Jump to content

சசிகலா குடும்பம்குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? குறுந்தகடுகளை வெளியிட்டு அதிரவைத்த அமைச்சர்


Recommended Posts

சசிகலா குடும்பம்குறித்து ஜெயலலிதா பேசியது என்ன? குறுந்தகடுகளை வெளியிட்டு அதிரவைத்த அமைச்சர்

 
 

6_12039.jpg

2011-ம் ஆண்டு, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா குடும்பம்பற்றி  ஜெயலலிதா பேசியது என்ன என்பதுகுறித்த குறுந்தகடுகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் பழனிசாமி அணியும் இணைந்த பிறகு, கட்சியையும் சின்னத்தையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். அதே நேரத்தில், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளதோடு, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துக் கடிதம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு பழனிசாமி தலைமையில் நடந்த கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில், 'ஜெயா' தொலைக்காட்சியையும் 'நமது எம்.ஜி.ஆர்' பத்திரிகையையும் மீட்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, தினகரன் தரப்பை மேலும் கொந்தளிக்கவைத்தது. அதோடு, ஜெயா தொலைக்காட்சி யாருடைய சொத்து என்பதுகுறித்து ஜெயலலிதா அளித்த பேட்டி, வீடியோவாக வெளியாகி பழனிசாமி தரப்பை அதிரவைத்தது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சசிகலா குடும்பத்துடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், சசிகலா குடும்பத்துடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சிக்குத் துரோகம் செய்தவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், துரோகம் செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா பேசினார். ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், தற்போது கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணுகிறார்கள். சிலரது சுயநலத்துக்காக அ.தி.மு.க பலியாகிவிடக்கூடாது. தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, சகோதர யுத்தத்தை உருவாக்க சிலர் முயற்சிசெய்கின்றனர். ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தவர் முதலமைச்சர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்" என்று கூறினார்.

udhayakumar

இதைத் தொடர்ந்து, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி சென்னையில் 2011-ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியதுகுறித்த வீடியோவை இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்தப் பொதுக்குழுவில் ஜெயலலிதா பேசியது வருமாறு: "அரசியல்வாதிகளும் பலவிதம் உண்டு. கட்சிக்காரர்களும் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கிறார்கள்; குற்றம் புரிகிறார்கள். அதனால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். அப்படி நீக்கப்படும்போது, சரி நாம் தவறுசெய்துவிட்டோம்; ஆகவே, இது நியாயமாக‌ நமக்குக் கிடைக்கவேண்டிய தண்டனைதான்; இனிமேல் நமக்கு அரசியல் வேண்டாம். இருப்பதைவைத்துக்கொண்டு அமைதியாக இருப்போம் என்று சிலர் முடிவெடுப்பார்கள்.

ஆனால், இன்னும் சிலர் இருக்கிறார்கள். தவறு செய்து, துரோகம் புரிந்து கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களை விடாப்பிடியாகத் தொடர்புகொண்டு, நாங்கள் மீண்டும் உள்ளே சென்றுவிடுவோம். நாங்கள் மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்பாேது எங்களைப் பகைத்துக்கொண்டால், நாளை நாங்கள் மீண்டும் உள்ளே சென்ற பிறகு உங்களைப் பழிவாங்கி விடுவோம். ஆகவே, எங்களைப் பகைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படித் தலைமைமீதே சந்தேகம் வருகின்ற அளவுக்குப் பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக்கேட்டு நம்பி, அதன்படி செயல்படுகின்ற கட்சிக்காரர்களுக்கும் மன்னிப்பு கிடையாது" என்று பேசியுள்ளார்.

 

அமைச்சர் உதயக்குமார் தற்போது வெளியிட்டுள்ள இந்தக் குறுந்தகடு, தினகரன் தரப்பை கொந்தளிக்கவைத்துள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக தினகரன் ஆதரவாளர்கள் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/100874-jayalalithaa-s-perception-about-sasikala-family---minister-released-cd.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.