Jump to content

உப்பு சப்பில்லாத போட்டிகள்... இந்தியாவில் கிரிக்கெட் மோகம் குறைகிறதா? #2MinRead


Recommended Posts

உப்பு சப்பில்லாத போட்டிகள்... இந்தியாவில் கிரிக்கெட் மோகம் குறைகிறதா? #2MinRead

 

சுரத்தே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர். இதற்குக் காரணம், இந்தியா பலமான அணி என்பதல்ல; இலங்கை படுபலவீனமான அணியாக இருப்பதே. இலங்கை மட்டுமல்ல, வெஸ்ட் இண்டீஸ் அணியும் கிரிக்கெட் உலகில் பலவீனமான அணியாக இருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல, சமீப காலங்களில் பெரும்பாலும் ஒன் சைடு மேட்ச்சாகவே நடக்கின்றன. போர்க்குணம்கொண்டு கடைசி ஓவரின் கடைசிப் பந்து வரை போராடும் அணிகளும் இங்கே குறைவுதான். தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு, கடும் சவால் தரும் அணிகளையும் இங்கே காண முடியவில்லை. 

எளிதில் கணித்துவிடக்கூடிய மேட்ச்சாக அமைவதாலோ என்னவோ,  கிரிக்கெட் மோகம் மெள்ள மெள்ள குறைந்துவருகிறது. ஐ.பி.எல்., டி.என்.பி.எல் போன்றவை மந்தமாகச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், கபடி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் இந்தியாவில் வளர ஆரம்பித்திருக்கின்றன. மற்ற விளையாட்டுகள் இந்தியாவில் வளர்வது வரவேற்கத்தக்கது. எனினும், கிரிக்கெட் மோகம் மங்கத் தொடங்கியிருப்பதன் பின்னணி என்ன என்பதுகுறித்து கொஞ்சம் விரிவாகவே பேசவேண்டிய தருணம் இது. 

2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் நடந்து முடிந்த இந்தியா - இலங்கை தொடர் வரை கணக்கெடுத்துக்கொண்டால், இந்த 38 மாதங்களில் 147 டெஸ்ட்  போட்டிகள் நடந்து முடிந்திருக்கின்றன. இந்த 20-20 யுகத்தில் மூன்று ஆண்டுகளில் 147 டெஸ்ட் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. ஆனால் முடிவுகள், ஏமாற்றம் அளிக்கக்கூடியவையே. இந்த 147 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 25 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே டிரா ஆனது. அதிலும் 11 டெஸ்ட் போட்டிகள் மழையால் டிரா ஆனது கவனிக்கத்தக்கது. 

இந்தியா இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர்

ஆக, கடந்த 38 மாதங்களில் டெஸ்ட் போட்டிகளில் டிரா சதவிகிதம் வெறும் 17 சதவிகிதம் மட்டுமே. மழையால் டிரா ஆன போட்டிகளைக்  கழித்துக்கொண்டு அவை ஏதேனும் ரிசல்ட்டில் முடிந்திருக்கும் என வைத்துக்கொண்டால், டிரா சதவிகிதம் 9.52 சதவிகிதம்தான். இந்த மூன்று ஆண்டுகாலங்களில் இரண்டு அணிகளுமே சிறப்பாக ஆடி இரண்டாம் இன்னிங்ஸில் ஓவர்கள் மிகக் குறைவாக இருந்ததால், டிரா ஆன போட்டிகள் எனக் கணக்கெடுத்தால் ஐந்து  போட்டிகள் தேறுகின்றன. போராடி டிரா செய்யப்பட்ட போட்டிகள் வெறும்  ஒன்பதே! டிரா சதவிகிதம் - 6.122 சதவிகிதம் மட்டுமே. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிசல்ட் கிடைப்பது  நல்ல விஷயமே. ஆனால், அது ஆரோக்கியமான டெஸ்ட் போட்டியாக அமைந்து ரிசல்ட் கிடைத்தால் வரவேற்கலாம். இங்கே 90 சதவிகிதப் போட்டிகள் ஒருபக்க சார்புள்ள போட்டியாக அமைந்திருக்கின்றன என்பதே வருத்தமான விஷயம். உலகின் அனைத்து அணிகளுமே அயல் மண்ணில் திணறுகின்றன. இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் போன்ற  அணிகள் உள்நாட்டிலும் தள்ளாடுவது தனிக்கதை. உள்நாட்டிலும் சரி அயல்நாட்டிலும் சரி, ஓரளவுக்குச் சிறப்பாக விளையாடிய அணி எனச் சொல்லவேண்டுமெனில், இந்தியாவையும் தென் ஆப்பிரிக்காவையும் மட்டுமே குறிப்பிட முடியும். தென் ஆப்பிரிக்க அணி, இந்திய மண்ணிலும் இங்கிலாந்து மண்ணிலும் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி இதே காலகட்டங்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளை டிரா செய்திருக்கிறது (ஒரு  போட்டியையும் வெல்லவில்லை). 

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்த மூன்று ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்படாமல் டிரா ஆன 14 டெஸ்ட் போட்டிகளில் ஐந்தை இந்தியாதான் டிரா செய்திருக்கிறது. சந்தேகமேயில்லை, கடந்த மூன்று ஆண்டுகளில் மிகச்சிறந்த அணி இந்தியாதான். இந்த மூன்று ஆண்டுகளில் இரண்டே தொடர்களை மட்டுமே இந்தியா இழந்திருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் கிடைத்தது மோசமான தோல்வி. ஆனால், 2014 - 2015-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா சிறப்பாகவே ஆடியது கவனிக்கத்தக்கது.

தப்பித்தலும் பிழைத்தலுமே டெஸ்ட் போட்டியின் அழகு. இரண்டு அணிகளும் சமவலிமை உள்ளவையாக இருந்து மூர்க்கத்தனமாக போராடினால் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் டிரா ஆகும். இந்தக் காலகட்டங்களில் நிலைத்து நின்று ஆடும் வீரர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள். பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் டெஸ்ட் போட்டியில் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, நான்காவது இன்னிங்ஸில் ஆடுவதற்கு அத்தனை அணிகளுமே பயப்படுகின்றன. டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களைக்கூட சேஸிங் செய்து ஜெயிக்க முடியாமல் அத்தனை அணிகளும் கதறுகின்றன. இந்த நிலைமை ஆரோக்கியமானதல்ல. 

டெஸ்ட் போட்டி என்றால், டொக் வைத்துக்கொண்டு ஆடுவதே சிறந்தது எனச் சொல்லவரவில்லை. டெஸ்ட் போட்டியில் நிச்சயம் அதிரடியாக ஆடலாம். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசலாம். ஆனால், அப்படி ஆடும் வீரர்களால் முதல் இன்னிங்ஸ் மட்டுமே சிறப்பாக ஆட முடிகிறது. நான்காவது இன்னிங்ஸில் எளிதில் எதிரணியிடம் சரணடையவே விருப்பம் என்றால், அவர் நல்ல டெஸ்ட் வீரராக இருக்க முடியுமா? 

நாட்டுக்காக கிரிக்கெட் ஆடும் மோகம் குறைந்து, உலகம் முழுவதுமே லீக் தொடர்களில் ஆட விரும்பும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. லீக் போட்டிகளில் காட்டும் ஆக்ரோஷத்தை, பல வீரர்கள் நாட்டுக்காக ஆடும்போது காட்டுவதில்லை. தேசத்துக்காக ஆடும்போது பெருமை என்றாலும், பணம் குறைவு என்ற காரணமே பல வீரர்களை லீக் போட்டிகள் நோக்கித் தள்ளுகின்றன. தென் ஆப்பிரிக்க வீரர்கள், கோல்பாக் டீலில் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகிறார்கள். கைல் அபாட், ரஸவ்வைத் தொடர்ந்து மோர்னே மோர்கல், ஹாஷிம் ஆம்லாவுக்கும் வலை விரித்திருக்கிறது கோல்பாக். வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கான சம்பளப் பாக்கி மற்றும் கிரிக்கெட் நிர்வாகத்துடனான பிரச்னை முழுமையாக தீர்ந்தபாடில்லை. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தன்னம்பிக்கையும் துள்ளலும் இல்லாத சாம்பியன்ஸ் டிராபி இனிக்கவில்லை. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி

நியூசிலாந்து வீரர்களுக்கு அவர்கள் கிரிக்கெட் வாரியம் கொடுக்கும் சம்பளம் குறைவு. இப்போது ஆஸ்திரேலிய வீரர்களும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தோடு முறைத்துக்கொண்டிருக்கிறார்கள். `ஆஷஸ் தொடரைப் புறக்கணிப்போம்' என அச்சுறுத்துகிறார்கள். பாகிஸ்தான் நாட்டில் யாரும் கிரிக்கெட் ஆட விரும்பவில்லை. இதனால் அந்நாட்டு  கிரிக்கெட் வாரியமும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. வங்கதேச கிரிக்கெட் வாரியமும் இந்திய கிரிக்கெட் வாரியமும் மட்டுமே வீரர்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றன. பிசிசிஐ-க்கும் இப்போது மெள்ள சிக்கல் வந்திருக்கிறது. லோதா கமிட்டியின் குடைச்சலை அது விரும்பவில்லை. இதற்கிடையில் `ஏ' கிரேடு  ஒப்பந்த பிளேயர்களுக்கு கடந்த ஆண்டு தந்த ஒரு கோடி ரூபாய் சம்பளத்தை இரண்டு கோடியாக உயர்த்தியிருக்கிறது. அதாவது நூறு சதவிகித உயர்வு.

`இது போதாது. எங்களுக்கு ஐந்து கோடி ரூபாய் வேண்டும்' எனக் கடிதம் எழுதியிருக்கிறார் கேப்டன் விராட் கோலி. உலகின் நம்பர் 1 வீரரைத் தக்கவைக்க, பிசிசிஐ விரைவில் சம்பளத்தை உயர்த்தக்கூடும். 

லீக் போட்டிகள், பல விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பளிக்கின்றன; பலரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றன. நன்றாக விளையாடும் வீரர்களுக்கும் பொன்னும் புகழும் கிடைக்கின்றன. ஏழ்மையில் உழன்று, அணித் தேர்வுகளில் நடக்கும் அரசியலில் சிக்கி வாய்ப்பு கிடைக்காமல் மடிந்துபோகும் விளையாட்டு வீரர்களுக்கு லீக் போட்டிகள் முக்கியமான ஒரு தீர்வாக அமைகின்றன என்பதில், ஓரளவு உடன்படவேண்டியதிருக்கிறது.  எனினும், எல்லாவற்றையும் தனியார்மயமாக்கி பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் அரசின் முடிவுகள் ஆபத்தானவை. அவை வருங்காலங்களில் ஊழல் நிறைந்தவையாக மாற்றும்; விளையாட்டு வீரர்களை ஒரு சந்தைப்பொருளாக மட்டுமே பார்க்கக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். அதை அனைத்து நாடுகளும் உணரவேண்டிய தருணம் இது. 

இலங்கை கிரிக்கெட் அணி

டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமல்ல, ஒருநாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டிகள்கூட சுவாரஸ்யமற்றவையாக மாறிவருகின்றன. த்ரில் மேட்ச்கள் அபூர்வமாகிவருகின்றன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் மட்டுமே வெற்றிக்காகக் கடுமையாகப் போராடுகின்றன. இயல்பாகவே கிரிக்கெட் போட்டிகளில் எந்த அளவுக்கு பின்னடைவில் இருந்தாலும், போராடி மேட்சை ஜெயிக்க முனையும் ஆஸ்திரேலியா, இப்போது சோடைபோயிருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி சூப்பர் ஸ்டார்களை நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இந்தியா மட்டுமே நம்பிக்கையளிக்கும் கிரிக்கெட்டை ஆடிவருகிறது. கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருக்கும் காலத்தில், கிரிக்கெட் மோகம் குறையும் அறிகுறிகள் தெரிவதை இன்னொரு கோணத்தில் அணுக வேண்டும். குறிப்பாக, இலங்கை - இந்தியா இடையிலான தற்போதைய தொடரைப்  பொறுத்தவரையில்  நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் சொல்லும் வசனம்தான் நினைவுக்குவருகிறது.

 

``ஆளே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறீங்க?"

http://www.vikatan.com/news/sports/99959-is-cricket-losing-its-grace-in-india.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.