Jump to content

மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் 


Recommended Posts

மகாலிங்கம் ஞாபகார்த்த இறுதிப் போட்டியில் திருநெல்வேலி – யாழ் பல்கலை அணிகள் 

cr-3.jpg
 

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கம் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நடாத்தி வரும் V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ண T-20 தொடரின் அரையிறுதியில் வெற்றி பெற்ற திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மற்றும் யாழ் பல்கலைக்கழக அணிகள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.  

 
 

இப் போட்டித்தொடரானது இறுதிக் கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்றில் குழு நிலைப் போட்டிகளில் மோதியிருந்த அணிகளிலிருந்து 8 அணிகள் காலிறுதிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தன. அதனடிப்படையில் காலிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அணிகள் யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டங்களில் மோதியிருந்தன.

முதலாவது அரையிறுதி  

முதலாவது அரையிறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டக்காரர்கள் நிறைந்த சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து நடப்பாண்டில் பலமான அணியாகத் திகழும் யாழ் பல்கலைக்கழக அணி மோதியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பல்கலைக்கழக அணியானது முதலாவது ஓவரிலேயே கபில்ராஜ்ஜின் விக்கெட்டினை இழந்தது. தொடந்து அணித் தலைவர் குருகுலசூரிய 15 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். தொடர்ந்தும் அதிரடியாக ஆடிய செந்தூரன் 30 ஓட்டங்களுடனும், ஜனந்தன் 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க யாழ் பல்கலைக்கழக அணி  பத்தாவது ஓவர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் 4 விக்கெட்டுக்களை இழந்து 70 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

எனினும், ஐந்தாவது விக்கெட்டிற்காக இணைந்த துவாரகசீலன் – கஜேந்திரன் இணை சென்றலைட்ஸ் அணிக்கு 174 என்ற பலமான வெற்றியிலக்கினை நிர்ணயித்தது. இறுதிவரை நின்று ஆடி அரைச்சதம் கடந்திருந்த துவாரகசீலன் 62 ஓட்டங்களுடனும், கஜேந்திரன் 42 ஓட்டங்களுடனும் களத்திலிருந்தனர்.

பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட மூன்று விக்கெட்டுக்களையும் ஜேம்ஸ் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் அணியானது ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. எனினும், அலன்ராஜ்(12), ஜேம்ஸ் (18) ஆகியோரது விக்கெட்டுக்களை ஜனந்தன் கைப்பற்றினார். 35 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்த சென்றலைட்ஸ் அணியின் 5ஆவது விக்கெட் 46 ஓட்டங்களைப் பெற்றவேளையில் எடினின் ஆட்டமிழப்பு மூலம் வீழ்த்தப்பட்டது.

 

தொடர்ந்து வந்த சேல்டன் அதிரடியாக ஆடி 39 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். எனினும் தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்த சென்றலைட்ஸ் அணி இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. எனவே வெறும் 8 ஓட்டங்களால் வெற்றிபெற்ற யாழ் பல்கலைக்கழக அணி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

பந்து வீச்சில் ஜனந்தன் 4 விக்கெட்டுக்களையும், துவாரகசீலன, சுபேந்திரன் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

Thepapare.com ஆட்டநாயகன் – துவாரகசீலன் – யாழ் பல்கலைக்கழக அணி

போட்டியின் சுருக்கம்

யாழ் பல்கலைக்கழகம்: 173/04 (20) – துவாரகசீலன் 62*, சுபேந்திரன் 42*, செந்துரன் 30, ஜேம்ஸ் 03/39, டார்வின் 00/26

சென்றலைட்ஸ் விளையாட்டுக் கழகம்: 165/09(20) – செல்டன் 39, எடின் 26, ஜனந்தன் 04/39, சுபேந்திரன் 02/22, துவாரகசீலன் 02/30

போட்டி முடிவு – 08 ஓட்டங்களால் யாழ் பல்கலைக்கழக அணி

இரண்டாவது அரையிறுதி  

தொடரில் தோல்விகளை சந்திக்காத அணியான அரியாலை அணியும் தற்போது யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக சிறந்த பெறுதியினை வெளிப்படுத்திவரும் அணியான திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணியும் இரண்டாவது அரையிறுதியில் மோதியிருந்தன.

முதலில் துடுப்பெடுத்தாடிய திருநெல்வேலி அணியானது 24 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை இழந்திருந்தபோதும் தொடர்ந்து வந்த ஜசிந்தன் (22), லவகாந் (45), சைலேஸ்வரன் (20) ஆகியோரது சிறப்பான துடுப்பாட்டம் மூலம் சீரான ஓட்ட வேகத்தினை அடைந்தது.

மறுபக்கம் அரியாலையின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை சரித்த வண்ணம் இருந்தனர். இறுதியில் 8ஆம் இலக்கத்தில் களம்புகுந்த சுரேஷ் அதிரடியாகப் பெற்றுக்கொடுத்த ஆட்டமிழக்காத 29 ஓட்டங்களின் துணையுடன் 08 விக்கெட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்.

பந்து வீச்சில் பிரிசங்கர், லினோர்த்தன் ஆகியோர் தலா 03 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 
 
 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அரியாலை மத்தி அணிக்கு சகல வீரர்களும் பங்களித்த போதும் எந்தவொரு வீரரும் வெற்றிக்கான சிறந்தவொரு நிலையான பங்களிப்பினை வழங்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களையும் இழந்துவந்த அரியாலை மத்தி அணி லிதூர்ஜனின் 28 ஓட்டங்கள் மற்றும் பிரிசங்கரின் 15 ஓட்டங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 148 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன் காரணமாக 16 ஓட்டங்களினால் அரியாலை மத்தி அணியை திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் வெற்றிகொண்டது.

Thepapare.comஇன் ஆட்டநாயகன் – லவகாந்த் – திருநெல்வெலி கிரிக்கெட் கழகம்

போட்டியின் சுருக்கம்

திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்: 164/08 (20) – லவகாந்த் 45, சுரேஷ் 29*, ஜசிந்தன் 22, பிரிசங்கர் 03/16, லினோர்த்தன் 03/22

அரியாலை மத்தி கிரிக்கெட் கழகம்: 148 – லிதூர்ஜன் 28, பிரிசங்கர் 22, அனுரதன் 02/06, சைலேஸ் 2/26

எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று V.T மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி மற்றும் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி ஆகியன பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

 

 

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.