Jump to content

மிரள வைத்த மெர்சல்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: மிரள வைத்த மெர்சல்

திங்கள்கிழமை காலை... தூறலில் நனைந்தபடி கழுகார் அலுவலகத்தில் பிரவேசித்தார். ‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா என்ற எதிர்பார்ப்போடு டெல்லி தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க பிரமுகர்கள் காத்திருக்கிறார்கள். ‘மெர்சல்’ தீபாவளிக்கு ரிலீஸாகுமா என்ற படபடப்போடு விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்’’ என்றார்.

‘‘விஜய் படத்துக்கு என்ன பிரச்னை?’’

‘‘கேளிக்கை வரியை எதிர்த்து, ‘புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாது’ எனத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்ததும் ‘மெர்சல்’ படத்துக்குப் பிரச்னை தொடங்கிவிட்டது. கேளிக்கை வரியைக் குறைத்தும், டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டதும் இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆனால், விலங்குகள் நல வாரிய உருவத்தில் அடுத்த சிக்கல் ஆரம்பித்தது. ‘படத்தில் புறாவை விஜய் பறக்கவிடுவது போல வரும் காட்சியில் கிராஃபிக்ஸைப் பயன்படுத்தினோம்’ எனச் சொன்னதை விலங்குகள் நல வாரியம் ஏற்கவில்லையாம். ‘இது ஒரிஜினல் புறாதான்’ என்றதாம். ஏற்கெனவே ஜல்லிக்கட்டுப் போராட்ட நேரத்தில் விஜய் தெரிவித்த கருத்துகளும், இந்தப்படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக வரும் காட்சிகளும் விலங்குகள் நல வாரியத்தில் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் பட ரிலீஸுக்குச் சிக்கல் ஏற்படுத்த அவர்கள் முயன்றார்கள். தேவையெனில் சில காட்சிகளை நீக்கிவிட்டும் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானது தயாரிப்பாளர் தரப்பு. ஆனால், தமிழக அரசு தரப்பிலிருந்தும் குடைச்சல் வரலாம் எனத் தெரிந்ததாம்...’’

p44.jpg

‘‘ஏன்?’’

‘‘சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ டிரெய்லரில் ‘ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்’ என்ற டயலாக் இருந்ததே காரணம். ஏற்கெனவே ரஜினி, கமல் என கோடம்பாக்க அரசியல் அதிரடிகளில் தடுமாறிப் போயிருக்கும் தமிழக அரசு, ‘மெர்சல்’ படத்தை விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கான அஸ்திவாரமாகப் புரிந்துகொண்டது. இதுதொடர்பாக சில அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்ததைத் தெரிந்துகொண்ட விஜய், அவசரமாக ஞாயிற்றுக்கிழமை முதல்வரைச் சந்தித்துப் பேசினார். ‘கேளிக்கை வரியைக் குறைத்ததற்காக நன்றி தெரிவிக்கவே இந்தச் சந்திப்பு’ எனக் கூறப்பட்டாலும், ‘படத்தில் அரசியல் சர்ச்சைகள் எதுவுமில்லை’ என முதல்வரிடம் விஜய் விளக்கினாராம். இதைத் தொடர்ந்து ‘மெர்சல்’ ரிலீஸுக்கான வேலைகள் வேகம் பிடித்துள்ளன’’ என்ற கழுகார், எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நடக்கும் பனிப்போர் குறித்த  கட்டுரையைப் படித்தார்.
‘‘தினகரன் அணியைச் சேர்ந்த பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலைகூட இதை வழிமொழியும் விதமாகத்தான் பேசியிருக்கிறார், கவனித்தீரா?’’ என்றோம்.

‘‘ஆம். தனி அணியாக இயங்கியபோது, பி.ஜே.பி பக்கம் சாய ஓ.பி.எஸ். விரும்பினார். இப்போது அந்தப்பேச்சு மீண்டும் கிளம்பியுள்ளது. ஆனால், இப்போது அதற்கான வாய்ப்பில்லை என்றே டெல்லி பட்சிகள் சொல்கின்றன. இப்போது பி.ஜே.பி பக்கம் ஓ.பி.எஸ் போவதால் அவருக்கும் பலனில்லை; பி.ஜே.பி-க்கும் பலனில்லை.’’

‘‘விலை உயர்த்தப்பட்ட பிறகு தீபாவளி டாஸ்மாக் மதுபான விற்பனை எப்படி?’’

‘‘டாஸ்மாக்கைவிட முக்கியமான செய்தி ஒன்று சொல்கிறேன். பணமதிப்பிழப்பு நேரத்தில் டாஸ்மாக் சார்பில் 88 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகள் வங்கியில் செலுத்தப்பட்டதும், அதற்கு விளக்கம் கேட்டு வருமான வரித்துறை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதும் பழைய செய்தி. இப்போது அதில் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2016 நவம்பர் 9 முதல் டிசம்பர் 31 வரை பல வங்கிகளில் டாஸ்மாக் அதிகாரிகள் பணம் செலுத்தினர். அதில்தான் சர்ச்சை. ‘டாஸ்மாக் நிறுவனத்தின் ஒரு நாள் வருமானம், அதிகபட்சமாக ரூ.70 கோடி. ஆனால், அந்த நேரத்தில் டாஸ்மாக் அதிகாரிகளால், தினமும் 115 கோடி ரூபாய் வரை வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் வருமானத்தைவிட அதிகமாகப் பணம் செலுத்தியிருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்’ என்று கேட்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.’’

‘‘டாஸ்மாக் நிறுவனம் என்ன பதில் சொல்கிறது?’’

‘டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமாரோ, ‘ஒருசில டாஸ்மாக் பணியாளர்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள். இந்த வகையில் செலுத்திய தொகையை மொத்தமாகப் பார்த்தால், டாஸ்மாக் ஒரு நாள் வருமானத்தைவிட குறைவுதான். அப்படிச் செயல்பட்ட ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்கிறார். இதுபற்றி விசாரணை நடத்தினால், ‘ஆளுங்கட்சி பிரமுகர்களின் கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்பட்டது பற்றிய பல திடுக்கிடும் விவரங்கள் வெளிவரும்’ என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.’’

‘‘ஓஹோ! சசிகலா அமைதியாக பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றுவிட்டாரே?’’

p44ba.jpg

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனால், முதலமைச்சராக இருந்திருந்தால் என்ன மரியாதை கொடுப்பார்களோ, அந்த அளவுக்கு அவருக்கு மரியாதை கொடுத்துள்ளது தமிழக போலீஸ். இதுதான் இப்போது போலீஸ் வட்டாரத்திலும் கோட்டை வட்டாரத்திலும் ‘ஹாட் டாபிக்’. பரோல் முடிந்து சசிகலா பெங்களூருக்குக் கிளம்பியதும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் எடப்பாடி கிளம்பியதும் ஒரே நேரம். இருவரின் கார்களும் கிண்டியிலிருந்து கத்திபாரா ஜங்ஷன் வரை ஒரே நேரத்தில் வரும் சூழ்நிலை இருந்தது. கடைசி நேரத்தில் இதைக் கவனித்த உயர் போலீஸ் அதிகாரி ஒருவர், சக அதிகாரிகளை எச்சரித்தார். உஷாரான போலீஸார், சசிகலாவிடம் கொஞ்சம் முன்கூட்டியே கிளம்பும்படி கனிவாகக் கேட்டுக்கொண்டனர். சசிகலாவும் அதற்கு ஓகே சொன்னார். அதையடுத்து அவருடைய கார் கத்திபாரா ஜங்ஷனைத் தாண்டும்வரை, இடையில் உள்ள அனைத்து சிக்னல்களிலும் பச்சை நிறம் இருப்பதுபோல் செட் செய்யப்பட்டது. அதை தனி போலீஸ் டீம் கண்காணித்தது. இதுபோன்ற ஏற்பாடுகளை வி.வி.ஐ.பி-க்களுக்குத்தான் செய்வார்களாம். அந்த மரியாதையை இப்போது சசிகலாவுக்கு சென்னை போலீஸ் செய்திருக்கிறது. சசிகலாவுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். சசிகலா கார் பயணித்த சில நிமிடங்களில் எடப்பாடியின் கார் அந்த ரூட்டில் பயணித்தது.’’

‘‘தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க அணிகள் போட்ட வழக்கு எப்படிப் போகிறது?’’

‘‘இந்த வழக்கில் முக்கியமான ரோல், பன்னீர் ஆதரவாளரான அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு உண்டு. ‘அ.தி.மு.க அவசரப் பொதுக்குழுவில், சசிகலாவைக் கட்சியின் தற்காலிகப் பொதுச்செயலாளராக நியமித்தது செல்லாது’ என்று ஜனவரி 6-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் அவர்தான் வழக்குப் போட்டார். பன்னீர் தர்ம யுத்தம் தொடங்கியது அதன்பிறகுதான். அப்போதுதான் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் பன்னீர் அணி, தேர்தல் ஆணையத்தில் வழக்குப் போட்டது. இப்போது பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்துவிட்டதால், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியும் ஓர் வாதியாக மாறிவிட்டார். அக்டோபர் 6-ம் தேதி நடந்த விசாரணையில் மதுசூதனன், சசிகலா தரப்பு வாதங்களைத் தேர்தல் ஆணையம் கேட்டது. மற்ற வாதங்கள் அக்டோபர் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. சசிகலாவுக்கு எதிராக பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரின் ஆதரவாளராக மாறினார் கே.சி.பழனிசாமி. அதன்பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும் பன்னீரும் ஒன்று சேர்ந்துவிட்டனர். இப்போது, அவர்கள் இருவருமே கே.சி.பழனிசாமியிடம், அவரின் மனுவை வாபஸ் வாங்கச் சொல்லிப் பேசினார்கள். ‘உங்கள் முட்டுக்கட்டையால் இரட்டை இலை முடங்கிவிடக்கூடாது’ என்றார்களாம். அவரும் தன்னுடைய வழக்கை வாபஸ் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.’’

‘‘இரட்டை இலை ரிலீஸ் ஆகுமா?’’

‘‘இப்போது இருக்கும் மெஜாரிட்டி பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவின் அடிப்படையில் எடப்பாடி, பன்னீர் அணிக்கு இரட்டை இலையும் கட்சிப்  பெயரும் கிடைத்தாலும் அ.தி.மு.க பிரச்னை முடிந்துவிடாது. எடப்பாடியும் பன்னீரும் கூட்டிய பொதுக்குழுவில், ‘இனி அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவியே இல்லை. ஒருங்கிணைப்பாளர்களைப் பொதுக்குழு உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள்’ என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள். ‘கட்சியின்  எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் இல்லாமல் மொத்த பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 1,500. அவர்களில் இப்போது 300-க்கும் மேற்பட்டோர் சசிகலா அணியில் இருக்கிறார்கள்’ என்கிறார்கள். மீதி பேர் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்று எடப்பாடியும் பன்னீரும் சொல்கிறார்கள். இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இந்த ஆதரவு இருக்கலாம். ஆட்சி இல்லை என்றால் இவர்களில் பெரும்பாலானவர்களை வளைப்பது சசிகலாவுக்கு பெரிய காரியமில்லை. இப்போது கே.சி.பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருக்கும் மனுவிலும், ‘அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் பதவி இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் கூடாது. அடிப்படை உறுப்பினர்கள்தான் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். தேர்தல் ஆணையம் இப்படி ஒரு முடிவை எடுத்தால், பன்னீருக்கும் எடப்பாடிக்கும் சிக்கல்தான்!’’

‘‘தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எதற்காக நடக்கிறது?’’

‘‘தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில், வரும் 20-ம் தேதி நடக்க உள்ளது. அதில், ‘வாக்காளர் பட்டியல் தயாரித்தல், பெயர் சேர்த்தல், கட்சியின் எதிர்காலத் திட்டம் குறித்து விவாதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால், இந்தக் கூட்டத்துக்கு அதைவிட முக்கியமான வேறு நோக்கம் இருப்பதாக அறிவாலய வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘நமக்கு நாமே’ பயணம் என்று சுற்றுப்பயணம் சென்றது போல இந்த மாதக் கடைசியில் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்திக்க திட்டம் வகுத்துள்ளார் ஸ்டாலின். தமிழகத்தின் தெற்குப் பகுதியிலிருந்து இந்தப் பயணத்தை அவர் தொடங்குகிறார். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த டெல்லி தலைவர்களையும் இதன் தொடக்க நிகழ்வுக்கு அழைக்க இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தலுக்கு ரெடியாகிறது தி.மு.க. அதுதான் பிரதானம்’’ என்ற கழுகார், ‘‘இது ‘இந்திர’ லோக ரகசியம்’’ எனக் கிளம்பும்போது ஒரு தகவலைச் சொன்னார்.

‘‘சமீபத்தில் தென் தமிழகத்தில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில், முன்னாள் அ.தி.முக அமைச்சரின் உறவினர் பலியானார். அந்தக் காரிலிருந்து 3 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை போலீஸார் எடுத்தார்களாம். பிரபல நகைக்கடையில் அந்த அமைச்சர் பங்குதாரராம். அந்தக் கடைக்கு வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்படும் தங்கக் கட்டிகளை வாங்கிக் கொடுக்கும் வேலையைச் செய்துவந்தாராம் இநக்ச் சகோதரர். அந்த டீலிங் தொடர்பான பணமாம் இது. போலீஸ் அதிகாரிகள் பணத்தைப் பாதுகாப்பாக அந்த முன்னாள் அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டார்களாம்.’’

படங்கள்: வி.ஸ்ரீனிவாசுலு, ம.அரவிந்த்
அட்டை ஓவியம் : கார்த்திகேயன் மேடி


மோதிக்கொண்ட ஆதரவாளர்கள்!

p44a.jpg

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் தலைமையிலான அணிகள் இணைந்தாலும், கீழ் மட்டத்தில் மோதல் வலுவாக இருப்பதைக் கடந்த 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வெளிப்படையாகவே காட்டியது. விழாவுக்காக லோக்கல் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவர்ின் ஆதரவாளர்கள், மாவட்ட எல்லையிலிருந்தே ஃப்ளக்ஸ்களை வைத்து அதகளப்படுத்தினார்கள். சில ஃப்ளக்ஸ்களில் ஓ.பி.எஸ் படம் மிஸ்ஸிங். இதில் கடுப்பான ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட பலரும், விஜயபாஸ்கர் படம் இல்லாமல், கட்அவுட்கள் வைக்கவே புகைச்சல் அதிகமானது. சில இடங்களில், விஜயபாஸ்கரை மறைமுகமாகச் சாடும்படியான எம்.ஜி.ஆர் வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டன. அவற்றை விஜயபாஸ்கர் தரப்பு, போலீஸாரை வைத்து அகற்றியது. இதற்கு எதிராகக் கடந்த 12-ம் தேதி இரவு புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே திரண்ட ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஊர்வலமாக வந்ததுடன், மீண்டும் விஜயபாஸ்கர் படம் இல்லாமல் பேனர் வைத்தனர். அதன்பிறகே விழா மைதானத்தில் ஓ.பி.எஸ் படத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்பட்டன.

விழா மேடையில் அருகருகே உட்கார்ந்திருந்தாலும், கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் எடப்பாடி பக்கம் பன்னீர் திரும்பவே இல்லை. ஒருகட்டத்தில், எடப்பாடிக்கு அடுத்தபடியாக உட்கார்ந்திருந்த விஜயபாஸ்கரிடம் பேசுவதற்காகத் திரும்பியபோது மட்டும், எடப்பாடியிடம் தவிர்க்க முடியாமல் சில வார்த்தைகள் பேசினார் பன்னீர்.


‘‘வேறு சாட்சி வேண்டுமா?’’

p44c.jpg

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜகோபால தொண்டைமானின் மணி விழா திருச்சியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் தம்பி திவாகரன் கலந்துகொண்டார். தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும் நிகழ்ச்சிக்குப் போயிருந்தார். இருவரும் தனி அறையில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்களாம். இந்தக் காட்சியைச் சிலர் செல்போனில் படமெடுக்க... இருவருமே சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். ‘‘தி.மு.க-வும் தினகரன் அணியும் நெருக்கமாக இருக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்’’ என்று அ.தி.மு.க-வினர் கேட்கிறார்கள்.  இந்தச் சந்திப்பு பற்றி யாரிடமும் திருச்சி சிவா மூச்சு விடவில்லையாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.