Sign in to follow this  
நவீனன்

அபிவிருத்தியை நோக்கி கட்டமைக்க வேண்டிய காலம்: வெற்றிடத்தை யார் நிரப்புவார்?

Recommended Posts

அபிவிருத்தியை நோக்கி கட்டமைக்க வேண்டிய காலம்: வெற்றிடத்தை யார் நிரப்புவார்?
 

குழப்பமான சிந்தனையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்து கொண்டிருக்கிறது. முன்வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களைப்பற்றி யாரும் சிந்திப்பதாயில்லை என்ற கவலை அநேகமானோரிடம் இருக்கிறது. 

இருந்த போதிலும், அதை நிவர்த்திப்பதற்கு முயற்சிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதற்குக் கடந்த கால யுத்தம் காரணம். ஆனாலும், தொடர்ந்தும் அதையே சொல்லிக் கொண்டிருக்க முடியுமா என்பது குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டும்.   

ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பு முனைப்புகளும் போராட்டங்களும் குரோதமான கருத்து வெளிப்படுத்தல்களும் நம்மவர்களிடம் ஏன் மலிந்து போய்விட்டது, என்பது இதற்குரிய கேள்வி. கடந்த பல தசாப்தங்களையும் தாண்டிய, இலங்கையின் இனப்பிரச்சினைசார் ஆயுத போராட்டங்கள் விட்டுச் சென்ற, பல்வேறுபட்ட விடயப்பரப்புகள் இன்னமும் தமிழ்மக்களிடமிருந்து போய்விடவில்லை. அதற்கு முன்னர் நடைபெற்ற அஹிம்சைப் போராட்டங்களும் வடுக்களை விட்டுத்தான் சென்றுள்ளன. எவ்வாறாயினும், உண்மையில் சொன்னால், ஆற்றுப்படுத்தல், ஆறுதல்படுத்தல்கள் தேவை என்பதுதான் இதற்குப் பதிலாக இருக்கும். இதை எங்கிருந்து தொடங்கப்போகிறோம் என்பது அடுத்த கேள்வி.  

நான் அறிந்து, இலங்கையின் கடந்த நான்கு தசாப்தங்களாக இல்லாமலாக்கிய, வெளியேற்றிய புத்திஜீவிகள், கல்விமான்களது அறிவும் அனுபவமும் பயன்படாமல் போனது; இப்போது இருப்பவர்களைப் பயன்படுத்தாமலிருப்பது மிகவும் கவலைக்குரியது.

ஆனால் இப்போது, ‘தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்’ என்ற நிலைமையே காணப்படுகிறது. இதை மாற்றவேண்டுமென்ற தேவையை, ஏற்றுக் கொள்கின்ற பக்குவமும் மனோநிலையும் எல்லோரிடத்திலும் இல்லை.  

ராஜினி திராணகமவினால் எழுதப்பட்டு, 1996 இல் வெளியிடப்பட்ட ‘முறிந்த பனை’ புத்தகத்தின் முதல் பக்கத்தில், மார்டீன் லூதர் கிங் எழுதிய ‘கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க அவற்றை நல்ல மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவுக்கு மௌனமாய் சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுறவேண்டும்’ என்ற வாசகம் இருக்கிறது. மார்டீன் லூதர் கிங் மற்றும் ராஜினி திராணகம மறைந்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும் இந்த நிலை இன்னமும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது.  

இப்போது பேசப்படுகின்ற அரசியல், ‘பேதமின்றி ஒன்றுமைப்படுதல்’ என்ற விசயம் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். தமிழர்களிடமிருக்கிற மனோநிலையில் மாற்றம் வேண்டுமென்று பேசுகிற அதே நேரத்தில், ஏனையோரிடத்தில் அது இல்லையா என்றும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும் தேவையுள்ளவர்கள்தான் இதைச் செய்து கொள்ள வேண்டும் என்பது வெளிப்படை. நாமே நம்மைக் கட்டமைத்தோம்; யாராவது தூக்கித்தருவார்களா என்றும் கேட்டுக் கொள்வோம். 

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா - நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுத்தாக்குதலை மேற்கொண்டதன் பின்னர், அழிந்து போன ஜப்பான், அடுத்த 10 மாதங்களில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது என்பது வரலாறு. அதைப்போன்று, சர்வதேச நாடுகள் இணைந்து யுத்தத்தை நடத்திய இலங்கையில், அழிந்து போன தமிழர் பிரதேசங்கள் கட்டியெழுப்பப்பட்டதா என்ற கேள்வி இப்போது சில இடங்களில் கேட்கப்படுகிறது.

உண்மையில், அந்த மாற்றம் ஏற்படாமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். நிறுவன மயப்பட்டதான, ஒழுங்கமைக்கப்பட்டதான முயற்சிகளால் மாத்திரமே இது சாத்தியப்படும். என்றாலும் அதற்குக்காலம் கனியவேண்டும். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி எனப் பல திட்டங்கள் வழங்கப்படாமலில்லை. அவற்றை எவ்வாறு யார் பயன்படுத்துகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும்.  

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்திலும், சுனாமி அழிவின் போதும் நூற்றுக்கணக்கான சர்வதேச மற்றும் உள்ளூர், அரச சார்பற்ற நிறுவனங்கள் வடக்கு கிழக்கில் பணியாற்றியிருந்தன. அவை நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்கு வேறு காரணமும் இருந்தது. அவற்றினால் செலவிடப்பட்ட நிதிக்கு இதுவரையில் முழுமையான கணக்கிருக்கிறதா என்று கேட்க மட்டுமே முடியும். அந்த வேளையில் செலவிடப்பட்ட நிதிகளின் பிரதிபலன்கள் இருக்கின்றனவா, எதிர்காலத்தில் கிடைக்குமா என்றால் இல்லை.  

மிகவும் இன்னல்கள், பிரச்சினைகளை எதிர் கொண்டு கடுமையாக, உழைத்து வாழ்ந்த, நம் சமூகத்தைக் கட்டியெழுப்பிய நம் முன்னோர்களைப்பற்றி இந்த இடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இப்போதெல்லாம் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி எதையும் அடைந்து விட முடியும் என்ற மனோநிலை உயர்ந்து வருகிறது. விட்டுக் கொடுப்பதற்கோ, இருப்பதன் பலனை முழுதாய் அனுபவிப்பதற்கோ மனோநிலையில்லாதவர்களாகத் தமிழர்கள் மாறிப்போயிருக்கிறார்கள்.  

அடுத்தவர்கள் மீது பழி போடுவதும், தாம் மாத்திரம் தப்பிக்கொண்டால் சரி, என்கிற மனோபாவமும் மாற்றம் பெற வேண்டும். நாட்டில் எவ்வளவோ அமைப்புகள், ஏற்பாடுகள் இருக்கின்றபோதும் எதையுமே அடைந்து கொள்ள முடியாத நிலைக்குக் காரணம் என்ன என்பதை ஆராயாமல் காலங்கடத்துகிறோம். 

உதாரணத்துக்கு ஒரு கதை, கோழிக்கூட்டில் முட்டை திருட்டுப் போகிறது என்பதற்காக கோழிக்குக் காவலாக நாயைக் கட்ட, வீட்டில் எல்லாம் திருட்டுப்போய்விட்டது. இதுதான் தமிழ்ச் சமூகத்தின் நிலையாக இருக்கிறது. இந்த நிலையில் மாற்றம் வேண்டுமாக இருந்தால் பெரும்போக்கில் சிந்தித்தாக வேண்டும். நம் பிரதேசங்களைக் கட்டமைக்கவேண்டும்.  

ஜனநாயகத்தைப் பேணி வளர்ப்பதென்பது, அதைச் செய்வதற்கு அளிக்கப்படுகிற அனுமதியைப் பொறுத்தே இருக்கிறது. மக்களின் வேண்டுகோள்களை உடனடியாக எடுத்து நடவடிக்கை எடுக்காத அரசியல்வாதிகள், ஒரு சிறு விட்டுக்கொடுப்புக்குத்தானும் தயாரில்லாத தரப்புகள் இருந்து கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பது ஒரு நிலை. இதனால், ஏற்பட்டிருக்கும் இடைவெளி என்கிற வெற்றிடம் நிரப்பப்படும் போது, பல பிரச்சினைகளுக்குத் தீர்வும் சேர்ந்து வரும்.  

இந்த இடைவெளியை நிரப்புவது யார் என்பது தான் எல்லோரிடத்திலுமிருக்கிற கேள்வி. ‘பொறுப்பானவரில்லா வீடும் பாழாய் போகும்’ என்பதற்குக் கடந்த காலத்தின் பல சம்பவங்கள் உதாரணங்களாகக் காட்டப்படலாம். இனப்பிரச்சினைக்கான ஆயுதப் போராட்டத்தின் முடிவின் பின்னர், உருவாக்கப்பட்ட வடமாகாண சபையில் பல்வேறு குழப்பங்கள்; கிழக்கு உட்பட எல்லா மாகாண சபைகளுக்கும் ஒரு நாளில் தேர்தலை நடத்தும் முயற்சியில், கிழக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சர் வரவேண்டும் என்ற கோசம். இன்னமும் விடுவிக்கப்படாத இராணுவ, பாதுகாப்புத் தரப்புகளின் முகாம்களுக்குள் உள்ள காணிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம். இது அரசியல் ரீதியான பிரச்சினையாக உயர்மட்டத்துடன் நிற்கிறது.

 
இதற்குள் வடக்கு, கிழக்கில் ஏற்பட்டிருக்கிற வல்லுநர் தனமான வழிப்படுத்தல்கள் இன்மையானது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுக்கும் வீண் நடவடிக்கைகளுக்குமே இடம் கொடுத்திருக்கின்றன.

ஆனால், தமிழர் பிரதேசத்தை நிலையான அபிவிருத்தியை நோக்கி, கட்டமைக்க வேண்டிய பொறுப்பைச் சரியாக ஏற்படுத்திவிடவில்லை. இந்த அமைப்புசார் விருத்தியை நோக்கி, வல்லுநர்களின் மூளை பயன்படுத்தப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய எதிர்முனை.  

ஆனால், இந்த வல்லுநர்களின் கருத்துகளையும் அவர்களுடைய திறமைகளையும் அறிவையும் கல்விசார் அனுபவங்களையும் தமிழர் சமூகம் ஏற்றுக் கொள்ளுமா என்பதும் சிக்கலானதே. காலம்காலமாக மிகவும் அவதானமாகவும் பக்குவமாகவும் கட்டமைக்கப்பட்ட தமிழர் சமூகம், கடந்த கால யுத்தங்களால் அடைந்துவிட்ட பிழையான மாற்றம், அதே போன்று உலகமயமாதலின் நெருக்குதல்கள் எல்லாமே இப்போது இடையீடுகள்தான்.  

இவற்றை எதிர்கொண்டு, அடிப்படையிலிருந்தே அரசியல், பண்பாடு, கல்வி, சமூகம் என அனைத்தையும் கட்டமைக்க வேண்டியவர்களாக இருக்கின்ற வேளையில், அதை ஏற்றுக்கொள்வதற்கான மனோ பக்குவத்தையும் உருவாக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இல்லை, அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை என்று கருத்துகள் வெளிவரவும் கூடும்.  

வெளிப்படையாகச் சிலவற்றைப் பேசுவதற்கே அச்சப்படுகின்ற காலம் கடந்துபோன இவ்வேளையிலும், ‘நாமுண்டு நம் வேலையுண்டு’ என்று இருக்கின்ற புத்திஜீவிகள், வல்லுநர்கள் தம்முடைய அறிவைப் பயன்படுத்த வேண்டிய தருணம் இதுவாகவே இருக்கிறது. அழிந்து போன தமிழ்ச் சமூகத்தின் மீள்கட்டுமானத்துக்கான காலம் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதில் பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்காற்றத் தொடங்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் வெறும் அலுமாரிகளுக்குள் முடங்கிக் கிடக்கிற நிலையில் மாற்றம் வேண்டும். அதற்காக, அவை பிழையான முறைகளில் பயன்படுத்தப்படவும் கூடாது.  

நல்லாட்சியும் நிலையான அபிவிருத்தியும் தேவை என்பதற்குள் நிலைமாறு கால நீதிச் செயற்பாட்டை பலர் பிழையாக அர்த்தப்படுத்த முனைவதும் நடக்காமலில்லை. அதுதான் அரசாங்கமும் சர்வதேசமும் எல்லாவற்றையும் செய்து தரவேண்டும் என்பது. ஆனால் நமது தரப்பும் இதற்கு இசைவு காட்டவேண்டும் என்பதும் அதற்குள் இருப்பதை, அவர்கள் மறந்து விடுகிறார்கள்.  

குடும்பங்களின் குலைவுகள், இடம் பெயர்வுகள், கொலைகள், உயிரிழப்புகள், காணாமல்போதல்கள், சொத்தழிவுகள், பரம்பரைகளின் சிதைவுகள், விவசாயம், தொழில் இழப்புகள், கல்வி, பொருளாதாரம், பண்பாடு, கலாசாரம் என அனைத்து விடயங்களிலுமே ஏற்பட்ட அழிவுகள் சீர் செய்யப்படவேண்டுமாக இருந்தால், திட்டமிட்ட வகையில் முன்னெடுப்புகள் கொண்டுவரப்பட வேண்டும்.  

அபிவிருத்திகள் நடைபெறுகின்ற வேளைகளில் மாத்திரமல்ல, நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஒதுக்கீடுகளில் கூட முன்னுரிமை அடிப்படையிலும் தங்களுடைய தனிப்பட்ட வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையிலும் ஒதுக்கப்படும் நிதிகளால் ஒன்றும் பெரிதாகப்பிரயோசனம் நிகழ்ந்துவிடுவதில்லை. இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.  

ஆனால், இவற்றையும் தாண்டிய கட்டமைப்பு சார் வடிவமைப்புகளின் ஊடாக புலம்பெயர் சமூகங்கள், சர்வதேச நாடுகள் என அனைத்தினுடைய ஒத்துழைப்புகளுடனேயே தமிழர் பிரதேசத்தைக்  கட்டியெழுப்ப முடியும்.  

நகரத்தில் சிறப்பான வீதிகள், குடிநீர், வைத்தியசாலை, பாடசாலை, மின்சார வசதிகள் என இருக்கையில் கிராமங்கள் வீதிகளின்றி, குடிநீர் இன்றி, வீட்டு வசதிகளின்றி, மின் இணைப்பின்றி அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த நிலையில் மாற்றம் எவ்வாறு ஏற்படும் என்பதுதான் மில்லியன் டொலர் கேள்வி.  

தொழில்துறைகளின் அபிவிருத்திக்கு தொழில்சாலைகள் தேவையானது. அவற்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு புலம்பெயர் முயற்சியாளர்கள் முன்வர வேண்டும்.

அதை விடுத்து முட்டுக்கட்டைகளாக காரணங்கள் சொல்வதில் எந்த விதமான அர்த்தப்பாடுகளும் இல்லை. காலம்காலமாக ஏமாற்றப்பட்ட சமூகம், எது நிகழ்ந்தாலும் சந்தேகத்துடனேயே பார்க்கும். இதைச் சரி செய்வதென்பது மிகவும் சிரமம்தான். அது அபிவிருத்தியில் மாத்திரமல்ல, தன் சொந்த விடயத்திலும் கூடத்தான்.  

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், வடக்கிலும் கிழக்கிலும் வல்லுநர்கள் சிலரது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அவற்றைச் சரியாகப் புரிந்து கொள்கின்ற மனோநிலை இன்மையினால் அதன் சலசலப்பு அடங்கிப் போனது. இந்த வல்லுநர்களின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். அத்துடன், அவர்களின் முன்னெடுப்புகள் தொடரவும் வேண்டும் என்பது இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.  

திட்டமிடப்படாத, சரியாகக்கட்டமைக்கப்படாத எந்த ஒரு விடயமும் பிரயோசனப்படாது என்பது வரலாறாகும். அந்த வகையில், கட்டமைப்பு சார் மேம்பாடே இன்றைய தமிழர் தரப்புக்கும், பிரதேசத்துக்கும் தேவையானது. காலம் வரும் என்று காத்திருப்பதை விடவும், இருக்கும் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  

நிலையான அபிவிருத்தி, நல்லிணக்கத்தை எட்டுவது அரசாங்கத்தின் இலக்கு. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் அனுபவங்களை பகர்ந்து கொள்ள, இலங்கை தயாராகவே இருக்கிறது. நாட்டில் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் ஒரே நேரத்தில் முன்னெடுப்பதே நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்காகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ. நா பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கடந்த செப்டெம்பர் இறுதியில் தெரிவித்திருந்தார்.

இருந்தாலும் அதற்கு முன்னரான கட்டமைப்புகளை நாம் ஏற்படுத்திக் கொள்வது முக்கியமானதாக இருக்கிறது.  

அரசியல்வாதிகளைத் தெரிவு செய்துவிட்டால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று படித்தவர் முதல் பாமரர் வரை சிந்திக்கின்ற தன்மையில் மாற்றம் தேவையானது. 

அரசியலையும் அரசாங்கத்தையும் சர்வதேசத்தையும் எதிர்பார்த்து, நவீன உலக மயமாக்கல் போட்டிகளை எவ்வாறு எதிர் கொள்ளலாம் என்பதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும்.  

உற்பத்தியை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் உணவு முன் ஏற்பாட்டுக்குப் பங்களிப்பு செய்தல் என்பவற்றினூடாக நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு, தொழில்நுட்ப வழிகாட்டல் மற்றும் ஆதரவையும் வழங்குதல் இப்போதைய தேவையாகும்.  

மொத்தத்தில் தம் முன்னேற்றத்தைப் பற்றித் திறம்படச் சிந்திக்கவேண்டிய சமூகமாகத் தமிழர் சமூகம், தன்னை மாற்றிக் கொள்ளவேண்டியது கட்டாயமாகும். இதற்கான முன்வருகை விரைவாக நடைபெற்றாகவேண்டும். இதில் ஏற்படுகின்ற தாமதிப்புகள் தம்மைச் சரியாகக் கட்டமைத்துக்கொள்ள முடியாத நிலையொன்றையே தோற்றுவிக்கும்.  

எது எப்படியோ, ராஜினி திராணகமவினால் ஞாபகப்படுத்தப்பட்ட, மார்டீன் லூதர் கிங் எழுதிய ‘கொடியவர்கள் இழைக்கும் தீங்குகளிலும் பார்க்க, அவற்றை நல்ல மனிதர்கள் என்போர், அதிர்ச்சியூட்டுமளவுக்கு மௌனமாய், சகித்துக் கொண்டிருப்பது பற்றியே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுறவேண்டும்’ என்ற வாசகத்தில் மாற்றம் கொண்டு வரலாமா?    

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அபிவிருத்தியை-நோக்கி-கட்டமைக்க-வேண்டிய-காலம்-வெற்றிடத்தை-யார்-நிரப்புவார்/91-202172

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this