Jump to content

எங்க ஊர்


Recommended Posts

எங்க ஊர்

-கலைச்செல்வி

ஊரின் மையத்திலிருந்தது அந்த வேம்பு. ஆலமரம் போல தழைத்து நிறைந்திருந்த அதன் படர்வான நிழலில் கிழக்கு நோக்கி ஒரு கருத்த பிள்ளையார் அமர்ந்திருந்தார். கூடவே ஒரு சூலமும். எண்ணெய் மினுங்கிய அவர் மேனியில் வேம்பின் இலையும் பூவும் உதிர்ந்து ஒரு மாதிரியாக புனிதம் குவிந்திருந்தது. ‘‘நம்பூர போட்டோ எடுத்து வெளிநாட்டு நீஸ் பேப்பர்ல்லாம் போடுவாங்களாம்...’’ தகவல் வந்ததையடுத்து பெண்கள் காலை வேலையை ஒதுக்கி விட்டு குளித்து முடித்திருந்தனர்.

சராசரியாக எல்லோருக்குமே மெல்லிய உடல்தான். அதனை இறுக கவ்விக் கிடந்தது மெல்லிய சின்தெடிக் ரவிக்கைகள். இளந்தாரி பெண்கள் சீவி முடிந்த கூந்தலில் கனகாம்பரப் பூ சூடியிருந்தனர். நடுத்தர வயது பெண்களுக்கு பூக்களின் மீது அத்தனை ஆர்வமில்லை. குட்டியும் குளுவாணிகளுமாக சந்தடியாக கிடந்தது அந்த வேம்படி. ‘‘உங்க ஊரைப் பத்தி சொல்லுங்களேன்...” என்றார் தாட்சர்.
13.jpg
முப்பத்தைந்து வயதிருக்கும் அந்த வெளிநாட்டுப் பெண்மணிக்கு. சமூகநல ஆர்வலராம். கிராமப்புற வாழ்க்கை முறையை அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வந்துள்ளார்களாம். ‘‘இங்குட்டு பத்தும் அங்குட்டு எட்டுமா சஞ்சதுரமா ஊருங்க...” ‘‘சஞ்சதுரம்..?’’ மொழிபெயர்க்கும் பெண்மணிக்கு கொஞ்சம் முழி பிதுங்கித்தான் போனது. ஆரம்பமே இப்டியா... வார்த்தையைத் தேடியவருக்கு சதுரம் கிடைத்தது. ‘‘கிட்டத்தட்ட ஸ்கொயரா இருக்குங்கிறாங்க மேடம்...” என்றார் மொழிபெயர்த்து.

“பாப்புலேஷன்..?” ‘‘நாலு தெருவுங்க... தெருவுக்கு நுாறு பேத்துக்கு கொறையாது... இதில்லாம ஊருக்கு ஒதுக்கமா கொஞ்சம் குடி இருக்குதுங்க...” ஒதுக்கத்தை வெளிநாட்டு விருந்தாளிகளுக்கு புரிய வைப்பது கொஞ்சம் சிரமந்தான். நல்லவேளையாக அடுத்த விஷயத்துக்கு தாவி விட்டார் தாட்சருடன் வந்த மற்றொரு பெண்மணி. ‘‘இவங்களோட ஸ்டடீஸ் பத்தி சொல்லுங்களேன்...” என்றார். அவளை டெய்சி... டெய்சி என்று அழைத்தார் தாட்சர்.

‘‘தோ... அங்கன தெரியுது பாருங்களேன் மஞ்சக்கட்டடம்.. .அதான் பள்ளியொடம்...” ‘‘அந்த பில்டிங்தான் ஸ்கூலாம்... ஒரு விசிட் வந்து பாக்றீங்களா மேடம்..?” சளசளப்பாகப் பேசி தாட்சரின் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற ஆசையிருந்தது மொழிபெயர்ப்பாளிக்கு. இரண்டு மகள்களும் ஒரு மகனும் அவருக்குண்டு. கணவனும் மகனும் இருந்தும் இல்லாதது போலத்தான்.

மகள்களை வளர்க்கும் பொறுப்பு முழுக்கவும் தன்னையே சார்ந்தது என்பதால் என்ஜிஓ அமைப்புகளிடம் இம்மாதிரி வாய்ப்புகளுக்கு சொல்லி வைத்திருப்பார். வெளிநாட்டு விருந்தாளிகள் புறப்படும்போது, தான் வேற்று மதத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலும் இளமையில் சர்ச்சில் வளர்ந்ததையும், அந்த பாதிரியார் தனக்கு ஆங்கிலம் கற்க ஏற்பாடு செய்ததையும் கட்டாயம் சொல்லுவார், அது வந்திருப்பவர்களை நிச்சயம் கவர்ந்து விடும். கையை தாராளமாக்குவார்கள்.

‘‘ஓ... ஷ்யூர்...” என்றார் தாட்சர். அவருடன் டெய்சியும் கிரேசும் எழுந்துகொண்டனர். கிரேஸ் குறிப்பெடுக்க வந்த இளம்பெண். ஊர், ஊர்வலமாக பள்ளிக்கூடம் நோக்கி நடந்தது. சிறிய பள்ளி அது. ஐந்தாம் வகுப்பு வரை இங்குண்டாம். வெளி கேட் சரிந்துகிடந்தது. அதைத் தாண்டி உள்ளே குப்பையும் தூசியுமாக நீளமான மூன்று படிக்கட்டுகள். வராண்டாவை மரத்தூண்கள் தாங்கியிருந்தன. மனித மலம் நாற்றமாக காற்றில் பரவிக் கிடந்தது. வரிசையாக ஆறேழு வகுப்பறைகள். எல்லாமே மூடிக்கிடந்தன.

‘‘ஹாலிடே..?” ‘‘லீவா..?” தமிழில் கிராமத்தாரிடம் மொழிபெயர்த்தார் மொழிப்பெயர்ப்பாளி. ‘‘டீச்சர் யாருமில்லையா..?” ‘‘டீச்சருமில்ல... புள்ளீவளுமில்ல...” சொன்னவளுக்கு ஏழாவது படிக்கும் வயதிருக்கும். அவள் இடுப்பில் ஒரு பெண்குழந்தை இருந்தது. நகரமாக இருந்தால் அந்த இடுப்புக் குழந்தையை எல்கேஜிக்கு அனுப்பியிருப்பார்கள். நழுவி நழுவி வந்தவளை இடுப்பில் ஏற்றி ஏற்றி வைத்துக் கொண்டாள் அந்தச் சிறுமி.

‘‘டீச்சர்ஸ்... ஸ்டூடண்ட்ஸ் யாருமில்லையாம். அதான் லாக் ஆயிருக்கு...” டெய்சி அங்கிருக்கும் சிறுவர் சிறுமிகளைக் கைகாட்ட ‘‘இவங்கள்ளாம் வேலைக்கு போறாங்க...” என்றாள் ஒரு பெண். மயிரை தூக்கி கொண்டையிட்டிருந்தாள். துடைத்து வைத்தது போன்ற முகம். ‘‘உங்க எல்லாரையும் ஃபோட்டோ எடுத்துக்கலாமான்னு கேக்கறாங்க...” பெண்கள் உற்சாகமானார்கள். ‘‘எதுல போடுவீங்க..?” என்றார்கள் வெள்ளந்தியாக.

‘‘இங்கிலீஸ் புக்ல போடுவாங்களாம். மொதல்ல ஊர சுத்திப் பாப்போம். அப்றம் ஃபோட்டோ எடுத்துக்கலாம். ஓகேவா..?” என்றார் மொழி பெயர்ப்பாளி சிறுப்பிள்ளைக்கு சொல்வது போல. ‘‘தண்ணீயெல்லாம் எங்க..?” ‘‘ஊருக்குள்ளதா இருந்துச்சு. அப்றம் நாங்கள்ளாம் ஒண்ணு சேர்ந்து வெளிய வைங்கன்னு ஒரேமுட்டா நின்னுட்டோம். ஊர் முக்குலதான இருக்கு. அதுக்கு மேல தள்ள மாட்டோம்னு சொல்லீட்டாங்க...”

மொழிபெயர்த்துச் சொன்னதும் ஆச்சர்யமானது தாட்சர் குழு. சிறிய அம்மன் கோயில் ஒன்றிருந்தது. அதன் கிரில் கதவுகள் மூடப்பட்டு பூட்டு தொங்கியது. ‘‘தெறந்து வுட முடியுமா..?” என்றார் மொழிபெயர்ப்பாளி. ‘‘தெறக்கலாம்... சாவி மணியக்காரவுக வீட்ல இருக்கு. அந்தம்மா அவசர வேலன்னு மவ வீட்டுக்கு போயிருக்கு...” ‘‘வேற யாருமில்லையா அவங்க வீட்ல? சாவி வாங்கி குடுத்தீங்கன்னா உங்க ஊரு அம்மன் வெளிநாட்டு பேப்பர்ல வருமில்ல...” ஆசைகாட்டினார் மொழிபெயர்ப்பாளி.

‘‘ஆரும் இருக்க மாட்டாங்களே இந்நேரம்...” ஏமாற்றத்தோடு நகர்ந்தது குழு. இரண்டாவது தெருவிலிருந்த மைதானத்தின் ஓர் ஓரத்திலிருந்தது சிறு கட்டடம் ஒன்று. அருகில் நெருங்கிய போதுதான் பாவேந்தர் பாரதி படிப்பகம் என படிக்க முடிந்தது. புதர் மண்டிய படிகளையும் சீல் வைக்கப்பட்ட துருவேறிய பூட்டையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். மடிந்து திரும்பியது தெரு.

தெருவின் மையத்திலிருந்த பெட்டிக்கடையில் தேன் மிட்டாய்கள், ஆட்டுக்குடல் வற்றல், வண்ணப் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உருளை சீவல்கள் என தின்பண்டங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. ஒரு பெரிய அட்டையில் சிறு சிறு பாக்கெட்டுகளாக ஊறுகாய்கள் பின் அடித்து நிறுத்தப்பட்டிருந்தது. தெர்மோகோல் டப்பாவில் தண்ணீர் பாக்கெட்டுகள் சில்லிட்டுக் கிடந்தன.

‘‘ரேஷன் கடை எங்கருக்கு..?” என்றார் மொழிபெயர்ப்பாளி. ‘‘தோ... அந்த தெருவுல நடுசென்டர்ல இருக்கறது ரேசன் கடைதான். ஆனா, அத யாரும் தெறக்கறதில்ல. ஷ்டாக்கெல்லாம் ஒண்ணு கூட கெடையாது...” ‘‘ஏன்... நீங்க யாரும் ரேஷன் சாமான் வாங்கறதில்லையா..?”
‘‘அதுக்கு கார்டு வேணுமில்ல... எல்லாத்தையும் அடவு வச்சுட்டானுங்க. ஒருநா... ரெண்டு நாளா... தாசில்தாரு ஆபீசுக்கு நடையால்ல நடந்து பாத்தோம். ஒண்ணும் கதக்காவல.

அங்கிட்டு அலையற நேரத்தில வேற வேல பாத்தா வவுறு காயாம கெடக்கலாம் பாத்துக்க...” ‘‘யாரு அடகு வச்சா..?” ‘‘எல்லாம் வூட்டு ஆம்பளைங்கதான். வேலை வெட்டிக்கு போற சோலி கெடையாது அவனுங்களுக்கு. நாங்க கொண்டார்ற காச அடிச்சு புடுங்கீட்டு ஒயின் சாப்லயே வுளுந்து கெடந்தானுவே... குடல் வேவாம என்ன பண்ணும்..?” ‘‘அதான் ஒரு ஆம்பளையும் காண்லியா..? வேலைக்கு போயிருப்பாங்கன்னுல்ல நெனச்சேன்...” ‘‘போறானுங்க வேலைக்கு... எல்லாம் ஒரேடியா போய் சேந்தாச்சு...” ‘‘ஒரேடியான்னா... எதாவது ஆக்சிடெண்ட்டா..?” ‘‘பண்ண பாவத்துக்கு அடிபட்டு மக்கிப் போனாதான் தேவலையே... கொடலு வெந்து ஆசுத்திரி ஆசுத்திரியா அலஞ்சு இருக்கற நாலு காசையும் செலவழிக்க வச்சுட்டில்ல செத்தானுங்க...” ‘‘யாரு.. உங்க வீட்டுக்காரரா..?” ‘‘எல்லா வீட்டுக்காரனுங்களுந்தான்... பெரிய ஆம்பளையாளு ஒத்தன் கெடையாது இந்துார்ல.

தோ... அங்க நிக்றாளே பாப்பா... பத்து வருசத்துக்கு முன்னாடிதான் பொறந்துச்சு. அது இடுப்புல இருக்கறதையும் சேத்து நாலு புள்ளைங்க அவங்கூட்ல. அவங்கப்பன்தான் இந்தூருல இருக்க ஆம்பளையிலயே மூப்பு. நா பாத்து பொறந்த பய. முப்பத்தஞ்சிருக்கும். அதுக்கே மண்ணா சாஞ்சு கெடக்கான்.

இந்த புள்ளைய பாத்துக்க சொல்லீட்டு அவங்க ஆயி டவுன்ல ஒரு ஹோட்டல்ல பாத்திரம் களுவுற வேலைக்கு போவுது...” மொழிபெயர்ப்பை குறிப்பெடுத்துக் கொண்டே வந்த கிரேஸ் ஒரு நிமிடம் குறிப்பை நிறுத்தி... திணறி... பிறகு சுதாரித்துக் கொண்டாள். டெய்சியும் தாட்சரும் அதிர்ச்சியை கண்களில் பரிமாறிக் கொண்டனர்.

கிட்டத்தட்ட ஊரைச் சுற்றி வந்தாயிற்று. வேம்படி பிள்ளையார் கோயிலையொட்டிய தெருவில் அடிபம்பு ஒன்று தண்ணீர் வரும் அடையாளங்கள் ஏதுமின்றி துருவேறி இருந்தது. அதைச் சுற்றியிருந்த வட்டவடிவ கான்கிரீட் கட்டுமானம் சிதில மடைந்து கிடந்தது. எட்டும் பத்து மான வயதுள்ள சிறுவர்கள் அதனருகே உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

‘‘அந்த பைப்படியாண்ட வெளாண்டுட்டு கெடக்கானுங்கள்ள... இவனுங்க நாளைக்கு தோ இந்த பொட்டப் புள்ளங்க கிட்டேர்ந்து காசு பணத்த உருவீட்டு டாஸ்மாக் கடைக்கு ஓடுவானுங்க... அந்த கேடு கெட்ட கடையிலயே வுழுந்து கெடக்கற இப்பத்திய எளந்தாரிங்க இன்னும் நாலஞ்சு வருசத்துல செத்துப் போவானுங்க... இருவது வயசிலயே இங்கருக்க குட்டிங்கள்ளாம் தாலியறுத்துடுங்க... கட்டங்கடசீல ஊரு மொத்தமும் பொட்டசனமா மாறப் போவுது பாத்துக்கங்க...” அத்தனை ஆவேசத்தையும் மொழிப்பெயர்ப்பில் கொண்டு வரவியலாது மொழிபெயர்ப்பாளி திணற... வெளிநாட்டு விருந்தாளிகளால் அதை உணர முடிந்தது.

www.kungumam.co

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.