Jump to content

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!


Recommended Posts

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

 

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டிவருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர். இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து இதுவரை முதல்வர் பழனிசாமி தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும்  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்றும் ஓய்வு பெற்ற நீதிபதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு...

ஜெயலலிதா மரணம் விசாரணை

7886effa-b36c-4e93-95d5-a4593934cdb7_164

http://www.vikatan.com/news/tamilnadu/99393-cm-edappadi-palanisamy-announced-investigative-commission-in-jayalalithaas-demise.html

Link to comment
Share on other sites

முதல்வர் பழனிசாமியின் அறிவிப்பும் முக்கியத் தலைவர்களின் கருத்துகளும்

 

 
jaya


சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்; வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி இந்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியினர், இணைவதற்காக வைத்த இரண்டு முக்கிய நிபந்தனைகளையும் ஏற்று, முதல்வர் பழனிசாமி இன்று இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், ஓ. பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இதனைப் பார்க்கிறேன். போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அறிவிப்பு உட்பட இரண்டு அறிவிப்புகளையுமே வரவேற்கிறேன் என்றார்.

ஓபிஎஸ் அணியினரின் 2 முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளின் இணைப்பு சாத்தியம் என்று பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விசாரணை ஆணையம் என்பது கண்துடைப்பு நடவடிக்கையே என்று திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். யார் வீட்டு பணத்தை வீணடிப்பதற்காக இந்த நடவடிக்கை என்றும்  அவர் கேள்வி எழுப்பினார். 

உண்மை தெரிந்தால் அனைவருக்கும் நல்லதுதானே என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

http://www.dinamani.com/tamilnadu/2017/aug/17/முதல்வர்-பழனிசாமியின்-அறிவிப்பும்-முக்கியத்-தலைவர்களின்-கருத்துகளு-2756938.html

Link to comment
Share on other sites

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது கண்துடைப்பு நாடகம்: ஸ்டாலின்

 

 
stalin113039484f

ஸ்டாலின்   -  கோப்புப் படம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பு கண்துடைப்பு நாடகம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மரண மர்மம் குறித்து உண்மையான விசாரணை நடைபெற முதல்வரும், அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ''முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து 8 மாதங்கள் கழித்து, அவரது மர்ம மரணம் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு 'ஊழல் அணிகள் சங்கமம்' ஆவதற்காக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம்.

திமுகவின் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பிலும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கை எழுப்பிய போதும், அதற்கெல்லாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மர்ம மரணத்தின் தடயங்கள், வீடியோ காட்சிகள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்று அமைதி காத்தவர்கள்தான் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 22.9.2016 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 5.12.2016 அன்று மரணம் அடையும் வரை அத்தனை ரகசியங்களையும், மர்மங்களையும் மறைத்தவர்கள் இந்த இருவரும் மட்டுமல்ல- அமைச்சர்களும்தான். அதிலும் குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 11.10.2016 முதல் ஜெயலலிதாவின் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்து முதல்வர் பொறுப்பிலே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு 5.2.2017 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் வரை அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு 40 நிமிடங்கள் தியானம் இருந்து விட்டு திடீர் ஞானோதயம் வந்தவராக பொறுப்பில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16 ஆம் தேதி முதல்வராக நியமிக்கப்படும் வரை விசாரணைக்கான எந்த உத்தரவும் வெளியாகவில்லை.

அதற்கு மாறாக 6.2.2017 அன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவை அழைத்து வந்து தமிழக அரசு மருத்துவரையும் பங்கேற்க வைத்து, 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை', என்பதாக விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பே நடைபெற்றது. அப்போதும் முதல்வராக பதவியில் நீடித்தவர் ஓ.பன்னீர்செல்வம்தான். பிறகுதான் 'தர்மயுத்தம்' என்று புதிய அவதாரம் எடுத்து 'ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்' என்று திடீரென்று கோரிக்கை வைத்தார் ஓ.பன்னீர்செல்வம்.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி பிப்ரவரி 16-ம் தேதியிலிருந்து ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து எவ்வித விசாரணைக்கும் உத்தரவிடவில்லை. விசாரணை கமிஷனை அமைக்கவும் முன் வரவில்லை. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று கூறிய பிறகும் கூட இப்படியொரு விசாரணை கமிஷனை அமைக்கவில்லை. மாறாக, 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று பேட்டியளித்த டாக்டர் சீதாவை ஒரு பெண் என்றும் பாராமல் கைது செய்து சிறையில் அடைத்தது எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

இப்படி, சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் இந்த கோரிக்கை வைக்கப்பட்ட போதெல்லாம் 'அது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது' என்று கூறி தட்டிக் கழித்தது மட்டுமல்ல, தடயங்களை முழுவதும் மறைக்க உதவி செய்தவர்கள்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும்.

செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து டிசம்பர் 5 ஆம் தேதி வரை முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வந்த பன்னீர்செல்வம், முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் குழு அமைச்சர்களாக இருந்தவர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த மர்மங்களை மறைத்தார்கள்.

பிறகு 5.12.2016 முதல் 16.2.2017 வரை இருவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை மறைத்தார்கள். 16.2.2017 முதல் இன்றுவரை ஆறு மாதங்களுக்கு மேல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மத்தை இரும்புத் திரை போட்டும், கைது நடவடிக்கைகள் எடுத்தும் முற்றிலும் மறைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டணிதான் இப்போது விசாரணை கமிஷன் அறிவித்திருப்பதிலும் தொடருகிறது.

ஊழல்களின் ஊற்றுக்கண்களாக இருதரப்பும் இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணி 'தர்மயுத்தம்' என்று நாடகம் போடுவதும், ஊழல் கடலில் மூழ்கி நீச்சலடித்துக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அணி 'ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை கமிஷன்' என்பதும் தமிழக மக்களை ஏமாற்றும் வேலை மட்டுமல்ல, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை முன் வைத்து தர்மயுத்தத்தை முடித்துக் கொண்டு, இரு அணிகளும் இணைந்து, 'சச்சரவின்றி ஊழல் அத்தியாயத்தை' தொடங்கப் போடுகின்ற மோசடித் திட்டம் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, இந்தக் கண்துடைப்பு நாடகத்தை கைவிட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை விசாரிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையில் ஆர்வமும், அக்கறையும் இருக்குமென்றால், மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த விசாரணை முறையாக நடக்க, இந்த மர்ம மரணத்திற்கு துணை போன அல்லது கடந்த 8 மாதங்களாக அது தொடர்பான சாட்சியங்கள், தடயங்கள் மறைப்பதற்கு மனப்பூர்வமாக ஒத்துழைப்பு வழங்கிய ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரின் அமைச்சரவையிலும் தொடர்பவர்கள் - புதிதாக இடம்பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, புதிய அமைச்சரவை ஒன்றை அமைத்து, அதன்கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மர்ம மரணம் குறித்த சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு, நியாயமான விசாரணை நடைபெறுவதற்கு வழிவிட்டு, தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்'' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article19510616.ece?homepage=true

Link to comment
Share on other sites

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பும், அப்போலோவின் அறிக்கையும்!

 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். அன்று முதலே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு கருத்துகள் வலம் வந்தன. அதேபோன்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர் இதே கருத்தைக் கூறி ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும் என்று கூறினார். 

apollo hospital


அதன்பின்னர் அ.தி.மு.க கட்சி இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்தது . இரு அணிகள் இணைவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, பன்னீர்செல்வம் அணியின் சார்பாக முக்கியமாக இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதில் முக்கியமானது, ஜெயலலிதா மரணம் குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்பதுதான். 

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது, ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் இல்லை என்றே கூறினார். இந்த நிலையில் இன்று திடீரென்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

 

முதல்வரின் இந்த அறிவிப்பை பன்னீர்செல்வம் அணியின் சிலர் வரவேற்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை  முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 
அதில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த நீதி விசாரணை நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம். முன்னாள் முதல்வருக்கு எங்களால் முடிந்த வரை நல்ல முறையில் தரமான சிகிச்சை அளித்தோம். நாங்கள் மட்டும் இல்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், வெளிநாட்டில் இருந்தும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த நீதி விசாரணையின் மூலம் ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படும் " என்று அதில் கூறப்பட்டுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/99432-tamilnadu-government-decision-to-make-an-committee-regarding-jayalalitha-death-is-a-good-move--apollo.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.