Sign in to follow this  
நவீனன்

கிறுக்கு ராஜாக்களின் கதை

Recommended Posts

கிறுக்கு ராஜாக்களின் கதை - 1

 

 

WARNING: இந்தத் தொடரை வாசிப்பது உங்கள் மனநலனுக்குத் தீங்கானது!

 

பாபிலோனிய பல்வாள் தேவன்!

திகுதிகுவென வீட்டில் பரவ ஆரம்பித்தது தீ. வீட்டுக்காரன் பதறிப் போனான். நேரங்கெட்ட நேரத்தில் நின்றாடிய நெருப்பை அணைக்க முடியும் என்று தோன்றவில்லை. மனைவி, பிள்ளைகளை வெளியே இழுத்துப் போட்டான். ‘‘ஐயோ... எல்லாம் போச்சே!’’ என்று மனைவியின் கதறல் பின்னணி இசையென ஒலிக்க... அக்னி, பிரவேசம் செய்த வீட்டுக்குள் அவனும் பிரவேசித்தான். இன்சூரன்ஸ் இல்லாத காலம். இயன்ற அளவு பொருள்களை வெளியில் எடுத்துப் போட்டால் நஷ்டம் குறையும்.

அனலை உணர்ந்து வந்தான் பக்கத்து வீட்டுக்காரன். ‘அய்யகோ! அடுத்த வீட்டில் தீ... உதவி செய்வதே நீதி!’ - நொடியும் தாமதிக்காமல் நெருப்பைத் தாண்டிக் குதித்தான். அந்த வீட்டுக்காரனுடன் இணைந்து சில பொருள்களை மீட்க உதவினான். ஆனால், அவனும் சபலங்கள் நிறைந்த சராசரி மனிதன்தானே. எரியும் வீட்டிலுள்ள ஒரு சிறிய பொருளின் மீது ஆசைத்தீ பற்றியது. அதை எடுத்து அவசர அவசரமாகத் தன் உடைக்குள் மறைத்தான்.

p18c.jpg

ஆனால், வீட்டுக்காரனுக்கு சி.சி.டி.வி-யின் கண்கள். கண்டுபிடித்துவிட்டான். ‘‘அடேய் கிராதகா! என் வீட்டிலா திருடுகிறாய்?’’ என்று கத்தினான். அவன் கண்களில் நெருப்பைவிட அதிகத் தகிப்பு. நெஞ்சில் ஓங்கி ஒரே மிதி. நெருப்பில் விழுந்தான் பக்கத்து வீட்டுக்காரன். உடை பற்றிக்கொள்ள, கதறி எழுந்து ஓடியவனை, அடித்து உதைத்து மீண்டும் நெருப்பில் தள்ளி உயிரோடு எரித்தான். தீ தின்று முடித்த வீட்டில் பக்கத்து வீட்டுக்காரனும் சாம்பலாகிக் கிடந்தான்.
ஊர்ப் பஞ்சாயத்து கூடியது. நீதிபதிகள் விசாரித்தார்கள். ‘‘தீப்பிடித்த என் வீட்டில் திருடினான். அதனால்தான் அவனைத் தீக்கிரையாக்கினேன்’’ என்றான் வீட்டுக்காரன். ‘‘நீயொரு நீதிமான்! நீதியானை! நீதிசிங்கம்!’’ என்னும் ரீதியில் பஞ்சாயத்தார் வாழ்த்த, ஊரே அந்தக் கொலைகாரனைக் கொண்டாடியது.

‘இதென்ன காட்டு மிராண்டித்தனம்’ என்று பொங்க வேண்டாம்! ‘தீப்பிடித்த வீட்டில் உதவி செய்யச் சென்றவன் ஏதாவது திருடினால், அவனை அந்தத் தீயிலேயே தள்ளி எரிக்கலாம்’ என்பதே அப்போது அங்கே சட்டம். ஆம், அவர்களின் பேரரசர் அப்படித்தான் சட்டம் இயற்றியிருந்தார்.

அங்கே என்றால் எங்கே? எப்போது? யார் அந்தக் கூறுகெட்ட பேரரசர்?

ஹம்முராபி.

சுமார் 3,800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வாங்கு வாழ்ந்த மாமன்னர். தந்தையை அடித்துத் துரத்திவிட்டு அமோரிட் நாட்டின் அரியணையைக் கைப்பற்றிய உத்தமபுத்திரர். வெறும் 50 சதுர மைல் பரப்பளவு கொண்ட ராஜ்ஜியத்தின் ராஜாவாகத்தான் தொழிலை ஆரம்பித்தார். தன் வீரத்தாலும் சாதுரியத்தாலும் மெசோபடோமியாவின் பல்வேறு பகுதிகளை வென்று, முதலாம் பாபிலோனியப் பேரரசைக் கட்டியெழுப்பிய பாபிலோனிய பல்வாள் தேவனாக வரலாற்றில் நின்றார். அன்னாரது ஆட்சிக்காலம் கி.மு. 1792 முதல் கி.மு. 1750 வரை.

வெவ்வேறு பிரதேசங்களைக் கைப்பற்றி, வேறு வேறு மொழி பேசும் மக்களை அடக்கியாள்வது எவருக்கும் கடினமான விஷயம்தான். ஆகவே ஹம்முராபி, தன் பேரரசின் எல்லா பகுதிகளுக்கும் நிபுணர்களை அனுப்பினார். எங்கெங்கே, என்னென்ன மாதிரியான சட்டங்களெல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன என்று திரட்டினார். அவற்றையெல்லாம் ஆராய்ந்து, வெட்டி, ஒட்டி, திருத்தம் செய்து, கூடுதலாகத் தனது அனுபவ மசாலாவைச் சேர்த்து, பாபிலோனியப் பேரரசு முழுமைக்குமான புதிய சட்டத்தொகுப்பை உருவாக்கினார்.

இதுவே நமக்குக் கிடைத்திருக்கும், மனிதக் குல வரலாற்றின் மிகப் பழைமையான முதல் சட்டத் தொகுப்பு. ஹம்முராபியின் முழுமையான சட்டங்கள் செதுக்கப்பட்ட கல்வெட்டு, கி.பி. 1902ல் பிரெஞ்சு தொல்லியல் ஆய்வாளர்களால் ஈரானின் சுஸா நகரில் கண்டறியப்பட்டது. (தற்போது பாரிஸின் லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது.)

நம் ஆள்காட்டி விரல் வடிவிலான, ஏழு அடி நான்கு அங்குலம் உயரமுள்ள கல் ஒன்றில், அக்காடியன் (Akkadian) மொழியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. வணிகம், அடிமைகள், திருட்டு, வேலை, விவசாயம், விவாகரத்து, குடும்பம், சமூகம் என்று பல்வேறு பிரிவுகளில் 282 சட்டங்களை ஹம்முராபி அருளியிருக்கிறார்.

‘இந்த மண்ணைத் தீய சக்திகளிடமிருந்து காக்கவும், ஏழைகளை அநியாயங்களிலிருந்து பாதுகாக்கவும், கடவுளர்கள் என்னைத் தேர்ந்தெடுத்து இந்தச் சட்டங்களை அருளினர்’ என்று ஹம்முராபியே இந்தச் சட்டத் தொகுப்புக்கு முன்னுரை கொடுத்துள்ளார். இதைக் காப்பி பேஸ்ட் செய்துதான் அவருக்குப் பின்வந்த பல்வேறு ஆட்சியாளர்கள் நீதியை நிலைநாட்டியிருக்கின்றனர் என்கிறது வரலாறு. சரி, ஹம்முராபியின் சட்டங்களில் அப்படி என்ன சிறப்பு?

dot.png புயலா, மழை பொய்த்துவிட்டதா, இன்ன பிற காரணங்களால் அந்த ஆண்டில் விளைச்சல் இல்லையா? விவசாயக் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டாம். கடன் கொடுத்தவர்கள் தம் கடன் பட்டியலை அழித்துவிட வேண்டும். (வாயில் எலி கவ்வி, நிர்வாணப் போராட்டம் நடத்தாமலேயே விவசாயக் கடன் ரத்தைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஹம்முராபி தி கிரேட்!)

dot.png ஒரு பெண் தன் கணவனோடு வாழ விருப்பமில்லை என்று தெரிவித்தால், கணவனும் அதற்குச் சம்மதித்துவிட்டால், அந்தப் பெண் தன்னுடைய தந்தை வீட்டிலிருந்து வரதட்சணையாகக் கொண்டு வந்த பொருள்களையெல்லாம் திரும்ப எடுத்துக் கொண்டுக் கிளம்பி விடலாம். (இதுவல்லவோ பெண் சுதந்திரம்!)

dot.png ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண் காணாமல் போய்விட்டாலோ, கடத்தப்பட்டுவிட்டாலோ, அவனுடைய குடும்பத்தை உற்றார், உறவினர்கள் தக்க உதவிகள் செய்து காப்பாற்ற வேண்டும். (என்னவொரு மனிதநேயம்!)

dot.png ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பு தவறு என்று பின்பு கண்டறியப்பட்டால், அவருக்கு 12 மடங்கு அபராதத் தொகை விதிக்கப்படும். பதவி நீக்கத் தண்டனையும் உண்டு. (ஆம், அநீதிபதிக்கும் ஆப்பு உண்டு.)

‘அடடே... அத்தனை சட்டங்களும் அருமையாக இருக்கின்றனவே’ என்று லைக், லவ், வாவ் பொத்தான்களை அவசரப்பட்டு அழுத்த வேண்டாம். கோபம் மற்றும் சோக பொத்தான்களுக்கும் ஏகப்பட்ட வேலை கிடக்கிறது.

dot.png தகாத வழியில் பிறந்த ஒருவன், தன்னை வளர்க்கும் தாய் அல்லது தந்தையைப் பார்த்து, ‘‘நீ என் அம்மாவே இல்லை’’ அல்லது ‘‘நீ என் அப்பாவே இல்லை’’ என்று சொன்னால், அவனது நாக்கு இழுத்து வைத்து நறுக்கப்படும். ஒருவன் கோபத்தில் அவனது தந்தையைத் தாக்கினால், அவனது கைகள் வெட்டப்படும். ஓர் அடிமை தன் எஜமானைப் பார்த்து ‘‘நீ என் முதலாளி இல்லை’’ என்று முனங்கினாலும் அவன் காதுகள் அறுக்கப்படும்.

p18.jpg

dot.png தன் மனைவியின் நடத்தையில் ஒருவனுக்குச் சந்தேகம் எழுந்தால், அவள் கட்டிலும் கலவியுமாகப் பிடிபடா விட்டாலும், அவளை யூப்ரடிஸ் நதி வெள்ளத்தில் தூக்கி எறிந்து விடலாம். அவள் உத்தமி என்றால் கடவுளே கரை சேர்த்துவிடுவார். இல்லையென்றால் மூழ்கி இறந்து விடுவாள். அதேசமயம், ஆண்கள் படி தாண்டினால் அது குற்றமில்லை. மனைவியல்லாமல் வேறொரு பெண்ணை ஒருவன் கர்ப்பமாக்கினால், அவனுக்கு வெறும் அபராதம்தான். பிரசவத்துக்குப் பின் அந்தப் பெண் இறந்துபோனால், அவள் பிரசவித்தது பெண் குழந்தையென்றால், அதன் ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

dot.png ஒருவன் மீது ஒரு குற்றம் சாட்டப்படுகிறது. தன்னை நிரபராதி என நிரூபிக்க இயலாத அவனை, ஆற்றின் ஆழமான பகுதியில் தள்ளிவிடுவார்கள். அவன் மூழ்கிச் செத்துவிட்டால், அக்மார்க் குற்றவாளி. அவனுடைய வீடு, குற்றஞ்சாட்டியவனுக்குச் சொந்தமாகிவிடும். நீந்தி மேலேறி வந்துவிட்டால் அவன் நிரபராதி. குற்றஞ்சாட்டியவனுக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அவன் வீடு, தப்பித்தவனுக்குச் சொந்தமாகிவிடும். (நிரபராதியாக இருந்து நீச்சல் தெரியாவிட்டால் என்ற கேள்விக்கெல்லாம் ஹம்முராபி இடமளிக்கவில்லை.)

dot.png ஒரு மேஸ்திரி கட்டிக்கொடுத்த வீட்டின் சுவர் இடிந்துவிட்டால், அதை அவரே தன் செலவில் சரிசெய்து தர வேண்டும். சுவர் இடிந்து வீட்டுக்காரன் செத்துப் போனால், மேஸ்திரிக்கு மரணதண்டனை. சுவர் இடிந்து வீட்டுக்காரனின் மகன் செத்துப் போனால், மேஸ்திரியின் மகனும் கொல்லப்படுவான். 

dot.png ஒருவன் அடுத்தவனது கண்ணைத் தோண்டி விட்டால், அவன் கண்ணைப் பதிலுக்குத் தோண்டி விடலாம். பல்லை உடைத்துவிட்டால், உடைத்தவனின் பல்லை உடைக்கலாம். எலும்பென்றால் பதிலுக்கு எலும்பை முறிக்கலாம். இதுபோன்ற ரத்தம் தெறிக்கும் ரிவெஞ்ச் சட்டங்களை அறிமுகப்படுத்தியது அண்ணன் ஹம்முராபியே! ஆனால், இதிலும் வர்க்க பேதங்கள் உண்டு. உயர்குடியைச் சேர்ந்தவன் சாதாரணனின் கண்ணை நோண்டினாலோ அல்லது வேறு ரகக் குற்றங்கள் செய்தாலோ, வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. மரண தண்டனையெல்லாம் கிடையாது.

dot.png கர்ப்பமாக இருக்கும் அடிமைப்பெண்ணை உயர்குடிக்காரன் கொன்றுவிட்டால் அதற்கும் அபராதம் மட்டுமே. அதேசமயம் கர்ப்பமாக இருக்கும் உயர்குடி அல்லது நடுத்தர வர்க்கப் பெண்ணைக் கொன்றால், பதிலுக்குக் குற்றவாளியின் அப்பாவி மகளும் கொல்லப்படுவாள்.

dot.png கள்ளக் காதல் ஜோடி ஒன்று, தம் அசல் இணையைக் கொல்லத் திட்டமிட்டால், அவர்களிருவருமே கழுமரத்தில் ஏற்றப்படுவர். ஒரு தாய் முறையற்ற உறவில் ஈடுபட்டால், அவள் ஜோடியுடன் சேர்த்து உயிருடன் எரிக்கப்படுவாள்.

p18a.jpg

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி காலி; இல்லையேல் குற்றம் சுமத்தியவனுக்கு உயிர் இருக்காது. இப்படி ஏகப்பட்ட மரண தண்டனைகளும், உயிரை வதைக்கும் கிறுக்குத்தனமான தண்டனைகளும் நிறைந்ததே ஹம்முராபியின் காலம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், நாகரிகம் பெரிதாக வளராத பண்டைக் காலத்தில், மூர்க்கமான குடிமக்களுக்கு மூக்கணாங்கயிறு போட இப்பேர்ப்பட்ட அதிரடிச் சட்டங்கள் தேவைப்பட்டிருக்கலாம். ஆகவே ஹம்முராபியைக்கூட அரை மனத்துடன் மன்னித்துவிடலாம். ஆனால், நாகரிகமும் அறிவியலும் வளர்ந்த பிற்காலத்திலும்கூட அரை மெண்டலாக ஆட்சி செய்த பலர் வரலாற்றில் வலம் வந்திருக்கிறார்கள். (டிஜிட்டல் யுகத்திலும் உலகை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.)

மதிகெட்டவர்கள். மறை கழன்றவர்கள். குரூரர்கள். காமக்கொடூரர்கள். அதிகாரப் போதை அரக்கர்கள். மமதையேறிய மூடர்கள். வக்கிர வஞ்சகர்கள். ரத்தவெறி ராட்சஷர்கள். பித்தேறிய பிணந்தின்னிகள். எம்மொழியாலும் விவரிக்க இயலா தனிவழிச் சனியன்கள்... ஆண் பெண் பேதமின்றி இப்படிப்பட்ட கிறுக்குப் பிறவிகளே ஒவ்வோர் அத்தியாயத்திலும் உங்களைத் தேடி வர இருக்கிறார்கள். எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்.

(வருவார்கள்...)

http://www.vikatan.com

Share this post


Link to post
Share on other sites

கிறுக்கு ராஜாக்களின் கதை! - 2

WARNING: இந்தத் தொடரை வாசிப்பது உங்கள் மனநலனுக்குத் தீங்கானது!

 

 

p30a.jpg

தோத்தாங்குளி

‘‘எனக்கு அ... அடுத்து... அரியணை ஏ... ஏற வேண்டியது... ஜஸ்டின்!’’

கி.பி. 565 நவம்பர் 14 நள்ளிரவில் பைசாந்தியப் பேரரசர் முதலாம் ஜஸ்டினியன், தமது மரணப்படுக்கையில் கூறிய இறுதி வார்த்தைகள் இவை என்று நம்பப்படுகிறது. அதை உடனிருந்து கேட்ட ஒரே நபர், அரண்மனையின் தலைமை அதிகாரி பொறுப்பிலிருந்த கல்லினிகஸ். இந்த விஷயத்தை அவர்தான், பேரரசி தியோடோராவிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்.

83 வயதுவரை வாழ்வாங்கு வாழ்ந்துவிட்டுத்தான் இறந்து போயிருக்கிறார் என்றாலும், ஜஸ்டினியனின் மரணம் பைசாந்தியப் பேரரசுக்கு பேரிழப்பே. காரணம், இவரின் 38 வருட ஆட்சிக்காலம், பைசாந்தியப் பேரரசின் பொற்காலம். இத்தாலியின் பெரும் பகுதி, பால்கன் பகுதிகள், ஸ்பெயினின் தெற்கில் ஒரு பகுதி, வட ஆப்ரிக்காவில் சில பகுதிகள் என்று பைசாந்தியப் பேரரசின் எல்லைகளை ஏராளமாக விரிவாக்கியவர் இவரே. ரோமானியச் சட்டங்களை நெறிப்படுத்தி, தன் ராஜ்ஜியத்தில் அமலுக்குக் கொண்டு வந்தவர். மத்தியத் தரைக்கடலைச் சுற்றி மீண்டும் வலுவான ரோமப் பேரரசை நிறுவ வேண்டும் என்பது இவரது பெருங்கனவு. அது அரைகுறையாக நிறைவேறுவதற்கு முன்பாக, கிழவர் மண்டையைப் போட்டுவிட்டார்.

அடுத்தது?

ஜஸ்டினியனுக்கு நேரடி வாரிசு கிடையாது. ‘உங்களில் யார் அடுத்த பேரரசர்?’ போட்டியில் ஜஸ்டினியன் பரம்பரையில் வந்த ஏழு பேர் எதிரும் புதிருமாக முறைத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் என்ன? அவரே ‘ஜஸ்டின்’ என்று ஒரு நாமகரணத்தைச் சொல்லிவிட்டாரே என நினைக்கலாம். என்றாலும் குழப்பமிருந்தது. காரணம், ஏழு பேரில் இரண்டு ‘ஜஸ்டின்’கள் இருந்தார்கள்.

p30.jpg

ஒருவர் ஜஸ்டினியனின் உறவினரும், படையின் முதன்மைத் தளபதியுமான ஜெர்மானஸின் மகன் ஜஸ்டின். இந்த ஜஸ்டின் கல்வி அறிவும், போர் அனுபவங்களும், தலைமைப் பண்பும் மிக்கவர். ஜஸ்டினியனின் மனம் கவர்ந்த வலிமையான தளபதி. பேரரசர் ஆவதற்குரிய பத்துப் பொருத்தங்களும் நிரம்பியவர்.

இன்னொருவர், ஜஸ்டினியனின் சகோதரி விஜிலாண்டியாவின் மகனான ஜஸ்டின். கல்வி அறிவு கொண்டவர் என்றாலும், வலிமையோ, போர் அனுபவங்களோ இல்லாதவர். சொகுசு சுந்தரர்.

‘இருவரில் எந்த ஜஸ்டினாக இருக்கும்’ என்று கல்லினிகஸ் குழம்ப, பேரரசி தியோடோரா யோசிக்கவே இல்லை. ஜெர்மானஸை அவருக்குப் பிடிக்காது. ஆகவே ஜெர்மானஸின் மகனைப் புறந்தள்ளினார். இன்னொரு ஜஸ்டின், அவரது செல்ல மருமகளான சோஃபியாவைத் திருமணம் செய்து கொண்டிருந்தார். ஆகவே இரண்டாவது ஜஸ்டினையே ‘பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் ஜஸ்டின்’ என்று அறிவிக்க முடிவெடுத்தார் தியோடோரா. அந்த ஜஸ்டினுக்கு ரகசிய அழைப்பு அனுப்பப்பட்டது.

தலைநகர் கான்ஸ்டான்டிநோபிள் அரண்மனையைச் சுற்றி பலத்த காவல். ஏற்கெனவே அங்கே செனட் உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். தியோடோராவின் உத்தரவுப்படி இரண்டாம் ஜஸ்டினை அடுத்த பேரரசராக ஒருமனதாக அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ‘‘பேரரசர் ஆவதற்கு உங்களுக்குச் சம்மதமா?’’ என்று மதகுரு ஒப்புக்குக் கேட்பது மரபு. ‘‘அய்யகோ! என்னால் இயலாது’’ என்று போலியாக நடித்து மறுப்பதும் மரபே. பின்பு, ‘‘உங்களுக்காக இந்தச் சுமையை ஏற்றுக்கொள்கிறேன்’’ என்று சீன் போடுவதும் நடக்கும். அதையெல்லாம் இரண்டாம் ஜஸ்டினும் செவ்வனே செய்தார். தனது 45-வது வயதில், பைசாந்தியப் பேரரசராகச் சத்தமின்றி முடிசூட்டிக் கொண்டார். அதன்பிறகே, ஜஸ்டினியனின் இறப்புச் செய்தி வெளியிடப்பட்டது. தேசம் கண் கலங்கியது.

இரண்டாம் ஜஸ்டினின் ஓப்பனிங் இன்னிங்ஸ் நன்றாகத்தான் இருந்தது. முதல் காரியமாக, தன் மனைவி சோஃபியாவைப் பேரரசியாக அறிவித்தார். பழைய கடன்களை அடைத்தார். மக்களுக்குச் சுமையாக இருந்த சில வரிகளை நீக்கினார். காலியாகக் கிடந்த கஜானாவை நிரப்ப பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

எல்லையில் சில முரட்டு இனக்குழுக்களுடனான மோதல் வாடிக்கையாக இருந்தது. அவர்களுக்கெல்லாம் மானியங்களும் லஞ்சமும் கொடுத்துக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார் முன்னாள் பேரரசர். ஜஸ்டின் அந்த மானியங்களை நிறுத்தினார். உடனே எல்லைகளில் பதற்றம். அவார், லொம்பார்ட்ஸ் போன்ற இனக்குழுக்கள் அட்டூழியங்களை ஆரம்பித்தனர். அவர்களை அடக்க, துருக்கியர்களுடன் கைகோத்துக் கொண்டு படைகளை அனுப்பினார் ஜஸ்டின். செலவுதான் இழுத்துக்கொண்டே போனதே தவிர, எதிரிகளை அடக்க முடியவில்லை. இந்தப் பிரச்னை ஒருபுறம் இழுத்துக் கொண்டிருக்கும்போதே, தேவையே இன்றி கிழக்கு எல்லையில் பெர்சியாவின் மீது படையெடுத்தார். பெர்சியர்களின் வசமிருந்த அர்மேனியாவின் சில பகுதிகளை பைசாந்தியர்கள் கைப்பற்றினர். பதிலுக்கு பெர்சியர்கள் படை திரட்டி வந்தபோது, பைசாந்தியர்களால் கட்டுப்படுத்தவே இயலவில்லை.

போர் அனுபவமின்மை. திட்டமிடுதலில் திறமையின்மை. தளபதிகள் மீது நம்பிக்கையின்மை... இந்த இன்மைகளால் கடும் இன்னல்களுக்கு ஆளானார் இரண்டாம் ஜஸ்டின். கோபத்தின் விளைநிலமானார். அதனால் முட்டாள்தனங்கள் தொடர்ந்தன. முன்னேறிவந்த பெர்சியப் படைகள், பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரங்களுள் ஒன்றான தாராவைக் கைப்பற்றின.

p30c.jpg

ஜஸ்டினியன் விரிவுபடுத்திய பைசாந்தியப் பேரரசின் பல பகுதிகளை இழந்து, தோத்தாங்குளியாகத் துவண்டு போனார் ஜஸ்டின். மனஅழுத்தம் எகிறியது. மூளை பிசகியது. பேச்சு உளறலானது. நடவடிக்கைகள் நகைப்புக்குள்ளாயின. ‘பேரரசர் எப்போது என்ன செய்வார்...’ என்ற பீதி அரண்மனை வளாகத்தில் எப்போதும் நிலவியது. ‘‘போச்சு... பேரரசர் ஓட ஆரம்பித்துவிட்டார்’’ என்று யாராவது பதறுவார்கள். பிரேக் பிடிக்காத தண்ணீர் லாரி போல அரண்மனையின் பரந்த முற்றங்களில் ஜஸ்டின் தறிகெட்டு ஓடிக் கொண்டிருப்பார். சேவகர்கள் அங்குமிங்கும் பாய்ந்து அவரைப் பிடிக்க முயற்சி செய்வார்கள். ஆயிரம் அழிச்சாட்டியங்கள் செய்தாலும் ‘ஹானரபிள் அரசர்’ அல்லவா. அவருக்கு வலிக்காமல், காயப்படுத்தாமல் பிடித்துத் தொலைக்க வேண்டும்! ஆனால், ஜஸ்டினோ தன்னைப் பிடிப்பவரை நன்றாகக் கடித்து வைத்துவிடுவார். அவர் வலியை வெளிக்காட்டக்கூடாது. என்ன இருந்தாலும், கடித்ததுப் பேரரசர் அல்லவா? வாயில் ரத்தம் வழிய புன்னகை செய்வார், அப்பாவி முகத்துடன்.

ஒருநாள்... ‘‘பேரரசியாரே! பேரரசர் சாளரத்தின் மீதேறி நின்று, குதிக்கப் போவதாக மிரட்டுகிறார்’’ – ஓடோடி வந்து பதறினான் ஒருவன். அவரைக் கீழே இறக்குவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. சோஃபியா, பேரரசர் புழங்கும் அறைகளிலுள்ள சாளரங்களுக்கெல்லாம் கம்பி பொருத்த ஏற்பாடு செய்தார்.

சில நேரங்களில் பேரரசர் கட்டிலுக்கடியிலோ, மெத்தைக்கு அடியிலோ அமைதியாகக் கிடப்பார். ஆள் இருப்பதே தெரியாது. ஆனால், எப்போது எப்படி மாறுவார் என்பது புரியாது. ஆக, பேரரசர் விழித்திருக்கும் நேரமெல்லாம் அவரது வெறியைக் கட்டுப்படுத்துவதற்காக இசைக்கருவிகள் இசைக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. சில சமயங்களில் அதற்கும் அடங்காமல் திமிறி எழுவார் ஜஸ்டின். நாற்காலியின் நான்கு கால்களிலும் சக்கரத்தைப் பொருத்தினார்கள். பேரரசரை உட்கார வைத்து உருட்டிக்கொண்டே அரண்மனையெங்கும் ஓடினார்கள். பேரரசர் குழந்தையாக மாறி, குதூகலமாகச் சிரிப்பார்.

இவற்றையெல்லாம் மீறியும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. கழுத்திலிருந்தோ, தலையிலிருந்தோ ரத்தம் வழிய வழிய... பேரரசரின் அறைக்குள்ளிருந்து சேவகர்கள் ஓடி வருவதுண்டு. ஆம். சில பொழுதுகளில் யார் அருகில் வந்தாலும் கடித்துக் குதறினார் ஜஸ்டின். ‘‘ராஜாவுக்கு முத்திப் போச்சு. ரெண்டு பேரைக் கடிச்சே தின்னுட்டாராம்’’ என ராஜ்ஜியத்தில் மக்கள் பீதியுடன் பேசிக் கொண்டார்கள். சாதாரணன் என்றால் சிறையில் அடைக்கலாம். தண்டனை கொடுக்கலாம். பேரரசருக்கு யார் தண்டனை கொடுப்பது? அந்த அதிகாரம் யாருக்கும் இல்லையே!

p30b.jpg

ஒரு கட்டத்தில் பேரரசி சோஃபியா தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். தனது விசுவாசத்துக்குரிய தளபதி டைபெரியஸுக்கு  ஆளும் அதிகாரத்தை (அந்தப் பதவியை ‘Ceaser’ என்று அழைப்பர்) வழங்கினார். அந்த நிகழ்வில் பேரரசர் இரண்டாம் ஜஸ்டின் தனது இறுதியான, தெளிவான உரையை நிகழ்த்தினார். ‘‘இந்தப் பதவி நான் உனக்கு வழங்குவதல்ல. இறைவன் வழங்குவது. பேரரசி உன் தாய். அவளுக்கு மரியாதை கொடு. அனுபவமிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேள். பழிவாங்கும் வெறியில் என்னைப்போல் முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே. உன்னை நேசிப்பது போல் மக்களையும் நேசி. ஏழைகளின் தேவைகளை நிறைவேற்று!’’

உணர்வுபூர்வமான உரையில் அவை நெகிழ்ந்தது. பேரரசர் தம் கீரிடத்தை இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுக்கக் கிளம்பினார். அடுத்த நான்காண்டுகளுக்கு சக்கரம் பொருத்தப்பட்ட நாற்காலி உருண்டுகொண்டே இருந்தது. கி.பி. 578, நவம்பர் 15 அன்று அதற்கு வேலையின்றிப் போனது. ஐம்பத்தெட்டு வயதில் இரண்டாம் ஜஸ்டின் இயற்கை எய்தினார். ‘பைத்தியக்கார பைசாந்தியர்’ என்ற பட்டம் மட்டும் வரலாற்றில் அவருக்கு நிலைத்தது.

சரி, இன்னொரு ஜஸ்டின் இருந்தாரே... என்ன ஆனார் அவர்? ஜஸ்டினியன் இறந்த சமயத்தில், அவர் எல்லைப் பகுதி பாதுகாப்பில் இருந்தார். அவர் அறியாமலேயே இரண்டாம் ஜஸ்டினை ரகசியமாக அரியணையில் ஏற்றினார்கள். ‘என்றைக்காவது தளபதி ஜஸ்டின் தனக்கு எதிரியாக விஸ்வரூபம் எடுக்கலாம்’ எனப் பேரரசர் ஜஸ்டின் பயந்தார். சதி ஒன்றில் தளபதி ஜஸ்டின் கொல்லப்பட்டார். ஒருவேளை அவர் பைசாந்தியப் பேரரசராக அரியணை ஏறியிருந்தால், உலகின் வரலாறு மாறியிருக்கக் கூடும். இரண்டாம் ஜஸ்டினுக்கும் பைத்தியம் பிடித்திருக்காது.

(வருவார்கள்...)

 

WARNING: இந்தத் தொடரை வாசிப்பது உங்கள் மனநலனுக்குத் தீங்கானது!

http://www.vikatan.com/juniorvikatan

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this