Sign in to follow this  
நவீனன்

கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage

Recommended Posts

கைத்தடி உதவியுடன் திருமணச் சந்தைக்கு வரும் அரேபிய ஷேக்குகள் #child-marriage

 

ரெஹானாவுக்கு 14 வயதே ஆகியிருந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள். 2004-ம் ஆண்டு வளைகுடாவைச் சேர்ந்த 55 வயது ஷேக் ஒருவருக்கு சட்டவிரோதத் திருமணம் செய்துகொடுத்தனர். மும்பையில் வைத்துத் திருமணம் நடந்தது. பெற்றோர் ரெஹானாவைக் கணவரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினர். ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கும். மும்பை ரயில் நிலையத்தில் அனதாரவாகக் கிடந்தார் ரெஹானா. வயிற்றில் கரு உருவாகியிருந்தது. வீட்டுக்கு வந்த, ரெஹானாவின் கருவைப் பெற்றோர் கலைத்தனர். மீண்டும் விற்பனைக்குத் தயாரானார் ரெஹானா. 

ஹைதரபாத்தில் பிடிபட்ட ஷேக்குகள்

 

கத்தாரைச் சேர்ந்த 70 வயது ஷேக், இந்த முறை ரெஹானாவை வாங்கினார். கத்தாருக்குச் சென்ற ரெஹானாவை, சில காலம் தன்னுடன் வைத்துவிட்டு மற்றொருவருக்கு விற்பனை செய்தார் அவர். இப்படி 16 பேரிடம் கைமாறினார் 14 வயதே ஆகியிருந்த அந்தச் சிறுமி ரெஹானா அனுபவித்த ரணங்களை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. 

ஹைதரபாத்தைப் பொறுத்தவரை சில குடும்பங்களில் மகள்கள் பணம் காய்ச்சி மரங்கள். இதற்கென்றே ஏஜென்டுகள் 50 பேர்  இருக்கிறார்கள். வளைகுடாவில் 15 பேரும் இங்கே 35 பேரும் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். புரோக்கர்களில் 25 பேர் பெண்கள் என்பதும் கூடுதல் தகவல். ஏழ்மையான குடும்பத்தைக் கண்டறிந்து பணத்தாசைக் காட்டுவதில் பெண் புரோக்கர்கள்தான் கில்லாடிகளாம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இந்தக் கொடுமை ஹைதரபாத்தில் நடந்து வருகிறது. சமீபத்தில்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

புரோக்கர்கள் ஷேக்குகளை மூன்று விதமாகப் பிரித்துள்ளனர். ஆட்டோவில் செல்பவர் ஒரு பிரிவு. இவர்கள் சாதாரண லாட்ஜுகளில் தங்கிக் கொள்பவர்கள். அடுத்து காரில் செல்பவர்கள். இவர்கள் ஓரளவுக்குப் பணவசதி படைத்தவர்கள். அடுத்ததாக, இனோவா காரில் செல்பவர்கள். இவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்குமளவுக்கு வசதியுள்ளவர்கள். ஷேக்குகளின் செல்வச் செழிப்பைப் பொறுத்து சிறுமிகளுக்கு ரேட் பேசப்படும். அதன்படி ரூ.50,000 முதல் 5 லட்சம் வரை சிறுமிகளுக்கு விலை பேசப்படுகிறது. முன்னதாக, சிறுமிகளை ஷேக்குகளிடம்  அழைத்துச் சென்று காட்டுவார்கள். என்ன ஏதுவென்றேத் தெரியாமல் சிறுமிகள் ஹோட்டல் அறைகளுக்குச் செல்வார்கள். ஷேக்குக்குப் பிடித்துப்போய்விட்டால், தாராளமாகப் பணத்தை வழங்குவார்களாம். அதில், குடும்பத்துக்கு ஒரு லட்சம் வழங்குவார்கள். மற்றவை, திருமணம் செய்து வைக்கும் மத குருக்கள், புரோக்கர்கள் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

சவுதி, கத்தார், ஏமன், அமீரகம், சூடான், சோமாலியா நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக ஹைதரபாத் வந்து சிறுமிகளை சட்டவிரோதமாகத் திருமணம் செய்கின்றனர். செப்டம்பர் 10-ம் தேதி போலீஸ் நடத்திய வேட்டையில் 11 ஷேக்குகள் பிடிபட்டனர். அதில், இருவர் நடக்கக்கூட முடியாமல் கைத்தடி உதவியுடன் நடந்தனர் என்பதுதான் காலக்கொடுமை!

சிறுமிகள் வளைகுடா நாட்டுக்குக் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக 'ஷாகீன்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் போராடி வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஜமீலா நிஷாத் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்று 500-க்கும் மேற்பட்டச் சிறுமிகள் சட்டவிரோதமாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது கணக்கில் வந்தவை. 2016-ம் ஆண்டில் 100 சிறுமிகளுக்குச் சட்டவிரோதத் திருமணம் நடந்திருக்கிறது. கணக்கில் வராதது இதைவிட 10 மடங்கு அதிகமாக இருக்கும்'' எனச் சந்தேகிக்கிறார். 

 

பழம்பெருமை வாய்ந்த ஹைதராபாத் நகரம் அரேபிய ஷேக்குகளின் திருமணச் சந்தையாக மாறி வருவதுதான் வேதனை!

http://www.vikatan.com/news/tamilnadu/103828-hyderabad-becomes-bride-bazaar-for-rich-sheikhs.html

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this