• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
அபராஜிதன்

வந்தாள் மகாலக்ஷ்மி-வித்யா சுப்பிரமணியம்

Recommended Posts

நேரம் கிடைக்கும் போது படியுங்கள். தீபாவளி சிறப்புச் சிறுகதைதான். ராணியில் வந்தது. (பெண் குழந்தைகள் தினத்திற்கும் பொருத்தமாக இருக்கக் கூடும்)

வந்தாள் மகாலக்ஷ்மி

“மகாலஷ்மி இல்லாமல் தீபாவளியா? கூடவே கூடாது” அம்மா திட்டவட்டமாகச் சொல்லி விட்டாள். மகாலஷ்மி என்று அம்மா குறிப்பிட்டது பத்மா அண்ணியை. பெரிய அண்ணன் ஹரியின் மனைவி. அம்மா அப்படிச் சொன்னதும் அண்ணாவின் முகத்தில் ஏமாற்றம். தன் நான்கு வயது பெண் குழந்தைக்கு ஆசை ஆசையாய் புது கவுனும், விளையாட்டு பொருட்களும், வாண வேடிக்கைகளும் வாங்கி வந்திருந்தான். எல்லோரும் சேர்ந்து கொண்டாடினால்தான் அது பண்டிகை. குழந்தைக்கும் முழு சந்தோஷமும் கிடைக்கும். அனால் அம்மா சொன்னால் சொன்னதுதான். அவள் பேச்சை மீறி யாரும் பண்டிகை கொண்டாட மாட்டார்கள். பத்மா இல்லாத நிலையில் மூன்று தீபாவளிகள் கொண்டாட்டமின்றிதான் கடந்து சென்றது. எனக்கு அண்ணாவைப் பார்க்க பாவமாக இருந்தாலும், அவன் மீது கோபம் மாறவில்லை. 

 
ஹரி அண்ணாவுக்கு கல்யாணமாகும் போது எனக்கு பன்னிரண்டு வயது. அடுத்த அண்ணன் பத்ரி பிறந்த எட்டாண்டுகள் கழித்து நான் பிறந்தேன். அடுத்தது பெண்தான் பிறக்கும் என்று ஏதோ ஜோசியன் சொன்னானாம். பெண் வேண்டும் என்று ஆசைப்பட்டு மீண்டும் ஒரு பையனாக நான் பிறந்ததும், சிறிது ஏமாற்றமிருந்தாலும் என்னை அன்பைக் கொட்டித்தான் வளர்த்தார்கள். நான் அம்மாவின் இடுப்பில் இருந்ததை விட ஹரி அண்ணாவின்  தோளில்தான் அதிகம் இருந்தேன் எனலாம்.

ஹரி அண்ணாவின் திருமண நாளில் மணவறையில் முழுக்க முழுக்க அண்ணனை விட்டு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நகராமல், ஒட்டிக் கொண்டிருந்தேன். பத்மா அண்ணி மாலையும் கழுத்துமாக மணவறைக்கு வந்து அண்ணாவுக்கு அருகில் அமரும்போது அண்ணாவை அணைத்தபடி மறுபக்கம் அமர்ந்திருந்த என்னை, என் தம்பி என்று அவளிடம் அறிமுகப் படுத்தினான். அப்போது பத்மா அண்ணியின் புன்னகையிலும் பார்வையிலும், அவளது மொத்த அன்பும் வெளிப்பட்ட மாதிரி இருந்தது.
 .
அதற்குப் பிறகு பத்மா அண்ணி எனக்கு அன்னையுமானாள். பாடம் சொல்லிக் கொடுக்கும் போது ஆசிரியை, விளையாடும் போது தோழி, அன்னமிடும் போது அன்னை, கண்டிக்கும் போது அப்பா, என்னக்கு வேண்டியதை எல்லாம் வங்கித் தரும் போது சகோதரன் என்று எல்லா உறவாகவும் இருந்தாள். அண்ணி பொறியியல் பட்டதாரி. நல்ல வேலையிலும் இருந்தாள். பல்வேறு திறமைகள் அவளிடம் இருந்தன. ஆனாலும் கர்வமற்றிருந்தாள். அனைவருக்கும் அத்தனை மரியாதை கொடுப்பாள் அண்ணியைப் பார்க்கும் போதெல்லாம் அம்மாவுக்கு பெருமை தாங்காது. எங்க வீட்டு மகாலஷ்மி இவ என்றுதான் எல்லோரிடமும் அவளை அறிமுகப் படுத்துவாள். தனக்கு பெண் இல்லாத குறைக்கு மருமகள் ரூபத்தில் கடவுள் ஒரு பெண்ணைத் தந்திருக்கிறான் என்று அவளைக் கொண்டாடினாள்.

பத்மா அண்ணி அவள் வீட்டுக்கு ஒரே பெண். என்பதால் பிறந்த வீடும் அவளை சீராட்டியது. பிள்ளை இல்லாக் குறைக்கு ஹரி அண்ணனை பிள்ளையாய் நேசித்து நடத்தியது. ஒவ்வொரு விசேஷத்திற்கும் சீரோடு வந்து நின்று கௌரவித்தது. அண்ணியின் தலை தீபாவளி என்றென்றும் மறக்க முடியாதது. தலை தீபாவளிக்கு எல்லோரையுமே அங்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தார்கள். அம்மாவும் அப்பாவும் தயங்கினார்கள். 

“அது வழக்கமில்லைங்களே. நாங்க பையனையும் மருமவளையும் அனுப்பி வெக்கறோம். வேணும்னா என் சின்ன பிள்ளையை மட்டும் கூட்டிட்டு வரச் சொல்றேன்" 

“இல்லைங்க. நீங்க வழக்கத்தை எல்லாம் விடணும். எங்களை சம்பந்தியா நினைக்காதீங்க. தலை தீபாவளி அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் இல்லை.  ஒண்ணுக்குள்ள ஒண்ணா உறவாகியிருக்கும் நம்ம எல்லோருக்குமே இது தலை தீபாவளிதான். அதனால மறுக்காம நம்ம வீட்டுக்கு நீங்க வரணும்.”

அம்மா அவர்களது அன்பில் நெகிழ்ந்தாள். வருவதற்கு ஒப்புக் கொண்டாள். தீபாவளிக்கு முதல் நாள் மாலை எல்லோரும் அங்கு சென்று விட்டோம். அம்மா அவர்களுக்கும் சேர்த்து எல்லோருக்கும் துணி மணிகள் வாங்கி இருந்தாள். அவர்களும் எல்லோருக்கும் துணி மணி வாங்கி இருந்தார்கள். அவர்கள் வீடு ரயில்வே குடியிருப்பில் இருந்தது. அண்ணியின் அப்பா ரயில்வே ஊழியர். நல்ல பதவியில் இருந்தார். மிகப்பெரிய ஹால், மூன்று பெரிய படுக்கை அறைகள், சமையலறை, பாத்திரம் தேய்க்க, துணி துவைத்து காய வைக்கவெல்லாம் ஒரு பெரிய இடம் என்று வசதியாக இருந்தது.

குடியிருப்புக்கு கீழே மிகப்பெரிய வளாகம். நிறைய மரங்களோடு குளிர்ச்சியாக இருந்தது. அம்மாவும், அண்ணியின் அம்மாவும் சமையல் கட்டு வேலைகளைப் பகிர்ந்து கொண்டு உற்சாகமாகப் பேசியபடி விதம் விதமாக சமைத்தார்கள். வீட்டின் ஒவ்வொரு துளியிலும் சந்தோஷம் உறைந்திருந்தது. அண்ணியின் அப்பாவும், அண்ணன்களும் ஏகப்பட்ட வெடிகளும், வாணங்களும் வாங்கி வைத்திருந்தார்கள். நான்தான் அன்று அங்கு ராஜகுமாரன். எல்லோரது அன்பும் என்னை நோக்கியே இருந்தது. தீபாவளி காலை மூன்று மணிக்கே எனக்குதான் முதலில் தலையில்தான் எண்ணை வைத்தார்கள். சர்வீஸ் ஏரியாவில் மிகப்பெரிய பாய்லரில் அனைவருக்கும் வெந்நீர் போட்டு கொதித்துக் கொண்டிருந்தது. சுகமான வெந்நீர்க் குளியல் முடித்து நான்தான் முதலில் புத்தாடை உடுத்தினேன். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைவரும் குளியல் முடித்து புத்தாடை அணிந்தார்கள். அண்ணி பட்டுப் புடவையில் தேவதை மாதிரி இருந்தாள். வராண்டா, மதில் சுவர் எல்லாவற்றிலும்  நிறைய தீபங்கள் ஏற்றி வைத்தாள். அம்மாவும், அண்ணியின் அம்மாவும் சமையலறைக் காரியங்களில் ஈடுபட, நாங்கள் எல்லோரும் கீழே வந்தோம் வெடி வெடிக்க.. நான் வெடிக்கு நெருப்பு வைக்கும் போதெல்லாம் அண்ணி ஜாக்கிரதை ஜாக்கிரதை என்றாள். அண்ணாக்கள் எல்லோரும் நான் வெடி கொளுத்துவதற்கு உதவி செய்ய, நான் ஆயிரம் வாலா, பத்தாயிரம் வாலா என்று கொளுத்தினேன். அவை வெடித்து அடங்க வெகு நேரமாகும். எல்லோரும் கதை மூடிக் கொண்டு என்னைப் பெரிய மாவீரன் ரேஞ்சுக்கு பார்த்ததில் நான் அகமகிழ்ந்து போனேன். 

காலை டிபன் பஞ்சு போல் இட்டிலி, மிளகு வாசத்துடன்  நெய்ப்பொங்கல், மொறு மொறுவென்ற மெது வடை, சட்டினி, சாம்பார், பாதாம் அல்வா என்று அமர்க்களப் பட்டது. மதிய உணவு அதைவிட கொண்டாட்டமாக இருந்தது. இதற்கு நடுவில் தொலைக் காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள். சிரிப்பும் கும்மாளமுமாக அவற்றைப் பார்த்தோம். அன்று மாலை புது சினிமாவுக்கு டிக்கெட் புக் பண்ணியிருந்தான் அண்ணா. இரண்டு வாடகைக் காரில் அனைவரும் சினிமாவுக்குச் சென்றோம். பால்கனி வகுப்பில் அண்ணிக்குப் பக்கத்தில் அமர்ந்து, பாப்கார்ன், ஐஸ்கிரீம் வகையறாக்களோடு பார்த்த அந்த சினிமாவும் சரி, அந்த தீபாவளியும் சரி என் வாழ்வில் மறக்க முடியாததாக மாறியது.

 
அதற்கடுத்த தீபாவளி சமயம் அண்ணிக்குப் பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதமே ஆகியிருந்தது. இரண்டாம் மாதமே அண்ணா அவளைக் குழந்தையோடு அழைத்து வந்து விட்டன. குழந்தைக்கு தொந்தரவாக இருக்குமென்பதால் அன்று பெயருக்கு ஒரே ஒரு சரம் வெடி வெடித்ததோடு சரி. மற்றபடி அந்த தீபாவளியின் முழு சந்தோஷத்தையும் குழந்தைதான் கொடுத்தது. மாற்றி மாற்றி அதைக் கொஞ்சுவதற்கே நேரம் போதவில்லை. ஊரில் மற்றவர்களின் வெடிச் சத்தத்திலிருந்து அதைக் காப்பதற்காக காதில் பஞ்சு வைத்து கனத்த குல்லாய் மாட்டி அணைத்தபடி வைத்திருந்தார்கள். அப்போதே நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். முதியோரும், குழந்தைகளும் பாதிக்கப் படக்கூடும் என்பதால், இனி தீபாவளிக்கு சத்தத்தை ஏற்படுத்தும் வெடிகளை வெடிக்காமல், வர்ண ஒளிகளுடன் சிதறும் வாணவேடிக்கைகள் மட்டுமே விடுவது என்று. 

அண்ணியின் குழந்தைக்கு ஓராண்டு ஆகும் போதுதான் அண்ணியின் அப்பாவும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்று வந்த பணத்தில் பேரக் குழந்தைக்கு, வளையல், மோதிரம், செயின், தங்க அரைஞாண் என்று வாங்கி வந்தார்கள். 

“இத்தனை காலம் அரசாங்க வீட்ல இருந்துட்டேன். இனி வேற வீடு பார்த்துக்கிட்டு கிளம்பணும்.”

“ஏன் உங்களுக்கு சொந்த வீடு இல்லையா? அப்பா ஆச்சர்யமாகக் கேட்டார். 

"ஊர்ல எங்கப்பாவோட வீடு இருந்துது. ஆனா அதை ஒரு அவசர செலவுக்கு விக்க வேண்டியதா போச்சு. அரசாங்க வேலை இருந்ததால இத்தனை நாள் வீடு பிரச்சனை இல்லாம சௌகர்யமா குவார்ட்டர்ஸ்ல இருந்துட்டேன். இவ்ளோ வசதியோட சிட்டிக்குள்ள வாடகைக்கு வீடு கிடைக்குமான்னு தெரியல. இல்லாட்டி கொஞ்சம் தள்ளி ஊருக்கு வெளில ஏதாவது அபார்ட்மென்ட்லதான் வீடு பார்க்கணும்.”

“கிடைக்கும். கவலைப்படாதீங்க. நானும் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வெக்கறேன்” அப்பா ஆறுதல் சொன்னார்.
 
தாம்பரத்திற்கு அருகே இரண்டு படுக்கை அறையோடு கூடிய வாடகை வீடு கிடைத்தது. ஊருக்குள் வந்து செல்ல மின்சார ரயில் வசதியும் பஸ் வசதியும் இருந்ததால், அங்கேயே குடி போனார்கள். அதிக தூரத்தில் அவர்கள் இருந்ததாலும், குடும்பப் பொறுப்புகள் அதிகமானதாலும், அண்ணியால் நினைத்த நேரத்திற்கு அம்மா வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. ஆனாலும் தினமும் ஒரு முறையாவது அப்பா அம்மாவோடு பேசி விடுவாள். வீடியோ கால் போட்டு குழந்தையை அவர்களுக்குக் காட்டுவாள்.
 
நான் பிளஸ் ஒன்னில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள்   நான் ஸ்கூல் விட்டு வரும் போது அண்ணி கதறியழுதபடி வாடகைக் கார் ஒன்றில் ஏறிக் கொண்டிருந்தாள். அவளோடு அண்ணனும், அப்பா, அமாவும் கலங்கிய கண்களோடு ஏறிச் சென்றார்கள். சின்னண்ணன் வீட்டில் இருந்தான். அவனிடம் என்னவென்று கேட்டேன். 

"அண்ணியோட அம்மாக்கு கேன்சராம். ஆஸ்பத்திரில சேர்த்திருக்காங்களாம்.” என் அடிவயிறு சிலீரிட்டது. 

கேன்சர் முற்றிய நிலையில் இருந்தது. பல லட்சங்கள் தண்ணீராய் வாரி இறைத்தும் வலியும் வேதனையுமாய் இருபது நாள் போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையிலேயே இறந்து போனாள். இந்த அதிர்ச்சியினாலோ என்னவோ அண்ணியின் அப்பாவுக்கு வலிப்பு வந்தது. வலிப்பு எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு வரலாம் என்றார் டாக்டர். 

அம்மா இறந்த பிறகு அடிக்கடி வலிப்பு வரும் அப்பாவை தனியே விடுவதற்கு அண்ணிக்கு பயமாக இருந்தது. இது பற்றி மாமியார் மாமனாருடன் பேசினாள். அதுக்கென்ன...அவரை இங்கயே  கூட்டிக்கிட்டு வந்துடு. நம்மோட வெச்சு பாத்துக்குவோம். இருவருமே மனமாறக் கூறினாலும், ஹரி அண்ணா இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

“அதெல்லாம் சரிப்படாது. ஏற்கனவே இங்க கூட்டுக் குடும்பமா இருக்கோம். இடப் பற்றாக்குறையும் இருக்கு. அவர் மேல எனக்கும் அக்கறை இருக்கு. ஆனா பிராக்டிகலா யோசிக்கறதுதான் நல்லது. அவரை இங்க கூட்டிட்டு வருவதை விட, அவர் வீட்டுலயே மேல் நர்ஸ் போட்டு பாத்துக்கறதுதான் சரி. அல்லது மருத்துவ உதவியோடு கூடிய மாதிரி நல்ல முதியோர் இல்லத்துல சேர்ப்போம். பணத்தைப் பத்தி கவலைப் பட வேண்டாம். நா தரேன்."
 
“பணத்தை வீசி எறிஞ்சுட்டலோ, நர்ஸ் போட்டுட்டாலோ அல்லது ஹோம்ல சேர்த்துட்டாலோ நம்ம கடமை தீர்ந்துடுமா?” அண்ணி கேட்டாள்.

”அதுக்கு மேல நாம என்ன செய்ய முடியும்?”

“நீ சொல்றது சரியில்லடா ஹரி. அவங்களுக்கு அவ ஒரே பொண்ணு. ஒரு பையனுக்கு என்ன கடமை இருக்கோ அது பெண்ணுக்கும் இருக்கு. நீ இப்டி பேசுவன்னு நாங்க நினைக்கல?” அம்மா ஹரி அண்ணாவைக் கண்டித்தும் கூட அவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான். அவரை இங்க கூட்டிட்டுதான் வரணும்னு நீங்கல்லாம் உறுதியா இருந்தா தாராளமா கூட்டிட்டு வந்துக்குங்க. நா வேற ஊருக்கு பணி மாறுதல் வாங்கிட்டு போய்த் தனியா இருந்துக்கறேன்” அண்ணா இப்படிச் சொன்னதும், அண்ணியின் முகத்தைப் பார்க்கவே வெட்கப் பட்டாள் அம்மா. இருபத்தெட்டு வருடம் வளர்த்த பிள்ளையின் மனசை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? நூறு சதம் உத்தமமானவன், பல விஷயங்களையும் நியாயமாக அணுகுவான் என்று நினைத்தது தவறோ? தன் வளர்ப்பு சரியில்லையோ?

இதே வார்த்தைகளை உன் மனைவியும் சொல்லலாம் இல்லையா? எங்களைப் பார்த்துக்கற கடமை அவளுக்கு மட்டும் எதுக்குடா?”

“அது உலக வழக்கம். எல்லா மருமகளும் செய்யறதுதான்”

“அட முட்டாளே” அம்மாவால் இதைத்தான் சொல்ல முடிந்ததே தவிர, ஹரி அண்ணாவின் முடிவை மாற்ற முடியவில்லை. அந்த சமயத்தில்தான் அண்ணி ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.
 
“நீங்க எதுக்குப் போகணும்? நா போறேன். உங்களை உங்கம்மா பெற்று வளர்த்தா மாதிரிதான் என்னையும் பெத்து வளர்த்து படிக்க வெச்சு கட்டிக் கொடுத்திருக்காங்க. நா பெண்ணா பிறந்துட்ட ஒரே காரணத்துக்காக திருமணத்திற்குப் பிறகு  என் அப்பாவைப் பாத்துக்கற உரிமையும் கடமையும் எனக்கில்லன்னு நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. அப்பாவா, புருஷனா அப்டிங்கற ஒரு நிலையில் இப்போ நான் நிக்கறேன். என் முடிவை நானும் சொல்றேன். எனக்கு அப்பாதான் இப்போ முக்கியம். அப்பாவை அநாதையாக்கிட்டு எனக்கு ஒரு வாழ்க்கை தேவையில்லை. அதனால நா இங்கேர்ந்து போறேன்”

“என்னை பிளாக்மெயில் பண்றயா? இதுக்கெல்லாம் நா பயப்பட மாட்டேன். நீ போறதுன்னா தாராளமா போய்க்கோ. சட்டப்படி உனக்கு நான் டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்பறேன்.”

“”அனுப்புங்க. கையெழுத்து போட்டு வாங்கிக்கறேன்”

“பாவி அப்டி மட்டும் அவளுக்கு நீ நோட்டிஸ் அனுப்பினா, கோர்ட்ல நானே உனக்கெதிரா சாட்சி சொல்வேண்டா” அம்மா அழுதாள்.

அண்ணா ஏன் இப்படி மாறிப்போனான்..அல்லது ஆரம்பத்திலிருந்தே இதுதான் அவன் குணமா? இந்தக் குணம் வெளிப்படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படாததால் இதுவரை நல்லவனாக எல்லார் கண்ணுக்கும் தெரிந்திருக்கிறானா? அண்ணி தன் பொருட்களை எடுத்துக் வைத்துக் கொண்டாள். அம்மா அப்பாவிடம் ஆசி பெற்றாள். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்புதான் மகாலஷ்மி அந்த வீட்டிலிருந்து அகன்று சென்றாள். 

அதற்குப் பிறகு ஹரி அண்ணாவோடு யாரும் சரியாகப் பேசவில்லை. வீட்டில் அவன் தனிமைப் படுத்தப் பட்டான். “இந்த வயசுல உங்களுக்கு எந்த பாமும் சேர்ந்துடக் கூடாதுன்னு உங்களுக்காகத்தானே கெட்ட பேரெடுத்துக்கிட்டு நா கஷ்டப்படறேன்” அவன் கத்தியதை யாரும் கண்டு கொள்ளவில்லை. எந்த நிலையிலும் அவனது ஈகோ இறங்கி வரவில்லை. அவளாகத்தானே சென்றாள். அதானால் அவளே வரட்டும் என்றான். டிவோர்ஸ் நோட்டிஸ் என்று சொன்னானே தவிர அனுப்பவில்லை. அண்ணி திரும்பி வர வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் இருந்தது. சீதையைப் பிரிந்த  ராமனைப் போல் இருள்  படர்ந்திருந்தது அவன் முகத்தில். ஆயினும் அவன் ஈகோ அவனை இறங்கிச் செல்ல விடாது தடுத்தது.
 
ஹரி அண்ணாவைத் தவிர மற்ற எல்லோரும் அடிக்கடி நேரம் கிடைக்கும் போது அண்ணியையும் குழந்தையையும் பார்த்துவிட்டு வந்தோம். விளையாட்டு போல  மூன்று தீபாவளிகள் கொண்டாட்டமின்றி சென்று விட்டது. கொண்டாடக் கூடாது என்று அம்மா திட்டவட்டமாகக் கூறி விட்டாள். ஒவ்வொரு தீபாவளிக்கும் அண்ணாவின் அலுவலகம் அட்டைப் பெட்டியில் கொடுத்த வாணவேடிக்கைகள் எவராலும் சீந்தப் படாமல் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்தனுப்பப் பட்டது.
 
நாலு நாள் முன்பு அண்ணியைப் பார்க்க, நானும் அம்மாவும் தாம்பரம் சென்றிருந்தோம். வாங்க என்று வரவேற்றார்.. அண்ணியின் அப்பா. தீபாவளி வருது. நீங்க வருவீங்க பத்மாவைக் கூட்டிட்டு போகன்னு நினைச்சேன். வந்துட்டீங்க. பத்மாட்ட சொல்லுங்க.  இப்போ என்  உடம்பு நல்லா குணமாய்டுச்சு. இனி என்னை நா பாத்துகுவேன். முடியலன்னா ஏதாவது ஹோம்ல சேர்ந்துப்பேன். அங்கயும் நிறைய மனுஷங்க இருப்பாங்க. பொழுது போய்டும். அதனால அவளுக்கு நல்ல புத்தி சொல்லி கூட்டுப் போங்க. இந்த தீபாவளியாவது நல்லபடியா கொண்டாடட்டும் எல்லாரும்  கிளம்பு பத்மா. போதும் உன் கோபம், ஊரோட ஒத்துப் போ.”.

“இல்லப்பா என்னை வற்புறுத்தாதீங்க. அவர் வந்து உங்களையும் வாங்கன்னு கூப்டாத வரை நா அங்க போக மாட்டேன்.” தன் முடிவில் அண்ணியும் உறுதியாக இருந்தாள். 

“சரி நீ வர வேண்டாம் குழந்தையை ஒரு வாரம் கூட்டிட்டு போய் வெச்சுக்கறேன். அனுப்பி வையேன்.”

“‘அது.....அவர்...”

“மடிப்பிச்சை கேக்கறேன்னு வெச்சுக்கோ. என் பேரப்பிளையோட ஒரு வாரமாவது நாங்க கொஞ்சிட்டு கொண்டு வந்து விடறோமே”
“கூட்டிட்டு போங்கம்மா. உறவுகளை நான் என்னிக்கும் பிரிக்க மாட்டேன். நீங்க கூட்டிட்டு போங்க. ஒரு வாரம் அவளுக்கு லீவுதான். ஸ்கூல் திறக்கறதுக்கு முதல் நாள் கொண்டு விட்ருங்க.”
அண்ணி குழந்தைக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைத்து வாசல் வரை வந்து சிரித்த முகத்தோடு வழியனுப்பினாள். மூன்று வருடம் கழித்து தன் பெண்ணின்  முகத்தைப் பார்த்ததும் ஹரி அண்ணா நெகிழ்ந்து போனான். வராத குழந்தை வந்த குஷியில் தீபாவளியைப் பிரமாதமாகக் கொண்டாடி விட வேண்டுமென்று அதற்கு புது சட்டை, வாண வேடிக்கைகள், கம்பிச்சரங்கள் எல்லாம் வாங்கி வந்தான். அப்போது அம்மா சொன்னதுதான் ஆரம்ப வரிகள்.

“நீயும் பெண்ணைத்தான் பெத்திருக்க ஹரி. நாளைக்கு உன் பெண்ணைக் கட்டிக்கறவன் இப்படிக் கூறினால் உன் பெண்ணும் புருஷனைப் பிரிஞ்சு உன் கிட்ட வருவா, அது உனக்கு சந்தோஷத்தைத் தரு,மா. வேதனையைத் தருமா? இன்னொரு முக்கியமான விஷயத்தை இன்னிக்குதான் பத்மா என்கிட்டே சொன்னா. அதையும் உன்கிட்ட சொல்றேன் கேட்டுக்க. அவங்கப்பாவோட அப்பா வீடு வெச்சிருந்தார். அதை ஒரு அவசரத் தேவைக்கு வித்துட்டோம்னு அவங்கப்பா கூறின போது அதென்ன அவசரத் தேவைன்னு நாம யாருமே கேட்கல. 

நேத்துதான் அது என்னன்னு எனக்குத் தெரிஞ்சுது. பத்மாவோட தாய்வழி தாத்தா, அதாவது சம்பந்தியோட, மாமனார்க்கு விவசாயத்துல நஷ்டம் வந்து பெரிய அளவுல கடன் ஆயிருக்கு. அதோட பாதிப்புல உடம்புக்கும் வந்து படுத்துட்டார், அவரோட மத்த பிள்ளைகள், பெண்களே கைவிட்டுட்டு எனக்கென்னன்னு இருந்த நிலையில், இவங்கப்பாதான் தன் பேரில் தன் அப்பா எழுதி வெச்ச வீட்டை வித்து தன் மாமனாரை நோயிலிருந்து காப்பாத்தி, அவர் கடன்களையும் அடைச்சிருக்கார். நீ சொன்னாப்போல உலக வழக்கம் பிள்ளைகள்தான் பாத்துக்கணும்னு சொல்லிட்டு அவர் கம்முனு இருக்கல. பெண்டாட்டிய உண்மையா நேசிக்கறவங்க அவங்களைச் சேர்ந்தவங்களையும் நேசிப்பாங்க. கை விட்ற மாட்டாங்க.  

நீ உன் பெண்டாட்டி மேல வெச்சிருக்கறது உண்மையான அன்பில்லன்னு தெரியுது. இல்லன்னா ஒரு அல்ப காரணத்துக்காக அவளை மூணு வருஷம் பிரிஞ்சு இருந்திருப்பயா? 
தீபாவளி கொண்டாடணும்னு ஆசைப்படறயே.. தீபாவளின்னா என்னன்னு தெரியுமா உனக்கு? தீபாவளின்னா சந்தோஷம். தீபத்தை வரிசையா ஏற்றி வெச்சு மகிழ்ச்சியை வரவேற்கிறோம்னு அர்த்தம். 

இராமனும் சீதையும் இல்லாத அயோத்தி இருண்டு கிடந்துது.. சீதையை இராவணன் சிறை பிடிச்சான். இராமன் அவளை சிறை மீட்டுக் கொண்டு வரான். எல்லோரும் அயோத்திக்கு திரும்பி வருகிறார்கள் என்ற சேதி கிடைக்கிறது. அயோத்தி மக்கள் அப்போ என்ன செய்தார்கள் தெரியுமா? தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக, ஊர் முழுவதும், வரிசையாக தீபம் ஏற்றி வைத்து இராமனையும், சீதையையும் வரவேற்கிறார்கள். அயோத்தியே தீப ஒளியில் ஜொலிக்கிறது. நம் மகிழ்ச்சியை  தீபம் ஏற்றி வெளிப்படுத்தி கொண்டடுவதுதான் தீபாவளி. அதைப் புரிஞ்சுக்க. புது சட்டை போட்டுக்கிட்டு நாலு வெடி வெடிச்சுட்டா தீபாவளியாய்டாது. மகாலட்சுமி இல்லாத வீட்டுல சந்தோஷத்தோட எப்டி தீபம் ஏற்ற முடியும்? அவ வரும் வரை இந்த வீடு  இருண்டே கிடக்கட்டும்.” அம்மா பேசி நிறுத்த அங்கே பேரமைதி நிலவியது. 

அண்ணா விருட்டென்று வெளியில் போனான். எங்கே போனான் என்று தெரியவில்லை. விடிந்தால் தீபாவளி. லேசாய் கவலை எட்டிப் பார்த்தது எல்லோர் முகத்திலும். இரவு பத்து மணி வாக்கில் அம்மாவின் மொபைலுக்கு மெசேஜ் வந்தது. அண்ணாதான் அனுப்பியிருந்தான்.
 
“தீபங்கள் ஏற்றி வை. உன் மகா லட்சுமியை,....என் சீதையை, ஜனகனோடு  அழைத்து வருகிறேன்”

அம்மாவின் முகத்தில் கோடி தீபங்கள் சுடர் விட்டன.
 
“.                                         *** சுபம் ***

மூலம் -முகநூல்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அருமையான ,நல்ல படிப்பினையாக கதை.....! 

என்ன கிருஸ்ணாவதாரத்தில் இருந்து பின்புதான்  தீபாவளி ஆரம்பித்தது என்று சொல்வார்கள். இப்ப என்ன வந்தது ராமும் கொண்டாடட்டும் கிருஷ்சும்  கொண்டாடட்டும்....!  tw_blush:

Share this post


Link to post
Share on other sites
23 hours ago, suvy said:

அருமையான ,நல்ல படிப்பினையாக கதை.....! 

என்ன கிருஸ்ணாவதாரத்தில் இருந்து பின்புதான்  தீபாவளி ஆரம்பித்தது என்று சொல்வார்கள். இப்ப என்ன வந்தது ராமும் கொண்டாடட்டும் கிருஷ்சும்  கொண்டாடட்டும்....!  tw_blush:

நன்றி சுவி அண்ணா:D

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this