Jump to content

19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு!


Recommended Posts

19 மாவட்ட எஸ்.பி-க்களுக்கு டி.ஜி.பி திடீர் உத்தரவு!

DGP_rajendran_long_15326.jpg

அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசியல் பரபரப்பு அடங்குவதற்குள் 19 மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இன்று முக்கிய உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறப்பு காவல்படையினரை இன்றும் நாளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அசாதாரண சூழ்நிலையால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி கேட்டுக்கொண்டுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/103349-dgp-rajendran-ordered-cops-to-stay-alert.html

டி.ஜி.பி  உத்தரவு வழக்கமான நடவடிக்கைதான் - காவல்துறை விளக்கம்

 

’சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்’ என்று 19 மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் திடீரென உத்தரவுப் பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN police
 

தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்கள்தான் இந்தப் பரபரப்புக்குக் காரணம். டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்த உத்தரவு குறித்து காவல்துறை தரப்பு விளக்கமளித்துள்ளது. ’19 காவல் மாவட்டங்களில் சிறப்பு காவல் படையினரைத் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டது வழக்கமான நடவடிக்கை. பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு காவல் படையினரைத் தயார் நிலையில் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளது காவல்துறை. 

http://www.vikatan.com/news/tamilnadu/103353-tn-police-expalins-about-dgps-order.html

Link to comment
Share on other sites

கமாண்டோ போலீஸுக்கு டி.ஜி.பி-யின் 'அலர்ட்'  அறிக்கை பின்னணி!

 

 

                      போலீஸ்

 போலீஸ் கமாண்டோ படையினர்  அந்தந்த  மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் 'தயார்' நிலையில் இருக்கும்படி சொல்கிற  போலீஸ் டி.ஜி.பி. அலுவலக சுற்றறிக்கை  பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது. போலீஸ் வட்டாரத்தில் இதுகுறித்து விசாரித்தபோது, "இந்த மாதிரியான அலெர்ட், வழக்கமான நடைமுறையில் இருப்பதுதான். சில இடங்களில் 144 தடை உத்தரவு உள்ளதை 15 நாள்களுக்கு ஒருமுறை நீட்டிப்பதைப் போன்றதே அது. போலீஸ் டி.ஜி.பி.  அலுவலகத்தின் வழக்கமான இந்த சுற்றறிக்கை, மாவட்ட  எஸ்.பி. அலுவலகத்துக்கு மட்டுமே அனுப்பி வைக்கப்படும் ரகசியத் தகவல் அறிக்கையாகும்.  

'அலெர்ட்' டில் இருக்கும்படி 19 மாவட்டங்களுக்கு பிரத்யேகமாக அனுப்பி வைக்கப்பட்ட  இந்த அறிக்கை, வெளியில் கசிந்தது எப்படி என்பதுதான் எங்கள் தரப்பு கேள்வியாக இருக்கிறது" என்கின்றனர். தமிழக ஆளுநரின் தமிழக வருகை, பி.ஜே.பி.யின் மூத்த தலைவரான அத்வானியின் தமிழக வருகை மற்றும் 'ஜெயலலிதாவை சிகிச்சையின்போது பார்த்தோம், பார்க்கவில்லை' என்று மாற்றி, மாற்றிப் பேசுகிற தமிழக அரசியல் நிலவரம் இவற்றுக்கெல்லாம் முடிச்சுப் போட்டு  இந்தத் தகவல் பதற்றத்தை உண்டாக்கிவிட்டது.

 


போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன்இன்னும் சிலர், "காலையிலிருந்தே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும்  ஆட்சி குறித்து 'முக்கிய' ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர், சசிகலாவின் கணவர் நடராஜன், மிகவும் மோசமான உடல் நிலையில் இருக்கிறார், அந்த 19 மாவட்டங்களில் நக்ஸலைட்டுகள் அதிகமாகி விட்டதால்தான் இந்த எச்சரிக்கை அறிக்கை வெளியானது" என்று கொளுத்தி விடத் தொடங்கி விட்டனர்.போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரனிடம் கேட்டபோது, "இது வழக்கமான நடைமுறையில் இருக்கும் 'அலெர்ட்' அவ்வளவுதான்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/103354-this-is-the-reason-behind-dgps-alert-report-to-commando-police.html

Link to comment
Share on other sites

தமிழகத்தின் பஞ்சமில்லா பரபரப்புகளும்; பற்றி எரியும் வதந்'தீ'களும்

 

 
tamilnadu assembly

சூடான காப்பி டீ மட்டுமல்ல சூடான செய்தியும் கூட நம்மை சுறுசுறுப்பாக்கும் என்பதற்கு சமீபத்திய தமிழக அரசியல் சூழலை உதாரணமாக சொல்லலாம். அந்த அளவிற்கு நாட்டின் நிகழ்வுகள் நம்மை விழிப்படைய செய்து விறுவிறுப்பாக வைத்திருக்கிறது. 

அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் ஏறத்தாழ ஒரு க்ரைம் நாவல் படிக்கும் வாசகனைப் போல் நம் எல்லோரையுமே ஆக்கி வைத்திருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசயமும் தமிழக அரசியல் போக்கும், நாளுக்கு நாள் கணிக்க முடியாத அளவுக்கு திருப்பங்களும் நகர்வுகளும் நிறைந்ததாக இருப்பதோடு, அரசியல் நோக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் சாதாரண டீக்கடை விவாதங்களிலும் சந்தை வியாபாரிகள் மத்தியிலும் சூடு பிடித்திருப்பதை காணமுடிகிறது. 

அதேசமயத்தில் சமூக வலைத்தளங்களில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் மீம்ஸ்களும், வதந்திகளும் வேறு தன் பங்கிற்கு மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்து அழகு பார்க்கிறது. காவல் துறை ஆணையரின் இன்றைய அறிவிப்பானது அதற்கு மேலும் வழிவகுத்தது போல் இருந்தது.

தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த  உத்தரவு செய்தி தீயாகப் பரவியதால் ஆட்சிக் கலைப்பா, முக்கிய புள்ளிகளில் யாராவது மரணமா என்ற பீதி தமிழகம் முழுவதும் கிளம்பியது. இதே போன்று உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியானது. ஆட்சி கலைப்புக்காகத்தான் இப்படி சந்திப்பு நிகழ்ந்ததாகவும் அந்த வதந்தி செய்திகள் கூறின. 

இதனிடையே தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோருடன் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவியதால் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. அத்துடன் சட்டப் பேரவை முடக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் உலா வந்தன. 

மேலும் திமுக தலைவர் கருணாநிதி, அதே போல சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜன் தொடர்பாகவும் வதந்திகள் பரவின. இந்நிலையில்  திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் என கனிமொழி எம்.பி. கூறினார்.  மேலும் அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம். என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார். 

எனவே பரபரப்பும், வதந்திகளும் கொஞ்சம் கட்டுக்குள் வந்தன என்றாலும் இவற்றையும் கடந்து சென்னை ஆளுநர் மாளிகையில் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுடன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும் சந்தித்துள்ளனர் எனும் போது இன்னும் ஓரிரு நாளில் முக்கிய அறிவிப்புகள் ஏதும் வெளியாக்கூடுமோ என்ற சந்தேகமும்  சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பும், சாமானிய மக்களிடம் எழுவது இயல்பாகவே உள்ளது. எது எப்படியோ அடுத்து வரும் வாரங்களிலும் தமிழக அரசியலில் பரபரப்பு தொடரும் என்றே தெரிகிறது.

http://www.dinamani.com/latest-news/2017/sep/26/தமிழகத்தின்-பஞ்சமில்லா-பரபரப்புகளும்-பற்றி-எரியும்-வதந்தீகளும்-2780189.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.