Jump to content

சீனா: இந்திய - ஜப்பான் அணு ஆயுத ஒப்பந்தம்


Recommended Posts

சீனா: இந்திய - ஜப்பான் அணு ஆயுத ஒப்பந்தம்
 

- ஜனகன் முத்துக்குமார் 

கடந்த ஆறு வருட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் ஒன்று, அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

உலக வரலாற்றில், முக்கியத்துவம் மிக்கதாக நோக்கப்படும் இந்த ஒப்பந்தம், இருதரப்பு பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை, அதிகரிக்க வசதி செய்வதற்கான, நடவடிக்கை என்று கூறப்படுகிறது.   

image_6037054008.jpg

இருந்தபோதிலும், இந்த உடன்படிக்கையானது, அமெரிக்க - இந்திய அணுசக்தி உடன்படிக்கையின் இணைப்பாகவே பார்க்கப்படுகின்றது.   

கடந்த வருடம், இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது விஜயத்தின்போது, இரு நாடுகளுக்குமிடையில், சிவில் அணு ஆற்றல் ஒத்துழைப்புக்கான, ஒரு பரந்துபட்ட உடன்பாட்டை ஏற்படுத்துதல் தொடர்பிலான விடயங்களைத் தெளிவு செய்திருந்தார்.   

இந்த உடன்படிக்கையின் அடிப்படையில், ஜப்பான், அணு ஆற்றல் தொடர்பான தொழில்நுட்பத்தை, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. 

அதேவேளை, இதுவே வரலாற்றின் முதல் தடவையாக, அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாத ஒரு நாட்டுடன் (இந்தியா), ஜப்பான் செய்து கொண்ட முதலாவது அணு ஆயுத உடன்படிக்கையாகும்.   

இதன் பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையில், ஓர் உறுதியான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை நிலைநாட்டுவதே காரணம் என அறியப்படுகின்றது.   

அணு ஆற்றல் தொடர்பான சர்வதேச அரங்கில், ஜப்பான் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதுடன், ஜப்பான் ஏற்கெனவே அமெரிக்கா சார்ந்த அணு ஆலை, தயாரிப்பாளர்களான ‘வொஷிங்டன் ஹவுஸ் எலெட்றிக் கூட்டுத்தாபனம்’ மற்றும் ‘ஜிஈ எனர்ஜி இங்’ என்னும் இரண்டு பெரு நிறுவனங்கள் மூலமான, பாரிய முதலீட்டைக் கொண்டுள்ளது.   

இதன் காரணமாக, ஜப்பான் தனது பொருளாதாரத்தில் மேலதிகமான ஸ்திரத்தன்மையையும் பிராந்திய பாதுகாப்பு நலன்கள் மற்றும் பூகோள அரசியல் சார்ந்த நன்மைகளையும் அனுபவித்து வருகின்றது.   

இத்தகைய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நலன்கள் சார்ந்த விடயங்களே, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடக் காரணம் என்ற பொழுதிலும், குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா மிகவும் செறிவூட்டப்பட்ட யுரேனியப் பயன்பாட்டைப் பேணமுடியும்.   

அத்துடன், அணுச் செறிவூட்டலை மேற்கொள்ளுவதன் மூலமாக, இந்தியாவின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள முடியும் எனவும் அறிய முடிகின்றது.   

மேலும், இவ்வொப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் குறித்த யுரேனிய செறிவூட்டலைச் செய்வதற்கு, ஜப்பானின் அனுமதியைப் பெறத் தேவையில்லை. எனவே, இந்தியா குறித்த இந்நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், பரந்த அளவில் செயல்பட ஜப்பான் அனுமதி அளித்துள்ளமையைக் காண முடிகின்றது.  

மேலும், குறித்த பொருத்திணைக்கு மேலதிகமாக, இரு நாடுகளும் ஒரு தனிப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இந்தியா 2008 ஆம் ஆண்டு, அதன் வெளிவிவகார அமைச்சினால், அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டதன் அடிப்படையில், அணு ஆயுத உற்பத்தியைப் படிப்படியாகக் குறைத்தல், மற்றும் அணு ஆயுதப் பரம்பலைத் தடைசெய்தல் என்பவற்றைத் தொடர்ந்தும் கொள்கையாக ஏற்றுக்கொள்ளவும் குறித்த கொள்கைக்கு மாறுபாடாக, இந்தியா செயல்படும்போது மட்டுமே, ஜப்பான் குறித்த பொருத்திணையிலிருந்து வெளியேறும் என்பதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.  

இதன் பின்னணியில், இந்தியா மற்றும் ஜப்பான் பூகோள அரசியல் மற்றும் பிராந்திய பாதுகாப்புத் தொடர்பில், மேற்கொண்ட கூட்டு முயற்சியின் வெளிப்பாடே காரணம் எனலாம். 

இவ்வாறான பாதுகாப்புக்கு மற்றும் பொருளாதார ஒப்பந்தம் மேற்கொள்ள ஏதுவான விடயமாக, சீனாவினது பிராந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்தல் என்பது மறைமுகமான, மிகப்பிரதானமான விடயம் என்பது, அரசியல் ஆய்வுகளிலிருந்து தெளிவாகின்றது.  

தொடர்ச்சியாக, அணு தொடர்பான விநியோக குழுவில் (Nuclear Suppliers Group), இந்தியா அங்கம் வகிப்பதற்கான உரிமையைப் பெறுவதைச் சீனாவானது எதிர்க்கின்றது.   

குறித்த, எதிர்ப்புக்கான காரணமாக, இந்தியாவானது அணுசக்திப் பரவல் தடை தொடர்பான ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை என்பதையே சீனா மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகின்றது.   

அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான ஒப்பந்தத்தை, அணு உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கவும் பிராந்தியங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை உருவாக்கவும் 1968 இல் உருவாக்கப்பட்டதாகும்.   

அப்போது, இந்தியா, தெற்கு சூடான், இஸ் ரேல் மற்றும் பாகிஸ்தான் தவிர, மொத்தமாக 191 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன. குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளே அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகவும் ஏனைய நாடுகள் அணு ஆயுதம் கொண்டிருக்காத (NNWS) நாடுகளாகவும் கருதப்படுகின்றன.   

இதன் அடிப்படையில், அணு ஆயுதங்களைத் தாங்கும் நாடுகள், படிப்படியாக அணு ஆயுதப் பயன்பாடு மற்றும் உற்பத்தியைக் கைவிடவேண்டும் எனவும், ஏனைய அணு ஆயுதம் கொண்டிராத நாடுகள், அணு ஆயுத உற்பத்தி செய்ய முடியாதெனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.   

குறித்த ஒப்பந்தத்துக்கு, இந்தியா எதிர்ப்புத் தெரிவிக்கும் அதேவேளை, அணு ஆயுதங்களைக் கைவிடுதல், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும் என்பதனாலேயே, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இடாமைக்குக் காரணமாகும்.   

சீனா இதை, அடிப்படையாகக் கொண்டே, அணு தொடர்பான விநியோக குழுவில், இந்தியா அங்கம் வகித்தல் தொடர்பான தனது எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது. 

ஆனால், இந்தியா மற்றும் சீனா மத்தியில் காணப்படும் பொருளாதார மற்றும் எல்லை தொடர்பான முரண்பாடுகளும் இராணுவ முரண்பாடுகளுமே உண்மையில் காரணங்களாகும்.  

சீனாவின் தென் சீனக் கடல் தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிரான, சர்வதேச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், அமைந்த நீதிமன்றத் தீர்ப்பு, சீனாவுக்கு எதிராக அமைந்திருந்தது.   

இதைத் தொடர்ந்து இந்தியா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்கு எத்தனிப்பதைத் தொடர்ந்து, ஜப்பான் - இந்திய உறவை, தனது தென் கடற்பிராந்தியப் பாதுகாப்புக்கு, நீண்ட கால அச்சுறுத்தலாகவே சீனா பார்க்கின்றது.  

 சீனா, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான ஒரேயொரு வல்லரசாக வருவதற்குப் போட்டியாக இருக்கும் இரண்டு நாடுகள், இந்தியாவும் ஜப்பானுமாகும்.   

‘தென் சீனக் கடலில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பது உட்பட, ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டத்தை (UNCLOS) அமுல்படுத்தும் வகையிலாக உறவுகளை வலுப்படுத்துதல்’ என்ற பொருள்தரும் வகையிலான சரத்துகள், அண்மையில் கைச்சாத்திடப்பட்ட குறித்த ஒப்பந்தத்தில் அமைந்திருந்தமையானது, சீனாவின் அதிகாரப்போக்குக்கு, எதிரான சமிக்கை ஒன்றை காட்டுவதாகவே, சீனா பார்க்கின்றது.   
மேலதிகமாக, அபிவிருத்தி நோக்கங்களுக்காக, ஆசியாவின் வல்லரசாக சீனா உருவாகுதல், அதன் அடிப்படையிலான சீனாவால் பரிந்துரைக்கப்பட்ட ‘பட்டையும் பாதையும்’ அமுலாக்கல் நடைமுறைக்கு மாறாக, இந்தியாவினால் ஆர்வம்செலுத்தப்படும், ‘கிழக்கில் செயற்படும் செயற்திட்டம்’ (Act East Policy) மற்றும் ஜப்பானால் முன்வைக்கப்பட்ட ‘சுதந்திரமானதும் திறந்ததுமான இந்திய பசுபிக் செயற்திட்டம்’ (Free and Open India-Pacific Strategy) மற்றும் ‘விரிவாக்கப்பட்ட கூட்டுத் தரத்துக்கான உள்கட்டமைப்பு’ (Expanded Partnership for Quality Infrastructure) என்பன, தனது பிராந்திய மேலாண்மைக்கு, எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கின்றது எனச் சீனா கருதுகின்றது.  

அத்துடன் இவை, சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்கள் சார்ந்து, முரண்பாடுகள் அற்று இருப்பதன் காரணமாக, மேற்கத்தேய நாடுகளின் அனுசரணை மற்றும் நம்பிக்கையை வென்ற அமுலாக்கங்களாக இருப்பதும் சீனாவின் கோபத்துக்குக் காரணங்களாகும்.   

அண்மையில், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இவ்விரு நாடுகளும் மேற்கொண்ட உள்கட்டமைப்பை வலுச்செய்தல் தொடர்பான ஒப்பந்தமும் சீனா தனது ஆதிக்கத்தைச் செல்வாக்குச் செலுத்துவதில் இடர்பாடுகளை ஏற்படுத்தியமை, சீனாவின் கோபத்துக்கு மேலதிக காரணங்களாக இருக்கலாம்.  

இந்நிலையில், குறித்த இவ்வொப்பந்தம், இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்தியா-பசிபிக் பிராந்தியத்தில், பாதுகாப்புச் சமநிலையை ஏற்படுத்துதல் தொடர்பில் வலியுறுத்துகின்றது.

 மேலும், இவ்வொப்பந்தம் இணைத்த பாதுகாப்பு தொடர்பான உரையாடல், வழிமுறைகள், மற்றும் பயிற்சிகள் பற்றியும் கூறுகின்றது.   

இதற்கு வலுச்சேர்ப்பதாக, அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் ‘state of the art defence’ தளங்களைக் குறிப்பாக ‘US-2 amphibian aircraft’ இந்தியாவுக்கு வழங்குதல் தொடர்பில், தனது குறிப்புகளைத் தெரிவித்தார்.   

அதேவேளை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பைப் பேணுதல் தொடர்பில், இரு நாடுகளும் இணங்கிச் செயல்படும் எனவும் இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கியுள்ளனர்.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனா-இந்திய-ஜப்பான்-அணு-ஆயுத-ஒப்பந்தம்/91-202322

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.