Jump to content

குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்


Recommended Posts

குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்
 

மட்டக்களப்பு மாநகர கழிவகற்றல் முகாமைத்துவமும்

 திருப்பெருந்துறை கிராமத்தின் சுற்றுச்சூழல்

பிரச்சினைகளும் - ஒரு நேரடி றிப்போர்ட்

image_e68db916ec.jpg

“....... கொக்கட்டி மரத்துக்குக் கீழே முனிவர் ஒருவர் தவமிருந்தவராம். முனிவருக்கு யாரோ தீங்கு செய்ததாகவும், அந்த முனிவர சாபக்கேடால ‘கோதாவாரி’ என்று சொல்கின்ற அம்மைநோய் வந்து, கனக்கப்பேர் செத்து, குடிக்கத்தண்ணி இல்லாமல் ஆக்கப்பட்டு, எல்லாரும் திருவெந்தியன் மேடு, கல்லடித்தெரு, சிங்களவாடி- போய் குடியேறினதாக சரித்திரம் இருக்கிறது”. 

“இந்த இடப்பெயர்வுக்குப் பிறகு, மூன்று தினப் பூசையும் இல்லாமல் திருப்பெரும்துறை என்ற கிராமமே காடாகிப் போயிற்று; இதற்குரிய ஆதாரம் இருக்கிறது. எங்கட மூதாதைகள் சொன்னதைச் சொல்றன்”. என்கிறார் திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர்.  

‘மட்டக்களப்பு மான்மியம்’ என்ற மட்டக்களப்பின் வரலாற்றைக் கூறும் நூலிலும், திருப்பெருந்துறை குறித்த பல வரலாற்றுச் சம்பவக் குறிப்புகள் காணப்படுகின்றன.

நாகரிகமடைந்த மனிதக்குடியிருப்புகள் இங்கு இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த மக்கள் கோவில்கள் கட்டி வழிபட்டார்கள் என்றும் துறைமுகத்தில் வள்ளங்களிலேயே வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் என்றும் மட்டக்களப்பு மான்மியத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இன்றும் அழிபாடடைந்த நிலையிலும் கைவிடப்பட்ட நிலையிலும் இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல வரலாற்றுச் சான்றுகள் ஆலயச் சூழல்களிலும் துறைகளிலும் காணப்படுகின்றன.   

இத்தகைய சிறப்புகள் பெற்ற திருப்பெருந்துறை கிராமம் இன்று பெரும் ‘சில்லெடுப்பு’க்குள் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. அதற்குக் காரணம், குடியிருப்பிலிருந்து 30 அடி தூரத்தில் இருக்கும் குப்பை மேடு.  

image_127d926a4b.jpg

இந்தக் குப்பைமேட்டினால் திருப்பெரும்துறை கிராமத்தின் இயல்பு வாழ்க்கை கெட்டு, சுற்றுச்சூழல் சீர்கெட்டு,அந்தக்கிராமத்து மக்கள் ‘அனலில் விழுந்த புளு’ப்போல் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

குப்பை மேட்டில், குப்பை எரிவதால் காற்றுப் போக்கில், கிராமத்துக்குள் வீசும் புகை மண்டலம், பசியாறுவதற்காக உணவுத்தட்டைக் கையிலெடுத்தால் உணவு தெரியாத வகையில் மொய்க்கும் இலையான்கள், மஞ்சள் நிறத்தில் காணப்படும் கிணற்று நீர், மனிதக்கழிவுகள், உணவுக்கழிவுகள், விலங்குக்கழிவுகள் போன்ற கழிவுகளில் இருந்து எழும் ‘துர்வாடை’ எனத் திருப்பெரும்துறை கிராமத்து மக்கள், நிம்மதியைப் பறிகொடுத்து,தொல்லைகளினால் துடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.   

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் குப்பைகள் அகற்றப்படாமலும் மற்றும் லொறிகளில் ஏற்றப்பட்ட குப்பைகளைக் கொட்டுவதற்கு வழி இன்றியும் நகரின் குப்பை அகற்றும் முகாமைத்துவம் செயலிழந்து காணப்படுகின்றது.   

image_cc75c97598.jpg

மட்டக்களப்பு மாநகரத்தில் இதுவரை காலமும் சேகரிக்கப்பட்ட திண்ம மற்றும் திரவக் கழிவுகள் திருபெரும்துறை குப்பை மேட்டில்தான் கொட்டப்பட்டு வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.  

“1935 ஆம் ஆண்டு, வலையிறவு கிராம சபையாக இருக்கும்போது, வெள்ளைக்காறன் காலத்திலேயே ‘சொலிட்வேஸ்டு’க்கு உரியதும் ‘லிக்குயிட் வேஸ்ட்டு’க்கு உரியதுமான காணி ஒதுக்கப்பட்டது. அந்தநேரமிருந்தே, தொடர்ந்து இற்றை வரைக்கும் கொட்டிக்கொண்டிருந்தனாங்கள்” என்கிறது, மட்டக்களப்பு மாநகரசபை வட்டாரங்கள்.  

image_b0a11069d9.jpg 

“நாங்க என்ன தீர்வு வந்தாலும் இனிமேல் குப்பை கொட்டுறத்துக்கும் மலம் கொட்டுறத்துக்கும் இனிமேல் இடமளிக்க மாட்டோம்” என்று ஒற்றைப்படையாகச் சொல்கிறது திருப்பெருந்துறை கிராமம்.  

image_ade8c99ebb.jpg

கோத்துக்குளம், கதலிவனம், சேத்துக்குடாகண்டம், வேம்பையடிதுறை, விடத்தல்முனை ஆகிய ஐந்து குறிச்சிகளையும் உள்ளடக்கிய கிராமமே திருப்பெருந்துறையாகும். கிராமத்தின் நிர்வாகப் பதிவுகளின்படி, 447 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. வடக்கிலிருந்து தெற்காக மூன்றரைக் கிலோமீற்றர், கிழக்கிலிருந்து மேற்காக மூன்றரைக் கிலோமீற்றர் நீளஅகலத்தையுடைய விஸ்தீரணம் கொண்டதே திருப்பெருந்துறை கிராமம் ஆகும்.   

கிழக்கும் மேற்கும் மட்டக்களப்பு வாவியை எல்லையாகவும் வடக்கில் மட்டக்களப்பு - கொழும்பு வீதி உட்பட, சின்னஊறணி, பெரிய ஊறணி ஆகிய கிராமங்களை எல்லையாகவும் தெற்கில் விமானநிலையமும் அதற்கப்பால் திமிலத்தீவு, வலையிறவு, புதூர் கிராமங்களையும் எல்லையாகக் கொண்டதே திருப்பெருந்துறை கிராமம் ஆகும்.   
“இந்தத் தண்ணியைப் பாருங்க... (தண்ணீர் இளம் மஞ்சள் வர்ணத்தில் இருந்தது) இந்த வயரைப் பாருங்க...(வயரின் நிறம், அதன் வகை தெரியாதளவுக்கு இலையான்கள் மொய்த்திருந்தன) இந்தத் தண்ணியை ஆய்வு நடத்தி, சயனைட்டுக்குச் சமமான நஞ்சு இந்தத் தண்ணியில் இருக்கு என்று அறிக்கை தந்திருக்கிறார்கள். அம்பாறை மாவட்டத்திலிருந்து அகதியாக வந்தனாங்கள்; எங்களைக் கொண்டு வந்து பலாத்காரமாகக் குடியேற்றிப் போட்டு, திரும்பக் குடிபெயரச் சொல்லிச் சொல்றாங்கள்.

குப்பை இருக்குத்தானே, குப்பையில் கீழுக்கு ஊறும் தண்ணி, இந்தக் கிணற்றுத் தண்ணியோட வந்து கலந்துட்டுது. இந்தத் தண்ணி பாவிக்கக்கூடாது என்று முதல்செய்த ஆய்விலேயே சுற்றாடல் அதிகார சபை சொல்லீட்டாங்கள். குடிச்சால் சாவினம்.

மீள்குடியேற்றம் செய்யேக்கை ஜிஎஸ்க்கு எம்சிக்கு ஒவ்வீஸ் கட்டிக் கொடுத்தவை. இந்தக் குப்பை நாத்தத்தால் இங்க இருக்கேலாது என்று போட்டாங்கள். அரசாங்க ஊழியர், அதிகாரிகள் இருந்து வேலை செய்ய முடியாதென்றால், அப்ப குப்பை நாத்தத்துக்குள்ள நாங்கள் இருக்கலாம். மக்கள் இருக்கலாமா? ஜி.எஸ் கொஞ்சக்காலம் சகிச்சுக்கொண்டு இருந்தவர். இங்க இருக்கேலாது என்று சொல்லிப்போட்டு, அவர் வாடகைக்கு வீடொன்று எடுத்திருந்தவர்” என்று திருப்பெருந்துறை ‘கிராமம்’, தனது அவலங்களைச் சொன்னது.  

திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ வட்டாரங்கள்.... “சிக்கல் வந்தது என்ன என்று சொன்னால், வாகனம் பழுதாகிப் போச்சு. வாகனம் மிதிச்சு மிதிச்சு ‘டம்’ பண்ணும். எல்லாம் பிளட்டாக இருக்கும். ஒரு மாதமா பெரிய கஷ்டமாகிப் போச்சுது. றிப்பெயர் எல்லாம் பண்ணினாங்கள். பாட்ஸ் ஒன்று வரஇருக்குது. ‘டம்பண்ணி டம்பண்ணி’ ஒரு லெவலுக்கு வந்த பிறகு,கிரவல் போட்டு ‘பில்’ பண்ணி விடுவோம். ஒன்றை பில்பண்ணி விட்டோம். படிப்படியாக இதை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அடுத்ததை ‘பில்’ பண்ண ஆயத்தமாகின்ற போதுதான், நெருப்புச்சம்பவம் நடைபெற்றது.ஆக எங்களுக்கு பின்பக்கம், சின்னதோடு கால் ஏக்கர் காணி இருக்கிறது. அதை பில் பண்ணீட்டு ஒரு பூங்கா மாதிரி.....” 

“அதோடு தரம்பிரித்தல் செய்யத்தொடங்கி விட்டோம். உக்கிற கழிவு, உக்காத கழிவு, கண்ணாடிகள் வேற, காட்போர்ட் வேற, குசினிக்கழிவுகள்.... ஒரு நாளைக்கு இப்படி பிரித்துப் பிரித்து எடுப்பாங்கள். 60 அடிப் பள்ளத்துக்குத்தான் குப்பைபோட்டு நிறவி வருகின்றது. 10ஆயிரம் லோட் கிறவல் ஏத்தினால் எவ்வளவு பள்ளமாகுமெண்டு யோசித்துப்பாருங்க. பழைய திருப்பெரும்துறையாக்கள் வேற. இவங்கள வந்து, 1994 ஆம் ஆண்டு சம்மாந்துறை, வீரமலையில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு, அஷ்ரப் வந்து தமிழ் ஆக்களை இங்க குடியேற்றினவர். குடியேற்றும்போது, அப்போதைய முதல்வர் செழியேந்திரம் ஐயா, ‘மோஷன்’ ஒன்று போட்டவர். இதில மக்களைக் குடியேற்றாதீங்க. ஏனென்றால், குடியிருப்பதற்கு இடம் உகந்தல்ல என்று. ஆறு ஏக்கர் விஸ்தீரணம். ஆக்கள் கூட பிடிச்சுப் பிடிச்சு புடி இல்லை”  

“குப்பைகளைத் தரம்பிரிக்கிற சிஸ்டத்தைக் கொண்டுவந்து, இதில உக்கக்கூடிய குப்பைகளை எல்லாம் கொம்போஸ்ட் செய்கிறத்துக்கு ஒரு பகுதி எடுத்துவிட்டு மற்றது உக்கமுடியாத குப்பைகளை டம்மிங்கில் செய்துகொண்டு வந்தோம். இதற்கான எதிர்ப்பு வந்துதான் இந்த நெருப்பு... யாரோ எரித்திருக்கலாம் என்று கருதுகின்றோம்”  

“அங்க இருக்கிற ஆக்களை சகல வசதிகளோயும் இன்னொரு இடத்தைக் கொடுத்து, குடியேற்றினால் நிரந்தரமாக இதற்கொரு தீர்வுவரும்.சோலிட்வேஸ்டாக இருந்தாலும் லிக்குயிட் வேஸ்டாக இருந்தாலும் அவற்றை நவீனமுறையில் கையாள்வதற்கு இந்த இடம்தான் பொருத்தமான இடம்” என்று கூறுகின்றது மட்டக்களப்பு மாநகர சபையின் கழிவகற்றல் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள்.  

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள் தினசரி 23 தொன் உக்கக் கூடிய குப்பைகளும் எனையவை 43 தொன்னுமாக மொத்தம் 70 தொன் வரையில் சேகரிக்கப்படுகிறது. நகரத்தில்  இருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் திருப்பெருந்துறை குப்பைமேடு காணப்படுகிறது.  

தொடரும்

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குப்பை-மேட்டு-கொள்ளிவால்-பேய்கள்/91-204473

Link to comment
Share on other sites

குப்பை மேட்டு கொள்ளிவால் பேய்கள்- 2: திருப்பெருந்துறையின் பூர்வீகம்
 

1814 ஆம் ஆண்டில் கொள்ளை நோய் திருப்பெருந்துறை கிராமத்தைத் தாக்கியதையடுத்து, மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அதன் பின்னர் கிராமம் காடாகிப்போனது. கோவில்குளம் என்ற குறிச்சியில் மட்டும் மக்கள் வாழ்ந்தார்கள்.

image_4e0abd1a8d.jpg

1933 ஆம் ஆண்டு, மட்டக்களப்பு நகர சபையாக இருந்தபோது, அப்போதிருந்த வலையிறவு கிராமசபையின் திருப்பெருந்துறை பகுதி கிரவல் அகழ்வதற்கும்,கழிவுகளை கொட்டுவதற்கும் பிரித்தானியரால் மட்டக்களப்பு நகரசபைக்கு கையளிப்பு செய்யப்பட்டது. பின்னர் 1967 இது மாநகரசபையாக தரமுயர்த்தப்பட்டது.

1988 இல் வலையிரவு கிராம சபையும் மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு வன்செயலினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த 34 குடும்பங்கள் இக்குப்பைமடுவத்துக்கு முன்பாகக் குடியமர்த்தப்பட்டனர். அப்போது மேயராக இருந்த செழியன் ஜே.பேரின்பநாயகம் அவர்களால் இக்குடியேற்றத்தை எதிர்த்து சபைத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வீதி அமைப்பதற்காக கிறவல் மண் எடுத்த பெரும் பள்ளமும் முன்னர் குப்பை கொட்டிய இடத்துக்கு அருகில் காணப்பட்டது. பள்ளத்தை குப்பை கொட்டி நிரப்பியவாறு, குப்பைமேடு மக்கள் குடியிருப்பை நோக்கி நகர்ந்த அதே வேளையில் மக்களும் அப்பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள். இந்தக் குப்பை மேட்டை அகற்றும்படி திருப்பெருந்துறை மக்கள் போராடி வருகின்றார்கள். அவர்கள் சொல்கிறார்கள்.   

“சனங்கள் கேக்கேக்க இவங்கள் சொல்லிக்கொண்டிருந்தது, கூட்டுப்பசளை தயாரிக்கப்போறோம் என்று. ஆனால், அவங்கள் சரியான மாதிரி நடைமுறைப்படுத்திக் கொள்ளேல்ல. வந்த குப்பைகளை அப்படியே தேங்கவிட்டுக் கொண்டே வந்தது”.   
“25 வருஷத்துக்கு மேலாக இந்தப் பிரச்சினை இருக்கு. நாங்க இது சம்பந்தமா பல பேருக்குக் கடிதம் எழுதியிருக்கிறம். தாழ்மையா கேட்டுக் கேட்டு, கடைசியில ‘உதயன்சேர்’ இருக்கேக்குள்ள சொன்னார், ‘இதற்கான ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஆய்வைப் பரிசீலனை செய்து, நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இரண்டு வருட அவகாசம் தாங்கோ’ என்று கேட்டார்கள்”.   

image_343624b950.jpg

“சரி, மிஷினறிகளை வேற இடத்துக்கு, கொண்டு போறது சிக்கலாக இருக்கும். சரி இரண்டு வருடம்தாறம் என்று, நாங்கள் பொறுமையாக இருந்தம். அந்த ரெண்டு வருஷமும் முடிந்து, அதுக்கு மேல ஒன்றரை வருஷமும் முடிந்து விட்டது. அதற்குப் பிறகுதான் நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில குதித்தனாங்கள். குப்பையை எடுங்கோ என்றுதான் நாங்கள் கேட்கிறோம்”.  

“இந்தக் கிராமத்திலுள்ள 446 குடும்பங்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கு. அதோட சேர்த்து ஊறணியில இருக்கிற ஆக்களும் கொம்பிளைன் பண்றாங்கள். 93, 94 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில பஸ்ராண்டுக்குப் பின்னுக்கு பூம்புகாரில் மாடறுக்கிற கழிவுகள் எல்லாம்  கொட்டினவங்கள். இங்க நோமலா இலைகுழையைத்தான் கொட்டினாங்கள். இப்படியே கொட்டிக்கொட்டி குடிமனைவரையும் வந்துவிட்டாங்கள்”.  

image_51c2011351.jpg

“குடியேறும்போது அஷ்ரப் சொன்னார், ‘இந்தப் பள்ளம் இருக்கிறதால, உங்களுக்கு பிரச்சினை வரும். அந்த மட்டத்துக்கு குப்பையை போட்டு நிறவிப்போட்டு, அதுக்கு மேல மண்போட்டு, நிறப்பித் தருவாங்கள்’ என்று. அந்த வார்த்தைக்கு இணங்க, இங்க வர ஓம் பட்டனாங்கள். ஆனால், அவங்கள் என்ன செய்தாங்கள் என்றால், மட்டமாக்கி மண்மூடுறது என்று சொல்லப்பட்ட மட்டத்துக்கு மேலாக குப்பையைப் போடேக்க நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தனாங்கள். எதிர்ப்புத் தெரிவித்த உடனேயே எங்களுக்கு குப்பை கொட்டுவதற்கு வேற இடமில்லை; கொஞ்சம் பொறுங்கள் என்றார்கள்”.  

“இவ்வளவு காலமும் மாடுவெட்டின கழிவுகள் பஸ்ராண்டுக்குப் பின்னாலதான் கொட்டினது. மக்கள் குடியேறிட்டாங்கள். அப்ப மக்களின் தேவை கருதி அகற்றினாங்கள்தானே. ‘கக்கூஸ்வாளி’ எல்லாம் அங்கதான் கழுவினாங்கள். மக்களின் தேவை கருதி அதை வேற இடத்துக்கு எடுத்தாங்கள்தானே. அதுபோல இங்க இருந்து, குப்பை மேட்டை அப்புறப்படுத்துறதுதான் மக்களின் தேவையாக இருக்கிறது”என்கிறது திருப்பெருந்துறை கிராமம். அவர்களின் வார்த்தைகளில் பொறுமையின் விளிம்பில் நிற்கும் ஆக்ரோசம் தெரிந்தது. திருப்பெருந்துறை மக்கள் தமது தீர்மானத்தில் ஆணித்தரமான இருக்கின்றார்கள் என்பதையும் உணரமுடிந்தது.   

ஆனால், திருப்பெருந்துறை குப்பை மேட்டை வேறொரு இடத்துக்கு இடம்மாற்றுவதென்பது உடனடியாகச் செயற்படுத்த முடியாது. சரியான திட்டமிடலுடன் நீண்டகால செயற்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு வேலைத்திட்டமாகும். பல திணைக்களங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதாகும். எனவே திருப்பெருந்துறை மக்களை நிம்மதியாக வாழவைப்பது யார்?  

இதேவேளை திருப்பெருந்துறை திண்ம முகாமைத்துவ நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கும்போது...

error####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20300KB

“மூடுற அளவில இருந்தது. இப்ப ரெண்டு வருசத்தில மூடியிருப்போம். தரம்பிரிப்பு வந்துதென்றால் குப்பையின் அளவு குறைந்துவிடும். பொதுமக்கள் சரியாகத் தரம்பிரித்து, குப்பைகளை அகற்றுவார்களாக இருந்தால், இங்கவாற குப்பைகளின் அளவுகுறையும். 100 கிலோ வாற இடத்தில 15 கிலோதான் வரும். ஓவ்வொரு வூட்டுக்கும் சிவப்பு, பச்சை, ஒரேஞ்ச், வெள்ளை, கறுப்பு என ஐந்து கலரில் ‘பாக்’ கொடுத்தனாங்கள். தரம்பிரித்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு மக்களைப் பழக்கப்படுத்திவிடுவோம். இந்த நடைமுறையைப் பலப்படுத்திக் கொண்டு வரும்போதுதான் நெருப்புப் பிரச்சினை வந்திட்டுது”.  

error####Image%20Size%20is%20too%20large.%20Please%20select%20an%20image%20less%20than%20300KB

“இதுசம்பந்தமான தகவல்களை எல்லாம் பொதுமக்களுடன் ஆணையாளர் கதைச்சவர். நாங்கள் படிப்படியாக சீரமைத்துவாறம். பழைய காலத்தைவிட, இப்ப வந்து எவ்வளவோ, மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. நெப்டெப் நிறுனத்தால், 100 மில்லியன் செலவு கொண்ட திட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. தரம்பிரித்தலில் மீள்சுழற்சிதான் முக்கியம். சூழல் மாசடையப் போவதில்லை. பிளாஸ்ரிக் போத்தல்களை நசித்து 50 கிலோ கிராம் நிறைகொண்ட பொதிகளாக்கும் மிஷின், கடின பிளாஸ்ரிக்கை துகள்களாக்கும் மிஷின் என நவம்பர் முதலாம் திகதிதான் ஆரம்பித்தது. பிள்ளைகளின் ‘பம்பேஸை’யும் பிளாஸ்ரிக் போத்தலுக்குள் போட்டு சனம் தந்துவிடுவார்கள். சனம் சரியாகத் தரம்பிரித்தால் அரைவாசிப் பிரச்சினை தீர்ந்துவிடும்”  

“தினசரி 35,36 லொறிகளில் குப்பைகள் வந்து சேருகின்றன. தினமும் சேரும் 20 தொடக்கம் 24 தொன் உக்கக்கூடியகழிவுகள் உரம் தயாரித்தலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. குவியலாக்கல்,ஈரலிப்பைப் பேணுதல், புரட்டுதல், அரித்தல் மற்றும் பொதிசெய்தல் போன்ற செயன்முறைகள் இடம்பெற்று சேதனப்பசளை தனியார் கடைகள் மூலமும்  பொதுச்சந்தையிலும் விற்பனை செய்யப்படுகின்றது. 2016 இல் 10 சதவீதமே தரம்பிரித்தல் இடம்பெற்றாலும் 2017 இல் இது 33 வீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.உரம் தயாரித்தல் செயன்முறை மூலம் ஒப்பீட்டளவில் துர்நாற்றம் வீசுவதில்லை. குவியலாக்கி மூன்று மாதத்துக்கு அப்படியே விட்டுவிடுவோம். பிறகு ஒருமாதத்துக்கு ஒருக்கா புரட்டுவோம். இது நல்ல பசளை; பூக்காத மரங்களும் பூக்கும். பாடசாலை மாணவர்கள் இங்க வந்து சருகுக் குப்பையிலிருந்து எவ்வாறு சேதனப் பசளை தயாரிக்கின்றோம் என்பதைப் பார்த்துக்கொண்டுபோவார்கள்”. என்கிறது திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ வட்டாரங்கள்.   

திருப்பெருந்துறை குப்பைமேட்டுக்கு அருகிலுள்ள கோவில்குளம் குறிச்சியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க முத்துமாரியம்மன் கோவில் உண்டு. இந்தக் கோவிலில் பண்டைக் காலத்தில் நாகரிகத்தில் சிறந்து விளங்கிய மக்கள் கூட்டம் வாழ்ந்ததற்கான கட்டட இடிபாடுகள், எழுத்துப் பொறிக்கப்பட்ட பாத்திரங்கள் போன்றவை காணப்படுகின்றன. அழிபாடடைந்த நிலையில் காணப்படும் கேணி, கோவிலின் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட கல்லின் சிதைவுகள் போன்றவை இந்த இடத்தின் புராதனத்தை உறுதிப்படுத்துகின்றன. இந்த வரலாற்றுப் பிரசித்திபெற்ற கோவிலின் நிர்வாக சபை வட்டாரங்கள் கருத்துக் கூறும் போது,  
“காத்துமாறி அடிக்கும்போது, கோவில் பக்கம் எல்லாம் மணம் வரும். அதோட இலையான் தொல்லை. இதே மாதிரியான இலையான் தொல்லை சூழ உள்ள கிராமங்களிலும் இருக்கிறது. ஐ.பி.கே.எப் ( இந்திய இராணுவம்) போனத்துக்குப் பிறகுதான் சனம் வந்தது. அதுக்கு முதல் ‘பிறிசன்பாம்’ க்குச் சொந்தமாகத்தான் இருந்தது”.  

image_cec8e0fac0.jpg

“நாங்கள் அங்கால வயல் செய்கிறனாங்கள். அந்த டைமில காடாத்தான் கிடந்தது. இதெல்லாம் நாங்களறிய 50 வருஷத்துக்குட்பட்ட வரலாறுதான். அந்தநேரம் ‘வாளிக்கக்கூசு’தான் பயன்பாட்டில் இருந்து. ‘எம்சி’ ஆக்கள் (மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள்) வாளியில் எடுப்பதைக் கொண்டுவந்து, சும்மா, மடுவை வெட்டிப்போட்டு, அதில கொட்டி மூடிவிடுகிறது. எங்கட மாடுகளும் அதுக்குள்ள போய் விழுந்துவிடும். பிறகு அந்த ஆத்தில்போட்டு கழுவுவோம். அப்படி எல்லாம் பிரச்சினை இருந்தது முதல். இப்ப வாளி சிஸ்டம் இல்ல! இப்ப, சக்கையை எடுத்துவிட்டு, பௌசரில் தண்ணியைத்தான் இங்க கொண்டுவந்து அடிப்பாங்கள்”.  

“மொத்தம் 40 ஏக்கரில் கொஞ்சத்தை ‘பிறிசன்பாம்’ க்கு கொடுத்துவிட்டு, பின்னுக்குக் கொஞ்சத்தை இவங்களுக்கு கொடுத்தது. அந்த நேரத்திலயே கழிவுக் குப்பைகள் போட்டுக்கொண்டு இருந்தவங்கள். அந்த இடத்துக்குப் பெயரே ‘பீக்காட்டு ஏத்தம்’ என்றுதான் சொல்வார்கள். முந்தி, மாரியம்மன் கோவிலுக்கு அங்கால குடியேற்றமே குறைவு. தூரத்தில தூரத்திலதான் வீடுகள் இருந்தன. பிறகு பாதர் ஆக்கள்வந்து காணியை வாங்கித்தான் குடியேறினவை. பிறகு அதில கொஞ்சம் அமெரிக்கன் மிஷன்காரர் வாங்கினாங்கள். வலையிறவு எயார்போர்ட் விஸ்தரிப்பு வந்தபிறகு, காணியை இழந்த ஆக்களுக்கு இதில காணி குடுத்தவங்கள்”.   “முருகன் கோவிலுக்குப் பின்னுக்கு மூன்று கிராம ஆக்கள் இருக்கிறார்கள். வலையிறவு, வீரமுனை ஆக்கள்தான் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் முன்னுக்கு இருக்கிறார்கள். 

image_cf1df16d98.jpg

ஆகமுதல், முகிலிகைத் தோட்டம் செய்வதற்கு குருக்கள் மாருக்கு காணி கொடுத்தவை. கொத்துக்குளம் கோவிலில் கடமை செய்த பஞ்சாட்சரக் குருக்களின் அண்ணைக்கும் அங்க உறுதி ஒன்று இருந்தது. நாட்டு வைத்தியம் செய்வதற்காக மூலிகை வளர்ப்பதற்கு அனுமதியும் கொடுத்து, காணியும் கொடுத்தவங்கள். நவநீதம் ஆணையாளராக இருந்தபோது, அந்தக் காணிகளையெல்லாம் ‘கிளைம்’ பண்ண வெளிக்கிட்டு, பிரச்சினை ஒன்று போனது. அப்படிப் போகேக்கதான் இங்கால வீரமுனை ஆக்கள் வந்து குடியேறினவை” என்கிறது கோவில்குளம் முத்துமாரியம்மன் கோவில் நிர்வாகசபை வட்டாரங்கள். ஐந்து குறிச்சிகளைக் கொண்ட திருப்பெருந்துறை கிராமத்தின் நுழைவாயிலாக இருப்பது கோவில்குளம் குறிச்சியாகும்.  

 (தொடரும்)  
படப்பிடிப்பு: சமன்த பெரேரா

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/குப்பை-மேட்டு-கொள்ளிவால்-பேய்கள்-2-திருப்பெருந்துறையின்-பூர்வீகம்/91-204654

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
கிழக்கிலங்கையின் முதற் பாடசாலை: கன்னத்தில் குடும்பிகட்டிய ஆசிரியரும் மாணவரும்
 

குப்பைமேட்டு கொள்ளிவால் பேய்கள் - 3image_6d347f1cbd.jpg

இலங்கையின் மிகப்பழைமையான பாடசாலை என்று புகழ்பெற்ற மட்டக்களப்பு மத்திய கல்லூரி 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாக கல்லூரியின் வளாகத்திலுள்ள நினைவுப் படிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மட்டக்களப்பின் கல்வி வரலாறு திருப்பெருந்துறை என்று கிராமத்திலிருந்து ஆரம்பமாவதாக திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் மாசிலாமணி சண்முகலிங்கம் கூறுகின்றார். 

அவர் கூறுகின்றார், “.... அதற்கும் 10 வருசத்துக்கு முதல், 1804 ஆம் ஆண்டு, திருப்பெருந்துறையில் திண்ணைப்பள்ளிக்கூடம் ஒன்று இயங்கியதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன”.

“கிழக்கிலங்கையில் முதன்முதலாக திருப்பெருந்துறையிலேயே  பாடசாலை அமைக்கப்பட்டது எனக் கருத இடமுண்டு. காசிநாதர் என்ற ஒருவர்,  கன்னத்தில் குடும்பி கட்டி, ஒருவகைப் புல்லால் இழைக்கப்பட்ட பாயில் மாணவர்களை இருக்கவைத்து, பாடம் சொல்லிக் கொடுத்ததாக வரலாறு உண்டு. பாடம் கற்ற பிள்ளைகளும் கன்னத்தில் குடும்பிகட்டித்தான் கற்றதாகவும் கூறப்படுகின்றது. இங்க முருகன் கோவில், சொறிக்கல்லால் கட்டப்பட்டதற்கான விவரங்கள் இருக்கின்றன” என்கிறார் திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர். 

திருப்பெருந்துறை கிராமத்தின் பெருமை குறித்து, அந்த ஊரவர்கள் மேலும் பேசிக்கொள்ளும்போது, “1804 க்கு முதல் இந்தக் கிராமம்தான் பெரிய ‘ரவுணாக’ இருந்து.

மட்டக்களப்பு என்பதே இதுதான். இந்தக் கிராமத்தில் ஒல்லாந்தர் காலத்தில், யாவாரம் சிறப்பாக நடைபெற்றது.  எல்லா நடவடிக்கைகளும் இந்த ஊரோட ஒட்டித்தான் நடந்துகொண்டிருந்தன. வேம்பையடித்துறை என்ற துறைமுகத்தில் தான் பெரியளவிலான யாவாரம் நடந்திருக்கிறது. அதுவும் கரையில் ஏற்றி இறக்காமல், கடலில் வள்ளங்களில் வைத்தே வியாபாரம் நடைபெற்றிருக்கின்றன. கொப்பறா, தேங்காய், கருவாடு, தும்பு போன்ற கிழக்கின் ஏற்றுமதிப் பொருட்கள், வேம்பையடித்துறையில் இருந்துதான் பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன”. 

“இங்கு பெரியளவிலான மொத்த யாவாரங்கள் நடந்ததனால், இந்தத் துறைமுகம் காலப்போக்கில், ‘பெரியதுறை’ என்ற பெயரைப் பெற்றது. கதலிவனம் குறிச்சியில் முருகன் கோவிலும், கொத்துக்குளம், விடத்தல்முனை குறிச்சிகளில் முத்துமாரியம்மன், கண்ணகை கோவில்களும், சேத்துக்குடாக் கண்டம் குறிச்சியில் பிள்ளையார் கோவிலும்  எழுந்தருளப்பெற்று, பிரசித்தி பெற்ற புண்ணியபூமியாக இந்தப் பகுதி திகழ்ந்ததனால், ‘திரு’ என்ற பெயரைப் பெற்றுத் ‘திருப்பெருந்துறை’ ஆகியது”. 

“இவ்வாறு சிறப்புப் பெற்றிருந்த திருப்பெருந்துறையில்,  கொள்ளைநோய் வந்ததையடுத்து, இங்கு இயங்கிய  திண்ணைப்பள்ளிக்கூடம் இன்றுள்ள மட்டக்களப்பு ரவுனுக்கு இடம்மாறியது. வியாவார நடவடிக்கைகளும் ‘முனிசிப்பல்கேற்று’க்கு போனது” 

image_1317c8e9d4.jpg

“அதுக்குப்பிறகு பல தசாப்தங்களுக்குப் பின்னர், மனோகரன் என்கின்ற கிறிஸ்தவருக்கு முருகன் கனவில் தோன்றி, “இங்க யாரும் இல்லாமல், அங்கங்கு போட்டியள்; உங்கட இடத்தில திரும்பவும் நான்வந்து இருக்கிறன். ஏன் நீங்க அங்க வாறீங்களல்ல; திரும்பவும் இங்க வாங்க” என்ற அசரீதி வாக்குச் சொல்லி, அதுக்குப்பிறகு காடு வெட்டிக் கோவிலைக் கண்டுபிடித்தோம். கோவில் எல்லாம் காடு மேவிப் போயிருந்தது.விளக்குவைத்துப் பூசை செய்தோம்”. 

“அதுக்குப் பின்னர் பிரெஞ்சுப் பாதர் ஒருவர் 1932 ஆம் ஆண்டு, காட்டை வெட்டி, தியான மடம் ஒன்றைக் கட்டினார். இது இன்று ‘மின்றோசா’ என்று அழைக்கப்படுகின்றது. இதுவும் குப்பை மேட்டின் பக்கத்தில் தான் இருக்கிறது. தொடர்ந்து மக்கள் மெல்ல மெல்லக் குடியேறி, 1982 இல் பாடசாலை கட்டப்பட்டது”.

“1990 இல் சம்மாந்துறையில் அகதிகளாக்கப்பட்டு, களுவாஞ்சிக்குடி, கல்லாறு, கொக்கட்டிச்சோலை, கல்லடி நெசவுசாலை ஆகிய அகதிமுகாம்களில் நான்கு வருடங்களாக தங்கியிருந்தபோது, 1994 இல் அஷ்ரப் இங்க கொண்டுவந்து குடியேற்றினார். நாங்க நினைக்கிறோம் புண்ணியம் என்று. ஆனால் அதுகும் ஓர் அரசியல் ரீதியிலான அனுகுமுறைதான். எங்கள அங்கயிருந்து நிலத்தைப் பறிச்சுக்கலைச்சு, அங்க முஸ்லிம் ஆக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். திருப்பெருந்துறையில்  ஓரிடம் இருக்கு போங்க என்று!  இவங்கள இங்க கொண்டுவந்து குடியேற்றினார்கள்”

“அந்தக்காலத்தில ‘நான் உங்கள் தோழன்’, வீ. பி. கணேசன் படம் நடிக்கேக்குள்ள, இந்த இடத்தில்தான் சண்டைக்காட்சி எல்லாம் ‘சூட்டிங்’ செய்தவை. அவ்வளவுக்கு அழகான, இயற்கை வளம் நிறைந்த இடமாக இருந்தது. ‘நான் உங்கள் தோழன்’ படத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த மைக்கல் என்பவரையும் கம்படிச் சண்டைக்காக படத்தில் நடிக்க எடுத்தவங்க; அந்த நேரத்தில் இங்க குப்பை ஒன்றும் கொட்டப்படவில்லை. இந்த இடத்தில் கிறவல் வளம் இருந்தபடியால், அந்தக் கிறவலைக் கொண்டுபோய் றோட்டுப் போட்டவங்கள். தோண்டத்தோண்டப் பள்ளமாக வந்தபடியால், “கிறவல் தோண்டவேண்டாம்” என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, அதுவரையும் கிறவல் எடுத்த இடம், பெரிய பள்ளமாகக் குழியாக இருந்தது. அந்தக் காலத்தில் கல்யாணப் போட்டோ எடுக்கிற ஆக்கள் எல்லாம் இந்தக் கிறவல் குழியில் வந்துதான் எடுக்கிறவை. ஈஸ்ட் லகூன், காந்திப்பொக்கணைக்கு இப்ப போறாங்கள். முந்தி இங்கதான் படமெடுக்க வருவாங்க”

“கிரவல் தோண்ட வேண்டாம் என்று நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினபோது, “நாங்கள் பள்ளத்தை மூடி, மட்டப்படுத்தித் தாறம்” என்று ‘முனிசிப்பல்டி’ சொன்னது. மண்போட்டு குழியை மூடித்தருவதாகச் சொன்னவை, குப்பையைக் கொட்டிக்கொண்டு வந்து, இப்ப கொடிய நோய்களும் அழிவுகளுமாக இருக்கிறது” என்கிறது திருப்பெருந்துறையூர். 

2016 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில், திருப்பெருந்துறை கிராமத்தில் 447 குடும்பங்கள் பதிவுபெற்றிருக்கின்றன. 

குப்பை மேட்டின் வடக்கு எல்லை வேலிக்கு மறுபுறத்தில் கத்தோலிக்க ‘செமினறி’ ஒன்றுண்டு. ‘செமினறி’யில் கல்விகற்கும் மாணவர்களும் குப்பை மேட்டின் துர்நாற்றம், இலையான்கள் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றார்கள். 

அதைவிட, 120 மாணவர்கள் கல்விகற்கும் தொழில்பயிற்சி நிலையமும் குப்பை மேட்டின் இன்னோர் எல்லையாகக் காணப்படுகின்றது. 

“இவ்வாறு எல்லா வளமும் கொண்ட கிராமம், இந்தக் குப்பையால மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. கொள்ளை நோய் வர, சனமெல்லாம் கிராமத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டது என்று சொன்னேன் அல்லவா! அவ்வாறு ஓடியவர்கள் வலையிறவு, வவுணதீவு போன்ற கிராமங்களில் குடியேறினார்கள். இவர்களுக்கு இன்றும் கொத்துக்குளம் மாரியம்மன் கோவிலில் பூசை இருக்கிறது” என்கிறார் திருப்பெருந்துறையூர் முதியவர் ஒருவர். 

எப். எக்ஸ்.சி. நடராஜா எழுதிய மட்டக்களப்பு மான்மியத்தில் திருப்பெருந்துறை குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. புளியந்தீவு என்று முன்னர் அழைக்கப்பட்ட, இன்றைய மட்டக்களப்பு நகரத்தின் வடமேற்குப் புறத்தின் வாவியின் அருகில் அமைந்திருந்த கதலிவனத்தில், இந்தியாவிலிருந்து வந்திருந்த சக்தி உபாசகர்களான மூன்று சகோதரிகளில் ஒருவர் தங்கியதாக குறிப்புண்டு.

“மாமாங்கை நதியில் நீராடி, வழிபாடியற்றிய பின்னர், புளியந்தீவின் வடமேற்குப் புறத்தின் வாவி அண்டையை வந்தடைந்தனர். மக்கள் செறிந்து வாழ்ந்த கதலிவனத்தில், ஒருவரும், தாண்டவன் வெளியில் இருவருமாகத் தங்கிவிட்டனர்” என்று மட்டக்களப்பு மான்மியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக திருப்பெருந்துறை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் கூறினார். 

கழிவுநீர் அகற்றல் 

image_5d1e3b13ad.jpg

திருப்பெருந்துறையின் மக்கள் குடியிருக்கும் வீட்டிலிருந்து சுமார் 30 யார் தூரமளவில்தான் மனிதக் கழிவுநீர் அகற்றல் நடைமுறையில் உள்ளது. 

ஆனால், திண்மக்கழிவு முகாமைத்துவப் பகுதிக்கு எதிர்ப்பக்கமாக, பிரதான வீதியில் இருந்து 100 மீற்றர் உட்புறமாக கழிவுநீரைஅகற்றும் பகுதிஅமைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு, இப்பகுதி இயற்கையான முறையில் சுத்திகரிப்பு இடம்பெறும் பொறிமுறை உருவாக்கப்பட்டது. 

இப்பகுதியில் தினமும் மாநகர சபையின் ஒரு கலி பவுசரால் 4 முதல் 6 தடவைகள் கழிவுநீர் அகற்றப்படுவதுடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை,பொலிஸ் நிலையம், விமான நிலையம் மற்றும் முப்படைகளும் இவ்விடத்திலேயே திரவக்கழிவுகளைத் தமது வாகனத்தில் கொண்டுவந்து கொட்டுகின்றனர்.

சத்துருக்கொண்டானில் நவீன முறையிலான திரவக் கழிவுகளைச் சுத்திகரிக்கும் நிலையம் இயங்க வைக்கப்படும் வரையிலும் இந்த இடம் பயன்படுத்தப்படுவது தவிர்க்க முடியாததாகும்.  

மட்டக்களப்பு நகரில் இருந்து 16 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கொடுவாமடு நிரப்புத் தளம், செங்கலடி- ஏறாவூர் பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாக உள்ளது. திருப்பெருந்துறையில் குப்பை கொட்டுவதற்கு மாற்று ஏற்பாடாக இந்த இடம் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், மட்டக்களப்பு மாநகர சபையிடம் தற்போது இருக்கும் வளங்களைப் பயன்படுத்தி, கொடுவாமடு நிரப்புத் தளத்தை உபயோகிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை மாநரசபை எதிர்கொண்டுள்ளது.  

மாநகர சபை, இரண்டு  கொம்பக்டர்கள், 3 லொறி, 14 ரக்டர்கள் ஆகிய 19 வாகனங்கள் மூலம் கழிவகற்றல் தொழிற்பாட்டை நடைமுறைப்படுத்துகின்றது.  அனைத்து கழிவகற்றல் வாகனங்களும் GPS முறையில் கண்காணிக்கப்படுகின்றன. திண்மக்கழிவு முகாமைத்துவத்துக்கான செலவீனங்களாக மாதம் ஒன்றுக்கு 5.5 மில்லியன் ரூபாயை மட்டக்களப்பு மாநகர சபை செலவுசெய்வது கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும்.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கிழக்கிலங்கையின்-முதற்-பாடசாலை-கன்னத்தில்-குடும்பிகட்டிய-ஆசிரியரும்-மாணவரும்/91-205248

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.