• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

வடக்கு முதலமைச்சரை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!

Recommended Posts

வடக்கு முதலமைச்சரை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!

 

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னேஸ்வரனை ஆதரித்தவர்கள் ஏமாற்றங்களைச் சந்தித்திருக்கின்றனர்.

எதிர்பார்ப்புகளுடனேயே தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் மைத்திரி – ரணில் (சு.க – ஐ.தே.க) கூட்டு முன்னணிக்குக்கு ஆதரவளித்திருந்தனர். ஆனால் இந்த மக்களிடத்திலே பாதுகாப்பற்ற மனநிலையும் பதற்றங்களுமே அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கே முடியாத நிலையில்தான் அரசாங்கம் இருக்கிறது. பொதுவாகவே சிறுபான்மைத் தேசிய இனங்கள் குறித்த உயர்வான – சரியான எண்ணம் இந்த அரசாங்தத்தின் மனதிலும் உருவாகவில்லை.

இவையெல்லாம் அரசாங்கத்தை நம்பியவர்களையும் ஆதரித்தவர்களையும் கசப்படைய வைத்துள்ளன. ஏறக்குறைய இதை ஒத்த ஒரு நம்பிக்கையீன நிலையே விக்னேஸ்வரனின் மீதும் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை. இந்த நான்காண்டுகளுக்குள் அவர் அடைந்த உச்சிகள் பல. இது இலகுவில் யாருக்குமே கிட்டாத ஒன்று.

இன்றைய இலங்கைத்தீவில் விக்னேஸ்வரன் அளவுக்குக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அளவுக்குச் சிகரத்தைத் தொட்ட அரசியல் தலைவர்கள் யாருமே இல்லை. அரசியலில் பிரவேசித்த கையோடு முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் பரிந்துரைக்கப்பட்டார் விக்னேஸ்வரன்.

தொடர்ந்து முதலமைச்சராக அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவரும் பிறரும் எதிர்பாராத அளவுக்கு மதிப்பு மிக்க சம்பவங்கள் எல்லாம் நடந்தன.

பிரிட்டிஷ் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பெருந்தலைவர்கள் எல்லாம் முக்கியத்துவமளித்து விக்னேஸ்வரனைச் சந்தித்தனர். ஏறக்குறைய ஒரு தேசத்தின் தலைவராக உணரக் கூடிய வகையில் ஏராளம் சம்பவங்கள் நடந்தன.

ஒரு கட்டத்தில் வடக்கின் ஆளுநராக இருந்த பளிகக்கார கூட தனக்கான ஆளுநர் நிதியை முதலமைச்சர் நிதியாக மாற்றி அதை விக்னேஸ்வரனிடம் கையளித்திருந்தார்.

இன்னொரு புறத்தில் இறுதிப் போரின் போது நடந்தது இனப் படுகொலையே எனக் குறிப்பிட்டு, மாகாணசபையில் ஒரு தீர்மானத்தையே நிறைவேற்றினார் விக்னேஸ்வரன்.

யுத்தக் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும். அதிலிருந்து பின்வாங்குவதற்கு இடமேயில்லை.தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து படையினர் விலக்கப்பட வேண்டும். தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்வு என்பது அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்ற இறுக்கமான அறிவிப்புகளை விடுத்தார்.

இவற்றின் மூலமாக கூட்டமைப்பிற்குள்ளேயே சம்பந்தனுக்கு அடுத்த தலைவராக வளர்ச்சியடைந்தார் விக்னேஸ்வரன். நீண்ட காலமாகவே அரசியலில் ஈடுபட்டு வந்த மாவை சேனாதிராஜாவையும் விட விக்னேஸ்வரனின் மீதான ஆர்வம் சனங்களிடம் கூடியது.

இது மெல்ல மெல்ல வளர்ச்சியடைந்து சம்பந்தனுக்கு நிகரானவராக – சமனிலைத் தலைவராக விக்னேஸ்வரனைக் கொண்டு சென்றது.இதற்கு ஏற்ற மாதிரித் தன்னுடைய அரசியல் பிரகடனங்களையும் எதிர்பார்ப்புகளையும் தமிழ் மக்களின் இலட்சியவாத நோக்கில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார் விக்னேஸ்வரன்.

மறுவளத்தில் அரசாங்கத்தை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் எதிர்த்து வந்தார். இதை அவதானித்தவர்கள், “தமிழ்ச் சமூகத்தின் இயல்பைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற மாதிரி விக்னேஸ்வரன் மெல்ல மெல்லக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அரசியல் அனுபவம் குறைந்தவராக இருந்தாலும் வலு நுட்பமாகக் காரியங்களைச் சாதிக்கிறார்” என்று கூறுமளவுக்கு அவருடைய சில செயற்பாடுகள் அமைந்திருந்தன.இதனுடைய உச்சக்கட்டமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ற மேடைகளில் கூட அரசியல் நாகரிகத்துக்கும் அப்பால் சென்று, பிரதமருடன் பேசுவதையே தவிர்த்து தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

கிளிநொச்சியில் ஒரு தடவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட விக்னேஸ்வரன், அந்த நிகழ்வு முடிந்த பிறகு நடந்த விருந்துபசாரத்திற்குச் செல்லாமல் இடைவிலகிச் சென்றிருந்தார்.

இதற்குக் காரணமாக 'அந்த விருந்து படையினரின் இடத்தில் நடந்ததும், அரசாங்கத்தின் தனிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத்தான் விரும்பவில்லை' என்பதுமாகவே கூறப்பட்டது.இப்படியான சம்பவங்களின் மூலமும் தன்னுடைய நிலைப்பாட்டின் வாயிலாகவும் தமிழ் மக்களிடத்திலே அவர் ஒரு வீரயுகத்திற்குரிய தலைமைத்துவ அடையாளமாக மேலெழத் தொடங்கினார்.

'வளைந்து கொடுக்காத இலட்சியவாதி' என்றதொரு தோற்றம் அவர் குறித்து உருவாகியது.விடுதலைப் புலிகளின் அபிமானிகளாக இருந்த பலருக்கும் தமிழீழக் கனவைக் கொண்டிருந்தோருக்கும் சம்பந்தன், சுமந்திரன் தலைமையின் மீது அதிருப்தியுற்றிருந்தோருக்கும் அரச எதிர்ப்புணர்வுடையோருக்கும் விக்னேஸ்வரன் இனிப்பானார்.

தொடக்கத்தில் விக்னேஸ்வரன் குறித்த தெளிவின்மைகளோடு தூரத்தில் விலகியிருந்த புலம்பெயர் தமிழர்களில் பலரும் விக்னேஸ்வரனைக் கொண்டாடத் தொடங்கினர்.அவர் வடக்கின் முதலமைச்சர் என்பதற்கும் அப்பால், கிழக்கிலுள்ள தமிழர்களில் ஒரு தொகுதியினர் கூட விக்னேஸ்வரனைத் தமது தலைமைத்துவத்துக்குரியவராக அடையாளம் கண்டனர்.

கிழக்கிலே விக்னேஸ்வரன் கலந்து கொண்ட நிகழ்வுகளில் அவருக்குப் பேராதரவு தெரிவிக்கப்பட்டது இதற்கு நல்ல உதாரணம்.இப்படியே தமிழ்ச் சமூகத்தின் பெரும்பாலான தரப்பினரின் மூலம் ஒளிவட்டத்தைப் பெற்ற தலைவராகக் காட்சியளித்த விக்னேஸ்வரனைச் சுற்றி ஒரு ஆதரவு அணி உருவாகியது.

அது அவரை ஒரு அவதார புருசர் என்ற அளவில் விமர்சனங்கள், கேள்விகள் என்பவற்றுக்கிடமில்லாமல் ஆதரித்து ஏற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் விக்னேஸ்வரனைத் 'தமிழ் மக்களுக்குக் கிடைத்த அவதார புருஷர்' என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை இங்கே குறிப்பிட்டுக் காட்ட வேண்டும்.

இன்னும் அந்தப் பத்திரிகை விக்னேஸ்வரன் மீதான பக்தியை குறைத்துக் கொள்ளவில்லை, வளர்த்துக் கொண்டேயுள்ளது.இதெல்லாம் விக்னேஸ்வரனைத் தனிப்பெரும் தலைவராகப் பெரும்பாலானவர்களிடம் உணர வைத்தது.

“பிரபாகரனுக்குப் பிறகு விக்னேஸ்வரனே தமிழர்களின் தலைவர்” என ஒரு தொகுதியினர் கொண்டாடத் தொடங்கினர். இதை அவர்கள் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுமிருந்தனர். தமிழ் அரசியல் ஆய்வாளர்களில் சிலர் கூட விக்னேஸ்வரனின் ஒளியில் மயங்கினர்.

இந்த அவதானங்களை மையப்படுத்தியே மக்கள் பேரவை விக்கினேஸ்வரனை இணைத்தலைவராகக் கொண்டு தன்னைக் கட்டமைத்தது. விக்னேஸ்வரன் குறித்த நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் பேரவைக்கும் பேரவையின் ஆதரவாளர்களுக்கும் வளர்ந்தது.

குறிப்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் தங்களுடைய அரசியலை முன்னெடுக்கவும் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றைப் பலவீனப்படுத்தவும் விக்னேஸ்வரனை ஒரு வலுமிக்க கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இந்த முயற்சியில் ஒரு கட்ட வெற்றிகளும் கிடைத்திருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைக்கு மாற்றான ஒரு அரசியலை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, கூட்டமைப்புக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதாக பேரவையின் பேரில் 'எழுக தமிழ்' நிகழ்ச்சிகள் இந்த வகையிலேயே நடந்தன – நடத்தப்பட்டன.

அதில் விக்னேஸ்வரனின் தலைமை வலு நுட்பமாகப் பாவிக்கப்பட்டது.இவையெல்லாம் விக்னேஸ்வரனை மேலும் தீவிரப்படுத்தின. இதற்குச் சமாந்தரமாக விக்னேஸ்வரனின் தலைமையிலிருந்த வடமாகாணசபையும் இதே தீவிரத்துடன் தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

இன்னும் சரியாகச் சொன்னால் தீர்மானங்களை நிறைவேற்றுவதிலேயே மாகாணசபை கூடிய அக்கறையைக் கொண்டிருந்தது எனலாம். மாகாணசபையின் 100 அமர்வுகளில் ஏறக்குறைய 400 வரையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றால் நிலைமை எப்படி இருக்கும் என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தீவிர நிலைப்பாடு மாகாண நிர்வாகத்தை நடத்துவதற்கு உதவவில்லை.பதிலாக இடைஞ்சலையும் நெருக்கடியையுமே ஏற்படுத்தியது.

மாகாண நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்துவதற்கு மத்திய அரசின் நிதி மற்றும் ஆதரவு தேவை. இதற்குரிய தொடர்பாடல் அவசியமானது. ஆனால், முதலமைச்சருடைய நிலைப்பாடுகளும் மாகாணசபையின் தீர்மானங்களும் எதிர்மறையாகவே இருந்தன.

மறுவளத்தில் மாகாணசபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டிகளும் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகளும் மாகாண நிர்வாகத்தைப் பலவீனப்படுத்தின. இங்கேதான் பிரச்சினையே உருவாகியது.

அதாவது விக்னேஸ்வரனின் வீழ்ச்சி நடைபெறத் தொடங்கியது.இவ்வாறான பலவீனமான நிலைமைகள் உண்டாக்கிய நெருக்கடிகள், எதிர்பாராத அளவில் பெரும் வளர்ச்சியையும் உச்சத்தையும் தொட்டிருந்த விக்னேஸ்வரனுக்குக் காலடியில் உருவாகிய பாம்புகளாகச் சூழ்ந்தன.

ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமல் இந்த நெருக்கடிகளுக்குப் பரிகாரம் காணும் முகமாக, மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அதனோடு வந்தது முழுவினை.

விக்கினேஸ்வரனின் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்தது தொடக்கம் அவர் தான் செய்த பிரகடனங்களிலிருந்தே பின்வாங்கும் நிலை வரை இன்று ஏகப்பட்ட சரிவுகளும் வீழ்ச்சிகளும்.

விக்கினேஸ்வரனை ஒரு மாற்று அடையாளமாகவும் மாற்றுத் தலைமையாகவும் கொள்ள முற்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் கடுமையான ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கின்றனர்.

கூட்டமைப்பிலிருந்து எப்படியும் விக்னேஸ்வரனைப் பிரித்தெடுத்து விடலாம். கூட்டமைப்புக்குச் சவாலான அணிக்கு அவரைத் தலைமை தாங்க வைக்கலாம் என்று வகுக்கப்பட்ட வியூகத்துக்கு விக்னேஸ்வரன் உடன்பட மறுத்து விட்டார்.

இப்போதைக்கு மாற்றுத் தலைமையோ மாற்று அணியோ வேண்டாம் என்று விக்னேஸ்வரன் பகிரங்கமாகக் கூறியதும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பேரவையின் எதிர்பார்ப்புக்கு மாறாக சம்பந்தனை விக்னேஸ்வரன் அழைத்து வந்ததும் நம்பிக்கையாளரிடம் கசப்பை உண்டாக்கியுள்ளது.

அரசாங்கத்துக்கும் வெளியுலகத்துக்கும் ஒரு கட்டம் வரையில் கூட்டமைப்புக்கும் சம்பந்தன், சுமந்திரன் தலைமைக்கும் சவால்களை விட்டுக் கொண்டிருந்த விக்னேஸ்வரன், இப்போது கூண்டுக்குள் அடைபட்ட சிங்கமாகி விட்டார்.

கூட்டுக்குள் இருந்து கர்ச்சிப்பது, பின்னர் சாட்டைக்குப் பயந்து குந்துவது சர்க்கஸ் சிங்கத்தின் செயல்.ஆனால், இந்த ஊசலாட்டங்கள் ஒன்றும் விக்னேஸ்வரனைப் பொறுத்த வரை புதியவை அல்ல.

அவர் பதவியேற்றதே பலரும் எதிர்த்துக் கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவின் முன்னிலையில்தான். தொடக்கத்தில் அவர் கொழும்புடன் நட்பையும் நல்லுறவையும் பேண முயற்சித்தார்.

பின்னாளில்தான் அதிலிருந்து விடுபட்டுத் தன்னைத் தனிமைப்படுத்தினார். இப்போது அந்தத் தனிமைப்படுத்தல் அவரை முற்றாகவே தனிமைப்படுத்தியுள்ளது. எதிர்கால அரசியலில் அவர் காணாமல் போகக் கூடிய அளவுக்கு இந்தத் தனிமைப்படுத்தல் நேர்ந்துள்ளது.

இதனால்தான் அவர் மீதான விமர்சனங்களும் கண்டனங்களும் இப்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இது சம்பந்தன் பக்கமிருந்த சூட்டைக் குறைத்துள்ளது.

 

http://www.tamilwin.com/politics/01/154843?ref=home-top-trending

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this