Jump to content

நினைவு இல்லமாகுமா போயஸ் கார்டன்... எடுபடுமா எடப்பாடி பழனிசாமி கணக்கு?!


Recommended Posts

நினைவு இல்லமாகுமா போயஸ் கார்டன்... எடுபடுமா எடப்பாடி பழனிசாமி கணக்கு?!

 
 

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா வாழ்ந்து  மறைந்த போயஸ் கார்டன் இல்லம் அவரது நினைவு இல்லமாக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் நடப்பு அரசியல் சூழலில் எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்குப்பின் மிகப்பெரிய அரசியல் உள்ளது என்கிறார்கள். போயஸ்கார்டனில்  81, இலக்கமிட்ட வேதா இல்லம் ஜெயலலிதாவின் வெற்றி தோல்விகளைப் பார்த்த இல்லம். இளமைக்காலம் துவங்கி அவரது இறப்பின் இறுதி நிமிடங்கள் வரை அந்த வீட்டில் மிதந்துகிடக்கிற உணர்வுகளுக்கு வயது கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு.

ஜெயலலிதா என்ற தமிழகத்தின் முக்கிய ஆளுமையின் மறைவுக்குப்பின் அதனுடன் இன்றுவரை ஒரு உணர்ச்சிபூர்வமான தொடர்பில் இருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். அந்த வகையில் ஜெயலலிதா என்ற சாதனைப்பெண்மணியை இனி எக்காலத்திலும் அடையாளப்படுத்தும் இடமாக  இது இருக்கும். இந்த விஷயங்களின் பின்னணியில்தான், இப்போது நினைவு இல்ல அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் சசிகலா அ.தி.மு.க வின் பொதுச்செயலாளரானார். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் கேடயமாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்து, ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியிருந்து விலகச்சொன்னது சசிகலா தரப்பு. அழுத்தம் அதிகமானதால், ராஜினாமா கடிதம் தந்துவிட்டு கட்சியில் போர்க்கொடி உயர்த்தினார் ஓ.பி.எஸ்.

பதவியேற்புக்கு கவர்னர் ஏற்படுத்திய தாமதத்தின் எதிர்வினையாக, “எதற்கும் ஒரு எல்லை உண்டு” என மத்திய அரசை சசிகலா எச்சரிக்கை செய்ததையடுத்து, நீதிமன்றத் தீர்ப்பு நெருங்கிவந்தது.

போயஸ் கார்டன்

தீர்ப்பில், நான்கு ஆண்டுகள் தண்டனைபெற்று பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றார் சசிகலா. அக்கா மகன் தினகரன் துணைப்பொதுச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர்த்திவிட்டே சிறைசென்றார். இதனிடையே ஓ.பி.எஸ் அணி, சசிகலா குடும்பம் வெளியேற்றம், ஜெயலலிதா மரணத்தில் நீதிவிசாரணை என இரு கோரிக்கைகளை முன்வைத்து, இணைப்புக்கு நிபந்தனை விதித்தனர். நேரடியான நடவடிக்கையில் இறங்குவது ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் என மறுத்த எடப்பாடி அணி, கட்சி அலுவலகத்திலிருந்து சசிகலா  படங்களை அகற்றி ஓ.பி.எஸ்சுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தது.

இதனிடையே தினகரன் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் சிறைசென்றார். மத்திய அரசின் 'மனமறிந்து' நடந்துகொள்ளவேண்டிய கட்டாயமும் மேலிடத்தின் கோபப் பார்வையில் உள்ள சசிகலா குடும்பத்துடன் இணக்கம் காட்டுவது ஆட்சிக்கே ஆபத்தாக முடியலாம் என்ற அச்சமும், எடப்பாடியையும் இன்னும் சில மூத்த அமைச்சர்களையும் நீண்ட சிந்தனைக்கு ஆளாக்கியது.

ஜெயலலிதாஅடுத்தடுத்த நாள்களில் அதற்கான பேச்சுவார்த்தைகள் கோட்டையிலேயே நடந்தன. விஷயமறிந்து தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலரை, முதல்வர் அலுவலகத்திற்கே அனுப்பிவைத்து குடைச்சல் தர ஆரம்பித்தார் தினகரன். ஓ.பி.எஸ்-க்கு நேர்ந்ததே தனக்கு நேரலாம் என உணர்ந்த எடப்பாடி, சத்தமின்றி கட்சியின் தன் ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார். அதேசமயம், கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு கைகட்டி இன்னும் 30 வருடங்களுக்கு அரசியல்செய்வதைவிட பேசாமல் நம்மில் ஒருவரான ஓ.பி.எஸ் உடன் சுமூகமாகப்போகலாம்” என சில மூத்த அமைச்சர்கள் சொன்னார்கள்.

கடந்த மே மாத இறுதியில் ஒருநாள் இந்த பேச்சுவார்த்தைகள் கோட்டையில் முதல்வர் அறையிலேயே நடந்தது. அன்றைய தினம் 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் அமைச்சர்களுடன் நடத்தினார் எடப்பாடி. சி.வி சண்முகமும் ஜெயக்குமாரும் அவசர உபாதையைக் கழிக்கக்கூட செல்லமுடியாதபடி அன்றைய தினம் 4 கட்டங்களாக நீண்டது அந்தப் பேச்சுவார்த்தை. தீவிரமான சில தினகரன் ஆதரவு அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களை முழுவதுமாக தன் ஆதரவு வட்டத்தில் சேர்க்க அன்றைய தினம் பிரயத்தனப்பட்டார் முதல்வர். சரிபாதி வெற்றிதான் கிடைத்தது. ஆனாலும் அமைச்சர்கள் சிலரின் அதிருப்தியை களைய முடிந்தது.  

இதையடுத்து தினகரன் அணிக்கும் எடப்பாடி அணிக்கும் முட்டல் மோதல் எழுந்தது. கடந்த சில வாரங்களில் இது முற்றியநிலையில் வெளிப்படையாக தினகரனின் துணைப்பொதுச் செயலாளர் பதவி செல்லாது என சில தினங்களுக்கு முன் அறிவித்து, தங்களது நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கியது எடப்பாடி தரப்பு. கட்சிச் சின்னம் தேர்தல் கமிஷனில் அடமானம் வைக்கப்பட்டிருந்ததால் சசிகலா தொடர்பான அறிவிப்பில் மட்டும் அடக்கிவாசித்தது எடப்பாடி தரப்பு.

ஆனாலும், தானே இன்னும் துணைப்பொதுச்செயலாளர்தான் என மல்லுக்கட்டி வருகிறார்  தினகரன். மேலுார், பொதுக்கூட்டத்திற்குப்பின் அவரது துணிச்சல் இன்னும் கூடியிருக்கிறது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணையும் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக்கும் அறிவிப்பையும் வெளியிட்டு சசிகலா தரப்புக்கு கிலி தந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி. நீதிவிசாரணை அறிவிப்பின் பின்னணியில்  2 விஷயங்கள் இருந்தன. ஒன்று, இரு அணிகளும் இணைய வேண்டும் என்ற மேலிட அழுத்தம், இரண்டாவது கடந்த சில தினங்களாக ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக திவாகரனின் மகன் ஜெயானந்த் பேசிவந்த எரிச்சல்  என்கிறார்கள். சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் தங்களிடம் உள்ளது என அவர்கள் தரப்பு வெளிப்படையாக தெரிவிப்பதன்மூலம் எதிரணியிடம் ஏதோ மர்மம் உள்ளது என்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்த முனைவதாக கருதியதாலேயே இப்படி ஓர் அவசர அறிவிப்பை வெளியிட நேர்ந்தது எடப்பாடி அணிக்கு.

அதே சமயம் தங்களிடம் ஆவணங்கள் உள்ளதாக தெரிவித்திருப்பதால் ஒரு நபர் கமிஷன் முன் அவர்களே முன்வந்து சாட்சியங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது  பூமராங் போல தினகரன் தரப்புக்கே திரும்பிவிடும் என கணக்கு போடுகிறது எடப்பாடி தரப்பு. இப்படி விசாரணையை சந்திப்பது, மக்கள் மத்தியில் தினகரன் தரப்புக்கு நெகடிவ் பிம்பத்தை ஏற்படுத்திவிடும். இதுவும் ஒருவகையில் தங்களுக்கு அரசியல் லாபமாகவே முடியும் என அரசியல் கணக்குப்போட்டுள்ளது எடப்பாடி தரப்பு என்கிறார்கள். இப்படி நீதிவிசாரணை அறிவிப்புக்குப்பின் பல அரசியல் கணக்குகள் உள்ளன என்கிறார்கள்.

போயஸ் கார்டன் அறிவிப்பின் பின்னணியும் பல அரசியல் காரணங்களை உள்ளடக்கியுள்ளது என்கிறார்கள். இதன் மூலம் சசிகலா குடும்பத்தின் அரசியல் ஆசைக்கு அடித்தளமிடும் ஒரு அடையாளத்தை அழிக்கும் அரசியலை கையில் எடுத்திருக்கிறார் எடப்பாடி. 81 இலக்கமிட்ட போயஸ் கார்டன் ஜெயலலிதாவுடன் 46 வருட நட்பு கொண்டது.

ஜெயலலிதா

50 களின் துவக்கத்தில் கணவர் ஜெயராமின் திடீர் மறைவுக்குப்பின் மைசூரில் இருந்து சென்னையில் திரைப்படங்களில் நடித்து வந்த தங்கை வித்யாவதியின் வீட்டுக்கு குடிவந்தார் சந்தியா. வித்யாவதியைத் தேடிவந்த தயாரிப்பாளர்களின் கண்களில் சந்தியா தென்பட, சினிமா வாய்ப்பு தேடி வந்தது சந்தியாவை.  மளமளவென படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் வருமானம் வந்தபின் தங்கை வீட்டிலிருந்து அடையாறு, காந்தி நகரில், நான்காவது மெயின் ரோடில் ஓரளவு வசதிகொண்ட ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஜெயலலிதா மற்றும் அவரது சகோதரரின் இளமைக்காலம் இங்குதான் கழிந்தது. இதன்பிறகு தி.நகர் சிவஞானம் தெருவில் வீடு வாங்கி குடியேறினார் சந்தியா.

பின்னாளில் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்பு தேடிவந்தது.சில  கன்னடப்படங்களை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமாகி தென்னிந்தியாவின் புகழ்பெற் நடிகையானார். பின் மகளின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டு வீட்டோடு முடங்கினார் சந்தியா.

இந்த சமயத்தில்தான் மகளின் வருங்காலத்திற்காக தன் காலத்திலேயே பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டி எழுப்ப ஆசை உருவானது, சந்தியா மனதில். அதற்காக தேனாம்பேட்டை பகுதியில் 1967 ஆம் ஆண்டு சந்தியா 10 கிரவுண்ட் இடத்தை வாங்கினார். ஜெயலலிதாவின் விருப்பத்திற்காக  பலமுறை இந்த வீட்டின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக தற்போது முன்பகுதியில் உள்ளதுபோல் கட்டப்பட்டது. இப்படி சிமெண்ட் ஜல்லியோடு மகளின் எதிர்காலத்தையும் குழைத்துக் கட்டிய வீடு போயஸ் கார்டன் இல்லம். ஆனால் பார்த்துப்பார்த்து மகளுக்காக எழுப்பிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தின்போது சந்தியா இல்லாமல் போனாதுதான் ஜெயலலிதா வாழ்வில் முதல் நிகழ்ந்த துரதிர்ஸ்ட சம்பவம்.

71 ம் ஆண்டின் மத்தியில் வீடு கட்டும் பணி நிறைவடைந்திருந்த நிலையில் ஒருநாள் (அக்டோபர் 31 ந்தேதி) திடீரென ரத்த வாந்தி எடுத்தார் சந்தியா.  பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். வீட்டின்  பூமி  பூஜை நடந்த சமயம் அதுதொடர்பாக உறவினர்களுக்கு சேலை எடுப்பது தொடர்பாக  'எங்கிருந்தோ வந்தாள்' படப்பிடிப்பிலிருந்த மகளிடம் பேசவந்தார் சந்தியா. அப்போது இருவருக்குமிடையே சிறு சிறுவாக்குவாதமானது. அப்போது தான் அமங்களமாக தாயிடம் சொன்ன ஓர் வார்த்தை பலித்துவிட்டதாக ஜெயலலிதாவே சொல்லி வருந்தியிருக்கிறார் பின்னாளில்.

தினகரன்

அதுநாள் வரை அம்மாதான் அனைத்துமாக இருந்தார்.  காலையில் கண்விழித்தது முதல், இரவு உறங்கும்நேரம் வரை அவருக்கு எல்லாமே அம்மாதான். ஆனால் அம்மா தனக்காக கட்டிய வீட்டில் அவரில்லாமல் இருக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரை ஆதிக்கம் செலுத்தத்துவங்கியது அந்த நாளிலிருந்துதுான். பல உறவுகளால் அவர் காயம்பட்டது அப்போதுதான்.
 
வீட்டிற்கு வேதவல்லி என்ற தன் தாயின் பெயரை சுருக்கி ‘வேதா இல்லம்’ என பெயர் சூட்டிய ஜெயலலிதா வேறு வழியின்றி தன் சித்திகள் மற்றும் உறவினர்களோடு போயஸ் கார்டன் இல்லத்தில் வாழத்துவங்கினார். கிரகப்பிரவேசத்திற்கு தமிழ்சினிமாவின் பல பிரபலங்கள் வந்து ஜெயலலிதாவை வாழ்த்தினர். ஜெயலலிதாவுடன் சிறு மனக்கசப்பு இருந்ததால் எம்.ஜி.ஆர் வரவில்லை. ஆனாலும்  விலையுயர்ந்த ஓர் பரிசை அனுப்பிவைத்தார் அவர்.

போயஸ் கார்டன் இல்லம், ஜெயலலிதாவின் 'அழுகையை ஆற்றுப்படுத்தியிருக்கிறது'. 'தாயின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை இட்டு நிரப்பியிருக்கிறது'.  'தனிமையை வருடிக்கொடுத்திருக்கிறது'. 'துயரங்கள் நெருங்கியபோதெல்லாம்  துடைக்க முயற்சித்திருக்கிறது'. 'மனச்சோர்வுக்கு மருந்தாக இருந்திருக்கிறது.' இப்படி  அவரது வாழ்வின் எல்லாமுமாக இருந்த இல்லம் அது. வீட்டின் முதல்மாடியில் உள்ள அவரது பிரத்யேக அறை.  உறவுகளால், நெருங்கிய நண்பர்களால், தன்னால் அதிகம் நேசிக்கப்பட்டவர்களால் காயமடைந்த சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுக்கு 'கன்பெஷன்' அறையாக இருந்திருக்கிறது. பல பிரச்னைகளுக்கான தீர்வை அவர் கண்டெடுத்த  இடம் அந்த அறைதான்.

எத்தனை பெரிய பிரச்னைகளோடு அந்த அறையில் நுழைந்தாலும் மீண்டும் கதவு திறக்கப்படும்போது புது மனுஷியாக முகத்தில் தெளிவோடு வெளியே வருவார். இப்படி அவரின் கோபதாபங்கள், சாந்தம், கொண்டாட்டம் என அந்தந்த நேர உணர்வுகளின் ஜெயலலிதா வெளிப்படுத்திய உஷ்ணங்களை சுமந்துகொண்டிருக்கிற இல்லம் போயஸ் கார்டன்.

தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா மின்னியது, உறவினர்களால் நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளானது, சினிமா வாய்ப்புகள் குறைந்து பொருளாதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அதிமுகவில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளை சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணியின் ஏற்ற இறக்கங்களை அறிந்த இல்லம் போயஸ் கார்டன். விரக்தியின் விளிம்பில்இந்த வீட்டில் ஒருமுறை தன்னை மாய்த்துக்கொள்ளும் முடிவைக்கூட  அவர் எடுத்ததாகச் சொல்வார்கள்.

ஜெயலலிதா

1971 ம் ஆண்டு இந்த இல்லத்திற்கு குடிவந்த ஜெயலலிதா தன் இறப்பு வரை இங்குதான் வாழ்ந்திருக்கிறார். இதில் தற்காலிகமாக சில வருடங்கள் ஹைதராபாத்தில் வசித்திருக்கிறார். ஜெயலலிதாவின் வாழ்வில் அவரது தாயார் சந்தியா மிக முக்கியமானவர். அவர் மறைந்தபோது, “என் குரு தாய் தந்தை வழிகாட்டி தோழி எல்லாமே என் அம்மாதான். அவர் இல்லாத ஒரு வாழ்வை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்றார் ஜெயலலிதா. அப்படி சந்தியாவுக்குப்பிறகு ஜெயலலிதாவின் வாழ்வில் இடம்பெற்ற மற்றொரு பெண் சசிகலா. அம்மாவுக்கு சொன்ன இதே வார்த்தைகளை, 1999 ஆண்டின் துவக்கத்தில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சசிகலாவை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

“என் தாய்க்கு பிறகு என்னை அறிந்த ஒரு பெண் சசிகலா. என்னால் அவள் இழந்ததுதான் அதிகம். பெற்றது ஒன்றுமில்லை. என் இன்ப துன்பங்களில் பங்கேற்ற அவரை இன்று அரசியல் நெருக்கடிக்காக விட்டுக்கொடுக்கமுடியாது” என அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. அப்படி போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுடன் கிட்டதட்ட கால் நுாற்றாண்டை பகிர்ந்துகொண்ட சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் பிம்பம் இயல்பாகவே பொருந்திப்போகிறது. ஜெயலலிதா இருந்தபோதே சசிகலா கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த இது முக்கிய காரணமாக இருந்தது.  

ஜெயலலிதாவின் அடையாளங்களில் ஒன்றாகிவிட்ட இந்த இல்லத்தில் அவரோடு அதிக வருடங்கள் இருந்த ஒரே நபர் சசிகலா. அதனால் இயல்பாகவே ஜெயலலிதாவின் பிம்பத்தோடு அவரை பொருத்திப்பார்க்க வைத்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் அந்த பிம்பம் தனக்கு கைக்கொடுக்கும் என்ற அரசியல் கணக்கில்தான் போயஸ் கார்டனை தங்களுக்கானதாகவே ஆக்கி தங்கள் அரசியல் அந்தஸ்தைக் கூட்டிக்கொள்ளும் எணணம் கொண்டிருந்தனர் சசிகலா தரப்பு. இதனால் தீபக் மூலம் கடந்த சில மாதங்களாக அதை சட்டப்படி அடைவதற்கான சட்டபுர்வ நடவடிக்கைகளில் சசிகலா தரப்பு முயன்று வந்தது என்கிறார்கள். அந்த இல்லத்தின் சட்டப்படியான வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவுடன் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துவந்ததாக சொல்கிறார்கள்.


சசிகலா

அதனால்தான் ஜெயலலிதா மறைவுக்குப்பின்னரும் உரிமையுடன் சசிகலாவும் அவர் சிறைசென்றபின் தினகரன் உறவினர்களும் தொடர்ந்து போயஸ் இல்லத்திலேயே தங்கினர். ஜெயலலிதா காலத்தில் பணியாற்றிய வேலைக்காரர்களில் சிலர் மட்டும் அங்கேயே தங்கியிருந்து பராமரிப்பு பணிகளை பார்த்துவந்தனர். தொடர்ந்து இல்லம் தினகரன் தரப்பினர் வசமே இருந்தது.

இந்நிலையில் தங்களுக்கு எதிராக தினகரன் தீவிர எதிர்ப்பு நிலை எடுத்துவிட்ட நிலையில், போயஸ் கார்டன் அவர்கள் வசம் நீடிப்பது தங்களுக்கு எதிராக அமையும் என கணக்குப்போட்ட எடப்பாடி, போயஸ் கார்டன் இல்லத்தை கைப்பற்றுவதன்மூலம் தங்கள் அரசியல் அதிகாரத்தை தினகரன் தரப்பு விரிவுபடுத்திவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை உணர்வுடன் அதை அரதப்பழசாகிப்போன நினைவு இல்ல கோரிக்கையை எடப்பாடி தரப்பு இப்போது துாசி தட்டியது என்கிறார்கள். இதன் மூலம்  தினகரன் தரப்பிற்கு செக் வைத்திருக்கிறார் எடப்பாடி.

ஒருமுறை வீட்டில் ஓய்வில் இருந்தபோது மாடியில் உள்ள தனது அறைக்கு படியேறிச்சென்ற ஜெயலலிதா திடீரென மயக்கமுற்றார். ஊழியர்கள் பதறியடித்து எம்.ஜி.ஆருக்கு  தகவல் சொன்னார்கள். அவர் நேரில் வந்தார். ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஜெயலலிதாவின் சித்திகளை தேடினார். ஆனால் அவர்கள் மாடியில் ஏதோ வாக்குவாதத்தில் இருந்தனர். 'மகள் உடல்நிலையை விட என்ன முக்கியமான வாதம்' என எம்.ஜி.ஆர் மாடிக்குப் போனார். அங்கு, “ஜெயலலிதாவுக்கு ஏதாவது நடந்தால் வீட்டை யார் நிர்வகிப்பது” என சண்டையிக்கொண்டிருந்தனர் சித்திகள். கோபமாகப் பேசி அவர்களிடமிருந்து கொத்துச்சாவியை பிடுங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார். சில மணிநேரத்திற்குப்பின் ஜெயலலிதா கண்விழித்தபோது கொத்துச்சாவியுடன் நின்றிருந்த எம்.ஜி.ஆர், “அம்மு யார் எதிரிகள், யார் உறவுகள் என பிரித்தறிந்து ஜாக்கிரதையாக இரு”என அறிவுரை சொல்லிக்கிளம்பினார். இப்படிஜெயலலிதாவின் வாழ்வில் மேடும் பள்ளமுமான சம்பவங்களை கண்டது போயஸ் கார்டன் இல்லம்.

போயஸ் கார்டன் அமைப்பு

இரண்டு மாடிகள் உள்ள போயஸ் கார்டனின் முன்பக்க வீட்டில் (பழைய வீடு) கீழ்தளத்தில் நான்கு அறைகள் பெரிய வராண்டா டைனிங் ரூம் கெஸ்ட் ரூம்  இரண்டு ஆபிஸ் ரூம்கள் சமையலைறையை ஒட்டி 2 பெரிய ஸ்டோர் ரூம்கள் இரண்டாவது மாடியில் இரு அறைகள். இந்த வீட்டிற்கு பின்புறம் வீட்டின் வேலையாட்களுக்கு என தனியே கட்டப்பட்ட தனியறைகள் உண்டு.  இது தவிர வீட்டின் பின்புறம் உள்ள கார்ஷெட்டுக்கு மேல் பெரிய ரூம்கள் இருந்தன. முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் பிரமாண்ட படுக்கை அறை இருந்தது. இதனருகில் உள்ள பெரிய அறைகளில் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்கள், அவரது பிரத்யேக உடற்பயிற்சிக் கருவிகள் இருந்தன. ஜெயலலிதாவின் முதல் மாடி அறையிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள அறைக்குச் செல்ல  மாடியிலேயே ஒரு பாலம் அமைக்கப்பட்டது. பின்னாளில் அவர் முதல்வரானபின் இதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டபின் 36, 31 ஏ என இரு இலக்கங்கள் அளிக்கப்பட்டன. பழைய வீட்டின் கிழக்குத்திசையில் 31 ஏ என இலக்கம் குறிப்பிடப்பட்ட பகுதி 1995 ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 5 மாடிகள் உண்டு.

நாய்ப்பிரியரான ஜெயலலிதா ஆரம்பத்தில் இந்த வீட்டில் விதவிதமான நாய்களை வளர்த்தார். பின்னாளில் அரசியலில் தீவிரமாக இறங்கியபோது கட்சிப்பிரமுகர்கள் பலர் வந்துபோக ஆரம்பித்தபோது நாய்கள் தொந்தரவாக இருந்ததால் அவற்றை வேறு இடங்களில் வளர்த்தார்.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன் இல்லம், ஜெயலலிதா மற்றும் சந்தியா இருவருக்கும் சொந்தமானது. ஜெயலலிதா திருமண பந்தத்தில் ஈடுபடாததால் அவருக்கான நேரடி வாரிசுகள் இல்லை. அதேசமயம் இந்த இல்லத்தில் சந்தியாவும் பங்குதாரர் என்பதால் சிக்கலின்றி இருவருக்குமான வாரிசுகள் என்ற அடிப்படையில் ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபக் மற்றும் தீபா இருவருக்கே சட்டப்படி சொந்தமாகும். அதை மீறி அரசு இதை நினைவு இல்லமாக்க நினைத்தால் அதற்கு உரிய இழப்பீட்டை அவர்களுக்கு தரவேண்டியதிருக்கும். ஆனால் இன்றுள்ள சந்தை மதிப்பில் அதற்குண்டான இழப்பீட்டைத்தருவதில் அரசின் சட்டவிதிகள் முட்டுக்கட்டையாக இருக்கலாம். ஆனால் இந்தப்பிரச்னைகள் குறித்தெல்லாம் அரசுக்கோ அதன் தலைமையான எடப்பாடி பழனிசாமிக்கோ எந்த கவலையுமில்லை. காரணம் ஜெயலலிதா என்ற மிகப்பெரிய ஆளுமையின் அடையாளமாகத்திகழும் போயஸ் கார்டன் இல்லம், யாருக்கு போக வேண்டும் என்பதைவிட யாரிடம் போகக்கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருப்பதே.

 

போயஸ் கார்டனில் தெளிவான உரிமை தங்களுக்கு இருந்தும் அதை சட்டப்படி உரிமை கோராமல் ஒதுங்கியிருந்த தீபக்கையும் தீபாவையும் அவசரகதியில் நீதிமன்ற வாசலை ஏறவைத்தாலே அது எடப்பாடி தரப்புக்கு வெற்றிதான். அப்படி ஒரு சட்டப்படியான தீர்வைப்பெற்று போயஸ் கார்டன் வீட்டுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் உரிமைபெறும்போது அந்த நிமிடத்துடன் போயஸ் கார்டன் இல்லத்திற்கும் சசிகலா தரப்புக்குமான உறவு  முறிந்துவிடும். ஜெயலலிதாவின் தோழி என்ற சசிகலா குடும்பத்தின் அரசியல் அந்தஸ்து இதன்மூலம் தேய ஆரம்பிக்கும். சசிகலா ஒற்றை இறக்கையுடன் பறக்கும் பறவையாகிவிடுவார். எடப்பாடி எதிர்பார்ப்பது இதுதான். அதனால் போயஸ் கார்டனை குறிவைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி என்கிறார்கள்...

உண்மைதான், ஒற்றை இறக்கையுடன் ஒரு பறவை எவ்வளவு உயரத்திற்கு பறக்க முடியும்?!

http://www.vikatan.com/news/tamilnadu/99640-the-politics-behind-the-poes-garden-turns-to-memorial-house.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.