Jump to content

திருத்தங்கள் தொடக்கம் அரசமைப்பு வரை ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்


Recommended Posts

திருத்தங்கள் தொடக்கம் அரசமைப்பு வரை ஏமாற்றப்படும் முஸ்லிம்கள்
 

காட்சிப் பிழையாலும் பிழையான காட்சிகளாலும் நிறைந்திருக்கிறது, முஸ்லிம்களின் அரசியல். எல்லாம் சரியாக நடக்கின்றது என்று முஸ்லிம் சமூகம் நம்பிக் கொண்டிருக்கின்றபோது, அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது. 

பிழையான காட்சியைக் கூட, சில தருணங்களில் பிழை எனக் காணாமல் இருப்பதும், போலிக் காட்சிகளை நிஜம் என நம்புவதும்தான் முஸ்லிம் மக்கள் சார்ந்த அரசியல் பின்னடைவுக்குக் காரணமாகும். முஸ்லிம்களின் அரசியல் தலைமைத்துவங்களும் அரசியல்வாதிகளும், தமக்குச் சாதமான பெருந்தேசியக் கட்சிகளின் காலடியில் கிடப்பதும், தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகத் தளபதிகள் சொற்போர் நடாத்துவதும், தளபதிகளை நம்பி ஒட்டுமொத்த சமூகமும் வாழாதிருப்பதும், இன்று ஏற்பட்டிருக்கின்ற கைச்சேதங்களுக்கு எல்லாம் அடிப்படையாகும். 

இலங்கை முஸ்லிம்கள், பௌத்த பேரினவாதத்தின் கோர முகத்தை, 200 வருடங்களுக்கு முன்னரே கண்டவர்கள். அதேபோன்று தமிழ் ஆயுதக்குழுக்கள் முன்கையெடுத்திருந்த காலப்பகுதியிலும், வேறு சில சந்தர்ப்பங்களிலும் தமிழர் விடுதலைப் போராட்டம் முஸ்லிம்களுக்கானதல்ல என்பதையும் பட்டறிந்து கொண்டவர்கள். ஆனால், இன்னும் சுரணையும் அரசியல் விழிப்புணர்வும் பிறக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. 

முஸ்லிம்களுக்குப் பிறகே தமிழர்கள், ஓர் இனக்கலவரத்தை எதிர்கொள்ள நேரிட்டது. ஆனால், உடனடியாக அவர்கள் உஷாரடைந்து விட்டார்கள். அந்தவகையில், 30 வருட ஆயுத மோதலையும் சேர்த்து, ஐம்பது வருடங்களுக்கும் மேலாக தமிழர்கள் போராடியிருக்கின்றார்கள். பெருந்தேசிய சிந்தனையில் ஊறித் திளைத்த கடும்போக்கு பௌத்தவாதம், உறங்குநிலையில் இருக்கின்றபோது, மென்போக்கு பௌத்தவாதம் அதிகாரத்தில் உள்ள இன்றைய காலப்பகுதியில், ஆட்சியாளர்கள், உளப்பூர்வமாகவே தமிழர்கள் வேண்டிநிற்கின்ற தீர்வைக் கொடுப்பார்களா என்பது மிகச் சந்தேகமே. 

ஆனாலும், இன்று தமிழர்களுக்குத் தீர்வு கொடுக்க வேண்டும் என்கின்ற சர்வதேச அழுத்தத்தமும் நிர்ப்பந்தமும், அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது என்றால், அதற்குக் காரணம் தமிழர்களின் போராட்டமும் அரசியல்வாதிகளின் விடாமுயற்சியுமே அன்றி வேறில்லை. தந்தை செல்வா எங்கு இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தாரோ, அந்த இலக்கை நோக்கியே இன்றும் தமிழர்களின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் சமூக அரசியலில், அவ்வாறான ஓர் இலட்சணத்தைக் காண முடியவில்லை. 

தமிழர்களுக்கு முன்னமே உரிமைக்காக ஜனநாயக வழிமுறையில் போராடியிருக்க வேண்டிய முஸ்லிம்கள், இன்று வரைக்கும் இவ்விடயத்தில் சோம்பேறித்தனமாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றனர். மர்ஹூம் அஷ்ரப் தொடக்கி வைத்த அரசியல் போராட்டம், அதன் பின்வந்த அரசியல்வாதிகளால் முன்கொண்டு செல்லப்படாமல், அவ்விடத்திலேயே நிற்கின்றது. அதனது வழியும் பாதையும் மாறியிருக்கின்றது.

தலைமைத்துவப் பதவிகளுக்குள்ளும் அமைச்சர் என்ற அலங்காரத்துக்குள்ளும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மூழ்கிக் கிடப்பதால், அவர்கள் எதைக் கொடுத்தால் வாய்பொத்தி இருப்பார்கள் என்பதை, ஆட்சியாளர்கள் அறிந்து வைத்திருக்கின்றார்கள். 

தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறில்லை. அவர்கள் மீது வேறு பல விமர்சனங்களை முன்வைக்க முடியும். என்றாலும், அவர்கள் சமூகத்துக்காக முன்னிற்கின்றார்கள்.

தமிழர்களுக்கு ஒரு நன்மை நடக்குமென்றால், வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றார்கள். நக்குண்டோர் நாவிழப்பர் என்பதன் அர்த்தத்தைப் புரிந்து வைத்திருக்கின்றனர். பதவி, பட்டங்கள் போன்ற இன்னோரன்ன சுகங்கள், சலுகைகளுக்குப் பின்னால் போனால், உரிமைகள் கிடைக்காது என்பதை, அனுபவம் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளது. எனவேதான், தமிழர்களது அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்றது. 

ஆனால், முஸ்லிம்களின் தற்கால அரசியல், இதற்கு எதிர்மாறாக இருக்கின்றது. அதனால், இணக்க அரசியலில் கிட்டத்தட்ட முஸ்லிம்கள் தோல்வி கண்டுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சிங்களப் பெருந்தேசியத்தால் புலிகள் என்று விமர்சிக்கப்பட்ட தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், இன்று ஆளும் கூட்டாட்சியின் முக்கிய கூறாக மாற்றப்பட்டிருக்கின்றனர். இந்த இரண்டு வருடங்களிலும் பேச வேண்டிய இடத்தில் பேசி, மௌனமாக இருக்க வேண்டிய இடத்தில் அமைதி காத்து, சம்பந்தன், சுமந்திரன், மாவை உள்ளிட்டோர் நகர்த்திய காய்கள், இன்று வெற்றி இலக்கை எட்டிக் கொண்டிருக்கின்றன. 

அதாவது, தமிழர்களின் இரண்டு வருட இணக்க அரசியல் சாதித்துக் கொண்டிருப்பதை, முஸ்லிம்களின் முப்பது வருட இணக்க அரசியல் சாதிக்கத் தவறியுள்ளது. ஆட்சியாளர்களால் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளால் மக்களும் ஏமாற்றப்படும் கதை தொடர்கின்றது.  

வடக்கு, கிழக்கை இணைக்கவும், அதிகாரப் பகிர்வுக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தவும் சமஷ்டி அல்லது அதுபோன்ற ஏதாவது ஒன்றை வழங்கவும் அரசாங்கம் மேற்கொண்டுவருகின்ற நுட்பமான நடவடிக்கைகள், உண்மையில் தமிழர்களின் அழுத்தத்தின் விளைபயன் என்றே சொல்ல வேண்டும். இவ்விடயத்துக்குப் புதிய அரசமைப்பில் அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதை, அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை, குறிப்புணர்த்துவதாக அமைந்துள்ளது. 

மறுபுறத்தில், அரசமைப்பை மறுசீரமைக்கும் நடைமுறைகளின் போது, வழக்கம் போலவே இம்முறையும் முஸ்லிம்களின் அபிலாஷைகள், கோரிக்கைகள், மனக்கிடக்கைகள் கணக்கிலெடுக்கப்படாமல் விடப்பட்டுள்ளதையும், முஸ்லிம் அரசியல்வாதிகளை கறிவேப்பிலையாகப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்ற முனைவதையும், இந்த இடைக்கால அறிக்கையின் ஊடாக அறிந்து கொள்ளவும் முடிகின்றது. 

நல்லாட்சி அரசாங்கம் சட்டத் திருத்தங்கள், அரசமைப்புத் திருத்தங்கள், அரசமைப்பு மறுசீரமைப்பு போன்ற சட்டவாக்க மாறுதல்களின் ஊடாக, கட்டமைப்பு ரீதியான மாற்றத்தைக் கொண்டு வருவதில், கடந்த சில மாதங்கள் அதீத முனைப்புக் காட்டி வருகின்றது. கடந்த ஒரு மாதத்துக்குள் மாத்திரம் இரண்டு சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, அரசமைப்புத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. சமகாலத்தில் அரசமைப்பை மறுசீரமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ணமுள்ளன. 

அந்தவகையில், முன்னதாக அரசாங்கம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவ ரீதியான பாதிப்பு உள்ளடங்கலாக பல பாதகங்கள் இருக்கின்றன என்றும், அவற்றை சரிசெய்ய வேண்டுமெனவும் கோரியிருந்த முஸ்லிம் கட்சிகளே, அச்சட்டமூலத்தைச் சட்டமாக்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. 

பிறகு, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை, அரசாங்கம் முன்னிலைப்படுத்தியது. ஆனால், இதன் ஆழ, அகலங்கள் விளங்காமல், கிழக்கு உள்ளிட்ட மாகாண சபைகள் ஆதரித்ததுடன், முஸ்லிம் எம்.பி.க்கள் சிலரும் அதற்கு சார்பான நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். இருப்பினும், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் சொன்னதால்,  அதற்குப் பயந்த அரசாங்கம், 20இனைக் கைவிட வேண்டியதாயிற்று. 

அதன்பிற்பாடு, ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் பகீரத பிரயத்தனம் எடுத்தது. இதில் முஸ்லிம்களுக்குப் பல பாதகங்கள் இருந்தன. முஸ்லிம்கள் முற்றாக எதிர்த்து வாக்களித்திருக்க வேண்டிய இச்சட்டமூலத்துக்கு, சில “வாக்குறுதிகளை” பெற்றுக் கொண்டு இரு பிரதான முஸ்லிம் கட்சிகள் உட்பட கிட்டத்தட்ட எல்லா முஸ்லிம் எம்.பிக்களும் ஆதரவளித்திருந்தனர். 

இவ்வாறு, மக்களுக்குச் சாதகமில்லாதச் சட்ட ஏற்பாடுகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவளித்துவிட்டு, அதனை நியாயப்படுத்த முனைகின்ற ஒரு போக்கு, முஸ்லிம் கட்சித் தலைவர்களிடமும் எம்.பிக்களிடமும் இருக்கின்றது. ஒருவேளை அதனைச் செய்ய முடியாது போகும்போது, சற்றும் வெட்கம் இல்லாமல் “தாங்கள் கண்ணைத் திறந்து கொண்டே படுகுழியில் விழுந்து விட்டதாக” மக்களிடத்தில் வந்து கூறி, பாவமன்னிப்புக் கோருவதை வழக்கமாகவே காண முடிகின்றது. 

எவ்வாறு 18ஆவது திருத்தம், திவிநெகும போன்றவற்றுக்கு ஆதரவளித்துவிட்டு, எல்லாம் கைமீறிப் போன பிற்பாடு அதனை எண்ணிக் கழிவிரக்கம் கொண்டார்களோ அதுபோலவே இம்முறையும் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்தமைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்போது பாவமன்னிப்பு கேட்கத் தொடங்கியிருக்கின்றனர்.

ஆகவே, உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உத்தேச புதிய அரசமைப்பிலும் முஸ்லிம்களுக்கு வேண்டியதை உறுதிப்படுத்தாமல் விட்டுவிட்டு, பின்னர் அதற்காகவும் மக்கள் முன்னிலையில் மண்டியிட்டு அழுது புலம்பி ஆர்ப்பரித்து, பச்சாதாபம் கொள்ளச் செய்து, தாம் சோரம் போன விடயத்தை அறியாமை எனக் காட்டி நழுவிக் கொள்வார்களோ என்ற நியாயமான சந்தேகம் எழுந்திருக்கின்றது. 

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுவாகவே பல நல்ல விடயங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வறிக்கையானது, தற்போதைய அரசமைப்பின் அத்தியாயம் 1, 2இனால் உள்ளடக்கப்படும் விடயங்கள், அதிகாரப் பகிர்வுக் கோட்பாடுகள், அரச காணி, மாகாண நிரல் பற்றி மத்திய அரசாங்கம் சட்டம் இயற்றுதல், பிரதான ஆட்புலம், இரண்டாம் சபை, தேர்தல் முறைமை, ஆட்சித்துறை, அரசமைப்புப் பேரவை, பெண்களின் பிரதிநிதித்துவம், பொதுமக்கள் பாதுகாப்பு, வழிப்படுத்தற்குழு உறுப்பினர்களின் அவதானங்களும் கருத்துகளும் என 12 பிரிவுகளைக் கொண்டுள்ளன.

அதிகாரப் பகிர்வு பற்றி வலியுறுத்தும் இடைக்கால அறிக்கை, அதன் பிரதான கூறாக மாகாண சபைகள் இருப்பது பற்றி கூறுகின்றது. ‘யுனிற்றரி ஸ்டேட்ஸ்’ என்ற ஆங்கிலப் பதத்தின் ஆரம்பகால வரைவிலக்கணம் மாற்றத்துக்குள்ளாகியுள்ள ஒரு சூழலில் அது இலங்கைப் பொருத்தமற்றது என்றும் “ஒருமித்த நாடு” என்ற கோட்பாடே நமது நாட்டுக்குப் பொருத்தமானது என்றும் பரிந்துரை செய்கின்றது. மிக முக்கியமாக, எந்தவொரு ஆட்புலப் பிரதேசமும் இலங்கையில் இருந்து பிரிந்து தனிநாடொன்றாக ஆக முடியாது என இது கூறுகின்றது. இவ்வாறு பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் சில விடயங்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளன. 

குறிப்பாக, மேற்படி இடைக்கால அறிக்கையின், மாகாணங்கள் அதிகாரப் பகிர்வின் முதல் நிலை அலகாக இருக்கும் என்ற தலைப்பின் கீழ் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:
“-மாகாணங்களை இணைத்தல் தொடர்பான ஏற்பாடுகளுக்கு வழிப்படுத்தும் குழுவின் மேலதிக பரிசீலனை தேவைப்படுகின்றது. 

பின்வரும் தெரிவுகள் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
- இரண்டு அல்லது அதிகமான மாகாணங்களை தனி அலகாக உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக, அரசமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் உரிய மாகாண சபைகளில் மக்கள் தீர்ப்பொன்றும் தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவையுடன், வைத்திருக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டது. 

- இணைப்புக்கு அரசமைப்பு ஏற்பாடு செய்யலாகாது. 
- வடக்கு, கிழக்கு மாகாணங்களை தனியொரு மாகாணமாக புதிய அரசமைப்பு அங்கிகரிக்கும்”.

இவ்விடயம், கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தற்போது சூடான பேசுபொருளாகியிருக்கின்றது. சட்ட ஏற்பாடுகளை முன்வைக்கும் ஆவணங்களின் உள்ளர்த்தங்கள், மறைமுகக் கருத்துகள், வியாக்கியானங்கள் இலகுவாக பாமரனால் அறிந்து கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன. அந்த வகையில், இது குறித்தும் பல தெளிவின்மைகள் உள்ளன.   

மேற்குறிப்பிட்ட 3 யோசனைகளும், மாகாணங்களை இணைப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள மூன்று  விதமான யோசனைகளே என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.  இல்லையில்லை, மூன்றாவது உப பிரிவின்படி வடக்கும், கிழக்கும் இணைவதை இது உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில் ஏனைய இரு உப பிரிவுகளும் ஏனைய மாகாணங்களுக்கே பொருத்தமானதாக இருக்கும் என்ற ஒரு கருத்தும் சொல்லப்படுகின்றது.

எது எவ்வாறிப்பினும், வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாக இந்த இடைக்கால அறிக்கை குறிப்பிட்டுள்ள முன்மொழிவு, குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களால் கடுமையாக ஆட்சேபிக்கப்படுவதுடன், அது சில விடயங்களை சொல்லாமல் சொல்வதாகவும் காணப்படுகின்றது. 

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டதை மறைந்த மு.கா. தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் உட்பட தனித்துவ அடையாள அரசியலின் வழிவந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோருமே, ஓர் அடிமை சாசனமாகவே கருதுகின்றனர். ஏனென்றால் வடக்கும் கிழக்கும் இணைந்த ஓர் ஆட்புல எல்லையில் முஸ்லிம்கள் பெற்ற அனுபவம், அந்தளவுக்கு மோசமானதாக இருந்தது. எனவேதான், இவ்விரு மாகாணங்களும் பிரிய வேண்டுமென முஸ்லிம்கள் அவாவி நின்றனர். 

இப்போது, இணைந்த வட, கிழக்கு மாகாணம் எப்படி இருக்கும், பிரிந்த வடக்கும், கிழக்கும் எவ்வாறு இருக்கும் என்பதை, முஸ்லிம்கள் நன்றாகவே பட்டறிந்து இருக்கின்றனர். இந்த அனுபவத்தின் பிரகாரமே வடக்கு,  கிழக்கு இணைப்பை இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் பகிரங்கமாகவே எதிர்க்கவும் செய்கின்றனர். முஸ்லிம் கட்சிகளும் தலைவர்களும் எவ்வாறான நிலைப்பாட்டை எடுத்திருந்தாலும், கிழக்கு முஸ்லிம்கள் இதற்கு அறவே ஆதரவு இல்லை என்பதை, அரசாங்கம் பொதுவெளியிலும் புலனாய்வு அறிக்கைகள் மூலமும் நன்றாகவே அறிந்து கொண்டிருக்கும். 

அவ்வாறிருந்தும் கூட வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி இடைக்கால அறிக்கை பேசியிருக்கின்றது என்பது, சாதாரணமான விடயமல்ல. இடைக்கால அறிக்கையில் இந்த முன்மொழிவு, தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினால் முன்னகர்த்தப்பட்டதாகவே இருக்கும். ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவுக்கு சிரத்தையுடன் இருக்கின்றது என்பதற்கும் அவர்களது இணக்க அரசியலின் வெற்றியையும் குறிப்புணர்த்துவதாக, இதை எடுத்துக் கொள்ளலாம். 

தமிழர்கள்,  வடக்கையும் கிழக்கையும் இணைத்த ஒரு நிலப்பரப்பிலேயே அரசியல் தீர்வை கோருகின்றனர் என்பதில், இரண்டு விதமான அவதானங்கள் கிடையாது. நீண்ட காலமாகப் போராடிய இனம், இவ்வாறு கோருவது தவறு என்று சொல்லவும் முடியாது. 
ஆனால், அரசாங்கமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம்களின் அபிலாஷைகள், புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படுவதில் தவறிழைத்துள்ளனர் என்பதே, இங்கு விமர்சனத்துக்குரிய விடயமாகின்றது. 

இடைக்கால அறிக்கையில் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளடக்கப்பட்டதல்ல பிரச்சினை, மாறாக இனப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இனப் பிரச்சினைத் தீர்வில் என்ன பங்கு என்பதும், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதும் என்பதும், இடைக்கால அறிக்கையில் பிரதிபலிக்கச் செய்யவில்லை என்பதே பிரச்சினைக்குரியதாகும்.  

குறிப்பாக, இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இரண்டு தமிழ்க் கட்சிகளும் சேர்ந்த 9 மாகாணங்கள் நாட்டில் இருக்கும் என்ற கூட்டுத் தீர்மானத்தை அறிக்கையாக முன்வைத்துள்ளனவே தவிர, புதிதாக கரையோர மாவட்டம் ஒன்றை உருவாக்குவது பற்றியும் வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக் கூடாது என்றும் முஸ்லிம்களுக்கும் ஒரு மாகாண அலகை பரிசீலிப்பது பற்றியும் எந்தவொரு முன்மொழிவுகளும் வழிப்படுத்தல் குழுவின் யோசனையாக அறிக்கையிடப்படவில்லை.

பிரத்தியேக அவதான குறிப்புகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது, கரையோர (ஒலுவில்) மாவட்டம் உருவாக்கப்படுவது குறித்தும், வடக்கு- கிழக்கு இணையக் கூடாது என்பது பற்றியும் தனது தனிப்பட்ட நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளது. மு.கா, தனிப்பட்ட நிலைப்பாடாகவேனும் அதனைச் செய்யவில்லை.

இந்தப் பின்னணியில், தமிழர்களின் விருப்புக்கு இடைக்கால அறிக்கையில் வழங்கப்பட்ட முக்கியத்துவம், முஸ்லிம்களின் அபிலாஷைக்கு கொடுக்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது. இதனை உறுதிப்படுத்த முஸ்லிம் கட்சிகள் மட்டுமன்றி எல்லா முஸ்லிம் எம்.பிக்களும் தவறியிருக்கின்றனர். எனவேதான், முஸ்லிம்கள் இன்னுமொரு தடவை ஏமாற்றப்பட்டு விடுவார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கின்றது. 
எனவே, இது விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் விரைந்து செயற்பட வேண்டும்.

இடைக்கால அறிக்கையில் விடப்பட்ட தவறுகளை சரிசெய்யும் விதத்தில் இறுதி அறிக்கையும், அரசமைப்பும் உருவாவதை உறுதிப்படுத்த வேண்டும். அதைவிடுத்து, தமது அரசியல் இயலாமையை மறைப்பதற்காக அரசாங்கத்தையும் த.தே.கூட்டமைப்பையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/திருத்தங்கள்-தொடக்கம்-அரசமைப்பு-வரை-ஏமாற்றப்படும்-முஸ்லிம்கள்/91-205157

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.