• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி!

Recommended Posts

மிஸ்டர் கழுகு: சசிகலாவிடம் பேசிய 8 அமைச்சர்கள்? - பயத்தில் எடப்பாடி!

 

 

p42b.jpg‘‘சி.சி.டி.வி கேமரா வந்த பிறகு யாரும் தப்ப முடியாது போலிருக்கிறது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார்.

‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டோம்.

‘‘சென்னை, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாவின் வீட்டில்தான் சசிகலா தங்கியுள்ளார். பரோலில் வந்துள்ள சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க மத்திய, மாநில உளவுத்துறை போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இது போதாது என்று ஏழு இடங்களில் ரகசிய கேமராக்களையும் பொருத்தியுள்ளதாம் மாநில உளவுத்துறை.’’

‘‘சசிகலாவை யார் யாரெல்லாம் சந்தித்தார்கள்?’’ 

‘‘மன்னார்குடி உறவுகள், நெருங்கிய சொந்தங்கள், தூரத்துச் சொந்தங்கள் எனப் பலரும் சந்தித்துவிட்டனர். டாக்டர் சிவக்குமார், அனுராதா, திவாகரனின் மகள் ராஜமாதங்கி போன்றவர்கள் தினமும் வந்து சந்தித்துவிட்டுப் போகின்றனர். கட்சிக்காரர்கள் யாரும் நேரடியாகச் சந்திக்கவில்லை. ஆனால், ‘தங்களுடைய ஆதரவு சசிகலாவுக்குத்தான்’ என்று தெரிவிப்பதைப்போல, பெங்களூரிலிருந்து சென்னைக்கு சசிகலா வந்த வழியில், ஆங்காங்கே பலர் ஆஜர் போட்டனர். தங்களது பெயர்களை பூங்குன்றன் லிஸ்ட்டில் பதியவைத்துவிட்டனர்.’’

‘‘அது என்ன பூங்குன்றன் லிஸ்ட்?’’ 

‘‘ஜெயலலிதா இறந்தபிறகு மாயமாகிவிட்ட பூங்குன்றன், இப்போது போயஸ் கார்டன் வீட்டுக்கு வருவதைக்கூட நிறுத்திவிட்டார். நீண்ட நாள்கள் கழித்து, சசிகலா வந்தபோதுதான் அவரைப் பார்க்க முடிந்தது. ஜெயலலிதா இருந்தபோது, கூட்டத்துக்கு வருபவர்களை லிஸ்ட் எடுப்பதுபோல, அன்றும் லிஸ்ட் எடுத்தார். அந்த லிஸ்ட்டில் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்குக் கட்சியினர் மத்தியில் பலத்த போட்டி இருந்ததாம்.’’

‘‘வீட்டில் சசிகலாவுக்கு எப்படிப் பொழுதுபோகிறது?’’

p42d.jpg

‘‘சிறைக்குள் இருந்தபோது, இங்கு நடந்த செய்திகளை மற்றவர்கள் சொல்லித்தான் அவர் கேட்டிருந்தார். அந்தக் குறையைப் போக்க நினைத்த உறவுகள், ஒரு வீடியோவைத் தயார்செய்து வைத்திருந்தனர். அதைத்தான் சசிகலா இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறார். சசிகலா சிறைக்குச் சென்றபிறகு அவருக்கு எதிராகவும், அவரின் குடும்பத்துக்கு எதிராகவும் அமைச்சர்கள்,  எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் பொதுக்கூட்டங்களில் பேசியவை, பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்  தொலைக்காட்சிகளுக்குக் கொடுத்த பேட்டி, தீபா கொடுத்த பேட்டிகள் போன்றவற்றின் தொகுப்புதான் அது. இதைப் பார்த்து சசிகலா கொதித்துப் போயிருக்கிறார். அந்தக் கொதிப்பைத் தாண்டி, சசிகலாவைச் சிரிக்கவைத்த காட்சிகளும் அதில் இருந்தன. குறிப்பாக, அதில் திண்டுக்கல் சீனிவாசன் பிரதமர் மோடியின் தொகுதிப் பெயரைச் சொல்ல முடியாமல் திணறியதைப் பார்த்துச் சிரித்த சசிகலா, ‘இவர்களின் லட்சணம் தெரிந்துதான் அக்கா இவர்களை வாயைத் திறக்கவே விடவில்லை’ என்று வெறுப்பாகச் சொன்னாராம்.’’

‘‘எடப்பாடி பற்றி சசிகலா ஏதாவது சொன்னாரா?’’

‘‘கடும் விரக்தியான குரலில், ‘நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். ஆனால், நிலைமை மாறினால் அவரே நம்மிடம் வந்து, ‘டெல்லி பிரஷர். அதனால், அப்படிச் செய்ய வேண்டியதாயிற்று’ என்று புலம்பி சரண்டர் ஆவார். அந்தக் காலம் வெகுதொலைவில் இல்லை’ என்றாராம். சசிகலா சென்னை வந்ததும், அங்கிருந்த சசிகலாவின் உறவினர் ஒருவரின் போனுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவரின் அழைப்பு வந்தது. அமைச்சர் லைனில் இருக்கும் விஷயத்தை, சசிகலாவிடம் அந்த உறவினர் சொன்னதும், உடனே போனை வாங்கி ஆறு நிமிடங்கள் பேசியுள்ளார்.’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! கொங்கு மண்டல அமைச்சர் பாணியிலேயே, மேலும் ஏழு அமைச்சர்கள் சசிகலா உறவுகளின் செல்போன் மூலம் சசிகலாவிடம் பேசியுள்ளனர். அவர்களில் ஆறு பேர், சசிகலாவால் அமைச்சர் பதவியைப் பெற்றவர்கள். இவர்கள் இப்போதும் மறைமுகமாக சசிகலாவின் ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள். அமைச்சர்கள் அனைவருமே தினகரன் செய்த தவறுகளை சசிகலாவிடம் சுட்டிக்காட்டினார்களாம். மேலும், எடப்பாடி தரப்புக்கு டெல்லியிலிருந்து கிடைக்கும் ஆதரவையும் பற்றிச் சொன்னார்களாம். சசிகலாவிடம் பேசிய இந்த அமைச்சர்கள் அனைவருக்கும் உடனேயே எடப்பாடி தரப்பிலிருந்து அழைப்பு வந்திருக்கிறது. ‘நீங்கள் பேசியதெல்லாம் தெரியும். இப்படித் தடம் மாறினால், ஆட்சி பறிபோகும். நீங்களும் பதவியில்லாமல் வீதியில் நிற்பீர்கள்’ எனக் கண்டிப்பான தொனியில் சொல்லப்பட்டதாம். அவர்கள் ஆடிப்போய்விட்டார்கள். இதைத் தெரிந்துகொண்ட முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டவும் முடிவெடுத்தாராம். ‘அமைச்சர்கள் எல்லோரும் என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள்’ என்று காட்டவே இந்தக் கூட்டமாம்.’’

p42c.jpg‘‘அமைச்சர் செல்லூர் ராஜு வெளிப்படையாகவே, சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியுள்ளாரே?’’

‘‘எல்லா அமைச்சர்களும் ஒன்றுசேர்ந்து சசிகலாவையும் தினகரனையும் கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தபோதே, ‘இந்த முடிவும் அந்தக் குடும்பத்தின் சம்மதமில்லாமல் எடுக்கப்பட்டி ருக்காது’ என்று சொன்னவர்தான் செல்லூர் ராஜு. அவர் எப்போதும் சசிகலாவின் விசுவாசிதான். இப்படிப் பேசிய அன்று இரவே, செல்லூர் ராஜுவுக்கு பல இடங்களிலிருந்தும் அழுத்தம் வந்துள்ளது. அதனால்தான் மறுநாள் ‘சசிகலா குறித்து நான் மனசாட்சிப்படி பேசியது பெரிதுபடுத்தப்பட்டது. அம்மாவின் ஆட்சிக்கும் முதல்வர் பழனிசாமியின் தலைமைக்கும் என்னால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று சொல்லிச் சமாளித்தார். இந்த நிலையில், ‘செல்லூர் ராஜு மனசாட்சிப்படி பேசியிருக்கிறார். அவர் மதுரைக்காரர்’ என்று தினகரன் பேட்டியளித்தது எடப்பாடியைச் சூடாக்கியுள்ளது.’’

‘‘கிருஷ்ணப்ரியா வீட்டில் ஏன் சசிகலா தங்கினார்?’’

‘‘பரோலில் வரும்போது போயஸ் கார்டன் வீட்டில் தங்கவே சசிகலா ஆசைப்பட்டார். அதில் சட்டச் சிக்கல்கள் ஏற்படும் என்று வக்கீல்கள் சொன்னார்கள். தினகரனும் அவரின் மனைவி அனுராதாவும் அவர்களுடைய அடையார் வீட்டில் வந்து தங்கச் சொன்னார்கள். ஆனால், சசிகலா, தினகரன் மீது இருந்த வருத்தத்தில் அதை மறுத்துவிட்டார். கிருஷ்ணப்ரியா வீடு சசிகலாவுக்கு ரொம்பப் பிடிக்கும். 2011-ல் சசிகலாவை போயஸ் கார்டன் வீட்டிலிருந்து ஜெயலலிதா வெளியேற்றிய போது, சசிகலா இந்த வீட்டில்தான் தஞ்சமடைந்தார். அப்போது இந்த வீட்டின் மாடியில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போதும் அந்த அறையில்தான் தங்கினார்.’’

‘‘மொத்தமாக, சசிகலாவின் மனநிலை எப்படி இருக்கிறது?’’

‘‘அவருக்குப் பிரதானமாக இரண்டு சோகங்கள் இருக்கின்றன. ஒன்று, கணவர் நடராசன் உடல்நிலை குறித்த சோகம். ஜெயலலிதாவின் சமாதிக்குப் போகமுடியவில்லையே என்பது இன்னொரு சோகம். சென்னைக்கு வந்த அன்று இரவு நெடுநேரம் தூங்காமல் தவித்தாராம். ‘என்னுடன் யாராவது ஒரே ஒருவர் மட்டும் வாருங்கள். அடையாளம் தெரியாத கார் ஒன்றில் கிளம்பிப் போய் அக்கா சமாதியைப் பார்த்துவிட்டு வரலாம். ஒரே ஒரு பூ வைத்து வணங்கி, அந்தச் சமாதி முன்பாக 2 நிமிடங்களாவது உட்கார்ந்துவிட்டு வந்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கும். அந்தக் காற்று என் மீது பட்டாலே போதும்’ என்றாராம். பரோல் நிபந்தனைகளைச் சொல்லி, அவரை எல்லோரும் கட்டுப்படுத்தினார்களாம். முதல்நாள் குளோபல் மருத்துவமனைக்குச் சென்றபோது, 15 வயது மதிக்கத்தக்க பையன் ஒருவன், கையில் ஒரு கைக்குட்டையுடன் சசிகலா காரை நெருங்க முயன்றான். கூட்ட நெரிசலில் அவனால் அருகில் வரமுடியவில்லை. அங்கிருந்து தி.நகர் வீட்டுக்குத் திரும்பியபோது, வாசலில் நின்ற கூட்டத்தில் அந்தப் பையனும் இருப்பதைக் கவனித்த சசிகலா, காரை நிறுத்தி அருகில் அழைத்தார். கைக்குட்டையைப் பிரித்த அந்தப் பையன், ‘அம்மா சமாதியில் வைத்து வழிபட்டு இந்தப் பூக்களை உங்களுக்காக எடுத்து வந்திருக்கிறேன்’ என்று அன்புடன் தந்திருக்கிறான். ‘என்னால போக முடியாவிட்டாலும், எனக்காக அக்கா அனுப்பி வெச்சிருக்காங்க’ என நெகிழ்ந்தபடி, நீண்டநேரம் அந்தப் பூக்களைக் கையிலேயே வைத்திருந்தார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்குகள் செய்த தேவாதி, சசிகலாவைச் சந்தித்தார். ஜெயலலிதாவுக்காகச் செய்ய வேண்டிய சில சடங்குகள் பாக்கி இருந்ததாம். அதை, கிருஷ்ணப்ரியா வீட்டில் வைத்து சசிகலா இப்போது செய்து முடித்தாராம்.’’

p42a.jpg‘‘சசிகலாவின் வருகைக்குப் பிறகு எல்லாரும் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறார்கள்போல?

‘‘ஆம்! சசிகலா பரோலில் வந்ததும் பல அமைச்சர்கள் சொந்த ஊர்களுக்குப் பறந்து விட்டனர். டெங்கு விழிப்பு உணர்வு பிரசாரம்,   எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா எனக் காரணம் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேச்சிலும் தொனி மாறிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு கதையைச் சொல்லி, தினகரனையும் மு.க.ஸ்டாலினையும் கடுப்படிப்பது அவரின் வழக்கம். சசிகலா பரோலில் வெளிவந்த 7-ம் தேதி தர்மபுரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் அப்படிக் கதை எதையும் சொல்லாமல் விழாவை முடித்துவிட்டார் எடப்பாடி. முதல்வர் கதை சொல்வதைத்தான் நிறுத்தியுள்ளார். ஆனால், பல அமைச்சர்கள் செல்போன் பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டனர். தங்களுக்கு அழைப்பு வருமோ என்ற அச்சம். எதற்கெடுத்தாலும் கருத்துச்சொல்லும் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள்கூட மௌனமாகிவிட்டனர். பன்னீர்செல்வமும் அரசியல் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.’’

‘‘மருத்துவமனைக்குச் சென்ற சசிகலாவைப் பலர் சந்தித்ததாகச் சொல்கிறார்களே?’’

‘‘நடராசனைப் பார்க்க குளோபல் மருத்துவமனைக்குத் தினமும்  செல்கிறார் சசிகலா. குளோபல் மருத்துவமனையில், இரு அறைகள் சசிகலாவின் உறவினர்களுக்காகத் தயார்செய்து வைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குப் போனதும், அந்த அறையில்தான் சசிகலாவும் இருந்தார். மருத்துவமனை உடையணிந்து, முகத்தில் மாஸ்க் அணிந்து சென்ற சசிகலாவை அநேகமாக நடராசனுக்கு அடையாளமே தெரிந்திருக்காது. நடராசன் கையை மட்டும் அசைத்துள்ளார். நடராசன் இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் இருக்கிறார். அவர் சுயநினைவில் இருந்தாலும், தொண்டையில் ட்ரகியாஸ்டமி பொருத்தப்பட்டுள்ளது. இதேநிலைதான் அக்டோபர் 13 வரை நீடிக்கும். ஆனால், சசிகலாவின் பரோல் 12-ம் தேதியோடு முடிகிறது. அதனால், சசிகலாவும் நடராசனும் பேசிக்கொள்ளும் சூழல் இப்போதைக்கு இல்லை.’’

‘‘சசிகலாவிடம் டாக்டர்கள் என்ன சொன்னார்களாம்?’’

‘‘டாக்டர் முகமது ரீலா தலைமையிலான டீம், நடராசன் உடல்நிலைப்பற்றி எடுத்துச் சொன்னது. நடராசன் உடலில் அகற்றப்பட்ட கல்லீரலைப் பதப்படுத்தி வைத்திருந்தனர். அதையும் எடுத்துக் காட்டியுள்ளனர். ‘இந்தக் கல்லீரல், ரோஜாப்பூ நிறத்தில் இருக்க வேண்டும்; ஆனால், பாருங்கள். சாருடைய கல்லீரல் நிறம் மாறியிருக்கிறது’ என்று விளக்கினர். அதை ஆச்சர்யத்தோடு பார்த்த சசிகலா, ‘அவர் எப்போது முழுமையாக குணமடைவார்’ என்று  கேட்டுள்ளார். ‘புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், சரியாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. கல்லீரல் செயல்படும் விதம் தெரிய ஒரு வாரம் ஆகும். இன்னும் சில மாதங்களுக்கு மிகுந்த கவனத்துடன் தொற்று பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் அதன்பின் எங்கள் அட்வைஸை அவர் சரியாகக் கடைபிடித்தால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு ஒன்றும் ஆகாது’ என டாக்டர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளனர். அதோடு, இங்கு சிகிச்சை பெறுவதற்கு அரசுத் தரப்பில் தரப்பட்ட நெருக்கடிகள் குறித்தும் சசிகலாவிடம் உறவினர்கள் சொன்னார்கள். அதில் அவர் ரொம்பவே கோபமடைந்தாராம்.’’

‘‘சசிகலாவின் தம்பி திவாகரன் அவரைச் சந்திக்க வந்ததாகத் தெரியவில்லையே?’’

‘‘ஆமாம்! நடராசன் குளோபல் மருத்துவமனையில் அட்மிட்டானபோது, திவாகரன் அடிக்கடி வந்துபோனார். ஆனால், சசிகலாவைச் சந்திக்க திவாகரன் வரவில்லை. காரணம், அவருக்குக் கடுமையான டெங்கு காய்ச்சலாம். சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருக்கிறார். சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு திரும்புவதற்குள் திவாகரன் வந்து அவரைச் சந்திப்பார்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்ஸி
படங்கள்: கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசலு


மேடையில் படம் வேண்டாம்!

p42.jpg

காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த உள்கட்சித் தேர்தலையும் பொதுக்குழுவையும் நடத்தி முடித்த மகிழ்ச்சியில் இருக்க வேண்டிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திருநாவுக்கரசர், அப்செட்டில் இருக்கிறார். பொதுக்குழுவில் தன்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ‘பொதுக்குழு மேடையில் திருநாவுக்கரசர் படத்தை வைக்கக்கூடாது’ என்ற தேர்தல் பார்வையாளர் சஞ்சய் தத் உத்தரவால் அதிர்ச்சி யடைந்தார். அடுத்த அதிர்ச்சியாக, டெல்லியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தைப் படிக்கச் சொன்னார்களாம். ‘தலைவர், செயற்குழு உறுப்பினர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமனம் செய்யும்’ என்ற ஒற்றைத் தீர்மானத்தை நிறைவேற்றினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். பொதுக்குழுவுக்கு முதல்நாள் இரவு வந்த இந்தத் தகவலால் நொந்துவிட்டார் திருநாவுக்கரசர். இனி தலைவர் பதவியைப் பிடிக்க பலரும் டெல்லிக்குப் படையெடுப்பார்கள் என்று அஞ்சுகிறார். 

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this