அறையில் இருந்த நிசப்த்தம், வந்திருந்தவர்களின் உணர்வுகளையும் ஓசையற்றதாக்கியிருந்தது. மூளை இவைசார்ந்து இவ்வாறு நீ உணர்வாய் என்று உணர்த்தத் தலைப்பட்டபோதும், மனது வரண்டநிலமாய் உணர்ச்சியற்று நிசப்த்தம் காத்தது. 


மண்டபத்துள் இருந்தவரை, புத்தகத்திற்குள் இடைச்செருகல்களையோ பின்னிணைப்புக்களையோ வாசகர்களால் இணைத்துவிடமுடியவில்லை. நிசப்த்தம் வாசகரை நெறியாழ்கைசெய்தது. நிகழ்வு முடிந்து, வந்திருந்தவர்கள் அடைக்கோழியின் தொண்டைவழி தத்தமது வீடுகளை அடைந்து இரவு தூங்கி மறுநாள் காலையில் எழுந்தபோது...


புத்தகத்தின் கதையின் இரண்டாம் அத்தியாயம் ஒன்று வாசரகருள் ஒரு சிறு விதையாகத் துளிர்க்கத் துடித்தது. இந்த இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு அபத்தம் இருந்தது. அதாவது, கதைமாந்தரின் வாழ்வில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் தள்ளிநின்றபடி, தாம் எழுதவிளையும் இரண்டாம் அத்தியாயத்தால் தமக்கு எவ்வித பொறுப்போ செலவோ ஆகிவிடாதபடி பார்த்துக்கொண்டு, தாம் படித்த இலக்கியங்களினதும் தாம் பார்த்த நாடகங்களினதும் தாக்கத்தில், மனக்கிழர்வுடன் அந்த இரண்டாம் அத்தியாயம் துளிர்க்கத்தலைப்பட்டது. அபத்தம். உண்மைச் சம்பவங்களின் தொகுப்பிற்கு இது அபத்தம். 


ஆனால்:


உலகின் அனைத்து அபத்தங்களையும் போன்று, இந்த இரண்டாம் அத்தியாயமும் எழுத முயற்சிக்கப்படும். இலக்கியம் வலியது. அது அழகியலைச் செவ்வனே வாசகருள் பதியம்போட்டுவி;ட்டது. ஆதலால், அபத்தம் என்று தெரிந்தபோதும், அழகியலிற்கு இரைதேடி, அழகியல் கோணத்தில் இந்த இரண்டாம் அத்தியாயத்திற்கான முயற்சி நடக்கப்போவது திண்ணம். 


ஒருவேளை அந்த இரண்டாம் அத்தியாத்தின் தலைப்பும் இப்படி இருக்கும்:


'ஒரு மரணச்சடங்கு மண்டபத்திலிருந்து - சிறு குறிப்பு'


 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this